Monday, January 31, 2011

இணையம் தரும் நம்பிக்கை!!

"பெட்டிதட்டிகள்"!! இவர்களால் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? அயல்நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்தியவைப் பற்றி "உச்"சுக்கொட்ட என்ன உரிமை இருக்கிறது? குளுகுளு அறைகளில் வேலை நேரத்தில் சமுக வலையமைப்புத் தளங்களில் "பன்னாட்டுப் பேசி" என்ன பயன்? என்றெல்லாம் பேச்சு வந்தாலும் இணையம் பெரிய நம்பிக்கையை உண்டாக்குகிறது!!

"தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்" என்று வலைப்பதிவுகளிலும், இணையதளங்களிலும் பதிவுகள்,பின்னூட்டங்கள், சிட்டாடல்கள், கோரிக்கை மனுவில் கையெழுத்திடல்கள் என்றெல்லாம் "பெட்டிதட்டிகள்" இயங்க ஆரம்பித்த பொழுது, "நம்மால் என்ன முடியும்?" என்ற எண்ணம் தோன்றியது உண்மையே!! "தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்" என்ற கோரிக்கை மனுக்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்ற ஐயம் ஏற்பட்டாலும், இணையத்தில் இத்தனை ஆயிரம் பேர் தமிழக மீனவர்களின் சோகத்தில் பங்கேற்க ஆயத்தமாகியுள்ளார்கள் என்ற எண்ணம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. 


என்ற தளத்தில் இதுவரை 4523 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். 7 கோடி மக்களில் 5 சதவிதத்தினர் இணைய வசதி உள்ளவர்கள் என்றாலும் 4523 என்ற எண்ணிக்கை ஒரு சதவிகிதம் தான். அதையே 7 கோடி மக்களுடன் ஒப்பிட்டால் மிக மிக சொற்ப சதவிகிதம் தான். ஆனால், இந்த சொற்ப சதவிதத்தினரால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொருவரும் 10 பேரைக் கையெழுத்திட வைத்தால் கூட நல்ல விசயமாக இருக்கும். சமூக வலையமைப்புத் தளங்களில் சேர்கையில், உங்கள் நண்பர்களின் நண்பர்கள் மூலம் நீங்கள் 25000 பேருடன் தொடர்பில் உள்ளீர்கள் என்று ஒரு எண்ணிக்கையைக் காட்டும். அது தான் இணையத்தின் வீச்சு.

கையெழுத்திடுவோம்! நம் ஆதரவை மீனவ அன்பர்களுக்கு அளிப்போம்!! நீங்கள் செய்ய வேண்டியது, மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பெயரைக்குறிப்பிட்டு கையெழுத்திடுவது தான்!!

*

இதற்கு முன்பு பதிவுலகத்தில் உள்ள பெரும்பாலானோர் ஒரு விசயத்தை / மனிதரை ஆதரித்தது என்றால் அது 2009 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தான். சரத்பாபு என்ற இளைஞர் தென்சென்னை தொகுதியில் நின்ற பொழுது பெரும்பாலானோர் அவரிற்கு ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர் வெற்றியடையாவிட்டாலும் ஏறக்குறைய 16000 வாக்குகளைப் பெற்றது இணையங்களில் இயங்கிவரும் பெட்டிதட்டிகளின் பிரச்சாரத்தாலும் தான்!!

அதை விட அதிக முனைப்புடன் ஒரு விசயத்தின் மீது ஆதரவை நல்க ஆரம்பித்திருப்பது "தமிழக மீனவர்கள்" விசயத்தில்!! டிவிட்டர்களில் #tnfisherman என்று இடம்பெறும் வகையில் சிட்டாடல்களைப் பதிய ஆரம்பித்து ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 - 10 டிவிட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் என்ன பயன்?

Trending Topics என்று எந்த விசயம் / தலைப்பு அதிகம் விவாதத்தில் உள்ளன என்று கணக்கெடுக்கப்படும் பொழுது #tnfisherman என்ற வார்த்தையும் வர ஆரம்பித்தால் அதிகமானோரின் கவனத்தை ஈர்க்க முடியும். உங்களுக்கும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் டிவிட்டிக் கொண்டே இருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தைப் பார்வையிட்டால் டிவிட்டுகளைப் பார்க்கலாம்.


உங்களிடம் எதிர்பார்ப்பது கருத்துப்புரட்சி எல்லாம் இல்லை. #tnfisherman என்ற வார்த்தையுடன் கூடிய டிவிட்டுகளையே!! அதில் அரசியல், நையாண்டி, சாடல் இருக்க வேண்டும் என்பதல்லாம் இல்லை. எளிதாக I Support #tnfisherman என்றோ Please save #tnfisherman டிவிட்டினால் கூட போதும். தற்பொழுது வேண்டியது மீனவர்களுக்கு நம் ஆதரவு. கவன ஈர்ப்பு!!



இந்திய நேரம் 12 மணியளவில் இந்தியாவின் முதல் 5 சிட்டாடல்களில் #tnfishermanம் என்பதே சாதனை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் டிவிட்டுவோம். ஆதரவை நல்குவோம்.

*

என் பங்கிற்கு நான் டிவிட்டியவை..

ஹோஸ்னி முபாரக்கை விட அதிக நாட்கள் அரசியலில் இருப்பவர்கள் இந்தியாவில் உள்ளனர் - எகிப்து நாளிதழ் அதிர்ச்சி செய்தி!! #tnfisherman

எகிப்துல நடக்கறது வேதனையான விசயம்னாலும்.. இந்த மாதிரி பதவிஆசை வெறியர்களைத் துரத்துனா என்னனு தோனுது.. #tnfisherman

உங்களுக்குத் தொகுதிப் பங்கீட்டு விசயமே தலைய சுத்துது. இதுல எங்கிருந்து எங்கள கவனிக்கப் போறீங்க. #tnfisherman

சங்கீத மகாயுத்தம் நம்மைப் பசியாற்றும் பொழுது மீனவர் பசியை எங்கே நினைவு கொள்வது? #tnfisherman

எங்க பர்காதத்துக்கு யாராவது போனப்போடுங்கப்பா.. அவங்க வந்தா மூனு நாளுக்காவது தமிழக மீனவர்கள் விசயம் நாடு முழுவதும் தெரியும்ல #tnfisherman

ஏப்பா... நம்ம பா.ஜா.கவ ரதயாத்திரையா ராமேஸ்வரத்துக்கு வரச்சொன்னா என்ன? அப்படியாவது இங்க ஒரு ஊரு இருக்கறது ஊடகங்களுக்கு தெரியும்ல#tnfisherman

ஏப்பா.. நம்ம சர்வதேச கடல் எல்லைல ஒரு நூறு கடலோரக் காவல் கப்பல விட எத்தன காசாகும்? # tnfisherman

*

"பெட்டிதட்டிகளால்" என்ன செய்து விட முடியும் என்பதற்கு பதிலாக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள் #tnfisherman ஆதரவாளர்கள். அவர்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்கள் என்பதை பதிவர் நர்சிம்மின் இந்தப் பதிவில் பார்க்கவும். இந்தப் பதிவில் கூறியுள்ள விசயங்கள் சாத்தியப்பட்டால் கூட நல்ல பயனிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

*

Tuesday, January 11, 2011

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை - எண்ணங்கள்!!

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெகுவாக விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வேலை, படிப்பு, தொழில் போன்ற காரணங்களுக்காக அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் முதல் படியாக இந்த அறிவிப்பைக் காணலாம். இந்த அறிவிப்பு சர்ச்சைகளுக்கு உள்ளாகாமல் இல்லை.

இந்தியாவில் படித்து விட்டு இங்கே தொழில் புரியாமல் அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு எதற்காக வாக்குரிமை? இங்கே நாட்டில் உள்ள நிலவரங்களைப் பற்றி உணராமல் வாக்களிப்பது எந்தளவிற்கு ஏற்புடையது? என்பது ஒரு வாதம்.

உண்மை தான்!! இந்தியாவில் தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை போன்ற துறைகளில் படித்துவிட்டு வேலை வேண்டி வெளிநாடு செல்பர்களுக்கு எதற்கு வாக்குரிமை என்னும் மரியாதை. அரசுப் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவனைப் படிக்க வைக்க அரசாங்கம் பெருமளவில் மானியம் வழங்குகிறது. இங்கே படித்துவிட்டு, நம் மூளையை அயல்நாட்டில் அடகு வைப்பது சரியானதா? இன்றைய மத்திய தர வர்க்கத்தினரின் கனவு என்றால் அயல்நாட்டு வாழ்க்கை, டாலர் சம்பளம், அயல்நாட்டு வாழ்வுரிமை போன்றவை தான். இப்படி இருக்க, இந்தியா மீதான தொடர்பைத் துண்டித்திருக்கும் இவர்களுக்கு எதற்கு வாக்குரிமை?

பச்சைப் போர்வை போற்றிய புல்வெளிகள், திரும்பிய பக்கமெல்லாம் பளபளப்பு என்று அயல்நாட்டில் வாழ்க்கை நடத்துவோர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும், கடுமையான வெயில், 12 மணி நேர வேலை, வருடத்திற்கொரு முறை இந்தியப் பயணம் என்று வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் வாழும் இந்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அயல்நாட்டிற்குச் சென்றிருப்பது பச்சைப் போர்வை போற்றிய புல்வெளிகளைப் பார்த்தோ, பளபளப்புகளைப் பார்த்தோ எல்லாம் இல்லை. போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாமல் அயல்நாடு சென்றவர்களே அதிகம். இவர்கள் மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருப்பது இந்தியாவில் எகிறி நிற்கும் வெங்காய விலை, விவசாய நிலங்களை மூழ்கடித்த மழை வெள்ளம் போன்ற செய்திகளே. இவர்களின் உடல் இருப்பது அயல்நாட்டில் என்றாலும், எண்ண ஓட்டங்கள் இந்தியாவைப் பற்றித் தான். இந்தியாவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் என்ன தவறு?

அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணம் ஓரளவு இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுகிறது. இப்படி நம் பொருளாதாரத்தில் பங்கேற்கும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது சரி என்ற வாதம் ஒரு பக்கம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டில் முதலீடு செய்வதால் மட்டுமே நாட்டின் மீது அக்கறை வந்துவிட்டது என்று அர்த்தமாகாது. அவர்கள் செய்வது "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதே" என்ற வாதமும் உண்டு!! 

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கூடாது என்று கூறும் பொழுது எழும் அடுத்த கேள்வி. இந்தியாவில் வாழ்ந்து கொண்டே வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பவர்களை என்ன செய்வது? NRI - Non Resident Indians போலவே RNI - Resident Non Indians என்று வாக்குப் பதிவு செய்யாதவர்களைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் அக்கறையற்ற மனநிலையை விட அயல்நாட்டில் வாழ்பவர்கள் எந்த விதத்தில் சோடை போனார்கள் என்பதே அடுத்த வாதம்!!

நிற்க!!

*

அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது என்றால்... அடுத்த கேள்வி. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமையை எப்படி சாத்தியப்படுத்துவது?

இந்திய மக்கள் வாக்குரிமையைச் செலுத்துவது என்றால் தேவையானது அவர்களது அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர், வாக்காளரின் முகவரி முதலியவை.

எத்தனை காலமாக அயல்நாட்டில் வாழ்பவருக்கு இந்த சேவையை வழங்குவது?

பலர் தொழில் காரணமாக அடிக்கடி அயல்நாட்டிற்கு சென்று திரும்புவர். இவர்கள் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். நிரந்தர வேலை காரணமாக சில ஆண்டுகள் வெளிநாட்டில் பணியாற்றி வருபவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படலாம்.  மூன்று மாதம் ஆறு மாதம் என்று குறுகிய காலத்திற்கு அந்நிய நாட்டிற்கு செல்பவர்கள் இந்தக் கணக்கில் வருவது சந்தேகமே.

இவர்கள் அடையாள அட்டையாக இந்திய வாக்காள அடையாள அட்டையும், கடவுச்சீட்டு கேட்கப்படலாம். அயல்நாட்டில் வசிக்கும் பலரிற்கு இந்த அடையாள அட்டை இருக்குமா என்பது அடுத்த ஐயம். இவர்களுக்கு எப்படி வாக்காளர் அட்டை வழங்குவது? 

*

வாக்குப்பதிவை எங்கே செலுத்துவது?

அந்தந்த நாட்டில் உள்ள தூதரகங்களில் வாக்கைப் பதிவு செய்யலாம் என்று எளிதில் கூறிவிட முடியாது. அமீரகம் போன்ற சிறிய நாடு ஆனால் ஏராளமான இந்தியர்கள் வசிக்கும் இடங்களும் உண்டு. அமெரிக்கா போன்ற பெரிய ஆனால் பரவலாக வசிக்கும் நாடுகளும் உண்டு. இவர்களை எல்லாம் எப்படி ஒருங்கிணைப்பது. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை என்று சொல்லிவிட்டால் அனைத்து நாடுகளில் வசிப்பவர்களுக்கும் கொடுத்தாக வேண்டும். இது அடுத்த கேள்வி.

இப்படி ஒரே சமயத்தில் அனைத்து நாடுகளிலும் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்றால் ஒன்று தொழில்நுட்ப உதவியை நாட வேண்டும். 

*

அயல்நாட்டில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை வழங்க யோசிக்கும் வேளையில், இந்தியாவில் இருந்து கொண்டு வெளியூர்களில் பணியாற்றிவரும் கோடிக்கணக்கானோர் வாக்களிக்க என்ன வழி என்று யோசித்தால் நல்லது.

*

இப்படி பல விசயங்களையும் சிந்திக்கும் பொழுது அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை என்பது ஏதோ வெட்டிப்பேச்சோ என்று தோன்றுகிறது. பார்ப்போம்.

*


நேரமிருந்தால்.. இந்தக் காணொளியையும் பாருங்கள்.

*

Saturday, January 8, 2011

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம்..

கிரிக்கெட் என்றொரு மார்க்கமாம் 
உப கடவுளர்களின் அணிவகுப்பாம்
ஊடக ஆராதனையில் ஏலமாம்
ஆதீன முதலாளிகளிடம் போட்டியாம்!
ஊருக்கொரு வழிபாட்டுத் தலமாம்
கடவுளர்களாம் உபகடவுளர்களாம்!!

பத்து கோடிக்கொரு கடவுள்
எட்டு கோடிக்கொரு கடவுள்
ஆறு கோடிக்கொரு கடவுள் 
கோடானுகோடி ஏழை பக்தர்களுக்காக!!

நாட்டின் முதன்மை மார்க்கம்
நாடாள்பவர் விரும்பும் மார்க்கம்
நாடாள் மன்றம் போல 
இம்மார்க்கத்திலும்
இல்லை வேறுபாலருக்கு இடஒதுக்கீடு!!

கடவுளர்கள் விரும்பும்,

குளிர்பானமே தீர்த்தமாக
இனிப்புகளே பிரசாதமாக
உணவுகளே அமுதமாக
ஆனார்கள்
பக்தர்கள் மாக்களாக!!

வான்பொய்த் தாலும் விசாரமில்லை
மண்மலடானாலும் மனக்கவலை யில்லை
சுயம்அழிந்தாலும் சிந்தையிற் கலக்கமில்லை
சஞ்சலம் தீர்க்க மார்க்கமுண்டு
களிப்பூட்டக் கடவுளர்களின் கிரிக்கெட்டுண்டு 

மாசியில் வருதே உலகக்கோப்பை
வைகாசியில் வருதே உள்ளூர்க்கோப்பை
உலகக்கோப்பையோ உள்ளூர்க்கோப்பையோ
கடவுளர்களின் தரிசனம் ஒன்றே போதும்!!

கடவுளர்க் கிடையில் ஆட்டம்
பக்தர்கள் மனதில் கொண்டாட்டம்
பண முதலைகளின் வெறியாட்டம்
ஆட்டமானதே சூதாட்டம் இகலாட்டம்
பக்தகோடிக்கு 
மிஞ்சியதே இளிச்சவாய்ப் பட்டம்.


Wednesday, January 5, 2011

கொலாஜ் - 05-01-11

நான் அன்றாடம் படிக்கும், கேள்விப்படும் விசயங்களுள் சிறந்தவற்றை அன்பர்களுடன் பகிரும் ஊடகமாகவே என் பதிவுத் தளத்தைக் கருதி வருகிறேன். சில விசயங்கள் விரிவானதாக எழுதும் வகையிலும், பல விசயங்கள் துணுக்கு பாணியிலும் இருக்கும். இப்படி சின்னச் சின்ன விசயங்களை அளவின் காரணமாகப் பதிவாக எழுதுவதைத் தவிர்த்து வந்தேன். இவற்றை "கொலாஜ் - Collage" என்ற பெயரில் தொகுத்து பதிவேற்றவுள்ளேன். 

கொலாஜ்

நான் எழுதும் பதிவுகளில் பெரும்பாலானவை இணையத்திலோ, புத்தகங்களிலோ படித்தவையாகவே உள்ளன. அவற்றைப் பதிவாக்கும் பொழுது ஒன்று வெட்டி ஒட்டுகிறேன், அல்லது பிரதியெடுக்கிறேன். இப்படிப் பல துணுக்குகளைப் வெட்டியோ, பிரதியோ எடுத்து எழுதும் பதிவிற்கு "கொலாஜ்" என்ற பெயரை வைக்கிறேன். "கொலாஜ்"ல் பெரும்பாலானவை சுட்ட செய்தியாக இருந்தாலும் அங்காங்கே அனுபவங்களாலும், கருத்துகளாலும் வண்ணமிட்டுத் தரவுள்ளேன். (இதற்கு முன்பு பாதசாரி என்ற பெயரில் எழுதி வந்த பதிவர் கொலாஜ்களைத் தந்துள்ளார் என்பது குறுஞ்செய்தி) 

2011 எப்படி இருக்கும் என்ற ஆருடங்களை ஏற்கனவே பல இடங்களில் படித்திருக்கிறோம். வணிகத்துறை, இணையத்துறை, தொழில்நுட்பத்துறைகளில் 2011ல் கவனிக்க வேண்டிய விசயங்களுள் சில..

எஃப்-வணிகம் (F-Commerce) 

ஈ-காமெர்ஸ், எம்-காமெர்ஸ் எல்லாம் நமக்குப் பழகிய கேள்விப்பட்ட விசயமாகிவிட்டது. அல்லது அசைபோட்ட விசயங்களாகிவிட்டன. இதோ இப்பொழுது எஃப்-காமெர்ஸ். எஃப்(F) - ஃபேஸ்புக் Facebook. இது வரையில் ஃபேஸ்புக் தளத்தை நண்பர்களுக்கு நம் நிலையைப் புதுப்பிக்கவும், தகவல்களைப் பரிமாற்றம் செய்யவும் பயன்படுத்துகிறோம். கூடவே சில வணிக நிறுவனங்களின் பக்கங்களை "லைக்"கவும் செய்கிறோம். "லைக்"கிக் கொண்டே இருந்தால் வணிக நிறுவனங்களுக்கு என்ன பயன்? அதற்கு விடையளிப்பதே எஃப்-வணிகம். ஃபேஸ்புக் தளத்தில் இருந்தே பொருட்களை வாங்கவும் விற்கவும் வழிவகைகளைக் கொண்டதாக எஃப்-வணிகம் அமையும்.

எம்-காமெர்ஸ் - என்பது தெரியாதவர்களுக்கு.. எம் - மொபைல்.  

காப்ட்சா விளம்பரம் ( CAPTCHA Advertising)

இணைய தளங்களிலேயே குடி கொண்டிருப்பவர்களுக்கு CAPTCHA தெரிந்திருக்கும். ஏதாவதொரு தளத்தில் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யும் பொழுது நம்மை சோதிக்கும் வகையில் கோணல்மானலாக எழுத்தைப் படித்து எழுதச் சொல்லும். அதற்குப் பெயர் தான் CAPTCHA (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart). கடவுச்சொல்லை உள்ளீடு செய்வது மனிதர் தானா என்பதைச் சோதிப்பதே இதன் நோக்கம். சரி.. இதை வைத்து எப்படி விளம்பரம் செய்வது?

நாம் சில செய்தித் தளங்களுக்குச் செல்லும் பொழுது சில விளம்பரங்கள் வெளித் தோன்றும் (POP UP). நாமும் அவற்றை மூடிவிட்டு செய்தித்தளத்தைப் பார்வையிட சென்றுவிடுவோம். இப்படி நான் விளம்பரங்களைப் பார்வையிடாமல் போவதால் விளம்பரதாரரிற்கு என்ன இலாபம்? இதற்கு விடையளிப்பதே CAPTCHA விளம்பரங்களின் நோக்கம். நாம் அந்த விளம்பரங்களின் மீது உள்ள CAPTCHA வார்த்தையை உள்ளீடு செய்த பிறகு தளத்தை வாசிக்க முடியும்.

ம்ம்.. சில வருடங்களில் பதிவர்களின் தளங்களைப் பார்வையிடமும் CAPTCHA வருமோ?

அலுவலகத்தில் தூக்கம் - என் அலுவலகத்தில் "நம் அலுவலகத்தில் என்னென்ன வசதிகள் இல்லை?" என்ற கேள்வியுடன் ஒரு படிவத்தை நிரப்புமாறு கூறினார்கள். நான் கூறியது தூங்குவதற்கென தனி இடம் அல்லது அறை. அலுவலக வேளையில் எதற்குத் தூக்கம்? அலுவலகங்களில் வேலையின் நடுவே ஒரு அரை மணி நேரம் தூங்குவது அல்லது ஓய்வெடுப்பது நம் மூளையை உற்சாகப்படுத்துமாம். மதிய நேரம் நம்ம வீட்டில் சாப்பிட்ட பிறகு தூங்குவோமே அதோ போல.. ஆனால் 15 முதல் 30 நிமிடம் மட்டும் தூங்கினால் போதுமாம். அதற்கு மேல் தூங்கினால் விழித்த பிறகு கலக்கமாக இருக்கும். இதற்கு "Sleep Inertia" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். (படத்தில் உள்ளது கூகுள் நிறுவனத்தின் ஒரு அலுவலக அறை)

மங்களூர் விமான விபத்திற்கு முக்கிய காரணமாகக் கூறியிருப்பது விமானத்தின் பைலட் தரையிறங்கும் பொழுது "Sleep inertia"வில் இருந்தாராம்.  

*

அமீரகத்தில் சமீபத்தில் விசாவிற்கான சட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். முன்பெல்லாம் வேலை நிமித்தமான "Work Permit" விசாவை மூன்றாண்டுகளுக்குத் தருவார்கள். 2011ல் புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குத் தான் தருவார்கள். இந்த மாற்றத்தினால் பணியாளர்களுக்குச் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. மூன்று வருடங்களுக்கு ஒரே நிறுவனத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது.  அதே நேரம் சரியாக பணியாற்றாத பணியாளர்களை நீக்க தொழில் நிறுவனங்களுக்கு இந்த சட்டம் உதவியாக இருக்கும். இரண்டாடிற்கு ஒரு முறை புதிதாக விசாவைப் புதுப்பிப்பது நிறுவனங்களுக்கு பொருளாதார சுமையாகவும் கருதுகிறார்கள்.

பணியாளர்களைப் பொருத்த வரையில், இரண்டாண்டு முடிந்த பிறகு ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது எளிதாகிறது.  முன்பைப் போல 6 மாத தடை ( BAN) இனி இல்லை. சுமூகமாக இரண்டாண்டை முடித்துவிட்டு வெளியேறினால் அடுத்த நிறுவனத்திற்கு மாறுவதில் பிரச்சனையிருக்கப் போவதில்லை.

அமீரகத்தில் வேலைக்கான விசா இரண்டு வருடத்திற்குத் தான் என்பதைப் புதிதாக வர விரும்புபவர்கள் மனதில் கொள்வது நல்லது. அதோடு.. தரகரிடம் கொடுக்கும் பணமும்.. அதை இரண்டாண்டில் மீட்க முடியுமா என்பதும்!! தரகர்களிடம் பணம் கொடுத்து அமீரகம் வரும் எவருக்கும் இந்தப் பதிவைப் படிக்கும் வசதியிருக்காது. ஆகவே இதைப் படிப்பவர்கள் இச்செய்தியை தெரிந்தவர்களுக்குப் பகிருங்கள்.

*

இந்தக் கொலாஜைப் பற்றிய கருத்துகளைப் பின்னூட்டமிடுங்கள்!!

Monday, January 3, 2011

பீர் பிரசர் + புத்தாண்டு + அமீரக விழாக்கள்


புத்தாண்டின் முதல் தினத்தைக் கொண்டாடியே தீர வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவே உள்ளது. புத்தாண்டின் முந்தைய இரவில் பெரிதாக வெளியே சுற்றாமல் வீட்டில் இருத்தல் ஏதோ செய்யக் கூடாத விசயமாகத் தெரிகிறது. ஏன் வெளியில் போகவில்லை என்பதிலும் பல விசாரிப்புகள். இல்லை... "எங்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்தேன்" போன்ற காரணங்கள் கேட்பவர்களுக்கு சரியாகத் தோன்றுவதில்லை. இதனால் வருவது தான் "பீர் குருப் பிரசர்". Peer.. Beer அல்ல!! பீர் குரூப் பிரசரும் கல்லூரி நாட்களின் ஏற்பட்டதுண்டு. அது பீரால் வந்த பீர் குரூப் பிரசர்.

அமீரகத்தில் புத்தாண்டைக் கோலாகாலமாகக் கொண்டாடியிருக்கிறார்கள். புர்ஜ் கலிஃபாவில் வானவேடிக்கைகள் விண்ணைத் தொட்டிருக்கிறது. புர்ஜ் கலிஃபாவின் வானவேடிக்கைகளைப் பார்வையிட என் நண்பர் மாலை 6 மணிக்கே சென்றிருக்கிறார். நிற்கக் கூட இடமில்லாமல் கூட்டம் அலைமோதியதால் மெதுவாக வெளியே வந்து வேறொரு கட்டடத்திற்குச் சென்றிருக்கிறார். எல்லாம் 3 நிமிட வானவேடிக்கைக்காக!! என் நண்பர் கூறியது.. Its worth waiting for 5 hours!! நண்பர்கள் சில லண்டன் போன்ற பெரிய நகரங்களில் ஆறேழு மணி நேரம் காத்திருந்து வானவேடிக்கைகளைப் பார்த்திருக்கிறார்கள். 

*
சென்ற மாதம் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டும் இது போல நாடெங்கும் வானவேடிக்கை காட்டினார்கள். ஷார்ஜாவின் புஹைராஹ் கார்னிஷில் அந்த வாரம் முழுவதும் கொண்டாடினார்கள். அமீரக அன்பர்களும் தங்கள் கார்களில் I LUV UAE என்று காரெங்கும் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள். சிலர் முன்பக்கக் கண்ணாடியையும் மறைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். காரணம்.. சில விஷமிகள் கொண்டாட்டத்தின் பொழுது சில ஜெல்களை கண்ணாடியில் பீய்ச்சிவிடுவதால்!!

*

வியாழக்கிழமை ஆனால், இங்கே நான் எதிர்கொள்ளும் கேள்விகளுள் ஒன்று "Whats the plan for weekend?".  ஒரு திட்டமும் இல்லையென்றாலும் அங்கே போகிறேன், இதைச் செய்யவிருக்கிறேன் என்று ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டியுள்ளது. "சும்மா.." வீட்டில் உட்கார்ந்து குடும்பத்துடன் ஓய்வெடுப்பதோ, நல்ல புத்தகங்களைப் படிப்பதோ Coolஆன விசயங்களாகத் தெரிவதில்லை. ரெண்டு கழுதை வயசான நமக்கே இப்படி என்றால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் நிலையை யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. சக மாணவர்கள் மத்தியில் நிலவும் "பீர் குரூப் பிரசரிற்காகவே" ஏதாவது ஒரு மாலிற்குக் கூட்டிச் செல்ல வேண்டியதிருக்கும். என் பள்ளி நாட்களில் காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டுத் தேர்வு விடுமுறையின் பொழுது தான் எங்காவது சென்றிருக்கிறேன். அப்பொழுது மேட்டுப்பாளையத்தில் இருக்கும் சித்தப்பா வீடும், சூலூரில் இருக்கும் அத்தை வீடும் போதுமானதாக இருந்தது. இப்பொழுது சித்தப்பா, அத்தை (எல்லாம் இருந்தால் தானே?) வீட்டிற்குச் செல்வதெல்லாம் Boreஆன விசயம். அந்த இடத்தை ஹாங்காங்கும், சிங்கப்பூரும் பிடித்து வருகிறது.

*

அமீரகத்தில் உள்ள தமிழன்பர்கள் "Whats the plan for weekend?" என்ற கேள்வியை இனி வரும் 2-3 மூன்று மாதங்கள் நல்ல முறையில் பதிலளிக்கலாம். ஆம், அமீரகத்தில் உள்ள தமிழன்பர்களுக்கான அமைப்புகள் ஆண்டு விழாக்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்தவுள்ளார்கள். இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண, ஆண்டு விழாக்கான நுழைவுச் சீட்டை அந்தந்த அமைப்பினருடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். நுழைவுச்சீட்டுகளை அமைப்பின் "உறுப்பினர்களுக்கு மட்டும்" எனவும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்றும் கொடுக்கிறார்கள். 

சில விழாக்கள் மற்றும் நாள்.

Emirates Humour Club - அமீரக நகைச்சுவை மன்றம் - ஆண்டு விழா - 21.01.11


வானலை வளர்தமிழ் மன்ற விழா - 04.02.11

சுடர்வம்சம் விழா - 11.02.11

அமீரகத் தமிழ் மன்றம் - ஆண்டு விழா - 18.02.11

பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக விழா - 24.02.11

மேலே குறிப்பிட்டுள்ள அமைப்புகளின் நிகழ்ச்சிகள் நடக்கும் இடம், தொடர்புகொள்ள வேண்டிய நபர் போன்றவற்றை அந்தந்த அமைப்புகளின் தளங்களில் பார்த்துக் கொள்ளவும்.

இது போன்ற நிகழ்ச்சிகளின் பொழுது அமீரகத்தில் இத்தனை தமிழ் பேசும் அன்பர்கள் உள்ளனரா என்ற வியப்பு வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.

*
Related Posts with Thumbnails