Tuesday, February 2, 2010

டொயோட்டாவின் டோட்டல் ரீகால் (Toyota - Total Recall)

டொயோட்டா நிறுவனமா இப்படி?

இது தான் வர்த்தகத்துறை, தொழிற்துறை, பங்குச் சந்தை, சாமான்ய மக்கள் என அனைவரும் கேட்கும் கேள்வி!!

தர நிர்ணயம், தரக் கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதே நமக்கு டொயோட்டா நிறுவனத்தின் பெயரும் நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு தரக்கட்டுப்பாட்டில் தலைசிறந்த நிறுவனமாக விளங்கி வருகிறது.

இன்று தொழிற்சாலைகளில் புழக்கத்தில் உள்ள 5S (Seiri - வகைப்படுத்து, Seiton- ஒழுங்குபடுத்து,Seiso- சுத்தப்படுத்து,Seiketsu - நிலைப்படுத்து, Shitsuke - கடைப்பிடி) கொள்கைகள், கழிவுகளை அகற்றும் 3M (Mudi - தேவையற்ற உற்பத்தி, Mura - தேவையற்ற நடமாட்டம்,Muri - தேவையற்ற காத்திருத்தல்) கொள்கைகள், Kaizen, டொயோட்டா மேலாண்மைக் கொள்கைகள் என அனைத்துமே ஜப்பானியர்களும், டொயோட்டா நிறுவனத்தினரும் ஆரம்பித்தவையே.

இது போன்ற தரக்கொள்கைகளைக் கடைப்பிடித்து தர நிர்ணயத்தில் சிறந்து விளங்கும் நிறுவங்களுக்கே டெமிங்க்ஸ் போன்ற உயரிய தர நிர்ணய விருதுகளும் வழங்கப்படுகின்றன. தமிழகத்திலும் இந்த டெமிங்க்ஸ் விருதை லூகாஸ் டிவிஎஸ், சுந்தரம் பிரேக் லைனிங்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன என்பதை குறிப்பிடுவது நல்லது!!

இப்படி தரத்தில் முன்னோடியாக விளங்கிய டொயோட்டா நிறுவனத்தின் கார்களின் (Accelerator Pedal) முன் செலுத்தும் விசையின் கீழ் உள்ள கால்மிதியில் கோளாறு இருப்பதாக வெளியான அறிவிப்பு தான் "டொயோட்டா நிறுவனத்திலா இப்படி?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

"இந்தக் குறைபாடு உள்ள கார்களில் விசை அழுத்தும் பொழுது எதிர்பார்த்ததை விட அதிக வேகமாக செல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்தக் குறைபாடு உள்ளதாகக் கருதப்படும் பல இலட்சம் கார்களைத் திரும்பப் பெற்றுச் சீராக்கித் தருவதாகவும் கூறியுள்ளது டொயோட்டா நிறுவனம்". 

பொருளாதாரப் பின்னடைவால் ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்டு போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பொழுதும் டொயோட்டா நிறுவனம் பெருமளவில் பாதிப்படையவில்லை. மேலும் தற்பொழுது வாகன உற்பத்தியில் உலகின் முதன்மை நிலைக்கும் வந்துள்ளது. இந்த நேரத்தில் தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு கவனிக்கத்தக்கது. கரோலா, RAV4, மேட்ரிக்ஸ், ஏவலான், கேம்ரி, ஹைலாண்டர், துண்ட்ரா, செக்கோயா ஆகிய கார்களில் இந்தக் குறைபாடு உள்ளது.

இந்த அறிவிப்பைப் பற்றி யோசிக்கும் பொழுது பல எண்ணங்கள் எழுகின்றன..

o தர நிர்ணயத்திலும், மேலாண்மைக் கொள்கைகளாலும் தலை சிறந்து விளங்கும் நிறுவனமானாலும் சின்ன கவனக்குறைவோ, திட்டமிடுதலில் குறையோ இருந்தால் "ஆனைக்கும் அடி சறுக்கும்" நிலை தான் ஏற்படும். 

o ஐம்பது ஆண்டுகளாக வாகன உற்பத்தியில் முன்னோடி, உலகெங்கும் மக்களால் மதிக்கப்படும் நிறுவனங்களுள் முதல் ஐந்து இடத்தில் இருக்கும் நிறுவனம், உலகில் கார் விற்பனையில் நம்பர் 1 போன்ற பெருமைகள் இருந்து என்ன பயன்? 

o வாடிக்கையாளர்களே முதலாளிகள் என்பதை உணர்ந்து அனைத்து கார்களை பழுது பார்க்கவுள்ள டொயோட்டா நிறுவனத்தினர் பாராட்டிற்குரியவர்களே!! 

o "There is no room for Mistakes" என்பதைப் போல சின்ன தவறு செய்தாலும் நம்பிக்கையிழப்பு, நேரவிரயம், பணவிரயம் எல்லாம் ஏற்படும் என்பதே டொயோட்டா விசயத்தில் நாம் கற்க வேண்டிய பாடம்!!

oo

12 comments:

வானம்பாடிகள் said...

good one. thanks senthil

பழமைபேசி said...

நல்ல தகவல்...நன்றிங்க செந்தில்!

பினாத்தல் சுரேஷ் said...

செந்தில்,

இந்தப் பிரச்சினைக்கும் 5S, 3M போன்ற கொள்கைகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை :-)

ஆக்ஸிலரேட்டர் பெடலை ஒழுங்காகப் பொருத்தாவிட்டால் உடனே பிடிப்பதுதான் தரக்கட்டுப்பாடு. வெளியே இருந்து வந்திருக்கும் பெடலில் சிஸ்டம் ரீதியான கோளாறு இருப்பது அசெம்ப்ளருக்குத் தெரியுமா?

இது டிசைன் அளவில் செய்யப்பட்ட பிழை. டிசைன் செய்யும்போது எதிர்பாராத விளைவுகள் நிஜவாழ்க்கையில் நடந்ததால் ஏற்பட்ட விபத்துகள்.

உண்மையில், பிரச்சினை மிகச் சிறியதுதான் - வேலை அளவில் - பழைய பெடல் சிஸ்டத்துக்கு மாற்றவேண்டும், எஞ்சின் கம்ப்யூட்டருக்கு அதைச் சொல்ல வேண்டும் - அவ்வளவே. ஆனால் ஏராளமான எண்ணிக்கை கார்களும், ஏற்பட்ட உயிர் விபத்துகளும் இந்தப் பிரச்சினையை பூதாகாரமாக்கிவிட்டன - என்னவோ மில்லியன் கணக்கான கார்களை டொயாட்டோ திரும்ப வாங்கிவிட்டு பணத்தைத் திரும்பக் கொடுத்தது போல பில்ட் அப்புகள் நடக்கின்றன. (அதுசரி, மேலே இருக்கவன் விழுந்தா கீழே இருக்கவனுக்குக் கொண்டாட்டம்தானே!)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

அருமை நண்பர் செந்தில்வேலன்
நல்ல பதிவு.ஜப்பான் மோட்டார் வாகனம் விடுகையில் அமெரிக்கர்களும் ப்ரிடிஷ் காரர்களும் சிரித்தனராம்.நாம் நானோவை பார்த்து சிரிப்பது போல.
ஆனல் இன்று அவர்களே அந்த கார்களை தான் அதிகம் வாங்கி ஓடுகின்றனர்.
ஏதோ ஜப்பானியராய் இருக்கபோய் மாற்றியாவது தருகின்றனர். நம் இந்திய கார் நிறுவனமாய் இருந்தால்? உயிர்னா என்ன என்பர்.
எல்லா இடத்திலும் லஞ்சம் தந்தே வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வர்.
இன்று வரும் வாகனங்களின் ஆயுட்காலம் வெறும் 5வருடமாம்.மக்களும் அந்த பழசை தூக்கிபோட்டு புதுசு வாங்கும் ட்ரெண்டுக்கு செட் ஆகிவிட்டனர்.இன்றைய சூழலில் தரக்கட்டுபாடுக்கு மதிப்பளிக்கும் நிறுவனத்திற்கு தொடர் ஆதரவளிக்க வேண்டும்

ஹுஸைனம்மா said...

//டொயோட்டா நிறுவனமா இப்படி?//
//தரக்கட்டுப்பாட்டில் தலைசிறந்த நிறுவனமாக //

அதனால்தான் பொறுப்பேற்று சரிசெய்து தருகின்றனர்.

//என்னவோ மில்லியன் கணக்கான கார்களை டொயாட்டோ திரும்ப வாங்கிவிட்டு பணத்தைத் திரும்பக் கொடுத்தது போல பில்ட் அப்புகள் நடக்கின்றன.//

ஆமாங்க.. சர்வீஸ் செண்டர் போனா அரைமணிநேரத்தில சரிசெஞ்சு தந்துருவாங்களாம்.

புதிய தகவல்கள் தெரிந்துகொண்டேன் செந்தில். நன்றி.

நாஞ்சில் பிரதாப் said...

நல்ல தகவல்கள் செந்தில்...
உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான கார் என்று தம்பட்டம் அடித்த பென்ஸ் காரே நெல்லையில் நடந்த விபத்தில் இரண்டாக பொளந்தது. பலலட்சங்களை இழப்பீடாக பென்ஸ் கார் அந்த குடும்பத்திற்கு கொடுத்தது.
இதுபோன்ற பிரச்சனைகள் சாதாரணமானது மற்றும் தவிர்க்கமுடியாதது.

கண்ணா.. said...

நல்ல பகிர்வு செந்தில்...:)

அதுவும் உங்க ஸ்டைல்ல கலக்குறீங்க...

ச.செந்தில்வேலன் said...

@ வானம்பாடிகள்,

நன்றி பாலாண்ணே!!

@ பழமைபேசி, நன்றி அண்ணே.

@ பினாத்தல் சுரேஷ்,

நீங்க குறிப்பிட்டிருப்பதைப் போல 5Sக்கும் இந்தக் கோளாறிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை தான். நான் சொல்ல வந்தது டொயோட்டாவின் பெருமைகளைப் பற்றியே.

சிறப்பான பல தகவல்களைத் தெரிவித்தமைக்கு நன்றி.

ச.செந்தில்வேலன் said...

@கார்த்திகேயன்,

அருமை நண்பர், இது போல நம் நாட்டில் நடந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று நீங்க சொல்வது ஓரளவு உண்மையே.

@ஹூசைனம்மா,

நன்றிங்க.

@ நாஞ்சில் பிரதாப்,

நன்றி!!

@ கண்ணா..

நன்றி!!

க.பாலாசி said...

நல்ல தகவல் பகிர்வு...

Hussain Muthalif said...

வணக்கம் திரு.செந்தில்வேலன்,
நல்ல பகிர்வு.

நீங்கள் கூறிய டொயோட்டாவின் தரநிர்ணயம், மேலாண்மை கொள்கைகள் ஆகியவற்றுடன்,

//வாடிக்கையாளர்களே முதலாளிகள் என்பதை உணர்ந்து அனைத்து கார்களை பழுது பார்க்கவுள்ள டொயோட்டா நிறுவனத்தினர் பாராட்டிற்குரியவர்களே!!//.

அந்நிறுவனத்தின் தரத்தை இன்னும்கூட உயர்த்துகிறது.

தென்னவன். said...

நல்ல பகிர்வு.

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/02/08/AR2010020803078.html?hpid=opinionsbox1

Related Posts with Thumbnails