Sunday, May 30, 2010

அமீரக தட்பவெப்பம், கோவை சாலையோர மரங்கள் - பார்வை!!

"ஊப்ஸ்.. லண்டனில் 24 டிகிரி வந்துவிட்டது. காரில் ஏ.சி. போடாமல் இருக்க முடியவில்லை" என்று என் தோழி ஒருவர் ஃபேஸ்புக்கில் தன் நிலையைப் புதுப்பித்திருந்தார்.

"இங்கே துபாயில் 35 - 38 டிகிரி இதமான சூழ்நிலையே காணப்படுகிறது. வெயில் காலத்திற்கும், 45 - 50 டிகிரி வரையான தட்பவெப்பத்திற்கும் மனதளவில் தயாராகி வருகிறோம்" என்று நான் தோழியின் நிலைக்குப் பதிலளித்திருந்தேன்.

வெயில், குளிர் எல்லாமே அவரவர் சூழ்நிலைக்கும், அனுபவத்திற்கும் இணங்க மாறுபடும். உடுமலையில் இருந்த வரை மார்ச், ஏப்ரல் மாதத்தில் அடிக்கும் 30 -33 டிகிரியே அதிகபட்ச வெயிலாகத் தோன்றும். உடுமலையில் மே மாத பாதியில் காற்று அடிக்க ஆரம்பித்துவிடுவதால், மே மாதத்தில் அதிக வெயில் இருக்காது. ஊரிற்குப் பெற்றோரிடம் பேசும் பொழுது "வெயில் அதிகமா இருக்கப்பா" என்று அவர்கள் கூறினால் எனக்குச் சிறு புன்னகை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

என் தோழிக்கு 24 டிகிரியைத் தாங்க முடியவில்லை என்றால், எங்கள் ஊரில் இருப்பவர்களுக்கு 30 -33 டிகிரி. சில வருடங்கள் வேலூரில் வேலை செய்ததால் எனக்கு 40 டிகிரி வெயிலும் பழகிட்டது, அதைத் தாண்டும் வெப்பமே பொறுக்கமுடியாத வெப்பமாகத் தோன்றுகிறது. அமீரகத்தில் வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது. சில நாட்களாக 40 டிகிரியைத் தாண்டுகிறது வெப்பம். 

அமீரகத்தின் வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களை தொடர்புபடுத்திப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் நிறுத்தப்பட்ட குளிரூட்டும் சாதனங்கள் (ACs) இரண்டு நாட்களாக இயங்க ஆரம்பித்துள்ளன. நீரை அரிதாகவே காணும் அமீரகச் சாலைகளில் கானல் நீர் அதிகமாகத் தென்படுகிறது. பளபளப்பான சாலைகள் கானல் நீரால் மேலும் பளபளக்கின்றன. அவ்வப்பொழுது வீட்டின் வெளியே தெரியும் மனிதர்களும் குறைந்து வருகிறார்கள். இவை யாவும் பெரும்பாலான அமீரகப் பகுதிகளில் தெரியும் விசயம் என்றால் அமீரகத்தின் ஒரு பகுதியான ஷார்ஜாவிலோ வேறுமாதிரியான மாற்றங்கள்.

வீடுகளிலும், அலுவலகங்களிலும் அதிகப்படியாக குளிரூட்டும் சாதனங்கள் இயக்க ஆரம்பித்திருப்பதால் மின் தட்டுப்பாடும், மின் வெட்டும் காணப்படுகிறது. மின்வெட்டால், சில சாலைகளில் உள்ள போக்குவரத்து விளக்குகள் இயங்காததால், அச்சாலைகளில் வாகன நெரிசலும், சாலை வழித்தட மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. வழக்கமாக துபாயில் இருந்து ஷார்ஜாவில் உள்ள என் வீட்டிற்கு வர ஒரு மணி நேரமாகும். ஆனால், இன்று அது இரண்டரை மணி நேரமானது.





பேருந்திற்கு வெளியே பார்த்தால் கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாகச் சென்று கொண்டிருக்கின்றன. யாரும் ஹாரன் அடிக்கவில்லை. குறுக்கே செல்லவும் முயற்சிக்கவில்லை. அனைவருக்கும் தெரியும், தாங்கள் ஹாரன் அடிப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று. வாகன் ஓட்டிகளில் பெரும்பாலானோர் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழமையாக பேருந்தில் அரை மணி நேரம்  தூங்கும் நான் இன்று ஒரு மணி நேரம் தூங்கினேன். பிறகு நேரத்தைக் கழிக்க வேண்டி, சில வாரங்களாக பேசாமல் (நேரமில்லை என்ற காரணம் ??) இருந்த நண்பர்களிடம் பேசினேன். பேருந்தில் "உர்ர்ர்ர்ர்" ரென்று பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். அலுவலக அட்டைகளையும் சிலர் பரிமாறிக்கொண்டார்கள். 

ம்ம்ம்.. இவை எல்லாம் எதனாலே?

தட்பவெப்பம் அதிகரிப்பதனாலே!! 


கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் அமீரகத்தில் குடியிருக்கிறேன். நீண்ட காலமாக இங்கே இருப்பவர்கள் குறிப்பிடுவது, "நகரை பசுமைப்படுத்த அரசாங்கத்தினர் மேற்கொள்ளும் முயற்சிகளால் தட்பவெப்பம் குறைகிறதென்று!!". மே மாத இறுதில் வெயில் காலம் ஆரம்பிக்கிறது என்று பதிவெழுதும் நான் சில வருடங்கள் கழித்து ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கிறது எழுதக்கூடும்!!



o

சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள என் அத்தையிடம் பேசுகையில், "கண்ணூ, நம்மூர் ரோட்டுல ஒரு மரம் இல்லடா.. பூரா மொட்டையா நிக்கிது. வெயில் வேற மண்டையப் பிளக்குது" என்றார். வழக்கமாக வெயில் என்று புலம்புவதைப் போல அது தோன்றாததால், என்னால் புன்னகைக்க முடியவில்லை. கோவை நகரிற்கு அழகு சேர்ப்பவையே நகரை நோக்கிச் செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள மரங்கள் தான்.



கோவையில் இருந்து சூலூர் நோக்கிச் செல்லும் சாலைகளிலோ, அவினாசி நோக்கிச் செல்லும் சாலைகளிலோ ஓரளவு தான் மரங்கள் இருக்கும். ஆனால் மேட்டுப்பாளையும் செல்லும் சாலையிலோ ஏதோ சோலையில் செல்லும் அனுபவம் ஏற்படும். ஆங்கிலத்தில் Boulevard என்ற வார்த்தைக்கு சிறந்த உதாரணம் கோவை - மேட்டுப்பாளையம் சாலை தான். அச்சாலையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான வேலைகள் நடப்பதாக வரும் செய்திகள் மனதைத் துளைக்கிறது.

மேட்டுப்பாளையத்தில் இருக்கும் என் சித்தப்பாவின் வீட்டிற்குச் செல்வதில் ஏற்படும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவதே அந்த சாலைப்பயண அனுபவம் தான். ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு கோவையில் இருந்தே வரவேற்பு அளிப்பதாக அமைவது இந்த சாலையோர மரங்கள் தான். நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டுவதை நினைத்தால்.... :((

o

உலகின் ஒரு பாகத்தில், பசுமையின்மையால் நேரும் காலநிலையை மாற்ற என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பசுமையை அழித்து நாகரிகம் வளர்க்க முயற்சிக்கிறோம்.  இன்று நான் அமீரகத்தில் பார்த்த காட்சி கோவைக்கு வர எத்தனை காலமாகும்??

o

Friday, May 28, 2010

ஃபேஸ்புக் - நம் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை என்ன?


சில வருடங்களுக்கு முன்பு வரை நம் நண்பர்கள், உறவினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நேரில் சந்திக்கும் பொழுதோ, எப்பொழுதாவது தொலைபேசியில் பேசினாலோ மட்டும் தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று, நாம் என்ன செய்கிறோம், என்ன நினைக்கிறோம் என்பதை தினமொரு முறை, பலர் மணிக்கொரு முறை பகிர்ந்துகொண்டிருக்கிறோம். உபயம் சமூக வலையமைப்புத்தளங்கள்!!

அதில் ஃபேஸ்புக்கின் பங்கு மிகவும் அதிகம்.

காலையில் பார்த்த விசயங்கள், மனதில் உதித்த விசயங்கள், விரும்பிய புகைப்படங்கள், வடித்த கவிதைகள், பார்த்த காணொளிகள், வாசித்த கட்டுரைகள் என்று பகிரப்படும் விசயங்களுக்கு அளவே கிடையாது. 

நாங்கள் எடுத்த புகைப்படம்...

எங்கள் குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம்..

நானும் இந்த பிரபலமும் சந்தித்த பொழுது எடுத்த புகைப்படம்..

என் அலைபேசி எண்ணை மாற்றியுள்ளேன். இதோ.. இது தான் என் எண்..
.
.
என்று தன்னைப் பற்றியும் தங்களது எண்ணங்களையும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துகொண்டேயிருக்கிறோம். 

சில சமயங்களில் மெங்களுர் விமான விபத்து போன்ற சம்பவங்களையும், அஞ்சலிகளையும் பகிர்ந்தாலும், நம் எண்ணங்களே பிரதானமாக இடம் பிடிக்கின்றன பகிர்தலில். சில கேள்விகள் எழுகின்றன. நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? நாம் பகிரும் புகைப்படங்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்படுகின்றதென தெரியுமா?

"என் புகைப்படங்களை வைத்து என்ன செய்யப்போகிறார்கள்? நான் என்ன பெரிய பிரபலமா?" என்ற எண்ணம் நமக்குள் எழத்தான் செய்யும். ஆனால், நாம் பகிரும் விசயங்களால் நமக்கு எந்த திசையில் இருந்தும் சங்கடங்கள் நேரலாம். நம் பகிர்தலை யார் யார் எல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்யும் வரை!!

என் தோழி ஒருவர் தான் ஒரு பிரபலத்துடன் சில புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அந்த பிரபலமும் அவரது புகைப்படத்தொகுப்பில் அந்தப் படங்களைச் சேர்த்துள்ளார்.  தோழி அந்தத் தொகுப்பை தன் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்தார். நமக்குத் தான் பிரபலங்களின் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாச்சே. அந்தத் தொகுப்பைப் பார்த்தால் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களெல்லாம் உள்ளன. அதில் பல இதுவரை ஊடகத்தில் வெளியாகாத படங்கள்!!

அந்தப் பிரபலம் இதை எதிர்பார்த்திருப்பாரா?

அவர் செய்யாததென்ன?

தன் பகிர்தலை யார் யார் பார்க்க முடியும்? யார் யார் பிறரிடம் பகிரமுடியும் என்ற Settingsஐச் சரியாகத் தேர்ந்தெடுக்காதது தான்.

*



ஃபேஸ்புக் நிறுவனத்தினர், தளத்தின் பயணர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துவருகிறது. ஃபேஸ்புக் தளத்தினர் இந்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புக் கட்டுப்பாடை (Privacy Settings) மேலும் பலப்படுத்தியுள்ளனர். இனி நம் பாதுகாப்பிற்கு நாமே முழுப்பொறுப்பு.

சரி.. ஃபேஸ்புக்கின் தளத்தில் கவனிக்கப்படவேண்டியவை எவை?

பகிர்தல்:

நாம் பகிரும் விசயங்களை யார் யார் பார்க்கலாம்? அனைவரும் பார்க்கலாம், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்கள் என்று நான்கு பிரிவாகப் பிரிக்கலாம். அனைவரும் என்று தேர்ந்தெடுக்கும் பொழுது இணையத்தில் உள்ள அனைவரும் நம் பகிர்தலைப் பார்க்க முடியும். இதைத் தேர்ந்தெடுக்கும் முன்பு கொஞ்சம் யோசிக்கவும்.  சில சமயங்களில் சிலர் மட்டுமே பார்க்கும் படியான தகவல்களையோ, கருத்துகளையோ பகிர்கிறோம் என்றால், யார் யார் பார்க்கவேண்டும் என்பதையும் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

அடிப்படைத் தகவல்கள்:

நம்மைப் பற்றிய அடிப்படைத் தகவல்களான பெயர், பால், ஃபேஸ்புக் பிரதான புகைப்படம் முதலியவை அனைவருக்கும் தெரியும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கும். நம் நண்பர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள இது வசதியாக இருக்கும் என்பதால்..

சேவைகள், இணையதளங்கள்:

திடீரென்று நம் நண்பர்களிடம் இருந்து "எனது பக்கத்து பூமி காலியாக இருக்கிறது. வந்து விவசாயம் செய்யவும் என்று ஒரு அழைப்பு வரும். என்ன வென்று பார்த்தால் Farmville, Fishville என்று ஒரு விளையாட்டுச் சேவைகளாக இருக்கும்.  சிலவமயம் ஃபேஸ்புக்  பக்கத்தைப் பார்த்தால் நான் ஆடு வளத்தேன், பன்னிக்குட்டியைப் பார்த்தேன் என்று எங்கும் அவர்கள் இணையத்தில் விவசாயம் செய்வதாக இருக்கும்." இது போன்ற அழைப்புகள், பகிர்தல்களால் கடுப்பாகிறவராக நீங்கள் இருந்தால்.. இது போன்ற சேவைகளையே துண்டிக்கலாம் (Block).

அதற்கான வசதியையும் ஃபேஸ்புக் தளத்தினர் கொடுத்திருக்கிறார்கள்.




முக்கியமாக செய்யவேண்டிய விசயம்.. எந்த ஒரு அழைப்போ, கேள்வியோ வரும் பொழுது நன்றாகப் படித்துப்பார்த்து ஆம் இல்லை என்று தேர்வு செய்யவும்.  பல தளங்கள், சேவைகள் நாம் அச்சேவையைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுதே "உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுத்துக்கொள்ளவா?" என்று கேட்கின்றன. சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து "Most Sexiest Video Ever" என்று ஒரு பகிர்தல் நண்பர்களிடம் இருந்து வந்தது. அதைப் பார்க்கச் சென்றால் (சஞ்சலம் யார விட்டது?) உங்கள் நண்பர்களின் பட்டியலை எடுக்கவா? என்றது. ஆம் சொன்னால் தான் அந்தக் காணொளியைப் பார்க்க முடியும். நான் இல்லை என்று (ஏமாற்றத்துடன்) கூறிவிட்டேன். ஆனால், எனக்குத் தொடர்ச்சியாக இந்தச் சுட்டி வந்துகொண்டேயிருந்தது.


இங்கே நான் கூறியுள்ளவை யாவும் ஃபேஸ்புக் தளத்தில் கொடுக்கப்பட்டவையே. ஒரு பத்து நிமிடத்தை உங்கள் பாதுகாப்பிற்காக ஒதுக்குவது சரிதானே?

*

Saturday, May 22, 2010

பயமுறுத்தும் விமானப் பயணங்கள்..



நம் ஊர் செய்தித் தாள்களில் பார்க்கும் சாலை விபத்துகளைப் போலாகிவிட்டது விமான விபத்துகள்!! சென்ற வாரம் லிப்யாவில் நடந்த விமான விபத்தில் 100 பேருக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். சென்ற மாதம் போலாந்து நாட்டு விமான விபத்தில் போலாந்து அதிபர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

எங்கோ நடக்கும் பொழுது சிறு அதிர்ச்சியுடன் கடந்து செல்லும் நமக்கு, நம் நாட்டில், நாம் தொடர்புள்ள நகரங்களில் விபத்து நடைபெற்றால் அதிர்ச்சியில் இருந்து மீள்வது கடினமாகிவிடுகிறது. இன்று மெங்களூரில் நடந்துள்ள விபத்தை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை.

காலையில் செய்தித் தொலைக்காட்சியைப் பார்த்ததில் இருந்து செய்தியைப் பார்ப்பதையே தவிர்த்து வருகிறேன். செய்தித் தொலைக்காட்சிகள் காட்டி வரும் காட்சிகள் விமானப் பயணத்தின் மீதே பயத்தை உண்டாக்குகின்றன. மீண்டும் மீண்டும் வெடித்துச் சிதறும் காட்சிகளும், எப்படி நடந்தது என்ற ஆய்வுகளும் என்று தொலைக்காட்சிகளுக்கு, சில நாட்களுக்குத் தீணி (??) தான். 

விமானத்தில் ஏறியவுடன் ஆபத்தான சூழலில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், அவசர கால தரையிறக்கம் (லேண்டிங்) செய்ய வேண்டியிருந்தால் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். சிலர் மட்டும் கவனமாகக் கவனிக்க, பலர் தூங்கிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருப்பார்கள். அவர்கள் சொல்லிக் கொடுக்கும் வழிமுறைகள் யாவும் விமானியின் கட்டுப்பாட்டில் நேரும் சூழலிற்காகவே கூறப்படுகிறது.

ஆனால் கட்டுப்பாட்டில் இருந்து தவறும் விபத்துகளுக்கு என்ன செய்ய?

கால நிலை, ஓடு பாதையின் குறைவான நீளம், ஓடு பாதை அமைந்துள்ள இடம், விமானத்தைத் தரையிறக்கிய விதம், காற்றழுத்தம் என்று பலவற்றை விபத்திற்கான காரணங்களாகக் கூறுகிறார்கள். தாய்நாட்டில் உள்ள குடும்பத்தைப் பார்க்க வந்தவர்கள், சுற்றுலாவை முடித்து வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் என பயணிகளுக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியுமா?

விமானப் பயணங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில், அதற்கு ஈடுகட்டுமளவிற்கு வசதிகளையும் ஏற்படுத்துவது தேவையான ஒன்று. நம் நாட்டில், சில விமான நிலையங்கள் தவிர்த்து பெரும்பாலானவற்றுள் ஓடுதளம் சிறியதாகவோ, ஒரே ஒரு ஓடுதளத்தைக் கொண்டும் தான் இயங்கிவருகின்றன. சென்னை விமான நிலையத்தில் கூட, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லுஃப்தான்ஸா போன்ற பெரிய ரக விமானங்கள் ஓடுதளங்களில் ஓடும் பொழுது விமானத்தின் இறெக்கைகள் அருகில் உள்ள சுவற்றில் முட்டிவிடுமோ என்ற பயமேற்படும். 

ஓடுதளத்தின் நீளத்தை அதிகரிக்கவோ, கூடுதல் ஓடுதளங்களை உருவாக்கவோ வேண்டுமென்றால் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டியதிருக்கும். நிலங்களைக் கையகப்படுத்த வேண்டுமென்றால் அரசியல் தலையீடுகள் வந்துவிடுகின்றன. மெங்களூரில் கூட சிறிய ஓடுதளத்தை அமைத்திருப்பது இந்த விபத்திற்கு ஒரு காரணமாகக் கூறுகின்றனர். அரசாங்கத்தின் திட்டமிடலில் உள்ள கோளாறால் இன்னும் எத்தனை விபத்துகள், எத்தனை உயிரிழப்புகள் நடக்க வேண்டும்?

விமானத்தில் பயணிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?

பயணத்திற்கு முன்பு பயணக் காப்பீடு எடுப்பது தான் பயணிகள் அனைவரும் செய்ய வேண்டியது. பயணிகளால் ஏதும் செய்ய முடியாத நிலையில் குறைந்தது குடும்பத்திற்குக் காப்பீட்டுப் பணமாவது கிடைக்கும். விமானப் பயணச்சீட்டில் ஒரு 2% - 5% பணத்தை காப்பீட்டில் செலவிடுவதால் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லையே!!


மெங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த அன்பர்களுக்கு அஞ்சலிகளும், அவர்களின் குடும்பங்களுக்கும் அனுதாபங்களும்!!

*

இந்த நேரத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுகின்றது. எந்த அளவிற்குச் செய்திகள் நமக்குத் தேவை? எப்படி விபத்து ஏற்பட்டது என்பதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் விவாதிப்பதால் யாருக்கு லாபம்? நாளை விமானப் பயணம் மேற்கொள்பவரின் குடும்பத்தினர் என்ன மாதிரியான மன உளைச்சலுக்கு உண்டாக வேண்டியதிருக்கும்? 

நண்பர்களே, தயவு செய்து இது போன்ற விபத்துகளைக் குடும்பத்தினருடன், குழந்தைகளுடன் தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் பார்க்காதீர்கள். 

*

Monday, May 17, 2010

எப்பொழுது திருந்தப் போகிறோம்?

முதலாவது காட்சி: கோவை உக்கடம் பேருந்து நிலையம்

விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாட்களில் காணப்படும் காட்சி...

பொள்ளாச்சி மற்றும் பழநிக்குச் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நுழையும் இடத்திலேயே அடிதடி ஆரம்பித்துவிடும். தனியார், அரசுப் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளிலும் இடம் பிடிப்பதற்கு ஒரே சண்டை தான். இத்தனைக்கும் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பழநி, உடுமலை செல்லும் பேருந்துகளிலும் இதே நிலை தான். இதுவே பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை போன்ற விஷேச நாட்கள் என்றால் நிலைமை இன்னமும் மோசமாகி விடும்.

அடித்துப் பிடித்து பேருந்தில் ஏறி அமர்ந்து, அடுத்த தளத்தில் (லேன்) பாலக்காடு, திருச்சூர் செல்லும் பயணிகளைப் பார்த்தால் நமக்கே தலைகுனிவாக இருக்கும். பேருந்து நெரிசல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் வரிசையில் நின்று ஒவ்வொருவராக பேருந்துகள் ஏறுவார்கள். வரிசையில் கடைசியில் நிற்பவரும் அதிகபட்சமாக 15 நிமிடத்தில் ஏறிவிடுவார்.

அங்கே அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதல்ல ஒழுங்குக்குக் காரணம். தமிழகத்தில் அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படும் தடங்களில் கோவை - பொள்ளாச்சி, கோவை - திருப்பூர் போன்ற தடங்கள் முதலிடங்களில் வரும். நம்மால் ஒரு 15 நிமிடம் பொறுக்க முடியாதா? வாலிப முறுக்கில் இருப்பவர்கள் அடித்துப்பிடித்து இடம் பிடிக்க முடியும். வயதானவர்கள் என்ன செய்வார்கள்?

என் பெற்றோர், கோவையில் ஏதாவது வேலை என்றால் விசேஷ நாட்களில் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கண்டிப்பாகச் செல்ல வேண்டுமென்ற நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

20 அடி தொலைவில் நிற்கும் பயணிகளுக்கு இருக்கும் ஒழுங்கு நமக்கு ஏன் இல்லை? இது இன்று நேற்றல்ல, எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இதே ஒழுங்கு தான்! அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? காட்டுமிராண்டிகள் என்று தானே நினைக்கக் கூடும்?

அடுத்த காட்சி : கோவை ரயில் நிலையம்




இரவில் 8 மணியில் முதல் 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்குச் சென்றிருப்பவர்களுக்கு நான் விவரிக்கும் காட்சி நினைவிருக்கும்.

புதுடெல்லி செல்லும் கேரளா விரைவுவண்டி, நீலகிரி விரைவுவண்டி, சென்னை விரைவுவண்டி, நாகர்கோவில் விரைவுவண்டி, வெஸ்ட்கோஸ்ட் விரைவுவண்டி என குறைந்தது ஐந்து அல்லது ஆறு விரைவு வண்டிகள் 8 மணி முதல் 9 மணிக்குள் கோவை ரயில் நிலையத்தைக் கடக்கின்றன. மொத்தம் 6 பிளாட்பாரங்கள் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலும் 1,2,3,4 தளங்கள் (பிளாட்பாரங்கள்) மட்டும் தான் பயன்படுத்தப்படும். இதில் ஓரிரு ரயில்கள் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தால் இரண்டு தளங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இந்த ஆறு வண்டிகளில் செல்லும் ஏறக்குறைய 3000 பயணிகள் இரண்டு தளங்களில் தான் நிற்க வேண்டியிருக்கும். இது போதாதென்று பிளாட்பாரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறு விற்பனையாளர்களின் தள்ளு வண்டிகளையும் சேர்த்துக்கொண்டால் நிலைமை இன்னும் மோசம் தான். இப்படி 2000 - 3000 பயணிகள் நிற்கும் பிளாட்பாரங்கள் மாற்றப்பட்டால் என்னாகும் நிலை?

இது தான் ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடந்திருக்கிறது!!

13 ஆம் தளத்தில் வரவேண்டிய பிகார் செல்லும் ரயில் 12ம் தளத்துக்கு மாற்றப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியில் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. நம்மைப் பொறுத்த வரை, நாடெங்கும் மக்கள் நெருக்கடியால் இறந்து போன நூற்றுக்கணக்கானோரில் மேலும் இரண்டு உயிர்கள் அதிகரித்திருக்கிறது. எங்கோ நடந்ததால் இது நமக்குச் செய்தி. இதுவே கோவை ரயில் நிலையத்திலோ, உக்கடம் பேருந்து நிலையத்திலோ நடந்தால் என்ன செய்வோம்? சில நிமிடம் முன்பு தன்னுடன் நின்றிருந்த சக பயணி நெருக்கியதால் இறக்க நேர்வது எவ்வளவு துயரமானது?

இது போன்ற உயிரிழப்புகளைப் பார்க்கும் பொழுது, நம் வாழ்வு ஓடிக்கொண்டிருப்பது ஏதோ அதிர்ஷ்டம் என்று தான் எண்ணத் தோன்றுகிறது!

இதற்கு என்ன காரணம்?

1. போதிய இட வசதியில்லாதது தான் முதல் காரணமாகக் கூற முடியும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகள் பெருகியிருக்கின்றனவா என்றால், 'இல்லை' என்று தான் கூற வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வசதிகளைக் கொண்டு இன்றைய தேவையைப் பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம்.

2. நெருக்கடிச் சூழலை எதிர்கொள்வதற்குப் போதிய பயிற்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை எப்படி எதிர்கொள்வது என்ற அடிப்படை பயிற்சி இல்லாததாலேயே உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் வருடத்துக்கு ஓரிரு முறை பாதுகாப்புப் பயிற்சி (Safety Drill) நடத்தப்படுகிறது. அது போல பயணிகளுக்கும் நடத்தினால் பயனளிக்கும்.

3. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படலாம் என்ற முன்னேற்பாடு ஒவ்வொரு அமைப்பினரும் திட்டமிடுவது மிகவும் தேவையான ஒன்று.

4. மக்கள் கூடும் இடும் (ASSEMBLY POINT): கோவை, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாட்டுத்தாவனி போன்ற பிரதான பேருந்து நிலையங்கள் என எங்கேயும் அவசர கால மக்கள் கூடும் இடம் இருப்பதை நான் பார்த்ததே இல்லை. அசம்பாவிதம் நேர்கையில் எங்கே செல்வது என்று தெரியாததாலேயே விபத்துகள் நடக்கின்றன. Assembly Pointகளுக்கான இடத்தை ஒதுக்கி மக்களுக்கு தெரியப்படுத்தினால் சம்பவங்கள் நடக்கும் பொழுது உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.

5. எல்லாவற்றிற்கும் மேலான தேவை ஒழுக்கம். "நாம் நெருக்கித் தள்ளும் மனிதரும் நம்மைப் போன்றவர் தான்" என்ற எண்ணம் வரவில்லை என்றால் உயிரிழப்புகளைத் தவிர்க்கவே முடியாது.

எப்போது திருந்தப் போகிறோம்?

*

Friday, May 14, 2010

தமிழின் பலவீனம் தமிழின் தொன்மையே - பெரியார்தாசன்.

தமிழனிற்கு சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், வழக்காடுமன்ற நிகழ்ச்சிகளின் மீது உள்ள ஆர்வத்தைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை. "பேச்சிற்கு மயங்குபவன்" என்று தமிழனைக் கூறினால் அது மிகையில்லை. தமக்கு ஒத்த சிந்தனையுடையவரா, மாற்றுக் கருத்துடையவரா என்றெல்லாம் கவலையில்லாமல் "என்ன தான் சொல்றாருன்னு கேட்பமே?" என்ற எண்ணம் நமக்கிருக்கத்தான் செய்கிறது. அதுவே சிறந்த சிந்தனையாளராக அறியப்பட்டால் அவரின் நிகழ்ச்சி மீதான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது.



அப்படி ஒரு நிகழ்ச்சியினைத் தான் அமீரகத் தமிழ் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பெரியார்தாசன் என்று அறியப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ் பங்குபெற்ற "தமிழ் இலக்கியக் கூடல்" நிகழ்ச்சி நேற்று (13.05.2010) நடந்தது. கடந்த ஒரு வாரமாக அமீரகத்தில் இஸ்லாமிய இலக்கியம், இஸ்லாம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்ததால், இந்த நிகழ்ச்சி முழுக்க "தமிழ் இலக்கியம்" சார்ந்ததாக அமைத்திருந்தனர்.

தமிழ் மொழியின் தொன்மை தமிழ் மொழிக்கு பலமா? பலவீனமா? என்ற கேள்வியுடன் தனது உரையைத் தொடங்கினார். 

"தமிழ் மொழி 5000 ஆண்டு பழமை கொண்டது, நம் இலக்கியங்கள் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அவையெல்லாம் தமிழிற்குப் பெருமை சேர்ப்பவையே, தமிழின் தொன்மையே தனித்தன்மை" என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, "நம் மொழியின் தொன்மையே நம் பலவீனம்" என்றார். தமிழ் மொழியின் தொன்மை பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் நாம் இன்றைய நிலையைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிட்டோம். "5000 வருஷ மப்பு தான் இதற்குக் காரணம்" என்றார் அவரது பாணியில்.

உதாரணமாக நம் தமிழ்த்தாய் வாழ்த்தை மேற்கோள் காட்டி, தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளையும் கூறினார்.

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்

பொருள் :

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு அழகு மிளிரும்
சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்
தென்னாடும் அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்
பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும் அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.
அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்
எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த(இருக்கின்ற?) பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து
எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

மேலே இடம்பெற்றுள்ள தமிழ்த்தாய் வாழ்த்தில், எங்காவது தமிழர்களின் மொழிவளம், தமிழ் நாட்டின் வளம், தமிழ் மொழியிலுள்ள சிறந்த இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தமிழர்களின் வாழ்வாதாரமான காவிரி, தமிழர்களின் பண்புகளைப் பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்பினார். தமிழர்களின் பெருமையையே, தொன்மையையே பேசாத தமிழ்த்தாய் வாழ்த்தால் எப்படி மொழிப்பற்றை ஏற்படுத்த முடியும்? என்ற கேள்வி சரியாகவே தோன்றியது.

'மா தெலுகு தல்லிகி' என்ற தெலுகுத் தாய் வாழ்த்தினைப் பாடிக்காட்டி அதன் விளக்கத்தைக் கூறினார். "தெலுகு வாழ்த்தில் தெலுகுத் தாயை மலரிட்டு வணங்கி, கோதாவரியைப் புகழ்ந்து, கிருஷ்னா நதியைப் பாராட்டி, இலக்கியங்களைக் குறிப்பிட்டு, தியாகைய்யரின் தெலுகுக் கீர்த்தனைகளைப் புகழ்ந்து, தெலுகு மக்களின் பண்புகளின் பெருமை பேசுகிறது" என்றார். 

"4 வயது குழந்தை முதல் அனைவருக்கும் இந்தப் பாடல் மனப்பாடமாகத் தெரியும். அப்படி மனனம் செய்தவர்களுக்குக் கண்டிப்பாக அம்மொழியின் மீது பற்று வரத்தானே செய்யும்?" என்றார்.

நம்மில் எத்தனை பேருக்கு தமிழ்த்தாய் வாழ்த்தைப் பொருளுடன் முழுமையாகத் தெரியும்?



தமிழ் இலக்கியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தவர் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெருங்காப்பியங்கள் முதல் கம்பஇராமாயணம், தேவாரம், திருத்தொண்டர் புராணம் வரை இலக்கியங்களிலிருந்து பாடல்களைப் பாடியும், எடுத்துக்காட்டியும், இவ்விலக்கியங்கள் தமிழர்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்று அவரது பாணியில் கேட்டார்.

திருக்குறள் உலகப் பொதுமறை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதன் கருத்துகளைக் கடைப்பிடிக்க முடிகிறதா? என்ற கேள்வியையும், நம் மனதில் சிந்தனையையும் எழுப்பினார்.

"தமிழ் மொழியின் பழமையான இலக்கியங்கள் யாவும் இன்றைய காலகட்டத்திற்கு பயன்படாதவையாகவோ, பின்பற்ற முடியாதவையாகவோ தான் இருக்கிறது. இதனாலேயே தமிழின் தொன்மை நமக்குப் பலவீனம் என்று கூறுகிறேன்.தமிழிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றால் புதுமையான படைப்புகளைப் தமிழார்வம் மிக்கவர்கள் படைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

o

திருக்குறள் போன்ற பின்பற்ற முடியாத இலக்கியத்தால் என்ன பயன் என்ற கேட்டபொழுது "கருக்"கென்றிருந்தது. திருக்குறளின் கருத்துகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டிருந்தாலும் பின்பற்றாமல் போவது யாருக்கு நட்டம்? திருக்குறள் போன்ற நீதிநெறி நூல்கள் உள்ள கருத்துகள் தான் ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைக்கிறது என்பது என் கருத்து. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்", "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று" போன்ற பாடல்களை மனதில் வைத்திருக்கும் எனக்கு இந்தக் கருத்து ஏற்புடையதாக இல்லை.

தமிழில் நீதிநெறி நூல்கள் போதவில்லையா? என்று அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "இருந்தா சொல்லுங்க பார்ர்போம்!!" என்றார். 

திருக்குறளை விட நன்மை போதிக்கும் நீதிநூல் என்று இவர் எதைக் கூறுகிறார்?

எந்தத் தலைப்பாக இருந்தாலும் இலாவகமாகப் பேசுவதில் வல்லவர் என்பதை நேரில் பார்க்க முடிந்தது. இலக்கியங்களில் இருந்து எத்தனை பாடல்கள்? சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், பெரியபுராணம், தேவாரம், கம்ப இராமாயணம் என்று இலக்கியங்களின் பாடல்கள் சீராக வந்து விழுகிறது இவரது உரையில். இடையிடையே பெரியபுராணம், தேவாரம் போன்ற பாடல்களில் உள்ள சமயக் கருத்துகளைக் கிண்டல் செய்வதையும் இவர் தவறவில்லை. நாற்பது ஆண்டாகப் நாத்திகக் கருத்துகளைப் பரப்பியவர் இந்தப் பாடல்களை நினைவில் வைத்திருப்பது ஒன்றும் வியப்பில்லை.

சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்ப இராமாயணம் போன்ற காப்பியங்களைச் சாடியதைக் கேட்டு, "தமிழ் இலக்கியங்களைப் படிக்கவே வேண்டாமா?" என்ற கேள்வியை ஒரு அன்பர் எழுப்பினார்.

"மொழியின் இலக்கியத்தைப் புறக்கணிப்பவர் தன் முகவரியை இழப்பவர்" என்று கூறினார். "நம் மொழியின் இலக்கியங்களைப் படியுங்கள்!. அதே சமயம், புதுமையான கருத்துகளைப் படையுங்கள்!!" அது தான் தமிழை பலமாக்கும் என்றார்.

o

பேராசியரின் உரையில் பல கருத்துகள் ஏற்புடையதாகவும் சில கருத்துகள் ஏற்புடையதற்றவையாகவும் இருந்தன.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்ற வள்ளுவன் வாக்கிற்கிணங்க சரியானவற்றை சிந்தித்து உணர்வதே சரி? 

"கட்டுரை, கவிதை என்று படைப்புகள் எவ்வகையானாலும் அதில் அன்பு இருக்கட்டும், உணர்வுகள் இருக்கட்டும், தமிழரின் நிலங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கட்டும், வாழ்வியல் இருக்கட்டும், தமிழ் மக்களின் பண்புகள், ஒழுக்கம் இருக்கட்டும், அறிவியல் இருக்கட்டும். அதுவே தமிழை பலப்படுத்தும். அதை உணர்த்துவதே இந்த உரையின் நோக்கம்!!" என்று தன் உரையின் முடிவில் கூறியது மிகவும் ஏற்புடையதாக இருந்தது.

o

நிகழ்ச்சியின் நிறைவின் பொழுது "பேராசிரியரின் மதமாற்றம்" பற்றிய கேள்வியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விவரம் ஏற்கனவே யூ-டியூபில் உள்ளதால் இங்கே விவரிக்கவில்லை.

o

வழமையாக வியாழக்கிழமைகளின் மாலை நேரம் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்பு கழியும். நேற்றைய மாலைப்பொழுது அருமையான "இலக்கியக் கூடல்"ஆக அமைந்ததில் மகிழ்ச்சியே.

அருமையான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமீரகத் தமிழ் மன்றத்தினரிற்கும், இரண்டு மணி நேரம் உரையாற்றிய பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!

o

Tuesday, May 11, 2010

உறுத்தல்கள்!!


திகாலைச் சிற்றுந்துப் பயணம்
அழகான சாலை சீரான வேகம்
இதமான வாகன அதிர்வில்..
இதமான குறுந்தூக்கம்
வாகன நிறுத்தத்தில்
விலகியது ஜன்னல் திரை
கதிரொளியில் கலைந்தது குறுந்தூக்கம்
அகம்சுளித்துப் புறம் பார்த்தான்
சாலையோரத்தில்
புல்வளர்க்கும் தன்னாட்டவரை!!

**

ரபரப்பான பேருந்து நிறுத்தம்
வாகனத்தை நோக்கித் தாயும் மகளும்
தொலைவில் தெரிகிறதொரு சிற்றுந்து
தவிக்கும் தாய் கலங்கும் மகள்
சட்டென முத்தமிட்டாள் மகளின் கன்னத்தில்
விழிகள் அனைத்தும் வாகன திசையில்
இருவிழிகள் மட்டும் மாற்று திசையில்!!

**

ளபளக்கும் பல்பொருள் அங்காடி
உயிரற்ற சிரிப்புடன் சிப்பந்திகள்
புன்முறுவலால் பதிலளித்தான் பொய்யாக
இறுக்கத்துடன் தேடினான் வேண்டுபொருளை
தள்ளுவண்டியில் சிரித்தது உயிரோவியம்
அலைபேசியில் பார்த்துப் புன்னகைத்தான்
மழலை கொஞ்சும் மகனைப் பார்த்து!!

Friday, May 7, 2010

சாதியும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்.

சாதி/ குலம் என்றால் என்ன? சாதி எப்பொழுதிருந்து  வழக்கத்தில் இருக்கிறது?

இந்தக் கேள்விக்கான விடையைப் பல ஏடுகளில் தேடினேன். அதில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலில் (பக்கம் 161) உள்ள கருத்துகளைக் கீழே சேர்த்துள்ளேன்.

தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள் "மக்கள் செய்துவந்த தொழிலிற்கு ஏற்பத்" தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயினர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரதவர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப் பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக் குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமனக் கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு  பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓருறுப்பாகவே செயற்ப்பட்டு வந்தது.

மக்கள் செய்து வந்த தொழிலிற்கு ஏற்ப பல குலங்களாகப் பெயரிடப்பட்டு வாழ்ந்தது மேலே உள்ள பத்தியில் இருந்து விளங்குகிறது. ஆனால், அந்த காலத்தில் அனைவரும் ஒற்றுமையாகவே வாழ்ந்திருக்கின்றனர்.

ஆனால், இது எப்பொழுது மாறியது? ஒவ்வொரு சாதியினர்க்கும் ஏற்ற தாழ்வுகள் வர ஆரம்பித்தது எப்பொழுது? ஒரு குலத்தைச் சேர்ந்தவர் உயர்ந்தவர் ஒரு குலத்தைச் சேர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற நிலை வர ஆரம்பித்தது எப்பொழுது?

இந்நிலைக்குக் காரணம் இன்னார் தான் என்று விடையளிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. சாதிகளின் இன்றிய நிலை என்ன? இந்திய மக்கட்தொகையைக் கணக்கெடுப்பு எடுக்கவிருக்கும் நிலையில்.. சாதியையும் கணக்கிலெடுக்க வேண்டுமா? என்ற கேள்விகளை விவாதிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.



உணவு, உடை, இருப்பிடம், காற்று, ஒளி, போல நம் இந்தியர்களின் வாழ்வில் ஒன்றாய்க் கலந்திருக்கும் விசயம் சாதி.

எப்படி சில சாதியினர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்? சில சாதியினர் சமூகத்தின் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள்?

இந்த கேள்விக்கு விடை கல்வி, வெளியுலகப் பட்டறிவு (Exposure), ஆள்வோரின் துணை போன்றவையை விடையாகக் கூற முடிகிறது. தொழிலின் அடிப்படையில் குலங்கள் பிரிக்கப்பட்டிருந்த சமூகத்தில் ஏற்றதாழ்வுகள் வரக் காரணம், சிலரின் தொழில் வெளியுலக உறவைப் பலப்படுத்தும் வகையிலும், சிலரின் தொழில் குறுகிய வட்டத்தில் இருந்ததையும் புரிய முடிகிறது. அப்படி கல்வி, வெளியுலக அறிவு போன்றவை சில குலங்களை பலப்படுத்தியும், போதிய கல்வியறிவு இல்லாதது பல குலங்களைச் சமூக சூழ்நிலையில் தாழ்த்தவும் செய்தன. இதற்கு மேலாக ஆள்வோரின் பிரித்தாலும் சூழ்ச்சி போன்றவையும் சேர்ந்து கொள்ள சாதிய வேறுபாடுகள் நம் சமூகத்தில் வேறூன்றி விட்டது.

சமூகத்தில் உயர்ந்த குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் தாழ்ந்திருப்பதற்கும், சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட (என்று கூறப்படும்) குலத்தில் பிறந்த சிலர் பொருளாதார வசதிகளில் உயர்ந்திருப்பதற்கும் காரணம் அவர்களுக்குக் கிடைத்த கல்வி, வெளியுலக உறவு / அறிவு போன்றவையே காரணம்.

ஒரு குழந்தை அறிவாளியாக இருப்பதற்கான காரணம் அவர்கள் பெற்றோர்கள் என்பதை விட வளர்ந்த சூழ்நிலை, கல்வி, வெளியுல அறிவு போன்றவற்றைத் தான் காரணமாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி கல்வி, வெளியுலக அறிவு/உறவு போன்றவற்றில் பின் தங்கிய சமூகத்தினர்க்கு உதவ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டதே கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு. 

o

பள்ளியில் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது வகுப்பாசிரியர், மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு வரை சாதி ஏதோ பெயரிற்குப் பின்னார் போட்டுக்கொள்ளும் விசயம் என்றே எண்ணியிருந்தேன். பிறகு 12 படித்து முடித்து பொறியியர் படிப்பிற்கு விண்ணப்பம் வாங்கிய பொழுது தான் தெரிந்தது சாதிக்கு நம் கல்விமுறை கொடுக்கும் முக்கியத்துவத்தை. எத்தனையோ கேள்விப்படாத சாதிகள். பொறியியல் பட்டியலில் என்னுடைய வரிசை எண் - 1650. பி.சி. எண் - 847. அதாவது பிற்படுத்தப்பட்டோரின் பட்டியலில் எனக்கு 847வது இடம். 1500வது எண் உள்ள பொதுப் பிரிவில் வரும் மாணவரை விட எனக்கு அதிக முக்கியத்துவம் என்பது எனக்கு புரிய ஆரம்பித்தது  கல்லூரியில் படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிட்டதால், சாதியைக் குறிப்பிட வேண்டிய சூழல் பிறகு ஏற்படவில்லை.

நான் என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. பொறியியல் படிப்பிற்கு பி.சி. ஒதுக்கீட்டைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆனால், நன்றாகப் படித்த, பொருளாதாரத்தின் முன்னேறிய குடும்பத்தில் பிறந்த ஒருவன் இட ஒதுக்கீட்டப் பயன்படுத்தலாமா? 

o

இட ஒதுக்கீடு எவ்வாறு வகுக்கப்படுகிறது?

சமூக, பொருளாதார அடிப்படையில் இன்னின்ன சாதியினர் முன்னேறியவர், இன்னின்ன சாதியினர் பின் தங்கியவர் என்று அரசாங்கம் வகுத்திருக்கின்றனர். அதனடிப்படையிலும், மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் மூலமும் கல்வி நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நிர்ணிக்கின்றனர். இதில் அரசியல் தலையீடுகளைப் பற்றிக் கூறத் தேவையில்லை. தேவையேற்படும் பொழுதெல்லாம் இட ஒதுக்கீட்டை அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவதை அரசியல் கட்சிகள் முறையாக வைத்துள்ளனர்.

2011 ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவெடுத்துள்ள சூழ்நிலையில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் பல அரசியல் கட்சிகள் தரப்பில் வைக்கப்படுகின்றன.

o

இந்தக் கோரிக்கைக்குத் தேவையென்றும்.. தேவையில்லை என்றும் கருத்துகள் வெளியாகின்றன.

கல்வித் துறை முதல் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்குவது வரை இட ஒதுக்கீட்டிற்கு சாதியையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால் சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது தேவையே என்பது ஒரு தர வாதம். சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் இன்னும் இட ஒதுக்கீடு கிடைக்க ஏதுவாக இருக்கும் என்பது இத்தரப்பினரின் நம்பிக்கை.

சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்தால் சாதிக் கட்சிகளுக்கு வசதியாகி விடும். இன்று பி.சி., எம்.பிசி, எஸ்.சி. எஸ்.டி என்று உள்ள நிலை மாறி மேலும் பல உட்பிரிவுகள் வரக் காரணமாகிவிடும். ஏற்கனவே பிரிவினைவாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில், சாதிவாரியான மக்கள் தொகைக்கணக்கெடுப்பு மேலும் பாதிப்பையே உண்டாக்கும் என்பதே அடுத்த தரப்பின் வாதம். 

o

தொழில்வாரியாக வகுக்கப்பட்ட சாதிகள், இன்று அரசியல் காரணியாகவும், வாக்கு வங்கியாகவும் மாறிவிட்டது வேதனையானது. அதற்கான காரணம் வெவ்வேறு சாதிகளிடையே இருந்த பொருளாதார சமூக வேறுபாடுகளே!! அந்த வேறுபாடுகளை இந்த இட ஒதுக்கீடுகள் அகற்ற உதவுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால் சாதி வாரியான இட ஒதுக்கீடு எத்தனை காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும்?

பிற்படுத்தப்பட்டோரிற்கான இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்திப் பொருளாதார நிலையில் முன்னேறி வரும் நான் என் மகனிற்கும் இதே இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தினால் சரியா? அப்படிப் பயன்படுத்துவது இன்னொரு ஏழ்மைப்பட்டவரின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாகிவிடாதா?

சாதி வாரியாக இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் வேளையில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெறாமல் இருப்பதே சரியாகும். அதற்கான வழிவகைகள் எப்பொழுது ஏற்படும்? அப்படி பொருளாதார அடிப்படையையும் சேர்க்க ஆரம்பித்தால், சாதியைக் குறிப்பிட விரும்பவில்லை என்ற சூழலும் வர ஆரம்பிக்கும்.

அதுவே படிப்படியாக சாதிகள் இல்லாத சமூகம் வர உதவும்.

உங்கள் கருத்துகளைக் கீழே குறிப்பிடுங்கள்!!

Monday, May 3, 2010

புலிகளை எப்படி காப்பாற்றுவது?

"புலிகளைக் காப்பாற்றுவோம்! இந்தியாவில் இன்னும் 1411 (??) புலிகளே உள்ளன!!" தோனியைப் போன்ற விளையாட்டு வீரர்கள் முதற்கொண்டு ஆங்கிலச் செய்திச் சேனல்கள் வரை பரவலாக இதே பேச்சு தான்!!



ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பு 40 ஆயிரமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை இன்று வெறும் 1411(-1) தான் உள்ளதாம். திடீரென்று விழித்துக் கொண்டதைப் போல இப்பொழுது எங்கும் புலிகளைப் பற்றிய விழிப்புணர்வுச் செய்திகள். இப்பொழுதாவது செய்திகள் வருகின்றன என்பது நல்ல விசயம்.

உண்மையிலேயே விழித்துள்ளோமா? அல்லது விழிப்பது போல ஒரு மாயையை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றனவா?

என்.டி.டி.வி. போன்ற செய்திச் சேனல்களைப் பார்த்தால் புலிகளைக் காப்பாற்றும் திட்டம் என்கிறார்கள். கிரிக்கெட் வீரர் தோனி கேமராவின் முன்பு "புலிகளைக் காப்பாற்றுங்கள்!!" என்கிறார்.

இவர்/கள் யாரிடம் சொல்கிறார்/கள்?

கிரிக்கெட் ரசிகர்களிடமா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சாமான்ய மக்களிடமா?

சாமான்ய மக்களுக்கும் புலிகளைக் காப்பாற்றுவதற்கும் என்ன தொடர்பு?

என் ஊரான உடுமலைப்பேட்டை இருப்பது இந்திரா காந்தி புலிகள் சரணாலயத்திற்கு மிக அருகில். நான் எத்தனையோ முறை வால்பாறைக்கும், டாப் ஸ்லிப்பிற்கும், மூணாரிற்கும் இச்சரணாலயத்தின் வழியாகச் சென்றிருக்கிறேன். நான் ஒருமுறை கூட புலிகளைப் பார்த்ததில்லை. நான் புலிகளைப் பார்த்ததெல்லாம் வண்டலூரிலும், மற்ற வனவிலங்குகள் (காப்பகம்??) கண்காட்சியகங்களில் தான்!!



வால்பாறை அருகே உள்ள தேயிலைத் தோட்டங்களில் சிறுத்தைகளும், சில சமயங்களில் புலிகளும் வந்துள்ளதாக என் நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவை கூட ஏதோ தடம் மாறி வந்தவையே!! இது போன்ற தருணங்களில் தான் சாமான்ய மக்களால் புலிகளின் உயிரிற்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. இதை மனித-விலங்குகள் ( Human-Animals conflict ) தொடர்பால் ஏற்படும் சண்டைகள் என்பர்!! இது போன்ற சண்டைகளைத் தவிர்க்க சாமான்யர்களால் என்ன செய்ய முடியும்?

தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதை விட்டுவிட்டு வேறிடத்திற்கு புலம்பெயர வேண்டுமா? தேயிலைத் தோட்டங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளன? சாமான்ய மக்களின் கட்டுப்பாட்டிலா?

தமிழகம், கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகள் என்றால், மத்தியப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் வேறு மாதிரியான பிரச்சனைகள்!!

இங்கே புலிகள் சரணாலயம் அமைந்துள்ள இடங்கள் எல்லாம் கணிம வளம் நிறைந்த பகுதிகளும், நிலக்கரிச் சுரங்கங்களும் நிறைந்த பகுதிகளும் தான். பன்னா புலிகள் சரணாலயத்தில் புலிகள் இல்லாமல் போனதற்குக் காரணம் பன்னாவில் உள்ள கணிம வளங்கள் தான். "மத்தியப் பிரதேசப் பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களை வேறிடத்திற்கு குடியமர்த்தும் வேலை நடைபெறுகிறது" என்ற செய்தியைப் பார்த்தேன். இவர்களை காட்டை விட்டு வெளியேற்றுவது புலிகளைக் காக்கவா அல்லது ...??

புலிகள் சரணாலயங்களில் சுற்றுலாவைக் கட்டுப்படுத்தும் முடிவையும் அரசு எடுத்துள்ளது. சரணாலயங்களின் அருகில் குடில்கள், விடுதிகள் என கட்டுமானப் பணிகளைக் குறைக்க இந்த முடிவு உதவும் தான். ஆனால், சுற்றுலாவாசிகள் வராமல் போவது சமூக விரோதிகளுக்கு இன்னும் எளிதாகக் கூடுமே என்ற அச்சமும் வருகிறது.



ஆப்பிரிக்க நாடுகளில் அனுமதிப்பதைப் போல ( Eco Tourism ) இயற்கை சார்- சுற்றுலாவை அனுமதித்தால் நல்லது. இது போன்ற சுற்றுலாவை அனுமதித்தால் விழிப்புணர்வு ஏற்படுவதுடன், சுற்றுப்புறத்தின் மீது கவனமும் அதிகரிக்கும். மேலும், வனங்களை அழிப்பதை தடுக்கும் வழியை அரசாங்கம் எடுக்கும் வரையில் எந்த விதமான முயற்சியும் பலனில்லாமலே போகும்.

இன்று புலிகள் என்றால் இன்னும் சில வருடங்களில் யானைகள்!! "யானைகளைக் காப்பாற்றுங்கள்" என்று சில வருடங்கள் கழித்து மற்றொரு கிரிக்கெட் வீரர் கூறுவதையும் பார்க்க வேண்டியதிருக்கும்.

o

தோனி அண்ணே, நீங்க.. "புலிகளைக் காப்பாற்றுங்கள்" என்று சொல்வது FANஓட ஸ்பெல்லிங் கேட்கற மாதிரி தாங்க இருக்கு!!

ஆங்கிலச் செய்திச் சேனல்கள் "புலிகளைக் காப்பாற்றுவதை" ஏதோ கடமைக்குச் செய்யாமல், தொடர்ந்து புலிகளின் நிலையைப் பற்றி சில வருடங்களுக்குத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

o
Related Posts with Thumbnails