Monday, September 28, 2009

தொழில் நேர்மை.

நேர்மையாக தொழில் செய்வது நம் கையில் உள்ளதா? இந்தக் கேள்விக்கான விடையை என் பள்ளிக்கால நண்பன், அன்பரசனைச் சந்தித்தபோது கிடைத்தது.

நானும் அவனும் பள்ளியில் நெருங்கிய நண்பர்கள். அவன் ஆந்திராவைச் சேர்ந்தவன். அவனது தந்தைக்கு ஆந்திராவில் பல லாரிகள் ஓடிக்கொண்டிருந்தன. என் ஊரான உடுமலையில், அவனது உறவினரின் வீட்டில் தங்கிப் படித்து வந்தான். பள்ளிக்கல்வியை முடித்த பின்னர் அவன் ஆந்திராவில் உள்ள சித்தூரிற்குச் சென்று விட்டான். நான் கல்லூரிப் படிப்பு, வேலை என்று சென்னை வந்துவிட்டேன்.

இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் தொடர்பிலேயே இருந்து வந்தோம். பள்ளி நாட்களைப் போல அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்பு கிடைத்தது. அப்பொழுது நான் ராணிப்பேட்டையில் வேலை பார்த்து வந்தேன். சித்தூர் ராணிப்பேட்டையிலிருந்து ஒரு மணி தொலைவில் உள்ள நகரம்.

அன்பரசனுக்கு அப்பொழுது ஏழெட்டு லாரிகள் இருந்தன. அவன் அலுவலகத்தில் சந்தித்தால் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுவான். அதுவும் மாதக்கடைசியாகிவிட்டால் சொல்லவே வேண்டாம். எனக்கு அவன் தொழிலைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம்.

ஒரு நாள் மெதுவாக அவனிடம்..

"உன் தொழில் எப்படி போகிறது" என்றேன்.

"நன்றாகத் தான் போகிறது" என்றான்

"அதென்ன 950ன்னு ஏதோ சொல்லீட்டு இருந்த?"

"ஒரு டன்னுக்கு 950 ரூபாய்னு லாரியை புக் பண்ணீட்டு இருந்தேன்" என்றான்.


"ஏண்டா உன் கிட்ட இருக்கறது 16 டன் லாரிக தான? ஒரு டன்னுக்கு 950 ரூபாய்ங்கறது கட்டுமா?" என்றேன்.


"கண்டிப்பா கட்டாது" என்றான்


"அப்போ?"


"இங்க வா.. இந்த லாரியப் பாரு. இது 16 டன் டபுள் ஆக்சில் லாரி. இதுல 16 டன் ஏத்தி ஓட்டனும்னா 1200 ரூபாய் இல்லாம கட்டாது. அதுக்கு நாங்க குறைஞ்சது 25 டன்னுக்கு மேல ஏத்துவோம்" என்றான்.


"டேய்.. செக் போஸ்ட் எல்லாம் இருக்குமே டா" என்றேன். நமக்கு இதெல்லாம் தெரிஞ்சாத்தானே..


"அட மாப்ள.. இதெல்லாம் அட்ஜஸ்மண்ட் தாண்டா.. நம்ம லாரி ரெகுலரா சித்தூர்ல இருந்து விசாகப்பட்டணம் வரைக்கும் போகுதுன்னா, மாசத்துக்கு ஒரு லாரிக்கு 15000 ரூபா கட்டீருவோம். இது செக்-போஸ்ட் கிளர்க்ல ஆரம்பிச்சு சின்ன மந்திரி பெரிய மந்திரி வரைக்கு பங்கு போயிடும். அதுக்கு ஈடு செய்யத்தான் நாமலும் ஓவர்லோட் பண்ணீருவோம்" என்று சிரித்தான்.


"சிஸ்டமேட்டிக்கா நடக்குதுனு சொல்லு"


"ஆமா.. ஒரு இடத்துல கட்டீட்டாப் போதும்"


"நீயி.. கட்டமாட்டேன்னு சொன்னீன்னா என்னாகும்" என்றேன்.


"என்னாகும்.. சரியா லோடு கொண்டு வந்தாலும் அந்த இன்வாய்ஸ்ல சொத்தை, பேப்பர்ல சொத்தை, ரோட் பெர்மிட்ல சொத்தைனு சொல்லி காக்க வைப்பானுக. மாசத்துக்கு 5 லோடு அடிக்கற எடத்துல நான் மூனு லோடு தான் அடிக்க முடியும்" என்றான்.


"சரி..16 டன் லாரில எப்படி 25 டன்னுக்கு மேல எத்த முடியுது?" என்றேன்.


"லாரி தயாரிக்கற கம்பெனிகளுக்கு என்ன வேணும்? அவங்க லாரிக நல்லா விற்பனை ஆகணும். அவங்க நல்லா லோடு தாங்கற மாதிரி லாரிகளத் தயார் பண்ணிடறாங்க. லாரிகளும் நல்லா விற்பனை ஆகுது. லாரிகள ஓவர்லோடு பண்றதுல நம்மள விட யாருக்கு லாபம்னு உனக்கே தெரியும்.." என்று கண்ணடித்தவன்


"இதோட நிக்கறது இல்ல.. நம்ம அரசாங்கம் தான ரோடு போடுது. நம்மள மாதிரி ஓவர்லோடு பண்ணினா ரோடெல்லாம் குண்டும் குழியும் ஆகிடும். அப்புறம்.. ஒட்டுப்போடறதுக்கு காண்டராக்ட் விடுவாங்க. அந்த காண்டாக்ட யார் எடுப்பாங்கனு உனக்கே தெரியும்.. ரோடு ரிப்பேர் பண்றது மாதிரி லாபமான பிசினஸ் எதுவுமே கிடையாது!!"என்றான்.


"இதோட முடிஞ்சுதா இல்ல..." என்று இழுத்ததற்கு


"நான் கடந்த பத்து வருசமா இதுல தான் இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு கண்டெயினர் பிசினஸ், டையர் கம்பெனிகனு எல்லாப் பக்கமும் இதே அட்ஜஸ்மண்ட் தான். நான் பிசினஸ் ஓட்டனுமனா இதை செஞ்சே தான் ஆகனும்" என்றான்.


அதற்குள்ளே அவனுக்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்துவிட்டது.

பள்ளி நாட்களில் அன்பரசன் நன்றாக படிப்பான். தமிழில் நன்றாகப் பேசுவும் செய்வான். பேச்சுப்போட்டிகளில் பரிசுகளெல்லாம் வாங்குவான். அவன் ஒருமுறை நேர்மையைப் பற்றி பேசியதற்கு முதல்பரிசு வாங்கியது என் நினைவிற்கு வந்தது.
அலைபேசி அழைப்பை முடித்து விட்டு வந்தவன்..


"சில வருசத்துக்கு முன்னாடி புதுசா ஒருத்தர் MP ஆனார். அவர் கட்சிக்கு நிறைய நிதியுதவி செஞ்சதால இந்த சீட் கிடைச்சுதாம். ஓரளவு நல்ல ஆள். அவர் வந்ததும் ஒவ்வொரு இடத்துக்கும் ஆளப் போட்டாங்க கட்சில. அவரு எந்த திட்டத்துக்கு எவ்வளவு வாங்கணும், எந்தக் கையெழுத்துக்கு எவ்வளவு பங்கு வரணும்னு எல்லா சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப பாரு.. அந்த ஆளும் நல்லா (?) தொழில் பண்ண ஆரம்பிச்சுட்டாரு" என்றான்.


"நேர்மையாத் தொழில் பண்றது நம்ம கையில இல்ல போல.. நீ சொல்றத பார்த்தா"என்றேன்.


"ஆமா.. மேல இருக்கவன் என்ன நினைக்கிறானோ அதப் பொறுத்துத் தான்.." என்றான்.


*******************

இது அன்பரசனுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் தான். 50 ரூபாயில் முடிக்க வேண்டிய திருமணப்பதிவை 1000 ரூபாய் கொடுத்து முடிக்கிறோம். எதற்காக? நேர விரயத்தைத் தவிர்ப்பதற்காக!!

நம் நாட்டில் ஏற்படும் இந்தப் பழக்கம் வெளிநாடுகளுக்குச் சென்ற பொழுதும் வருவதுதான் வேடிக்கையானது.

துபாயில், நம் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் ஓட்டுனர் உரிமம் கொடுக்கும் ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுத்ததாக அண்மையில் இங்குள்ள நாளிதழில் வெளிவந்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நாட்டு ஓட்டுனர் உரிமம் செல்லும். ஆனால் நம் நாட்டில் எடுத்த ஓட்டுனர் உரிமத்திற்கு சிறிதளவும் மதிப்பு கிடையாது.

தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக நாம் "ஆயுத பூஜை"யைச் செய்கிறோம். ஆனால் நேர்மையாக நடக்க வேண்டும் என்று என்றாவது தோன்றியிருக்கிறதா?

...

உங்களுக்கு இந்தப் பதிவு பிடிச்சிருந்தா மறக்காம தமிழிஷ்லயும் தமிழ்மணத்திலயும் ஓட்டுப்போடுங்கள். உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.
...

Friday, September 25, 2009

மொழிகளின் செல்வாக்கு!

உலகெங்கிலும் உள்ள மொழிகளுள் செல்வாக்கானவை எவை?

இந்தக் கேள்விக்கான விடையை இணைய தளங்களில் தேடிய பொழுது பல நல்ல தகவல்கள் கிடைத்தன. அதைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை.

சரி.. செல்வாக்கான மொழிகள் என்று எப்படி வரிசைப்படுத்துகிறார்கள்?

*முதன்மை மொழியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை.
*இரண்டாவது மொழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை.
*அலுவலக மொழியாக உள்ள நாடுகளின் மக்கள் தொகை.
*அந்த மொழியைப் பயன்படுத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தின் நிலை.
*வர்த்தகம், அறிவியல், வெளியுறவு போன்ற துறைகளில் மொழியின் பயன்பாடு.
*உலக அளவில் இலக்கியத்துறையில் அந்த மொழியின் நிலை.
*ஐ.நா போன்ற அமைப்பில் அம்மொழியின் நிலை போன்றவற்றை அளவுகோலாகக் கொண்டு மொழிகளில் செல்வாக்கை கணக்கிடுகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான அளவுகோல்களில் ஆங்கிலம் முன்னிலையில் உள்ளதால் ஆங்கிலம் உலகின் செல்வாக்கான மொழியாகிறது.
உலகெங்கிலும் பயன்பாட்டிலுள்ள மொழிகளுள் 10 செல்வாக்கான மொழிகள் என்ற பட்டியல் கீழே வருமாறு:
1. ஆங்கிலம்
2. பிரெஞ்சு
3. ஸ்பேனிஷ்
4. ரஷ்ய மொழி
5. அரபி
6. சீன மொழி
7. ஜெருமன்
8. ஜப்பானிய மொழி
9. போர்த்துகீசிய மொழி
10. இந்தி.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பேனிஷ், ஜெருமன், போர்த்துகீஷ் போன்ற ஐரோப்பிய மொழிகள், ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில் பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றன. அரபி மொழி மத்தியகிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், ரஷ்ய மொழி முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளன.


ஜப்பானிய மொழியை இந்தியை விடவும் குறைவானவர்களே பேசினாலும், அது இந்தியை விட செல்வாக்கான மொழியாக உள்ளதைக் காணலாம். அதற்குக் காரணம் வர்த்தகம், அறிவியல், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் பயன்படுத்துவதே காரணம். மேலும் இந்த மொழியைப் பயன்படுத்தும் ஜப்பானின் பொருளாதார மேன்மையும் மொழியின் செல்வாக்கிற்குக் காரணம் எனலாம். இதனாலேயே ஒரே ஒரு நாட்டில் பயன்பட்டாலும் நம் கல்லூரிகளிலும் ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுவதைக் காணலாம்.

ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளை சில வருடங்கள் வரை பயன்படுத்தாமல் இருந்த சீனர்களும், மேற்கத்திய தொழில்துறை வரவுகளாலும், அறிவியல் தொடர்புகளாலும் ஆங்கிலத்தைப் படிக்கவும் பேசவும் ஆரம்பித்துள்ளனர்.

கிரேக்க நாட்டில், ஒரு கொரிய வர்த்தக நிபுனர் பிரேசிலைச் சேர்த்தவருடன் பேச வேண்டுமென்றால் ஆங்கிலத்தையே பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. கிரேக்க நாட்டிலோ, கொரியாவிலோ, பிரேசிலிலோ ஆங்கிலம் அலுவல் மொழி கிடையாது. ஆங்கிலத்திற்குக் கிரேக்க மொழி அளவிற்கு வரலாற்றுச் சிறப்போ இலக்கியச் சிறப்போ கிடையாது. ஆனாலும் ஆங்கிலத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இவை யாவும் எதைச் சுட்டுகின்றன?

செல்வாக்கான மொழிகள் மேலும் செல்வாக்கடையும் என்பதையும், ஒரு மொழி செல்வாக்கான நிலையை அடைய வேண்டுமென்றால் இலக்கியச் சிறப்பு மட்டுமல்லாமல் பெரும்பாலான துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதையே சுட்டுகின்றன.

இதை அப்படியே நம் நாட்டில் பயன்பாட்டிலுள்ள மொழிகளைப் பார்த்தால் ஆங்கிலமும், இந்தியும் மிகவும் செல்வாக்கான மொழிகள் எனலாம். பெரும்பாலான மாநிலங்களில் பேச்சு மொழியாகவும் அலுவல் மொழியாகவும் இவ்விரு மொழிகளும் இருப்பது நாம் அறிந்ததே!!

2007ல் நடந்த எட்டாவது உலக இந்தி மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களில் இந்தியை சர்வதேச மொழியாகவும், ஐ.நா.வின் அலுவல் மொழியாகவும் அறிவித்தல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களிலும் இந்தித்துறையைத் துவங்குதல், வெளிநாடு வாழ் இந்தியர்களில் பிரதான மொழியாக இந்தியைப் பயன்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியைப் பயன்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.

இந்திய மொழியொன்று ஐ.நா.சபையில் பயன்படுத்தப்படுவது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் கொள்ளும் நிகழ்வே. அதே சமயம், அவரவர் தாய்மொழிக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காவிட்டால் நன்றாகவா இருக்கும்?

பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில், துறை சார்ந்த அமைச்சர்கள் இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் (தமிழில்) பதிலளிக்கக்கூடாது என்று கூறியது வருந்தத்தக்கது.

192 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல?

தமிழ் போன்ற மொழிகள் செல்வாக்கை இழக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும். இதனை நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் கடினமானதாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாததே!!

அதுவே செல்வாக்கான மொழியாக தமிழையும் வளர்க்க உதவும்!


உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள். இந்தப் பதிவு பிடித்திருந்தால் ஓட்டுக்களைப் போட மறக்காதீர்கள்.

..

Saturday, September 19, 2009

கல்வி 2010

நம் கல்வித்தரம் எப்படி உள்ளது?
உலகளவில் நிகழ்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நம் கல்விமுறை வடிவமைக்கப்பட்டுள்ளதா?
இவ்வாறு கல்வித்துறையில் சீர்திருத்தம் பற்றி விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

ஒரு பக்கம் தமிழகத்தில் சமச்சீர் கல்விமுறை அமலாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னொரு பக்கம் பத்தாம் வகுப்பு பரிட்சையை அகற்றுவது பற்றிய பரிசீலனை உட்பட இன்னபிற சீர்திருத்தங்களை மத்திய அரசும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ - இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் சி.பி.எஸ்.இ. முறை என்று தேசிய அளவிலான கல்வித் திட்டம் போதிக்கும் தனியார் பள்ளிகள் வேறு. பள்ளிக் கல்வி என்பது அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே சமச்சீர் கல்விமுறை.

பத்தாம் வகுப்பில் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவதும், பள்ளிப் படிப்பைத் துண்டிப்பதும் நடந்து வருகிறது. இந்தப் போக்கைத் தவிர்க்கவும் அதிகமானோர் கல்லூரிக் கல்வியைப் பெற, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து, அதற்கு மாற்றாக 'கிரேடு' முறை போன்ற சீர்திருத்தங்கள் தேவை எனவும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

தற்போது நமது நாட்டில் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையான 11 சதவிகிதத்தை 20 முதல் 25 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்பதும் சீர்திருத்தத்தின் நோக்கம்.


சமச்சீர் கல்விமுறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தம் பற்றியும் கல்வியாளர்கள் விவாதித்து வரும் வேளையில் நமக்கு எழும் கேள்வி, நம் கல்வித்தரத்தை உயர்த்த இந்த நடவடிக்கைகள் மட்டும் போதுமா?

* ஒவ்வொரு வருடமும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கிறது. அதாவது ஒருவர் கல்லூரியின் முதல் வருடத்தில் படித்தது நாலாவது வருடத்தில் காலாவதியாகிவிடும்.

* இன்னும் ஓரிரு வருடத்தில், சீனா அதிகமான ஆங்கில அறிவுள்ளோர் வாழும் நாடாகி விடும். பிறகு, நமக்கு தகவல் தொழில்நுட்பத்துறையிலும் கடும் போட்டி ஆரம்பித்துவிடும்.

* கூகுள் தளத்தில் செய்யப்படும் ஒரு மாதத்தேடல்கள் 300 கோடிக்கும் அதிகம். இதற்கு முன்பு என்ன செய்தோம்?

* தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஆப்டிகல் பைபர் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியினால் ஒரு நொடிக்கு 12 கோடி தொலைப்பேசி அழைப்புகளைச் செய்ய முடியும்.

அப்பொழுது எத்தனை தகவல் பரிமாற்றங்களைச் செய்ய முடியும்? இதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?


மேலே குறிப்பிட்டவை அனைத்தும் உலகளவில் நிகழ்ந்து வரும் மாற்றங்களில் சில.

நேனோ தொழில்நுட்பம், சமூக ஊடகம், இணைய வர்த்தகம் போன்றவை பத்து வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டுள்ளோமா? இன்னும் 10 வருடங்கள் கழித்து நாம் பார்க்கப் போகும் தொழில்களில் பெரும்பான்மையானவை இன்னமும் கண்டுபிடிக்கப்படாதவையாகவே இருக்கும். இது போன்ற மாறுதல்களைச் சந்திக்கவும், உலகளவில் சிறக்கவும் நமக்குப் புதிய திறமைகள் தேவைதானே?

தொழில்நுட்பத்தைக் கல்வியில் புகுத்துவது இன்றியமையாததாகிறது. மாணவர்களுக்கு எண்ணற்ற தகவல்களைக் கையாள்வதற்குக் கற்றுத் தருவதுடன், தகவல்களைப் புரிந்துகொள்ளவும், பயன்படுத்தவும் கற்றுத் தரவேண்டும். சுயமாக முடிவெடுக்கவும், தங்களுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுக்கும் பாங்கையும் சிறு வயதிலிருந்தே வளர்க்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்.

இன்னமும் பள்ளிக்கூடக் கட்டமைப்பே இல்லாத போது இது போன்ற மாற்றங்கள் எப்படி சாத்தியம் என்ற கேள்வி நமக்குள் வருகிறது தான். ஆனாலும், இது போன்ற மாற்றங்களையும் கொண்டு வந்தால் நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிக்கல்வி பெறும் அனைவரையும் உலகளவில் சவால்களை எதிர்கொள்ளவும், திறமையானவர்களாகவும் உருவாக்க முடியும்.

இந்தக் காணொளியைப் பாருங்கள்.. உலகம் எந்தளவிற்கு மாறிவருகிறதென்று உணர முடியும்.
இந்தக் காணொளி அமெரிக்கர்களுக்காக உருவாக்கப்பட்டது என்றாலும், இந்தக் காணொளியைப் பார்க்கும் பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்பதையும் உணர முடியும்.

உங்கள் கருத்துகளைக் கீழே பதியுங்கள்.

..

Friday, September 18, 2009

உன்னைப் போல் ஒருவன் - ஒரு கமல் ரசிகனின் பார்வை!

மக்களின் அமைதியைக் குலைத்திடும் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் விட்டுவைக்கக் கூடாது. அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும்!! இந்தக் கருத்தைத் தான் நம்மில் ஒருவராக வந்து கூறுகிறார் கமல்ஹாசன்.

சென்னை சென்ரலில் இருந்து கிளம்பவிருக்கும் ரயில், கோயம்பேடு காய்கறி அங்காடி, மாநகரப் பேருந்து, ஷாப்பிங் மால், ஒரு காவல் நிலையம் என்று பல இடங்களிலும் வெடிகுண்டுப்பைகளை கமல் வைக்க ஆரம்பிக்கும் பொழுதே (என்னைப் போல வெட்னஸ்டேவைப் பார்க்காதவர்களுக்கு) கதையில் ஒரு சஸ்பன்ஸ் வந்துவிடுகிறது.


பிறகு கட்டிமுடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் அமர்ந்து நெட்புக், அலைபேசி, சிம்கார்டுகளை வைத்து மாநகர தலைமைக் காவல் அதிகாரியான ராகவன் மாராரிற்குப் போன் செய்து பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளதாகக் கூறும் பொழுது படம் வேகமெடுக்கிறது.

கமல் கூறுவதை நம்பத் தயாராக இல்லை என்று மோகன்லால் கூற காவல் நிலையத்தில் வைத்துள்ள வெடிகுண்டு இன்னும் 20 நிமிடங்களில் வெடிக்கும் என்று கூற மாராரிற்குத் தீவிரம் புரிகிறது. இதே செய்தியைத் தொலைக்காட்சிச் செய்தி நிருபரிடமும் (அனுஜா) கூற விசயம் தொலைக்காட்சியில் வர ஆரம்பிக்கிறது.


வெடுகுண்டுகள் வைத்திருக்கும் இடங்களைக் கூற வேண்டுமென்றால் நான்கு தீவிரவாதிகளை மாலை ஐந்து மணிக்குள் விடுவிக்க வேண்டும், தவறினால் ஆறு மணிக்கு குண்டுகள் வெடிக்கும் என்று கூற, மாரார் விசயத்தை தலைமைச் செயலரிடம் (லஷ்மி) கூற, அரை மணி நேரத்தில் காவல் அதிகாரிகள் அவசரகால அறையில் (War Room) கூடுகிறார்கள்.


கமலிடம் அழைப்புகள் வர, அழைப்புகள் எங்கிருந்து வருகின்றன என்று கண்டுபிடிக்க முடியாமல் மாராரின் உதவியாளர்கள் குழம்ப, நேரம் நெருங்க, என்ன முடிவெடுப்பதென்று தலைமைச் செயலரும், மாராரும் காரசாரமாக விவாதிக்க என்று படத்தின் கதை வேகமெடுக்கிறது. என்ன முடிவெடுத்தார்கள்? தீவிரவாதிகளை விடுவித்தார்களா? கமலிற்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்பந்தம்? கமல் காவல்துறையிடம் சிக்கினாரா? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் திரையரங்கில் பாருங்கள்!!

இயக்குனராக சக்ரி டொலெட்டிக்கு இது முதல் படம். இதற்கு முன்பாக இவர் கமலின் இரண்டு படங்களில் நடித்துள்ளார். சலங்கை ஒலியில் கமலைப் புகைப்படம் பிடிக்கும் சிறுவனாகவும், தசாவதாரத்தில் கமலின் நண்பராகவும் நடித்திருப்பார். நல்ல படத்தை ரீமேக் செய்ததற்கு முதல் வாழ்த்துகள்!

படத்தின் வசனகர்த்தா பிரபல எழுத்தாளர் இரா. முருகன்! படத்திற்கு இவரது வசனம் ஒரு பலம். கிரிக்கெட் பந்து பட்டு வீட்டுக்கண்ணாடி உடைந்ததற்கு ஒரு பிரபல நடிகர் (ஸ்ரீமன்) தனக்கு பாதுகாப்பு வேண்டுமென்று கேட்குமிடமாகட்டும், காவல் நிலையத்தில் வரும் ஆரம்பக் காட்சிகளாட்டும் நகைச்சுவையைத் தூவியுள்ளார். கமலிற்கும் மோகன்லாலிற்கும் நடக்கும் பேச்சுவாத்தை காரசாரமானவை! கண்டகரில் ஆரம்பித்து குஜராத் கலவரம், கோவை குண்டுவெடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு பற்றி வரும் வசனங்களில் வரலாறும் மனித நேயமும் சரிவர வருகின்றன. வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கேட்டது.


படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் சோனியும் எடிட்டர் ரமேஸ்வர் பகத்தும் ஆரம்பம் முதல் கடைசி வரை படத்தின் வேகத்தை கூட்டுகிறார்கள். அவசர கால அறையாகட்டும், கோயம்பேடு சந்தையாகட்டும் தோட்டாதரணி தெரிகிறார்.


படத்தில் பாடல்கள் இல்லாதது படத்திற்கு பலம். படம் முழுக்க நம் இதயத்தை தடதடக்க வைக்கிறது ஸ்ருதிஹாசனின் பின்னனி இசை! பாடல்கள் சுமார் ரகமென்றாலும் இனி வரும் நாட்களில் நன்றாக வரும் என்று நினைக்கிறேன்.

காவல் அதிகாரிகளாக வரும் பரத் ரெட்டியாகட்டும், கணேஷ் வெங்கட்ராமனாகட்டும், மோகன்லாலிடம் "இங்கே சிகரட் குடிக்கலாமா?" என்று குறும்புத்தனமாகக் கேட்கும் அனுஜாவாகட்டும் கொடுத்த வேடத்தில் நன்றாக நடித்துள்ளார்கள். நல்ல கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடித்தால் கணேஷ் வெங்கட்ராமனுக்கு நல்ல எதிர்காலமுண்டு! (ஆக்சன் ஹீரோக்கள் ஜாக்கிரதை!!)


படத்தின் நாயகன் மோகன்லாலைப் பற்றி (நான்கு முறை தேசிய விருது வாங்கியவர்) நான் சொல்ல வேண்டியதில்லை. கமல்ஹாசன் மோகன்லால் இருவருக்கும் பெரும்பாலான காட்சிகள் க்ளோஸ-அப் காட்சிகள் தான். (இப்பல்லாம் யாருடா க்ளோஸ்-அப்ல நடிக்கறாங்கனு எங்கப்பா கேட்டது நினைவிற்கு வருகிறது)

தீவிரவாதிகள் தொடர்பான முடிவுகளை அவ்வளவு இயல்பாக மாராரே எடுப்பது கொஞ்சம் லாஜிக் இடிக்கிறது. லஷ்மியின் கதாபாத்திரமும் ஒப்பனையும் "என்னடா இது"ன்னு கேட்கவைக்கிறது.

தொலைபேசியில் தக்காளி வாங்கிவரச்சொல்லும் கமலின் (முகம் காட்டாத) மனைவியாகட்டும், அவ்வப்பொழுது தொலைபேசியில் உரையாடும் முதல்வராகட்டும் நினைவில் நெஞ்சில் நிற்கிறார்கள்.


அங்கங்கே சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் ரசிக்கும்படியாகவே உள்ளது. ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு கமல் ரசிகனான எனக்கு!!

"பார்முலா சினிமா"க்களின் மத்தியில் உன்னைப்போல் ஒருவன் கம்பீரமாக நிற்கிறான்.
**
விமர்சனம் சரியாக இருந்ததா என்று (படம் பார்த்துவிட்டுக்) கூறுங்கள் :-)

**

சில துளிகள்:
* ராஜ்கமல் இண்டர்நேஷனலின் லோகோ புதிகாக உள்ளது.
* நான் பார்த்த ஷார்ஜா கன்கார்ட் திரையரங்கில் இடைவேளை விடாதது கவனிக்கத்தக்கது.
* உலகநாயகன், லாலேட்டன் போன்ற பட்டங்கள் இல்லாமல் பெயர்கள் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

* படத்தின் வசனகர்த்தா இரா.முருகன் எழுத்தாளர் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் தான் கமலை சந்தித்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

**

Wednesday, September 16, 2009

தூர்தர்ஷனுக்கு வயசு 50!!

வாருங்கள்!! ஐம்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் தூர்தர்ஷனை வாழ்த்துவோம்.

நேற்று தூர்தர்ஷன் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 1959ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது தூர்தர்ஷன் நிறுவனம். தூர்தர்ஷனை ஆரம்பிக்க ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு மானியமாக வழங்கியது 20000 அமெரிக்க டாலர்கள். ஆரம்பத்தில் ஆல் இந்தியா ரேடியோ இடத்தையும் செய்திகளையும் கொடுத்தது.


ஆரம்பத்தில் தில்லியில் மட்டும் சேவையை வழங்கிய தூர்தர்ஷன் பிறகு 1972ல் மும்பை, அம்ரிட்சர் பிறகு மெதுவாக பெருநகரங்களுக்கு வர ஆரம்பித்தது. தூர்தர்ஷன் நாடெங்கும் சேவையை விரிவாக்கியது 1982ல் தான். அதாவது 23 ஆண்டுகள் சிறிய அளவிலேயே இருந்தது என்றால் நம்பவா முடிகிறது?

தூர்தர்ஷன் என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவது ஆரம்பிக்கும் பொழுது வரும் இசை தான்.

என்னதான் இன்று நூற்றுக்கணக்காக சேனல்கள் வந்துவிட்டாலும் ஆயிரக்கணக்காலும் நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டாலும் நம் இளவயதில் தூர்தர்ஷனில் பார்த்த நிகழ்ச்சிகளுக்கு மனதில் நீங்கா இடமிருக்கத்தான் செய்கிறது.

ஞாயிற்றுக்கிழமை போடப்படும் ரங்கோலி பாடல்கள், பிறகு ஹீமான், ஜங்கிள் புக்ஸ், ராமாயணம், விண்வெளி ஆராய்ச்சி நிகழ்ச்சி, மதியம் ஒரு மணிக்கு வரும் காது கேளாதோர் நிகழ்ச்சி, மாலையில் ஸ்பைடர் மேன் பிறகு ஏதாவதொரு படம். சில வருடங்கள் மதியம் 12 மணியளவில் வந்த சார்லி சாப்ளின், லாரெல் ஹார்டி... எல்லாம் அழகான நினைவுகள்!!

சனிக்கிழமை இரவுகள் என்றால் ஸ்றீட் ஹாக் (STREET HAWK), நைட் ரெடர் (KNIGHT RIDER ), சில வருடங்கள் கழித்து வொர்ல்ட் திஸ் வீக்!! புதன் கிழமைகளில் சித்ரஹார், வெள்ளிக்கிழமைகளில் ஒலியும் ஒளியும் என இப்பொழுது நினைத்தாலும் இனிமையாக இருக்கிறது.


நான் ரசித்த பல நல்ல கிரிக்கெட் தொடர்கள் தூர்தர்ஷனில் பார்த்தவை தான். 1992 உலகக்கோப்பைப் கிரிக்கட், பல ஷார்ஜா போட்டிகள், 1993ல் நடைபெற்ற ஹீரோ கோப்பை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் மிலே சுர் மேரா தும்ஹாரா தான், அதன் அர்த்தம் புரியாவிட்டாலும்!! பல கலைஞர்களும், பல மா நில கலாச்சாரச் சின்னங்களையும் இடங்களையும், பல நடிகர்களையும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியானது. அதுவும் பாலமுரளிகிருஷ்ணா தமிழில் பாடும்பொழுது ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள்!!

என்னதான் அங்கங்கே தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று முக்கிய நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பில் சொதப்பினாலும், முக்கிய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பாமல் கடுப்பேற்றினாலும் நம் சிறு வயது நினைவில் தூர்தர்ஷனுக்கு ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வர ஆரம்பித்த கடந்த 15 ஆண்டுகளில் காணாமல் போன நிறுவனங்கள் எத்தனை?

தற்போது தூர்தர்ஷனைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைய பொருளாதாரச் சிக்கல்கள், அரசியல் தலையீடு, தொழில்நுட்ப வளர்ச்சியில் தனியாருடன் போட்டியிட முடியாதது என்று பல காரணங்களைக் கூறினாலும் தூர்தர்ஷனுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

வாருங்கள்!! ஐம்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் தூர்தர்ஷனை வாழ்த்துவோம்.
..

Tuesday, September 15, 2009

சீனப்பெருஞ்சுவரில்..


உலக அதிசயங்கள் என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது சீனப்பெருஞ்சுவரும் ஈகிப்திய பிரமிடுகளும் தான். என்ன தான் ரோமானியக் கலோசியம், தாஜ்மகால், ஜோர்டானின் பெட்ரா நகரம், பெருவின் மச்சு பிச்சு, மெக்சிகோவின் செச்சென் இட்சா என்று உலக அதிசயங்களை பட்டியலிட்டாலும் சீனப்பெருஞ்சுவர்க்கும், பிரமிடுகளுக்கும் ஒரு தனி இடம் தான்.

பள்ளி நாட்களில் சீனப் பெருஞ்சுவரைப் பற்றிப் பாடப்புத்தகத்தில் படித்தவுடன் அது எப்படி இருக்கும் என்று வரைபடத்தில் பார்த்துக் கொள்வேன். சீனாவின் பெரும்பகுதியில் ஏதோ பாம்பை வரைவது போல் வரைந்திருப்பார்கள். ஆனால் அப்பொழுது அது எவ்வளவு பெரியது என்றெல்லாம் தெரியாது. ஆனால் தகவல் களஞ்சியங்களில் சீனப்பெருஞ்சுவரின் நீளம் 5000 கிலோ மீட்டருக்கும் அதிகம் என்று படிக்கும் பொழுது அதன் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது.

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீரின் வரையிலான தூரம் 3700 கிலோ மீட்டரென்றால் 5000 கிலோ மீட்டர் எவ்வளவு தூரம். 5000 கிலோ மீட்டரென்றால் எத்தனை ஆண்டுகள் கட்டியிருப்பார்கள், எத்தனை பேர் சேர்ந்து கட்டியிருப்பார்கள் என்று வியப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கும். ஜீன்ஸ் திரைப்படத்தில் உலக அதிசயங்களில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளில் என்னை மிகவும் கவர்ந்தது சீனப் பெருஞ்சுவர் காட்சி தான்.

அந்தப் பாடலைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த இடத்திற்குப் போக வேண்டும் என்ற ஆசை வரும். எனக்கு அலுவலக வேலை நிமித்தமாக சீனத் தலைநகரம் பீஜிங் செல்லும் வாய்ப்பு 2006ல் கிடைத்தது.
நான் பீஜிங்கில் தங்கியிருந்த விடுதியில் சீனப்பெருஞ்சுவர் செல்ல ஏதாவது வசதியிருக்கிறதா என்று கேட்ட பொழுது, தினமும் விருந்தினர்களை அழைத்துச் செல்ல பேருந்து வசதியிருப்பதாகக் கூறினார்கள். அந்த வார ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பதிவு செய்துகொண்டேன். அடுத்த நாள் காலையில் பேருந்து கிளம்பியது. தாய்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கொலம்பியா, பிரான்ஸ் என்று பல நாட்டுக்காரர்களும் பேருந்தில் வந்தனர். எனக்கு தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் பேச்சுத்துணைக்கிருந்தார். பீஜிங் விடுதியில் இருந்து கிளம்பிய பேருந்து முதலில் மிங்க் டாம்ப் என்னும் இடத்திற்குச் சென்று பிறகு பாடாலிங் என்னும் இடத்திலுள்ள சீனப்பெருஞ்சுவர் பகுதிக்குச் சென்றது. பீஜிங் நகரில் இருந்து இரண்டு மணி நேரப்பயணம்.

பாடாலிங் என்னுமிடத்தில் ஒரு மலைத்தொடர் உள்ளது. அதில் சீனப்பெருசுவரைக் கட்டியுள்ளனர். மலை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல ஒருவர் அமரும் அளவிற்கு ஒரு (குழந்தைகள்) ரயில் உள்ளது. அதில் ஏறிக்கொண்டால் பத்து நிமிடத்தில் பெருஞ்சுவரின் ஒரு பகுதியில் விடுகிறார்கள்.சீனப்பெருஞ்சுவரில் ஏறிய பொழுது தான் தெரிந்தது சீனர்களின் திட்டமிடுதலும் சாமர்த்தியமும்!!

பெருஞ்சுவரானது ஐந்து முதல் எட்டு அடி வரை அகலம் உடையதாக உள்ளது. சுவரின் உயரம் சில இடங்களில் 4 அடி முதல் 8 அடி வரையிலும் இருந்தது.


சுவரைக் கட்ட பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் அனைத்தும் சதுரம் வடிவில் ஒரு அடி முதல் ஒன்றரை அடி வரை உள்ளதாக இருந்தது.

இதனைக் கட்ட முட்டை கருப்புச்சக்கை சுண்ணாம்பு போன்ற பொருட்களை பூச்சாக பயன்படுத்தியுள்ளார்கள் என்று அறிந்தது ஆச்சர்யமாக இருந்தது. இது போல நம் மன்னர்களின் கோட்டைகளும் கட்டப்பட்டுள்ளது.


இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சுவரை மலைத்தொடரின் உச்சியிலேயே கட்டியிருப்பது தான். பெருஞ்சுவர் எதிரி நாட்டுப் படையெடுப்பகளில் இருந்து காக்கவே கட்டியுள்ளார்களாம். நாட்டினுள்ளே வரவேண்டுமென்றால் மலையைக் கடந்து இந்தச் சுவரைக் கடந்து தான் வரவேண்டும். ஒரு போர் வீரர் போதுமாம் தோராயமாக 20 எதிரிகளைச் சமாளிக்க.

இவ்வாறு சீனர்கள் 2000 ஆண்டுகளாக 5000 கிலோமீட்டகளுக்கு இதைக் கட்டியுள்ளார்கள். சில இடங்களில் செங்குத்தான மலைமுகடுகளில் ஊர்ந்தும், சில இடங்களில் பாலைவனத்திலும் சில இடங்களிலும் ஆறுகளைக் கடந்தும் காலத்தால் அழியாத சின்னமாக விளங்குகிறது.


இப்படி ஒரு அதிசயத்தைக் கட்ட வேண்டுமென்றால் எவ்வளவு கற்களைக் கொண்டு வரவேண்டும். அதுவும் மலை உச்சிக்கு!! யானைகளை அமர்த்தினார்களா இல்லை மனிதர்களே சுமந்து வந்தார்களா? எத்தனை பேர் இறந்தார்கள் இந்தப் பணியில்? இத்தனை பேரை ஈடுபடுத்த வேண்டுமென்றால் எவ்வளவு பெரிய எதிரிகள் இருந்திருக்கவேண்டும் சீனர்களுக்கு?
இதை எல்லாம் படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.


இந்த சாதனையைப் பார்த்த பொழுது சமகால மனிதர்களின் சாதனையெல்லாம் தூசுக்கு சமம் என்றே தோன்றியது.

..

Friday, September 11, 2009

கமல் ரசிகன் என்பதில்..

டேய், உன் ஆளு யாருடா? கமலா ரஜினியா?

இந்தக் கேள்வி நம் அனைவருக்குமே பழக்கமானது தான்.
இப்படித்தாங்க விடுமுறை முடிந்து பள்ளிக்கு போன உடனே ஆரம்பித்தது அரட்டை.

"டேய் லீவுல என்னடா பண்ணுன"னு சதீஸ் கேட்க
"நான் கோயமுத்தூர் போனன்டா"
"நான் இங்க லதாங்கில ராஜாதிராஜா பாத்தேன்.. சூப்பரா இருந்துச்சு தெரியுமா?"
"டேய், நான் கோயமுத்தூர்ல அர்ச்சனா தேட்டர்ல அனுபவ சகோதரர் படம் பாத்தேன்டா. பக்கத்துத் தர்ச்சனா தேட்டர்ல ராஜாதிராஜாக்கு கூட்டமே இல்லை தெரியுமா"ன்னு நான் சிரிக்க.
"உங்க ஆளு படத்துல எத்தன ஃபைட் டா? எங்க ஆளோட "சிவா" படத்துல 8 ஃபைட்டு தெரியுமா"ன்னு சுரேஷ் சொல்ல..
"போடா டேய்.. அனுபவ (அபூர்வ) சகோதரர்ல எங்காளு குட்டையா நடிச்சிருக்கார் தெரியுமா"ன்னு நான் சொல்ல
"அய்யே! உங்க ஆளு மோசமாம், அதனால உங்காளு படத்தப் பாக்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லீருச்சு"ன்னு சுரேஷ் சொல்ல
"போடா.. உங்க ஆளப் பத்தி எனக்குத் தெரியாதா"னு நான் சொல்ல ஆரம்பிச்சுது பாருங்க சண்டை!!
இந்தப் பக்கம் நாலஞ்சு பேரு அந்தப் பக்கம் நாலஞ்சு பேரு. வகுப்பே களேபரம் ஆயிடுச்சு. அப்புறம் என்ன ஆசிரியை வந்து வகுப்புக்கு வெளியே முட்டி போட வெச்சாங்க.

அந்த வயசுல நான் எப்படி கமல் ரசிகன் ஆனேன்னு நினைச்சுப் பார்த்தா சிரிப்பாத்தாங்க வருது.

எங்க அத்தை பசங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் ரஜினி ரசிகர் இன்னொருத்தர் கமல் ரசிகர். ரெண்டாவது அத்தை பையன் நம்ம கூட்டாளிங்கறதால அவரு சொல்றதக் கேட்டு எனக்கும் பிடிக்க ஆரம்பிச்சிருக்கனும்.
பத்து வயசுல நமக்கு நல்ல படம் கெட்ட படம் எல்லாம் தெரியுமா என்ன?

"அபூர்வ சகோதரர்கள்"ல ஆரம்பிச்சது அப்படியே வெற்றி விழா, மைக்கேல் மதன காம ராஜன், குணானு ஒரு படம் விடாமல் பார்ப்பது என்று கமலின் ரசிகனானேன். [ எதனாலனே புரியாமா ;) ]
தளபதியுடன் வெளியான குணா சரியாக ஓடவில்லை!! "படத்துல சண்டை இல்லாததால தான் படம் ஓடல"னு நினைத்திருந்த எனக்கு பக்கத்து வீட்டு குட்டியண்ணன் குணா நல்ல படம்னு சொன்னது வியப்பாக இருந்தது.

அப்போ தான் வீடு, பசி போன்ற படங்களை எல்லாம் தூர்தர்ஷனில் திரையிடுவார்கள். "என்னடா இப்படி போரா இருக்குதே, இதுக்கு எப்படி நேஷனல் அவார்டு கொடுத்தாங்க"ன்னு தோணும். அப்போ அவார்டு வாங்கற படங்க ஓடாதோனு தோணும் :) [ இப்ப வரைக்கும் இது ஓரளவு உண்மை தான் ]

அடுத்த வருஷம் வந்த "தேவர் மகன்" எங்கூரு உடுமலை லதாங்கில சக்கைப்போடு போட்டுச்சு. அந்த வருட மாநில விருது ஒரு சில தேசிய விருதெல்லாம் அந்தப்படம் வாங்க நல்ல படமும் ஓடலாம் விருதுகளும் வாங்கலாம்ங்கற எண்ணம் வளர ஆரம்பிச்சுது.

கமல் படங்களின் வருகை குறைய ஆரம்பித்திருந்தாலும் வெளியாகும் படங்களை உடனுக்குடன் பார்த்துவிடவேண்டுமென்ற ஆவல் மட்டும் குறைந்தேயில்லை. உடுமலையில் படம் வெளியாகவில்லை என்றால் பொள்ளாச்சியிலோ பழநியிலோ படங்களைப் பார்த்தாக வேண்டும்.

படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால்,
"என்னடா உங்காளு படம் எப்படி இருக்குது"ம்பார் எங்கப்பா.
"சூப்பரா இருக்குப்பா"ம்பேன்.
"நீ படம் சூப்பருனு சொல்லுவ. ஆனா ஓடத்தான் மாட்டேங்குது"னு என்னைக் கிண்டல் செய்வார்.
"உங்க சிவாஜி படமெல்லாம் ஓடாமா இருந்ததில்லையா"னு திரும்பக் கேட்டத்தான் நமக்குத் திருப்தி.

எனக்கு விவரம் தெரிந்து உடுமலையில் ஐம்பது நாட்களைக் கடந்த கமலஹாசன் படங்களென்றால் தேவர்மகன், சதிலீலாவதி, இந்தியன், அவ்வை சண்முகி, தெனாலி, வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு மட்டும் தான்.

கமல் படங்களின் ரசிகன் என்ற முத்திரை நண்பர்கள் வட்டம் மட்டுமல்லாது என் உறவினர்கள் மத்தியிலும் தெரிய ஆரம்பித்ததற்கு கமலின் நகைச்சுவைப் படங்களின் மீது எனக்கிருந்த விருப்பம் தான் காரணம். எந்த இடத்தில் என்ன காமெடி வரும் என்று மனதில் பதிந்துள்ளது எனக்கே வியப்பு தான்!
[இந்த அளவுக்கு பாடம் கூட மண்டையில ஏறியிருக்காது ;) ]
பேசும்படம், மைக்கேல் மதன காம ராஜன், சிங்காரவேலன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா என நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களானாலும் மகாநதி, தேவர்மகன், குணா, குருதிப்புனல், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம் போன்ற முயற்சிகளானாலும் கமலின் படங்களின் மீதிருக்கும் ஈடுபாடு மட்டும் குறையவதே இல்லை.

நான் தரமான படங்கள் என்று நினைத்திருந்த பலதையும் ஆங்கிலப் பிரதி என்றோ தவறான கருத்துகளைக் கொண்டவை என்று கூறினாலும் கமலஹாசனின் முயற்சிகளுக்காகப் அவர் படங்களைப் பாராட்டியே தீர வேண்டும் என்ற கருத்து எனக்கு இருக்கத்தான் செய்கிறது.

இதோ இன்னொரு படம் வெளியாகத் தயாராகி வருகிறது. ஹிந்தியில் வெட்னஸ்டே என்ற பெயரில் வெளியாகிய படத்தின் ரீமேக் தான் விரைவில் வெளியாகவிருக்கும் "உன்னைப் போல் ஒருவன்".

இன்று என் வீட்டில் அதிகமாக ஒலித்திருக்கும் பாடல் "நிலை வருமா".
நல்ல சினிமா பற்றிய தெளிவு ஓரளவு வந்திருந்தாலும், உலக சினிமா பற்றிய அறிமுகங்கள் கிடைத்திருந்தாலும் கமலஹாசனின் ரசிகன் என்று அறியப்படுவதில் எனக்கு மகிழ்ச்சியே!!

..

Tuesday, September 8, 2009

எது முக்கியம்?


நாம் அன்றாடம் செய்யும் பணிகளின் தன்மையைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா?

காலையில் எழுகிறோம், அலுவலகத்திற்குச் செல்கிறோம், கொடுத்த வேலைகளைச் செய்கிறோம், நண்பர்களுடன் உரையாடுகிறோம், வீடு திரும்புகிறோம், நம் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறோம், தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களைப் பார்க்கிறோம், இணையதளங்களில் கும்மியடிக்கிறோம், பிறகு தூங்கச்செல்கிறோம்.

நம் பெரும்பாலானோரின் நாள் இப்படித்தான் செல்கிறது.

நமக்காக நாம் என்ன செய்கிறோம்?

எனக்கு அலுவலகத்தில் நல்ல சம்பளம் கிடைக்கிறது, வீட்டிற்கு வேண்டியதெல்லாம் வாங்கமுடிகிறது. எங்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறித்தான் உள்ளது, வேற என்ன வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

சரி, இந்த முன்னேற்றம் தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

உங்கள் சம்பளம் அதிகரித்த அளவு உங்கள் கனவுகள் நிறைவேறியுள்ளதா? உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா? உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா?


முதலில் நாம் அன்றாடம் பார்க்கும் பணிகளின் தன்மையைப் பார்ப்போம்.

அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

1. முக்கியமானவை, அவசரமாக முடிக்கவேண்டியவை.
2. முக்கியமானவை, அவசரமற்றவை
3. முக்கியமற்றவை, அவசரமானவை
4. முக்கியமற்றவை, அவசரமற்றவை.

* அலுவலகத்தில் உடனடியாக முடிக்கவேண்டிய வேலை, அலுவலகம் மற்றும் குடும்பத்தில் உடனடி கவனம் தேவைப்படுபவை, தேர்வுகள் போன்றவற்றை முக்கியம் மற்றும் அவசரமானவையில் சேர்க்கலாம். இது போன்ற வேலைகளை நாம் தவிர்க்க இயலாது.

* திறமைகளை வளர்த்தல், வேலை/ வாழ்க்கைக்கான திட்டமிடல், நல்ல தொடர்புகளை ஏற்படுத்துதல், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றை முக்கியமானவை அவசரமற்றவையில் சேர்க்கலாம்.

* அலுவலகத்தில் சந்திக்கும் இடையூறுகள், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள், தேவையற்ற சந்திப்புகள், சுவரஸ்யமான வேலைகள் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமானவையில் சேர்க்கலாம்.

* பொழுதுபோக்கு, அரட்டை, கிசுகிசு, தொலைபேசியில் நேரத்தை செலவிடுவதல் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமற்றவையில் சேர்க்கலாம். இது போன்ற பணிகளால் நமக்கோ நமது முன்னேற்றத்திற்கோ எந்த வகையிலும் பயனில்லை.

இந்த நான்கு வகையான வேலைகளில் நாம் அதிக நேரம் செலவிடுவது எதில்?


பெரும்பாலானோர் ஒன்று, மூன்று மற்றும் நான்காம் வகையைச் சார்ந்த பணிகளிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்.

எப்பொழுதும் அலுவலகத்தில் அவசரமாக வேலை வருகிறதென்றால் என்ன காரணம்? நம் திட்டமிடுதலில் தவறா அல்லது நமக்குப் போதிய திறமை இல்லையா அல்லது மேலதிகாரியின் தவறா?

நம் உடல் நலம் கெடுவதற்கு நம் வேலைப்பழு காரணமா அல்லது உடல் நலனில் கவனம் செலுத்தாத நம் மெத்தனம் காரணமா?

குடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?

இவை அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றால் இரண்டாம் வகை வேலைகளில் நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் திறமைகளை வளர்ப்பதன் மூலம் நம் அலுவலகத்தில் பதவி உயர்விற்குத் தயாராகலாம். குடும்பத்திற்கு தேவையானவற்றைத் திட்டமிடுவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

இப்படி ஒதுக்க முடியாமல் போவதற்குக் காரணம் என்ன? நேரமின்மையா அல்லது பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவிடுவதா?


இன்றைக்கு பெருகிவரும் இணையதளங்களும், சமூக வலையமைப்புகளும் நம்மை வசியப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்பதை உடனுக்குடன் தெரிவிப்பது, நண்பர்களுடன் மின்னாடுவது (CHAT), இணைய குழுமங்களில் கும்மியடிப்பது, பதிவுலகில் அளவளாவுவது என்று பொழுதுபோக்கு விடயங்களில் நேரம் போவதே தெரிவதில்லை.


ஆனால் இதனால் என்ன பயன்?


நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள், பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிந்து கொள்கிறோம் என்றாலும் அது நாம் செலவிடும் நேரத்திற்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கும்.

இதுவே பதிவுலகம் என்றால் சொல்லவே வேண்டாம்.

பதிவுலகினால் பல தரப்பட்ட கருத்துகள் தெரியவருகிறது, நல்ல நண்பர்கள் பலர் கிடைக்கிறார்கள் என்றாலும் இது நம் சுயமுன்னேற்றத்திற்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பதிவுலகம், சமூக வலையமைப்புகள் போன்றவை எல்லாம் முக்கியமற்றவை அவசரமற்றவை என்ற வகையிலேயே சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. எழுத்துலகில் அடியெடுக்க நினைக்கும் சிலருக்கு மட்டுமே பதிவுலகம் பெருமளவில் உதவும்!!
உடனுக்குடன் பின்னூட்டமிட வேண்டும், தினமும் பதிவெழுத வேண்டும் என்பதைத் தவிர்த்து விட்டு நேரமிருக்கும் பொழுது பின்னூட்டமிடலாம், பதிவெழுதலாம் தானே!!

முக்கியமற்ற விடயங்களில் செலவிடும் நேரத்தை முக்கியமானவற்றுள் செலவிட்டால் நாமும் முன்னேற முடியும், நம் வாழ்க்கையும் வளமையடையும்.

எது முக்கியம்? முடிவெடுங்கள் நண்பர்களே!

** இந்தக் கட்டுரை STEPHEN R.COVEY எழுதிய 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE என்ற நூலில் தரப்பட்டுள்ள சில கருத்துகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது!

**

Saturday, September 5, 2009

பிளாக்கர் தளத்திற்கு வயது 10


கடந்த வாரம் பத்து வயதைக் கடந்திருக்கும் "பிளாக்கர் தளத்தை" வாழ்த்துவோம்.

உங்களுக்கு ஏதாவதொரு கருத்தைத் தெரிவிப்பதில் பயமிருந்ததுண்டா? அந்த பயத்தைப் போக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது வலைப்பதிவர் ஆவது தான்.

என்ன பதிவரானால் "கருத்தைத் தெரிவிப்பதில் பயம் போய்விடுமா?" என்றால் ஆம் என்று தான் சொல்லவேண்டும்.

நம்மில் பெரும்பாலானோர்க்கு இருட்டு, உயரமான இடத்திற்குச் செல்வது, பாம்பு, மருத்துவர் போடும் ஊசி போன்றவற்றிற்கு பயம் இருந்தாலும் நம் கருத்தைத் தெரிவிப்பதிலும் பயம் இருக்கத்தான் செய்கிறது.

அது நமது பள்ளி நாட்களாகட்டும், நாம் பணிபுரியும் அலுவலகமாகட்டும், நண்பர்களுடன் நடத்தும் உரையாடலாகட்டும் நம் கருத்தைத் தெரிவிப்பதில் பயம் அல்லது தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. அதுவே நம் கருத்தை எழுதவேண்டுமென்றால், அந்தத் தயக்கம் இரண்டு மடங்காகி விடும்.

இங்கே தான் நமக்கு பதிவுலகம் நமக்குக் கை கொடுக்கிறது.

திரைப்படத்துறையோ, அரசியலோ, தொழில்துறையோ, நகைச்சுவையோ எதுவாக இருந்தாலும் நம் கருத்தைத் தெரிவிப்பதற்கும், அதே விடயத்தில் பிறர் கருத்தைத் தெரிந்து கொள்ளவும், நம் திறமைகளை வளர்த்திக் கொள்ளவும் பதிவுலகம் உதவுகிறது என்றால் மிகையல்ல.

சில வருடங்களுக்கு முன்பு வரை, ஒரு விடயத்தில் என்னென்ன கருத்துகள் உள்ளன என்று தெரிய வேண்டுமென்றால் ஒன்று பிரபல நாளிதழிலையோ வாரஇதழையோ தான் படிக்க வேண்டும். ஆனால் இன்றோ ஏராளமான கருத்துகளைப் படிக்க முடிகிறது. அதற்குக் காரணம் பதிவுலகம் தான்!! வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டின் கருத்தென்ன என்பது தெரியவருவது தான் இதற்குக் காரணம்.

இதை விட, பதிவுலகத்தில் கிடைக்கும் நட்பும் அரவணைப்பும் எத்தகையது என்பதற்கு நண்பர் செந்தில்நாதன் உடல்நலமடைய நடந்த வேண்டுதல்களும் உதவிகளுமே சான்று.

இப்படி ஒரு பதிவுலகம் அமைய யார் காரணம்?


பிளாக்கர் இணையதளம் தான் அது என்று நான் சொல்லத் தேவையில்லை. அத்தகைய
பிளாக்கர் நிறுவனம் தனது பத்தாவது வயதை ஆகஸ்ட் 23ம் தேதியன்று முடித்திருக்கிறது. பிளாக்கர் தளத்திற்கு நமது நன்றியையும் வாழ்த்துகளையும் கூறுங்கள்!!

**********************************************************************************

பிளாக்கர் தளம் எந்தளவு பிரபலம் என்று அலெக்ஸாவின் பார்த்தால் எட்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ்ப் பதிவுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் போன்ற தளங்களின் அலெக்ஸா வரிசை எண், பிரபல வார இதழ்கள், நாளிதழ்களின் தளத்துடன் ஒப்பிடும் அளவிற்கு உள்ளதே சான்று. பிரபல தமிழ் நாட்டுத் தளங்களின் இன்றைய ( 05.09.09) வரிசை எண் கீழ்வருமாறு:

தினமலர் - 1295
தி ஹிந்து - 1762
தமிழ் மாட்ரிமணி - 2989
தினகரன் - 5793

தினத்தந்தி - 6519
தினமணி - 10866
விகடன் - 14629

தமிழிஷ் - 17004
தமிழ் சினிமா - 20406
தமிழ்மணம் - 28538

குமுதம் - 33624

தமிழிஷ், தமிழ்மணம் போன்ற தளங்களின் தரவரிசையைப் பார்க்கும் வேளையில் ஆங்கிலப் பதிவுத் தொகுப்புத் தளமான டிக்கின் (www.digg.com) தரவரிசை எண்ணான 120ஐப் பார்க்கும் பொழுது தமிழ் பதிவுலகம் எங்கே உள்ளது என்பது புரிகிறது.

இணையத்தின் பயன்பாடு சேவைத் துறைகளுக்கு ஓரளவு வந்துள்ளது என்பது இந்திய ரயில்வேயின் தளத்தைப் பார்க்கும் பொழுது தெரியவருகிறது.

நௌக்ரி - 411
இந்திய ரயில்வே - 496
சென்னை ஆன்லைன் - 7225
தமிழக அரசு - 7983
கே.பி.என். டிராவல்ஸ் - 39651
ஏ.பி.டி.எக்ஸ். டிராவல்ஸ் - 93620

நம் தமிழ்ப் பதிவுலகில் பொறியியல், மருத்துவம், சுற்றுச்சூழல், வரலாறு என்று இன்னும் தொடவேண்டிய துறைகள் ஏராளம் உள்ளன. இது போன்ற துறைகளை நாம் தொடாமல் இருப்பதற்கு நமக்குக் கலைச்சொற்கள் தெரியாததே காரணம்.

அதற்கு உதவும் வகையில் உள்ள
தமிழ் இணையப் பலகலைக்கழகம் இன்னும் பிரபலமாகாதது வருத்தமளிக்கிறது. இந்தத் தளத்தின் நூலகத்தில் ஏராளமான தமிழ் நூல்களும், கலைச் சொற்கள் அகராதியும் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அண்ணா பல்கலைக்கழகம் - 3291
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் - 154705

நாம் பிளாக்கருக்கு நன்றி சொல்லும் வேளையில் வெவ்வேறு துறை சார்ந்த பதிவுகளையும் எழுத ஆரம்பித்தால், இன்னும் பலரை பதிவுலகிற்கு வரவழைக்க முடியும்!!

***********************************************************************************************************
எனது 50வது பதிவு பிளாக்கருக்கு நன்றி /வாழ்த்து கூறுதாக அமைந்ததில் மகிழ்ச்சி!! எனக்கு ஊக்கமளித்துவரும் அனைவருக்கும் நன்றி!


உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் தமிழிஷ் மற்றும் தமிழ்மணத்தில் வாக்களிக்க மறக்காதீர்கள்.
..

Tuesday, September 1, 2009

முதுமலைக் காட்டுல இருந்து ஒரு கடுதாசி!

எல்லாருக்கும் வணக்கமுங்க!!

எங்க இனத்துக்காக ஒரு கடுதாசி எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேங்க.

முந்தாநேத்து மசினகுடி காட்டுக்குள்ள மேய்ஞ்சுட்டு இருக்கறப்ப மேதாவி நண்பன் சொன்னது திக்குனு இருந்ததுங்க. ஊர்ப்பக்கம் எங்க இனத்தைப் பத்தி நெறயாத் தப்பான சேதி வருதுன்னு சொன்னானுங்க அந்தக் குரங்கு நண்பன்.

என்ன தான் சொல்லுங்க மேதாவிக சொன்னா சரியாத் தாங்க இருக்கும்?

எங்களுக்கு, உங்கள மாதிரி ஆறறிவு இல்லாததால எங்க தரப்பு நியாயத்தக் கேக்கணும்னு உங்களுக்கு தோணாது இல்லீங்களா! அதுக்குத் தாங்க இந்த கடுதாசி.

ஐயா, ரெண்டு வாரமா எங்க சாதிசனம் தேயிலைக் காட்டுக்குள்ள வந்துட்டோம்னு ரொம்ப குறைப்பட்டுக்கறீகளாம். ஆனா அதெல்லாமே எங்க வூடு தான்னு சொன்னா யாராவது கேக்கவா போறாங்க?

ஐயா உங்களுக்கு ஒரு உண்மை தெரியும்களா?

இன்னிக்கு தேயிலைத் தோட்டமா இருக்கற காடுக எல்லாமே ஒரு காலத்துல எங்க வூடா இருந்துச்சுங்க. நாங்க இலை தழை தேடீட்டு கூடலூர்க் காட்டுல இருந்து அப்படியே தர்மபுரிக் காடு வரைக்கும் போயிட்டு வந்து பாத்தா எங்க காடெல்லாம் தேயிலைக்காடா மாறீடுதுங்க. சரி, பாவம் உங்களுக்கு சோறு போடறதே அந்த தேயிலைத் தோட்டம் தானன்னு நாங்களும் உங்க இடத்துக்கு வர்றதில்லைங்க.


எங்க பசியாறனும்னா, ஒரு நாளுக்கு தோராயமா 250 கிலோக்கு திங்கனும்ங்க. இலை தழை, மூங்கில் குச்சி, மரப்பட்டை எல்லாந்தானுங்க எங்களுக்கு சோறு! அப்ப எங்க கூட்டத்தோட நாங்க வாழனும்னா எங்களுக்கு எத்தாப் பெரிய காடு வேணும்னு நீங்களே சொல்லுங்க! அந்தக் காட்டுல மேஞ்சு ஒரு மாசமாச்சு அங்க போலாம்னு போனா ஒன்னு காட்டை எல்லாம் எரிச்சிடறாங்க, இல்லீன்னா கம்பி வேலி போட்டுடறாங்க. அப்புறம் நாங்க என்னங்க பண்ணுவோம்?
இப்படித் தாங்க பசி அதிகமாகி நாங்க தேயிலைத் தோட்டத்துக்குள்ள வந்துட்டோம். ஆனா உங்க பொழப்புல மண்ணப் போடனும்னு நாங்க கொஞ்சங் கூட நெனச்சது இல்லீங்க!

இப்படித்தாங்க இலைதழை தேடீட்டு, எங்க சித்தப்பனூட்டுத் தம்பி குடும்பத்தோட வழிதெரியாம வந்துட்டானுங்க வாளையார்க் காட்டுப்பக்கம். ஏதோ ரயில் தண்டவாளமாம், அதுல போய் மாட்டிக்கிட்டாங்களாம் அவன் சம்சாரமும் குழந்தையும். சொல்லவே நாக்கு தழுதழுக்குதுங்க, அவன் சம்சாரம் மாசமா வேற இருந்துச்சாம். அவன் அழுத அழுகை இருக்கே.. காடே அலறீருச்சுங்க. இப்படி இந்த ரயில் தண்டவாளத்துல அடிபட்டு மட்டும் எங்க சனத்துல இருந்து 8 பேர் இறந்துட்டாங்கங்க.

இது இப்படீன்னா, எங்களப் பாக்கறதுக்காக வர்ற பயலுக பண்றத சொல்லமுடியலங்க. இவனுக குடிக்கற பாட்டிலு, திண்ணு போடற பிளாஸ்டிக்னு அட்டகாசம் தாங்க முடியலங்க. எங்களுக்கு தான் உங்கள மாதிரி ஆறறிவு இல்லீங்களே! இலைதழையோட நீங்க கொழுப்பெடுத்துப் போட்ட பிளாஸ்டிக்க முழுங்கீட்டோம்னா அவ்ளோ தாங்க! உங்களுக்கெல்லாம் காப்பீடு கீப்பீடெல்லாம் இருக்கு, எங்களுக்கு என்னங்க இருக்கு?
எங்க காட்டுப்பக்கம் வந்த வானம்பாடி ஒன்னு கிட்ட இந்தக் கதையெல்லாஞ் சொன்னனுங்க. அந்த வானம்பாடி சொல்றபடி பாத்தா இது ஏதோ நம்மூர்ல மட்டுமில்லியாமாங்க. ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகனு எல்லாப் பக்கமும் எங்களக் கொல்றதுலயே குறிக்கோளா இருக்காங்களாம். நூறு வருசத்துல எங்க சாதிசனத்துல 10 லட்சம் பேரக் கொன்னு சாய்ச்சுட்டீங்களாம்.

இப்படியே போச்சுன்னா, நீங்க எங்கள ஊட்டி போகும்போதோ, முதுமலைக் காட்டுலயோ, உடுமலை வழியா மூணார் போகும் போதோ, ஆனைமலைக் காட்டுலயோ, வால்பாறையிலோ எல்லாம் பாக்க முடியாதுங்க. ஏதோ கிண்டிப்பூங்கா, வண்டலூர்னு ஊருக்கு ஒன்னாத் தாங்க பாக்கனும்.

என்னாதாஞ் சொல்லுங்க அது அது இருக்க வேண்டிய இடத்துல இருந்தாத் தாங்க நல்லது.

உங்கள மாதிரி எங்களுக்கும் புள்ள குட்டியோட வூட்டுல வாழத்தாங்க ஆசையா இருக்கும்?

ஏதோ என் மனசுல பட்டத எல்லாம் இந்தக் கடுதாசில கொட்டீட்டேங்க.

என்னடா இந்த யானை சொல்றத எல்லாம் கேக்கணுமான்னு நினைச்சீங்கன்னா, உங்களப் பத்தி எனக்கு சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்க. நீங்க புள்ள குட்டியோட நல்லா இருங்க.

ஐயோ பாவம்டா இந்த யானைகனு நினைச்சீங்கன்னா இந்தக் கடுதாசிய உங்க நண்பர்களுக்கெல்லாம் அனுப்புங்க! நீங்க மவராசரா இருப்பீங்க!

நீங்க என்ன நெனச்சாலும் உங்கள வரவேற்க நாங்க காட்டுல காத்துட்டே இருப்பமுங்க. மறக்காம எங்களப் பாக்க வாங்க.

முகவரி தெரியுந்தானுங்க?

வர்றனுங்க,

முதுமலைக் காட்டுல இருந்து,
யானைமுகன்.
**

Related Posts with Thumbnails