Friday, August 12, 2011

ரௌத்திரம்
"சகமனிதனின் கண்களில் நிம்மதியைப் பார்க்க முடிமென்றால் 'ரௌத்திரம்' பழகுவது தவறில்லை" படத்தின் ஒன்லைனர். இந்தக் கரு தாத்தா காலம் முதல் பார்த்த விசயம் என்றாலும் படமாக்கிய விதத்தில் மிரட்டியிருக்கிறார்கள் "ரௌத்திரம்" படக்குழுவினர்.

சென்னை சட்டக்கல்லூரி மாணவி ஷ்ரேயா. ஷ்ரேயாவின் தோழியிடம் சில்மிஷம் செய்துவிடுகிறான் சட்டக்கல்லூரியில் படிக்கும் ரௌடி ஒருவன். கல்லூரி முதல்வரிடமும், போலிஸ் அஸிஸ்டண்ட் கமிஷ்னரான தன் தந்தையிடமும் புகார் தெரிவிக்கிறார் ஷ்ரேயா. அவன் பிரபல ரௌடி 'கௌரி'க்கு வேண்டப்பட்டவன் என்பதால் நடவடிக்கையெடுக்கத் தயங்குகிறார்கள். கலங்கிப் போகும் இருவரும் சாலைக்கு வருகிறார்கள். சில்மிஷம் செய்தவன் சாலையில் அடிபட்டு வந்துவிழுகிறான்.... ஜீவா நடுரோட்டில் அவன் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைப் புரட்டியெடுக்கிறார். காரணம்.. ஜீவா பயணித்த ஷேர் ஆட்டோ விபத்திற்குள்ளாவது சட்டக்கல்லூரி ரௌடி மற்றும் அவனது கூட்டத்தினரால். ஜீவாவின் கோபத்தைப் பார்த்து காதல் கொள்கிறார் ஷ்ரேயா.

ஜீவாவைப் பழிவாங்க நேரம் பார்த்திருக்கும் ரௌடிகள், ஜெயிலில் இருக்கும் கௌரி வெளியே வரட்டும் என்று காத்திருக்கிறார்கள். பால்ய காலத்தில் தாத்தா பிரகாஷ்ராஜிடம் பெற்ற பயிற்சியால் சாலையில் நடக்கும் குற்றங்களைத் 'தட்டி'க்கேட்கும் ஜீவா, ஒரு கட்டத்தில் ஜெயிலில் இருந்து வெளியேறி வரும் பிரபல ரௌடி கௌரியைக் காயப்படுத்திவிடுகிறார். கௌரி குழுவினரின் கொலைமுயற்சி, ஜீவாவின் குடும்பம், காதல் அனைத்தும் ஜீவாவின் கோபத்திற்கு முன்பு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள்!!ஜீவா - இந்தப் படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோக்கள் வரிசையில் இடம்பிடிக்கிறார். ஜீவாவின் உடல் மொழியும், நடிப்பும் முந்தைய படங்களில் பார்க்காத ஒன்று. ஷ்ரேயா - படம் நெடுகிலும் ஜீவாவை லவ்வுகிறார். ஜீவா ஷ்ரேயா காதல் காட்சிகள் சுவாரஸ்யம். ஜெயப்பிரகாஷ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஜீவாவின் பெற்றோர்.ஜெயப்பிரகாஷ் ஜீவாவிற்கு இடையே நடக்கும் உரையாடல்கள் அழகு. அண்ணன் ஸ்ரீநாத், மாப்பிள்ளையாக சத்யன். இருவரும் சில இடங்களில் கிச்சுகிச்சுமூட்டுகிறார்கள். பக்கத்துக் குப்பத்தின் தாதாவாக பாலிவுட் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா. ஒரு பாடலில் மாறுபட்ட நடனம் மூலம் அசத்தியிருக்கிறார். "இன்னா பெரியா பயிப்பாநீ..."என்று பொல்லாதவனில் மிரட்டும் சுருட்டைமுடி நடிகர் தான் பிரதான ரௌடி "கௌரி".

படத்தை இயக்கியிருப்பவர் கோகுல். முதல் படம். நடுத்தெருவில் கொலை நிகழ்ந்தாலும் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நம் மனநிலையை (படம் முடியும் வரையில்) கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் தொய்வாகச் சென்றாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுவென்று வேகமெடுத்தும் படம் முடியும் வரை ஒரு வித பதைபதைப்பை ஏற்படுத்தி முகத்தில் அறைகிறார் முடிவில்!! 

ஒளிப்பதிவாளர் என்.ஷண்முகசுந்திரம். சென்னை ஓவியக் கல்லூரி MFA பட்டதாரி. முதல் படம். பிரகாஷ்ராஜின் சண்டை, கௌரியை அறிமுகப்படுத்தும் காட்சி, இரவில் நடக்கும் சண்டைக் காட்சிகள் என்று பல காட்சிகளில் இவரது கோணங்கள் அட போட வைக்கிறது. ஜீவா ஷ்ரேயா காதல் காட்சிகள் மேலும் அழகூட்டுகிறது.

இசை - நிக்கி. முதல் படம். படத்தின் பலவீனம் பாடல்கள். "மாலை மங்கும் நேரம்" மற்றும் "அடியே உன் கண்கள்" மட்டும் கேட்கும் வரிசையில். பின்னனி இசை (வேறொருவர்), எடிட்டிங் படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்கிறது. படத்தின் சண்டைக்காட்சிகள் - 'அனல்' அரசு. அசத்தல் ரகம். குறுகலான சந்துகளில், நடுரோட்டில் அமைத்திருக்கும் சண்டைகள் பிரமாதம்.

படம். இரண்டரை மணி நேரம். கொஞ்சம் குறைத்திருக்கலாம். (ஷார்ஜா - ரமலான் மாதமென்பதால் மதியம், மாலை காட்சிகளில் இடைவேளை வேறுவிடுவதில்லை. அவனவன் கஷ்டம் அவனவனுக்கு..). பிரதான ரௌடி 'கௌரி'யைப் பற்றி ஏற்படுத்திய பிம்பத்திற்கு ஏற்ப காட்சியமைப்புகள் அமையாதது குறையே. காவல்துறை இப்படத்திலும் வேடிக்கை பார்க்கும் துறையே. அங்கங்கே சில ஓட்டைகள் இருந்தாலும் இரட்டை அர்த்த வசனங்கள், தனி காமெடி ட்ராக், பறந்துபறந்து அடிக்கும் சண்டைகள் போன்ற அபத்தங்கள் இல்லாதது ஆறுதல். படத்தின் மையக்கருத்திற்கும் பரபரப்பான காட்சியமைப்பிற்கும் படத்தைக் கட்டாயம் பார்க்கலாம். 

ரௌத்திரம் - ஜீவாவின் ஹிட் வரிசையில்!!

9 comments:

Philosophy Prabhakaran said...

அதே இத்துப்போன ரெளடி சப்ஜெக்ட்...!!! ஹீரோயின் ரெளடியை துரத்தி துரத்தி லவ் பண்ணுவாங்களே...

சாய் பிரசாத் said...

ஜிவா வரா வரா மெருகேறிக்கொண்டு வருகிரார்..பார்க்கத்தூண்டும் எழுத்து :)

bandhu said...

ரௌத்திரம் - லக்ஷத்து ஒன்றாவது முறையாக ஒரே கதையை எடுத்திருக்கிற படத்தை பார்க்கும் நமக்கு வரவேண்டியது!

Chitra said...

உங்கள் விமர்சனம் - படத்தை விட நன்றாக இருக்கிறது. தெளிவாக - ஷார்ப் ஆக எழுதி இருக்கீங்க.

சேட்டைக்காரன் said...

"ஷ்ரேயா"-ன்னு எட்டு வாட்டி எழுதியிருக்கீங்க! அதுக்கப்புறமும் நான் வந்து அட்டண்டண்ஸ் போடாட்டி எப்படி? :-)

நாங்களும் பார்த்துட்டு விமர்சனம் எளுதுவோமில்லே?

:-))))))))))

kalil said...

உங்க எழுத்து நடை நல்ல இருக்கு ....
" "இன்னா பெரியா பயிப்பாநீ..."என்று பொல்லாதவனில் மிரட்டும் சுருட்டைமுடி நடிகர் தான் பிரதான ரௌடி "கௌரி"." இன்னொரு கவனிக்க வேண்டிய வில்லன் நடிகர்

நன்றி
கலீல்

Senthil said...

so?
one more hit?

thanks
senthil,doha

JOTHIG ஜோதிஜி said...

நலமா செந்தில்? இந்த வருடம் முழுக்க தொழில் ரீதியா அதிக வேலையோ?

NADESAN said...

நல்ல அலசலான விமர்சனம்
வாழ்க வளமுடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்

There was an error in this gadget
Related Posts with Thumbnails