Tuesday, June 30, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 6

இணையதள பயனர்கள் அனைவருக்கும் விக்கிப்பீடியாவைத் தெரியாமல் இருக்காது. அனைத்து வகையான தகவல்களையும் தருவதால் இதற்குக் கட்டற்ற களஞ்சியம் என்று பெயரிட்டுள்ளார்கள்.

விக்கிப்பீடியாவில் அனைத்து மொழிகளிலும் கட்டுரைகள் வெளியிடப்படுவதும் நமக்குத் தெரிந்ததே!

இதில் தமிழில் எத்தனை கட்டுரைகள் வந்துள்ளன என்று பார்த்தால் நமக்குக் கிடைப்பது அதிர்ச்சியே! இதுவரை தமிழில் 18000 கட்டுரைகள் மட்டுமே வெளியாகி உள்ளன.

மற்ற நாட்டு மொழிகளில் எத்தனை கட்டுரைகள் வெளியாகியுள்ளன என்று பார்த்தால் கிடைப்பவை இதோ...
ஆங்கிலம் - 29 லட்சத்திற்கும் அதிகம்
பிரென்சு - 8 லட்சத்திற்கும் அதிகம்
செருமன் - 9 லட்சத்திற்கும் அதிகம்.
சுவோமி ( பின்னிஷ் ) - 2 லட்சத்திற்கும் அதிகம்
தெலுங்கு - 40 ஆயிரம்..

ஆங்கிலம், பிரென்சு, செருமன் போன்ற மொழிகள் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுவது நமக்குத் தெரிந்ததே. ஆனால் பின்னிஷ் மொழியில் பேசுவோர் எண்ணிக்கை 50 லட்சம் பேர் தான். அதாவது சென்னை நகர மக்கள்தொகையை விடக் குறைவு.

பின்னிஷ் மொழி 700 ஆண்டுகள் வரலாறு கொண்டவையே! ஆனால் தமிழ்மொழி? தமிழ் மொழி இலக்கணம் பற்றிய நூலான தொல்காப்பியத்தை இயற்றியது 2000 ஆண்டுகட்கு முன்பு!

50 லட்சம் பேர் பேசும் "சுவோமி" மொழியில் 2 லட்சம் கட்டுரைகள் உள்ளன என்றால் 7 கோடிப்பேர் பேசும் தமிழ் மொழியில் எத்தனை கட்டுரைகள் இருக்க வேண்டும்?

பல துறைகள் பற்றியும் பதிவுகளை எழுத ஆரம்பித்திருக்கும் நாமும், இது போல களஞ்சியங்களுக்குக் கட்டுரைகளை எழுதலாமே! நம்மைத் தடுக்கும் காரணங்கள் எவை?

தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயமும், ஐயமுமே காரணம். ஐயத்தைப் போக்க நமக்கு வேண்டியது ஒரு நல்ல இலக்கண நூல்! அனைவரது வீட்டிலும் "WREN & MARTIN - GRAMMAR" நூல் இருக்கும் போது தமிழ் இலக்கணம் பற்றிய நூல் இல்லை என்றால் நன்றாகவா இருக்கும்?
**********
தமிழில் எழுதும் போது நமக்கு ஏற்படும் ஐயங்களில் குறிப்பிடத்தக்கவை "ர,ற" வேறுபாடு.

தந்தைக்கு மகன் மீது மிகுந்த "அக்கரை" என்று எழுதுவது சரியா? அல்லது "அக்கறைச்" சீமை அழகினிலே என்று எழுதுவது தான் சரியா?

அக்கரை என்றால் - அந்தக் கரை
அக்கறை என்றால் - கவனம்

இது போல இதர "ர, ற" வேறுபாடுகள் கீழே..

அரம் - ஒரு கருவி
அறம் - தருமம்

அரை - மாவாக்கு
அறை - வீட்டுப்பகுதி

ஆர - நிறைய
ஆற - சூடு குறைய

இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழே வா
உரை - சொல்
உறை - அஞ்சல் உறை

எரி - தீ
எறி - வீசு

கரி - அடுப்புக்கரி
கறி - காய்கறி

கருப்பு - பஞ்சம்
கறுப்பு - நிறம்

கரை - கடற்கரை
கறை - மாசு

கோருதல் - விரும்புதல்
கோறல் - கொல்லுதல்
சிரை - மயிரை நீக்கு
சிறை - சிறைச்சாலை

சொரிதல்- பொழிதல்
சொறிதல்- நகத்தால் தேய்த்தல்
பரந்த - பரவிய
பறந்த - பறந்துவிட்ட

பரவை - கடல்
பறவை - பட்சி

பாரை - கடப்பாரை
பாறை - கற்பாறை

பெரு - பெரிய
பெறு - அடை

பொரித்தல் - வறுத்தல்
பொறித்தல் - கல்லில் எழுத்துப் பொறித்தல்

பெரும்பாலானோர்க்கு இந்த வேறுபாடுகள் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்குப் பயனளித்தால் நல்லது தானே!
********

அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்களும்..

இலாகா - துறை
உஷார் - விழித்திரு
உருமால் - தலைப்பாகை
கசாபு - இறைச்சி
குஷி - மகிழ்ச்சி
சபாஷ் - பலே, சிறப்பு
சொக்கா - உடை
ஜமக்காளம் - விறிப்பு
ஜல்தி - விரைவு
ஜவ்வாது - வாசனைப்பொருள்
ஜிமிக்கி - தொங்கட்டான்
ஜில்லா - மாவட்டம்
தகரார் - சண்டை
தமாஷ் - நகைச்சுவை
தர்பார் - அரசவை
தாலுகா- வட்டம்
பக்கா - நிறைவு
பஜார் - கடைவீதி
பைல்வான் - பலசாலி..


"ல, ழ, ள" வேறுபாடுகள் அடுத்த பதிவில்...

Sunday, June 28, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 5

தமிழ் வலைப்பதிவர்கள் எண்ணிக்கை பெருகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே!

தமிழார்வமும், தம் கருத்துக்களை எளிதாக நண்பர்களுக்குப் பகிர உதவும் தொழில்நுட்பமும், பதிவுகள் பாராட்டப்படும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும் மேலும் அதிகமானோரைப் பதிவுலகத்திற்கு வரவழைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், நம்மால் ஐயமில்லாமல் எழுத முடிகிறதா?

"ல,ழ,ள", "ண,ந,ன", "ர,ற" போன்ற எழுத்துக்களை பயன்படுத்துவதை எடுத்துக்கொள்வோம்.

300 ரூபாயை எப்படி குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? அல்லது முந்நூறு என்றா?

முன்னூறு - முன்னே வரும் நூறையும், முந்நூறு - மூன்று நூறையும் குறிப்பிடுகிறது.

அதே போல "முன்னாள் (முன் ஒரு நாள் ) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் "முந்நாள் (மூன்று நாள்) இதைப் போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது" என்பதற்கும் பெரிய வேறுபாடு உள்ளதே!

********

பெரும்பாலானோர்க்கு எண்களைக் குறிப்பிடுவதில் ஐயம் வரத்தான் செய்கிறது.

எண்பது - 80
என்பது - என்று சொல்வது

எண்ணை - Number
எண்ணெய் - தேங்காய் எண்ணெய் ( வெண்ணெய் என்று குறிப்பிடுவது சரியா? )

********

இதர னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி கீழே தெரிந்து கொள்வோம்...

அன்னாள் - அவள்
அந்நாள் - அந்த நாள்

இன்னார் - இத்தகையர் ( இன்னார் இனியார் என்று எழுதுவோமே)
இந்நார் - இந்த நார் ( இந்நார் இனியார் என்று எழுதினால் எப்படி இருக்கும்?)

********

தமிழக அரசியலில் "சுவரொட்டிகளுக்கு" ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. சுவரொட்டிகளில், நம் கண்ணில் படுவனவற்றுள் "இவண் - செயலாளர் " என்பனவும் ஒன்று. சில சமயம் தவறாக "இவன் - கொ.ப.செ" என்று அச்சிடுவதும் நடக்கத்தான் செய்கிறது.

இவன், இவண் என்ன வேறுபாடு?

இவன் - இங்கே இருப்பவனை குறிப்பிடுவது
இவண் - இங்ஙணம் ( மாற்றி எழுதினால் என்ன ஆகும்?)

ஈந்தாள் - கொடுத்தாள்
ஈன்றால் - பெற்றெடுத்தாள்

உண்ணல் - புசித்தல்
உன்னல் - நினைத்தல்

ஊன் - மாமிசம்
ஊண்- உணவு

கன்னி - குமரி
கண்ணி - கண்ணை உடையவள்

கான் - காடு
காண் - பார்

தின் - சாப்பிடு
திண் - வலிமை

தன் - தனது
தண் - குளிர்ச்சி

மனம் - உள்ளம்
மணம் - வாசனை

இது போன்ற னகர ணகர நகர வேறுபாடுகள் பற்றி பள்ளிப்பருவத்திலேயே படித்திருந்தாலும், இன்னும் ஒரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே!
***********

"என்னடா ரெடி ஆயிட்டியா?" என்று கேட்பது பழகிப்போன ஒன்று. ரெடியை தமிழாக்கம் செய்யும்போது "தயார்" என்று எழுதுவது வழக்கம். ஆனால் "தயார்" தூய தமிழ்ச்சொல் கிடையாது.

தயார் என்பது "ஆயத்தம்" என்ற தமிழ்ச்சொல்லில் பிறமொழிச்சொல் தான்.
இங்கே தயாரிப்பு, தயாரித்தல், தயாரிப்பாளர் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களா?

இதர அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான் தமிழ்ச்சொற்களும்

அசல் - மூலப்பொருள்
பாக்கி - நிலுவை
ஜாக்கிரதை - கவனம்
தபால் - அஞ்சல்
பஞ்சாயத் - ஐவர் குழு
பட்டுவாடா - பகிர்ந்தளித்தல்
படுதா - திரச்சீலை
பந்தோபஸ்து - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்கு - சிவிகை
பஜாரி - வாயாடி
பதில் - மறுமொழி
பாத் - சோறு
பகாளாபாத் - தயிர்சோறு
பூரா - முழுதும்
பேஷ் - மிக நன்று
மஹால் - அரண்மனை
மாகாணம் - மாநிலம்
மாஜி - முன்னைய
முகாம் - தங்குமிடம்
முலாம் - மேற்பூச்சு
மைதானம் - திடல்
ரத்து - விலக்கு
லாயக்கு - தகுதி
வகையறா - முதலான
வாரிசு - உரியவர்
ஷோக் - பகட்டு

சொரிவதற்கும் சொறிவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பொரித்தல், பொறித்தல் - என்ன வேறுபாடு?

அடுத்த பதிவில்...

உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்!

Saturday, June 27, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 4

சில வருடங்களுக்கு முன் வந்த "என்ன அழகு, எத்தனை அழகு.." என்ற (நடிகர் விஜய் நடித்த) பாடல் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

இதில் "எத்தனை" அழகு என்று வரி சரியானதா? பல (எத்தனை) விதமான அழகை வர்ணிக்கிறார் என்றால் பரவாயில்லை. அதுவே, அழகை ("எத்தனை" என்று) அளக்கிறார் என்றால் தவறு தானே!!

நம் மளிகைக்கடைக்கு, தேங்காய் கேட்டு ஒரு வாடிக்கையாளர் வருகிறார். அவரிடம், எத்தனை தேங்காய் வேண்டும் என்று கேட்போமா? அல்லது எவ்வளவு தேங்காய் வேண்டும் என்று கேட்போமா?

எனக்கும் இது போன்ற சந்தேகங்கள் அடிக்கடி வரத்தான் செய்கிறது. இதனை பள்ளிப் பருவத்திலேயே படித்திருந்தாலும், மற்றுமொரு முறை தெரிந்து கொள்வது நல்லது தானே! நான் படித்ததை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

*************

எத்தனை - எண்ணிக்கை
எவ்வளவு - அளவுகோல்

சோறு தின்னறதா? உண்பதா?

அருந்துதல் - மிகச் சிறிய அளவில் உட்கொள்ளுதல் (மருந்து அருந்துதல்)
உண்ணல் - பசி தீர உட்கொள்ளல்
உறிஞ்சுதல் - வாயை குவித்து நீரியற் பண்டங்களை இழுத்துக் கொள்ளுதல்
குடித்தல் - சிறிது சிறிதாக பசி தீர உட்கொள்ளல். ஆக மது அருந்தினான் என்பதே சரியானது!
தின்னல் - சுவைக்காக ஓரளவு தின்னுதல் ( முறுக்கு)

வான் நோக்கி

தூவானம் - காற்றினால் சிதறப்படும் மழைத் திவலை
தூரல், சாரல் - சிறுதுளி மழை
மழை - பெருந்துளியாகப் பெய்வது

எப்படீங்க சொல்றீங்க?

சொல்லுதல் - சுருக்கமாகச் சொல்லுதல்
பேசுதல் - நெடுநேரம் உரையாடுதல்
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல் - பலரறியச் சொல்லுதல்
கொஞ்சுதல் - செல்லமாகச் சொல்லுதல்
பிதற்றுதல் - பித்தனைப் போல சொல்லுதல்
ஓதுதல் - காதில் மெல்லச் சொல்லுதல்
செப்புதல் - விடை சொல்லுதல்
மொழிதல் - திருத்தமாகச் சொல்லுதல்
இயம்புதல் - இனிமையாகச் சொல்லுதல்
வற்புறுத்தல் - அழுத்தமாகச் சொல்லுதல்

எங்கே கொண்டாடறீங்க?

பண்டிகை - வீட்டில் கொண்டாடப்படுவது
விழா - வெளியிடத்தில் கொண்டாடப்படுவது
***********

குழு - சிறு கூட்டம்
கூட்டம் - பலர் முறையாகக் கூடியிருப்பது
கும்பல் - முறையின்றைக் கூடுவது
**********
பசுப் பால் - பசுவினது பால்
பசும் பால் - பசுமையான பால்
***********

இதற்கு முந்தய பதிவுகளில் நமது புழக்கத்தில் உள்ள வடசொற்களைப் பார்த்தோம். இதில் பிற நாட்டு சொற்களையும் பார்ப்போம்.

அலமாரி, ஜன்னல் ( காற்று வழி ), சாவி ( திறவுகோல்) போன்றவை போர்த்துகீசிய சொற்கள்..

அரபிய, பாரசீக, பிற சொற்களும் அதற்கு நிகரான் தமிழ்ச்சொற்களும்

அந்தஸ்து - நிலைமை
அலாதி - தனி
ஆஜர் - வருகை
இஸ்திரிப் பெட்டி - துணி மடிப்புக் கருவி
இனாம் - நன் கொடை
கறார்விலை - ஒரே விலை
கஜானா - கருவூலம்
கம்மி - குறைவு
காலி - நிரப்பப்படாமல் உள்ள நிலை
காலிப்பயல் - போக்கிரி
கிஸ்தி - வரி
கைதி - சிறையாளி
சரகம் - எல்லை ( சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார் - அரசாங்கம்
சந்தா - கட்டணம்
சவால் - அறைகூவல்
சாமான் - பண்டம்
சிபாரிசு - பரிந்துரை
சிப்பந்தி - வேலையாள்
சுமார் - ஏறக்குறைய
ஜமீன் - நிலம்
ஜமீன்தார் - நிலக்கிழார்
ஜாஸ்தி - மிகுதி
ஜோடி - இணை

தயார், அசல், பாக்கி போன்றவற்றுள் நல்ல தமிழ்ச்சொல் எது?
300 ரூபாயை எப்படி குறிப்பிடுவீர்கள்? முன்னூறு என்றா? முந்நூறு என்றா?
அடுத்த பதிவில்...

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களியுங்கள்!!

Friday, June 26, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 3

இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளில் இருப்பது போல எழுத்துக்கள் தமிழ் மொழியில் இல்லையே என்று நமக்கு ஒரு ஐயம் (சந்தேகம் - வடசொல்) வருவதுண்டு.


எப்படி நீங்கள் pa,pha,ba,bha போன்ற உச்சரிப்புகளுக்கு ஒரே எழுத்து "ப"வை பயன்படுத்துகிறீங்கள்? என்ற கேள்வியை நம்மிடம் நண்பர்கள் கேட்பதுண்டு. நாமும் இந்தக் கேள்வியை ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி சமாளிப்பதுண்டு.


உண்மையில், தூய தமிழ் சொற்களுக்கு இந்த pa,pha,ba,bha என்ற வேறுபாடு தேவைப்படுவதாகத் தோன்றவில்லை.
**********
அபூர்வம், அவகாசம், அவசரம், அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்? எதுவுமே இல்லை.


அபூர்வம் - அருமை


அபூர்வம் என்ற வடசொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல் அருமை. ஆனால், மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தால் "அபூர்வம்" என்றும், நன்றாக இருந்தால் அருமை என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது.


அவசரம் - விரைவு...


ஆபத்து (துன்பம்) இருக்கும் சூழலிற்கு "அவசரம்" என்ற சொல்லும் (வேகம்) துரிதம் என்ற பயன்பாட்டிற்கு "விரைவு" என்ற சொல்லும் பயன்பாட்டில் உள்ளது. விரைவுப்பேருந்துகளில் "அவசர கால வழி" (Emergency Exit ) என்று எழுதியிருப்பதைக் காணலாம். இன்று, இதை மாற்றி எழுதினால் நமக்குப் புரியாது என்பதும் இருக்கிறது!


*************


சிகிச்சை - மருத்துவமுறை


"சிகிச்சை" என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் தான் "மருத்துவ முறை" என்று தெரிந்த பிறகு "இந்த மருத்துவமணையில் சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்" என்ற விளம்பரத்தை நாம் எப்படி நோக்குவோம்?


*************


திருப்தி - உள நிறைவு, மன நிறைவு


"WORD POWER MADE EASY" என்ற ஆங்கில புத்தகத்தில் ஒவ்வொரு சொல்லும் எப்படி உருவானது என்று அழகாக விளக்கி இருப்பார் ஆசிரியர் நார்மன் லீவிஸ்.


எ.கா. : Calligraphy : Beautiful Writing - Calli - (beautiful), Graphy - (Writing) -
Telegraphy: Distance Writing - Tele - (distance), Graphy - (Writing )
Biography : Life writing - Bio - (Life), Graphy - ( Writing )


இது போல நமது பயன்பாட்டில் உள்ள சொற்களைப் பிரித்து உரைக்க சொன்னால் நம்மால் முடியுமா?


"திருப்தி" என்ற வடசொல்லை "உள நிறைவு" என்ற தமிழ்ச்சொல்லால் குறிப்பிடும் போது மிக எளிதாக (சாதாரண) விளக்கமுடியுமே!!


**************


நமது பயன்பாட்டில் உள்ள பிற வடசொற்களும் அதற்கான தமிழ்ச்சொற்களும் கீழே....


வடசொல் - தமிழ்ச்சொல்
அபூர்வம் - அருமை
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
ஆகாயம் - வானம்
ஆபத்து - துன்பம்
ஆன்மா - உயிர்
இராகம் - பண்
இரத்தம் - குருதி
இலக்கம் - எண்
உபத்திரவம் - வேதனை
ஐக்கியம் - ஒற்றுமை
கஷ்டம் - தொல்லை
கல்யாணம் - திருமணம்
கிரயம் - விலை
குதூகலம் - எக்களிப்பு
கோஷ்டி - குழாம்
சக்தி - ஆற்றல்
சகஜம் - வழக்கம்
சக்கரவர்த்தி - பேரரசன்
சந்தேகம் - ஐயம்
சபதம் - சூள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சமீபம் - அண்மை
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி - வழித்தோன்றல்
சிகிச்சை - மருத்துவமுறை
சந்தர்ப்பம் - வாய்ப்பு
சம்பிரதாயம் - தொன்மரபு
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சிங்காசனம் - அரியணை
சிநேகம் - நட்பு
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுதந்திரம் - விடுதலை
சுயராஜ்யம் - தன்னாட்சி
சுபாவம் - இயல்பு
சேவை - தொண்டு
சேஷ்டை - குறும்பு
சௌகரியம் - வசதி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தாகம் - வேட்கை
தேதி - நாள்
திருப்தி - உள நிறைவு
நஷ்டம் - இழப்பு
நிபுணர் - வல்லுநர்
நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்
நீதி - நன்னெறி
பகிரங்கம் - வெளிப்படை
பரிகாசம் - நகையாடல்
பத்தினி - கற்பணங்கு
பத்திரிக்கை - இதழ்
பரீட்சை - தேர்வு
பந்துக்கள் - உறவினர்கள்
பாரம் - சுமை
பாஷை - மொழி
பிரசாரம் - பரப்புவேலை
பூர்வம் - முந்திய
மரணம் - சாவு, இறப்பு
மாமிசம் - இறைச்சி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
மோசம் - கேடு
யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்
ரகசியம் - மறைபொருள்
ருசி - சுவை
லாபம் - ஊதியம்
வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர்
வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்
வாலிபர் - இளைஞர்
விஷயம் - பொருள், செய்தி
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
வீரம் - மறம்
வேகம் - விரைவு
ஜனங்கள் - மக்கள்
ஜயம் - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜென்மம் - பிறவி
ஸ்தாபனம் - நிலையம்


இந்த தமிழ்ச்சொற்களை முழுதாக பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த முடியாவிட்டலும், சிறிது முயற்சி செய்தாலும் நல்லது தானே!


வீட்டில் கொண்டாடப்படுவது பண்டிகையா? விழாவா?
பசும் பால், பசுப் பால் - இதன் வேறுபாடு என்ன?
வடசொல் மட்டுமல்ல போர்த்துகீசிய, அரபிய சொற்களும் நமது பயன்பாட்டில் உள்ளது என்பது தெரியுமா?

அடுத்த பதிவில்....

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் தவறாமல் வாக்களிக்கவும்!

Wednesday, June 24, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 2

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்று நமது நினைவுக் குறிப்புகளை எழுதுவது இன்று நம் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது. அதற்கு நாம் (என்னையும் சேர்த்து) கொடுக்கும் பெயர் "அனுபவக் குறிப்புகள்".

சின்ன வயதில் நாம் ஏதாவது குறும்பு செய்தோம் என்றால், வீட்டில் நம்மிடம் கூறுவது, "அத எடுக்காதன்னு சொன்னா கேட்க மாட்டீங்கற.. உனக்கு பட்டாத்தான் தெரியும்!!". அதே போல, ஒருவர் வாழ்க்கையில் அடிபட்டு முன்னேறி இருந்தால், நாம் கூறுவது, "அவர்க்கு பட்டறிவு அதிகம்" என்பது தான்.

"பட்டறிவு" என்ற தமிழ்ச்சொல்லின் வடசொல்லே "அனுபவம்".

நல்லதோ கெட்டதோ "பட்டால்" தானே நமக்கு மறக்க முடியாத நினைவாகிறது? ஆனால் இன்றைய பயன்பாட்டில் "பட்டறிவு" என்ற சொல்லையும் "அனுபவம்" என்ற சொல்லையும் வெவ்வேறு பொருளிற்குப் பயன்படுத்துகிறோம்.

வட இந்தியப் பெயர்களில் "அனுபவ்" என்ற சொல் வரும் போது, "பரவாயில்லையே தமிழ்ச்சொல்லை அங்கேயும் பயன்படுத்துகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அது எனது அறியாமை என்பது புரிகிறது.

குறிப்பு: "ஞாபகம்" என்பதே "நினைவு" என்பதன் வடசொல்லே!

*********

வட மாநிலங்களில் "கார்யாலயி" என்ற வார்த்தை பெரும்பாலான அலுவகங்களில் பார்க்கமுடியும். அதையே நாம் "காரியம்" என்ற சொல்லால் பயன்படுத்துகிறோம்.

காரியம் - செயல்

காரியம் என்ற வடசொல்லிற்கு நிகரான தமிழ்ச்சொல் செயல்.
காரியாலயம் - செயலகம்.
காரியதரிசி - செயலர், செயலாளர்.

இங்கே, "காரியவாதி" என்ற சொல் "தனது செயலில் மட்டும் குறியாக இருப்பவரை" குறிக்கும்படி பயன்படுத்தும் வழக்கம் எப்படி வந்தது?

***********

இலட்சணம் - அழகு

உனக்கு எப்படி பெண் தேட வேண்டும் என்ற கேள்வி வரும் போது, "அழகா, கண்ணிற்கு இலட்சணமா இருக்க வேண்டும்" என்று நாம் கூறுவது வழக்கம். இதனை, "அழகா, கண்ணிற்கு "அழகா" இருக்க வேண்டும்" என்று கூறுவதாகவே பொருள் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இலட்சணம் என்ற வடசொல்லின் தமிழ்ச்சொல் அழகு.
மேலும் "உத்தியோகம் புருஷ இலட்சணம்" என்ற வாக்கியத்தை தூய தமிழில், "நல்ல அலுவல் ஆண்மகனிற்கு அழகு!!" என்று எழுதலாம்.
***********
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்

இன்று, பெரும்பாலான கோயில்களில் "இங்கு தமிழில் அர்ச்சணை செய்யப்படும்" என்று எழுதி இருப்பதைக் காண்கிறோம்.

அர்ச்சணை என்பது மலரிட்டு ஓதுதல் என்பதன் வடசொல். இதே வரிசையில் கோயில்களில் பயன்படுத்தும் சில வடசொற்களுக்கான தமிழ்ச்சொல் கீழே..

வடசொல் - தமிழ்ச்சொல்
அனுக்கிரகம் - அருள் செய்தல்
ஆராதனை - வழிபாடு
உற்சவம் - விழா
கும்பாபிஷேகம் - குடமுழுக்கு
கோத்திரம் - குடி
சந்தியாவந்தனம் - வேளை வழிபாடு
சரணம் - அடைக்கலம்
சிவமதம் - சிவநெறி
பஜனை - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம் - திருப்பொருள்
பிரகாரம் - திருச்சுற்று
(அங்கப்)பிரதட்சனம் - வலம் வருதல்
பிரார்த்தனை - நேர்த்திக்கடன்
மந்திரம் - மறைமொழி
மார்க்கம் - நெறி, வழி
விக்கிரகம் - திருவுருவம்
யாத்திரை - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள் - திருப்பதிகள்
இந்த சொற்களை நாம் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, புதிதாக நமக்குத் தெரிந்தால் நல்லது தானே!

**********

பொறியியற் கல்லூரி மாணவர்கள், வெளிநாடுகளில் மேற்படிப்பிற்காகத் தயாராகும் போது, BARRON'S WORDLIST என்ற புத்தகத்தில் உள்ள சொற்களையும் அதன் அர்த்தங்களையும் மணப்பாடம் செய்வதைப் பார்க்க முடியும். அது போல நமது கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழிலும் ஒரு தேர்வு வைத்தால் எப்படி இருக்கும்?

அபூர்வம், அவசரம், அவகாசம்,அவசியம் - இதில் எது தூய தமிழ்ச்சொல்? அடுத்த பதிவில் http://senthilinpakkangal.blogspot.com/2009/06/3.html

உங்களுக்கு இந்தப்பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்!

Tuesday, June 23, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 1

அண்மையில் எனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

மதிய உணவு வேளையின் போது உறவினரின் மகன், "அம்மா 'சோறு' போடுங்க!!" என்றான்..அதற்கு உறவினரோ "சோறுன்னு சொல்லாதே! சாதம்னு சொல்லு..!" என்றார்..

இதைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருந்தது.

"சாதம்" என்பது தூய தமிழ்ச்சொல் கிடையாது என்பது தான் வியப்பிற்குக் காரணம்.

"சோறு" என்பதே தூய தமிழ்ச்சொல். "சாதம்" என்பது வடசொல் என்பது நமக்குத் தெரியுமா?

ஆனால் நமது பயன்பாட்டில் "சோறு" என்பது தரக்குறைவான சொல்..

******
சுத்தம் - துப்புரவு இந்த இரண்டு சொற்களில் எது தூய தமிழ்ச்சொல்?


துப்புரவு தான் தூய தமிழ்ச்சொல். ஆனால் நாம், "துப்புரவு" என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவது துப்புரவுத் தொழிலைக் குறிப்பிடுவதற்குத் தான். இப்படி, நமக்கு தெரியாமலேயே தூய தமிழ் சொற்களுக்கு நாம் இரண்டாம் இடத்தையே தருகிறோம் என்பது சிறிது யோசிக்க வேண்டிய ஒன்று.

******
ஆசிர்வாதம் - வாழ்த்து

வாழ்த்து என்பதன் வடசொல்லே ஆசிர்வாதம். ஆனால் நமது பயன்பாட்டில், "பெரியோரின் காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும்" என்று கூறுவது மிகவும் அரிதே!! அந்த இடத்தில் "ஆசிர்வாதம்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறோம்.
இது போல, நாம் பயன்படுத்தும் பல சொற்கள் வடசொற்களே.. கீழே சில எடுத்துக்காட்டுகள் (உதாரணம் என்பது வடசொல்)

வடசொல் - தமிழ்ச்சொல்
அகங்காரம் - செருக்கு
அகதி - ஆதரவற்றவர்
அகிம்சை - ஊறு செய்யாமை
அங்கத்தினர் - உறுப்பினர்
அங்கீகாரம் - ஒப்புதல்
அசுத்தம் - துப்புரவின்மை
அதிகாரி - உயர் அலுவலர்
அநீதி - முறையற்றது
அபயம் - அடைக்கலம்
அபிவிருத்தி - பெருவளர்ச்சி
அபிஷேகம் - திருமுழுக்கு
அபிப்பிராயம் - உட்கருத்து
.
.
.
திங்க் (Think) பண்ணி, யூஸ் (use) பண்ணி, டிரைவ்(drive) பண்ணி என்று தமிழ் பேசுபவர்களுக்கு இந்த பதிவு பிடிக்காமல் போகலாம். ஆனால், நல்ல தமிழில் பதிவுகளை எழுத விரும்புவோருக்கு இந்தத் தொடர் பயனளித்தால் மகிழ்ச்சியே...


இன்ன பிற "அனுபவ"ங்களைப் பற்றி நமது பயன்பாட்டில் தமிழ் - 2
என்ற பதிவில்

Friday, June 5, 2009

டும் டும் டும்!!

இந்த மிருதங்க ஓசை கேட்கறதுக்குள்ள தான் எத்தனை கலாட்டா!! எத்தனை கற்பனைகள்!! எத்தனை எதிர்பார்ப்புகள்!! இதைப்பற்றித்தான் இந்த இடுகை!!

நம்ம வீட்டுலயும் ஒரு பையனோ பெண்ணோ கல்யாண வயசுல இருக்காங்கனு பெற்றோர்களுக்குத் தெரிய வர்ரது, நம்ம பக்கத்து வீட்டு uncle சொல்லியோ அல்லது கல்யாணத்துல சந்திக்கற உறவினர் சொல்லியோ தான்!!

வரன் தேடுவதில் முதலில் வந்து நிற்பது Conditions.. conditionsனு சொன்னா, அது "மணல் கயிறு" படத்துல S.V.Sekar, போட்டதே பரவால்லனு தோணும்!!. அட, நல்லா படிச்ச, அழகா, லட்சனமாங்கறதெல்லம் ரொம்ப basic conditions..

தான் வேலை பார்க்கும் IT sectorல தான் அந்த பெண்ணும் வேலை பார்க்கணும், வீட்டுல ஒரே ஒரு ஆள் தான் இருக்கனும், US போக ரெடியா passport வச்சிருக்கனும், நமக்கு தெரிந்த தம்பதியினர் மாதிரி நமக்கும் அமையும்னு சொல்லீட்டு, broadmindedஆ இருக்க வேணுங்கற மாதிரி conditions.. ( இதுல என்ன beautyன்னா broadmindedness, caring, affectionate, possessiveness எல்லாம் ஒரு அரை மணி நேரம் பெண் பார்க்கும் போது கண்டு பிடிக்க முடியாது :))

இது போதாதுன்னு ஜாதிப்பிரிவு, உட்பிரிவு பொருந்தனும், ஜாதகம் பொருந்தனும், நம்ம தகுதிக்கு (??) தகுந்த மாதிரி இருக்கனும், நம்ம ஊருக்கு பக்கத்துலயே இருக்கனும் ஆனா பையன் வேலை பார்க்கற ஊர்லயே வேலையும் பார்க்கனும், பக்கத்து வீட்டுப்பையனுக்கு போட்டத விட நிறைய போடனும்னு ( ??) பெற்றோர் போடறது ஒரு தனி பட்டியல்!!

இத்தன conditions OK ஆகனும்னா எவ்வளவு iterations, தேவைப்படும்!! பெரிய Research Labல கூட இவ்வளவு iterations நடக்குமாங்கறது சந்தேகம் தான்!!

இதுல எந்த condition ரொம்ப complicatedனா அது ஜாதகம் பொருத்தம் தான்!! நம்ம ஜாதகம் கணிக்கறது நம்ம ஜனன நேரத்த பொருத்துதான். ஒரு 10 நிமிஷம் தவறா குறிச்சிட்டாங்கன்னா, எல்லாமே தலை கீழா மாறிடும். சுருக்கமா சொல்லனும்னா மாட்டாஸ்பத்திரி டாக்ரருக்கும், மாடு மேய்க்கறவருக்கும் ஜாதகதுல 10 நிமிஷம் வித்தியாசம் போதுமாம்.

இப்படி, இந்த ஜாதகத்த எடுத்துட்டு ஜோசியர் கிட்ட போனா, குரு பலம் இல்ல, செவ்வாய் தோசம் இருக்கு, கல்யாண நேரம் வரலம்பாரு :) "அதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கான்னு" கேட்டுட்டா போதும், உங்க பையன கூட்டீட்டு ஒரு பத்து கோயிலுக்கு போயிட்டு வாங்கனு ஒரு schedule போட்டு கொடுத்துருவார். கோயிலுக்கே அதிகமா போகாத நம்ம ஆளு "பயபக்தியோட" போயிட்டு வருவாரு.

இன்னும் பணக்காரரா இருந்தாங்கன்னா வீட்டுலயே ஒரு 48 நாள் பூஜைக்கு schedule போட வச்சிருவாங்க!! இந்த காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம் எல்லாம் தெரிய வருவதே இப்படித்தான்!!

அப்படியே ஒரு ஆறேழு மாசம் தேடியும் எதுவும் அமையலனா, அதே பக்கத்து வீட்டு uncle, "வைத்தீஸ்வரன் கோயில்னு ஒரு ஊரு கும்பகோனம் பக்கத்துல இருக்கு, நாடி படிக்கறதுல ரொம்ப famous அப்படியே ஒருக்கா போயிட்டு வந்தீங்கன்னா நல்ல இருக்கும்னு" போட்டு வச்சிருவார்..

அந்த ஊருக்குப் போய் பார்த்தா, எங்க பார்த்தாலும் "அகஸ்திய நாடி ஜோதிடம்னு" board இருக்கும். அங்க இருக்கும் எல்லோருமே, "தாங்க தான் அகஸ்தியரோட வாரிசுனு" சொல்லி குழப்புவாங்க!!

சரின்னு ஒரு இடத்துக்குப் போனா, hotel menu card மாறி ஒரு அட்டை கொடுப்பாங்க. பொது -500/- வேலை - 500/-, திருமணம் -500/- அப்படி.. சரி ஏதோ பொதுவா பாருங்கனு சொன்னா, பல விவரங்களையும் சரியும் தவறுமா சொல்லி கடைசில, "முன் ஜென்மத்துல உங்க மகன் பேரு நாகேஸ்வர ராவு, மத்த இத்யாதி இத்யாதி.... எல்லாம் சொல்லி, உங்க மகன் பல பெண்கள ஜல்ஸா பண்ணி ஏமாத்தீட்டாரு, அந்த பாவத்தால தான் திருமணம் நேரம் தள்ளிப்போகுதுனு" சொல்லி, பரிகாரமா திரும்பவும் ஒரு 8 கோயிலுக்கு போயிட்டு வர சொல்லுவாங்க!!

என்னடா, இத்தன நாளா தேடிட்டு இருக்கறாங்க ஒன்னும் அமையலயேன்னு, நம்ம ஆளு HINDU Newspaper, Classifieds, பார்க்க ஆரம்பிச்சா, ஒன்னு எல்லாம் நம்ம வாங்கறத விட ரெண்டு மடங்கு சம்பளம் அதிகமா வாங்கற மாதிரி இருக்கும், இல்லேன்னா, எல்லாம் நம்ம வயச விட அதிகமா இருக்கும்!!

நம்ம விளம்பரத்த பார்த்து, ஒரு 50, 100 postcard வரும்.. எல்லாம் திருமண தகவல் மையங்கள் தான் :) அதுல ஏதாவது ஒன்னப்போய்ப் பார்த்தா, மேஜை முழுக்க ஜாதகம் இருக்கறதாகவும், ஒரு 500/- கட்டி member ஆகீட்டீங்கன்னா, உங்களுக்கு நாங்க வரன் வரும்போது சொல்லி வைக்கிறோம்பாங்க..(அந்த மேஜைல இருக்கறதுல முக்காவாசிக்கு கல்யாணம் ஆகியிருக்கும்!! )

இதுல இன்னோரு type என்னன்னா, அதே விளம்பரத்த பார்த்துட்டு வீடடுக்கு தரகர்கள் வர ஆரம்பிப்பாங்க!! "நிறைய நல்ல இடம் இருக்கு, நல்ல செய்வாங்க, அவங்க போடற சவரனுக்கு தகுந்த மாதிரி சவரனுக்கு 200/- commission கொடுத்திடுங்க"ம்பாங்க. வீட்டுக்கு வருகிற ஒவ்வொரு தரகருக்கும் பஸ் செலவுக்கு 100/- தர்ரது வேற கணக்கு!!


இப்படி பெற்றோர்க்கு ஒரு கவலைன்னா, பசங்களுக்கு வேற மாதிரி கவலை!! கல்யாணத்துக்கு முன்னாடி, மாலை நேரத்தில TV பார்த்தா, பீதி கிளப்புறதுக்குனு ஒரு கூட்டம் திரியறது வேற விஷயம்!! அதாங்க 7-8 தலைமுறையா சித்த மருத்துவம் பார்த்து வருவதாகவும், கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு முறை எங்க அலுவலகதுக்கு வந்து "அந்த" மாதிரி ஏதாவது குறை இருக்கானு check பண்ண சொல்லி பயமுறுத்தி சம்பாதிக்கறதுக்குனு ஒரு தனி கூட்டம்!!


நம்ம ஆளு net பக்கம் போனா எங்கே பார்த்தாலும் Matrimony site விளம்பரம் தான்!! அங்க நடக்கறது தனிக்கூத்து!! சரி நம்மளும் தேடுவோம்னு register பண்ணி பார்த்தா, fotoவோட இருக்கற profile 10% கூட இருக்காது.. பிறகு எப்படி தேடறது? foto போடறது ஒரு தனி கதை!! stamp size foto, சின்ன வயசு foto, photoshop touched foto இப்படி!!

ஒரு வழியாக எல்லா வகையிலும் திருப்தி அடைந்து, பெண் பார்க்கச் சென்றால், எவ்வாறு தேர்வு செய்வது என்பது ஒரு தனி குழப்பம்!! பார்த்த பெண் கனிவாக பேசுகிறாரா?என்பதைத் தவிர வேறு எதையும், கணிக்கவோ முடிவு செய்ய முடியாது என்பது தான் உன்மை!!

இந்த மாதிரி பல கல்யாண கூத்துகள் நம்ம ஊருல இருந்தாலும், எப்படி arranged marriage?ன்னு பல கேள்விகள் இருந்தாலும், இது தான் time tested formulaவா இருக்கு!!

இந்த மாதிரி arranged marriage நடக்கலைன்னா, western countriesல பார்க்கறது மாதிரி, கல்யாணம் ஆகாதோர் எண்ணிக்கை நம் நாட்டில் பல மடங்கு அதிகரித்து விடும்!! இப்படி, ஒரு கல்யாணம் நடந்ததோட முடியுதா கூத்து?,............. அடுத்து ஒரு கேள்வி இருக்கே நம்ம உறவினர்கள் கிட்ட readya, "ஏதாவது விஷேஷம் உண்டா?" "அங்க ஆரம்பிக்குது அடுத்த round கூத்து :)!!"

TailPiece: கொஞ்சம் சீக்கிரம் கல்யாணத்த முடிக்கணும்னு ஆசை இருந்தா, குறுகிய வட்டத்துக்குள்ள தேடாம, பெரிய வலையா போடறது நல்லது :) More Conditions, More Iterations ;) !!


இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப் போடுங்கள்

கூகுளின் புதிய அவதாரம் - வேவ் !!

வேவ் என்றால் அலை...
அலையைப் போல கூகுள் வேவிற்கும் எல்லை இல்லை என்று தான் தோன்றுகிறது அதன் முன்னோட்டத்தைப் பார்த்த போது.
கூகுளின் புதிய அவதாரம் தான் "கூகுள் வேவ்"..

இதில் என்ன புதிதாக உள்ளது?

சாட் செய்யும் போதே மொழிபெயர்க்கும் வசதி:

நீங்கள் ஆங்கிலம் அதிகமாகத் தெரியாத ஒரு நண்பருடன் சாட் செய்கிறீர்கள்... நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்வதை அவருக்கு தன் மொழியில் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும்? இது தான் மொழிபெயர்க்கும் வசதி!! இந்த வசதியில் தமிழிழும் இருந்தால், நம்ம பெற்றோருடனும், தாத்தா பாட்டியிடனும் கூட சாட் செய்ய போல... (keypad ஆங்கிலத்தில் தான் உள்ளது என்பது வேறு விஷயம்!!)

மிக விரைவாக சாட்.. ( Senthil is typing...)

நாம் சாட் செய்யும் போது டைப் செய்து வருகிறோம் என்றால் "typing.... " என்று ஒரு கமெண்ட் கீழே காணப்படும்.. நாம் என்ன டைப் செய்கிறோம் என்பது எதிரில் இருப்பரும் பார்த்தால்..? மிக விரைவாக சாட் செய்யாலாம் தானே? ( நாம் டைப் செய்வதை பார்க்க முடியாமல் செய்யவும் வசதி உள்ளதாம்!!)

புதிய முறையில் ஈ-மெயில் :

நாம் நம் நண்பர்களுக்கு மெயில் அனுப்புகிறோம். அவர்கள் பதிலோ அல்லது அவர் பிறருக்கோ அனுப்புகிறார்.. இதை ஒரு விவாதமாகமோ அல்லது தொகுப்பாகவோ "ஒரே பக்கத்தில்" பார்த்தால் எப்படி இருக்கும்?
அது தான் வேவின் புதிய முறை...

இதில் புதிதாக ஒருவரை நமது விவாதத்திற்கு அழைக்கலாம்.. அவரும் நமது விவாதித்தின் இடையில் Comment செய்யலாம்..

பிளேபேக் (Playback) வசதி:

மேலே குறிப்பிட்ட விவாதத்தில் பலரும் பலவிதமான் கருத்துக்களைத் தருகிறார்கள்.. இது எங்கே இருந்து ஆரம்பித்தது?யார் எப்போது கருத்து தெரிவித்தார்?

இதனைப் பார்க்க புதிதாக வருகிறது Playback வசதி.
பிக்காசா...

நாம் நமது நண்பர்களுக்கு படங்களைக் காண்பிக்க, பிக்காசா தளத்தின் linkயை அனுப்புவோம். இதுவே உங்கள் நண்பருடன் சாட் செய்யும் போதே விவாதிக்கும் இடத்திலேயே படங்களை இணைத்தால்?
அவரும் உடனே நமது படங்களுக்கு கருத்து தெரிவிக்கலாம்....


பிளாக்கையும் விட்டு வைக்கலை!!:

நீங்கள் உங்கள் பதிவை Blogspotல் வெளியிடுகிறீர்கள்.

சில நண்பர்கள் அதற்கு பின்னூட்டம் இடுகிறார்கள். அதற்கு நீங்கள் வேவில் இருந்த படியே கருத்து தெரிவிக்கலாம். இந்த பின்னூட்டங்களை ஒரு விவாதமாக வேறு நண்பர்களுக்கும் அனுப்பலாம்.. அவர்கள் கருத்தும் உடனே Blogspotலும் வந்து விடுமாம்.

SpellChecker வசதி:

நாம் சாட் செய்யும் போதோ அல்லது மெயில் தயார் செய்யும் போதோ நேரம் செலவாவது தப்பில்லாமல் வார்த்தைகளை டைப் செய்வதற்குத்தான்!! இனி இந்த கவலை வேண்டாம்..

நாம் டைப் செய்யும் போதே "என்ன வரியை எழுதுகிறோம் என்று வேவின் Spellchecker வசதியே சரி செய்கிறது".

"Icland is icland" என்று டைப் செய்தால் "Iceland is island" என்று மாறுகிறது.

வரைபடமும் (Maps) உண்டு:

நமது விவாதத்தின் போது "நான் கோவை அருகே உள்ள சூலூரிற்கு செல்கிறேன்" என்று டைப் செய்யும் போது, சூலூரின் வரைபடத்தையும் இணைக்க முடியுமாம்!!

விளையாட்டுகளும் உண்டு:

செஸ், சுடோகு போன்ற விளையாட்டுகளை நமது நண்பர்களுடன் விளையாடலாம். இது ஏற்கனவே சில தளங்களில் வந்து விட்டது.
செஸ் விளையாடி முடித்த பிறகு நமது ஆட்ட நகர்த்தல்களை "Playback" வசதி மூலம் ஆரம்பம் முதல் பார்க்க முடியும்.
சுடோகு விளையாட்டை இரண்டு, மூன்று பேர் சேர்ந்தும் விளையாட முடியும் :)



கூகுளும் உள்ளேயே:
இத்தனை வசதியை கொடுக்கும் போது இதை மட்டும் எப்படி விடுவார்கள்?
நமது உரையாடலின் போதே "கூகுளில்" தேடவும், தேடலின் முடிவையும் இணைக்கவும் முடியுமாம்...

செல்போனில் வேவ், டிவிட்டருடன் இனைப்பு, வீடியோவை இணைக்கும் வசதி என்று பல சேவைகள் உள்ளதாம் இந்த கூகுள் வேவில்..
இதைப் பார்க்கும் போது அவர்கள் சரியான பெயரை வைத்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது!!
இதை அனைத்தையும் நான் பார்த்தது "கூகுள் வேவ்"ன் ஒன்றரை மணி நேரம் ஓடும் அறிமுகம் பற்றிய http://www.youtube.com/watch?v=v_UyVmITiYQ இந்த வீடியோவில் தான். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்!! ஒரு நல்ல முன்னோட்டம் பார்த்த திருப்தி கிடைக்கும்...
இந்த வருட இறுதிக்குள் கூகுள் வேவ் செயல்பாட்டிற்கு வருமாம். இப்பவே முக்காவாசி நேரம் நெட்ல தான் இருக்கேன்.. இதுவும் வந்துட்டா சொல்லவே வேணாம்.. நீங்க புலம்பறது கேக்குது :)

உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்தையும் வோட்டையும் பதிவு செய்யுங்கள்!!

......
Related Posts with Thumbnails