Thursday, October 29, 2009

இந்தியாவின் எதிர்காலம்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் நந்தன் நிலகனி எழுதிய இமேஜினிங் இந்தியா என்ற நூலைப் படித்து வருகிறேன்.நம் நாடு கடந்து வந்த பாதையை வரலாறு, பொருளாதாரம், உலகலாவிய சூழல், இந்திய சமூகம் என்ற பல கோணங்களிலும் ஆராய்ந்து எழுதியுள்ளார். இந்தியாவில் இதுவரை நடந்தேறிய மாற்றங்கள் என்னென்ன, நடந்து வரும் மாற்றங்கள், நடக்கவிருக்கும் மற்றும் நடக்க வேண்டிய மாற்றங்களைப் பற்றி அருமையாக விவரித்துள்ளார்.

நம் நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ள இந்த நூல் ஒரு நல்ல கையேடாக இருக்கும். நூலை முழுதும் படித்து முடித்த பிறகு அதன் கருத்துகளைப் பகிர்கிறேன்.

இந்தியாவின் எதிர்காலத்திற்கான சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒரு காணொளியைப் பார்த்தேன். மிக அழகாக இந்தியாவை வளர்க்க என்ன செய்ய வேண்டிமென்பதை விவரித்துள்ளார். 15 நிமிடம் ஓடும் இந்தக் காணொளி கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

நந்தன் நிலகனி இந்திய அடையாள அட்டை திட்டத்தின் இயக்குனராக பொறுப்பேற்றிருப்பது அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தக் காணொளியைப் பார்த்த பிறகு அவர் எந்த அளவிற்கு அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராகியுள்ளார் என்பது புரிகிறது.
..

Saturday, October 17, 2009

எல்லாம் பாஸ்வர்ட் மயம்.

நீங்கள் கடவுச்சொற்களை எப்படி தேர்தெடுக்கிறீர்கள்? எத்தனை கடவுச் சொற்களைப் (பாஸ்வர்ட்) பயன்படுத்துகிறீர்கள்? பத்து ? இருபது? ஐம்பது?

சில மாதங்களுக்கு முன் என் நெருங்கிய நண்பனின் மின்னஞ்சல் முகவரியில் ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் அவருக்கு விமானப் பயணச்சீட்டைப் பதிவு செய்யப் பணம் தேவைப்படுவதாகவும், என் கடனட்டை எண்ணையும் கடவுச்சொல்லையும் தருமாறும் கேட்டிருந்தார். அலைபேசியில் கேட்காமல் அவர் எதற்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. என் நண்பரை அழைத்து விசாரித்தால் தன் மின்னஞ்சல் கணக்கு திருடப்பட்டள்ளது என்றார்.

அவரது கடவுச்சொல்லைப் பற்றிக்கேட்டால் பொதுவான ஒன்றைத்
தேர்ந்தெடுத்ததாகக் கூறி வருத்தப்பட்டார். பிறகு நான் எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பி எனக்கு வந்ததைப் போல மின்னஞ்சல் வந்தால் கவனமாக இருக்க வேண்டுமென்று எச்சரிக்கை செய்தேன்.

**

1998ல் ஹாட்மெயில் கணக்கைத் துவங்கியது தான், நான் இணையத்தில் பதித்த முதல் கடவுச்சொல். அதன் பிறகு மட்டும் எத்தனை கணக்குகள்? எத்தனை கடவுச்சொற்கள்?

* யாஹூ, லைக்கோஸ்மெயில், ரீடிஃப்மெயில், இந்தியாடைம்ஸ் மெயில் என்று ஜிமெயில் வரையில் மட்டும் ஆறேழு கடவுச்சொற்கள்.

* கடனட்டைகள், காசளிப்பு அட்டைகள் என நான்கைந்து கடவுச்சொற்கள். வங்கிகளின் இணைய சேவைக்கென நான்கைந்து பயணர் முகவரிகள் மற்றும் கடவுச்சொற்கள்.
* விகடன்.காம், எகனாமிக் டைம்ஸ் என்று இலவசமாகவும் கட்டணமுறையிலும் படிக்கும் இணைய பத்திரிக்கைகளின் கடவுச்சொற்கள்.
* அலுவலகத்தில் ஒவ்வொரு மென்பொருள் அமைப்பிற்கும் தனித்தனியாக கடவுச்சொற்கள். அதிலும் ஒவ்வொன்றையும் மூன்று மாதத்திற்கொரு மாற்றவும் வேண்டும், முன்பு வைத்ததாகவும் இருக்கக் கூடாது.

* இது போதாதென்று புதிதாக ஆர்குட், ஃபேஸ்புக், லிங்க்ட்-இன் என சமூக வலையமைப்புச் சேவைகள், நௌக்ரி, டைம்ஸ்-ஜாப்ஸ் போன்ற வேலைவாய்ப்புத் தளங்கள், திருமணத்தகவல் தளங்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

காலை முதல் மாலை முதல் நாம் அதிகமாக நினைவுகொள்வது என்னவென்று பார்த்தால் அது கடவுச்சொற்களாகத் தான் இருக்கும். ஆனால், அந்த கடவுச்சொற்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறோம்? போதுமான அளவு பாதுகாப்பான, எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுக்கிறோமா?

பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் கடவுச்சொற்கள் 123456, abcd1234, அல்லது பெயரையோ, மனைவியின் பெயரையோ தான் கடவுச்சொற்களாகத் தேர்ந்தெடுக்கிறோம். இப்படித் தேர்ந்தெடுக்கும் கடவுச்சொற்கள் பாதுகாப்பானதா இருக்கிறதா?
நாம் பாதுகாப்பாக சேவைகளைப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?

* எல்லா சேவைகளுக்கும் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தாமல், வெவ்வேறு கடவுச்சொற்களைப் பயன்படுத்தவேண்டும்.
* rajini123, vijay123 போன்ற எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய கடவுச்சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. குறைந்தது &#*%@$ போன்ற எழுத்துக்கள் உள்ள கடவுச்சொற்களைப் பயன்படுத்துவது நல்லது.

* சுயதகவல்களைக் கடவுச்சொற்களில் பயன்படுத்தக்கூடாது. எங்காவது நாம் நம் பெயரையோ, குடும்பத்தினரின் பெயர்களையோ கொடுக்க நேர்ந்தால் இது போன்ற கடவுச்சொற்கள் ஆபத்தானவை.
* ஐம்பது அல்லது அறுபது கடவுச்சொற்களை நினைவில் வைத்திருப்பது கடினமே. அப்படியிருக்க அந்த கடவுச்சொற்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதும் மிகவும் முக்கியமானது.

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று நாம் இணையதள சேவையையோ, மின்னஞ்சல் சேவையையோ துவங்கும் பொழுது கடவுச்சொற்களை மறக்க நேர்கையில் வெளிக்கொணர சில கேள்விகளைக் கேட்பார்கள். உங்கள் சொந்த ஊர் எது? உங்களுக்குப் பிடித்த விளையாட்டு எது? போன்ற கேள்விகளுக்கு சென்னை, கிரிக்கெட் என்று உண்மையாக பதிலளிக்காமல் எளிதில் கண்டுபிடிக்க முடியாத கடவுச்சொற்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.

என் அனுபவத்தையும், நான் படித்ததையும் பகிர்ந்துள்ளேன். உங்கள் கருத்துக்களைக் கீழே பதிவு செய்யுங்கள்.

***

Monday, October 12, 2009

டேட்டிங் கற்றுத்தரும் தொலைக்காட்சி (Dare to Date) - ஒரு பார்வை

டேட்டிங் போக ரெடியா? என்று அழைக்கிறார்கள் வி-சானல் தொலைக்காட்சியினர்!!
சரி என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்த்தால், டேட்டிங் செல்ல ஆர்வமுள்ளோரின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு, முன்பின் அறிமுகமாகாத இளம்பெண்ணை ஒரு ஆணுடனோ அல்லது இரு ஆண்களுடனோ சந்திக்க வைக்கிறார்கள்.
நான் பார்த்த நிகழ்ச்சி இப்படி ஆரம்பிக்கிறது..

தன் டேட்டிங் துணையை எதிர்பார்த்தபடி நீச்சல் குளத்தில் ஒரு இளைஞன் அமர்ந்திருக்ககிறார். பிறகு ஒரு இளம்பெண் நீச்சல் உடையின் மீது ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு வருகிறார். பிறகு இருவரும் பெயர்களைப் பரிமாறிக்கொண்ட பின், அந்தப் பெண் கேட்கிறார்..

"நான் தேர்ந்தெடுத்த இடம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"
"ம்ம்ம்.. பிடித்திருக்கிறது" என்கிறார் வழிந்தவாரே..
"என்ன நீச்சல் குளத்தில் சட்டை பேண்டெல்லாம் போட்டிருக்கிறீர்கள்" என்கிறார் அந்தப் பெண்.
"வெட்கமாக இருக்கிறது" என்று கூறி சட்டைக் கழட்டுகிறார்.
"பேண்டை யார் கழட்டுவார்கள்"
"நீங்க துண்டைக் கழட்டுனாத்தான் நான் ..." என்கிறார் அந்த இளைஞர்.
"அதுக்கென்ன..." என்று டூ-பீஸிற்கு மாறுகிறார் அந்தப் பெண்.
பிறகு இருவரும் குளத்தில் இறங்கி நீந்துகிறார்கள். பிறகு வேறொரு இளைஞரும் வருகிறார். இவர்கள் மூவரும் தங்கள் விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிறகு வேறொரு இடம் என்று ஒரு நாள் முழுவதும் ஒன்றாக நேரத்தைச் செலவிடுகிறார்கள். இடையிடையே தாங்கள் தங்கள் துணையைப் பற்றி என்ன நினைத்தார்கள், எப்படி இருந்தது இந்த நிகழ்வு என்று கூறுவதாகச் செல்கிறது இந்த ரியாலிட்டி நிகழ்ச்சி.

மற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளைப் போல இந்த நிகழ்ச்சியிலும் தொலைக்காட்சி நிறுவனத்தாரின் நிகழ்ச்சியமைப்பும், நாடகத்தன்மையும் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதையும் இன்னொரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் என்று ஒதுக்கிவிட முடியவில்லை.

காரணம், நிகழ்ச்சியில் மையக்கரு டேட்டிங் என்பது மட்டும் அல்ல, இது தெரியாதவருடன் டேட்டிங் என்பது தான்.

"அதென்னைபா டேட்டிங்கே எங்களுக்குப் புதுசா இருக்கு!! இதுல வகைகளை வேற சொல்ற" என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

டேட்டிங் போலாம் வர்றீயா? என்று சர்வசாதாரணமாக திரைப்படப் பாடல்களில் வர ஆரம்பித்துள்ள இன்றைய சூழலில் டேட்டிங்கைப் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.

டேட்டிங்(Dating) என்பது ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் இன்னொரு நபருடன் இருவரின் முழு ஒப்புதலுடனும் ஒருவரை பற்றி இன்னொருவர் தெரிந்துக்கொள்ளவும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளவும் சந்தித்து அளவளாவிக்கொள்ளுதலைக் குறிக்கும்.

டேட்டிங் என்பது, ஒன்றாக வெளியே சென்று, உணவு உண்பதையோ, ஊர் சுற்றுவதையோ,திரையரங்கு அல்லது பூங்காக்களுக்கு செல்வதையோ குறிக்கும். இதனுள் இணையத்தின் மூலம் அரட்டை செய்தல், பேசிக்கொள்ளுதல் ஆகியவையும் இந்த டேட்டிங் செயல்முறையில் அடங்கும்.

என்ன தான் ஒருவரைப் பற்றிப் புரிந்து கொள்வதற்காக என்று சொல்லிக் கொண்டாலும், அவரவர் மனப் பக்குவத்தையும், தேவைகளையும் பொருத்தே டேட்டிங்கின் வடிவம் அமைகிறது. சிலர் இதனுள் பாலியல் ரீதியான செயலபாடுகளையும் சேர்த்துக்கொண்டாலும், அது அவரவரின் தனிப்பட்ட விசயமே!!

"டேட்டிங் / அல்லது ஒரு பெண்ணும் பையனும் ஒன்னா சுத்தறாங்க" போன்ற வார்த்தைகளைக் கேட்டால் இன்றளவும் நம் வீடுகளில் முகம் சுளிக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி, ஒரு ஆணோ பெண்ணோ தெரிந்தவருடன் சுற்றும் பொழுதே முகம் சுளிக்கும் நம்மவர்கள் தெரியாதவர்களுடன் செல்வதை எப்படி எதிர்கொள்வார்கள்?

வியாபார நோக்கில் மேற்கத்தியக் கலாச்சாரத்தை வரவேற்பறைக்கு கொண்டு வருவது சரியானதா?

இன்று இந்தச் சேனலில் வரும் நிகழ்ச்சி நாளைக்கு தமிழிலும் வரலாம். சென்னையைச் சேர்ந்த இளைஞரையும் கோவையைச் சேர்ந்த இளைஞியையும் ஏதாவது ஒரு ஓட்டலிலோ பூங்காவிலோ சந்திக்க வைப்பார்கள். பிறகு அவர்களது டேட்டிங் எப்படி இருந்தது என்று சிலாகிப்பார்கள்.

"டேட்டிங் போகலியா, எப்ப வளரப்போற?" என்று விளம்பரங்களும் வரலாம்.பிறகு இணையதளங்களும், கேளிக்கை நிறுவனங்களும் இது போன்ற அறிமுகமில்லாதவர்களுடன் டேட்டிங்கிற்கு ஏற்பாடு செய்வார்கள்.

"இதெல்லாம் ஏற்கனவே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்துத் தான் டேட்டிங் செல்வார்கள் என்பதெல்லாம் தவறு" என்று ஒரு சாரார் கூறலாம்.

ஆனால், மேல்தட்டு மக்களிடம் மட்டும் இருக்கும் இந்தப் பழக்கம் சாதாரண மக்களையும் சென்றடையும் பொழுது ஏற்படவிருக்கும் மாற்றங்கள் ஆபத்தானவை.

மேற்கத்திய நாடுகளில் ஒரு ஆண் பல பெண்களுடனோ, ஒரு பெண் பல ஆண்களுடனோ பழக்கம் கொள்வது பெரிய விசயமில்லை. ஆனால் அது நம் ஊரில்?

திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் புகைப்பிடிப்பதையோ, மது அருந்துவதையோ தடை செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அரசு கூறியது எதற்காக?

திரையில் காட்டப்படும் பழக்கம் சமூகத்தைப் பாதிக்கக்கூடாது. குறிப்பாக இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் சென்றடையக் கூடாது என்பதற்குத் தானே!! ஆனால் "டேட்டிங்" போன்ற பழக்கங்கள் சென்றடையலாமா?

என்ன செய்கிறது செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்? கவனிப்பார்களா?
..

Sunday, October 11, 2009

அமீரகக் குறிப்புகள் வ-09 வா-41: அமீரக விசா, யஸ்மரினா மற்றும் தீபாவளி


அமீரகத்தைச் சுற்றிப் பார்க்கத் தகுந்த மாதங்கள் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை எனலாம். மே மாதம் முதல் 40 டிகிரிக்கும் அதிகமாகச் சென்ற தட்பவெப்ப அளவு இப்பொழுது 35 டிகிரி அளவில் உள்ளது. இது மேலும் குறைந்து, மெதுவாக குளிர்காலமும் சுற்றுலாக் காலமும் ஆரம்பித்து விடும்.


அமெரிக்கா, ஐரோப்பா, அப்பிரிக்கா நாடுகளில் பணிபுரியும் அன்பர்கள் இந்தியா செல்லும் வழியில் அமீரகத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்லலாம்..

விசா இல்லாமல் எப்படி நாட்டிற்குள் நுழைவது?

இருக்கவே இருக்கிறது 96 மணி நேர விசா!! எமிரேட்ஸ் விமானத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும் பொழுது துபாயில் 8 மணி நேரத்திற்கு அதிகமாக இடைவேளை இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும்.

எமிரேட்ஸ் நிறுவனத்தினரை அணுகி உங்கள் முன்பதிவு எண்ணுடன் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) நகல், புகைப்படம் மற்றும் விசாக் கட்டணம் தோராயமாக 4000 ரூபாயைக் கொடுத்து விட்டால் போதும், விசாவைத் தயார் செய்துவிடுவார்கள். 96 மணி நேர விசாவை முன்பதிவு எண்ணுடன் இணைத்துவிடுவார்கள்.

பிறகு துபாய் நகரில் இறங்கிய பிறகு இந்த எண்ணைக் சுங்க அதிகாரிகளிடம் காட்டினால் போதும்!!

சுங்க அதிகாரிகள் எங்கே தங்குவீர்கள் என்று கேட்டால் என்ன செய்வது? துபாயில் தங்குமிடத்தை எமிரேட்ஸ் நிறுவனத்தினரிடம் பதிவு செய்ய வேண்டுமா?

தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்தவர் அல்லது உறவினர்களது தொடர்பு எண்ணையும், முகவரியையும் காட்டினாலே போதுமானது. அமீரகத்தைச் சுற்றிப்பார்க்க வரும் அனைத்து அன்பர்களுக்கும் வாழ்த்துகள்!!

குறிப்பு: விசா பெற்றிருந்தாலும் நாட்டினுள்ளே அனுமதிப்பது சுங்க அதிகாரையைப் பொருத்ததே!! இதை முன்பே இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
************

அபுதாபி - யஸ்மரினாவில் பார்முலா ஒன் போட்டி நவம்பர் 1ம் தேதியன்று துவங்குகிறது. வளைகுடா நாடான பஹ்ரைனில் ஏற்கனவே இப்போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன் ஹைதராபத்தில் இந்தப் போட்டியைக் கொண்டு வருவதற்கு அன்றைய முதல்வர் முயற்சி செய்தது நினைவிருக்கலாம்.

இந்த மைதானத்தை 162 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கியிருக்கிறார்கள். 500 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி, செயற்கையான தீவு என அசத்தியிருக்கிறார்கள்.


இந்தப் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பித்துள்ளது. நுழைவுச்சீட்டின் விலை தோராயமாக 15000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. பணமும் விருப்பமும் உள்ளவர்களுக்கு நல்ல அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


**********

ஏம்பா, தீபாவளிக்கு லீவு எல்லாம் கிடைக்குமா?

துபாய்ல தீபாவளி எல்லாம் எப்படி இருக்கும்? பட்டாசு கிட்டாசெல்லம் வெடிக்க முடியுமா?

தீபாவளிப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அமீரகத்தில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் இவை!!

தீபாவளி அன்று விடுமுறை எல்லாம் கிடைக்காது. இந்த வருடம் சனிக்கிழமையன்று பண்டிகை வருவதால் வீட்டில் கொண்டாடலாம். இங்கே பட்டாசுகள் கிடைக்காது. எங்காவது கிடைத்தாலும் பாதுகாப்பு காரணத்தால் வெடிக்க அனுமதி கிடையாது.

இந்தியர்கள் வாழும் பகுதிகளிலுள்ள கடைகளில் விளக்குகளும், வண்ணத் தோரணங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. நகைக்கடைகளில் "தீபாவளி ஆஃபர்" என்ற வாசகங்களையும் பார்க்க முடிகிறது. சில கடைகளில் தீபாவளிக்குத் தேவையான பொருட்களை விற்பதற்கென்றே தனிப்பகுதியையும் துவக்கியிருக்கிறார்கள்.
சில அலுவலகங்களில் தீபாவளியை முன்னிட்டு மதிய வேளையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது, வெளிநாட்டில் இருந்தாலும் மகிழ்ச்சியான விசயம்!!

அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்!
**

Friday, October 9, 2009

உலகை மாற்றிய 200 ஆண்டுகள்


200 ஆண்டுகளுக்கு முன் உலக நாடுகள் எப்படி இருந்தன? எந்த நாடு செல்வாக்காக இருந்தது? கடந்த 200 ஆண்டுகளில் உலகம் எப்படி மாறி உள்ளது?

ஹன்ஸ் ரோஸ்லிங்க் என்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் தயாரித்த காணொளியைப் பாருங்கள். (5 நிமிடம் தான்.)


* உலக நாடுகளில் சராசரி வருமான வளர்ச்சியைப் பார்க்க மிகவும் வியப்பாக உள்ளது. சுவீடன், நார்வே, டென்மார்க் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் 1800களில் இருந்தே நல்ல வருமான வளர்ச்சி காண ஆரம்பித்தது.

* இந்தியா, சீனா போன்ற நாடுகளின் வருமான வளர்ச்சி 1950 வரையில் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

* 1800களில் உலக நாட்டு மக்களின் சராசரி வாழ் நாள் 40 வயதிற்குக் குறைவே. அதுவே 1950ல் சராசரியாக வாழும் வயது 40ஐத் தாண்டுகிறது.

* யூ-டியூப் தளத்தில் உலக நாடுகளின் வளர்ச்சி, எண்ணெய் வளம், வெப்ப வெளியேற்றம், வளரும் நாடுகளைப் பற்றிய ஆய்வு என பல அருமையான காணொளிகள் உள்ளன.

சில நாட்கள் படித்துத் தெரிய வேண்டிய விசயங்களை 30 நிமிடங்களில் பார்த்து விடலாம். நேரமிருக்கும் பொழுது பாருங்கள்.
நான் பார்த்து வியந்ததை உங்களுடன் பகிரவே இந்த இடுகை.
..

Monday, October 5, 2009

அமீரகக் குறிப்புகள் வ-09-வா-40 (துபாய் மெட்ரோவும் வீரப்பனும்)


09.09.2009 அன்று திறக்கப்பட்ட துபாய் மெட்ரோவில் கடந்த வெள்ளியன்று தான் செல்ல முடிந்தது. துபாய் நகரின் போக்குவரத்து நெரிசலையும், மகிழுந்துகளின் பயன்பாட்டையும் குறைக்கும் பொருட்டு துவக்கப்பட்டிருக்கும் திட்டமே துபாய் மெட்ரோ!!

வெள்ளிக்கிழமை விடுமுறை தினமென்பதால் மாலை எட்டு மணி வரை கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. நம் ஊர் போல அடித்துப்பிடித்து வண்டியில் ஏறி ஜன்னல் ஓர இடம்பிடித்துக் கொண்டால் துபாய் நகரின் விமான நிலையம், முக்கியமான வணிக மையங்கள் அமைந்த ஷேக் ஜையத் சாலை, என துபாய் நகரைப் பார்த்தபடி செல்லலாம்.

துபாய் நகரின் ஆடம்பரமான ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மெட்ரோ செல்லும் பாதையிலேயே உள்ளதால் துபாய் நகரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் மெட்ரோவில் ஏறிக்கொண்டால் போதும்.

தற்பொழுது துபாய் ரஷீதியா என்ற இடத்தில் இருந்து நக்கீல் ஹார்பர் என்ற இடம் வரை சேவையைத் துவங்கியுள்ளார்கள். துபாய் மெட்ரோவின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது, ரயில்களின் தன்னியக்கம் தான். இரண்டு திசைகளிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வகையில் மொத்தம் நாற்பது ரயில்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இதன் இயக்கங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிர்மாணிக்கப்படுகிறது.

இந்த ரயில்களில் செல்ல வேண்டுமென்றால் நால் அட்டையை (NOL CARD) வாங்க வேண்டும். பாரஸிக மொழியில் "நால்" என்றால் "கட்டணம்" என்று பொருள். இந்த அட்டையில் பணம் உள்ள அளவிற்கு பயணம் செய்யலாம். "கையில காசு வாயில தோசை"ங்கற மாதிரி நம் அட்டையில் பணம் இருந்தால் தான் பிளாட்பாரத்திற்கே செல்ல முடியும்.


நால் அட்டை, தன்னியக்கப் படிகள் (எஸ்கலேட்டர்), தன்னியக்க நடைபாதைகள் ( டிராவல்லேட்டர்), தன்னியக்கக் கதவுகள் என ஏதோ விமான நிலையத்திற்குள் வந்துவிட்ட உணர்வு தான் ஏற்படுகிறது. அடுத்த நிறுத்தம் எதுவென்ற அறிவிப்புகள், ரயிலிலேயே வைர்லஸ் மூலம் இணைய வசதிகள் என ரயில்களின் உள்ளேயும் கலக்கல் தான். கார்களை இலவசமாக நிறுத்துவதற்கு பல அடுக்கு நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிறுத்தங்களுக்கு செல்ல இலவசமாக பேருந்து (FEEDER) வசதிகள் என அசத்தியிருக்கிறார்கள்.


இந்த அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு துபாய் நகரப் பேருந்துகள், படகுச் சவாரி மற்றும் மெட்ரோ ரயில்கள் என மூன்று மார்க்கங்களிலும் பயணிக்கலாம்.

இதை சென்னை நகரை வைத்து விளக்க வேண்டுமென்றால், படப்பையில் இருந்து மாநகரப் பேருந்தில் தாம்பரம் வரை வந்து, தாம்பரத்தில் இருந்து நுங்கம்பாக்கம் வரை மாநகர ரயிலில் பயணித்து, நுங்கம்பாக்கத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகம் வரை கூவம் ஆற்றில் (??) படகுச்சவாரி செய்வதாகக் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஒரே வித்தயாசம்..

சென்னையின் கூவம் இயற்கையாக அமைந்தது. துபாயின் நீர்வழியோ செயற்கையாக உருவாக்கப்படுகிறது.

"ஏப்பா செந்திலு.. அவங்ககிட்ட நிறைய காசு இருக்குது எல்லாம் பண்றாங்க"ன்னு நீங்க சொல்வது கேட்கிறது!!

நம் நாட்டிலும் பணம் உள்ளது!! ஆனால்.... :((

*******

ஓரிரு நாட்களுக்கு முன் இங்குள்ள கடையொன்றில், உலக வரைபடத்தை வாங்கினேன். இந்தியாவைப் பார்த்த எனக்கு வியப்பு!!

இந்தியாவின் வடக்கு எல்லை இமாச்சலப்பிரதேசத்தோடு முடிந்து விட்டது. காஷ்மீர் மாநிலமிருக்கும் இடத்தில் ஜம்மு மற்றும் சர்ச்சைக்குட்பட்ட பகுதிகள் என்று குறிப்பிடபட்டுள்ளது.

நேரமிருந்தால் ஒவ்வொரு நாட்டு நாளிதழ்களின் இணையதளங்களைப் பாருங்கள். அந்தந்த நாடுகளின் நிலை என்னவென்று புரியும்.

*******


நேற்று, வாடகை மகிழுந்து ஒன்றில் ஏறி, போக வேண்டிய இடத்தை ஓட்டுனரிடம் கூறினேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை..

"நீங்கள் மலபாரியா?" என்றார்.
"நான் மதராஸி" என்றேன். உடனே..அவர் முகத்தில் ஒரு புன்னகை..
"ஓ.. வீரப்பன் ஊரைச் சேர்ந்தவர்.." என்று சிரித்தார்.
"ஆம்.. உங்களுக்கு எப்படி வீரப்பனைத் தெரியும்" என்றேன்.
"என் முன்னாள் முதலாளி ஒரு மதராஸி. அவர் வீரப்பனைப் பற்றியெல்லாம் கூறியுள்ளார்" என்றார்.
"நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்"
"பெஸாவர்" என்றார்.

ம்ம்.. தமிழகத்திற்கு வீரப்பன் கூட விளம்பரத் தூதராக (பிராண்ட் அம்பாஸடராக) இருந்திருக்கிறார் ( இன்னமும் இருக்கிறார்).

..

Friday, October 2, 2009

பயணத்திற்கு முன்பு...

யணங்கள் நமக்குக் கொடுக்கும் அனுபவங்களும் பாடமும் மறக்க முடியாததாகிறது. பழக்கப்பட்ட இடத்திற்குப் பயணித்தாலும் ஏதாவது ஒரு புது அனுபவம் நமக்காகக் காத்துக்கொண்டு தான் இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்பு நான் காக்கிநாடா அருகே உள்ள யாணம் என்கிற நகரில் பணிபுரிந்து வந்தேன். அப்படி, ஒரு முறை காக்கிநாடா செல்லும் பொழுது விஜயவாடா வரையில் மட்டுமே முன்பதிவு செய்திருந்தேன். அங்கிருந்து பொது வகுப்பில் செல்ல வேண்டும். நான் பார்த்த ரயில் நிலையங்களிலேயே மிகவும் பிடித்தது என்றால் அது விஜயவாடா தான். கிருஷ்ணா நதிக்கரையில் அழகாக அமைந்திருக்கும் இந்த ரயில் நிலையம். இந்த வழியாக செல்லும் எல்லா ரயில்களுக்கும் நீர் நிரப்பும் நிலையமும் விஜயவாடா தான்.

தமிழ்நாட்டில் பேருந்து வசதிக்கு எப்படி திருச்சியோ, அது போல தென்னிந்தியாவுக்கு விஜயவாடாவைக் குறிப்பிடலாம். தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து கோல்கத்தா போன்ற கிழக்கிந்திய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களும் விஜயவாடா வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆக எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கும்.

நான் சென்ற ரயில் இரவு 12 மணியளவில் விஜயவாடா சென்றடைந்தது. அடுத்து வரவிருக்கும் ரயில் எது என்று கேட்ட பொழுது ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரை செல்லும் கோதாவரி விரைவுவண்டி என்று கூறினார்கள். அங்கே சாமல்கோடா வரைக்கும் பொது வகுப்பில் (அன் ரிசர்வ்டு) பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டேன்.

பொது வகுப்பில் கூட்டத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆனால், உள்ளே சென்றவுடன் எப்படியோ நிற்பதற்கோ அல்லது நெருக்கிக்கொண்டு உட்காருவதற்கோ இடம் கிடைத்துவிடும்.பொது வகுப்பில் பெரும்பாலும் பயணத்தைத் திட்டமிடாதவர்களும், பொருளாதார வசதி இல்லாதவர்களையுமே பார்க்க முடியும். ஆனால், மற்ற இடங்களில் பார்க்க முடியாத உதவும் போக்கு பொது வகுப்பில் பார்க்க முடிவது தான் வியப்பானது. கோதாவரி விரைவுவண்டி வந்தவுடன் அடித்துபிடித்து பொது வகுப்பில் ஏறிக்கொண்டேன்.

அன்றும் வண்டியில் ஏறியவுடன் 40 வயது மதிக்கத்தக்க சக பயணி ஒருவர் எனக்கு இடமளித்தார். அவர் விஜயவாடாவிற்கு அருகில் ஏதோ ஊரிற்கு தொழில் ரீதியாத பயணம் செய்துவிட்டு சொந்த ஊரான விசாகப்பட்டிணத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவருடன் தொழில் ரீதியாக, அன்றே அறிமுகமான ஒருவரும் இருந்தார். வண்டி ஓடத் துவங்கியவுடன் நன்றாகக் காற்று வர ஆரம்பித்தது. அந்த இருவரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே வந்தனர். எனக்கு ஓரளவே தெலுங்கு தெரிந்திருந்தாலும் அவர்களது பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது.

அந்தக் கலகலப்பு வெகுநேரம் நிலைக்கவில்லை. எனக்கு இடமளித்தவர் லேசாக புழுக்காமாக இருந்தது என்றார். நன்றாக காற்று வரும்பொழுது வியர்ப்பது ஏதோ விபரீததற்கு அறிகுறியாகத் தோன்றியது. சிறிது நேரத்தில் மார்பு, தோள் பகுதி எல்லாம் வலி எடுப்பதாகக் கூறினார்.

நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருப்பவர்களிடம் ஏதாவது மாத்திரை உள்ளதா என்று கேட்டுப்பார்த்தோம்.அவருக்கு உடல் உபாதைகள் இருக்கிறதா ஏதாவது மாத்திரை வைத்துள்ளாரா என்று கேட்பதற்குள், அவரால் வலி அதிகமாகி பதிலளிக்க முடியவில்லை. நடுக்காட்டில் பயணித்துக் கொண்டிருந்த வண்டியை நிறுத்தவும் முடியவில்லை. பொது வகுப்பில் மருத்துவர்களை எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.

வலி அதிகமாகி, முணுமுணுக்க ஆரம்பித்தவரது உயிர் சில நிமிடங்களில் பிரிந்தது.

அவருடன் பயணித்தவருக்கும் இவரைப் பற்றித் தெரியவில்லை. அவரது சட்டைப்பை, மற்றும் கைப்பையைத் தேடினால் கிடைத்தது சிறுவனுக்கான ஒரு புத்தாடை மட்டுமே. முகவரி, தொடர்பு எண் எதுவுமே கிடைக்கவில்லை.

அரை மணி நேரத்துக்கு முன்பு அவர் நினைத்திருப்பாரா தனக்கு மரணம் நேருமென்று? தன் மகனுக்கு எவ்வளவு ஆசையாக வாங்கியிருப்பார் அந்தச் சட்டையை?

உடன் பயணித்த அனைவரும் செய்ய முடிந்தது கண்ணிர்த்துளிகளைச் சிந்தியது மட்டுமே. நான் கண் முன்னே பார்த்த முதல் துர்நிகழ்வும் இதுவே!!
கொஞ்ச நேரத்தில் நிததொழுவு ரயில்நிலையம் வந்தடைய ரயில்வே காவலர்கள் அவரது உடலை எடுத்துச் சென்றனர்.
அவரது முகவரியை எப்படி கண்டுபிடித்தார்கள்? உடலை எப்படிச் சேர்த்திருப்பார்கள்?

இன்றும் நம்மில் பெரும்பாலானோர் இவரைப் போலவே உள்ளோம். நடுத்தர வயதை அடைந்தவுடன் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினாலும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. எங்கே செல்கிறோம், யாரைச் சந்திக்கிறோம் போன்றவற்றையும் வீட்டுலுள்ளோரிடமும் தெரிவிப்பதில்லை. குறைந்தது முகவரியையாவது பையில் வைக்க வேண்டாமா?

நடுத்தர வயதை அடைந்தவுடன் உடல் பரிசோதனை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது அன்று தான். அன்று முதல் என் பயணப்பைகளில் முகவரியையும், தொலைபேசி எண்களையும் வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

பயணங்களில் எத்தனையோ அனுபவங்களைப் பெற்றாலும் இந்த கோதாவரி விரைவுவண்டியில் பார்த்த சோகம் மட்டும் மறக்கமுடியாதது!!
..

Thursday, October 1, 2009

கூகுள் மேப்மேக்கர் பற்றி தெரியுமா?


உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? எந்த அளவிற்குத் தெரியும்?

"ஏப்பா, எங்க ஊரப் பத்தி எனக்குத் தெரியாதா?" என்று நீங்கள் முனுமுனுப்பது கேட்கிறது.

உங்கள் ஊரின் முக்கிய தெருக்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என அனைத்தையும் வரைய உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு. கூகுள் மேப்மேக்கரில்.
"கூகுள் மேப்ஸ் நமக்குத் தெரியும் தானே" என்று நினைக்காதீர்கள். விக்கிமேப்பியா, கூகுள் மேப்ஸின் முந்தைய வெளியீடுகளில் இல்லாத அளவிற்குத் துல்லியமாக நாம் நம் ஊர்களை வரைய முடியும்.

இதற்காக வடிவமைக்கப்பட்டதே கூகுள் மேப்மேக்கர் தளம். இந்தத் தளத்தைப் பயன்படுத்த உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியே போதுமானது.


மாவட்ட தலைநகரங்களைத் தவிர்த்து சிறு நகரங்கள், கிராமங்களுக்கெல்லாம் நல்ல இணையதள வரைபடங்கள் உள்ளனவா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பக்கத்தில் உள்ள கூகுள் வரைபடத்தில் உடுமலைப்பேட்டையின் (என் ஊர்) பிரதான் நெடுஞ்சாலைகளைத் தவிர வேறொன்றும் காணப்படவில்லை. இப்பொழுது நான் எனது பள்ளியையும், வேறொரு அன்பர் ஊரில் உள்ள திரையரங்கையும் வரைபடத்தில் ஏற்றியுள்ளார். தெருக்கள், உணவகங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கோயில்கள் என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

எப்படி சரியாக இடத்தைக் குறிக்க முடியும்?


இந்த வரைபடத்தில் மீட்டர், கிலோமீட்டர் போன்ற அளவுகோல்கள் உள்ளன. உங்கள் தெரு பிரதான சாலையில் இருந்து 100 மீட்டர் என்பது உங்களுத் தெரியும் தானே!

சரி, தவறாகக் குறித்து விட்டால்?

அதற்கும் வழிவைத்திருக்கிறார்கள் கூகுள் மேப்மேக்கர் நிறுவனத்தார். நீங்கள் வரைந்த / குறித்த இடத்தை மற்றொருவரும் சான்றளித்தாலே (மாடரேஸன்) இறுதியாக்கப்படும். இப்படி பயணர்களிடம் ஒரு சேவையை விரிவாக்கிப்பெறுவதற்குப் பெயரே CROWD SOURCING என்பது. விக்கிப்பீடியாவும் இந்த முறையிலேயே செயல்படுகிறது.

இந்த மேப்மேக்கரை வடிவமைத்தது கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பணியாளர்களே.கீழே உள்ள காணொளியைப் பாருங்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று.


என்ன தயாரா?

வாங்க கொட்டாம்பட்டி, பாப்பம்பட்டி, கோவில்பாளையம், குத்தாலம், சுங்குவார்சத்திரம், சூளகிரி, அம்மாபேட்டை, குளச்சல்னு நம்ம கிராமங்களையெல்லாம் வரைபடத்தில் ஏற்றுவோம்.
சென்னை போன்ற மாநகர அன்பர்கள் இது ஏதோ கிராமங்களுக்கு மட்டும் தான்னு நினைக்க வேண்டாம். உங்களுக்கு அறிமுகமான திரையரங்கங்கள், காபிக்கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள், தெருக்கள், பல்பொருள் அங்காடிகள் அனைத்தையும் கூகுள் மேப்மேக்கரில் ஏற்றுங்கள்.
உங்களுக்கு இந்த இடுகை பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்.
..
Related Posts with Thumbnails