Tuesday, February 23, 2010

திகைக்க வைக்கும் திவனாகு!!

உலகின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்று. நாலாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் நகரம். வியக்கவைக்கும் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் நகரம் என சொல்லிக்கொண்டே போகலாம் "திவனாகு"வைப் பற்றி!!

திவனாகு!!தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்த ஒரு வரலாற்றுத் தலம் தான் திவனாகு. பொலிவியாவின் தலைநகரம் 'லா பாஸி'ற்கு அருகிலும், உலகிலேயே உயரமான இடத்திலமைந்த (ஏரியான) டிடிகாகா ஏரிக்கு அருகிலும் அமைந்திருக்கிறது இந்நகரம். திவனாகு மக்களைப் பற்றிய எழுத்துப்பூர்வமான சான்றுகள் எதுவும் கிடைக்கா விட்டாலும், அவர்கள் நிர்மானித்த நகரமும், சூரையாடலிற்குப் பிறகு எஞ்சி நிற்கும் கட்டடங்களும் அவர்களின் சிறப்பை உலகிற்கு உரைக்கிறது.அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மண்பாண்டங்கள், எழில்மிகு சிற்பங்கள், தூண்கள், சிதைந்த பிரமிட்கள் என எஞ்சி நிற்கிறது திவனாகு. சில தூண்கள் 100 டன்கள் எடை கொண்டதாகவும், ஒன்றோடு ஒன்றாக சேர்த்து திடமாக நிற்கும் படியாகக் (ஆங்கில எழுத்து H வடிவத்திலான) கற்களை செதுக்கி கட்டடங்களை வடித்துள்ளார்கள். 10 மைல் தொலைவில் எந்த விதமான கல்குவாரிகள் இல்லாத போதும் எப்படி மிகப்பெரிய கற்களைச் சேர்த்திருப்பார்கள் என்பது வியப்பாகவே உள்ளது.


எகிப்து, மெக்சிகோ போன்ற இடங்களில் இருப்பதைப் போல பிரமிட்களும் திவனாகு நகரத்தின் 'அகாபானா' என்ற இடத்தில் அமைத்திருக்கிறார்கள். ஆனால் அவை யாவும் காலத்தின் மாறுதல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைந்த நிலையில் உள்ளது.

விரகோகா - திவனாகு மக்களின் கடவுளான விரகோகாவை வழிபடுவதற்காக, நகரின் பிரதானமாக ஒரு வாயிலை எழுப்பியுள்ளார்கள்.  படைக்கும் கடவுளாக சூரியன் சந்திரன் என அகில உலகத்தையும் உருவாக்கியவர் என்று திவனாகு மக்களால் கருதப்பட்டிருகிறார், விரகோகா. சூரியனைத் தலைக்கவசமாகவும் கையில் ஆயுதங்களை ஏந்தியபடியான சிலைகளைப் பார்க்கும் பொழுது உலகெங்கிலும் உள்ள மக்கள் எப்படி ஒரே மாதிரியான எண்ண ஓட்டங்களைக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

தொல்லியல் ஆய்வாளர்கள், திவனாகு மக்கள் கி.பி.1000 வரை இந்நகரத்தில் வாழ்ந்து வந்ததாகக் கருதுகின்றனர். டிடிகாகா ஏரிக்கரையில் விவசாயம் செய்தும், நல்ல விளைச்சலால் மற்ற நாடுகளுடன் வணிகம் செய்ததாகவும் கருதுகின்றனர். கி.பி. 600 முதல் கி.பி.700 வரை இவர்களின் தாக்கம் இன்றைய பெரு, பொலிவியா மற்றும் சிலி போன்ற நாடுகளிலும் இருந்திருக்கிறது.காலநிலை மாற்றத்தால் சரியான மழை பெய்யாததாலும் நீராதரங்கள் பொய்த்துப்போனதாலும் திவனாகு மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

இந்நகரம், 15ம் நூற்றாண்டில் இன்கா மன்னர்கள் கண்டுபிடிக்கும் வரை தொடர்பில்லாமல் இருந்திருக்கிறது. இன்கா அரசின் அழிவிற்குப் பிறகு 19ம் நூற்றாண்டில் பிற்பகுதி வரை மீண்டும் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. 

புதையல் தேடுபவர்களாலும், புதிதாக வீடுகளைக் கட்டுபவர்களாலும், ஸ்பானிஸ் படையெடுப்புகளாலும் சிதைக்கப்பட்ட இந்நகர்ம் இன்று பொலிவியா அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. முன்னோர்களின் வரலாறு எதுவும் இல்லாத பொலிவியா நாட்டு மக்கள் திவனாகு நகரையும் அவர்கள் விட்டுச்சென்ற கால்தடத்தையும் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்நாட்டு மக்களைப் பார்க்கும் பொழுதும் "நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றவற்றை எப்படிப் பாதுக்காக்கிறோம்" என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. வெயிலில் இருப்பவர்களுத்தானே தெரியும் நிழலின் அருமை?


இந்த இடத்தைப் பற்றிய தகவல்கள் உள்ள தளங்கள் கீழே..

http://www.archaeology.org/interactive/tiwanaku/
http://www.crystalinks.com/tiahuanaco.html
http://en.wikipedia.org/wiki/Tiwanaku

o

நட்சத்திரங்களின் உறக்கமும் மார்பகப் புற்றுநோயும்!!

நீங்கள் கடைசியாக நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தது எப்பொழுது?

அது தான் தினமும் சின்னத்திரையில் ரஜினி, கமல் முதல் விதவிதமான நட்சத்திரங்களைப் பார்க்கிறோமே, பிறகு எதற்காக விண்மீன்கள் என்று கேட்கத் தோன்றும். சென்னையில் இருந்து பொழுதும் சரி, இங்கே துபாயிலும் சரி, நட்சத்திரங்களைப் பார்க்கலாம் என்று வெளியே வந்தால் தெரிவதெல்லாம் ஒளிக்கதிர்கள் தான். 

பெருநகரங்களின் பிரதான சாலைகள் எங்கும் ஒளியை உமிழ்ந்து சீரிப்பாயும் வாகனங்கள், பளபளக்கும் கடைகள், அலங்கார விளக்குகள் என்று எங்கும் ஒளி வெள்ளம். வாகனங்கள் முதல் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வரை உமிழும் ஒளிக்கேட்ப மரியாதை!! ஒளிவெள்ளத்தில் மிதந்து வீட்டிற்குள் வந்தால் மீண்டும் ஒளிவெள்ளம். 

உலகெங்கும் உள்ள பெருநகரங்களின் பெருமையை அறியப்படுவதும் அந்தந்த நகரத்தின் கட்டடங்களின் ஒளிவெள்ளத்தைப் பொருத்தே!! சிட்னியின் ஓபேரா மாளிகை, நியூயார்க்கின் மன்ஹாட்டன், மும்பையின் கடற்கரை சாலை (மரைன் ட்ரைவ்), துபாய் ஷேக் ஷையத் சாலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். விண்ணிலுள்ள நட்சத்திரங்களையெல்லாம் கீழிறக்கிவிட்டது போன்ற உணர்வை பெருநகரங்களில் உலாவரும் பொழுது உணர முடிகிறது!! ஆனால் நம்மால் விண்மீன்களைப் பார்க்க முடிகிறதா?

நண்பா..
விண்மீன்களைப் பார்த்தது எப்பொழு தென்றாய்?

விண்மீனைத் தூதனுப்பியது முன்னோர் காலம்
விண்மீன்களைத் துணைக்கழைத்தது மன்னர் காலம்
விண்மீனைக் காட்டிச் சோறூட்டியது பாலர் காலம்
விண்மீன்களை மறந்தது நண்பா நம்காலம். 

வீட்டின் முற்றத்தில் படுத்துக் கொண்டு விண்மீன்களை ரசித்த நாட்கள் மீண்டும் வருமா? 

இரவில் திசையைக் காட்டும் துருவ நட்சத்திரங்கள், மாதத்தைக் காட்டும் நட்சத்திரக் கூட்டங்கள், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம், பார்த்துப் பார்த்து ரசித்த வெள்ளி, புதன், செவ்வாய் எல்லாம் மறந்தது எதனால்? அல்லது மறைந்தது எதனால்?

எல்லாம் ஒளிமாசு தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? காற்று, நீர், நிலம் எல்லாம் மாசடைந்திருப்பது தெரியும். அதென்ன ஒளி மாசு?வெளியில் அளவிற்கு அதிகமான ஒளி வெள்ளம் ஊடுருவியிருப்பது தான் ஒளிமாசு (Light Pollution).

நண்பா.. 
ஒளிமாசைப் பற்றித் தெரியுமா என்றேன்?

நெற்பயிரை யழிக்கும் நீர்மாசை யறிவேன்
நுரையீரலை யழிக்கும் காற்றுமாசை யறிவேன்
மண்ணுயிரை மலடாக்கும் நிலமாசை யறிவேன்
மானுடத்தைக் கருவறுக்கும் மனமாசையு மறிவேன்
அதென்ன ஒளிமாசு என்றாய்!!

நம் நாட்டில் பெரிதாக விவாதிக்கப்படாத ஒன்று தான் ஒளிமாசு. ஒளிமாசு என்று சாதாரணமாகக் கூறினாலும், இதனால் ஏற்படும் விளைவுகள் அதிர்ச்சியை அளிக்கின்றன. "இரவு நேரத்தில் உடலில் சுரக்கும் மெலடனின் (Melatonin) என்ற ஹார்மோனின் அளவு ஒளிமாசால் குறைகிறது" என்கிறது ஓர் ஆய்வறிக்கை. மெலடனின் அளவு குறைந்தால் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால், ஒளிமாசு அதிகமாக இருக்கும் வளர்ந்த நாடுகளிலுள்ள பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

டென்மார்க்கில், இரவு வேளையில் பணியாற்றிய 40 பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வந்துள்ளதென்று இந்த செய்தி குறிப்பிடுகிறது. இவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்த டானிஷ் அரசாங்கம் படிப்படியாக ஒளிமாசையும், இரவு நேர வேலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

"இரவு வேளையில் பணியாற்றினால் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளது" என்பது நம் நகரங்களுள் பரவி வரும் கால்செண்டர் நிறுவனங்களுக்குத் தெரியுமா?

ஒளிமாசின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

* இருண்ட அறையில் குறைந்தது 6-8 மணி நேரத்திற்கு தூங்க வேண்டும்.

* வீடுகளில் அதிகப்படியான ஒளியைக் குறைக்க வேண்டும்.

* இது தனி மனிதனிடம் இல்லாவிட்டாலும் நம் அரசாங்கம், சமூகத்தின் கையில் இருக்கிறது. நகரமெங்கும் பரவியுள்ள ஒளி வெள்ளத்தைக் குறைக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டது மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே. இரவின் ஒளிவெள்ளத்தால் குழம்பிப் போகும் பறவைகள், விலங்கினங்கள் இன்னபிற உயிரனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு கணக்கிலடங்காதவை!!


நமக்கு மட்டுமல்ல பறவைகள், விலங்கினகள் எல்லாம் எதிர்பார்ப்பது இரவில் நட்சத்திரங்கள் உறங்காமல் இருப்பதையே!! 

o

Friday, February 19, 2010

அமெரிக்க வாழ்க்கைமுறை நல்லதா?

வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதுகளில் ஷார்ஜாவிலிருக்கும் புஹைராஹ் கார்னிஷ் பூங்காவிற்குச் செல்வதுண்டு. என் நெருங்கிய நண்பரும் அவரது குடும்பத்துடன் வருவார். அனைவரும் மாலை நேரத்தில் அங்கே சென்று கதையடித்துக் கொண்டிருப்போம். நண்பரின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்க, எங்கள் மனைவிமாரும் அவர்களின் கதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்களும் உலக அரசியல், வளைகுடாஅரசியல், சொந்த ஊர் நிகழ்வுகள் என்று அளாவளாவ ஆரம்பித்துவிடுவோம். இது போன்ற ஒரு அளாவளாவுதலின் போது அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம்..

"என் அத்தை மகன் அமெரிக்காவில் 10 வருடங்களா குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கே சிட்டிசன்ஷிப் வாங்கிவிட்டார்" என்றேன்.

"ஏன் அவருக்கு இந்தியா திரும்பி வருவதில் விருப்பமில்லையா?" என்றார்.

"இந்தியாவிற்கு வருவதென்பதுஅவரது விருப்பம் மட்டுமல்லவே. அவரது மனைவியின் விருப்பம், மகனின் படிப்பு போன்றவற்றையும் சார்ந்தே உள்ளது"

"ம்ம்..."

"அவங்களுக்கு அமெரிக்க வாழ்க்கையின் வசதிகள் பழகிப்போயிடுச்சு போல.." என்றேன்.

"என்ன அமெரிக்க வாழ்க்கை? ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னாடி தான் ஒரு அமெரிக்கா. இன்னிக்கு 6,7 அமெரிக்க உருவாகிடுச்சு"

"என்னங்க சொல்றீங்க ஆறேழு அமெரிக்காவா?"

"ஆமா.. முப்பது நாற்பது வருஷத்துக்கு முன்னாடி தான் அமெரிக்கா மற்றும் சில மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அனைத்து வசதிகளும் கிடைத்தன. ஆனால் இன்று அமெரிக்கா போல பல பிரதிகள் அதே 20 கோடி மக்கள் தொகையில் உலகம் முழுவதும் வந்துவிட்டன!! மேற்கு ஐரோப்பா நாடுகள், கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஸ்யா, மத்திய கிழக்கு நாடுகள், சீனா மற்றும் இந்தியாவின் உயர்தர மற்றும் உயர் மத்திய வகுப்பு மக்கள், தென்கிழக்காசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் எல்லாம் கூட்டிப் பார்த்தால் ஆறேழு அமெரிக்கா வந்து விடாதா?" என்றார்.

"நீங்க சொல்றது சரி தான். அமெரிக்கால இருக்கற எல்லா வசதிகளையும் இந்தியால இருக்கற உயர்தர மற்றும் உயர் மத்திய வர்க்கத்தினர் அனுபவிக்கிறார்களே!! என்ன உள்கட்டமை தான் இல்ல" என்றேன் சிரித்தவாரே.

"ஆமா, முன்னாடியெல்லாம் ஊருக்கு ஒன்னோ ரெண்டோ காரைப் பார்ப்பதே பெரிய விசயமா இருக்கும். இன்று பரவலாக வீடுகளில் கார்கள் நிற்கின்றன. அதுவும் அஞ்சு லட்சம், ஏழு லட்ச ரூபாய் கார்கள் தான்!! நம்மளோட செலவழிக்கும் விதமும் மாறிடுச்சு!! எல்லாத்தையும் தேவைக்கு அதிகமா வாங்க ஆரம்பிச்சிட்டோம். இதுவும் அமெரிக்கால மட்டுமே இருந்த வாழ்வியல் முறை தான்!!"

"நமக்கு அதிகமா செலவு செய்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம்னு நினைப்பு என்ன செய்ய?" 

"ஆமா.. அதோட விளைவு தான் இன்னிக்கு எங்க பார்த்தாலும் வரலாறு காணாத பனி, வெயில், புயல், வெள்ளம்னு செய்திகள்ல கேட்டுட்டே இருக்கிறோம்" என்று நண்பர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது நண்பரின் மகளும் மகனும் சார்ஜா கார்னிஷ் படகுத்துறை அருகே செயல்பட்டுவரும் குழந்தைகள் (பொம்மைக்) காரை ஓட்ட வேண்டுமென்றார்கள். 

"என்னம்மா நீயும் தம்பியும் ஒரே கார் எடுத்துக்கறீங்களா?" என்று நண்பர் கேட்க..

"தனித் தனிக் கார் தான் வேணும்" என்று அடம்பிடிக்க ஆரம்பித்தார்கள்.  அங்கிருந்த படகுத்துறை பணியாளிடம் இரண்டு கார்களுக்கு வாடகையைக் கொடுத்துவிட்டு...

"இங்க ஆரம்பிக்குது அமெரிக்கா வாழ்க்கை முறை. இங்கே துபாய்லயே பாருங்க... தங்கள் வீட்டில் பெற்றோர் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று கார்களை வைத்திருப்பதைப் போலவே தான் குழந்தைகளும் கேட்கிறார்கள்!! இப்படி ஒவ்வொரு விசயத்துலயும் இதே நிலைமை தான்!!" என்றார்.

"நீங்க சொல்றது சரி தான். என்னுடன் பணிபுரியும் ஐரோப்பிய நண்பர்கள் பலரது வீடுகளிலும் இரண்டு கார்கள் வைத்திருக்கிறார்கள். என்ன நம்ம மக்கள் கரோலா வைத்திருந்தால் அவர்கள் பி.எம்.டபிள்யூவும், லம்போர்கினியும் வைத்திருக்கிறார்கள்"

"கார்ல மட்டுமா, பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகள், பெரிய குளிரூட்டும் சாதனம் என்று வீட்டுற்குத் தேவையான பொருட்களில் ஆரம்பித்து உணவுப் பொருட்கள் வரை அனைத்திலும் மேலை நாடுகளையே பின் தொடர ஆரம்பித்திருக்கிறோம்"

"ம்ம்.. சமீபத்துல ஒரு கட்டுரையைப் படித்தேன். 'உலக மக்கள் தொகைல 5% சதவிதமே இருக்கற அமெரிக்க மக்கள் உலக உற்பத்தியின் 20 சதவிதத்தை உட்கொள்கிறார்கள்' என்று. நீங்க சொல்ற மாதிரி ஆறேழு அமெரிக்கா உருவானா ரெண்டு பூமி வேணும் போல இருக்கே" என்றேன்.

"ஆமாம்.. நாம அமெரிக்க வாழ்க்கை முறையை நோக்கிச் செய்யற ஒவ்வொரு விசயமுமே நம்ம பூமியைச் சுருக்குவதாவே இருக்கு!!" என்று சில நிமிடங்கள் கார்னிஷின் அக்கரையில் தெரிந்த கட்டடங்களையும் குளிர்காலத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். 

அந்நேரத்தில் என் நினைவோட்டம் சில வருடங்களுக்கு முன்பு என் வாழ்க்கை முறை எப்படி இருந்தது. இப்பொழுது என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்றெல்லாம் ஓட ஆரம்பித்தது.

ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடைக்கு நடந்த சென்ற நான் இன்று காரையே நாடி நிற்கிறேன். முகம் மற்றும் கைகளைத் துடைக்கக் கைக்குட்டைகளைப் பயன்படுத்திப் பழகிய நான் இன்று மென்-காகிதங்களுக்கு மாறியுள்ளேன். சில வருடங்கள் கடைக்குப் பையை எடுத்துச் சென்ற நாங்கள் இன்று பிளாஸ்டிக் காகிதங்களையே பயன்படுத்துகிறோம். அன்றைக்குத் தேவையான பொருட்களை வாங்கிய நாங்கள் இன்று அதிகமாகப் பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளேன். இதெல்லாம் யோசிக்கும் பொழுது நானே அமெரிக்க வாழ்க்கைக்கு மாறி வருவதை உணர முடிகிறது.

நான் மெதுவாக கரையருகே சென்று நீரில் நீந்திக்கொண்டிருந்த பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் கரையருகே வந்த ஒரு பறவை நீரில் தன் அலகால் துளாவிக் கொண்டிருந்தது. என்ன செய்கிறது என்று கூர்ந்து பார்த்தால் தண்ணீரில் படிந்திருந்த செடிகளில் "கோகோ கோலா அலுமினியக் கேன்" மிதந்து கொண்டிருந்தது.

நம்மைப் போல பறவைகளும் அமெரிக்க வாழ்க்கையை விரும்புகிறதோ?

o

பொறுப்பி: ஆடம்பரமாக வாழ்க்கைமுறையையே (American Dream) அமெரிக்க வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளேன். அமெரிக்காவில் உள்ள எளியவர்களை இங்கே கணக்கில் கொள்ளவில்லை.

இப்பதிவு அமீரகத் தமிழ் மன்ற பத்தாம் ஆண்டு விழா மலரிற்காக எழுதப்பட்டது

o

Wednesday, February 17, 2010

ஷார்ஜா கிரிக்கெட் மைதானமும் ரெட்டைச் சதமும்(200)..

ஷார்ஜா!! 

ஏப்ரல் 18,1986 : இந்தியா - பாகிஸ்தான்

ஷார்ஜா கிரிக்கெட் இறுதி ஆட்டம். பாகிஸ்தான் அணி வெற்றி பெற கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுக்க வேண்டும்.

"முழு ஆட்டமும் ஒரு பந்தில் நான்கு ரன்கள் என்று சுருங்கிவிட்டது. கடைசி பந்தை எப்படி வீசுவது என்பதைப் பற்றி இந்தியர்கள் அனைவரும் ஒன்றாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் எனக்குள் திட்டமிட்டுக் கொண்டேன். எப்படியும் சேடன் ஷர்மா யார்க்கர் பந்தைத் தான் வீசப்போகிறார். நான் 110 ரன்கள் எடுத்திருந்தேன். இரண்டரை மணி நேரமாக மைதானத்தில் இருந்ததால் பந்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. கிரீஸிற்கு வெளியே வந்து விளையாடுவது என்று திட்டமிட்டுருந்தேன். ஃபீல்டர்கள் எங்கே நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நன்றாகப் பார்த்துக் கொண்டேன். கடைசிப் பந்தை எதிர்கொள்வதற்கு முன் கொஞ்சம் பிராத்தனையும் செய்துகொண்டேன்.

பாவம் சேடன் ஷர்மா!! யார்க்கராக வீச முயற்சி செய்ய, கையில் இருந்து பந்து நழுவியதோ அல்லது நான் முன்னால் வந்ததாலோ, ஃபுல் டாசாக வந்தது. அலேக்காக லெக் சைடில் அடித்தேன். சிக்ஸராக மாறியது. மற்றவை வரலாறு!!"


இது ஜாவத் மியாண்டாட் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் வரிகள்!!

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தப் போட்டிக்கென்று தனி இடம் தான். பரபரப்பான போட்டி என்றால் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் போட்டிகள் தான் என்ற நிலை மாறி இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் என்று மாறியது இந்தப் போட்டிக்குப் பிறகு தான்.

கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் என்றுமே ஷார்ஜாவிற்குத் தனி இடம் தான். வருடத்திற்கு நான்கைந்து கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்ற காலத்தில் ஷார்ஜாவில் மட்டும் ஒன்றோ இரண்டோ போட்டிகள் நடைபெற்று விடும். அதில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டால் பரபரப்பிற்கு அளவே கிடையாது. ஜாவத் மியாண்டாட், இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆக்யூப் ஜாவத், சக்லைன் முஸ்டாக் போன்ற பிரபல பாகிஸ்தான் வீரர்களைப் பற்றி நினைக்கும் பொழுதே நமக்கு நினைவிற்கு வருவது ஷார்ஜா மைதானம் தான்.

ஏப்ரல் 22, 1998 : இந்தியா - ஆஸ்திரேலியா

இந்தியா இறுதியாட்டத்திற்குத் தேர்வாக 46 ஓவரில் 236 ரன்கள் அல்லது வெற்றி பெற 276 ரன்கள் எடுக்க வேண்டும். 50 ஓவரில் கடுமையாக விளையாடினாலே 250ஐத் தொடமாட்டோம். இதில் எங்கே 46 ஓவரில் 236 ரன்கள் எடுப்பது? அதுவும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக!!

"இந்தியாவின் புயல் சச்சின் மைதானத்தில் விளையாடி வருகிறார். அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி விட சச்சின் மட்டும் புயலாக மாறி அடித்து ஆட.. நிஜமாகவே மண் புயல் மைதானத்தைச் சூழ்கிறது. இப்படியும் புயல் வருமா என்று நினைத்துக்கொண்டிருக்கும் பொழுதே, பாலைப்புயல் கிரிக்கெட் புயலிற்கு வழிவிட.. இந்தியா இறுதி ஆட்டத்திற்குத் தேர்வானது."


இறுதியாட்டத்திலும் கிரிக்கெட் புயலின் சதத்தால் இந்தியா ஆஸ்திரேலியா அணியை வென்றது.

இது வரை இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டிகளுக்கு இருந்த பரபரப்பு இந்தியா ஆஸ்திரேயா போட்டிகளுக்கு மாறியது இந்தப் போட்டியிலிருந்து தான். அது இன்று வரை தொடர்கிறது.

ஏதோ இந்தியாவிலேயே போட்டி நடப்பது போன்ற ஒரு சூழல், ஆடம்பரமான இருக்கைகள், திரைநட்சத்திரங்கள், கலக்கலான பார்வையார்கள் என ஷார்ஜா மைதானத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம். இத்தனை பெருமைகள் கொண்ட மைதானத்தில் சில வருடங்களாக சர்வதேசப் போட்டிகள் நடைபெறுவதில்லை. அவ்வப்பொழுது இரண்டாம் தர ஆட்டங்கள் மட்டும் நடைபெறுகின்றன. ஷார்ஜாவின் இடத்தை துபாயும், அபுதாபியும் பிடித்துக்கொண்டன. சென்ற வாரம் ஷார்ஜா மைதானம் அருகில் பயணம் செய்தேன். மைதானத்தின் கூறையைப் பார்த்த பொழுது கங்குலி விட்ட ராக்கெட்டுகள் தான் நினைவிற்கு வந்தன. 

எத்தனை ஆட்டங்கள், எத்தனை சர்ச்சைகள்?


1984ல் இருந்து ஒரு நாள் போட்டிகள் நடந்து வரும் ஷார்ஜா மைதானத்தில், இது வரை 199 போட்டிகள் நடந்துள்ளன. உலகில் வேறெந்த மைதானத்திலும் இத்தனை போட்டிகள் நடந்ததில்லை. வரும் 18ம் தேதியன்று ஷார்ஜா மைதானத்தில் 200வது போட்டி கனடா மற்றும் அஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. பரபரப்பிற்குப் பெயர் போன மைதானத்தில் சத்தமில்லாமல் 200வது போட்டி நடைபெறுவது வேதனையானது! எல்லாம் சூதாட்டம் செய்த வேலை!!

சர்வதேச அணிகளுக்கு இடையே போட்டிகள் நடந்தாலும் நடக்காவிட்டாலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஷார்ஜாவிற்குத் தனி இடம் இருக்கத்தான் செய்யும். தாஜ்மஹால் என்றவுடன் காதல் நினைவிற்கு வருவதைப் போல ஷார்ஜா என்றவுடன் கிரிக்கெட் தான் நினைவிற்கு வரும்!!

வாழ்க ஷார்ஜா கிரிக்கெட் நினைவுகள்!!

Sunday, February 14, 2010

வாழும் வரலாற்றுத் தலங்கள் - 2 - நாஸ்கா கோடுகளும் மர்மமும்!!

பெரு நாட்டிலுள்ள மச்சு பிச்சுவை இதற்கு முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இன்கா மக்கள் எதற்காக மலை உச்சியில் ஒரு நகரத்தை உருவாக்கினார்கள் என்ற கேள்விக்கே சரியான விடை இல்லை!! மச்சு பிச்சு மர்மத்தை விட தீர்க்க முடியாத மர்மம் தான் அதே நாட்டிலுள்ள நாஸ்கா கோடுகள்!!

செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்தமுடிவதைப் பற்றிய ஆராய்ச்சிகள், நொடிப்பொழுதில் கோடிக்கணக்கானோர் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளும் தொலைத்தொடர்பு வளர்ச்சி, மனிதனே தேவையில்லாத அளவிற்கு ரோபோக்களின் பயன்பாடு என்று இது வரை மனிதகுலம் பார்த்திராத அளவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. எந்த விசயமாக இருந்தாலும் அறிவியல் சார்ந்த பதிலைத் தர விஞ்ஞானிகளும் தவறுவதில்லை.

அப்படிப் பட்ட விஞ்ஞானிகளின் அறிவிற்கே சில சமயம் சவால் விடும் படியாக அமைந்து விடுகிறது முன்னோர்களின் படைப்புகள்!! எத்தனை சூத்திரங்களைக் கொண்டு அனுகினாலும் முன்னோர்கள் போட்ட முடிச்சுகளில் உள்ள மர்மத்தையும் சிக்கலையும் அவிழ்க்க முடிவதில்லை!! அப்படி ஒரு முடிச்சு தான் பெரு நாட்டு நாஸ்கா மக்கள் வரைந்த கோடுகள்!!

கோடுகள் வரைவதில் அப்படி என்ன பெரிய மர்மம்? நாம் ஏடுகளில் வரையாத கோடுகளா, ஓவியங்களா என்ற கேள்வி நம் மனதில் எழாமலில்லை. இவர்கள் வரைந்த கோடுகளின் பிரம்மாண்டமும், வரைந்த முறையும் தான் பிரமிப்பிற்குக் காரணம். இரும்புத்தாதுப் பொருட்கள் நிறைந்த நாஸ்கா நிலத்தில செந்நிறத்தில் கூழாங்கற்கள் பரவிக்கிடக்கின்றன.  இந்தக் கூழாங்கற்கள் அகற்றப்படும் இடம் வெளிர் நிறமாக மாற, இதே முறையில் கோடுகளை வரைந்துள்ளனர்.


இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரையப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது. பாடப்புத்தகத்தில் ஒரு ஓவியத்தை சீராக வரையவே நாம் சிரமப்படும் வேளையில், எப்படி பிரம்மாண்டமான கோடுகளைத் தீட்ட முடிந்தது? இந்தக் குரங்கின் முழு உருவத்தைப் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் உயரத்திற்குச் செல்ல வேண்டும். அதுவும் இப்பொழுது இருப்பதைப் போல உயரத்தில் இருந்து கண்கானிக்கும் கருவிகள், கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் அளவெடுக்கும் கருவிகள் எதுவும் இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

நாஸ்கா கோடுகள் அமைந்திருப்பது பெரு நாட்டில் உள்ள நாஸ்கா மற்றும் பால்பா என்ற இரண்டு இடங்களுக்கு நடுவிலான 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வறண்ட பீடபூமியில்!! இந்தப் பீடபூமியில் காற்று, மழை சுவடே இல்லாததால் 2000 ஆண்டுகளாகியும் அழியாமல் உள்ளன.


குரங்குகள், பறவைகள், சிலந்திகள், சூறாமீன்கள், பல்லிகள் என பெரிய உருவங்களும், முக்கோணம், நாற்கரம் போன்ற வடிவங்களும்  ஏராளமான நீண்ட கோடுகளும் பீடபூமி முழுவதும் வரையப்பட்டுள்ளன. நாஸ்காக் கோடுகளை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள், "எப்படி பல நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்து வரும் 60 கோடுகளை ஒரே புள்ளியில் இணைத்திருக்கிறார்கள்" என்று வியக்கிறார்கள்.


விண்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் தெளிவாகத் தெரியும் படியான ஆயிரக்கணக்கான கோடுகளை எதற்காக நாஸ்கா மக்கள் வரைந்திருக்கிறார்கள்? இந்தக் கோடுகள் கூறும் அர்த்தமென்ன?

ரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர் தன் வாழ்நாள் முழுவதையும் நாஸ்கா கோடுகளை ஆராய்ச்சி செய்வதற்கே அர்ப்பணித்துள்ளார். நாஸ்கா கோடுகள் வின்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும், சூரியன் மற்றும் சந்திரனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் குறிப்பதாகக் கூறியுள்ளார்.

இவருடைய ஆராய்ச்சி முடிவையும் தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வேற்று கிரக உயிரினங்கள் வந்திறங்க உதவுவதற்கே இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளதென்று சிலரும், இறைவனை வழிபடுவதற்கும் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவிப்பதற்காகவும் வரையப்பட்டது என்று சிலரும், மிக நீளமான ஆடைகளின் இழைகளை நெய்வதற்காக இந்தக் கோடுகள் வரையப்பட்டதென்றும் சிலர் கூறுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தீர்வை வெளியிட்டாலும், நாஸ்காவின் மர்மம் மட்டும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. 

சுற்றுலாப் பயணிகளுக்கு கால் நூற்றாண்டாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. பெரிய அளவிளான பலூன்களில் ஏறி ஒரு கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபடியே இந்தக் கோடுகளையும் உருவங்களையும் பார்க்க முடியும். 

நம் முன்னோர்கள் நம்மை விடவும் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு நாஸ்கா கோடுகள் ஒரு எடுத்துக்காட்டு தான்!!
o
நாஸ்கா கோடுகளைப் பற்றிய காணொளி கீழே..


நாஸ்கா கோடுகளைப் பற்றிய தகவல்களுள்ள தளங்களின் சுட்டி கீழே...

o

Saturday, February 13, 2010

எங்கே செல்கிறது கூகுள் பஸ்?

கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விசயம் தான் கூகுள் பஸ் (Buzz)! ஜிமெயில் முகப்புப் பக்கத்திற்கு வரும்பொழுதே புதிதாக ஒரு சுட்டி வந்துள்ளது "கூகுள் பஸ்ஸைப் பிடியுங்கள்" என்று.

ஜி-மெயில் பயனர் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வசதியை, "ஆஹா!! அருமையான ஒரு சேவை" என்று சிலரும், "எதற்காக வலிந்து நம் மீது ஒரு புது சேவையைப் புகுத்துகிறது கூகுள்!" என்று சிலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

சரி எதற்காக இந்த கூகுள் பஸ்?

இணைய உலகில் தேடுதல், மின்னஞ்சல், பேச்சாடல், செய்திகள், புகைப்படம் பகிர்தல் என்று பரவலாக அனைத்து சேவைகளையும் வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற  உடனுக்குடன் தன் நிலையைப் புதுப்பிக்கும் "நிலை புதுப்பிப்பான்" (Status Updater ) சேவையை மட்டும் கோட்டை விட்டுவிட்டது. இந்த ஓட்டையை நிரப்புவதற்காக வந்திருக்கும் சேவை தான் பஸ்!!

இந்த நிலை புதுப்பிப்பான் மூலம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுக்கு என்ன பயன்? லேட்டானாலும் லேட்டஸ்டாக எதற்காக கூகுளும் இந்த சேவையில் குதித்துள்ளது?

எல்லாம் பாய்ஸ் படத்தில் நம்ம நடிகர் செந்தில் சொல்வது போல "இன்பர்மேசன் இஸ் வெல்த்" என்பதற்கே!! ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் என்ன மாதிரியான விசயங்களை விவாதிக்கிறார்கள், எந்த ஊரில் எந்த விசயம் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது, எந்த வயதினர் எதை விரும்புகிறார்கள் போன்ற தகவல்கள் தான் இன்று "தங்க முட்டையிடம் வாத்துகள்" எனலாம்.

வர்த்தக ஆய்வு (Market Research ) நிறுவனங்கள் முதல் செய்தித் தகவல், தொழிற்துறை என அனைத்து துறையினர் இது போன்ற தகவல்களை மிகவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட்    (i-pad) என்ற பொருளை சந்தையில் அறிமுகப்படுத்திய பொழுது அதைப் பற்றி எத்தனை சதவிதத்தினர் விவாதித்தனர்? எந்த வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது. "ஐ-பேட்"ன் போட்டி நிறுவனமான "கிண்டில்"(Kindle) வெளியான பொழுது எந்த அளவு விவாதம் நடந்தது போன்ற தகவல்களை வைத்து, நிறுவனங்கள் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக டிவிட்டரில் விவாதம் செய்த  விசயங்களில் கூகுள் பஸ், காதலர் தினம், ஷாருக்கானின் MNIK போன்ற விசயங்கள் முன்னனி உள்ளன. இது போன்ற தகவல்கள் வருங்காலத்தில் மதிப்பு மிக்கவை. இந்த வருமானத்தை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை தான் பஸ்!!

அது மட்டுமல்ல?

இதனுடைய மற்றுமொரு பரிமாணம் சமூக இடங்கள் (SOCIAL LOCATION) சார்ந்த சேவைகள்!!

இன்று சென்னைக் கீழப்பாக்கம் ஈகா திரையரங்கள் அருகில் இருந்து ஒரு விசயத்தைப் பற்றி விவாதிக்கிறீர்கள் என்றால், அந்த இடம் சார்ந்த விளம்பரங்கள் செய்யும் வாய்ப்பு போன்ற சேவைகளில் கிடைக்கவிருக்கும் வருமானத்திற்கு எல்லையே இல்லை. 

Social Location சேவைகளால் பயனர்களுக்கு என்ன பயன்?

கூகுள் பஸ்ஸில் என்னைத் தொடரும் நண்பர்களுள் யார் மிக அருகில் இருக்கிறார்கள்? புதிதாக நான் சென்றிருக்கும் ஊரில் என் நண்பரின் நண்பர்கள் யார் யார் இருக்கிறார்கள்? அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் இடங்கள் எவை போன்ற விசயங்களைச் சொல்லலாம்!!

இதுவரை கூகுள் பஸ் பற்றியும் சமூக வலையமைப்புத் தளங்கள் பற்றியும் சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம்.

எனக்கு இந்த பஸ்ஸில் பயனிக்க விருப்பமில்லை. நான் எத்தனை பேரைத் தொடர்கிறேன் என்ற விசயத்தை யாரிடமும் பகிர விருப்பமில்லை என்று நினைத்தால்... ஜிமெயில் பக்கத்தின் கீழே சென்றால் "Turn off buzz" என்று ஒரு சுட்டி உள்ளது. அதை அழுத்தினால் உங்களை யாரும் பஸ் செய்யமாட்டார்கள். 


ஜிமெயில் ப்ரபைல் (Profile) பக்கத்திற்கு சென்றால் உங்களைப் பற்றிய எந்த செய்தியைப் பகிர்வது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
என்ன? உங்களுக்கு கூகுள் பஸ்ஸில் ஏற விருப்பமிருக்கிறதா? இல்லையா?

Friday, February 12, 2010

தாலாட்டும் சுகிசிவமும்...

நீங்க கடைசியா உங்க வீடுகள்ல தாலாட்டுக் கேட்டது எப்பொழுது?

இந்தக் கேள்வியைக் கேட்டது "இந்த நாள் இனிய நாள்" என்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சுகிசிவம் அவர்கள். { துபாய் நேரம் காலை 5:30 மணிக்கு (இந்திய நேரம் காலை 7 மணி) இந்நிகழ்ச்சி வருவதால் பார்க்கத் தவறுவதில்லை}

நான் கடைசியாகத் தாலாட்டுப் பாடலைக் கேட்டது எங்க ஆத்தா(பாட்டி) என் தங்கைகளுக்குப் பாடிய பொழுது தான். 

"ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ! உல்ல்ல்லாய்யீ...."

என்று பாடும் பொழுது நானும் பின்னாடியே பாடிய நினைவு!! 

சுகிசிவம் அவர்கள் நேற்றைய (11.02.10) நிகழ்ச்சியில் தாலாட்டைப் பற்றிய செய்திகளை அழகாக வழங்கினார்.

தாலாட்டு என்ற பாடல் வகை தமிழ் கலாச்சாரத்தில் ஒரு வகை. குழந்தைகளைத் தூங்க வைக்க பாடும் பாடல் என்பது இதைப் படிக்கும் தலைமுறையினர் வரை அனைவரும் அறிந்த விசயம் தான!! "தால்" என்பது "நா"வைக் குறிக்கும் ஒரு சொல்!! நாவை ஆட்டிப் பாடப்படுவதால் தாலாட்டு எனப்படுகிறது. 

தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன. அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்மறந்து தூங்குகின்றது. அது மட்டுமல்லாமல், "தன் தாயில் குரலில் கேட்கும் பொழுது குழந்தைகளுக்கு மன அமைதியும் பயமும் நீக்கப்படுகிறது" என்ற செய்தி வியப்பளித்தது. தாலாட்டைப் பாட பெரிய அளவிலான இசையறிவெல்லாம் தேவைகிடையாது. அன்றாடம் பயன்படுத்தும் சொற்களை வைத்தே பாடக்கூடியது என்பதற்கு இந்தத் தாலாட்டுப் பாடல்களே சான்று..

சங்குல பால் வார்த்தா சமத்து குறையுமுன்னு
இரும்புல பால் வார்த்தா எழுத்து குறையுமுன்னு
வெள்ளியில பால் வார்த்தா பாசம் குறையுமுன்னு
கையில பால் வார்த்தேன் கண்ணே நீ தூங்கு!!

O

ஆராரோ ஆராரோ – கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! – உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அலரிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு.....

O

பழங்காலத்தில் ஆழ்வார்கள் கண்ணன், இராமன் போன்ற கடவுளர்களுக்குப் தாலாட்டுப் பாடல்களைப் பாடியுள்ளனர். கடவுளர்க்கு மட்டும் தான் பாட வேண்டுமா?

குழந்தைகளும் கடவுள் தானே!!

இராமநாதபுரத்தில் சேதுபதி மன்னன் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக ஒரு செய்தியை கூறினார் சுகிசிவம். 

மன்னன் சேதுபதியின் மாளிகைக்கு அருகே குடியிருந்த ஒரு பெண் தன் குழந்தைக்கு தாலாட்டைப் பாடிக்கொண்டிருந்தார். அவர் தாலாட்டுப் பாடும் பொழுது மன்னரும் அதைக் கேட்பதை வழக்கமாக்கியிருந்தார். இந்தத் தாய் தன் குழந்தையின் தொட்டிலை ஆட்டும் தொலைவிற்குத் தகுந்த வாரு ராகத்தையும் அமைத்திருக்கிறார். அந்த ராகத்திற்கு ஏற்றவாறு மன்னரும் தன் கையை அசைத்து மகிழ்ந்திருக்கிறார். அப்பொழுது அவரது கையில் இருந்த வைர மோதிரத்தில் பட்ட சூரிய ஒளி இந்தப் பெண்ணின் வீட்டின் கதவில் விழுந்து, தன் தாலாட்டிற்கேற்ப ஆடியிருக்கிறது.

இதைப் பார்த்த அந்தத் தாய்..

"மன்னவரின் மோதிர ஒளி
வீட்டு வாசலிலே வந்து விழ
அந்த மோதிரம் வேணுமுன்னு
அழுகிறாயோ? கண்ணே நீ தூங்கு.."

என்று பாடியிருக்கிறார். இதைக் கேட்ட மன்னன் அந்த மோதிரத்தை குழந்தைக்குப் பரிசளித்தாராம்.

O

இப்படி நம் பாரம்பரியத்தில், நம் வாழ்வியல் முறையில் ஒன்று கலந்த தாலாட்டுப் பாடல்களின் இன்றைய நிலைமை என்ன? இதே கேள்வி என் குடும்பத்தில் என்ன நிலை என்பதை என் அப்பாவிடம் கேட்டபொழுது..

"அப்பா, ஆத்தாவுக்கு அப்புறம் யாருக்கங்ப்பா தாலாட்டு பாடத்தெரியும்?"

"அட..."

"என்னங்கப்பா கஷ்டமான கேள்வியக் கேட்டுட்டனா?"

"ஆமாம்பா.. உங்க பெரியத்தைக்கு மட்டும் தெரியும்னு நினைக்கிறேன்" என்றார்.

"உங்க பேரப்பசங்களுக்கெல்லாம் எப்படித் தாலாட்டுப் பாடறது?"


"அது பாடறவங்களக் கேட்டாத்தானே பாட முடியும். ஏதாவது தாலாட்டுப் பாடல் புக் கிடைக்குதான்னு கோவை போகும் போது விஜயால பாக்கறேன். அப்புறம் பெரியத்தையப் பாக்கற பொழுது எப்படி பாடறதுன்னு மருமகளுக்கு சொல்லச் சொல்றேன்" என்றார்.

O

ஐந்து சகோதரிகளுடன் பிறந்த என் தந்தையின் பதிலிலேயே தாலாட்டுப் பாடல்களை நாம் எப்படித் தவற விட்டுள்ளோம் என்பது புரிகிறது.தொலைக்காட்சிகளில் வரும் குத்துப்பாடல்களுக்குத் தங்கள் குழந்தைகள் ஆடுகிறது என்பதைப் பெருமையாகக் கருதுவது சரியா? தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு மன அமைதியுடன் தூங்கிய குழந்தைகள் இன்று "ஹிட்" நம்பர்களைக் கேட்டு மன அமைதியை இழந்து விடுகின்றனர் என்பதே சுடும் உண்மை!!

O

Saturday, February 6, 2010

வாழும் வரலாற்றுத் தலங்கள் - 1 - மச்சு பிச்சு

ரலாறு என்றவுடன் நமக்கு நினைவிற்கு வருவன எவை? முன்னோர்களின் வாழ்க்கை முறை, மன்னர்களின் ஆட்சிமுறை, பண்பாட்டுச் சின்னங்கள், உருவாக்கிய நகரங்கள், கோட்டைகள், மாளிகைகள் போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் நமக்குப் "பார்த்தவுடனே" பிரமிப்பை ஏற்படுத்துவது வரலாற்றுத் தலங்களே!! 

தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தஞ்சைப் பெரிய கோவில், தாராசுரம் கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும் இன்னபிற தலங்கள் நம் முன்னோர்களின் சிறப்பைப் போற்றுகின்றன. இதே போல உலகெங்கும், வரலாற்றுத் தலங்கள் அந்தந்த நாட்டு முன்னோர்களின் சிறப்பைப் பறைசாற்றி நிற்கின்றன. 

இது போன்ற வரலாற்றுத் தலங்களை அறிமுகப்படுத்துவதே இத்தொடரின் குறிக்கோள்!! 

o

மச்சு பிச்சு!!


தென்னமெரிக்க நாடான பெருவில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நகரம் தான் மச்சு பிச்சு!! செங்குத்தான ஆண்டிஸ் மலைத்தொடரில், கடல் மட்டத்திற்கு மேல் 2400 மீட்டர் உயரத்தில் கொண்ட   "இன்கா பேரரசால்" கட்டப்பட்டது. ( நம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்கள் கிட்டத்தட்ட இந்த உயரம் தான்!!) 

பச்சாகுட்டி (Pachakuti) என்ற இன்கா மன்னரின் ஆட்சிக்காலத்தில் இந்த நகரம் கட்டப்பட்டிருக்கிறது. பழங்காலத்தில், மலைகளின் நடுவே மக்கள் வாழ்க்கை நடத்தியிருந்தாலும் "மச்சு பிச்சு" நகரத்திற்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு?

செங்குத்தான மலைத்தொடரின் உச்சியில் 1000 பேர் வாழும்படியாக ஒரு நகரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்குமளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத பொழுது எப்படி நிர்மானித்தார்கள்? மக்களின் உழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மலை உச்சியில் ஒரு நகரம் அமைப்பதென்பது அதிசயமானதே!!சீனப் பெருஞ்சுவரும் மலை உச்சியில் தான் கட்டப்பட்டதென்றாலும், அவை மங்கோலியப் படையெடுப்பைத் தடுப்பதற்காகவே பயன்பட்டது. ஆனால் மச்சு பிச்சு நகரமோ, அடர்ந்த காட்டுக்குள்ளே யாரும் எளிதில் அடைய முடியாத இடத்தில்!! இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைப்புகள், கற்களால் ஆன வடிவங்கள் ஏதோ சூரிய அல்லது இறை வழிபாட்டிற்கான இடமாக இருந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். 

தேயிலைத் தோட்டங்களில் படிப்படியாக பயிரைச் சாகுபடி செய்ய அமைக்கப்பட்டிருப்பதைப் போல மலைச்சரிவில் படிப்படியாக கட்டடங்களை கட்டியிருப்பது இன்கா மக்களின் கலாச்சாரத்தைப் போற்றுகிறது. மழைக்காலத்தில் வெள்ளத்தால் கட்டடங்கள் அடித்துச் செல்லாமல் இருக்கும் படியாக வடிகால்களையும், விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆதாரங்களையும் உருவாக்கியிருப்பது வியப்பளிக்கிறது.இவ்வளவு சிறப்பாக ஒரு நகரை உருவாக்கிய இன்கா பேரரசு என்ன ஆனது?


பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய இன்கா மக்கள் கஸ்கா என்ற தங்கள் நகரத்தை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

ஸ்பானியர்களும் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். சுமார் முப்பத்து ஆறு ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். இன்கா மக்களை வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள். போராளிகள் மட்டுமன்றி கண்ணில் பட்ட அனைவருமே படுகொலை செய்யப்பட்டனர். ஸ்பானிய படைகள் கடைசியில் வில்காபாமாவையும் தாக்கியது. இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். மன்னனைச் சிறைப்பிடித்த ஸ்பானியர்கள் அவரை கஸ்கோ நகருக்குக் கொண்டு பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வந்து படுகொலை செய்தனர்.


ஸ்பானியர்களின் படையெடுப்பின் காரணமாக இன்கா பேரரசு முழுவதும் சிதைக்கப்பட்டு மக்கள் சிதரடிக்கப்பட்டனர். இப்படி ஐரோப்பியர்களின் படையெடுப்பின் காரணமாக உலகெங்கும் அழிந்த கலாச்சாரங்கள் எத்தனையோ?


இன்கா பேரரசை ஸ்பானியர்கள் கைப்பற்றியதில் இருந்து, இப்படி ஒரு நகரம் இருப்பது தெரியாததால் கைவிடப்பட்ட நிலையில் இருந்து வந்தது "மச்சு பிச்சு".  பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த இந்த நகரத்தை 1911 இல் அமெரிக்க வரலாற்றியலாளர் ஹிராம் பிங்கம் என்பவர் மீளக் கண்டுபிடித்தார். அதன் பின்னர் இது ஒரு சுற்றுலாப் பயணிகளின் ஒரு முக்கிய இடமாக மாற்றப்பட்டது. 1983 முதல் யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார சிறப்புமிக்க இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.மச்சு பிச்சு நகரிற்குச் செல்ல குஸ்கோ என்னும் நகரில் இருந்து ஒல்லாண்டயடம்போ என்னும் இடத்திற்கு ரயிலிலும், பிறகு மலைகளின் சரிவில் உள்ள பேருந்து பயணம் மூலம் இடத்தைச் சென்றடைய முடியும்!! 2007ல், புதிய 7 உலக அதிசயங்கள் பட்டியலை சுவிஸ் நாட்டைச் சேர்ந்த அமைப்பு தேர்ந்தெடுத்த பொழுது இந்த வரலாற்றுச் சின்னம் நமக்கு அறிமுகமானது. 

தென்னமெரிக்க நாடுகளில் நம்மவர்கள் பணியாற்றி வந்தால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடத்தில் மச்சு பிச்சுவைச் சேர்த்தாக வேண்டும்!!

இந்தத் தலத்தைப் பற்றிய ஜியாகரபிக் சேனலின் காணொளி கீழே..உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய மறக்காதீர்கள்!!
..

Tuesday, February 2, 2010

டொயோட்டாவின் டோட்டல் ரீகால் (Toyota - Total Recall)

டொயோட்டா நிறுவனமா இப்படி?

இது தான் வர்த்தகத்துறை, தொழிற்துறை, பங்குச் சந்தை, சாமான்ய மக்கள் என அனைவரும் கேட்கும் கேள்வி!!

தர நிர்ணயம், தரக் கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதே நமக்கு டொயோட்டா நிறுவனத்தின் பெயரும் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு தரக்கட்டுப்பாட்டில் தலைசிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது.

இன்று தொழிற்சாலைகளில் புழக்கத்தில் உள்ள 5S (Seiri - வகைப்படுத்து, Seiton- ஒழுங்குபடுத்து,Seiso- சுத்தப்படுத்து,Seiketsu - நிலைப்படுத்து, Shitsuke - கடைப்பிடி) கொள்கைகள், கழிவுகளை அகற்றும் 3M (Mudi - தேவையற்ற உற்பத்தி, Mura - தேவையற்ற நடமாட்டம்,Muri - தேவையற்ற காத்திருத்தல்) கொள்கைகள், Kaizen, டொயோட்டா மேலாண்மைக் கொள்கைகள் என அனைத்துமே ஜப்பானியர்களும், டொயோட்டா நிறுவனத்தினரும் ஆரம்பித்தவையே.

இது போன்ற தரக்கொள்கைகளைக் கடைப்பிடித்து தர நிர்ணயத்தில் சிறந்து விளங்கும் நிறுவங்களுக்கே டெமிங்க்ஸ் போன்ற உயரிய தர நிர்ணய விருதுகளும் வழங்கப்படுகின்றன. தமிழகத்திலும் இந்த டெமிங்க்ஸ் விருதை லூகாஸ் டிவிஎஸ், சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிடுவது நல்லது!!

இப்படி தரத்தில் முன்னோடியாக விளங்கிய டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் (Accelerator Pedal) முன் செலுத்தும் விசையின் கீழ் உள்ள கால்மிதியில் கோளாறு இருப்பதாக வெளியான அறிவிப்பு தான் "டொயோட்டா நிறுவனத்திலா இப்படி?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

"இந்தக் குறைபாடு உள்ள கார்களில் விசை அழுத்தும் பொழுது எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்தக் குறைபாடு உள்ளதாகக் கருதப்படும் பல இலட்சம் கார்களைத் திரும்பப் பெற்றுச் சீராக்கித் தருவதாகவும் கூறியுள்ளது டொயோட்டா நிறுவனம்". 

பொருளாதாரப் பின்னடைவால் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பொழுதும் டொயோட்டா நிறுவனம் பெருமளவில் பாதிப்படையவில்லை. மேலும் தற்பொழுது வாகன உற்பத்தியில் உலகின் முதன்மை நிலைக்கும் வந்துள்ளது. இந்த நேரத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனிக்கத்தக்கது. கரோலா, RAV4, மேட்ரிக்ஸ், ஏவலான், கேம்ரி, ஹைலாண்டர், துண்ட்ரா, செக்கோயா ஆகிய கார்களில் இந்தக் குறைபாடு உள்ளது.

இந்த அறிவிப்பைப் பற்றி யோசிக்கும் பொழுது பல எண்ணங்கள் எழுகின்றன..

o தர நிர்ணயத்திலும், மேலாண்மைக் கொள்கைகளாலும் தலை சிறந்து விளங்கும் நிறுவனமானாலும் சின்ன கவனக்குறைவோ, திட்டமிடுதலில் குறையோ இருந்தால் "ஆனைக்கும் அடி சறுக்கும்" நிலை தான் ஏற்படும். 

o ஐம்பது ஆண்டுகளாக வாகன உற்பத்தியில் முன்னோடி, உலகெங்கும் மக்களால் மதிக்கப்படும் நிறுவனங்களுள் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நிறுவனம், உலகில் கார் விற்பனையில் நம்பர் 1 போன்ற பெருமைகள் இருந்து என்ன பயன்? 

o வாடிக்கையாளர்களே முதலாளிகள் என்பதை உணர்ந்து அனைத்து கார்களை பழுது பார்க்கவுள்ள டொயோட்டா நிறுவனத்தினர் பாராட்டிற்குரியவர்களே!! 

o "There is no room for Mistakes" என்பதைப் போல சின்ன தவறு செய்தாலும் நம்பிக்கையிழப்பு, நேரவிரயம், பணவிரயம் எல்லாம் ஏற்படும் என்பதே டொயோட்டா விசயத்தில் நாம் கற்க வேண்டிய பாடம்!!

oo

There was an error in this gadget
Related Posts with Thumbnails