Tuesday, March 30, 2010

ஒரு பந்தில் நாலு சிக்ஸர் அடித்த ரஜினிகாந்த்..

சென்னை, கோவை போன்ற நகரங்களில் பல பண்பலைகள் (எஃப்.எம்.) இருப்பதைப் போல, அமீரகத்திலும் குறைந்தது 30-40 எஃப்.எம். சேனல்கள் உள்ளன. அவற்றுள் இந்தி, அரபி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளிலும் ஒலிபரப்பாகின்றன. தினமும் அலுவலகத்திற்கும் செல்லும் பொழுது எனக்கு இந்தி அல்லது மலையாள எஃப்.எம் சேனல்களைக் கேட்பது வழக்கம். மலையாளச் சேனல்களில் இடையிடையே தமிழ்ப்பாடல்களைப் ஒலிபரப்புவதுண்டு!!

o

இன்று ஒரு இந்தி எஃப்.எம் சேனலைக் கேட்டுக் கொண்டிருந்த பொழுது இரண்டு ரேடியோ ஜாக்கிகள் பேசிக்கொண்டது வியப்பாகவும், சிந்திக்கும் படியாகவும் இருந்தது..

"நேற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம் தோற்றுவிட்டதே..."என்ற முதலாமவர்

"ஆமா.. அவங்க டீம்ல சரியான பேட்ஸ்மேன் இல்ல.. அதனால தான்.." என்று பதிலளித்தார் இரண்டாமவர்.

"நீ போய் ஆட வேண்டியது தான?"

"ஹா.ஹா.. நான் உன் கிட்ட ஒரு கேள்வி கேட்கட்டுமா? ஒரு பந்தில் இருபத்தி நாலு ரன் எடுக்க முடியுமா?"

"அது எப்படி?"

"ரஜினிகாந்த அனுப்பினாப் போதும். ஒரே பாலில் 24 ரன் எடுத்திருவார்.."

"ஹேய்.. என்ன சொல்ற?"

"ஒரு பந்தை அடிக்கும் பொழுது, அது நாலு பந்தா உடைஞ்சு, நாலும் பவுண்டரிக்கு வெளிய போய் விழும். அப்போ 24 ரன் தானே??" என்று கூறி "கெக்கெக்கே"வென்று சிரித்தர் இரண்டாமவர்..

o

ரஜினிகாந்தை வைத்துப் பல காமெடிகள் அவ்வப்பொழுது வட இந்தியர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் வருவதுண்டு. பல முறை, அலுவலக உணவு வேளையின் பொழுது ரஜினியைப் பற்றி, அவரது தனித்தன்மையான "ஸ்டைல்" பற்றியெல்லாம் பேச்சு வந்தாலும், வட இந்தியர்கள் மத்தியில் ஒரு "கிண்டல்" தொணி இருக்கத்தான் செய்கிறது.

இது எதனால்? நம் ரசனையின் மீதான கிண்டலா? அல்லது, பொதுவாக தமிழர்களின் திறமையின் மீதான் காழ்ப்புணர்ச்சியா?

ஒவ்வொரு மாநிலத்தவரும், மொழி பேசுபவரும் அடுத்த மாநிலத்தவரைக் கிண்டல் செய்யும் போக்கு நமக்கு அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறது!! இதில் நாமும் சளைத்தவர்கள் இல்லை. மலையாளம், தெலுங்கு, வங்காள, இந்தி மொழி பேசுபவர்களை வைத்து நாமும் பரவலாகக் கிண்டலடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதில் ஊடகங்களில் பங்கு மிகவும் முக்கியமானது.

இது உருவாக்கும் பிம்பம் என்ன? ஒருவர் "இந்த மாநிலத்தவர்" என்று நினைக்கும் பொழுது என்ன எண்ணம் உருவாகிறது?

பிகாரைச் சேர்ந்தவர் என்ற பொழுது லல்லுப்பிரசாத்தும், சட்ட ஒழுங்கின்மைதான் நினைவிற்கு வருகின்றன. பஞ்சாபைச் சேர்ந்த சிங்க் என்றவுடன் சர்தார்ஜி ஜோக்குகளும், குஜராத் என்றவுடன் கோத்ரா கலவரமும் தான் நினைவிற்கு வருகின்றன. இது தான் ஒவ்வொரு மாநிலத்தைப் பற்றி நம் மனதில் ஏற்பட்டிருக்கும் அடையாளம்!! பிம்பம்!!

ஐ.ஐ.டி.யில் சேரும் மாணவர்களுள் பிகாரைச் சேர்ந்தவர் எண்ணிக்கை தமிழகத்தை விட அதிகம். இந்தியாவிலேயே வளமான மாநிலமும், தனி நபர் வருமானத்தில் சிறப்பான இடமும் பஞ்சாம் மாநிலத்தவர்க்குத் தான். குஜராத் மாநிலம் தொழில்துறை, உள்கட்டமைப்பு போன்றவற்றுள் அடைந்துள்ள இடத்தைப் பிடிக்க, நமக்குக் குறைந்தது 10 ஆண்டுகள் தேவைப்படுமாம்.

ஆனால், இது போன்ற விசயங்கள் நம் மனதில் பதிவதை விட ஊடகத் திணிப்பால் உருவான பிம்பம் தான் நம் மனதில் பதிகிறது.

o

தமிழகத்தின்/தமிழக மக்களின் அடையாளமாக பத்து விசயங்களைச் சொல்லச் சொன்னால் எவற்றைச் சொல்வோம்?

1. தமிழ் மொழி.
2. தமிழின் தொன்மையான நூல்கள்
3. தமிழக வரலாற்றுச் சின்னங்கள்/ நகரங்கள்/சுற்றுலத்தலங்கள்.
4. தமிழர்களின் கலைகள்
5. உயர்ந்த காடுகள் முதல் பரந்த கடல் வரை உள்ள தமிழக நில வளம்.
6. தமிழ் மக்களின் மனித வளம். எந்தத் துறையானாலும் திறமையான வல்லுனர்கள், தொழிலாளர்கள் கிடைப்பது.
7. தொன்மையான மருத்துவ முறைகள்.
8. தொழில்நுட்பத்துறை ஆய்வகங்கள், கண்டுபிடிப்புகள்
9. சென்னை, கோவை போன்ற தொழில்துறை நகரங்கள்..
10. பல்துறை அறிஞர்கள், கலைஞர்கள்.

ஆனால்.. தமிழகத்தைப் பற்றிய அடையாளமாக இருப்பவை எவை?

"ஹாய் செந்தில்.. இஸ் எவ்ரிதிங் ஃபைன் வித் சவுத்? அம்மா, ரஜினி ஆல் ஃபைன்?" என்ற கேள்வியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கேட்கும் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்!! அவர்களைக் குறை கூறி ஒன்றும் செய்வதற்கில்லை!!

o

"நீங்கள் இறந்து விட்டீர்கள்!! இரங்கல் கூட்டம் நடக்கிறது!! உங்களைப் பற்றி ஒவ்வொருவராகக் கருத்துகளைக் கூறுகிறார்கள்!! உங்களைப் பற்றிப் பல கருத்துகளைக் கூறுகிறார்கள்!! நண்பர்கள், உறவினர்கள், சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என ஒவ்வொருவராக உங்களைப் பேசுகிறார்கள்!!

சிலர் உங்களைப் பற்றி பேசும் பொழுது, 'நாம் எதிர்பார்த்த படி இவர்கள் பேசவில்லையே' என்று உங்கள் மனம் வருந்துகிறது.

உங்கள் சாவின் இரங்கல் கூட்டத்தில் உங்களைப் பற்றி என்ன கூறினால் மகிழ்ச்சியடைவீர்கள்?"

"Stephen Coveyன் 7 Habits of Highly Effective People" என்ற நூலில் இடம்பெறும் வரிகள் இவை!!

இந்த வரிகள் அனைவருக்கும் பொருந்தும்!! தனி நபர்க்கும் பொருந்தும், ஒரு குழுவிற்கும் பொருந்தும், ஒரு இனத்தவர்க்கும் பொருந்தும்!!

ரஜினியைக் கிண்டலடித்த ரேடியோ ஜாக்கியைப் பற்றி நினைத்து என்ன செய்ய?

o

ம்ம்... தமிழ்ப் பதிவர்களையும், பதிவுலகத்தைப் பற்றிய பிம்பம் எப்படி இருக்க வேண்டும்?

இப்பொழுது எப்படி இருக்கிறது?

o

Saturday, March 27, 2010

விளக்கை அணைக்க ஆசையா?

ஒரு கிளுகிளுப்பான விசயத்தைப் பற்றிய பதிவோ என்று உள்ளே நுழைந்திருந்தால், "மன்னிக்கவும்!! இது கிளுகிளுப்பை விட முக்கியமான விசயத்தைப் பற்றிய பதிவு!!"

திங்கட்கிழமை அலுவலகத்திற்குச் செல்லும் பொழுதே பெரும்பாலானோரின் எண்ணம் "அடுத்த வெள்ளிக்கிழமை/ சனிக்கிழமை எப்பொழுது வரும்!!" என்பதைப் பற்றித் தான் இருக்கிறது. இதை "Monday Morning Blues" என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்!! வார விடுமுறை எடுத்த ஓய்வு, கிடைத்த புத்துணர்ச்சியால், அடுத்த ஓய்வு நாள் எப்பொழுது வரும் என்பதைப் பற்றி யோசிக்க வைக்கிறது!!

மனிதர்கள், விலங்கினங்கள், பறவைகள், மரம், செடிகொடிகள் இன்னபிற உயிரினங்கள் அனைத்தும் ஓய்வெடுத்து நம்மைப் புதுப்பிக்கின்றன. ஆனால், நம்மை எல்லாம் தாங்கும் "பூமித்தாய்" என்றாவது ஓய்வெடுத்துள்ளாளா?


பூமி தோன்றிய காலத்திலிருந்து அயராது சுழன்று கொண்டே இருக்கிறாளே!! பூமித்தாயின் சுழற்சியால் தான் நமக்கும் பகல், இரவு, கால நிலை மாற்றம், அதனால் வரும் மழை, உணவு, வாழ்வாதாரம் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது!!

திடீரென்று பூமித்தாய் தன் சுழற்சியை நிறுத்திவிட்டால் என்னவாகும்? 

இரவாக இருக்குமிடங்கள் எல்லாம் இரவாகவே இருந்துவிடும். பகலாக இருக்குமிடங்கள் எல்லாமே பகலாகவே இருந்துவிடும். இன்றும் ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் இது போன்ற காலநிலை வருடத்தில் நான்கைந்து மாதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த நாட்டு மக்களில் பலர் மன உளைச்சலிற்கும், போதிய உறக்கமின்றியும் இருந்து அவதிப்படுகின்றனர்.  அது போன்ற காலநிலை எல்லாம் இல்லாத ஒரு இடத்தில் பிறந்ததிற்காகவே நாம் மகிழ்ச்சியடைவேண்டும்!!  பூமித்தாய்க்கு நன்றி சொல்லியாக வேண்டும்!!

ஆனால் நாமோ "பூமித்தாயின் வளங்களை அழித்தும், இரவையே பகலாக்கும் அளவிற்கு ஒளிமாசை ஏற்படுத்தியும்" நமது நன்றிக்கடனை செலுத்தி வருகிறோம்!! 

பூமித்தாய்க்கு எப்படி நன்றி சொல்வது? ஒளிமாசை எப்படி குறைப்பது, பூமித்தாய்க்கு எப்படி நன்றி சொல்வது? மக்களிடம் விழிப்புணர்ச்சியை எப்படி ஏற்படுத்துவது?

இதற்காக உலக இயற்கை நிதியம் (World Wide Fund - Nature) ஆண்டு தோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமைகளில் புவி மணி(Earth Hour)யைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றனர்.

அது என்ன புவி மணி?

புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளில், வணிக நிறுவனங்களிலும் உள்ள உள்ள விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் அணைத்துவிடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வு!! இது இன்று 27ம் தேதி இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை அனுசரிக்க ஏற்பாடாகியுள்ளது.உலக நாடுகள் பலவும் புவிமணியைக் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ளன. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா, சிட்னி நகரின் ஓபேரா, எகிப்து பிரமிட்கள் என உலகப் பிரசித்தி பெற்ற இடங்கள் அனைத்திலும் விளக்குகள் அணைக்கப்படும்!! 

இவர்களுடன் சேர்ந்து நாம் என்ன செய்ய முடியும்?

வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு இருந்து பார்த்தால் என்ன? அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் நிறுத்திவிட்டு ஒரு மணி நட்சத்திரங்கள் எங்கெங்கே இருக்கிறதென குழந்தைகளுக்குக் காட்டலாம்!!

"என்னப்பா செந்திலு, சன் டிவில டீலா நோ டீலா பார்க்கணும், ஐ.பி.எல் மாட்ச் பார்க்கணும்.. நீ வேற.." என்று நினைப்பவர்களுக்கு "பூமித்தாயின் சார்பில் ஒரு நன்றியை உதிர்க்கிறேன் :)" 

விளக்கை அணைக்க ஆசைப்படுகிற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி! நன்றி!!

இந்தச் செய்தி மற்றவர்களையும் சென்றடைய "தமிழிஷ்/ தமிழ்மணத்தில்" ஓட்டளிக்க வேண்டுகிறேன்.

..

Friday, March 26, 2010

பட்டமொன்னு வேலையொன்னு!!

நாம் படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் எந்த அளவிற்கு தொடர்புள்ளது?

எனக்கு அதிகமாகத் தோன்றும் கேள்விகளுள் இதுவும் ஒன்று!! நண்பர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் எனப் பலரையும் பார்க்கும் பொழுது இந்தக் கேள்வி மேலும் ஓங்குகிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை!!

நேற்றிரவு லிங்க்ட்-இன் தளத்தில் எனது நண்பர்களின் பக்கங்களைப் பார்த்து வந்தேன். எனது லிங்க்ட்-இன் தொடர்புகளில் இருப்பவர்களுள் என் பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று நீண்ட நாள் பழக்கம் உள்ளவர்கள் தான் அதிகம். அவர்களது படிப்பு, வேலை போன்றவை தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரிந்திருந்தாலும் ஒரு சேரப் பார்த்த பொழுது வியப்பாகவே இருந்தது!!எத்தனை மாற்றங்கள்? படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் எவ்வளவு தொடர்பின்மை?

நான், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில், வேதிப்பொறியியல் சார்ந்த தொழில்நுட்பத்தைப் படித்துவிட்டு தொலைத்தொடர்புத்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் பொருள் மேலாண்மைப் (Product Management) துறையில் பணியாற்றி வருகிறேன். ஆரம்ப காலத்தில் என் படிப்பு சார்ந்த துறையில் பணியாற்றினாலும், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, நல்ல சம்பளம், மேலாண்மை சார்ந்த துறை மீதுள்ள ஆர்வம் போன்ற காரணங்களால் இத்துறைக்கு மாற முடிவெடுத்தேன். படித்த துறையில் வேலை பார்க்காவிட்டாலும் தினந்தோறும் பல விசயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு, திறனாய்வுத் திறனைப் பயன்படுத்தும் வாய்ப்பு போன்றவற்றால் ஈடுபாட்டுடன் வேலை பார்க்க முடிகிறது.

மேலாண்மை சார்ந்த துறை தான் ஆர்வம் என்றால், எதற்காக நான்கு வருடங்கள் வேறொரு படிப்பைப் படித்தேன்? அந்த படிப்பின் மீது ஆர்வமுள்ள மற்றொரு மாணவனின் வாய்ப்பை எதற்காகத் தட்டிப் பறித்தேன்?

அடுத்தது என் நெருங்கிய நண்பன்: கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னனு மற்றும் தொலைத்தொடர்புத் துறைப் படிப்பைப் படித்தான். பிறகு பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்.மில் மேலாண்மைப் படிப்பு!! தற்பொழுது பங்கு வர்த்தகம் சார்ந்த துறையில் சரகத் தலைவராக உள்ளான். பங்கு வர்த்தகம் அல்லது நிறுவன மேலாண்மை தான் முக்கியம் என்றால் எதற்காகப் பொறியியல் படிப்பு வேண்டும்?

ஐ.ஐ.எம்.மில் படிக்க வழிவகுக்கும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைய பொறியியல் தான் படித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே! "CEO is an IIT-IIM-A Combo"என்று படிக்கும் பொழுது அந்த நிறுவனத் தலைவரின் படிப்பாற்றலை வியக்கும் அதே சமயம், சிரிப்பும் சேர்ந்தே வருகிறது!!

கட்டடப் பொறியியல், எந்திரவியல், மின்னனு பொரியியல், வணிகவியல், கணிதவியல் என்ற பல படிப்புகளையும் படித்துவிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிவரும் எண்ணற்ற நண்பர்களைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை!!

நாம் என்ன படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டுமென்று முடிவெடுப்பது யார்? 

"என்னப்பா செந்திலு, அண்ணா யுனிவர்சிட்டில படிச்ச!! இப்ப பத்தாயிரம் ரூவா தான் சம்பளம் வாங்கற? நம்ம சங்கரன் மவன் உடுமலை ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் பி.எஸ்.சி முடிச்சான். இப்போ பெங்களூருல இருவத்தஞ்சு ரூவா வங்கறானே!!"

"மாப்ளே, வடக்கால குளத்துக் காட்டுக்காரர் மகன் ஆஸ்திரேலியா போயிருக்கானாம். அவங்க அப்பா அம்மாவ அங்க கூப்பிடறானாம்!! உன்னோட கம்பெனில எல்லாம் வெளிய அனுப்புவாங்களாடா?"

"தம்பி, இப்பல்லாம் பொண்ணுக அமெரிக்கா மாப்பிள்ளை, ஐ.டி. மாப்பிள்ளைங்க தான் வேணும்ங்கறாங்க!! அதனால நீங்க எதிர்பார்க்கற மாதிர்  பொண்ணு அமையறதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்.."

இன்னும் எத்தனை விசாரிப்புகள். எத்தனை வசவுகள்!! ஆனால் இது போன்ற பக்கத்து வீட்டுக்காரர், உறவினர்கள், நண்பர்கள் என சமூகத்தின் வார்த்தைகள், கருத்துகளே நமது படிப்பு, வேலை போன்ற விசயங்களை தீர்மானிக்கிறது என்பதே உண்மை!!

***

கல்லூரிப் படிப்பை முடித்து ஒன்பது வருடங்களாகப் போகிறது!! கல்லூரியில் வாங்கிய மதிப்பெண்களுக்கும் தற்பொழுது பார்க்கும் வேலைக்கும் தொடர்பு இருக்கிறதா?

கல்லூரியில் வாங்கும் மதிப்பெண்கள் கல்லூரியில் நடக்கும் காம்பஸ் இண்டர்வியூவில் வேலை வாங்க ஓரளவே உதவும்!! மற்றபடி, கூட்டு முயற்சி (Collaboration), குழுவுடன் ஒன்று பட்டு இயங்குதல் (Team work), திறனாய்வுத் திறன் (Analytical Ability), பேச்சாற்றல், எழுத்தாற்றல் போன்றவை எல்லாம் தான் தொழிலில் உயர உதவுகிறது!! 

***

கல்லூரி நண்பர்கள், பள்ளிக்கால நண்பர்கள் தற்பொழுது என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது!!

பள்ளிப்படிப்பைத் தேர்ச்சியடையவே திணறிவர் இன்று வெளிநாட்டில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார். கல்லூரியில், காம்பஸில் வேலை கிடைக்காத என் நெருங்கிய நண்பர் இன்று இராணுவ மேஜராக உள்ளார். கணிதம் மீது மிகுந்த ஆர்வம் மிக்க என் நண்பன் இன்று கணினியியல் விரிவுரையாளாராக உள்ளார். இன்னும் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆகவே, தொழிலிலும், வாழ்விலும் முன்னேற ஓரே படிப்பைத் தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது!! சில வருடங்கள் கழித்துப் பார்க்கையில் நமக்குக் கிடைத்திருக்கும் பட்டறிவும், அந்தத் துறையில் ஆர்வமும், விடாமுயற்சியுமே நம்மை முன்னேற உதவும். ஆகவே, சமூகம், பக்கத்துக்காட்டுக்காரர், வரன் போன்ற சமூகக் காரணங்களுக்காக நம் தொழிலைத் தீர்மானிப்பது முட்டாள்த்தனமே!!

படிப்பு, தொழில் போன்றவை நம் பொருளாதாரம் மேலோங்க உதவலாம்!! 

ஆனால் நமக்கு அக மகிழ்ச்சியளிக்குமா? 

(தொடரும்...)

****

Monday, March 22, 2010

ஜெய்ஹோ!! சென்னை!!

யார் சொன்னது 20-20 கிரிக்கெட் சுவாரஸ்யம் இல்லை என்று?

"என்னங்க இது!! சும்மா சிக்ஸும் ஃபோருமா அடிச்சுத் தள்ளறாங்க!! பௌலர்களப் பார்க்கவே பாவமா இருக்கு!!" என்று கூறியது நானே தான்!! 

விளையாட்டு மைதானங்களைச் சிறியதாக்கி, பொழுதுபோக்கை மட்டுமே மையமாகக் கொண்ட கிரிக்கெட் வடிவம் என்பதால், 'டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் தீவிர ரசிகன்' என்ற முறையில் எனக்கு 20-20 மீது பெரிய ஈடுபாடு இருந்ததில்லை!! 

ஆனால், எனது கருத்தை மாற்றியே தீர வேண்டும்!! இன்று (21.03)  நடந்த சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியைப் பார்த்த பிறகு!! 

ooo

137 என்னும் எளிதில் எட்டக்கூடிய இலக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினர்க்கு!! சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் மாத்யூ ஹைடன் விலாச ஆரம்பித்தவுடன் ஃபாக்ஸ்மூவிஸ் (Fox Movies), எம்.பி.சி (MBC) , ஸ்டார் மூவீஸ்(Star Movies) போன்ற சேனல்களுக்குத் தாவ ஆரம்பித்துவிட்டேன்!!

36 பந்துகளில் 34 ஓட்டங்கள் என்று எளிதில் எட்டக்கூடிய நிலையில் இருந்த ஆட்டத்தில் 'மட மட'வென ஆட்டக்காரர்கள் ஆட்டமிழக்க மீண்டும் "கிரிக்-ஒன்"(அமீரகத்தில் ஒளிபரப்ப உரிமம் பெற்ற சானல் Cric-one) சானலிற்கு மாறினேன்!!

பார்திவ் படேலும் மார்க்கலும் அழகாக ஒன்று, இரண்டு என்ற ஓட்டங்களை எடுத்துவர 18 பந்துகளில் 20 ஓட்டங்கள் என்ற நிலைக்கு வந்தது!! யார் வெற்றி பெறுவார்கள் என சென்னை அரங்கம் முழுவதும் ஒரே பரபரப்பு!! 'ஒரு புறம் நகத்தைக் கடிக்கும் பிரீத்தி ஜிந்தா, இன்னொரு புறம் டென்ஷனாக திரிஷா' என்று நமக்கும் ஒரே பதைபதைப்பு :)18 பந்துகள் 20 ஓட்டங்கள்: பையூஸ் சாவ்லா பந்துவீச வர முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் பார்த்திவ்.

17 பந்துகள் 16 ஓட்டங்கள்: இறங்கி ஆட நினைத்த பார்த்திவ் பந்தைத் தவற விட, பைல்ஸைத் தூக்கினார் சங்காகரா!!

பிறகு களமிறங்கிய கோணியும் மார்க்கலும் ஒவ்வொரு ஓட்டங்களை எடுக்க.. 

12 பந்துகளில் 12 ஓட்டங்கள் என்ற நிலைக்கு வந்தது ஆட்டம்!!

பஞ்சாப் அணியில் புதிதாக களமிறங்கிய தீரான் (ஆட்ட நாயகன்) 19வது ஓவரில் 2 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து கோணியையும் ஆட்டமிழக்கச் செய்தார்!!

கடைசி ஓவர்!!

6 பந்துகளில் 10 ஓட்டங்கள்: 

யாரப்பா பௌலர்? பத்தான் கையில் பந்து சென்றவுடன் சென்னை ரசிகர்களுக்கு 'சென்னை ஜெயித்துவிட்டது' போன்ற மகிழ்ச்சி!!அவர்கள் மகிழ்ச்சி வீணாகவில்லை!! முதல் பந்தை வெளியே போட்டுத்தர விளாசிய மார்க்கெலின் மட்டையில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது.

5 பந்துகளில் 6 ஓட்டங்கள்:

அடுத்த பந்தில் இரண்டு சொற்ப ஓட்டங்களை பை (Bye) முறையில் எடுத்த பொழுது "என்ன தான் ஐ.பி.எல். னாலும் நாங்க இப்படி கோட்டை விடுவோம்"னு சொல்ற மாதிரி இருந்தது!! மீண்டும் ஒரே கரகோஷம் தான்!!

4 பந்துகளில் 4 ஓட்டங்கள்:

பத்தானின் பந்தை எதிர்நோக்கிய மார்க்கெல் ஒரு ஓட்டத்தைப் பெற்று அடுத்த முனைக்குச் சென்றார். புதிதாகக் களமிறங்கிய "அஸ்வின்" பந்தை எதிர் கொள்ளத் தயாரானார்.

3 பந்துகளில் 3 ஓட்டங்கள்: அஸ்வின் - இரண்டு ஓட்டங்கள்..

2 பந்துகளில் 1 ஓட்டம்: ஓட்டங்கள் எதுவும் இல்லை!!

1 பந்தில் 1 ஓட்டம்: பந்தைப் போடும் முன்பு மீண்டும் எங்கும் பரபரப்பு!! ஆட்டம் "டை( Tie)"யானால் என்ன ஆகும் என்பதைப் பற்றி கமெண்டேட்டர் ரவி சாஸ்திரி கூற ஆரம்பித்தார். 20-20 போட்டிகளில் டை ஆனால் டை-பிரேக்கராக சூப்பர் ஓவர் போடுப்படுமாம்!! "இதையெல்லாம் எதற்குச் சொல்கிறார், அதெல்லாம் நடக்காது அஸ்வின் அடித்துவிடுவார்" என்று நம்பிக்கொண்டிருக்கும் பொழுதே "பப்பரப்பே" என்று காட்ச் கொடுத்து அவுட் ஆக ஆட்டம் டை ஆனது. ஆக.. ரவி சாஸ்திரி கூறியது போல சூப்பர் ஓவர் நிலைக்குச் சென்றது!!

அதென்னா சூப்பர் ஓவர் ( Super Over )?

"ஆட்டம் டை ஆகனும்னா சூப்பரா இருந்திருக்கணும்ல!! அதுக்காக இந்தப் பெயர் வைத்திருப்பார்கள்"என்று நான் நினைத்தது போலெல்லாம் நினைக்க வேண்டாம்!!

சூப்பர் ஓவரின் முறை: ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு ஓவர் அளிக்கப்படும். மூன்று மட்டையாளர்கள் விளையாடலாம். இரண்டு விக்கட்கள் விழுந்துவிட்டால் ஆட்டம் முடிந்துவிடும். பிறகு அடுத்த அணி விளையாட ஆரம்பிக்கும்.

இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரின் விளையாட..சென்னை அணியிலிருந்து ஹைடன், சுரேஷ் ரைனா, மார்க்கெலும்; பஞ்சாப் அணியிலிருந்து யுவராஜ், பத்தான், ஜெயவர்த்தனாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அணியின் ஓவரைப் போட முரளிதரனும் பஞ்சாம் அணிக்கு தீரானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சூப்பர் ஓவர்: சென்னை அணியில் ஹைடன் களமிறங்க.. ஒரு ஓவரின் குறைந்தது 20 ஓட்டங்கள் எடுத்துவிடுவார் என்று நினைத்தோம். ஆனால் "பொசுக்"கென ரன் எடுக்காமல் அவுட் ஆக.. சுரேஷ் ரைனா ஒரு சிக்சரும், சில ஓட்டங்களும் எடுத்து சென்னை அணியின் ஸ்கோர் 9ஆக இருக்கும் பொழுது ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணி வெற்றியடைய 10 ஓட்டங்கள் தேவை!! மீண்டும் பஞ்சாப் ரசிகர்கள் ஆரவாரம்!! மீண்டும் ப்ரீத்தி, திரிஷா, பரபரப்பு... நமக்கும் பதைபதைப்பு!!

முரளிதரன் முதல் பந்தைவீச வர ஜெயவர்த்தனே எதிர்கொண்டார் ஜெயவர்த்தனே!! முதல் பந்தில் சிக்சர்!! மீண்டும் பஞ்சாம் ஆரவாரம்!! அடுத்த பந்தில் ஜெயவர்த்தனே ஆட்டமிழக்க மீண்டும் சென்னை ஆரவாரம்!! அடுத்த பந்தை எதிர்கொண்ட யுவராஜ் சிங்.. பவுண்டரிக்கு பந்தை விரட்ட பஞ்சாம் ஐ.பி.எல்-3ல் கணக்கைத் துவங்கியது!!சென்னை ரசிகர்கள்!!

கிரிக்கெட் வரலாற்றில் சென்னை மைதானத்திற்கும் சென்னை ரசிகர்களுக்கும் ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது. "கிரிக்கெட்டில் நுட்பமான அறிவுள்ளவர்கள், தரமான ரசிகர்கள்" என்ற பரவலாகப் புகழப்படுவது தவறல்ல என்பதை சென்னை ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்கள்!! பஞ்சாம் அணி வெற்றியடையும் நிலைக்கு வந்த பொழுதும் ஊக்குவிப்பது, அவர்கள் வெற்றியடைந்த பிறகு சென்னை ரசிகர்கள் பாராட்டியது போல கொல்கத்தா ரசிகர்களோ மும்பை ரசிகர்களோ பாராட்டுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது!!

இதற்காக முதல் ஜெய் ஹோ!!

"Chennai is Known for Close contests" என்ற வாதமும் மீண்டுமொரு முறை நிரூபனம் ஆகியுள்ளது!! 

1986ல் - இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடந்த போட்டி டையில் முடிந்தது சென்னையில்!!

1999ல் - இந்தியா - பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்த  போட்டியில், வெற்றி பெறும் நிலையில் இருந்து தவற விட்ட பொழுது வித்தியாசம் 14 ஓட்டங்கள். மைதானம் சென்னை!!

2001ல் - இந்தியா - ஆஸ்திரேலியா - 5வது நாளின் ஆட்டம் முடிந்து விடும் நிலையில் தொடரை வென்றது சென்னையில்!!

கிரிக்கெட் போட்டிகள் சுவாரஸ்யம் உள்ளதாக மாற்றுவதில் இது போன்ற பரபரப்பான ஆட்டங்கள் தான் காரணம்!! இது போன்ற ஆட்டங்களில் சென்னைக்கு என்றுமே தனி இடம் அமைந்துவிடுவது சிறப்பே!!

இதற்காக மற்றுமொரு முறை ஜெய் ஹோ!! 

ஜெய் ஹோ சென்னை!!

Saturday, March 20, 2010

எனிக்மா - மர்மத்தின் உச்சகட்டம்!!

"இசைக்கு மொழியில்லை" என்று கூறுவதுண்டு.  குருவிகளின் சத்தம், கிளிகள் ஓசை, மைனாக்களின் கீச்சல்கள் என ஒவ்வொரு ஓசையையும் இசையாக நினைத்துப் பார்த்தால் "மொழியையும் ஒரு இசையாக அனுபவித்தால் என்ன"வென்று தோன்றும். அப்படி அனுபவித்துக் கேட்கும் பொழுது "இசையை ரசிக்க மொழி தேவையில்லை" என்ற விசயம் விளங்கும்.

வாத்திய இசையை "Instrumental Music" என்ற வடிவில் கேட்பது நமக்கு வழக்கப்பட்ட ஒன்றே. மிருதங்கம், நாதஸ்வரம், வீணை, புல்லாங்குழல், வயலின், மாண்டலின் முதல் சாக்ஸபோன் வரை நம்மவர்கள் வாசிப்பதை இசையாக மட்டுமே கேட்பது நமக்கு வழக்கமே!! இந்த இசைக் கருவிகளின் இசையைக் கேட்கும் பொழுது மகிழ்ச்சி, சோகம், பரிதவிப்பி என்று ஒவ்வொரு விதமான உணர்வு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை!!

ஆனால், ஒரே இசையில் பல விதமான உணர்வுகளை ஏற்படுத்த முடியுமா?


அது தான் "எனிக்மா"வின் தனிச்சிறப்பு!!

பயம், மர்மம், மகிழ்ச்சி, ஏக்கம், அழுகை, ஏதோ வேறு உலகத்தில் பயணக்கும் உணர்வு, சிறகுகள் முளைத்துப் பறப்பது போன்ற சிலிர்ப்பு, இசையில் வினோதத்தில் ஏற்படும் புல்லரிப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம் எனிக்மாவின் இசையைப் பற்றி!! 

எனிக்மாவின் இசைக்கோப்புகளில் மொழிகளை வெகுக் குறைவாகவே பயன்படுத்தியிருப்பார்கள். "எனிக்மா" இசைத் திட்டத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் கிரேது ரோமானியாவில் பிறந்தவர். இவருடன் இவரது துணைவியார், நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியது "எனிக்மா" இசைக்கோப்புகள்!! உலகெங்கும் உள்ள பிரதாமான இசைக்கருவிகள், இசைப் பயன்பாடுகள் அனைத்தையும் இணைந்த வடிவம் தான் "எனிக்மா" இசை.

"எனிக்மா"வின் இசையில் மறக்கமுடியாதது "சோகம் -Sadness" என்ற தலைப்பில் வெளிவந்த இசைக்கோப்பு தான். ஏதோ மந்திரம் ஓதுவது போன்ற பின்னனி இசையில் தடதடத்து ஆரம்பிக்கும் இசை, ஒரு வித சோக இழையோடி, பரவசம், இனிமை, மகிழ்ச்சி, ஏக்கம் என்ற பல தளங்களிலும் நம்மை பயணிக்க வைக்கும்!!


அதே போல அவர்களது இசையில் "Return to Innocence", "voyager", "Rescue Me - Invisible Love" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலம். இவர்களின் பாடல்களுக்கான காணொளிகளும் அவர்களது இசையைப் போல மிகவும் வித்தயாசமானதே!! இந்த "Return to Innocence" என்ற (கீழே) காணொளியைப் பார்க்கும் பொழுது சிறுவயது நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியாது.


கடந்த 20 ஆண்டுகளில் கல்லூரிகளில் படித்து முடித்தவர்கள் அல்லது கல்லூரி விழாக்களில் கலந்துகொண்டவர்கள் எவரும் "எனிக்மா"வின் இசையைக் கேட்காமல் இருந்திருக்கமாட்டார்கள். போட்டிகளின் நடுவே, போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் பொழுது என "தடதடக்கும்" இசை கேட்ட நினைவிருந்தால் அது "எனிக்மா"வாகத் தான் இருக்கும்.

இன்றளவும் கல்லூரிகளின், மாநரங்களில் நடைபெறும் ஆடைவடிவமைப்புப் போட்டிகள், பூனை நடைப்போட்டிகளின் பொழுது இதமாகத் தவிழவிடும் இசை "எனிக்மா" தான்!!

"எனிக்மா"வின் இசையைக் கேட்டு புது வித அனுபவத்திற்குச் செல்ல வாழ்த்துகள்!! எத்தனையோ (மொக்கை இசையைப்) கேட்டுட்டோம், இதைக் கேட்கவா மாட்டோம்!! எனிக்மாவைக் கேட்ட பிறகு "இந்தப் படத்தில் காப்பி அடித்தார்கள், அந்தப் படத்தில் காப்பி அடித்தார்கள்" என்று உங்களுக்குத் தோன்றினால் கம்பெனி பொறுப்பாகாது :)

எனிக்மாவின் இசையை அனுபவிக்க "ஹம்மா.காம்"ன் சுட்டி
..

Friday, March 19, 2010

பாவம்!! வங்கிகளின் கால் செண்டர் ஊழியர்கள்!!

சில சேவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் வாடிக்கையாளர்கள் தொடர்பு எண்ணைத் தொடர்பு கொண்டேன்...

"வெல்கம் டு XYZ பாங்க்!! டு கண்டினியூ இன் இங்கிலீஸ் ப்ரெஸ் 1, ஹிந்தி மேன் ஜாந்தாரி கேலியே தோ தபாய்"

"1"

"ப்ளீஸ் எண்டர் யுவர் சிக்ஸ் டிஜிட் போன் பாங்கிங் பின் ஃபாலோடு பை #"

"123456#"

"ப்ளீஸ் எண்டர் யுவர் பின்"

"****"

"இஃப் யு ஆர் எக்ஸிஸ்டிங் கஸ்டமர் ப்ரெஸ் 1"

"1"

"ஃபார் கிரெட் கார்டு சர்வீசஸ் ப்ரெஸ் 1, ஃபார் என்.ஆர்.ஐ. சர்வீசஸ் ப்ரெஸ் 2"

"2"

"யுவர் கரெண்ட் பாலண்ஸ் இஸ் ...... ஃபார் அதர் சர்வீஸஸ் ப்ரெஸ் 4, டு ஸ்பீக் டு போன் பேங்கர் ப்ரெஸ் 0"

"0"

ooooooooo


"வணக்கம் திரு செந்தில்வேலன்!! லாவண்யா பேசறேன்!, நீங்கள் போன் பேங்கிங் எண்ணைப் பயன்படுத்தியதமைக்கு நன்றி!!"

"சரீங்க."

"உங்க அம்மா பேரு சொல்லமுடியுமா?"

"பரமேஸ்வரி"

"உங்க ஈ.மெயில் ஐடி சொல்லுங்க"

"abcd@abcd.com"

"மிக்க நன்றி திரு செந்தில்வேலன். உங்கள் அக்கவுண்ட சரி பார்த்துவிட்டோம். உங்களுக்கு நாங்க எப்படி உதவுவது? அதுக்கு முன்னாடி நீங்க இப்ப எங்க இருந்து கூப்பிடறீங்க?"

"துபாய்ல இருந்து.."

"ஓகே. உங்களுக்கு நாங்க எப்படி உதவுவது?"

"எனக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ், டி-மேட் அக்கவுண்ட் திறப்பது பற்றி எல்லாம் தெரிஞ்சுக்கணும்ங்க"

"ஓகே. டி-மேட் அக்கவுண்ட் பத்தி தெரிஞ்சுக்க நீங்க இந்தியா வரும் பொழுது வங்கிக் கிளைக்குப் போகணும்"

"சரி.."

"மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எஸ்.ஐ.பி. பற்றி சொல்வதற்கு எங்க ஆபீஸர் உங்களக் கூப்பிடுவாரு. உங்க போன் நம்பர சொல்ல முடியுமா?"

"123456789.."

"ஓகே.. அவங்க உங்கள ஒன்னு அல்லது ரெண்டு நாள்ல கூப்பிடுவாங்க"

"சரிங்க."

"உங்களுக்கு நாங்க இன்சுயூரன்ஸ் பத்தி கொஞ்சம் சொல்ல விரும்பறோம்"

"சரிங்க"

"இந்தியால உங்க பெற்றோர் இருக்காங்களா?"

"ஆமாங்க"

"அவங்களுக்கு வயசு என்னங்க ஆகுது?"

"அம்மாக்கு 60.. அப்பாக்கு 70.."

"அவங்களுக்கு ஏற்ற மாதிரி ஒரு இன்சுயூரன்ஸ் பாலிசி இருக்கு"

"??"

"இது ஆக்ஸ்டண்ட் இன்சுயூரன்ஸ்... அவங்களுக்கு வயசாயிடுச்சு இல்லீங்களா? ஏதாவது கால் முறிவு, கை முறிவு எல்லாம் ஏற்பட்டுச்சுன்னா எங்க பாலிஸி கவர் பண்ணிக்கும். அதே போல விபத்தோ அல்லது நடமாட முடியாமப் போயிட்டாங்கன்னாலும்... இது உதவும்.. "

"இது எவ்வளவு ப்ரீ..??"

"திரு செந்தில்வேலன் முதல்ல நான் (எல்லாத்தையும்) சொல்லிடறேன்"

"??"

"அவங்களுக்கு ஏதாவது சாலை விபத்து ஏற்பட்டுச்சுன்னாலும் இந்த பாலிசி கவனிச்சுக்கும்!! ரெண்டு பேருக்கும் சேர்த்து மொத்த கவரேஜ் 25 லட்சம்..இதுக்கு நீங்க மெடிகல் டெஸ்ட் எல்லாம் பண்ண வேண்டாம். இப்போ ஆக்டிவேட் பண்ணினா.. இப்போ இருந்தே பயனிற்கு வந்துவிடும்"

"ஓ.."

"இந்த பாலிசிய நாங்க ஏக்டிவேட் பண்ண நீங்க பண்ண வேண்டியது.."

"ஒரு நிமிசம்ங்க.. இந்த பாலிசி பற்றிய பிரவுசர (Brouchure) எனக்கு மின்னஞ்சல் மூலமா அனுப்ப முடியுமா?"

"இந்த பாலிசிய நாங்க ஏக்டிவேட் பண்ண நீங்க பண்ண வேண்டியது எல்லாம் உங்க கிரெடிட் கார்டு நம்பரக் கொடுத்தா போதும் அல்லது உங்க அக்கவுண்ட்ல இருந்து நாங்க ப்ரீமியத்துக்கு எடுத்துக்குவோம்.."

"லாவண்யா.. நீங்க இன்னும் ப்ரீமியம் எவ்வளவுனு சொல்லவே இல்லீங்க"

"8900 மட்டும் தாங்க வருஷத்துக்கு.."

"ஏங்க இதுல.. மற்ற நோய்களுக்கு எல்லாம் கவரேஜ் இல்லீங்களா?"

"இல்லீங்க. இது வெறும் ஆக்சிரெண்ட் கவரேஜ் மட்டும் தான்.. இத நீங்க ஆக்டிவேட் பண்ண செய்ய வேண்டியது.."

"ஏங்க.. மொதல்ல நான் இந்தப் பாலிசியப் பத்தி படிக்கணும்ங்க.."

"உங்க எண்ணம் எனக்கு புரியுது. ஆனா பாங்க் கைடுலைன்ஸ் படி நாங்க மெயில்லயோ, துபாய்க்கோ அனுப்ப முடியாது. இந்தப் பாலிசிய ஆக்டிவேட் பண்ணிட்டா நாங்க வீட்டுக்கு அனுப்பிடுவோம். வீட்டுல இருக்கறவங்கள FAX பண்ணச் சொல்லலாமே.."

"எனக்கு இப்பவே முடிவு பண்ண முடியாதுங்க..ரெண்டு நாள் கழிச்சு நானே கூப்பிடுறேன்.."

"உங்களுக்கு என்ன யோசனைனு சொல்லுங்களேன். நான் உதவறேன்..."

"இல்லீங்க.. இந்த டைப் இன்சுயூரன்ஸ் பற்றி நான் இன்னும் யோசிக்கலை"

"இந்த ப்ரோடக்ட் இல்லீன்னா.. கொஞ்சம் குறைந்த ப்ரீமியத்துக்கு ஒரு பாலிசி இருக்கு.."

"@#$@%#"

"வருஷத்துக்கு ப்ரீமியம் வெறும் 4500 ரூபாய் தான்.."

"நான் என்ன சொல்ல.."

"பெரியவங்களுக்கு இந்த டைப் இன்சுயூரன்ஸ் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். அவங்க ஏஜ்க்கு என்ன வேணாலும்.."

"எனக்கு ரெண்டு நாள் டைம் கொடுங்க.."

"ஓகே திரு செந்தில்வேலன்!! உங்களுக்கு சொந்த வீடு இருக்கா?"

"ஆமாங்க"

"உங்க பேருல இருக்கா?"

"ஆமாங்க"

"நீங்க ஏன் ஹோம் இன்சுயூரன்ஸ் எடுக்கக் கூடாது?"

(இதுவேறயா?)

"சுனாமி, பூகம்பம், திருடு போன்ற எல்லாவற்றிற்கும் கவரேஜ் இருக்குங்க"

(ஆகா.. டிசைன் டிசைனா பீதியக் கிளம்பறாங்களே..)

"இல்லீங் மேடம். நான் அதப் பத்தியும் யோசிக்கவே இல்லை.."

"ஓகே திரு செந்தில்வேலன். உங்களுக்கு நான் வேற ஏதாவது உதவி...?"

(நான் எதுக்கு போன் பண்ணினேன்?)

"இல்லீங்க"

"உங்கள் கேள்விகளுக்கு நல்ல விதத்தில் பதில்கள் கிடைத்திருக்கும்னு நினைக்கறேன். எங்க வங்கிக்குக் கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி!!"

"நன்றிங்க"

போனை துண்டித்த பிறகு "கிர்ர்ர்"ரென்று இருந்தது. அரை மணி நேரம் பேசிய நமக்கே இப்படி என்றால் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் நாள் முழுதும் பேசும் வங்கிகளின் கால் செண்டர் ஊழியர்களின் நிலைமை எப்படி இருக்கும்?

மார்ச் மாதம் 20ம் தேதியாயிற்று.. அவர்கள் என்ன செய்வார்கள்? பாவம்!!
...

Saturday, March 13, 2010

சோழனுக்குப் பெயர் சூட்டும் விழா..,

உன் விரல்களைப்போல சுருங்கிய
உன் உலகத்தை,
உள்ளங்கையில் குலுக்கி எடுத்து,
விசாலமாக்கி,
விரல்களுக்கு நடுவில்
விந்தைகளைச் சொருகி,
வாய்ப்புகளை வளர்ப்பால் மாற்றி,
வெற்றி பெற வைக்கும்
வித்தையைச் சொல்லித் தர
தாத்தா உண்டு.

விதவிதமாய் சமைத்துபோட
வகைவகையாய் வாங்கி போட
பூவான உன்னை ரோஜாவாக்கிட
பவுனாய் உன்னை பாதுகாத்திட
பாட்டி உண்டு.

மீசைக்கு நடுவில்
ஆசைத்தொட்டில் கட்டி
இசைத்தாலாட்டு பாட
மீசை தாத்தா உண்டு.

பார்வைகளில் நேசத்தையும்
வார்த்தைகளில் வாழ்க்கையும்
பாலுடன் பாசத்தையும் ஊட்ட
பாலா பாட்டி உண்டு.

பரணியை ஆள வந்த உன்னை
இளங்கோவின் மகன் -
இழுத்து விழ வைக்கும்போது,
மண் உரசிய உன் தோலை -
மனம் உரசி,
விழுந்ததால் வந்த புண்ணை -
விழுப்புண்ணாக்காமல் - ஆற்றி,
விந்தையாய் மறையச்செய்ய
ரிந்தியா உண்டு.

உச்சந்தலையில்
உச்சிவெயில் விழும்வரை காத்திருந்து
நிழலாகும் முகங்களை
காலத்தால் அழியாத
கல்வெட்டாக்க
சத்யமும் சிவனும் உண்டுவட்டங்களில் உன்
வரம்புகளை வரையறுத்து,
பட்டங்கள் பெறுவதற்குத்
திட்டங்கள் தீட்டி,
எட்ட முடியாத உயரங்களை
எட்டி உதைக்கும் அளவிற்கு - முதுகில்
தட்டி தட்டி வளர்க்க,
புறம் நானூறை
புரிய வைக்க தந்தை உண்டு.

பார்த்து பார்த்து கட்டிவைத்த
பஞ்சுக் கோவிலில்
பிரார்த்தனைகள் பல புரிந்து
அகம் நானூறை
அறிய வைக்க அன்னை உண்டு.

எதிரிகளாய்
எங்கிருந்தோ வருபவர்களையும்
இயல்பான புன்னகையை
இலச்சினையாய் வைத்திருக்கும்
இலகுவான உன்னைப் பார்த்து
இயலாமையில்
போர்க்கொடியை தாழ்த்தி
புறமுதுகிட்டு ஓட
பூவுலகில் சாந்தி எப்போதும் உண்டு.

மெளனமாய் நீ இருக்கும்போது
குருவாக உன்
அருகில் வந்து
அடைத்துவைத்த உணர்வுகளை
உடைத்து வெளிஎடுத்து
நெற்றிக்கண்ணில் எரித்து புகைக்க
'சிலிண்டர்' சிவம் உண்டு.

பிறக்கும்போதே - இந்த சொந்தங்கள்
புடை சூழ பிறந்த
பேரரசனே!! - உனக்கு இன்று
பெயர் சூட்டும் விழா.


வாரங்களில் சோம வாரமாகவும்
பொருள்களில் பவுன் - ஆகவும்
இதயத்தில் இளங்கோ - வையும்
வீரத்தில் ஈஸ்வர் - யும்
ஹாஸ்யத்தில் ஹாசினி - யையும்
பாசத்தில் பரணி-யையும்

சிந்தனையில் சிவா-வையும்
சத்தியத்தில் காந்தி-யையும்
பண்பில் பாரதி-யையும்
எண்ணங்களில வேலன் - ஐயும்
எழுத்தில் கபிலர் - ஐயும்
ஏட்டில் சரஸ்வதி-யையும்
உனக்குள் வைத்து

அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்து
கோபங்களை எதிர்கொண்டு
உணர்வுகளோடு போர்புரிந்து
உள்ளங்களை வெற்றிகொள்ள
உலகத்தில் பிறந்தவனே!!!

பிறக்கும்போதே கிரீடமாய்
எங்களை சுமந்து பிறந்த
உனக்கு என்ன பெயர் சூட்ட?
.
.,
..,

நீ
பாசங்களை
வெற்றி கொள்ள பிறந்த
சிற்றரசன்.

கோ - அரசன் என்றால்
- சிற்றரசன்.

வெற்றி - தமிழ் என்றால்
'வின்' ஆங்கிலம்.

ஆக
உன் பெயர்
க-வின்
கவின்.

ஒவ்வொருவருவாக
இனி - உன்
காதுகளில் உரைப்போம்.
கவின்.,
கவின்..,
கவின்....,

எங்கள் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை முன்னிட்டு என் சகலன், திரு.கபிலன் எழுதிய வாழ்த்துப்பாடல்!!


...

Monday, March 8, 2010

வார்த்தைகள் வரவில்லை.. மகிழ்ச்சியை விவரிக்க.."என்னங்க.. நீங்க பையனப் பாத்தீங்களாங்க?"

"ஆமாம்பா..உள்ள கிளீன் பண்ண எடுத்துட்டுப் போயிருக்காங்க"

"நாம.. அம்மாப்பா... ஆயிட்டமாங்க..ஐயோ.. என்னால நம்பவே முடியலங்க"

"பையன் சத்தம் கேட்குது பாருடா.."
....
...
...

"ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்... உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.."

ooo

"அப்பா.. உங்களுக்குப் பேரன் பிறந்துட்டான்..."

"ஹாஹ்ஹா.. அம்மா.. உங்களுக்குப் பேரன் பிறந்திருக்கான்... "

"அப்பாடி.. பொண்ணு நல்லா இருக்காளாப்பா.."

"நல்லா இருக்காங் அத்தை... நல்லா இருக்கா!!"

ooo

சில மணி நேரங்கள் கழித்து..

"ஏய், பையன் பிறந்திருக்கான்டீ..!!"
....
"ஆமா.. நல்லா இருக்கான்.. மூன்றரை கிலோ..!!"
.....
"இல்ல.. சுகப்பிரசவம் தான்.. ஆமா நல்ல டாக்டர்டீ.. நல்லபடியா பிரசவம் பார்த்துட்டாங்க.. அவங்களுக்குத் தான் நன்றி சொல்லனும்!!"
....
"ஆமா.. சான்ஸே இல்ல.. இப்படி ஒரு டாக்டர் கிடைக்கறதுக்கு!!"
...
"பையன், சினுங்கறான்பா.. அப்புறம் பேசுறேன்"

ooo

"மாப்ள.. அப்பா ஆயிட்டேன்டா.."
...
"பையன்"
.....

"ஆமா.. இங்க உடுமலைல தான்"
.....
"ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க.."
......
"யாரு மாதிரின்னு எல்லாம் தெரியலடா.. நல்லா இருக்கான்"
....
"ஆமான்டா... ரொம்ப நன்றி!!"

ooo

"டாக்டர்.. ரொம்ப நன்றிங்க... எங்க மருமகளுக்கு நல்ல படியா பிரசவம் பார்த்துட்டீங்க"

"நான் உங்களுக்குத் தாங்க நன்றி சொல்லனும். பனிக்குடம் உடைஞ்சு 36 மணி நேரம் வரைக்கும் பொறுமையா இருக்க யாரும் தயாரா இருக்கமாட்டங்க. நீங்க என்னைய நம்புனதுக்கு ரொம்ப நன்றி"

"ஆமாங்.. டாக்டர்.. எங்க ரிலேட்டிவ்ஸ் சைட்லயும் ரொம்ப ப்ரஸர் இருந்ததுங்க.. நீங்க ஸ்கேன் பண்ணி ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணினதுல நாங்க கொஞ்சம் தைரியமா இருந்தோம்.."

"யேஸ்..ஹூ(WHO) கைடுலைன்ஸ் படி, 48 அவர்ஸ் வரைக்கும் வெயிட் பண்ணலாம.. பேபி நல்லா இருக்கறப்பா.."

"ஓ.."

"உங்க பையன.. நல்ல தைரியமான ஆளா வளர்த்திருக்கீங்க!! பிரசவ வார்டுல இவரு இருந்தது எங்களுக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்தது. நல்ல திடமா நின்னாரு....சில சமயம் கூட நிக்கறேன்னு வர்றவங்க மயக்கம் போட்டு விழுந்திடறாங்க. அதனால தம்பி.. You should be Proud of Yourself.. All the best"

"தாங்க்ஸ் டாக்டர்.."

ooo

எங்கள் குழந்தை பிறந்து (25.02.10) 12 நாட்களாகிவிட்டன. ஆனால், என் மனைவி சிந்திய ஆனந்த கண்ணிரும், டாக்டர். நிர்மலா பாலகுமார் அவர்கள் முகத்தில் தெரிந்த கருணையும், முதன்முதலில் பார்த்த எங்கள் குழந்தையின் முகமும், எங்கள் குடுபத்தினர் அடைந்த மகிழ்ச்சியும் கண்களிலேயே நிற்கின்றன. இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை!!

"இப்படி ஒரு டாக்டர் கிடைக்கறது அபூர்வம் தான்!!" என்பது தான் எங்கள் குழந்தையைப் பார்க்க வரும் உறவினர்களும், நண்பர்களும் உதிர்க்கும் வார்த்தைகள்!!

ooo

Related Posts with Thumbnails