Saturday, March 13, 2010

சோழனுக்குப் பெயர் சூட்டும் விழா..,

உன் விரல்களைப்போல சுருங்கிய
உன் உலகத்தை,
உள்ளங்கையில் குலுக்கி எடுத்து,
விசாலமாக்கி,
விரல்களுக்கு நடுவில்
விந்தைகளைச் சொருகி,
வாய்ப்புகளை வளர்ப்பால் மாற்றி,
வெற்றி பெற வைக்கும்
வித்தையைச் சொல்லித் தர
தாத்தா உண்டு.

விதவிதமாய் சமைத்துபோட
வகைவகையாய் வாங்கி போட
பூவான உன்னை ரோஜாவாக்கிட
பவுனாய் உன்னை பாதுகாத்திட
பாட்டி உண்டு.

மீசைக்கு நடுவில்
ஆசைத்தொட்டில் கட்டி
இசைத்தாலாட்டு பாட
மீசை தாத்தா உண்டு.

பார்வைகளில் நேசத்தையும்
வார்த்தைகளில் வாழ்க்கையும்
பாலுடன் பாசத்தையும் ஊட்ட
பாலா பாட்டி உண்டு.

பரணியை ஆள வந்த உன்னை
இளங்கோவின் மகன் -
இழுத்து விழ வைக்கும்போது,
மண் உரசிய உன் தோலை -
மனம் உரசி,
விழுந்ததால் வந்த புண்ணை -
விழுப்புண்ணாக்காமல் - ஆற்றி,
விந்தையாய் மறையச்செய்ய
ரிந்தியா உண்டு.

உச்சந்தலையில்
உச்சிவெயில் விழும்வரை காத்திருந்து
நிழலாகும் முகங்களை
காலத்தால் அழியாத
கல்வெட்டாக்க
சத்யமும் சிவனும் உண்டு



வட்டங்களில் உன்
வரம்புகளை வரையறுத்து,
பட்டங்கள் பெறுவதற்குத்
திட்டங்கள் தீட்டி,
எட்ட முடியாத உயரங்களை
எட்டி உதைக்கும் அளவிற்கு - முதுகில்
தட்டி தட்டி வளர்க்க,
புறம் நானூறை
புரிய வைக்க தந்தை உண்டு.

பார்த்து பார்த்து கட்டிவைத்த
பஞ்சுக் கோவிலில்
பிரார்த்தனைகள் பல புரிந்து
அகம் நானூறை
அறிய வைக்க அன்னை உண்டு.

எதிரிகளாய்
எங்கிருந்தோ வருபவர்களையும்
இயல்பான புன்னகையை
இலச்சினையாய் வைத்திருக்கும்
இலகுவான உன்னைப் பார்த்து
இயலாமையில்
போர்க்கொடியை தாழ்த்தி
புறமுதுகிட்டு ஓட
பூவுலகில் சாந்தி எப்போதும் உண்டு.

மெளனமாய் நீ இருக்கும்போது
குருவாக உன்
அருகில் வந்து
அடைத்துவைத்த உணர்வுகளை
உடைத்து வெளிஎடுத்து
நெற்றிக்கண்ணில் எரித்து புகைக்க
'சிலிண்டர்' சிவம் உண்டு.

பிறக்கும்போதே - இந்த சொந்தங்கள்
புடை சூழ பிறந்த
பேரரசனே!! - உனக்கு இன்று
பெயர் சூட்டும் விழா.


வாரங்களில் சோம வாரமாகவும்
பொருள்களில் பவுன் - ஆகவும்
இதயத்தில் இளங்கோ - வையும்
வீரத்தில் ஈஸ்வர் - யும்
ஹாஸ்யத்தில் ஹாசினி - யையும்
பாசத்தில் பரணி-யையும்

சிந்தனையில் சிவா-வையும்
சத்தியத்தில் காந்தி-யையும்
பண்பில் பாரதி-யையும்
எண்ணங்களில வேலன் - ஐயும்
எழுத்தில் கபிலர் - ஐயும்
ஏட்டில் சரஸ்வதி-யையும்
உனக்குள் வைத்து

அன்பால் அனைவரையும்
ஆட்சி செய்து
கோபங்களை எதிர்கொண்டு
உணர்வுகளோடு போர்புரிந்து
உள்ளங்களை வெற்றிகொள்ள
உலகத்தில் பிறந்தவனே!!!

பிறக்கும்போதே கிரீடமாய்
எங்களை சுமந்து பிறந்த
உனக்கு என்ன பெயர் சூட்ட?
.
.,
..,

நீ
பாசங்களை
வெற்றி கொள்ள பிறந்த
சிற்றரசன்.

கோ - அரசன் என்றால்
- சிற்றரசன்.

வெற்றி - தமிழ் என்றால்
'வின்' ஆங்கிலம்.

ஆக
உன் பெயர்
க-வின்
கவின்.

ஒவ்வொருவருவாக
இனி - உன்
காதுகளில் உரைப்போம்.
கவின்.,
கவின்..,
கவின்....,

எங்கள் குழந்தையின் பெயர் சூட்டும் விழாவை முன்னிட்டு என் சகலன், திரு.கபிலன் எழுதிய வாழ்த்துப்பாடல்!!


...

15 comments:

vasu balaji said...

கவினுக்கு வாழ்த்துகள்!:)

Prathap Kumar S. said...

கவிதை அருமை...
செந்தில் எப்ப கவிதை எழுத ஆரம்பிச்சாரு முதல்ல யோசிச்சேன்...:))

கவினுக்கு வாழ்த்துக்கள்...

ஈரோடு கதிர் said...

கவின்..
கவின்...
கவின்....

மாதேவி said...

கவின் அழகிய பெயர். வாழ்த்துக்கள்.

கணேஷ் said...

அண்ணா,

கவினுக்கு வாழ்த்துக்கள்....

ஜோதிஜி said...

அற்புதமான பெயர். மற்றொரு சிந்தனையாளராக மிளிர வாழ்த்துகள்.

Chitra said...

திரு.கபிலன், அழகான வாழ்த்து மடல் எழுதி இருப்பதற்கு பாராட்டுக்கள்.
கவினுக்கு வாழ்த்துக்கள்.

geethappriyan said...

நண்பரே
பெயரும் அழகு
வாழ்த்து மடலும் அழகு
விழாவுக்கு வாழ்த்துக்கள்

கோபிநாத் said...

அழகான கவிதை...கவினை போலவே ;-)

கவினுக்கும் & கபிலனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

கண்ணா.. said...

வெற்றிகளை குவிக்க வரும் சிற்றரசன் கவினுக்கு வாழ்த்துக்கள்

கவிஞர் கபிலனுக்கும்

:))

கார்த்திகைப் பாண்டியன் said...

கவினுக்கு வாழ்த்துகள்..:-)))))))

பழமைபேசி said...

மகிழ்ச்சி!

Unknown said...

கவினுக்கு வாழ்த்துகள்..

ஹுஸைனம்மா said...

கவிதையும், பெயரும் நல்லாருக்கு. கவின் நலமா?

“கவின்” என்ற பெயருக்கானப் பொருள் என்ன?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ வானம்பாடிகள்,
நன்றிங்க பாலாண்ணே!!

@@ பிரதாப்,
கவிதை எழுதவெல்லாம் இன்னும் ஆரம்பிக்கலீங்க (அது வேறயான்னு நினைக்கறது புரியுது ) நன்றிங்க.

@@ கதிர்,
நன்றிங்க.

@@ மாதேவி,
நன்றிங்க

@@ கனேஷ்
நன்றி தம்பி

@@ ஜோதிஜி,
நன்றிங்க

@@ சித்ரா
நன்றிங்க

@@ கார்த்திகேயன்
நன்றிங்க

@@ கோபிநாத்
நன்றிங்க தல

@@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றிங்க நண்பா

@@ கண்ணா,
நன்றிங்க

@@ திருஞானசம்பத்
நன்றிங்க

@@ ஹூசைனம்மா,

கவின் என்றால் அழகு என்று பொருள். நன்றிங்க.

@@ பழமைபேசி,

நன்றிங்க அண்ணா.

Related Posts with Thumbnails