Sunday, April 26, 2009

வலையில் சிக்கிய....

எனது பேஸ்புக் வாசலில் (Homepage), எனது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபோது கிடைத்தவைகளில் சில...
முதல் நண்பர்...

"முக்கியமான மேட்ச் பாக்கறேன்.. இன்னிக்கு நடக்கற மேட்ச்சுல யார் ஜெயிப்பா? சென்னையா பெங்களூரா?"
என்று ஆரம்பித்த கருத்துக்கு...பிற நண்பர்கள் கொடுத்த மறுமொழிகள் இதோ...
"சென்னை.."
"பெங்களுர் தான்.."
"பாத்தீல்ல... பெங்களுர் ஜெயிச்சிருச்சு... அடுத்த மேட்ச்சுல யார் ஜெயிப்பா? ராஜஸ்தானா மும்பையா?"
"ராஜஸ்தான்..."
"மும்பை தான்... போன மேட்ச் மாதிரி.. பஜ்ஜி கலக்கப் போறாப்புல..."

இன்னொரு தோழி ஆரம்பித்த கருத்தும் மறுமொழிகளும் இதோ..
"எனக்கு வாழ்க்கையே போர் அடிக்குது...யாருமே எனக்கு டெட்டி பியர் தர மாட்டேன்றாங்க!!"
"இதோ நான் தர்றேன்.. " ( ஒரு கரடி பொம்மையின் புகைப்படத்துடன்..)
"உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா?"

சில நாட்களுக்கு முன், நான் பார்த்த இன்னொரு கருத்தும் மறுமொழிகளும் இதோ...
"என் மகன் கார்த்திக் (2 வயது ) இன்னிக்கு ரூம்ல லாக் பண்ணிக்கிட்டான்...."
"OMG (ஓ மை காட்) என்ன ஆச்சு..."
"அப்பா!!... ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறம் தான் அவன எடுத்தேன்.."
"அவனுக்கு என்னோட அனைப்பு (HUG).... "

பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களின் தொடர்புகளை இழந்தவர்களுக்கு, தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஆர்குட் ஒரு அருமையான வாய்ப்பாக உள்ளது. தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும், புதிதாக விவாதங்கள் நடத்தவும் நல்ல ஊடகமாக அமைந்ததால், ஆர்குட், ஃபேஷ்புக் போன்ற வலைத்தளங்களின் செல்வாக்கு பெருமளவில் பெருகியது..



இப்படி நண்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், என்ன விவாதங்கள் நடக்கிறது என்று அறியவும் உதவிய சமூக வலையமைப்புகள், மெதுவாக "தனி நபர் என்ன செய்கிறார்" என்பதற்கும் முக்கியத்துவம் தர ஆரம்பித்தன... ஒருவர் என்ன செய்கிறார் என்பதற்கு உதாரணங்கள் தான் மேலே குறிப்பிட்ட கருத்துகளும் மறுமொழிகளும்...



இது போன்ற கருத்துக்களும் மறுமொழிகளும் தாம் அன்றாடம் என்ன செய்கிறோம் என்பதாக உள்ளதை இங்கே காணமுடிகிறது.



ஒரு முறை நாம் தெரிவித்த கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துவிட்டால், நாம் மீண்டும் கருத்துக்களை தெரிவிக்க உக்குவிக்கும். இதுவே கிரிக்கட், ரியாலிட்டி ஷோ போன்ற விவாதங்கள் என்றால் ஒவ்வொரு கருத்தையும் மறுமொழியையும் மிகவும் தொடரவும் வைக்கும்..



இது போல வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவிப்பதும் தொடர்வதும் பொழுதுபோக்காக இருக்கும் வரை பரவாயில்லை. அதுவே ஒரு போதையாக மாறுவது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்!!



மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போல சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி வருவதும் வளர்ந்து வருகிறது.



அலுவலகங்களில் வேலை பார்க்கும் போதும் தனது பக்கங்களில் யார், என்ன கருத்து தெரிவித்தார்கள் என்பதில் ஒரு கண் வைத்திருப்பதும், வீட்டில் ஏதாவது வேலை இருந்தாலும் கவனிக்காமல் உரையாடல்களில் ஈடுபடுவதும் இன்றைய நடைமுறையாகி வருகிறது.



வீட்டில் மனைவி திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்பதையும் கண்டுகொள்ளாமல், "நான் சினிமாவுக்கு போகிறேன்!!" என்று உரையாடலை ஆரம்பிப்பதை என்ன சொல்ல?



"எனக்கு அலுவலக வேலை போர் அடிக்குது" என்று ஒருவர் தெரிவித்த கருத்தை, அவரது நிறுவன ஊழியர்கள் பார்க்க நேர்ந்ததால் அந்த நபர் வேலை இழந்ததாக செய்தித்தாளில் படித்தேன்.



"நாம் என்ன கருத்தைத் தெரிவிக்கிறோம் என்பதைக் கூட உணராத அளவிற்கு" வலைச்சிக்கலில் மாட்டி வருகிறோம்.



இது போன்ற சேவைகளை சமூக வலையமைப்பு நிறுவனங்கள் ஏன் இலவசமாக அளிக்கின்றன?



தங்களது பயனர்கள்(users) என்ன செய்கிறார்கள், எது போன்ற விவாதங்களில் ஈடுபடுகிறார்கள் போன்ற தகவல்களுக்காகத்தான்!! வியாபார நிறுவனங்கள் வெவ்வேறு புள்ளி விவரங்களுக்காக சமூக வலையமைப்பு நிறுவனங்களை அணுகி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சேவைகளை, நமது நண்பர்களுடன் தொடர்பை பலப்படுத்துவதற்கும், பொழுதுபோகாத போது விவாதங்களில் ஈடுபடுவதற்கும் உபயோகித்து வந்தால் பயனர்களான நமக்கும் வலைத்தளசேவை நிறுவனங்களுக்கும் நன்மை (WIN-WIN) அளிப்பதாக அமையும்.



அதை விடுத்து சமூகவலைத்தள உரையாடல்களே முழுநேர வேலையாக மாறினால், நாம் வலைச்சிக்கலில் மாட்டி வருகிறோம் என்றே அர்த்தம்!!


................


இந்த பதிவை யூத்ஃபுல் விகடனில் படிக்க...


http://youthful.vikatan.com/youth/senthilarticle15052009.asp


No comments:

Related Posts with Thumbnails