Sunday, April 26, 2009

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு...

"நான் 'டயட்'ல இருக்கேன் அங்கிள், இரண்டு இட்லி தான் சாப்பிடுவேன்"என்று ஏழு வயது சிறுமியிடம் இருந்து வந்த பதில் மிகவும் வியப்பளித்தது.

பிறகு ஒரு நாள் மதிய உணவு வேளையின் போது, வேறொரு நண்பரிடம் வாழைப்பழம் சாப்பிடுமாறு கேட்டதிற்கு.

"வயிறு சரியில்லை.. வாழைப்பழம் சாப்பிட்டா 200 (கி) காலரிகள் (K Calories)அதிகமாகி விடும்...அதனால வேண்டாம்" என்றார்..

"ஏன் சார், வாழைப்பழம் சாப்பிடறது செரிமாணத்திற்குக் கூட நல்லதாச்சே" என்றேன்..
"இல்லீங்க, நேத்து டின்னர் கொஞ்சம் ஹெவி! மீட், சிக்கன்னு ஒரு வெட்டு வெட்டியாச்சு... அத பேலன்ஸ் செய்யத்தான்" என்றார்..

இப்போதெல்லாம், உடலைப் பற்றியும், உட்கொள்ளும் உணவைப் பற்றியும் அதிக கவனம் வந்துள்ளது வரவேற்கத்தக்கதே. அன்றாடம், உட்கொள்ளும் உணவில் நமக்குத் தேவையான சக்தி கிடைப்பதற்காக "டயட்டீசியன்"களை அனுகுவதையும், "நான் டயட்ல இருக்கேன்" என்று நண்பர்கள் கூறுவதயும் சர்வசாதாரனமாக பார்க்க முடிகிறது.


நம் உணவு முறையைப் பார்த்தால், அதிகமாக மாவுச்சத்து சேர்த்துக் கொள்கிறோம் என்பதைத் தவிர வேறொன்றும் குறை கூற முடியாது. அதுவும், நல்ல உடற்பயிற்சி, உறக்கம் எல்லாம் இருந்தால் நம் உணவு முறையும் சிறந்ததே..


இன்னும், நமது தாத்தா பாட்டியின் உணவுப் பழக்கத்தைப் பற்றி யோசிக்கையில்

அன்றாட உணவுடன், கட்டாயமாக கூழ், இளநீர், பழைய சோற்றுத் தண்ணிர் மற்றும் இரவில் அரைவயிறுடனும் உண்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு உணவு வேளைக்குப் பிறகும் கட்டாயம் இளஞ்சூட்டில் தண்ணிர் குடித்தார்கள்.

இதை நம்மில் "இன்று" எத்தனை பேர் கடைப்பிடிக்கிறோம்?

நம் முன்னோர்களுக்கு, டயட்டைப் பற்றியோ காலரியை பற்றியோ தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் எந்த உணவு செரிமாணத்திற்கு நல்லது என்பது தான். இதனையே திருவள்ளுவர்,

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி யுணின்.

என்று கூறியுள்ளார்.


இப்போது, நாம் எந்த உணவில் எவ்வளவு சக்தி இருக்கிறது என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது நல்லதே. ஆனால் அந்த அறிவை எப்படி உபயோகிக்கிறோம்?

என் நண்பரைப் போல, முன் தினம் ஜீரண உறுப்புகள் திணறும் அளவிற்கு அசைவம் சாப்பிட்டு விட்டு, அடுத்த நாள் உணவை குறைத்து சாப்பிடுவது சரியானதா? காலரியை மட்டும் கணக்கிட்டு, நம் கால நிலைக்குத் தகாத உணவுகளை சாப்பிடுவதை என்னவென்று சொல்ல..

இப்படி, அதிகமாக அசைவம் உட்கொள்வது நம் உடலிற்கு மட்டுமல்லாமல், பூமியின் உடல் நலத்திற்கும் தீங்கானது என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

பூமியின் தட்பவெப்பம் அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இறைச்சியை பக்குவப்படுத்தும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் வாயுக்களைக் குறிப்பிடுகிறார்கள்.

"உலகெங்கும், உணவுப் பொருட்களின் விலைவாசி ஏறுவது இந்தியர்கள் அதிகமாக அசைவம் உண்ண ஆரம்பித்ததால் தான்" என்று முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் கூறி பரபரப்பை கிளப்பியதைப் போல, "பூமியின் தட்பவெப்பம் அதிகரிப்பது இந்திய மக்கள் அதிகமாக அசைவம் சாப்பிடுவதால் தான்" என்றும் ஏதாவதொரு நாட்டு அதிபர் கூற நேரிடலாம்.

"அசைவம் அதிமாக உட்கொள்ளாமல், ஒல்லியா இருப்பது பூமிக்கு நல்லது" என்று மேற்கத்திய நாடுகளில் பிரச்சாரம் நடந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

நம் முன்னோர் கடைப்பிடித்த எத்தனையோ விஷயங்களை மறந்து வரும் இந்த நேரத்தில், உணவுப் பழக்கத்தையாவது மறக்காமல் இருப்பது நல்லது. அன்றாடம் உட்கொள்ளும் உணவில் எவ்வளவு சக்தி உள்ளது, எந்த வகையான "டயட்" நல்லது என்று ஆராயும் அதே சமயம், எளிதில் செரிக்கும் உணவை உட்கொள்ளுதல் நமக்கும் நம் பூமிக்கும் நன்மை விளைவிக்கும்.


http://youthful.vikatan.com/youth/sendhilstory27042009.asp

.

oo

வலையில் சிக்கிய....

எனது பேஸ்புக் வாசலில் (Homepage), எனது நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபோது கிடைத்தவைகளில் சில...
முதல் நண்பர்...

"முக்கியமான மேட்ச் பாக்கறேன்.. இன்னிக்கு நடக்கற மேட்ச்சுல யார் ஜெயிப்பா? சென்னையா பெங்களூரா?"
என்று ஆரம்பித்த கருத்துக்கு...பிற நண்பர்கள் கொடுத்த மறுமொழிகள் இதோ...
"சென்னை.."
"பெங்களுர் தான்.."
"பாத்தீல்ல... பெங்களுர் ஜெயிச்சிருச்சு... அடுத்த மேட்ச்சுல யார் ஜெயிப்பா? ராஜஸ்தானா மும்பையா?"
"ராஜஸ்தான்..."
"மும்பை தான்... போன மேட்ச் மாதிரி.. பஜ்ஜி கலக்கப் போறாப்புல..."

இன்னொரு தோழி ஆரம்பித்த கருத்தும் மறுமொழிகளும் இதோ..
"எனக்கு வாழ்க்கையே போர் அடிக்குது...யாருமே எனக்கு டெட்டி பியர் தர மாட்டேன்றாங்க!!"
"இதோ நான் தர்றேன்.. " ( ஒரு கரடி பொம்மையின் புகைப்படத்துடன்..)
"உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலியா?"

சில நாட்களுக்கு முன், நான் பார்த்த இன்னொரு கருத்தும் மறுமொழிகளும் இதோ...
"என் மகன் கார்த்திக் (2 வயது ) இன்னிக்கு ரூம்ல லாக் பண்ணிக்கிட்டான்...."
"OMG (ஓ மை காட்) என்ன ஆச்சு..."
"அப்பா!!... ரெண்டு மணி நேரத்துக்கு அப்புறம் தான் அவன எடுத்தேன்.."
"அவனுக்கு என்னோட அனைப்பு (HUG).... "

பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களின் தொடர்புகளை இழந்தவர்களுக்கு, தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ஆர்குட் ஒரு அருமையான வாய்ப்பாக உள்ளது. தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும், புதிதாக விவாதங்கள் நடத்தவும் நல்ல ஊடகமாக அமைந்ததால், ஆர்குட், ஃபேஷ்புக் போன்ற வலைத்தளங்களின் செல்வாக்கு பெருமளவில் பெருகியது..இப்படி நண்பர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், என்ன விவாதங்கள் நடக்கிறது என்று அறியவும் உதவிய சமூக வலையமைப்புகள், மெதுவாக "தனி நபர் என்ன செய்கிறார்" என்பதற்கும் முக்கியத்துவம் தர ஆரம்பித்தன... ஒருவர் என்ன செய்கிறார் என்பதற்கு உதாரணங்கள் தான் மேலே குறிப்பிட்ட கருத்துகளும் மறுமொழிகளும்...இது போன்ற கருத்துக்களும் மறுமொழிகளும் தாம் அன்றாடம் என்ன செய்கிறோம் என்பதாக உள்ளதை இங்கே காணமுடிகிறது.ஒரு முறை நாம் தெரிவித்த கருத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துவிட்டால், நாம் மீண்டும் கருத்துக்களை தெரிவிக்க உக்குவிக்கும். இதுவே கிரிக்கட், ரியாலிட்டி ஷோ போன்ற விவாதங்கள் என்றால் ஒவ்வொரு கருத்தையும் மறுமொழியையும் மிகவும் தொடரவும் வைக்கும்..இது போல வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவிப்பதும் தொடர்வதும் பொழுதுபோக்காக இருக்கும் வரை பரவாயில்லை. அதுவே ஒரு போதையாக மாறுவது மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம்!!மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போல சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி வருவதும் வளர்ந்து வருகிறது.அலுவலகங்களில் வேலை பார்க்கும் போதும் தனது பக்கங்களில் யார், என்ன கருத்து தெரிவித்தார்கள் என்பதில் ஒரு கண் வைத்திருப்பதும், வீட்டில் ஏதாவது வேலை இருந்தாலும் கவனிக்காமல் உரையாடல்களில் ஈடுபடுவதும் இன்றைய நடைமுறையாகி வருகிறது.வீட்டில் மனைவி திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்பதையும் கண்டுகொள்ளாமல், "நான் சினிமாவுக்கு போகிறேன்!!" என்று உரையாடலை ஆரம்பிப்பதை என்ன சொல்ல?"எனக்கு அலுவலக வேலை போர் அடிக்குது" என்று ஒருவர் தெரிவித்த கருத்தை, அவரது நிறுவன ஊழியர்கள் பார்க்க நேர்ந்ததால் அந்த நபர் வேலை இழந்ததாக செய்தித்தாளில் படித்தேன்."நாம் என்ன கருத்தைத் தெரிவிக்கிறோம் என்பதைக் கூட உணராத அளவிற்கு" வலைச்சிக்கலில் மாட்டி வருகிறோம்.இது போன்ற சேவைகளை சமூக வலையமைப்பு நிறுவனங்கள் ஏன் இலவசமாக அளிக்கின்றன?தங்களது பயனர்கள்(users) என்ன செய்கிறார்கள், எது போன்ற விவாதங்களில் ஈடுபடுகிறார்கள் போன்ற தகவல்களுக்காகத்தான்!! வியாபார நிறுவனங்கள் வெவ்வேறு புள்ளி விவரங்களுக்காக சமூக வலையமைப்பு நிறுவனங்களை அணுகி வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சேவைகளை, நமது நண்பர்களுடன் தொடர்பை பலப்படுத்துவதற்கும், பொழுதுபோகாத போது விவாதங்களில் ஈடுபடுவதற்கும் உபயோகித்து வந்தால் பயனர்களான நமக்கும் வலைத்தளசேவை நிறுவனங்களுக்கும் நன்மை (WIN-WIN) அளிப்பதாக அமையும்.அதை விடுத்து சமூகவலைத்தள உரையாடல்களே முழுநேர வேலையாக மாறினால், நாம் வலைச்சிக்கலில் மாட்டி வருகிறோம் என்றே அர்த்தம்!!


................


இந்த பதிவை யூத்ஃபுல் விகடனில் படிக்க...


http://youthful.vikatan.com/youth/senthilarticle15052009.asp


Friday, April 24, 2009

பள்ளிக்கூடங்களை மூடுவதால் வேலைவாய்ப்பா?

"ஜப்பானில், பல ஊர்களில் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்து வருவதால் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன" என்ற செய்தியைப் படித்தேன்.

நமது நாட்டில், பள்ளிக்கூடங்களில் இடம் கிடைப்பதே பெரும்பாடாக உள்ள நிலையில், கல்வி கற்போர் எண்ணிக்கை குறைகிறது என்ற காரணத்தால் பள்ளிகள் மூடப்படுவது வியப்பளிக்கிறது.அதே சமயம் இந்த செய்தியை, நம் நாட்டு இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் பார்க்க முடிகிறது.

பள்ளிகள் மூடுவது எப்படி நமக்கு வாய்ப்பாகும்?

அதற்கு முன்பு நமக்கு வரும் கேள்வி, வளர்ந்த நாடான ஜப்பானில் படிப்போர் எண்ணிக்கை ஏன் குறையவேண்டும் என்பது தான்.

அங்கே படிக்கும் வயதில் உள்ளோர் குறைவதற்கு, பிறப்பு விகிதம் குறைந்து வருவது தான் காரணம். சராசரியாக அங்கே ஒவ்வொரு பெண்ணும் ஒரு (1.2) குழந்தையைத் தான் பெற்றெடுக்கிறார்களாம். முன்பெல்லாம் தோராயமாக இரண்டு என்று அளவில் இருந்த நிலை இப்போது குறைந்து வருகிறதாம். அதனாலேயே படிப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

"பிறப்பு விகிதம் குறைவது நல்லது தானே, இருக்கும் வளங்களை குறைந்த அளவினர் பங்கிடுவது நாட்டுக்கு நல்லது தானே" என்பது நமது எண்ணமாக இருக்கும். ஒரு வகையில் பார்த்தால் பிறப்பு விகிதம் குறைவது நல்லதாகத் தெரிந்தாலும் வேலைக்கு செல்லும் வயதில் இருப்போர் எண்ணிக்கை குறைவது அந்த நாட்டுக்கு நல்லதல்ல.

எப்படி?

ஒரு உதாரணம்...

1975ம் வருடம், ஒரு குடியிருப்பில் 16 இளம் தம்பதியினர் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அனைவருக்கும் சராசரியாக வயது 25. வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை 32ஆக இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குழந்தை (8ஆண்,8 பெண்) என்று 16 குழந்தைகள் பிறக்கிறார்கள்.

அதுவே 2000ம் வருடம், அதே குடியிருப்புக்குள்ளேயே 16 பேரும் மணமுடிக்கிறார்கள் என்று வைத்தால், குடியிருப்பில் வாழ்வோர் எண்ணிக்கை 48 ஆக இருக்கும். வேலைக்கு செல்லும் வயதில் இருப்போரும் 48 ஆக இருக்கும். மணமுடித்த 8 தம்பதினருக்கும் தலா ஒரு குழந்தை என்று 8 குழந்தைகள் பிறக்கிறார்கள்.

அதுவே 2010ம் வருடம் பார்த்தால், குடியிருப்பில், 32 பேர் வேலையில் இருந்து ஓய்வடைந்து 16 பேர் மட்டும் தான் வேலைக்கு செல்வார்கள். ஆனால் குடியிருப்புப் பகுதியில் மொத்தம் 56 பேர் இருப்பார்கள்.

முன்பு 16 பேர் படித்த பள்ளியில் இன்று 8 பேர் தான் படிப்பார்கள். இதனால் தான் பள்ளிகள் மூடப்படுகின்றன.

மேலே குறிப்பிட்டுள்ள குடியிருப்புப்பகுதி உதாரணம் கொஞ்சம் மிகையாக தெரிந்தாலும், இது தான் ஜப்பான், மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் இன்றைய நிலை!!

ஜப்பான் மக்கள் தொகையின் சராசரி வயது 44 ஆக உள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி என்று பெரும்பாலான ஐரோப்பிய நாட்டு மக்கள் தொகையின் சராசரி வயதும் 40க்கு அதிகமாகவே உள்ளது. இது போன்ற நாடுகளில் பிறப்பு விகிதம் 1.5 என்ற அளவில் இருப்பதைக் காண முடிகிறது. இதனால், வயதானோரின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே தான் செல்லும்.

இதனால் நம் இளைஞர்களுக்கு என்ன வாய்ப்பு?

வருடந்தோரும் ஓய்வடைவோரின் இடங்கள் காலியாவது நமக்கு வாய்ப்பு தானே!! காலியிடங்கள் மட்டும் இன்றி, அதிகமாக ஓய்வடைந்தொர் இருக்கும் நாட்டில் மருத்துவத் துறை, காப்பீட்டுத் துறை மற்றும் பெரும்பாலான சேவைத்துறைகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.

இந்தியாவின் மக்கள் தொகையின் சராசரி வயது 25 தான் என்பதும் 30வயதுக்கு குறைவானோர் 60 கோடி பேர் இருக்கிறோம் என்பதும் தான் நமக்கு நல்ல வாய்ப்பாக அமைவது.


உலக நாடுகளில், மக்கள் தொகையின் போக்கு (Demographics) எவ்வாறு இருக்கிறது, சராசரி வயது, அந்நாட்டு மக்கள் எதற்கு செலவிடுகிறார்கள் போன்றவற்றுடன் அந்நாட்டு மொழி, கலாச்சாரம், எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் வரலாம் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது நமக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.


இப்போதிருக்கும் சூழ்நிலையில் நம் இளைஞர்களால் அரசியல் மூலம் நாட்டையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியவில்லையென்றாலும், இது போன்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலம் வீட்டின் பொருளாதாரத்தையும், அந்நிய செலாவனியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்ற முடியுமே!!

ஆக, ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடுவதாக வந்த செய்தி நமக்கு வாய்ப்பாகத் தானே தெரிகிறது?
இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.
.

Friday, April 17, 2009

தேர்தலும் பொருளாதாரமும்...

கடந்த ஆறேழு மாதங்களாக நாம் கேட்க, பார்க்க நேரிடும் செய்திகளில் "பொருளாதாரப் பின்னடைவு" பிரதானமாக இடம் பிடித்து வருகிறது. பின்னடைவை சரி செய்து பணப்புழக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் என ஒவ்வொரு நாடும் திட்டங்களை வகுத்துவருகிறது

பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ள நிலையில், நம் நாட்டில் எப்படி உள்ளது?

இந்தியாவில் பெருமளவு பொருளாதாரத் தேக்கம் ஏற்படவில்லை என்றாலும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருகிவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நேரத்தில், மத்திய அரசு பொருளாதாரத்தை சீர்ப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் ஏன் திட்டங்களை அறிவிக்கவில்லை?

நடந்து வரும் தேர்தல் ஒரு காரணமாக இருக்குமோ?

திட்டங்கள் அறிவிக்கப்படாததற்கு தேர்தல் ஒரு காரணமே!! தேர்தலின் போதும் சிறிதளவு வேலைவாய்ப்பும், தேர்தலிக்கு பிறகு நல்ல திட்டங்கள் வரும்பட்சத்தில் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் மேம்பட வாய்ப்புள்ளது!!

தேர்தலால் சிறிதளவு பணப்புழக்கமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறதா? அது எப்படி?

ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் வரும் செய்திகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும் எப்படி என்று...

ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், ஒவ்வொரு கட்சியும் தொகுதி தோறும் 4 அல்லது 5 கோடிகள் வரை செலவிடுவார்கள் என்றும் அப்படியே அனைத்து கட்சிகளையும் கணக்கில் கொண்டால் தொகை 20 கோடியை தாண்டும் எனவும் தெரிகிறது. அதுவே, நாடு முழுவதும் கணக்கில் கொண்டால் 10,000 கோடியைத் தாண்டிவிடும்....

இந்த பணத்தால், ஓரளவுக்கு வேலைவாய்ப்பு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை..

சுவர் விளம்பரங்கள், கட் அவுட்கள் வைப்பவர்கள், ஒலிப்பெருக்கிகள்- விளக்குகள் வாடகைக்கு விடுவோர், மேடை அலங்காரம் செய்வோர், வாகன் வோட்டிகள், மதுபானக் கடைகளில் பணிபுரிவோர், மாமிசக்கடை உரிமையாளர்கள், உணவகங்கள் வைத்திருப்போர் போன்றோரை தேர்தலால் வேலை வாய்ப்படைபவர்கள் என்று சொல்லலாம்.

இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால், கோடிகள் செலவாவது கட்சிகாரர்களுக்கும், கட்சிக்காரர்கள் என்ற பெயரில் உலாவரும் ரவுடிகளுக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் தான்.. இதற்கிடையே, தொகுதி மக்கள் தங்களுக்காக வாக்களிக்க(??) செலவிடும் தொகையையும் மறந்து விடக்கூடாது.

இப்படி தேர்தலின்போது சிறிதளவு அதிகரிக்கும் பணப்புழக்கமும் வேலைவாய்ப்பும், "நுனி நாக்கில் அமுதமும் அடி நாக்கிலே நஞ்சும்" வைத்திருப்பதைப் போன்றதே!!

இந்தமுறை தேர்தலுக்காக செலவிடும் 10000 கோடியை, சில திட்டங்களுக்காக 2008-09 பட்ஜட் ஒதுக்கீடுடன் ஒப்பிடுகையில் நாட்டுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது புரியும். 2008-09 பட்ஜட்டில்

*தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி, 100 நாட்கள் கட்டாய வேலைவாய்ப்பு தருவதற்காக ஒதுக்கீடு செய்தது 16000 கோடி..
* தேசிய குடிநீர் வாரியத்திற்கு ஒதுக்கியது 7300 கோடி..
* சென்னையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு பட்ஜட் ஒதுக்கீடு 300 கோடி..
இதிலிருந்தே தெரிகிறதே நாம் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று..
உதாரணத்திற்கு, இந்த நிதியை வைத்து அனைத்து பெருநகரங்களின் குடிநீர் பிரச்சனையையும் தீர்த்து விடலாமே!!

5 வருடங்களுக்கு பாராளமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கும் நிதியே 10 கோடியைத்தான் தொடும் என்கிற போது ஒவ்வொரு தொகுதிக்கும் 4-5 கோடியை எப்படி செலவு செய்ய முனைகிறார்கள்? இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?

வரும் பணமெல்லாம், ஓட்டுப்போடாதோர் கட்டும் வரிபணத்திலிருந்தும், ஓட்டுப்போடும் ஏழைகளுக்காக வகுக்கும் திட்டங்களிலிருந்தும் தான்!!

இப்படியே போனால் பொருளாதாரத்தை எப்படி சீர்படுத்துவது? பொருளாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்களை திறமையாக வகுத்து செயல்படுத்தவும் என்ன தான் வழி?
தேர்தல் தான் ஒரே வழி!!

அனைவரும், குறிப்பாக இதுவரை வாக்களிக்காதோரும் "நேர்மையானவர்களுக்கு" வாக்களிப்பதே ஒரே வழி!! அப்படி வாக்களிக்காமல், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி அங்கலாய்த்துக்கொள்வது "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும்"!!


இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.

http://youthful.vikatan.com/youth/senthilstory17042009.asp

.

Sunday, April 12, 2009

சித்திரை முதல் நாளை...

உங்கள் 000000 தொலைக்காட்சியில் "சித்திரை முதல் நாளை முன்னிட்டு.... " காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்டு மகிழுங்கள்!!

புதுசா இருக்கா அறிவிப்பு? அறிவிப்பு தான் புதுசு....


"பொங்கல் தினத்தையே தமிழ் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும்" என்ற தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, "தொலைக்காட்சிகளுக்கு" வணிகத்தை ஊக்குவிக்க கிடைத்திருக்கும் விழாவே "சித்திரை முதல் நாள்".


சித்திரை முதல் நாளுக்கு அப்படி என்ன சிறப்பு?


சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக வரும் மாதம் தான் சித்திரை. மேலும் இந்துக்களின் ஜோதிட முறைப்படி சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு வருவது சித்திரை முதல் நாளன்று!! சித்திரை முதல் நாளன்று பிறந்த ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்தால் சூரியன் மேஷ ராசியில் இருக்கும்!! இப்படி, சூரியனின் ஒரு வருட சுழற்சியை முன்னிட்டும், பூமத்திய ரேகைக்கு வரும் நாளைக் கணக்கிட்டும் நம் முன்னோர்கள் சித்திரை முதல் நாளை கொண்டாடி வந்தார்கள்.


சரி, "தமிழக புத்தாண்டை மாற்றுவது" என்று சட்டம் நிறைவேற்றியாயிற்று. மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலும் எப்போது, எப்படி தங்களது புத்தாண்டைக் கணக்கிடுறார்கள்?கேரளாவில் சித்திரை முதல் நாளிலும், கர்நாடகாவிலும் ஆந்திராவில் அவர்களது முறைப்படி சைத்ரா மாத முதல் நாளன்று யுகாதியைக் கொண்டாடுகிறார்கள்.சீனாவில் தங்களது ஜோதிட முறைப்படி தங்கள் முதல் மாதத்தின் அமாவாசை அன்றும், இஸ்லாமிய காலண்டரின் முறைப்படி "முகரம்" முதலாம் நாளன்றும் கொண்டாடுகிறார்கள்.


இப்படி, உலகின் பல நாடுகளிலும் புத்தாண்டை தங்களது ஜோதிடத்தின் முறைப்படியும், மதத்தின் முறைப்படியும் கொண்டாடி வரும் நிலையில், நாம் உழவர் திருநாளாம் பொங்கலன்று தமிழ் புத்தாண்டு நாளாகவும், திருவள்ளுவர் பிறந்த BC31ம் ஆண்டிலிருந்து தமிழர் ஆண்டு கணக்கிடப்படும் என்றும் அறிவித்திருப்பது புதுமையானதே!!


அதே புதுமை, பெருமையுடன் தமிழையும் வளர்க்கிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.


உதாரணத்திற்கு அரபு நாடுகளை எடுத்துக்கொள்வோம். அங்கே அரபி மொழியை கட்டாயமாக மாணவர்கள் அனைவரும் படித்தாக வேண்டும். இந்தியாவில் இருந்து ஒருவர் வேலே காரணமாக அரபு நாடுகளுக்கு மாற நேர்ந்தால், அவருடைய குழந்தைகளும் கட்டாயமாக அரபி மொழியை கற்றே தீர வேண்டும்.


ஆனால் இங்கே, 20 அல்லது 30 மதிப்பெண்கள் அதிகம் பெற பிரென்சு மொழியை எடுப்பது முறையாகி வருவதை என்னவென்று சொல்ல?


இன்று, உலகை ஆளும் மொழிகளாக உள்ள ஆங்கிலம், பிரன்சு, ஜெர்மன் போன்ற எந்த மொழிக்கும் தமிழைப் போல் 2000 ஆண்டு பழமையோ, திருக்குறள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்களோ கிடையாது.இன்று நாம் மேலாண்மே படிப்பில் படிக்கும் "ஸ்வாட் அனாலிஸஸை (SWOT Strength Weakness Opportunity Threat - Analysis )" திருவள்ளுவர் 2000 ஆண்டுகட்கு முன்பே கூறியாயிற்று...வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்


துணைவலியும் தூக்கிச் செயல்


என்னும் குறள் "ஸ்வாட் அனாலிஸஸைத்" தான் குறிப்பிடுகிறது.தமிழகத்தில் எத்தனை வீடுகளில் திருக்குறள் உள்ளது? ஒரு 10% சதவீதம் வீடுகளில் திருக்குறள் இருக்குமா என்பதே சந்தேகம் தான்!!சில நூறு கோடிகள் செலவில் டிவியை இலவசமாக கொடுக்கும் போது, வீட்டுக்கு வீடு திருக்குறளை இலவசமாக கொடுக்க 50 கோடி ருபாய் செலவு ஆகுமா?தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி நூலங்களுக்கும் தமிழ் இலக்கியங்களை இலவசமாக கொடுக்க மேலும் ஒரு 50 கோடி ருபாய் செலவு ஆகுமா? இப்படி தமிழ் இலக்கியங்கள் மீதான பற்றை மாணவப் பருவத்திலேயே வளர்த்துவிட்டால், தமிழும் வளருமே!!இந்தப் பணத்தை சித்திரை முதல் நாளன்று வரும் தொலைக்காட்சி விளம்பர வருமானத்திலேயே ஈட்டி விடலாமே!!வணிகத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால் தமிழை எப்படி வளர்ப்பது?அப்படி வணிகத்தை மையமாக கொண்டு செயல்படும் புத்தக நிலையங்களில் தமிழ் புத்தகங்களாக நாம் பார்க்க நேர்வது திருக்குறள், பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் மட்டுமே. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெங்கீழ்க்கணக்கு, தமிழ்க்காப்பியங்கள் போன்றவைக்கெல்லாம் இடம் கிடையாது.காப்பியங்கள் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, குறைந்தது திருக்குறளாவது இருக்க வேண்டுமே!!!இப்படி வீடு தோறும் திருக்குறள், மாணவர்கள் பார்வையில் தமிழ் இலக்கியங்கள் என்று குறைந்த அளவிலாவது தமிழை வளர்க்க திட்டம் வகுக்கவில்லை என்றால் தமிழ்ப்புத்தாண்டை மாற்றி அறிவித்ததே அர்த்தமற்றதாகி விடும்.


பல நூற்றாண்டுகளாக முன்னோர்களால் கொண்டாடப்பட்டு வரும் விழாவை இழந்த தமிழர்களுக்கு, "சித்திரை முதல் நாளை முன்னிட்டு.... " காட்டும் சிறப்பு (??) நிகழ்ச்சிகள் மட்டும் தான் மிச்சமாக நிற்கும்!!

Friday, April 10, 2009

நானோவை நினைக்கையிலே!!

மத்திய வர்க்கத்தினர்களிடம், "உங்கள் வாழ் நாள் கனவுகளாக நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள் என்ன?" என்று கேள்வியை வைத்தால் வரும் பதில்களில், "சொந்தமாக வீடு கட்டுவது, கார் வாங்குவது" போன்றவை கட்டாயமாக இடம் பெறும்.

அந்த கனவுகளில் ஒன்றான "கார் வாங்குவதை" நனவாக்கும் வகையாக அமைந்ததே "டாடாவின் ஒரு லட்ச ரூபாய் காரான நேனோவின் அறிவிப்பு"

இன்று ஒருவர், இருசக்கர வாகனத்தை 50ஆயிரத்திற்கு வாங்குகிறார் என்றால், மேலும் 50 ஆயிரம் செலவு செய்தாலோ அல்லது தவனைக்கடன் வாங்கினாலோ இந்தக் காரை வாங்கிவிடலாம்!!

கிராமங்களை எடுத்துக்கொண்டால், சொந்தமாகக் கார் வைத்திருந்தால் "மணிக்கொரு முறை" வரும் பேருந்திற்கோ, ஆட்டோவிற்கோ காத்திருக்க வேண்டியதில்லை. மேலும், வீட்டில் கார் இருப்பது வசதிக்காக என்பதுடன் அது ஒரு கௌவரமான விஷயமும் கூட..

கிராமங்களுக்குப் பொருந்தும் இந்தக் கருத்து நகரங்களுக்கும் பொருந்துமா?

ஏனென்றால், நானோ சம்பந்தமான பேச்சு வரும் போது கூடவே வருவது, "கார் வாங்குவதெல்லாம் சரி.. அதை எங்கே ஓட்டுவது.. எங்கே நிறுத்துவது".. என்பதும் தான்.
சொந்த வீடு வைத்திருப்போர் என்றால் ஒரு கார் நிறுத்தும் அளவிற்கு இடம் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளலாம். அதுவே வாடகை வீட்டில் இருப்போர் என்றால் அவர்களது கையில் எதுவும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

சமீபத்தில், வாடகைக்கு வீடு தேடியவர்களுக்கு இந்த விஷயம் மேலும் புரியும். வீடு தேட ஆரம்பித்தால், நமக்கு வரும் கேள்வி, "வீட்டில் எத்தனை பேர் என்பதுடன் சேர்த்து, என்ன வாகனம் வைத்துள்ளீர்கள்" என்பது தான்."இரு சக்கர வாகனம் என்றால் உள்ளே நிறுத்தலாம், கார் என்றால் நிறுத்த இடமில்லை" என்பதே நமக்குக் கிடைக்கும் பதிலாக இருக்கும். அப்படியே, 4000 ரூபாய் என்ற அளவில் வாடகைக்குத் தேட ஆரம்பித்தால், கார் நிறுத்த இடத்துடன் வீடு கிடைப்பது இடத்திற்கேற்ப 9000 ரூபாயில் தான்.

மாசம் 4000 ரூபாய் தவனை தானே பரவாயில்லை என்று நினைத்து காரை வாங்கினால், அதை நிறுத்துவதற்கே மேலும் 4000 ரூபாய் செலவாகும் என்பதை என்னவென்று சொல்ல.. இத்துடன் பராமரிப்பு செலவு வேறு உள்ளது...

"சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்" என்னும் பழமொழி தான் இங்கே ஞாபகத்திற்கு வருகிறது...

நம்ம ஊர் போக்குவரத்து நெரிசலை நினைக்கும் போது, இருசக்கர வாகனத்தில் செல்வதற்குப் பதிலாக காரில் செல்வது கொஞ்சம் பரவாயில்லை எனலாம். ஆனால், ரெண்டு கார் இருக்கும் இடத்தில், நாலு கார் வரும் போது சாலை நெரிசலின் நிலைமை என்னவாகும்? இதற்கிடையில், பஸ்ஸில் தொங்கிக் கொண்டே செல்வோரின் நிலைமை பற்றியோ அல்லது காற்று மாசடைவதைப் பற்றியோ எவரும் கவலைப்பட போவதில்லை!!

அப்படி போகும் இடத்தில் காரை எங்கே நிறுத்துவது?

சென்னையின் தி.நகர், கோவையின் பெரியகடைவீதி போன்ற பகுதிகளில், இருசக்கர வாகனங்களை நிறுத்தவே இடமில்லை என்னும் போது கார்களை எங்கே நிறுத்துவது?
"தி.நகர் போன்ற இடங்களில் பல அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் (Multi level parking system) அமைக்கப்படும்" என்ற அரசின் அறிவிப்பு இன்னும் அறிவிப்பாகவே உள்ளது!!

ஒவ்வொரு புறமும் 6ல் இருந்து 8 லேன் வரை உள்ள அகல சாலைகளைக் கொண்ட துபாய், சிங்கப்பூர் போன்ற நகரங்களிலேயே அனைவரையும் பஸ், மெட்ரோ ரயில் போன்றவைகளை தான் உபயோகிக்கத் தூண்டுகிறார்கள். கார்கள் பெருகுவதைத் தடுக்க சிங்கப்பூரில் அதிக வரி விதிப்பதும், துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கே ஓரிரு வருடங்கள் செலவாகிறதென்பதும் தெரியவருகிறது.

நம் ஊரிலோ, எல்லாம் அப்படியே நேரெதிர்!!

இப்படி பல கேள்விகளுடன் நமக்கு வரும் இன்னோரு கேள்வி, மற்ற கார் நிறுவனங்கள் எல்லாம் 2- 3 லட்சத்திற்கு அதிகமாக கார்களின் விலையை நிர்ணயிக்கும் போது டாடா நிறுவனத்திற்கு மட்டும் இந்த விலை எப்படி சாத்தியமாகிறது என்பது தான். அதற்கு அரசு கொடுக்கும் வரிச்சலுகைகள், குறைந்த வாடகையில் நிலம், புதிய தொழில்நுட்பம் எல்லாம் இருந்தாலும், குறைந்த விலையில் கார்களை விற்பதில் கிடைக்கும் வாடிக்கையாளர்களின் நீண்டகால நம்பகத்தன்மையே பெரிய லாபமாகும்.

அது எப்படி?
சைக்கிள் வாங்கியவர் அடுத்து குறி வைப்பது மொபட் வாங்கவே, மொபட் வைத்திருப்பவர் ஆசைவைப்பதோ அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தின் மீது தான். அது போல, இப்போது அறிமுகமாகும் ஒரு லட்ச ரூபாய் காரோ நுழைவோருக்கான கார் ( entry model ). இதனை வாங்கியவர் யாரும் அதோடு நிறுத்தப் போவதில்லை.. ஏசி பொருத்திய கார், சென்ரல் லாக்கிங் வசதி கொண்ட கார், அதிக திறன் கொண்ட கார் என்று செல்லும் போது, யாருக்கு லாபம்?

இந்தியாவில் அறிமுகப்படுத்தி இந்த நானோ திட்டம் வெற்றி அடைந்தால், அதை ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, லத்தின் அமெரிக்கா போன்ற பகுதிகளில் உள்ள வளரும் நாடுகளிலும் செயல்படுத்த முடியும். அதுவே டாடா நிறுவனத்தை கார் உலகில் ஒரு அசைக்க முடியாத சக்தியாகவும் உருவெடுக்க வைக்கும்.
இப்படி ஒரு திட்டம் தான் டாடா நிறுவனத்தின் நானோ கனவு!!

இந்தக் கனவுடன் சேர்த்து "அதிகமானோர் உட்கார்ந்து பயனிக்கும் படியாக அதிக பேருந்துகளை தயாரிப்பது" என்று ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்தினால், "பேருந்தில் கூட்டமில்லாமல் உட்கார்ந்து செல்வது எப்போது" என்று ஏங்கும் மக்களுடைய கனவும் நினைவாகும்..

இப்படி செய்தால், டாடாவும் அனைவருடைய நினைவிலும் நீங்காமல் நிற்கும். இல்லை என்றால், டாடாவையும் மற்றுமோர் வெளி நாட்டு "வியாபார" நிறுவனம் போலவே ஒப்பிட நேரிடும்!!

Monday, April 6, 2009

முதன்முறையா வாக்களிக்க ஆசை தான்!! ஆனா....


"இந்தியப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை நடைபெறும்" என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து நாடெங்கிலும் தேர்தல் பற்றிப் பேச்சு தான்!!


யார் யாருடன் கூட்டு? எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதி ஒதுக்கீடு? என்பது போன்ற விவாதங்களுடன் சேர்ந்து கொள்வது "முதன்முறையாக வாக்களிக்கும் 10கோடி பேரின் வாக்கு யாருக்கு?" என்பதும் தான்!!


இது போன்ற விவாதங்களில் இளைஞர்களின் பங்களிப்பு, முன்பு எப்போதையும் விட இந்த முறை மிக அதிகமாகவே பார்க்க முடிகிறது. அதற்கு, ஆர்க்குட், ஃபேஷ்புக் போன்ற சமூக வலையமைப்பு நிறுவனங்கள், ப்ளாக்கர் போன்ற வலைப்பதிவுச் சேவை நிறுவனங்கள் போன்றவற்றின் வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாகும்


நாட்டின் மீது அக்கறை, வாக்களிக்கும் ஆர்வம் போன்றவை இளைஞர்களுக்கு அதிகமாகவே இருந்தாலும், அது எந்த அளவிற்கு வாக்குச் சாவடி வரை அழைத்துச் செல்லும்?


கேள்விக்குக் காரணம், 18 முதல் 24 வயதுள்ள இளைஞர்கள் சொந்த ஊரில் இருப்பது மிகவும் அரிதானதே!!


இன்று பெரும்பாலான இளைஞர்கள் வேலை, வேலை தேடல், கல்லூரிப் படிப்பு போன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக வசிப்பது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் தான். அவர்களது வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்றவை பதிவு செய்திருப்பதோ சொந்த ஊரில்!!


இவர்கள் தங்கள் சொந்த ஊரிற்குச் சென்று வாக்கைப் பதிவு செய்வதிலோ பல நடைமுறை சிக்கல்கள்!!


தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தேர்தல் நடக்கவிருப்பது மே 13, புதன்கிழமை.


அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தாலும், தனியார் நிறுவனங்கள் அதை அமலாக்குமா? தனியார் நிறுவனங்களின் அறிவிப்போ, "வாக்களிக்கும் விருப்பம் உள்ளோர் விடுமுறை எடுத்து கொள்ளலாம்" என்றே இருக்கும். இது, பொது விடுமுறை போன்று இருக்காது. அப்படியே, விடுமுறை அறிவித்தாலும், தங்கள் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் நாளில் விடுமுறை கிடைக்குமா? என்பது வெளிமாநிலத்தோரின் கேள்வியாக இருக்கும்.


சரி, விடுமுறை அறிவித்தாலும் ஊருக்குப் போக டிக்கட் கிடைக்குமா? என்பது அடுத்த கேள்வி..


சென்னையில் தோராயமாக, 5 லட்சம் பேர் வெளியூர் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொன்டாலும், அனைவரும் ஊருக்குச் செல்ல ரயிலிலோ, பேருந்திலோ டிக்கட் கிடைப்பது கடினமான ஒன்று. சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களையும் கணக்கில் வைத்தாலும் டிக்கட் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டாது. சொகுசுப்பேருந்து, அரசு விரைவிப்பேருந்து போன்றவைகளையும் சேர்த்தால் மேலும் ஒரு 20 ஆயிரத்தைத் தொடலாம்.


வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் புதுவைக்கோ அல்லது வேலூருக்கோ செல்ல வேண்டுமென்றாலே கூட்டத்தால் கோயம்பேடே அலறும்..இது போன்ற நாட்களில் சொல்லவே வேண்டாம்!! ஊருக்குச் சென்றுவர குறைந்தது 500 ரூபாய் செலவாகும் என்பது வேறு விஷயம்!!


இது சென்னைக்கு மட்டும் அல்ல, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி என தமிழக நகரங்கள் மற்றும் மும்பை, தில்லி, கொல்கொத்தா, பெங்களூரு, ஹைதராபாத் என அனைத்து பெரு நகரங்களுக்கும் பொருந்தும்.


பிறகு எப்படி முதன்முறையாக வாக்களிக்கும் தகுதி உள்ளோர் அனைவரும் வாக்களிப்பது?


இந்த வருடம், முதன்முறையாக வாக்களிக்கும் தகுதி உள்ளோர் 10 கோடிப்பேர் என்றால் 2014ல் இது 13 கோடியாகி இருக்குமே!! இவர்களில் 10 சதவிதத்தினர் வாக்களிக்க முடியாமல் போனாலும் அது ஒரு பெரிய இழப்பே!!


100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுவதும், சில எம்பிக்கள் வித்தியாசத்தில் ஆட்சிகள் கவிழ்வதும் பல முறை பார்த்தாயிற்று!!


சரி, அனைவரும் வாக்களிக்க என்ன தான் தீர்வு?


வலைத்தளத்தின் உதவியை நாடுவது, வெளியூர்களில் உள்ளோர் மட்டுமல்லாது வெளி நாட்டில் உள்ளோரும் வாக்களிக்க ஒரு சிறந்த தீர்வாக முடியும்.


வலைத்தளத்தில் வாக்களிப்பதா? அது எப்படி சாத்தியம்?இருந்த இடத்திலேயே வங்கிகளில் வரவு செலவு வைப்பது, ரயில் டிக்கட் புக் செய்வது, பங்குச்சந்தைகளில் கோடிகளில் வர்த்தகம் செய்வது, பொருட்களை வாங்குவது, மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் என அனைத்தையுமே செய்யும் போது வலைத்தளத்தில் வாக்களிப்பதும் சாத்தியமே!தகவல் தொழில்நுட்பத்தில் பெரு வளர்ச்சி கண்டுவரும் நம் நாட்டில் இது முடியாது என்றால், உலகில் வேறெங்குமே முடியாது எனலாம்!!மின்னனு வாக்கு இயந்திரத்தின் வருகை பெரும் சர்ச்சைக்கு உள்ளான போதிலும், இப்போது அது நடைமுறையாகி விட்டது. அதுபோல, வலைத் தள வாக்களிப்பையும் நடைமுறைப் படுத்தமுடியும்!!"தகவல் தொழில்நுட்பத்தின் உதவியை நாடுவதில் தயக்கமோ", அல்லது "இளைஞர்கள் வாக்களித்து எங்கே "49(ஓ)"க்கு அதிகம் வாக்கு விழுந்து விடும் என்ற பயமோ" அரசியல் தலைவர்களுக்கு இருந்தால் அடுத்த தேர்தலிலும் "முதன்முறையா வாக்களிக்க ஆசை தான்!! ஆனா..." என்ற குரல்கள் மேலும் அதிகமாகக் கேட்க நேரிடும்!!


இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.

http://youthful.vikatan.com/youth/senthilstory06042009.asp

Friday, April 3, 2009

நாம் நாகரிகமானவர்களா? நதிகளைக் கேளுங்கள்!!


நாம் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாம் நாகரிகமானவராகக் (Civilised, Fashionable) காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டுகிறோம். உடுக்கும் உடை, உண்ணும் உணவு, சிகை அலங்காரம், ஓட்டும் ஊர்தி, உபயோகிக்கும் தமிழ் அல்லது தங்கலிஷ் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அடிக்கடி நமக்குள் வரும் சர்ச்சைகளில் பல, எது நாகரிகம்? எவர் நாகரிமானவர்? என்பதைச் சுற்றி இருப்பதைக் கவனிக்கிறோம்!!


உதாரணமாக, காதலர்தினத்தைக் கொண்டாடுபவர் தான் நாகரிகமானவர் அல்லது நாகரிகமில்லாதவர் என்பது போல.


சரி, நாகரிகம் என்றால் என்ன?


நாகரிகம் என்பது நாடோடிகள், பழங்குடிகள் போல இல்லாமல் பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையையும், விளையும் பொருட்களை வணிகம், மற்றும் இதர தொழில்களிலும் ஈடுபடும் சமூக நிலையையும் குறிக்கும் சொல்லாகும்!!


இந்தியத் துணைக்கண்டத்தில் எத்தனை நூற்றாண்டுகளாக நாகரிகமாக மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள்? முதலில் எங்கே குடியிருந்தார்கள்?


இது போன்ற கேள்விகளைக்கு விடை தேடினால், நாம் இந்தியத் துணைக்கண்டத்தில் தோராயமாக 4500 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், நம் முன்னோர்கள் அனைவரும் நதிகளின் படுகைகளிலேயே முதலில் வாழ ஆரம்பித்ததாகவும் தெரிகிறது!!


இதனாலேயே நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் தில்லி, ஆக்ரா, மதுரா, காசி, ஹம்பி, பாட்னா என அனைத்தும் நதிக்கரையிலேயை உள்ளதைக் காணலாம். தமிழ்நாட்டை எடுத்தால் சோழர்கள் காவிரிக்கரையிலும், பல்லவர்கள் பாலாற்றங்கரையிலும், பாண்டியர்கள் வைகையாற்றின் கரையிலும் ஆட்சி செய்தனர்!!


இதில், கங்கை, காவிரி போன்ற நதிகளைப் பாராட்டாத கவிகள் இல்லை எனலாம்!! தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் காவிரியின் பங்கு முதன்மையானது!! 2200 ஆண்டுகளுக்கு முன்னர், காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை இன்றும் நம் முன்னோர்களின் திட்டமிடல், ஆட்சித்திறன் போன்றவற்றை பறைசாற்றுவதாக உள்ளது!! காவிரியின் கொடையால் தான் தஞ்சை, குடந்தை போன்ற ஊர்கள் நெற்களஞ்சியங்களாக கூறப்பட்டது. மக்கள் பஞ்சம், பசி போன்றவை இல்லாமல் செழிப்பாக, நாகரிகமாக வாழ்ந்து வந்ததன் அடையாளம் தான் சோழர்களின் கட்டடக்கலையும், பிரமிப்பூட்டும் கோயில்களும்!!


இப்படி நமது பண்பாடு, நாகரிகம் போன்றவை மேம்படக் காரணமாக இருந்த நதிகளின் இன்றைய நிலை கவலைக்கிடமாக உள்ளது!! ஒன்று நதிகள் சீரழிக்கப்படுகின்றன அல்லது நதிகளின் பெயரால் மோதல்கள் நடக்கின்றன!!


இன்று நாம் நாகரிகமாக கருதும் ஒவ்வொரு செயல்பாடும், தயாரிப்பும் நதிகளை சீரழிப்பதாகவே உள்ளது. எகனாமிஸ்ட் என்னும் வாராந்திரி, "கங்கையைப் பாருங்கள், இந்தியாவில் ஏன் ஒவ்வொரு நாளும் 1000 குழந்தைகள் நீர் சார்ந்த தொற்று நோயில் இறக்கிறார்கள் என்பது தெரியும்" என்று கூறுகிறது. புனிதத் தலமாகக் கருதப்படும் காசியில், "கங்கையில் குளிப்பது 120 மடங்கு தீங்கானது" என்னும் ஆய்வறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.


தமிழகமும் இதற்கு எந்த வித்திலும் சளைத்ததல்ல. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகர்களின் மனிதக்கழிவுகளும், சாயப்பட்டறைக் கழிவுகளும் கலந்த காவிரி நீர் தான் கருர், திருச்சி போன்ற நகரங்களின் குடிநீர். பெரும் நகரத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கலாம், ஆனால் கொடுமுடி, முசிறி போன்ற ஊர்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் என்ன செய்வார்கள்!! அவர்களும் மனிதர்கள் தானே!! நெசவுத்தொழிற் கழிவு, காகிதாலைக் கழிவு, தோல் தொழிற்சாலைக்கழிவு என அனைத்துமே கலப்பது ஏதாவது ஒரு நதியில் தான்!!


சென்னையில் கூவம் என்பது நதியின் பெயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
நமது அன்றாடப் பயன்பாட்டில் சென்னையில் உள்ள சாக்கடைகளுக்குப் பெயர் கூவம்!!
கூவம், அடையாறு, விருகம்பாக்கம் கால்வாய், பக்கிங்கம் கால்வாய் என அனைத்துமே கூவம் தான்!! நூறு ஆண்டுகளூக்கு முன்பு கூட கூவத்தில் குளிப்பதும், படகுச் சவாரியும் நடந்தது என்றால், இன்று யாரும் நம்பத் தயாராக இல்லை!!


இன்று, நதிகளின் பெயரால் போராட்டங்கள் நடக்காத மாநிலங்களே இல்லை என்பது இன்னோரு விஷயம். மனித நாகரிகத்தின் உச்சமாகக் கருதப்படும் நமது ஜனநாயகமும், அரசியலமைப்பும் நம்மை ஆள்பவர்களும் நதிகளால் வரும் மோதல்களை தடுக்கவோ அல்லது உடன்பாடு ஏற்படுத்தவோ முயலவில்லை!!

ஐரோப்பாவில் உள்ள டன்யூப் (Danube) நதி பத்து நாடுகளில் பாய்ந்து செல்கிறது. அவர்கள் காவிரி அளவிற்கோ நர்மதா அளவிற்கோ சண்டை இட்டுக் கொள்வதில்லை!! இப்போது கூறுங்கள், யார் நாகரிகமானவர்கள்? யார் பண்பட்டவர்கள்?

நமது பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் போன்றவை குடும்ப அமைப்பு, உடுக்கும் உடை போன்றவற்றால் மட்டும் முடிந்து விடுவதில்லை!!


சரி.... நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்? நடக்கப்போகும் தேர்தல், நாம் நாகரிகமானவர்களாக மாற நமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பு!!
இந்தியாவை ஆளும் எண்ணம் கொண்ட இரண்டு அல்லது மூன்று அணிகளின் தலைவர்களிடமும், "நதிகளை மீட்க என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்பதுத் தெரிந்து கொள்வோம், என்ன இலவசங்கள் வைத்திருக்கிறார்கள் என்றல்ல!!".
அவர்கள் கொடுப்பதாகக் கூறும் இலவசங்களின் தயாரிப்பு, நம் நதிகளை மேலும் மாசாக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் வேண்டாம்!!


அவர்களின் திட்டங்களின் அடிப்படையில் வாக்களிப்பதே, நம்மை, நம் நாகரிகத்தைப் பாராட்டி சீராட்டி வளர்த்த நதிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்!!


இல்லையென்றால், ஒருமுறை "காட் மஸ்ட் பி கிரேசி" என்ற திரைப்படத்தைப் பாருங்கள். பிறகு பதில் கூறுங்கள்.. யார் நாகரிகமானவர்கள்.. பழங்குடிகளா அல்லது நகரத்தாரா என்று!!


இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.

http://youthful.vikatan.com/youth/senthilstory02042009.asp

Related Posts with Thumbnails