Sunday 22 November 2009

கூகுளை நினைக்கையிலே..


கூகுளை நினைக்காமலோ, கூகுளின் சேவைகளைப் பயன்படுத்தாமலோ ஒரு நாளேனும் நம்மால் இருக்க முடியுமா? நாம் அன்றாடம் கண்டிப்பாக நினைக்கும் நபர்கள் / நினைக்கும் விசயங்களைப் பட்டியலிட்டால் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர்களுக்கு அடுத்த இடத்தில் கூகுள் கண்டிப்பாக இருக்கும். சமகால நிறுவனங்களில், கூகுள் நிறுவனம் அளவிற்கு நம் வாழ்வில் எந்த ஒரு நிறுவனமும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியுமா?

காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக அலாரத்தை நிறுத்தியவுடன் நான் செய்யும் விசயம் என் செல்பேசியில் ஜி-மெயில் மின்னஞ்சல் ஏதாவது வந்துள்ளதா என்று பார்ப்பதே!! பிறகு நேரம் கிடைக்கும் பொழுது நண்பர்களுடன் பேச்சாடுவது, குழுமங்களில் கும்மியடிப்பது, நண்பர்களுடன் புகைப்படங்களைப் பகிர்வது, வலைப்பதிவுகளைப் படிப்பது என்று எந்த செய்கையாக இருந்தாலும் நமக்கு உதவுவது கூகுளே!!

அலுவலக வேளையின் பொழுது ஏதாவது ஐயம் ஏற்பட்டாலும் உதவுவது கூகுளே!!

இன்றைய மாணவர்களைப் பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது. நொடிப்பொழுதில் நினைத்த விசயத்தை எல்லாம் பெறும் அளவிற்கு வசதிகள் என் மாணவப் பருவத்தில் இல்லையே என்று!! கல்லூரி நாட்களில் எந்தத் தலைப்பில் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது என்று நூலங்களில் தேடிய நாட்களை நினைக்கும் பொழுது கூகுள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மேலும் புரிகிறது.

பத்து வருடத்திற்கு முன்பும் கூட வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் உறவினர்களின் புகைப்படங்களை அனுப்ப வேண்டுமென்றால் அஞ்சலில் தான் அனுப்ப வேண்டும். 10 படங்களுக்கு மேல் அப்போதைய மின்னஞ்சலில் அனுப்பினால் மின்னஞ்சல் பெறுநர்க்குச் சென்றடையாது. ஆனால் இன்றோ, பிக்காசாவில் ஏற்றக்கூடிய படங்களுக்கு அளவே கிடையாது..

சில வருடங்களுக்கு முன்பும் கூட ஏதாவது கட்டுரைகளையோ, குறிப்புகளையோ படிக்க வேண்டுமென்றால் அந்த தளத்தில் சென்று தான் படிக்க வேண்டும். ஆனால் இன்று கூகுள் ரீடரில் இணைப்பை ஏற்படுத்திவிட்டால் போதும். பெரும்பாலான தகவல்கள் நம் முகப்புப் பக்கத்தில்!!

இடத்தைத் தேட காகித வரைபடங்களைத் தேடிய நமக்கு இணைய வரைபடங்களை வழங்யதுடன், அந்த இடத்திற்கு அருகில் என்னென்ன கடைகள், உணவகங்கள், சிறப்புமிக்க தலங்கள் உள்ளன என்றெல்லாம் தகவல்களைத் தருவதை நினைக்கும் பொழுது வியப்பே மிஞ்சுகிறது.

இது போதாதென்று இப்பொழுது கூகுள் அலை ( google wave) சேவையையும் துவக்கி மின்னஞ்சல், பேச்சாடல், புகைப்படங்கள் பகிர்தல், சிட்டாடல் என அனைத்தையும் ஒருங்கிணைத்து புரட்சியைத் துவங்கியுள்ளனர் கூகுள் நிறுவனத்தார்.

கூகுள் மொழிபெயர்ப்பு சேவையைத் தற்பொழுது பல மொழிகளில் ஆரம்பித்துள்ளர். இன்னும் சில வருடங்களில் தமிழிலும் வந்துவிட்டால் நம் இணையப் பயன்பாட்டில் பெருமளவு மாறுதல்கள் ஏற்படும் என்பதில் சந்தேமில்லை.வருங்காலங்களில் பேச்சு மாற்று ( Voice Recognition cum Translation ) சேவையும் வந்துவிட்டால் தாய்மொழியைப் பயில்வது மட்டுமே போதுமானது என்ற நிலை வந்துவிடும். நடந்து வரும் மாற்றங்களைப் பார்க்கையில் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.

தொழிற்சாலைப் புரட்சி, பசுமைப்புரட்சி, சமுதாயப் புரட்சி என்றெல்லாம் கேள்விப்படும் பொழுது "புரட்சி" என்ற வார்த்தையில் வலிமை புரியாமல் இருந்தது. ஆனால் இன்று கூகுள் செய்து வரும் தகவல் புரட்சியைக் கண்கூடாகப் பார்க்கும் பொழுது புரட்சியின் அர்த்தம் புரிகிறது. பட்டங்களைக் கொடுப்பதில் வல்லவர்களான நாம் கூகுளிற்கும் ஏதாவதொரு பட்டம் கொடுத்தால் என்ன?

கூகுளைப் பற்றிய என் எண்ணங்களை பதிவேற்ற நினைக்கு இந்த வேளையிலும் உதவுவது கூகுளே!!

கூகுளிற்கு நன்றிகள்!!

*************************************************************************************

கடந்த ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாக நான் எழுதிய பதிவுகளைப் படித்தும் வாழ்த்தியும் ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!! என்னை ஒரு வாரகாலத்திற்கு நட்சத்திரமாக இருக்க அழைத்த தமிழ்மண நிர்வாகத்தினர்க்கும் என் நன்றிகள்!! அவர்கள் அளித்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திய நிறையு எனக்கு ஏற்பட்டுள்ளது!!

மீண்டுமொரு முறை அனைவருக்கும் என் நன்றிகள்!!
..

Saturday 21 November 2009

துபாய் - அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம்..

இணையத்தைப் பயன்படுத்தும் தமிழர்களுள், எத்தனை பேருக்கு தமிழைப் பயன்படுத்தத் தெரியும்?

மின்னஞ்சல் அனுப்புதல் (Email),பேச்சாடல் (Chats) , குழுவாடல் (Groups) போன்ற அன்றாட தேவைகளுக்குப் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆங்கிலத்தையே!! இதில் பத்திரிக்கையாளர்கள், தமிழறிஞர்கள், பதிவர்கள் போன்றோரை விதிவிலக்கானர்வர்கள் எனலாம்!! தாய்மொழியில் பெற்றோருடனும், நண்பர்களுடனும் பேச்சாடினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!! மேலும், குறைந்த அளவினர் மட்டும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்தி வந்தால் இணையத் தமிழை எப்படி வளர்ப்பது? நமக்குத் தெரிந்தவற்றைப் பிறர்க்குப் பகிர்ந்தால் தானே நல்லது!!

அந்த நோக்கத்துடன் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், துபாய் நகரில், அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம் நேற்று (20.11.09) மாலை 6மணி முதல் 9 மணி வரை நடந்தது. குறுகிய கால அவகாசத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், பயிலரங்கத்தில் 45 பேர் கலந்து கொண்டனர். 23, 22 என்று இரண்டு குழுவாகப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

நேற்று நடந்த இந்த பயிலரங்கில் தமிழைக் கணினியில் உள்ளிடுவது குறித்த பயிற்சியோடு தமிழ் இணைய வரலாறு, கணினியில் தமிழ்ப் பயன்பாட்டின் வளர்ச்சி, தமிழில் கிடைக்கும் பிற சேவைகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.




பெனாசிரின் அறிமுக உரையோடு துவங்கிய நிகழ்ச்சியில் தமிழில் எழுத்துருக்கள் இன்று ஒருங்குறியில் (Unicode) வந்து நிற்பது வரையிலான வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் அபுல்கலாம் ஆசாத் எடுத்துரைத்தார். இதில் இவர் ASCII அமைப்பைப் பற்றியும், எழுத்திருக் கட்டமைப் பற்றியும் தேர்ந்த கணினி வல்லனுரைப் போல விளக்கினார். இவர் கூறிய பல தகவல்கள் எங்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.



கணினிப் பயன்பாட்டில் தமிழின் வளர்ச்சி என்ற தலைப்பில் கணினியில் தமிழ் எவ்வாறு பரவலாக உபயோகிக்கப்படலாம் என்பது குறித்தும் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக விளக்கம் தந்தார் அமீரகத் தமிழ் மன்றத்தின் தலைவர் ஆசிப் மீரான். ASCIIல் ஆரம்பித்து TSCII, TAB TAM, Unicode வரை நடந்தேறிய நிகழ்வுகளைக் கூறியது அனைவராலும் பாராட்டப்பட்டது.


பிறகு, அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவச மென்பொருட்களை உள்ளடக்கிய குறுந்தகடும், தமிழைக் கணினியில் உள்ளீடு செய்வதற்கான பயிற்சிக் கையேடும் வெளியிடப்பட்டது. இவற்றை அமைப்பின் நிறுவன உறுப்பினர் காமராஜன் வெளியிட அமைப்பின் பொருளாளர் நஜிமுதீன் பெற்றுக் கொண்டார்.



தமிழ் மென்பொருளை கணினியில் எவ்வாறு நிறுவுவது என்பதைப் பற்றிய விரிவான செயல்முறை விளக்கத்தை அமீரகத் தமிழ் மன்றத்தின் இணைச் செயலாளர் ஜெஸிலா ரியாஸ் வழங்கினார். ஏற்பாடு செய்திருந்த மடிக்கணினிகளில் தமிழ் மென்பொருளை நிறுவுவதில் ஜெஸிலா, "குசும்பன்" சரவணன் ஆகிய இருவரும் உதவினர். "தமிழை உள்ளீடு செய்த பொழுது" பயிலரங்கில் கலந்து கொண்டவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது.


வலைப்பூக்கள் குறித்த அறிமுகம், வலைப்பூவைத் துவங்குவது மற்றும் திரட்டிகளில் இணைப்பது குறித்த விளக்கத்தையும், செய்தியோடைகள் குறித்தும் அடியேன் எடுத்துரைத்தேன். இந்நிகழ்வின் பொழுது வலைப்பதிவுகளில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றியும், கருத்துரிமை பற்றியும் பல கேள்விகள் வந்தன.

ஃபயர்ஃபாக்ஸ் உலவி மூலமாகத் தமிழில் நேரடியாகத் தமிழில் எழுதுவது, எழுத்துரு மாற்றிகள் போன்ற பிற சேவைகளைக் குறித்து ஆசிப் மீரான் விளக்கவுரை வழங்கினார்.

கலந்து கொண்டவர்களுள் பெரும்பாலானோர் கணினித் துறையைச் சாராதோர் என்பது குறிப்பிடத்தக்கது. "நான் பல நாளாக தனக்கென ஒரு வலைப்பூவை ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதற்கான அறிமுகம் இன்றே கிடைத்தது" என்று குறிப்பிட்ட அன்பருக்கு வயது 70. புதிய விசயங்களைப் படிப்பதற்கு வயதொரு தடையில்லை தானே?


வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமைகள் என்றால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளின் முன்பே கழியும். கடந்த வெள்ளிக்கிழமை நல்ல வகையில் கழிந்தது நிறைவைத் தந்தது. இந்த முறை துபாய் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியைப் போல அபு-தாபியிலும் நடத்துமாறு வேண்டுகோள்கள் வந்திருப்பது நம் மக்களுக்கு இருக்கும் தமிழார்வத்தை வெளிப்படுத்தியது.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ச்சி பற்றிய கருத்துகளைக் கேட்க படிவங்கள் வழங்கினோம். அதில், "நீங்க நல்லாயிருக்கனும்.. தமிழ் முன்னேற.." என்று ஒரு அன்பர் குறிப்பிட்டிருந்தது எங்களை நெகிழச் செய்தது.

இதை விட வேறென்ன வேண்டும்?

Friday 20 November 2009

சிவபாலன் ஓவியங்களும் தமிழக மண்வாசனையும்

"நீங்கள் ஓவியங்களை வரையும் பழக்கம் உள்ளவரா? கடைசியாக ஓவியங்கள் வரைந்தது எப்பொழுது? கடைசியாக ஓவியக் கண்காட்சிக்கு சென்றது எப்பொழுது?" போன்ற கேள்விகளை என் நண்பர்கள் சிலரிடம் கேட்ட பொழுது எனக்கு வெகுவாக கிடைத்த பதில்கள் "இல்லை","பள்ளிக்கூடத்தில் வரைந்ததோடு சரி","ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்றதில்லை" போன்றவை!!

பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் விருப்பமான வகுப்பென்றால், அது ஓவிய வகுப்பே!! ஓவியப் பாடத்திற்கு மதிப்பெண்கள் இருக்காது. ஓவிய வகுப்பை நடத்த வரும் ஆசியரும் கண்டிப்பு இல்லாதவராக இருந்ததால் வகுப்பில் ஒரே சிரிப்பொலியாக இருக்கும். மேலும் ஒவ்வொருவம் வரைவதைப் பார்த்த கிண்டல் செய்வது என்று கலகலப்பாகச் செல்லும். அதுவே பெரிய வகுப்பிற்கு வந்து விட்டால் ஓவிய வகுப்புகள் குறைந்துவிடும். அத்துடன் நமக்கு ஓவியங்களுடன் கூடிய தொடர்பும்!!

நம்மில் பெரும்பாலானோர்க்கு ஓவியத்துடன் தொடர்பென்றால் வார இதழ்களில் வரும் சிறுகதைகளில் இடம்பெறும் ஓவியங்கள் தான். ஓவியக் கண்காட்சிகள் நடைபெறுவது கூட பெரும்பாலானோர்க்கு தெரியாத நிலையே இருக்கிறது. நல்ல இசையை ரசிப்பவர்கள், நல்ல நூல்களை வாசிப்பவர்கள் கூட ஓவியங்களை ரசிப்பதோ பார்த்து லயிப்பதோ கிடையாது.

ஓவியங்கள் என்றாலே நமக்குப் புரியாத விசயங்கள் என்றோ மேல் தட்டு மக்களுக்கானவை என்றோ நாம் நினைத்து ஒதுக்கிவிடுகிறோம். நல்ல ஓவியங்களில் வெளிப்படும் கற்பனை வளமும் வடிவங்களும் நம்மை ஒரு தனித்த அனுபவ நிலைக்கு கூட்டிச் செல்லும் வலிமைப் படைத்தது. நம் மனத் திரையினை ( MIND SHARE) தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும், அரசியல் நிகழ்வுகளும் ஆக்கிரமித்துக்கொள்ளும் அளவிற்கு ஓவியங்கள் இடம்பெறாமல் போனது ஏனோ தெரியவில்லை.

நான் சென்னையில் இருக்கும் பொழுது கேலரிகளுக்குச் செல்வது வழக்கம். அப்படி நான் பார்த்து ரசித்த ஓவியங்களையும் ஓவியர்களையும் இடுகைகளில் அறிமுகம் செய்கிறேன். இந்த இடுகையில் ஓவியர் சிவபாலன்!! இளைய தலைமுறை ஓவியர்களுள் குறிப்பிடும்படியானவர்.

நீங்கள் யானையை ரசித்திருக்கிறீர்களா? கடலும் யானையும் குழந்தையின் சிரிப்பும் தான் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே தராதவை!! யானைகளின் தோற்றம் தரும் பிரமிப்பு, பெரிய உருவம், சிறிய கண்கள், பெரிய காதுகள் என யானைகளை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். கோயில் ஊர்வலத்தில் செல்லும் யானை, சிறுவர்கள் சூழ தெருவில் நடந்து வரும் கோவில் யானை என ஓவியர் சிவபாலனின் ஓவியங்களில் யானைக்குத் தனி இடம் தான்!!

அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பகுதி, நல்ல வெயில் வேளை, நிலமெங்கும் மரக்கிளையின் நிழல்கள், தூரத்தில் தெரியும் ஒரு ஆட்டுக்கூட்டம் என்று இவரது இயற்கைக் காட்சிகள் நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தர வல்லது. நிழல்கள் இவரது ஓவியங்களில் உயிரோட்டத்துடன் இருப்பது சிறப்பு.


தோளில் குழந்தையைத் தூக்கிச் செல்லும் வயதானவர், குழந்தையுடன் தூரி விளையாடும் பெண்கள், மாட்டுச் சந்தை நிகழ்வுகள், சந்தைகளின் காய்கறிகளை விற்கும் பெண்கள், பசுவின் பாலைக் கரக்கும் கிராமத்துப் பெண் என்று இவரது ஓவியங்கள் யாவும் நமக்குத் தமிழக மண்ணுக்கே உரிய மண்வாசனையைத் தரவல்லது.

தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் பார்த்துப் பழகிய ஜல்லிக்கட்டுக் காட்சிகளில், நுண் நிமிடங்களில் ( micro seconds) நாம் தவிர விடும் உக்கிரத்தையும், சேவல் சண்டைகளில் தெரிக்கும் றெக்கைகளையும் இவரது ஓவியங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.


கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் கவின் கலை (FINE ARTS) பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.இவரிடம் பேசுகையில், "கோயில்களும், கிராமங்களும் சூழ்ந்த சூழ்நிலையில் வளர்ந்ததால் மண்வாசனை மிக்க ஓவியங்களை வரைவதாகவும், மிக வேகமான மாறுதல்களைச் சந்தித்து வரும் வேளையில், நம் தலைமுறையினர் பார்த்த கிராமங்களையும் கிராம நடப்புகளையும் அடுத்த தலைமுறையினர்களுக்கு தெரியப்படுத்த தன் ஓவியங்கள் உதவும்!!" என்றார்.

நீர் வண்ண ஓவியங்கள் (Water Color Paintings) என்னும் வகையையே இவரது ஓவியங்கள் சார்ந்தவை!! நீர் வண்ண ஓவியங்கள் நன்றாகப் பராமறிக்கப்படுகையில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்!!

சில வருடங்களுக்கு முன்பு வரையில் பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் மட்டுமே ஓவியங்களை வாங்கி வந்த வழக்கம் இன்று மத்திய தர வர்க்கத்தினர்களும் வாங்கும் வகையில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் சிறந்த ஓவியர்களின் ஓவியங்களுக்கு இருக்கும் மறுவிற்பனை மதிப்பு (Resale Value) தான்!! பொதுவாகவே ஓவியத் துறையில் அடியெடுத்து வைக்கும் பொழுது குறைந்த விலையில் இருக்கும் ஓவியங்களின் விலை, பிரபலமாகும் பொழுது பல மடங்கு பெருகிவிடுகிறது.


"கவின்கலைப் பட்டம் படிக்கும் பலரும் பட்டப் படிப்பை முடித்தவுடன் நல்ல சம்பளம் கிடைக்கிறது என்று அனிமேஷன் போன்ற துறைகளுக்குச் செல்லும் போக்கு கவலையளிக்கிறது. இந்தத் துறையில் பலரும் ஆர்வத்துடன் ஈடுபட்டால் தமிழகத்தைக் கலைத்துறையில் தனியிடத்திற்கு கொண்ட செல்ல முடியும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாமலும் தனக்கென தனி பாணியை அமைத்துக்கொண்டு கடுமையாக உழைத்தால் ஓவியத்துறையில் வெற்றி நிச்சயம்" என்று ஓவியர் சிவபாலன் கூறியது கவனிக்கத்தக்கது!!

உழைப்பில்லாமல் வரும் வெற்றி உவகையைத் தராது தானே!!

**