Sunday, February 14, 2010

வாழும் வரலாற்றுத் தலங்கள் - 2 - நாஸ்கா கோடுகளும் மர்மமும்!!

பெரு நாட்டிலுள்ள மச்சு பிச்சுவை இதற்கு முந்தைய கட்டுரையில் பார்த்தோம். இன்கா மக்கள் எதற்காக மலை உச்சியில் ஒரு நகரத்தை உருவாக்கினார்கள் என்ற கேள்விக்கே சரியான விடை இல்லை!! மச்சு பிச்சு மர்மத்தை விட தீர்க்க முடியாத மர்மம் தான் அதே நாட்டிலுள்ள நாஸ்கா கோடுகள்!!

செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை நடத்தமுடிவதைப் பற்றிய ஆராய்ச்சிகள், நொடிப்பொழுதில் கோடிக்கணக்கானோர் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ளும் தொலைத்தொடர்பு வளர்ச்சி, மனிதனே தேவையில்லாத அளவிற்கு ரோபோக்களின் பயன்பாடு என்று இது வரை மனிதகுலம் பார்த்திராத அளவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. எந்த விசயமாக இருந்தாலும் அறிவியல் சார்ந்த பதிலைத் தர விஞ்ஞானிகளும் தவறுவதில்லை.

அப்படிப் பட்ட விஞ்ஞானிகளின் அறிவிற்கே சில சமயம் சவால் விடும் படியாக அமைந்து விடுகிறது முன்னோர்களின் படைப்புகள்!! எத்தனை சூத்திரங்களைக் கொண்டு அனுகினாலும் முன்னோர்கள் போட்ட முடிச்சுகளில் உள்ள மர்மத்தையும் சிக்கலையும் அவிழ்க்க முடிவதில்லை!! அப்படி ஒரு முடிச்சு தான் பெரு நாட்டு நாஸ்கா மக்கள் வரைந்த கோடுகள்!!

கோடுகள் வரைவதில் அப்படி என்ன பெரிய மர்மம்? நாம் ஏடுகளில் வரையாத கோடுகளா, ஓவியங்களா என்ற கேள்வி நம் மனதில் எழாமலில்லை. இவர்கள் வரைந்த கோடுகளின் பிரம்மாண்டமும், வரைந்த முறையும் தான் பிரமிப்பிற்குக் காரணம். இரும்புத்தாதுப் பொருட்கள் நிறைந்த நாஸ்கா நிலத்தில செந்நிறத்தில் கூழாங்கற்கள் பரவிக்கிடக்கின்றன.  இந்தக் கூழாங்கற்கள் அகற்றப்படும் இடம் வெளிர் நிறமாக மாற, இதே முறையில் கோடுகளை வரைந்துள்ளனர்.


இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரையப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது. பாடப்புத்தகத்தில் ஒரு ஓவியத்தை சீராக வரையவே நாம் சிரமப்படும் வேளையில், எப்படி பிரம்மாண்டமான கோடுகளைத் தீட்ட முடிந்தது? இந்தக் குரங்கின் முழு உருவத்தைப் பார்க்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு கிலோமீட்டர் உயரத்திற்குச் செல்ல வேண்டும். அதுவும் இப்பொழுது இருப்பதைப் போல உயரத்தில் இருந்து கண்கானிக்கும் கருவிகள், கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் அளவெடுக்கும் கருவிகள் எதுவும் இல்லாத 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

நாஸ்கா கோடுகள் அமைந்திருப்பது பெரு நாட்டில் உள்ள நாஸ்கா மற்றும் பால்பா என்ற இரண்டு இடங்களுக்கு நடுவிலான 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வறண்ட பீடபூமியில்!! இந்தப் பீடபூமியில் காற்று, மழை சுவடே இல்லாததால் 2000 ஆண்டுகளாகியும் அழியாமல் உள்ளன.


குரங்குகள், பறவைகள், சிலந்திகள், சூறாமீன்கள், பல்லிகள் என பெரிய உருவங்களும், முக்கோணம், நாற்கரம் போன்ற வடிவங்களும்  ஏராளமான நீண்ட கோடுகளும் பீடபூமி முழுவதும் வரையப்பட்டுள்ளன. நாஸ்காக் கோடுகளை ஆராய்ச்சி செய்யும் வல்லுனர்கள், "எப்படி பல நூறு மீட்டர்கள் தொலைவில் இருந்து வரும் 60 கோடுகளை ஒரே புள்ளியில் இணைத்திருக்கிறார்கள்" என்று வியக்கிறார்கள்.


விண்கலன்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களிலும் தெளிவாகத் தெரியும் படியான ஆயிரக்கணக்கான கோடுகளை எதற்காக நாஸ்கா மக்கள் வரைந்திருக்கிறார்கள்? இந்தக் கோடுகள் கூறும் அர்த்தமென்ன?

ரியா ரெய்சி என்ற ஆராய்ச்சியாளர் தன் வாழ்நாள் முழுவதையும் நாஸ்கா கோடுகளை ஆராய்ச்சி செய்வதற்கே அர்ப்பணித்துள்ளார். நாஸ்கா கோடுகள் வின்வெளியில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களையும், சூரியன் மற்றும் சந்திரனின் உதயத்தையும் அஸ்தமனத்தையும் குறிப்பதாகக் கூறியுள்ளார்.

இவருடைய ஆராய்ச்சி முடிவையும் தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை. வேற்று கிரக உயிரினங்கள் வந்திறங்க உதவுவதற்கே இந்த கோடுகள் வரையப்பட்டுள்ளதென்று சிலரும், இறைவனை வழிபடுவதற்கும் தங்கள் இருப்பிடத்தைத் தெரிவிப்பதற்காகவும் வரையப்பட்டது என்று சிலரும், மிக நீளமான ஆடைகளின் இழைகளை நெய்வதற்காக இந்தக் கோடுகள் வரையப்பட்டதென்றும் சிலர் கூறுகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் தங்கள் தீர்வை வெளியிட்டாலும், நாஸ்காவின் மர்மம் மட்டும் நீடித்துக் கொண்டே இருக்கிறது. 

சுற்றுலாப் பயணிகளுக்கு கால் நூற்றாண்டாகத் திறந்துவிடப்பட்டுள்ளது. பெரிய அளவிளான பலூன்களில் ஏறி ஒரு கிலோமீட்டர் உயரத்தில் பறந்தபடியே இந்தக் கோடுகளையும் உருவங்களையும் பார்க்க முடியும். 

நம் முன்னோர்கள் நம்மை விடவும் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு நாஸ்கா கோடுகள் ஒரு எடுத்துக்காட்டு தான்!!
o
நாஸ்கா கோடுகளைப் பற்றிய காணொளி கீழே..


நாஸ்கா கோடுகளைப் பற்றிய தகவல்களுள்ள தளங்களின் சுட்டி கீழே...

o

10 comments:

ஹுஸைனம்மா said...

மெயில்ல வந்துது, அப்பவே ஆச்சர்யமாருந்துது. ஆனா, 2000 வருஷம் பழமையானதுன்னா, நம்பவே முடியல!!

கோடு வரைஞ்சிருக்காங்கன்னு சொல்றீங்க, எதை வச்சு வரைஞ்சிருக்காங்க? அவை மண்மேடுகளா அல்லது கலவைகள் பயன்படுத்தி வரையப்பட்டதா?

கார்த்திகைப் பாண்டியன் said...

சில புதிய தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி நண்பா

ச.செந்தில்வேலன் said...

@@ ஹூசைனம்மா,

இந்தக் கோடுகளை, அந்நிலத்தின் மேல் பரவியுள்ள செந்நிற கூழாங்கற்களை அகற்றி, அதன் மூலம் நிலத்தில் ஏற்பட்ட நிறமாற்றங்களைக் கொண்டே வரைந்துள்ளனர்.

இத்தகவலை மேலே சேர்த்துள்ளேன். நன்றி.

@@ கார்த்திகைப்பாண்டியன்,

நன்றி நண்பா.

பழமைபேசி said...

நன்றிங்க தம்பி!

Chitra said...

நல்ல தகவல் தொகுப்புடன் பதிவு இருந்தது. விடியோவும் இணைத்தது, இன்னும் அருமை.

ஈரோடு கதிர் said...

மிக அருமை...

நாஸ்கா கோடுகள் ஏன் அதிசயங்களின் பட்டியலில் இடம் பெறாமல் போனது..

இடுகைக்கான உழைப்பு மிகுந்திருக்கிறது உங்களிடம்...

நன்றி செந்தில்

அபுல் பசர் said...

வியக்கவைக்கும் உண்மை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே
எந்த தொழில் நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் இப்படி ஒரு
சாதனை நிகழ்த்தி இருக்கிறார்கள் பெரு நாட்டு மக்கள்.
ஆச்சரியம் தந்த பதிவுகள்.
நன்றி செந்தில் அவர்களே.

சுல்தான் said...

அதிசயம்.
பகிர்ந்தமைக்கு நன்றி

அபுஅஃப்ஸர் said...

அருமையான தொகுப்பு, ஆச்சரியம் கலந்த உண்மை

இதற்காக எத்தனை மக்களின் உழைப்பு இருக்கு என்பது மேலும் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது...

ஜீவன்பென்னி said...

நல்ல பகிர்வு.
நன்றி.

Related Posts with Thumbnails