
சில வருடங்களுக்கு முன்பு நான் காக்கிநாடா அருகே உள்ள யாணம் என்கிற நகரில் பணிபுரிந்து வந்தேன். அப்படி, ஒரு முறை காக்கிநாடா செல்லும் பொழுது விஜயவாடா வரையில் மட்டுமே முன்பதிவு செய்திருந்தேன். அங்கிருந்து பொது வகுப்பில் செல்ல வேண்டும். நான் பார்த்த ரயில் நிலையங்களிலேயே மிகவும் பிடித்தது என்றால் அது விஜயவாடா தான். கிருஷ்ணா நதிக்கரையில் அழகாக அமைந்திருக்கும் இந்த ரயில் நிலையம். இந்த வழியாக செல்லும் எல்லா ரயில்களுக்கும் நீர் நிரப்பும் நிலையமும் விஜயவாடா தான்.
தமிழ்நாட்டில் பேருந்து வசதிக்கு எப்படி திருச்சியோ, அது போல தென்னிந்தியாவுக்கு விஜயவாடாவைக் குறிப்பிடலாம். தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து கோல்கத்தா போன்ற கிழக்கிந்திய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களும் விஜயவாடா வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆக எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கும்.
நான் சென்ற ரயில் இரவு 12 மணியளவில் விஜயவாடா சென்றடைந்தது. அடுத்து வரவிருக்கும் ரயில் எது என்று கேட்ட பொழுது ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரை செல்லும் கோதாவரி விரைவுவண்டி என்று கூறினார்கள். அங்கே சாமல்கோடா வரைக்கும் பொது வகுப்பில் (அன் ரிசர்வ்டு) பயணச்சீட்டைப் பெற்றுக் கொண்டேன்.
பொது வகுப்பில் கூட்டத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆனால், உள்ளே சென்றவுடன் எப்படியோ நிற்பதற்கோ அல்லது நெருக்கிக்கொண்டு உட்காருவதற்கோ இடம் கிடைத்துவிடும்.பொது வகுப்பில் பெரும்பாலும் பயணத்தைத் திட்டமிடாதவர்களும், பொருளாதார வசதி இல்லாதவர்களையுமே பார்க்க முடியும். ஆனால், மற்ற இடங்களில் பார்க்க முடியாத உதவும் போக்கு பொது வகுப்பில் பார்க்க முடிவது தான் வியப்பானது. கோதாவரி விரைவுவண்டி வந்தவுடன் அடித்துபிடித்து பொது வகுப்பில் ஏறிக்கொண்டேன்.
அன்றும் வண்டியில் ஏறியவுடன் 40 வயது மதிக்கத்தக்க சக பயணி ஒருவர் எனக்கு இடமளித்தார். அவர் விஜயவாடாவிற்கு அருகில் ஏதோ ஊரிற்கு தொழில் ரீதியாத பயணம் செய்துவிட்டு சொந்த ஊரான விசாகப்பட்டிணத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவருடன் தொழில் ரீதியாக, அன்றே அறிமுகமான ஒருவரும் இருந்தார். வண்டி ஓடத் துவங்கியவுடன் நன்றாகக் காற்று வர ஆரம்பித்தது. அந்த இருவரும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே வந்தனர். எனக்கு ஓரளவே தெலுங்கு தெரிந்திருந்தாலும் அவர்களது பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது.
அந்தக் கலகலப்பு வெகுநேரம் நிலைக்கவில்லை. எனக்கு இடமளித்தவர் லேசாக புழுக்காமாக இருந்தது என்றார். நன்றாக காற்று வரும்பொழுது வியர்ப்பது ஏதோ விபரீததற்கு அறிகுறியாகத் தோன்றியது. சிறிது நேரத்தில் மார்பு, தோள் பகுதி எல்லாம் வலி எடுப்பதாகக் கூறினார்.
நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அருகில் இருப்பவர்களிடம் ஏதாவது மாத்திரை உள்ளதா என்று கேட்டுப்பார்த்தோம்.அவருக்கு உடல் உபாதைகள் இருக்கிறதா ஏதாவது மாத்திரை வைத்துள்ளாரா என்று கேட்பதற்குள், அவரால் வலி அதிகமாகி பதிலளிக்க முடியவில்லை. நடுக்காட்டில் பயணித்துக் கொண்டிருந்த வண்டியை நிறுத்தவும் முடியவில்லை. பொது வகுப்பில் மருத்துவர்களை எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.
வலி அதிகமாகி, முணுமுணுக்க ஆரம்பித்தவரது உயிர் சில நிமிடங்களில் பிரிந்தது.
அவருடன் பயணித்தவருக்கும் இவரைப் பற்றித் தெரியவில்லை. அவரது சட்டைப்பை, மற்றும் கைப்பையைத் தேடினால் கிடைத்தது சிறுவனுக்கான ஒரு புத்தாடை மட்டுமே. முகவரி, தொடர்பு எண் எதுவுமே கிடைக்கவில்லை.
அரை மணி நேரத்துக்கு முன்பு அவர் நினைத்திருப்பாரா தனக்கு மரணம் நேருமென்று? தன் மகனுக்கு எவ்வளவு ஆசையாக வாங்கியிருப்பார் அந்தச் சட்டையை?
உடன் பயணித்த அனைவரும் செய்ய முடிந்தது கண்ணிர்த்துளிகளைச் சிந்தியது மட்டுமே. நான் கண் முன்னே பார்த்த முதல் துர்நிகழ்வும் இதுவே!!
கொஞ்ச நேரத்தில் நிததொழுவு ரயில்நிலையம் வந்தடைய ரயில்வே காவலர்கள் அவரது உடலை எடுத்துச் சென்றனர்.
அவரது முகவரியை எப்படி கண்டுபிடித்தார்கள்? உடலை எப்படிச் சேர்த்திருப்பார்கள்?
இன்றும் நம்மில் பெரும்பாலானோர் இவரைப் போலவே உள்ளோம். நடுத்தர வயதை அடைந்தவுடன் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினாலும் யாரும் கேட்பதாகத் தெரியவில்லை. எங்கே செல்கிறோம், யாரைச் சந்திக்கிறோம் போன்றவற்றையும் வீட்டுலுள்ளோரிடமும் தெரிவிப்பதில்லை. குறைந்தது முகவரியையாவது பையில் வைக்க வேண்டாமா?
நடுத்தர வயதை அடைந்தவுடன் உடல் பரிசோதனை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் எனக்குப் புரிந்தது அன்று தான். அன்று முதல் என் பயணப்பைகளில் முகவரியையும், தொலைபேசி எண்களையும் வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.
பயணங்களில் எத்தனையோ அனுபவங்களைப் பெற்றாலும் இந்த கோதாவரி விரைவுவண்டியில் பார்த்த சோகம் மட்டும் மறக்கமுடியாதது!!
..
11 comments:
செந்தில்....நல்ல தகவல்....அவசியம் நம்முடைய விபரங்கள் எப்போதும் நம்முடன் இருக்கவேண்டும்...இல்லையெனில் பலருக்கு சிரமம்...
மிகத் தேவையான இடுகை. ஏதொ ஒரு தொடர்புத் தகவல் கையிலிருப்பது மிக அவசியம்.
செந்தில்,
எப்போதோ நிகழ்ந்த நிகழ்வாயினும், படித்து முடித்தபின் கண்கள் கலங்கி போயின. செல்பேசியில் கூட ICE(In Case of Emergency) எனும் பெயரில் தொடர்பு எண்ணை அனைவரும் வைத்துக்கொள்ள வேண்டும்...
கனத்த மனத்துடன்,
பிரபாகர்.
பயனுள்ள இடுகை. அந்த நண்பரின் நிலையை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. அனைவரும் நினைவில் நிறுத்தவேண்டிய இடுகை.
செந்தில், படித்து முடிக்கும் போது அதிர்ச்சி இதயத்தை அப்படியே அப்பிக் கொள்கிறது.
மரணம் கொடியது அதனினும் அனாதைப் பிணமாய், நினைத்தே பார்க்க முடியவில்லை.
அவரது மகன் அதன்பின் எப்போது புதுச்சட்டை எடுத்தாலும் இதுவே கண்முன் நிற்கும்
//செந்தில், படித்து முடிக்கும் போது அதிர்ச்சி இதயத்தை அப்படியே அப்பிக் கொள்கிறது.
மரணம் கொடியது அதனினும் அனாதைப் பிணமாய், நினைத்தே பார்க்க முடியவில்லை.
அவரது மகன் அதன்பின் எப்போது புதுச்சட்டை எடுத்தாலும் இதுவே கண்முன் நிற்கும்//
:(
வாங்க இஸ்மத் அண்ணே, நன்றி.
வாங்க பாலாண்ணே. நன்றி
வாங்க பிரபாகர். சரியாகச் சொன்னீர்கள். அவசரத்திற்கென்று எண்களை வைத்திருப்பது முக்கியம். நன்றி
வாங்க தமிழ் நாடன், நன்றி
வாங்க கதிர். உண்மை தான். அவரது முகம் இன்னும் கண்முன்னே நிற்கிறது :( நன்றி!
வாங்க அசோக். நன்றி!
கண்ணீரை வரவழைத்த பதிவு,மகனுக்கு ஆசையாய் வாங்கியதை கூட கொடுக்க முடியாமல் போய் சேர்ந்த மனிதர்.அவசியம் ஐடி வைத்துக் கொள்வோம்
;((
என்கிட்ட நிறைய பேரு கேப்பாங்க.. "நீ படத்துக்கு போனாலும் உங்க அம்மாகிட்ட.. எந்த தியேட்டரு, எந்த ஊரு, யாரு கூட போறன்னு சொல்லிகிட்டு இருக்கியே... உனக்கு அம்மான்னா அவ்வளவு பயமா?" ன்னு. அதுக்கு நான் சொன்ன பதில்தான உங்க இடுகை செந்தில்!
Post a Comment