Saturday, August 29, 2009

21ம் நூற்றாண்டின் ஹாலோகாஸ்ட்.

HOLOCAUST என்றோரு வார்த்தையை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.


இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் கட்டவிழ்த்துவிட்ட கோரத்தாண்டவத்தின் பெயர் தான் ஹாலோகாஸ்ட். இதைத் தமிழில் கூறவேண்டும் என்றால் பெரும் இனஅழிப்பு!!. இது ஏதோ அறுபது சொச்ச ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதென்று நினைக்கவேண்டாம். இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
எங்கே நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை.

சிண்ட்லர்ஸ் லிஸ்ட், பியானிஸ்ட் போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது ஹாலோகாஸ்ட் என்றால் என்னவென்று புரியும்.

ஆனால், அப்பொழுது ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம் எல்லாம் கிடையாது. ஆனால் இன்றோ எல்லாமே உள்ளன.. ஆனால் ஏன் எவருடைய காதுகளுக்கும் எட்டவில்லை?

அவர்கள் சொல்கிறார்கள், "பக்கத்தில் உள்ளவர்களுக்கே காது கேட்காத போது எங்களுக்கு எப்படிக் கேட்கும்?" என்று. யார் பக்கத்தில் உள்ளவர்கள்?

காது கேளாதவர்களுக்காக ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்கள் மனிதாபிமானமுள்ள பத்திரிக்கையாளர்கள்..

தங்கமணிபிரபுவின் பதிவிலுள்ள காணொளியைப் பாருங்கள்.

காணொளியில் உயிரற்றுக்கிடப்பவர்களும் மனிதர்கள் தான்? உயிரெடுத்தவர்கள்?

"நாம் என்ன செய்ய முடியும்" என்று கூறாமல் உங்கள் நண்பர்களுக்கும் இதை அனுப்புங்கள். தெரிந்துகொள்ளட்டம் நவீன ஹாலோகாஸ்ட் என்றால் என்னவென்று.

பின்னூட்டமிடும் நேரத்தில் இந்தப் பதிவையோ தங்கமணிபிரபுவின் பதிவையோ நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பிவிடலாம்..

Thursday, August 27, 2009

இந்தூஸ்தான் மே ஹிந்தி பாத் கரோ!!

"இங்கிலாந்து மே ஆங்கிரேஷி பாத் கரோ, இந்தூஸ்தான் மே ஹிந்தி பாத் கரோ!!" என்று என்னிடம் ஒரு அன்பர் கூறியது ஜான்சியில்!

நாம் ஏடுகளில் படித்துத் தெரியாத பல விடயங்களையும் நமக்குச் சொல்லிக் கொடுக்க வல்லது பயணங்கள். அதுவும் தெரியாத ஊர், அறியாத மொழி என்றால் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களுக்கு அளவே கிடையாது!

சில வருடங்களுக்கு முன் பணி நிமித்தமாக சில மாதங்கள் ஜான்சியில் தங்க வேண்டியிருந்தது. தில்லிக்கு இரயிலில் சென்றிருக்கும் அனைவருக்கும் ஜான்சியை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். மேலும், ஜான்சி என்றால் நினைவிற்கு வருவது ஜான்சி ராணி லக்ஷ்மி பாயும் அவரது விடுதலைப் போராட்டமும்.

ஜான்சி மத்திய பிரதேச, உத்திரப் பிரதேச எல்லையில் அமைந்த நகரம். ஜான்சி, ஒரு திசையில் வழிப்பறிக் கொள்ளையில் புகழ்பெற்ற சம்பால் பள்ளத்தாக்கும், ஒரு திசையில் கான்பூரும், மற்றோரு திசையில் காஜூராஹோ செல்லும் வழியும், நகரைச் சுற்றி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பீடபூமி நில அமைப்புள்ள ஊர். புந்தில்கண்ட் என்ற அழைக்கப்படும் பகுதிக்கு தலைநகர் என்று ஜான்சியை கூறுகிறார்கள். இங்குள்ள மக்கள் புந்தில்கண்டி என்ற வட்டார மொழியையும், இந்தியையும் பேசி வருகின்றனர்.

ஜான்சி இரயில் நிலையத்தில் என்னை அழைக்க வந்திருந்த சக ஊழியர், "ஜான்சி நகரைச் சுற்றி வரும் பொழுது கொஞ்சம் கவனமாக இருக்கவும். இங்கே சர்வ சாதாரணமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதைப் பார்க்க முடியும்" என்று கூறியது எனக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தது. அலுவல வேலை நேரத்தில் சக ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் பேசி வந்த நான், தங்கியிருந்த இடத்திலும் ஏதோ தெரிந்த இந்தியை வைத்து சமாளித்தேன்.

ஒரு வார காலமாக சப்பாத்தியும் பருப்பையும் சாப்பிட்டு வந்ததால் தங்கியிருந்த விடுதியில் "இங்கே இட்லி தோசை எல்லாம் கிடைக்காதா?" என்றேன். அவர், இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சதர் பஜார் என்ற இடத்தில் "மெட்ராஸ் மெஸ்" என்ற பெயரில் ஒரு கையேந்திபவன் இருப்பதாகக் கூறினார். சரி, ஜான்சி நகரைச் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும், நம்ம இட்லி தோசையைப் பார்த்த மாதிரியும் இருக்கும் என்று சதர் பஜாருக்கு நடக்க ஆரம்பித்தேன்.

ஜான்சி நகரச் சுவரெங்கும் ஒட்டப் பட்டிருந்த போஜ்பூரி மொழிப் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்த படியே நடக்க ஆரம்பித்த எனக்கு, வழியை மறந்து விட்டேனோ என்று தோன்றியது. ஆங்கிலம் தெரிந்த ஒருவரைக் கேட்க வேண்டும் என்று எதிரே யாராவது நன்றாக உடையணிந்தவர் (??)வருகிறாரா என்று பார்த்த படியே நடந்தேன். நான் எதிர்பார்த்தது போல ஒருவர் வர அவரிடம் நான்,

"எக்ஸ்கியூஸ் மி, கேன் யூ ப்ளீஸ் டெல் மீ ஹவ் டு கோ டு சதர் பஜார்" என்றேன்..
நான் சற்றும் எதிர்பார்ககாத படி என் சட்டை எட்டிப் பிடித்தவர்,

"இங்கிலாந்து மேன் ஆங்கிரேஷி பாத் கரோ, இந்தூஸ்தான் மேன் ஹிந்தி பாத் கரோ" என்றவர், "தும் மதராஸி ஹே கியா?" என்றார்.
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இந்திலேயே நேராக சென்று வலப்பக்கமாகத் திரும்பிச் செல்லுமாறு கூறினார்.

சில நிமிடங்களில் சதர் பஜாரில் உள்ள மெட்ராஸ் உணவகத்தை அடைந்தேன். அங்கே பணியாற்றி வந்த தமிழன்பர்களிடம் எனக்கு நடந்ததை விவரித்த போது இங்கே இந்தியில் பேசுவதையே அனைவரும் விரும்புவதாகவும், கூடிய விரைவில் இந்தியைப் பயிலுமாறும் அறிவுறுத்தினர்.

நாம் செல்லும் ஊரில் என்ன மாதிரியான மக்கள் உள்ளனர், என்ன மொழி பேசுவார்கள் எனபதை எல்லாம் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது. மேலும், பள்ளிக் காலத்தில் இந்தி கற்றிருக்க வேண்டுமோ என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.

ஆங்கிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மும்பை, தில்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வேண்டுமானால் சமாளிக்க முடியும். தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் செல்லும் பொழுது ஆந்திர எல்லை வரையில் மட்டுமே ஆங்கிலம் செல்லும். மகாராஸ்டிராவில் உள்ள பல்லார்ஷாவை தொட்டுவிட்டால் இந்தி தான்.

அதே சமயம் என் சட்டையைப் பிடித்த அன்பர் தமிழகத்துக்கு வந்தால் என்ன செய்வார்? ஏதாவதொரு மாநகரத்தில் வேலை வேண்டி விண்ணப்பித்தால் இந்தியை மட்டும் வைத்துச் சமாளிக்க முடியுமா? கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா ஓரளவு வளர்ந்து வருவதற்கும், தொழில்துறையில் முன்னேறுவதற்கும், இந்தியர்கள் வெளிநாட்டில் சிறப்பாக பணியாற்றுவதற்கும், ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைத் துறைகளில் முன்னேறி வருவதற்கும் நம் ஆங்கில அறிவு ஒரு முக்கிய காரணம்.

அண்மையில் நமது மத்திய அமைச்சர் கபில் சிபல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கூறியது கவனிக்கத் தக்கது.

நம் நாடு ஆங்கிலேயர்கள் கைக்கு வரும்வரை ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய சமஸ்தானங்களையும், நாடுகளையும் கொண்டதாகவே இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, சிந்தி, காஷ்மீரி என பிராந்திய மொழிகளே அந்தந்த நாட்டின் ஆட்சிமொழியாகவும் இருந்தது.

நம் நாட்டின் விடுதலைக்குப் பின்னரே இந்தி பிரதானமான ஆட்சி மொழியாக்கப்பட்டது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 40% சதவிகிதமும் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மற்ற 60 சதவிகிதமும் உள்ளனர். இன்றும் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது பீகார், சட்டீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம் என 9 மாநிலங்களில் மட்டுமே!! மற்ற 19 மாநிலங்களில் பிராந்திய மொழிகளே ஆட்சிமொழியாக உள்ளன.

மேலும் இங்குள்ள ஒவ்வொரு மொழியும் தனிப்பட்ட எழுத்து வடிவமும், சிறப்பான இலக்கண முறையும் கொண்டவை. அப்படி இருக்க தாய்மொழியையும் பயில்வதும் வளர்ப்பதும் ஒவ்வொருரின் கடமை தானே!ஆகவே இந்தியைக் கற்றே தீர வேண்டும் என்று யாராலும் கட்டாயப்படுத்த முடியாது!!


அதே சமயம் நாட்டில் உள்ள அனைவரும் பேசும் படியாக ஒரு மொழி தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது எந்த மொழி என்பதையும், அந்த மொழியைக் கற்பிப்பதில் என்ன மாதிரியான அனுகுமுறைக் கடைப்பிடிக்கப்போகிறோம் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று.

இந்திப் பாடத்தை பள்ளிகளில் புகுத்துவது என்று முடிவெடுத்தால் அது தேர்வுகள் இல்லாத பாடமாக இருந்தால் நன்றாக இருக்கும். அதைவிடுத்து தமிழ் அல்லது இந்தி என்று அறிவித்தால், 20 அல்லது 30 மதிப்பெண்கள் அதிகம் பெறுவதற்காகத் தமிழ் போன்ற தாய்மொழிகளைப் புறக்கணிக்கும் போக்கே வளரும்.

என்ன செய்யப்போகிறார்கள் நம்மை ஆள்வோர்?

எனக்கு ஜான்சியில் நேர்ந்ததைப் போல பிறர்க்கு நேரவும் கூடாது, தாய்மொழியைப் போற்றவும் பாராட்டவும் வேண்டும், உலக அரங்கில் போட்டியிடும் அளவிற்கு ஆங்கிலப் புலமையும் நமக்கு வேண்டும்.

நம் முன் சூடாக பாயாசம் உள்ளது. பாயாசமும் சாப்பிட வேண்டும், நாக்கும் சுட்டுவிடக்கூடாது, மீசையிலும் ஒட்டக்கூடாது. எப்படி?

உங்கள் கருத்துகளைக் கீழே பதியுங்கள்.

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் வாக்களியுங்கள்!!

...

Saturday, August 22, 2009

படைப்புகளை விமர்சனங்களால் கொல்லாதீர்கள்!

நீங்கள் மடிக்கணினியைப் பயன்படுத்துகிறீர்களா? உங்களிடம் ஒரு கேள்வி!

அது உங்கள் கைக்கு வரும் வரை என்ன நடக்கிறதென்று தெரியுமா?

முதலில் சந்தையைப் பற்றிய ஆராய்ச்சி நடத்த வேண்டும். அதில், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் என்னென்ன மாறுதல்கள் வரும், மக்கள் விருப்பம் தேவை என்னென்ன, தொழில் நுட்ப மாற்றங்கள் என்ன என்று ஆராய வேண்டும். பிறகு, போட்டி நிறுவனத்தினர் என்ன செய்கிறார்கள் அவர்கள் பொருள்கள் என்னென்ன, நாம் வித்தியாசமாக என்ன செய்யப்போகிறோம், நம் பொருளை ( இங்கே மடிக்கணினி ) எப்படி சந்தைப்படுத்துவது போன்றவற்றை முடிவெடுக்க வேண்டும்.

இதை கருவுடன் ஒப்பிடலாம் ( Product Conceptualisation ).பிறகு அந்தப் பொருளை எங்கே தயாரிப்பது, தேவையான உபகரணங்களை எங்கே தயாரிப்பது, எத்தனை பேரை வேலைக்கு அமர்த்துவது போன்றவற்றை திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும். ( Planning )


பொருள் தயாரான பிறகு பொருளைச் சந்தைக்கு வருவதைப் பற்றிய விளம்பரங்களைத் தயாரித்தல், சந்தையில் போதிய எதிர்பார்ப்பு வந்த பிறகு பொருளை சந்தையில் வெளியிடுவது. ( New Product Introduction )சந்தைக்கு வந்த பொருள் ஆரம்ப நிலையை எப்படிக் கடக்கிறது என்பதைப் பொருத்தே அந்தப் பொருளின் வெற்றியும். அதற்காகவே, ஒரு பொருள் சந்தைக்கு வரும்பொழுது அந்தத் துறை சார்ந்த விமர்சகர்களை வைத்து விமர்சிக்கவும் செய்வார்கள்!

பிறகு அந்தப் பொருளை முதலில் வாங்குவோரின் வாய் வார்த்தையின் மூலமாக பொருள் பிரபலமடைய ஆரம்பிக்கும். அதுவே சில வாரங்கள் கழியும் போது வெற்றியும் அடையும். இங்கே தயாரிக்கும் பொருள் வெற்றியடைவதும் தோற்பதும் வெளியாகும் ஆரம்ப நிலையை எப்படிக் கடக்கிறது என்பதைப் பொருத்தே அமைகிறது!!

இது மடிக்கணினிக்கு மட்டுமல்ல எல்லா பொருள்களுக்கும் இதே நிலை தான்!

இது திரைப்படங்களுக்கும் பொருந்தும்!

ஒரு படத்தின் இயக்குனர் கதையை எடுப்பதற்கு முன்னர் குறைந்தது சில ஆண்டுகளாவது மனதிலேயே ஓட்டி, அந்தக் கதையுடனே வாழ்கின்றனர். தேவர்மகன், குணா, அன்பே சிவம் போன்ற படங்களின் கதையெல்லாம் தன் மனதில் பத்தாண்டுகளுக்கும் மேலாக இருந்தது என்று உலக நாயகன் கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது நினைவிற்கு வருகிறது.

இது அவருக்கு மட்டுமல்ல, எல்லா இயக்குனர்களுக்கும் பொருந்தும்!

அப்படி பல ஆண்டுகளாக நினைத்திருந்த கதையை படமாக எடுக்கும் இயக்குனர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும்? தன் பொருள் வெற்றியடைய வேண்டும் என்பதாகவே இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் இன்று அப்படி வெளியாகும் படங்கள் ஆரம்ப நிலையைக் கடக்க முடிகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்!

என்ன காரணம்?

படங்கள் அவ்வளவு மோசமாக இருக்கிறதா? இல்லை மோசமாக இருக்கிறதென்ற விமர்சனம் பரவுகிறதா?

ஒரு சில படங்கள் மோசமாக இருக்கிறதென்றாலும் எல்லா படங்களுமா மோசமாகவா இருக்கிறது?

இல்லை. நல்ல படங்களும் வருகிறது என்றால், பிறகு ஏன் நல்ல படங்கள் தோல்வியடைகின்றன?

விமர்சனமும் படங்கள் தோல்விக்கு காரணாக உள்ளது என்பதைத் தான் நான் இங்கே கூறவருவது. கடந்த இரண்டு வாரங்களாக இணைய தளங்களைப் பார்த்து வருகிறவராக இருந்தால் இது உங்களுக்குத் தெரியும்!

இயக்குனர் சேரன் இயக்கிய "பொக்கிஷம்" என்ற படத்தைக் குறைந்தது நூறு பேரும், நடிகர் விக்ரம் நடித்த "கந்தசாமி" என்ற படத்தைப் பற்றி ஏராளமான விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன! சில மாதங்களுக்கு முன்பு வெளியாகிய நாடோடிகள் என்ற படமும் விமர்சனங்களில் இருந்து தப்பவில்லை!


ஒரு படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகளை வளர்த்துவிட்டு, அந்தப் படம் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது நன்றாகவா உள்ளது?

நல்ல படங்கள் என்றால் ரசிகர்களுக்குப் பிடித்தே தீரும், வெற்றியடையும் என்றால் அன்பே சிவம் ஏன் பொருளாதார ரீதியாக வெற்றியடைவில்லை? கமலஹாசன் இயக்கிய விருமாண்டியைக் கொச்சியில் (தமிழில்) பார்த்த போது திரையரங்கில் இருந்த கூட்டம், ஓரிரு தினங்களுக்குப் பின் சென்னை சத்யம் திரையரங்கில் பார்த்த போது இல்லை!

பிறகு தமிழில் உலகத்தரத்திற்கு படங்கள் வரவில்லை என்று கூறுவதை என்ன சொல்ல?

ஒரு படத்தை என்ன மனநிலையில் பார்க்கிறோம், தன்னுடன் படத்தை யார் பார்க்கிறார்கள், படத்தை எந்த மாதிரியான திரையரங்கில் பார்க்கிறோம், நம் ரசனை எவ்வாறு உள்ளது போன்றவையும் நம் கருத்தைத் தீர்மானிக்கிறது. அதனால் விமர்சனம் செய்யும் முன்பு படத்தில் உள்ள நல்ல கெட்ட விடயங்கள் அனைத்தையும் சீர்தூக்கி விமர்சனம் செய்வது நல்லது.

குறைந்தது பல கோடிகள் செலவழிக்கும் தயாரிப்பாளரையாவது மனதில் கொள்ள வேண்டும்.

வலையுலகில் விமர்சிப்பதால் படங்கள் தோல்வியடையுமா? என்றால் அதற்கும் வாய்ப்பிருக்கத்தான் செய்கிறது.

ஒரு பிரபல பதிவரின் விமர்சனத்தைத் தோராயமாக ஆயிரம் பேராவது பார்க்கிறார்கள். அந்த விமர்சனத்தைப் படிப்பவர்கள் குறைந்தது 10 பேருக்காவது மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் என்னாகும். இதுவே அந்த பத்தாயிரம் பேரும் மேலும் 10 பேருக்கு "மோசமான விமர்சனத்தை" மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் என்னாவாகும்?

இது மிகையாகத் தோன்றினாலும் இது தான் இன்று நடக்கிறது.


இப்படி பொறுப்பில்லாமல் விமர்சனம் செய்பவர்களுக்கும் திருட்டு விசிடி விற்பனை செய்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்? ஒரு படைப்பாளியின் குழந்தையை வரவேற்க முயலுங்கள்! இல்லையென்றால் அந்தக் குழந்தையை விமர்சனம் என்னும் ஆயுதத்தால் கொல்லாதீர்கள்!


இதுவே ஒவ்வொரு படைப்பாளியின் வேண்டுகோளாக இருக்கும்!
...

Saturday, August 15, 2009

எல்லாம் பரிந்துரை உலகமடா!!


பொழுதுபோக்கிற்கு ஆர்குட், பேஸ்புக். வேலைக்கென்று ஏதாவது இருக்கா?
"என்னடா மச்சான்! அந்த நிறுவனத்தோட கம்பனி வேலைக்கு முயற்சி பண்ணினியே என்னடா ஆச்சு?"
"எல்லாம் நேரக் கொடுமைடா.."
"ஏன்டா? என்னடா ஆச்சு?"
"எல்லா வேலையையும் தெரிஞ்சவங்களுக்கே கொடுத்துட்டாங்க போல!"

இந்தப் பேச்சு நம்ம நண்பர்கள் மத்தியில எப்பவுமே கேட்கற ஒன்னு தாங்க!
இது ஏதோ நிறுவனங்கள் நமக்கு துரோகம் செய்வதைப் போலத் தெரிந்தாலும், அந்த நிறுவனங்கள மேலயும் தப்பு இருக்கறதாத் தெரியலங்க.

ஏம்பா நீ என்ன HRகாரனா?ன்னு நீங்க கேக்கறது புரியுது. இல்லீங்க! நான் அந்தத் துறையில வேலை பார்க்கலீங்க.

ஓரிரு காலியிடங்கள நிரப்பறதுக்கு விளம்பரத்த வெளியிட்டு, தேர்வுகள நடத்தி, ஆட்கள நேர்முகத்துக்கு அழைப்பதுன்னு செலவு செய்யறதுக்கு பதிலா, அந்த நிறுவன ஊழியர்களின் சிபாரிசுல நேர்முகத் தேர்விற்கு வருகிற ஆட்கள் என்றால் செலவு குறைவு தானே!

அது மட்டுமா? என்ன தான் வெளி ஆட்களத் தேர்வு செய்யலாம்னு முடிவெடுத்தாலும், வேலை தேடுபவர்கள் போலிச் சான்றதழ்களைக் காட்டுவது, போலியாக வேலை அனுபவத்தைக் கூறுவது என்று ஏமாற்று வேலை நடப்பதால், வேலை தேடுபவரின் பின்புலத்தைச் சரிபார்ப்பதற்கு அதிக நேரம் செலவாகலாம்.

இது போன்ற விடயங்களுக்காகத் தான் பரிந்துரையை நாட ஆரம்பித்துள்ளன தனியார் நிறுவனங்கள்.

சரி, இப்படி தனியார் நிறுவனங்களில் காலியிடம் இருக்கிறதா? யார் யார் ஆட்களைத் தேடுகிறார்கள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?

இதற்கு ஓரளவு உதவும் தளம் தான் லிங்க்ட்இன்

பொழுதுபோக்கிற்கு எப்படி ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலையமைப்புத் தளங்கள் உள்ளதோ; அது போல தொழில்துறை, வேலை சார்ந்த விடயங்களுக்கு உருவாக்கப்பட்ட வலைத்தளம் தான் லிங்க்ட்இன். LINKEDIN

இந்தத் தளத்தில், நாம் நமது சுயவிவரங்களை உருவாக்க வேண்டும். உங்கள் பெயர், முகவரி, வேலை அனுபவம், படிப்பு, ஆர்வம், தனித்திறன் போன்றவற்றைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

பிறகு உங்கள் நண்பர்கள், பள்ளியில் உங்களுடன் பணிபுரிந்தவர்கள், முன்னாள் வேலை செய்த நிறுவனத்தில் உடன் வேலை பார்த்தவர்கள் என அனைவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதில் முக்கியமானது பரிந்துரை!

உங்களுடன் முன்னாள் மற்றும் இன்னாள் மேலாளர், சில திட்டங்களில் உங்களுடன் பணிபுரிந்தவர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் பரிந்துரையை வாங்கிக்கொள்வது உங்கள் சுயவிவரத்திற்கு மெருகூட்டும்.

இப்போது, ஒரு பிரபல நிறுவனம் ஆட்களைத் தேடுகையில் உங்களுக்கு கிடைத்திருக்கும் பரிந்துரையை வைத்தே உங்களுக்கு நல்ல அறிமுகம் கிடைத்து விடும். பின்புலத்தைச் சோதிப்பது கூட எளிதில் முடிந்துவிடும். உங்கள் முன்னாள் மேலாளர் நற்சான்றளித்திருப்பதை விட வேறென்ன வேண்டும்?

இது மட்டுமா? உயர்பதவியில், உங்கள் நண்பரின் நண்பர் இருக்கிறார் என்றால் அது உங்களுக்கும் நன்மை தானே!

ஏப்பா செந்திலு, வலைத்தளத்துல எல்லோருக்கும் தெரிய நம்ம சுயவிவரத்தை வெளியிடுவது சரியா?ன்னு நீங்கள் கேட்பது புரிகிறது! எந்த விவரத்தை வெளியிட நினைக்கிறீர்களோ அதை வெளியிடுங்கள். தற்போது வேலை தேடவில்லை என்றால் அதைக் கூட சுயவிவரத்திலேயே தெரியப்படுத்தவும்!


அமெரிக்க அதிபர் ஒபாமாவே இந்த லிங்க்ட்இன்னில் தனது சுயவிவரத்தைச் சேர்த்துள்ளார் என்பது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்! காரணம் இதில் கிடைக்கும் தொடர்புகளே!

எனக்கும் ஓபாமாவுக்கும் என்ன தொடர்பென்று தெரியவேண்டுமா? கீழே உள்ள படத்தைப் பார்க்கவும் :)


பொழுதை ஆர்குட், ஃபேஸ்புக், பிளாக்கர் என்று போக்கும்பொழுது, நம் எதிர்காலத்திற்கும் கொஞ்சம் நேரத்தைச் செலவிடலாம் தானே?

எத்தனையோ செஞ்சிட்டோம் இத செய்ய மாட்டோமா?

இந்த பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் வாக்களியுங்கள்! இதுவும் பரிந்துரை தானே :))

Friday, August 14, 2009

வெளிநாட்டுப் பயணமா? - எச்சரிக்கை

"மிஸ்டர், போதிய கோப்புகள் இல்லாததால் உங்களை விமானத்தில் அனுமதிக்க முடியாது" என்று கூறினால் எப்படி இருக்கும்? இத்தனைக்கும் உங்களிடம் சரியான விசாவுடன் கூடிய கடவுச்சீட்டு, பயணச்சீட்டு, அழைப்பிதழ், தங்குமிடம் என அனைத்தும் இருக்கிறது! என்ன செய்வீர்கள்?

சென்ற வருடம் ஜூன் மாதத்தில் வேலை விடயமாக ரோமானியாவிற்கு செல்லுமாறு கூறினார்கள். ஏற்கனவே இந்த நாட்டிற்குச் சென்றிருந்தாலும், இந்த முறை ஆர்வம் அதிகமாகவே இருந்தது. ஜூன் மாதம் என்பதால் வசந்த காலம் ஆரம்பித்திருக்கும். சூரிய ஒளியும் இரவு 9 மணி வரையில் இருக்கும். பல இடங்களையும் சுற்றிப்பார்க்கலாம் என்பதால் எனக்கு ஒரே மகிழ்ச்சி! ( அப்போ வேலை பார்க்க போகலியானு நீங்க நினைக்கறது புரியுது)


ரோமானியாவில் நான் செல்ல வேண்டிய க்ளூச் என்னும் ஊரிற்குச் செல்ல பல வழிகள் இருந்தும் நான் துபாய், பிராங்க்பர்ட் வழியாக பயணச்சீட்டைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். துபாய் வழியாக திரும்பும் போது அங்கு 8 மணி நேரத்திற்கு அதிகமாக இடைவெளி இருக்கும்படி பதிவு செய்து கொண்டால் துபாயைச் சுற்றிப் பார்க்க விசா கிடைக்கும் என்பதால் துபாய் வழியைத் தேர்வு செய்தேன். ( நம்ம வடிவேலு தான் துபாயப் பத்தி நிறையா சொல்லியிருக்காரே!)
ஆக, எனது பயண வழி சென்னை - துபாய்- ஃப்ராங்க்ஃபர்ட் - க்ளூச்-ஃப்ராங்க்ஃபர்ட்- துபாய்- சென்னை என இருந்தது. சென்னை - துபாய்- ஃப்ராங்க்ஃபர்ட்; ஃப்ராங்க்ஃபர்ட்- துபாய்- சென்னை மார்க்கம் ஒரு விமானத்திலும், ஃப்ராங்க்ஃபர்ட் - க்ளூச்-ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்கம் ரோமானியா நாட்டைச் சேர்ந்த வேறொரு விமானத்திலும் பயணச்சீட்டைப் பதிவு செய்திருந்தனர்.


சென்னையில் எனக்கு ஃப்ராங்க்ஃபர்ட் வரையிலான விமான நுழைவுச்சீட்டு மட்டுமே கொடுத்தனர். ரோமானியா செல்ல வேண்டிய நுழைவுச்சீட்டை ஃப்ராங்க்ஃபர்டில் தான் வாங்க வேண்டும்.சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை நான்கு மணிக்கு கிளம்பிய விமானம் 6:30 மணியளவில் துபாயை அடைந்தது. வழக்கமாகவே துபாய் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் அதிகமாக இருக்கும். அதுவும் ஐரோப்பா செல்லும் விமானங்கள் என்றால் அது இன்னும் அதிகமாக இருக்கும். எனக்கு ஃப்ராங்க்ஃபர்ட் செல்வதற்கான அடுத்த விமானம் 8 மணிக்கு என்பதால், கொஞ்சம் விரைவாக காலைக் கடன்களை முடித்துவிட்டு நான் ஏற வேண்டிய இடத்திற்கு 7 மணிக்கே சென்று விட்டேன்.


அங்கே கதவைத் ( கேட் ) திறந்தனர். முதலில் வயதானவர்கள் வரிசையில் நின்றனர், பிறகு நான். எனது முறை வந்தது, அங்கே நின்றிருந்த பரிசோதகரிடம் எனது கடவுச்சீட்டு மற்றும் நுழைவுச்சீட்டைக் கொடுத்தேன். அவர்


"உங்களிடம் சரியான விசா இல்லியே" என்றார்.
"சரியான விசா இருக்கிறதே! எனக்கு ரோமானியா செல்வதற்கான விசா உள்ளதே! அதுவும் மல்டிபுல் என்ரி" என்றேன்.
"இல்லை நீங்கள் செல்வது ஃப்ராங்க்ஃபர்ட் வழியாக. ஆகவே உங்களுக்கு ஜெர்மனி நாட்டிற்கான செங்கன் (SCHNEGEN) விசா தேவைப்படுமே" என்றார்.

"நான் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் ரோமானியா விமானம் ஏறும் வரையில் மட்டுமே இருக்கப் போகிறேன். விமான நிலையத்தக் கடக்கும் பயணிகளுக்கு ( TRANSIT PASSENGER) விசா தேவையில்லேயே.. இங்கே நான் துபாய் விமான நிலையத்தில் உள்ளேன். ஆனால் என்னிடம் இந்த நாட்டிற்கான விசா இல்லையே" என்றேன்.
"உங்களுக்கு ரோமானியாவில் இருந்து வந்த அழைப்பிதழைக் காட்டுங்கள்" என்றார்.


நான் எனக்கு வந்திருந்த அழைப்பிதழ், தங்குவதற்குப் பதிவு செய்யப்பட்ட விடுதியின் பதிவுச்சீட்டு, எனது அலுவலக அடையாள அட்டை அனைத்தையும் காண்பித்தேன். அனைத்தையும் பார்த்தவர்...


"நீங்கள் அங்கே ஓரமாக நில்லுங்கள்! பிற பயணிகளைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்" என்று சென்று விட்டார்.


நான் ஓரமாக நின்று கொண்டிருக்க விமானப் பயணிகள் அனைவரும் என்னை ஏற இறங்க பார்த்து விட்டுச் சென்றனர். இடையில் நான் சென்னையில் உள்ள எங்கள் அலுவலக பயண ஒருகிணைப்பாளரைத் தொடர்பு கொண்டால், "உங்கள் விசா செல்லும்" என்றார்.

விமானத்தில் ஏறுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.என்னிடம் பேசிய பரிசோதகர் மீண்டும் வராததால் வேறொரு பரிசோதகரிடம் சென்றேன். அவர் முதலாமவரிடம் கைப்பேசியில் பேசிவிட்டு

" நீங்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர். நீங்கள் ஏற்கனவே பல முறை ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்தவர், முன்பு செங்கன் (SCHNEGEN) விசாவும் வாங்கியிருக்கிறீர்கள். ஆனால் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்திற்குச் செல்ல விசா தேவை என்று தெரியாது என்று நீங்கள் சொல்வதை எங்களால் ஏற்க முடியாது. மீறி உங்களை அனுமதித்தால் உங்களுக்குத் தான் பிரச்சனை.." என்றார்..

"எனக்குத் தெரிந்த வரை கடக்கும் பயணிகளுக்கு விசா தேவையில்லை. விமானம் புறப்படும் நேரமாகிறது, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்" என்றேன்.

"உங்களுக்கு இவர் உதவுவார்" என்று இன்னொருவரைக் கைகாட்டி விட்டு சென்று விட்டார். நான் ஏற வேண்டிய விமானம் கிளம்ப என்னை துபாய் விமான நிலையத்தின் வேறொரு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே, எனது கடவுச்சீட்டை வாங்கிவிட்டு ஓர் அறையில் உட்கார வைத்தார்கள். ஓரிரு மணி நேரம் ஆகியும் எவரையும் காணவில்லை. கையில் கடவுச்சீட்டும் இல்லை. இயற்கை அழைப்பிற்குக் கூட செல்ல முடியாத நிலை.

சில மணி நேரம் கழித்து, ஒரு அலுவலர் வந்தார்.

"உங்களுக்கு இன்று இரவு வியன்னா (ஆஸ்டிரியா) வழியாக பயணச்சீட்டைப் பதிவு செய்துள்ளோம்" என்றார்.

"ஆஸ்டிரியாவும் ஐரோப்பியக் கூட்டமைப்பின் கீழ் உள்ள நாடு. வியன்னா விமான நிலையத்திற்குச் செல்ல செங்கன் (SCHNEGEN) விசா வேண்டாமா?" என்றேன்.

"வியன்னா வழியாகச் செல்ல தேவையில்லை" என்று மழுப்பியவர், "உங்களுக்கு இன்றிரவு விமான நேரம் வரைத் தங்க மில்லேனியம் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம். துபாய் விசாவும் தரவுள்ளோம்" என்றார்.

துன்பத்திலும் ஒரு இன்பம் என்பது இது தானா என்று நினைத்துவிட்டு, துபாயை அங்கிருந்த நண்பர்களுடன் சுற்றிப் பார்த்தேன்.

எனக்கு வியன்னா வழியாக பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டு, துபாய் - வியன்னா- புகாரஸ்ட் - க்ளூச் என்றிருந்தது. பிறகு துபாயிலிருந்து கிளம்பிய நான், திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் க்ளூச் நகரைச் சென்றடைந்தேன். கையில் போதுமான அளவு ஈரோ நோட்டுகள் வைத்திருந்ததால் இடைப்பட்ட வேளையில் சாப்பாட்டிற்குக் கவலையில்லாமல் போனது. ஆனால் எனது கைப்பையில் மடிக்கணினியைத் தவிர வேறொன்றும் கொண்டு வரவில்லை! பயணம் தாமதமானதால் துபாயில் ஒரு சட்டையை வாங்கிக் கொண்டேன்.

எனது பயணம் தாமதமாகிறது என்பதை ரோமானியா நண்பர்களிடம் கூறியிருந்ததால் நான் பார்க்க வேண்டிய வேலையையும் தள்ளிப் போட்டிருந்தனர். இந்தப் பிரச்சனை ஆகியிருந்ததால், எங்கள் அலுவலக பயண ஒருங்கிணைப்பாளர் திரும்பி வரும்போதும் வியன்னா வழியாகப் பயணச்சீட்டைப் பதிவு செய்து கொடுத்தார்.

சென்னைக்கு வந்த பிறகு துபாய் விமான நிறுவனத்திடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

எனது அடுத்த ரோமானியா பயணத்தின் எகானமி வகுப்பு பயணச்சீட்டுகளை முதல் வகுப்பிலும் உயர் வகுப்பிலும் வருமாறு ஏற்பாடு செய்தனர். ஆக, என்னை விமானத்தில் ஏற விடாமல் தடத்தது அவர்கள் தவறு தான்! அதற்கான காரணம் இருக்கைகள் அளவிற்கு மீறிப் பதிவு செய்ததாகவோ ( Over Booking ) கவனக்குறைவோ இருக்கலாம்.

எனது மன உளைச்சலுக்கு அவர்கள் கொடுத்த இழப்பீடு முதல் வகுப்புப் பயணச்சீட்டு! ஆனால் வீணான ஒரு நாள்? தாமதமான பணி? எனக்காக் காத்திருந்தோரின் நேரம்?

இது போன்ற நிலைமை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என் பட்டறிவைப் பகிர்கிறேன்..

* நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது.

* முடிந்தால் அவர்களது வலைத்தளத்தில் இருந்தோ அல்லது அந்நாட்டுத் தொடர்பு மையத்திலிருந்தோ சட்ட திட்டத்தைப் பற்றி ஒரு நகலை எடுத்துக் கொள்வது நல்லது.

* கைப்பையில் குறைந்தது ஒரு நாளிற்குத் தேவையான உடைகள் வைத்திருப்பது நல்லது.

* ஓரிரு நாட்கள் பயணம் தாமதமானாலும் செல்விற்குத் தேவையான பணம் வைத்திருப்பது நல்லது.

* ஏதாவது பிரச்சனை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்திருக்கவும்.

* உங்கள் அலைபேசி எண்ணிலிருந்து வெளிநாடுகளில் இருந்தும் பேசுவதற்கு ஏதுவாக ரோமிங் வசதியை துவக்கி வைக்கவும்.

* நீங்கள் எவ்வளவு படித்திருந்தாலும் என்ன பதவி வகித்தாலும், நீங்கள் வளரும் (ஏழை ) நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மனதில் கொள்ளவும். எந்த ஐரோப்பிய விமான நிலையமானாலும் நமக்கு சிறப்பு பாதுகாப்பு சோதனை தான். ஆகவே நம்மை மட்டும் தனியாக சோதனையிடுகிறார்கள் என்று பயப்பட வேண்டாம்.

* நீங்கள் எத்தனை முறை அந்த நாட்டிற்கு சென்றிருந்தாலும், உங்கள் அழைப்பிதழ், அழைத்தவர் தொடர்பு எண் போன்றவற்றை வைத்திருக்கவும்.

* நீங்கள் செல்லும் நாட்டின் விமான நிலையத்தில், குடியேறல் சுங்க சோதனை செய்த பின்னரே உங்கள் பெட்டிகளை எடுக்க முடியும். ஆகவே, உங்கள் கோப்புகள் அனைத்தையும் உங்கள் கைப்பையில் (ஹாண்ட் பாக்காஜ்) வைக்கவும். சுங்க சோதனையின் போது கேட்டால் கொடுக்க வேண்டியிருக்கும்.

* நீங்கள் செல்லும் நாட்டில் என்னென்ன மருத்துவ சான்றிதழ்களைக் கேட்கிறார்கள் என்பதை அறிந்து எடுத்து வைத்திருப்பது இன்றியமையாதது.

* முக்கியமான இந்த சட்டத்தை நினைவில் கொள்வது முக்கியம் - உங்களிடம் விசா உள்ளது என்பதற்காக உங்களை அந்த நாட்டில் அனுமதிப்பார்கள் என்று எண்ண வேண்டாம். சுங்க சோதனையாளருக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பொருத்தே அந்த நாட்டில் அனுமதிப்பதும்.

இப்படி வெளிநாட்டிற்குப் போக வேண்டுமா? என்றால், இன்றைய சூழ்நிலையில் அயல் நாட்டுப் பயணங்கள் தவிர்க்க முடியாதது. நல்ல முன்னேற்பாடும் நல்ல நேரமும் இருந்தால் பயணம் இனிதாக இருக்கும்.

உங்கள் பயணம் இனிதாக வாழ்த்துகள்!

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழிஷ்லயும் தமிழ்மணத்திலும் வாக்களியுங்கள். உங்கள் அனுபவங்களையும் கீழே பதியுங்கள்.

Tuesday, August 11, 2009

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

2030ம் ஆண்டு - "மின்சக்தியை வழங்கி நாட்டின் வறுமையை ஒழித்த ஞாயிறைப் போற்றி வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தின் முதல் நாளை சூரியசக்தித் திருநாளாகக் கொண்டாடவோம்" என்று அரசு ஆணையிட்டால் எப்படி இருக்கும்?

ஏப்பா இருக்கற பண்டிகைகள் போதாதா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் உலகெங்கும் நடந்து வரும் மாற்றங்களைக் கவனிக்கையில் இது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

மின்சக்தி இல்லாமல் நம்மால் ஏதாவதொரு வேலையைச் செய்ய முடிகிறதா? அப்படி மின்சக்தி உற்பத்திக்காக இப்பொழுது நாம் பயன்படுத்தும் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்வை தீர்ந்து விட்டால் என்ன செய்வோம்?

"நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற புதைவடிவ எரிபொருள்கள் யாவும் இந்த நூற்றாண்டிற்குள் தீர்ந்து விடும் என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூறிவருவது அதிர்ச்சியளிக்கிறது. புதைவடிவ எரிபொருள்களுக்கு மாற்று என்ன என்று பார்க்க வேளையில், காற்றாற்றல், சூரிய சக்தி, உயிரெரிபொருள், நீர்மின்சாரம், கடலலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வகைகளைக் கூறலாம்.

இதில், சூரியசக்தியை உலக நாடுகள் அனைத்தும் வெகுவாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய அரபு நாட்டின் அரசு, அபுதாபியை அடுத்து உருவாக்கி வரும் மஸ்தார் என்னும் நகரின் மொத்த மின்சக்தி தேவையையும் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்வது என்று திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள சான் ஜோஸ் என்ற நகரத்தின் மின்சக்தித் தேவையைச் சூரிய சக்தியின் மூலமே பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

நம் மத்திய அரசும் "2020ம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவிற்கு சூரியசக்தியை உற்பத்தி செய்ய முதலீடு செய்யும்" என்று அறிவித்துள்ளது.
நாட்டின் வளர்ச்சியை மின்சக்தி உற்பத்தியின் வளர்ச்சியோடு ஒப்பிடுவது மிகவும் பொருத்தமுடையது. உழவுத்தொழில், மருத்துவம், கல்வி, தொழில்துறை என எந்தத் துறையானாலும் மின்சக்தியின் பங்கு இன்றியமையாதது. ஆக மின்சக்தியின் வளர்ச்சி வறுமையை ஒழிக்க வல்லது!

இரவில் விண்வெளியில் இருந்து பூமியை எடுத்த புகைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

கருநீல வண்ணத்தில் வெவ்வேறு நாடுகளும், கண்டங்களும் அழகாக காட்சியளிக்கும். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் படங்களைப் பார்க்கும் போது ஒளிவெள்ளமாகவும், ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் பெரும்பாலும் இருட்டாகவும் ஆங்காங்கே மின்மினிப் பூச்சி போல ஒளியும் காட்சியளிக்கும்.

இந்தியாவின் மேலிருந்து எடுத்த படங்களைப் பார்த்தால் ஓரளவு ஒளியும், இருண்டும் காட்சியளிக்கும்.

"அட, எவ்வளவு அழகா இருக்குது பாரேன்" என்று நாமும் ரசித்துவிட்டு செல்வதுண்டு!

ஆனால், எப்போதாவது இந்த இருளை வறுமையோடு ஒப்பிட்டதுண்டா? நம் நாட்டில் இன்னமும் 30 சதவிதத்தினர்க்கு மின்சக்தி கிடைக்காத வறுமை நிலையைத் தான் மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் இருள் காட்டுகின்றன. இப்படி நாட்டின் வறுமையைப் போக்க இந்திய அரசு அறிவித்துள்ள திட்டம் மிகவும் பாராட்டத்தக்கதே!

இப்படி சூரியசக்தியின் உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு முயல்வது இந்தத் துறை சார்ந்த தொழில்துறையை வளர்க்கக் கிடைத்த அருமையான வாய்ப்பாகும்!

இங்கே, தமிழகத்தின் கால்வாசிப் பரப்பளவே உள்ள டென்மார்க் நாட்டில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 1980களில், அந்த நாட்டினர் நாட்டின் எண்ணெய் சார்பைக் குறைக்க காற்றாலைகளை நிறுவுவது என முடிவெடுத்து செயல்படுத்தினர். இன்று டென்மார்க்கின் 80% மின்சக்தித் தேவையைக் காற்றாலைகளில் இருந்தே எடுத்துக் கொள்கிறார்கள். அத்துடன் காற்றாலை தொடர்பான கருவிகள் உற்பத்தியிலும் முன்னனியில் உள்ளனர். உலகின் முன்னனி காற்றாலை உற்பத்தி நிறுவனமான வெஸ்டாஸும் டென்மார்க்கைச் சேர்ந்ததே!

இது போல, நம் நாட்டில் சூரியசக்தியின் உற்பத்தியைப் பெருக்கும் பொழுது நம் நாடும் இத்துறையில் முன்னனியில் வருவதுடன் இலட்சக் கணக்கானோர்க்கு வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது!

சூரியசக்தியை ஏதோ அரசு மட்டும் தான் நிறுவ வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நம் வீடுகளில், அலுவலகங்களில், குடியிருப்புகளில் கூட நிறுவலாம். 20000 ரூபாய் செலவளித்து நம் வீட்டின் கூரையில் சூரியசக்தியை உற்பத்தி செய்யும் கருவியை நிறுவி விட்டால் போதும். வீட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சிப்பெட்டி, நான்கைந்து குழல் விளக்குகள், காத்தாடிகள் போன்றவற்றை இயக்கலாம். ஆரம்பத்தில் விலை அதிகமாகத் தெரிந்தாலும் பரவலாக விற்பனையாகும் பொழுது விலை குறைந்துவிடும்.

இது தொடர்பான விளம்பரங்களைச் சில மாதங்களுக்கு முன்பே கோவை ரெயின்போ பண்பலையில் கேட்டிருக்கிறேன்!

இப்படி நாமே நமக்குத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டால் மின்வெட்டில் விடுபடுவதுடன், நாட்டின் முன்னேற்றத்திலும் பங்குபெற முடியுமே! ஆகவே..

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

உங்கள் கருத்துகளைக் கீழே தெரிவிக்கவும்! இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷ்லயும் வாக்களியுங்கள். பலரும் படிக்கட்டும்.
.

Thursday, August 6, 2009

கானல் நீர் - அறிந்ததும் அறியாததும்!

உங்களுக்குக் காப்பி குடிக்கப் பிடிக்குமா? உங்களிடம் ஒரு கேள்வி!

நீங்கள் குடிக்கும் காப்பியில் எத்தனை லிட்டர் தண்ணீர் உள்ளது தெரியுமா?

ஒரு தேக்கரண்டி காப்பியைத் தயாரிக்க 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம்!

எப்படி?

காப்பிச் செடியைப் பயிரிடுவதில் இருந்து, நமக்கு வீட்டில் குடிக்கும் பக்குவத்தில் வந்து சேரும் வரை செலவாகும் தண்ணீர் தான் மேலே குறிப்பிட்ட 150 லிட்டர். இதை ஆங்கிலத்தில் VIRTUAL WATER ( கானல் நீர் ) என்னும் சொல்லால் குறிப்பிடலாம்.

ஒரு பொருளைப் தயாரிப்பதில் உற்பத்தியாகும் எரிவாயுவைக் கார்பன் கால்தடம் (CARBON FOOTPRINT) என்பதைப் போல, செலவாகும் நீரின் அளவை நீர்க் கால்தடம் ( WATER FOOTPRINT) என்று கூறுகிறார்கள்.

நாம் பயன்படுத்தும் சில பொருள்களின் நீர்க் கால்தடம் கீழே...
* ஒரு காரைத் தயாரிக்க தோராயமாக 150000 லிட்டர் தண்ணீர் செலவாகிறதாம்.
* ஒரு கிலோ மாட்டுக்கறியைத் தயாரிக்க 15000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுமாம்.
* ஒரு கிலோ அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிக்க தோராயமாக 1000 முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறதாம்.

கடந்த வருடத்தில், முன்னனி ஏற்றுமதி நாடுகளின் பட்டியலைப் பார்த்தேன். இந்தியாவின் இடம் மிகவும் கவலைக்குறியாதாகவே உள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், நார்வே, சுவீடன் போன்ற நம்மை விடச் சிறிய நாடுகளும் அமெரிக்கா, ரஸ்யா, சீனா, பிராசில், கனடா போன்ற நம்மை விடப் பெரிய நாடுகளும் ஏற்றுமதில் முன்னனியில் உள்ளன.

இதில் நெதர்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர், நார்வே, சுவீடன் போன்ற நாடுகள், தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களைப் பெரும்பாலும் இறக்குமதியே செய்கின்றன.

அதிகமாக நீர் தேவைப்படும் உணவுப்பொருள்கள், ஆடை உற்பத்தி மற்றும் இதர பொருள்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இருந்து குறைந்த செலவில் (மதிப்பில்) இறக்குமதி செய்துவிட்டு மூளையை மட்டும் மூலதனமாக வைத்துத் தயாரிக்கும் சேவைகளை அதிக மதிப்பில் ஏற்றுமதி செய்வதை நாம் அறிவோமா?

இந்தியாவில் நாமோ ஒரு இடத்தில் காப்பி, தேயிலை, பருத்தி உற்பத்தி, தோல் பொருள்கள் தயாரிப்பு மற்றும் இதர தாணிய வகைகள் என உற்பத்தி செய்ய அதிகளவு தண்ணீரை செலவழித்து விட்டு, இன்னொரு இடத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்ற நிலையில் உள்ளோம்!


மேலே உள்ள படத்தில் பச்சை வண்ணத்தில் உள்ள நாடுகளில் தண்ணீர் கால்தடம் குறைவாக உள்ளதையும் சிவப்பு வண்ணத்தில் உள்ள நாடுகளில் தண்ணீர் கால்த்தடம் அதிகமாக உள்ளதையும் காணலாம். பச்சையில் உள்ள நாடுகளில் இருந்து தான் சிவப்பு வண்ணத்தில் உள்ள நாடுகளுக்கு உணவு தாணியங்கள் ஏற்றுமதியாகிறதாம்! குறைந்த விலைக்கு!!

கச்சா எண்ணெயை அதிக விலை கொடுத்து நாம் வாங்குவதப் போல நம் நாட்டில் அதிகமான நீரைச் செலவழித்துத் உற்பத்தி செய்யும் பொருட்களை அதிக விலையில் விற்றால் எப்படி இருக்கும்?

இப்படி ஒரு காலம் வருமா என்றால் அதற்கான அறிகுறிகள் லேசாக தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு பொருளும் நுகர்வோரின் கைகளில் வந்து சேரும் வரை செலவாகும் நீரின் ( நீர்க் கால்தடம் ) அளவை விற்பனை அட்டையில் அச்சிட வேண்டும் என்று ஐரோப்பாவில் உள்ள சுற்றுச்சூழல் நிறுவனங்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

சரி இப்படி அச்சிடுவதால் என்ன பயன்?

நுகர்வோரான நமக்கு ஏற்படவிருக்கும் விழிப்புணர்ச்சி தான் மிகப்பெரிய பயன். நாம் அன்றாடம் குடிக்கும் காப்பியைத் தயாரிக்க 300 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என்றால் குடிக்கும் நமக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும்! நாம் பயன்படுத்தும் பொருள்களையும், அதனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையும் தெரிய ஆரம்பிக்கும்.இன்று பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் புட்டியில் அடைத்த குடிநீரின் விலை 1 லிட்டர் 12 ரூபாய் என்பதை நினைத்துப் பார்க்க எப்படி உள்ளது? ஆனால் ஐரோப்பாவில் தயாராகும் ஏவியன் நிறுவனத்தின் குடிநீரின் விலையோ 1 லிட்டர் 150 ரூபாய்! இதிலிருந்தே தெரிகிறதே அவர்கள் தெளிவாக உள்ளார்கள் என்று!

இதே போல ஒவ்வொரு பொருளையும் நாம் பார்க்க ஆரம்பிக்கும் போது நீரின் அருமையும், வளரும் நாடுகளுக்கு நேர்ந்து வரும் அநீதி பற்றிய விழிப்புணர்வும் சிறுதுளிகளாகப் பரவ ஆரம்பிக்கும்!

சிறுதுளிகள் தானே பெருவெள்ளமாகிறது!
உங்கள் கருத்துகளைக் கீழே பகிருங்கள்!
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும்

ஜி-மெயில் விளம்பரங்களைத் தடுக்க என்ன செய்ய?

நீங்கள் ஜி-மெயில் மின்னஞ்சலைப் பயன்படுத்துகிறீர்களா?

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போதோ அல்லது பெறும் போதோ ஜி-மெயில் விளம்பரங்கள் வருகிறதா?

பெரும்பாலானோர்க்கு வரத்தான் செய்கிறது. இதை நம்மில் பலர் கண்டுகொள்ளாமல் விட்டு விடும் வேளையில், இந்த விளம்பரங்களைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது என்று தெரிந்தால் நமக்கு பயனளிக்கும் தானே!

இந்த விளம்பரங்களைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

நாம் செய்ய வேண்டியது மின்னஞ்சலின் பதிப்பானில் ( எடிட்டர் ) தட்டச்சும் போது ஏதாவது துன்பகரமான சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.

எடுத்துக்காட்டாக கீழே உள்ள தொடரை இணைக்க வேண்டும்.

I enjoy the massacre of ads. This sentence will slaughter ads without a messy bloodbath.
அல்லது ஏதாவது ஒரு துர் நிகழ்வைப் பற்றிய தொடரை இணைக்கவும். இப்படி இணைக்கும் போது எந்த விதமான விளம்பரங்களும் வருவதில்லையாம்.

நான் இந்தத் தொடரை ஜி-மெயிலில் இணைக்கையில் என்ன ஆனால் என்பது கீழே..

முன்பு
பின்பு

இது மாதிரி விளம்பரங்கள நான் கண்டுக்கறதே இல்லைன்னு நினைச்சீங்கன்னா, உங்க நண்பருக்கு இதைப் பகிருங்கள்.


Related Posts with Thumbnails