Friday, March 27, 2009

எங்க வேண்டுகோளையும் சேர்க்கச் சொல்லுங்க!! - புறா


அன்பான வாசகர்களுக்கு,


சமீபத்தில சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டுனதுல எங்க கூட்டை (வீட்டை) இழந்துட்டேங்க!! இந்த மாதிரி சோகம், எங்க பறவை இனத்துல நிறைய பேருக்கு நடந்திருக்குங்க.. அதனால, பறவைகளின் சார்பா ஒரு வேண்டுகோள் வைக்கறதுக்காக, இத எழுதறேங்க!!

நம்ம நாட்டுல பொதுத் தேர்தல் நடக்கபோறதாக் கேள்விப்பட்டேங்க. நம்ம ஊரு அரசியல் தலைவர்கள் எல்லாம் மும்மூரமா கூட்டணி பத்திப் பேசிட்டிருக்காங்கன்னும், இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தயாரிக்க ஆரம்பிச்சுருவாங்கன்னும் கேள்விப்பட்டேங்க!! உங்களுக்குக் கொடுக்கற தேர்தல் வாக்குறுதிய வச்சுத்தான், கட்சிகளை நீங்க வெற்றி அடைய வைக்கிறீங்கன்னும் கேள்விப்பட்டேங்க. அதனால தான், எங்களோட வேண்டுகோளையும் தேர்தல் அறிக்கைல சேர்க்கச் சொல்லலாமேனு ஒரு நினைப்புல இத எழுதறேங்க!!

"பறவை இனங்கள் எல்லாம் மகிழ்ச்சி அடையற மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலயும் சில கோடி மரங்களை நட்டு வளர்ப்போம்" ங்கற மாதிரி ஒரு வாக்குறுதியத்தான் எங்க இனத்துல எல்லோரும் எதிர்பார்க்கறமுங்க!! இப்படி ஒரு வாக்குறுதி இதுக்கு முன்னாடி அரசியல் கட்சிகள் வச்சாங்கங்களான்னு தெரியலங்க. அப்படி இதுக்கு முன்னாடி, ஒரு அறிக்கை தயார் செஞ்சிருந்தாலும், வெளியில தெரியறதெல்லாம், டிவி தருகிறோம், லேப்டாப் தருகிறோம், சிலிண்டர் தருகிறோம், செல்போன் தருகிறோம்ங்கற மாதிரி "உங்கள" ஈர்க்கற விஷயங்கள் தாங்க. அதனால தான், டிவி, லேப்டாப் மாதிரி மரங்களை நட்டு (நட்டா மட்டும் போதுமா?) வளர்ப்போம்ங்கற எங்க கோரிக்கையையும் சேர்க்கச் சொல்லி வெளிய தெரிய வச்சீங்கன்னா நல்லதுங்க!!"என்னடா மரங்கள் நட சொல்றதெல்லாம் சரி, ஆனா, சில கோடிகள் நட சொல்றது அதிகமா இல்லியா"ன்னு நீங்க யோசிக்கறது தெரியுந்துங்க. 83ஆயிரம் சதுர கிமி பரப்பளவு கொண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு நாடுகள்ல (UAE) 4.2 கோடி ஈச்ச மரங்கள நட்டு கின்னஸ் சாதனை புரியறாங்கன்னா, 130 ஆயிரம் சதுர கிமி பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுல எத்தன மரங்கள் நடலாம்!! நம்நாடு முழுவதும் எத்தன மரங்கள் நடலாம்!! அந்த நாட்டு மண்ணுக்கு தகுந்த மாதிரி ஈச்சமரங்கள் வளர்த்தாங்கன்னா, நம்ம நாட்டு மண்ணுக்குத் தகுந்த மாதிரி, கம்மியா தண்ணி தேவைபடற மாதிரி எத்தனையோ வகையான மரங்கள நட்டு வளர்க்க முடியுமே!! அப்படி நடந்தா, எங்க பறவை இனத்தோட வருங்கால சந்ததி எல்லாம் மகிழ்ச்சியோட இருப்போம்ங்க!!

எங்களுக்கு மட்டும் தான் மரங்கள் வளர்க்கறதால மகிழ்ச்சி வரும்னு இல்லீங்க. மரங்கள் அதிகமா இருக்கற பகுதிய கடந்து போகும்போது, நீங்க எவ்வளவு மகிழ்ச்சி அடையறீங்கன்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கறேங்க.. நீங்க சைதாப்பேட்டைல இருந்து அடையாரை நோக்கி போகும்போது, ஐஐடி கிட்ட தட்பவெப்பம் குறைவதை உணர்வீங்க இல்லியா, அது தாங்க மரங்கள் நிறைய இருக்கறதால் கிடைக்கற பலன்!! அப்போ, நாடு முழுக்க கோடிக்கணக்கா மரங்கள நட்டா நம்ம நாடே குளிர்ச்சி அடையுமே!! மரம் இருக்கற இடத்துல மழை அதிக பெய்யும்னு உங்களுக்கும் தெரியுமே!!அதான் சொல்றேங்க, எங்களுக்கு மட்டும் இல்லாம, உங்களுக்கும் எவ்வளவோ மகிழ்ச்சியை தரும் இந்த மரங்கள்!!

"மரங்கள நட்டா நமக்கு என்ன ஆதாயம்? டிவி, லேப்டாப் கொடுத்தாலாவது சில ஆதாயம் கிடைக்குமே!!"னு அரசியல் கட்சித் தலைவர்கள் நினைக்கலாம். அது எல்லா வற்றையும் விட இதுல அதிக ஆதாயம் இருக்கறதா சொல்லுங்க அவர்களுக்கு.. "என்னது மரங்கள் நட்டு வளர்க்கறதால ஆதாயமானு" நினைக்காதீங்க..

இப்பல்லாம் "கார்பன் கிரடிட்ஸ்னு" (Carbon Credits) அதிகமாப் பேச்சு அடிபடுதுங்க.. அதாவது உலகெங்கிலும், அதிகமா வெப்ப வாயு (greenhouse gases) வெளியிடற நிறுவனங்கள், தாங்கள் வெளியிடற வெப்பத்தை ஈடு செய்யும் அளவிற்கு வேறெங்காவது மரங்கள் வளர்ப்பதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கறாங்கன்னு கேள்விப்பட்டேங்க!! அதாவது இப்படி முதலீடு செய்வதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் வெப்பத் தாக்கத்தை ( Carbon footprints) குறைப்பதாக கேள்விப்பட்டேங்க!! நம்ம நாட்டுலயும், ஒருசில நிறுவனங்கள் ஏற்கனவே இதில் இறங்கி இருப்பதாகக் கேள்விப்பட்டேங்க!!

நம்ம அரசாங்கம் மரங்கள வளர்த்தா, இந்த நிறுவனங்கள் அரசைத்தானே அனுகனும்! இப்ப புரியுதுங்களா எப்படி ஆதாயம்னு? வனத்துறையினர் தங்கள் பங்கிற்கு காடுகளை பெருக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தினாலும் அரசாங்க வாக்குறுதியில் நடக்கும் திட்டம் போல இருக்காதுங்களே!! இப்படி ஒரு திட்டம் வந்துதுன்னா, உங்கள்ல எத்தன பேருக்கு இதனால வேலைவாய்ப்பு கிடைக்கும்!! அதையும் கொஞ்சம் யோசிக்க சொல்லுங்க உங்க அரசியல் கட்சித்தலைவர்கள!!

"என்னடா நம்ம அடிச்சு திங்கிற புறா சொல்றத எல்லாம், நாம காது கொடுத்துக் கேட்கனுமான்னு" நினைக்காதீங்க. அது எங்களுக்கு மட்டும் இல்லீங்க, அது உங்களுக்கும் உங்க பேரப்புள்ளைகளுக்கும் ரொம்ப நல்லதுங்க!! இத நம்ம அரசியல்வாதிகள் செஞ்சாங்கன்னா, வருங்கால தலைமுறையோட சேர்த்து நம்ம பூமித்தாயும் வாழ்த்துவாங்கன்னு சொல்லுங்க!!இப்படிக்கு,
கூட்டை இழந்து தவிக்கும் புறா!!

http://youthful.vikatan.com/youth/senthilstory28032009.asp

Tuesday, March 24, 2009

ஐபிஎல் - இந்திய பிரைம்டைம் லீக்!!

கடந்த சில வாரங்களாக, இந்திய உள்துறை அமைச்சகமும் ஐபிஎல் நிர்வாகமும் நடத்திய நீயா? நானா? ஆட்டத்தின் முடிவு, இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்பது தான்!! இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதா? அது எப்படி?


ஐபிஎல் போட்டியானது ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்களும் ஒருசேர இனைந்து விளையாடும் வாய்ப்பு மற்றும் உள் நாட்டு வீரர்களும் வெவ்வேறு அணிகளில் பங்கேற்று மோதுவதால் மிகவும் சுவாரசியமானதாக அமைகிறது. அது மட்டுமில்லாமல், இதில் கொடுக்கப்படும் பணம் அனைவரையும் ஈர்க்கும் விஷயமாக உள்ளது!!

ஐபிஎல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால் யார் பார்ப்பார்கள்? தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியினர் (PIO )மற்றும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் (NRI) மொத்தமாக 15 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கட் ரசிகர்கள் மைதானத்தில் 40 சதவிதம் பேர் பார்த்தாலே இந்தியாவில் மைதான அரங்கம் நிரம்பியதிற்கு ஈடாகிவிடும். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அங்கு மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும்.

இதில் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கட் வாரியத்திற்கும் வருமானத்தில் எவ்வளவு பங்கு (Revenue sharing) என்பது நமக்கு தெரியாத விஷயம்!! அது எவ்வளவாக இருந்தாலும், தொலைகாட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடும் போது மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்!! 10 வருடத்திற்கு இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமம் பெற சோனி நிறுவனம் செலுத்தியது 4000 கோடி!! மற்ற நாடுகளில் ஒளிபரப்பு உரிம விற்பனை வேறு உள்ளது!!
இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடுகையில், இந்திய பொது தேர்தல் பட்ஜட் ஒதுக்கீடான 1100 கோடியே சிறியதாகத்தான் தெரிகிறது!!

இதனால் தான், இந்திய பொதுத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட, ஐபிஎல் கிரிக்கட் போட்டியை நடத்த அதிக ஆர்வம் காட்டுகிறது இந்திய கிரிக்கட் வாரியம்!! இதற்குக் கூறப்படும் காரணம், இந்திய கிரிக்கட் ரசிகர்களின் நலத்திற்காக என்பது தான்!! இந்திய ரசிகளுக்காக ப்ரைம்டைம் எனப்படும் 8மணியில் இருந்து 10 மணி வரை நடைபெறும் என்பது முக்கியமான விஷயம்!! அதிகமான மக்கள் தொலைக்காட்சி பார்ப்பது இந்த நேரத்தில் தான்!! இந்த ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களூக்குத் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்!! "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்" என்பது தான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது!!

இப்படி நடக்கவிருக்கும் இந்திய பிரைம்டைம் லீக்கால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!!

இந்திய கிரிக்கட் வாரியம், கிரிக்கட் உலகில் மிகப்பெரிய சக்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்படும். இந்திய இளம் கிரிக்கட் வீரர்களூக்கு சீனியர் கிரிக்கட் வீரர்களுடன் விளையாட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பொருளாதார மந்த நிலையை சரி செய்து, தங்களது சேவை மற்றும் பொருட்களின் விற்பனையை பெருக்க அனைத்து பன்னாட்டு மற்றும் உள் நாட்டு நிறுவனங்களும் முயலும். விளம்பர தயாரிப்பு நிறுவனங்களூக்கு இது ஒரு பணம் கொட்டூம் காலமாக இருக்கும். அழுகை சீரியல்களில் இருந்து ஒரு மாத காலம் விடுபடலாம் என்பது பெரும்பாலானோர் நினைப்பாக இருக்கலாம்!!

இந்த அறிவிப்பால் அதிக பாதிப்பு, போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாந்த ரசிகர்களூக்குத்தான்!! சச்சினும் ஜெயசூர்யாவும் ஒன்றாக களமிறங்கும் காட்சியை நேரில் காண முடியாமல் போனது ஒரு ஏமாற்றமே!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்த சிவமணி ட்ரம்ஸை அடித்த அடியை மறக்க முடியுமா? "சூப்பர் கிங்ஸ் வீரரும் லட்சுமிகரமான நடிகையும் கிழக்குக்கடற்கரை சாலையில் பைக்கில் சென்றனர்", என்பது போன்ற கிசுகிசுக்கள் கிடைக்காமல் போனது பத்திரிக்கைகளூக்கு ஒரு இழப்பு. லோக்கல் தொலைக்காட்சிகளூக்கு விளம்பர வருமானம் கொஞ்சம் குறையலாம். இதற்கிடையே, கிரிக்கட் மைதானத்தில் பணிபுரியும் கடை நிலை ஊளியர்களின் பாதிப்பை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை!!
இதெல்லாம் எதனால்? பிரைம்டைமில் வரும் பணத்தால்!!

வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஆடித் தள்ளுபடி போன்ற ஒரு விழாக்கோலத்திற்கு தயாராகலாம். செட் டாப் பாக்ஸ் போன்றவையின் விற்பனை பல மடங்கு பெருகலாம். செல்லுலார் நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியின் தகவல்களையும் ஸ்கோர்களையும் தெரிவத்தல், செல்போனிலேயே ஐபிஎல் போட்டி கண்டு கழித்தல் போன்ற புதிது புதிதாக திட்டங்களை வகுக்கலாம். ஐபிஎல் டி-ஷர்ட் போன்றவையின் விற்பனை அதிகரிக்கலாம். அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளூம் காக்டெயில் பார்ட்டிகளூம் நடைபெறலாம். இந்த ஐபிஎல் போட்டிக்கு ஒவ்வொரு 10 நொடிகளூக்கு பல ஆயிரங்களை கொடுத்து அனுசரனை (sponsorship) வழங்கும் அனைத்து நிறுவனங்களூம், லாபம் ஈட்ட அனைத்து சலுகைகளையும், பிரச்சாரங்களையும் செய்யும் என்பது தெரிந்ததே. .

சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? இவ்வளவு செலவுகளையும் மக்களுக்காகவா இந்த வணிக நிறுவனங்கள் செய்கின்றன? நாம் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருள்களின் விலையிலும் 1 ருபாய் அல்லது 2 ருபாய் அதிகரித்தால் நமக்குத் தெரியவா போகிறது? நாட்டில் தேர்தல் நடந்தாலென்ன அல்லது வேறேதாவது நடந்தால் என்ன? நமக்குத்தான் தினமும் கிரிக்கட் வீரகளையும் நடிக நடிகைகளையும் தொலைக்காட்சியில் பார்த்தாலே பசி தீர்ந்து விடுமே!! அதுவும் பிரைம்டைமில்!! வரவேற்போம் இந்திய பிரைம்டைம் லீக்கை!!

http://youthful.vikatan.com/youth/senthilstory250309.asp

.

Friday, March 20, 2009

லூசா நீ? மாம்பழம் சாப்பிடறியே!!


சில வாரங்களாக தொலைக்காட்சிகளில் வரும் ஒரு விளம்பரம் தான் இந்த blog எழுத தூண்டியது!! அது என்ன விளம்பரம்?

ஒரு பன்னாட்டு நிறுவன ( மாம்பழ ருசி கொண்ட) குளிர்பான விளம்பரம் தான் அது!! அந்த விளம்பரத்தில் ஒரு வயதானவர் மாம்பழ விரும்பியாக இருப்பார். பல நாட்களாக மாம்பழம் கிடைக்காததால் அந்த குளிர்பானம் குடிக்க ஆரம்பித்து விடுவார்.. பிறகு ஒருவருடன் தொலைப்பேசியில் பேசும் போது "யாராவது மாம்பழம் சாப்பிடுவாங்களா லூசு!!" என்று கூறி முடிப்பார்..

இது தான் "வியாபார உத்தி" போல...

ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனம் தனது வியாபார உத்தியைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, "தங்களது குளிர்பானத்திற்கு தண்ணீரைத்தான் முதல் போட்டியாக நாம் குறிப்பிட வேண்டும்" என்பது தான் அது!! அனைவருக்கும் அமீர்கானின் இந்த விளம்பரம் ஞாபகம் இருக்கக்கூடும், ""Thanda mathlab ........ ". அதாவது "குளிர்ச்சி என்றால்................"

நாம் இப்போதெல்லாம் பேருந்திலோ அல்லது ரயிலிலோ செல்லும் போது, பயனிகள் வீட்டில் இருந்து தண்ணிர் எடுத்து வருவதை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட குளிர்பானத்தையோ அல்லது பன்னாட்டு நிறுவனம் விற்கும் குடி நீர் பாட்டிலையோ தான் வாங்குகிறார்கள். இந்த குளிர்பானத்தை தயாரிக்க ஒரு ருபாய் கூட செலவாகத போது நாம் இதற்கு கொடுப்பது 12/-. பாக்கி பதினோரு ருபாய் நமது கிரிக்கட் வீரர்களுக்கும் நடிகர்களுக்கும் அமெரிக்காவில் உள்ள பங்குதாரர்களுக்கும் தான் பெருமளவு போய் சேர்கிறது!! இந்த பன்னாட்டு நிற்வனங்கள் ஒன்றும் கூட நம்நாட்டு பங்கு சந்தைகளில் செயல்படவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நமது நாட்டில் தயாராகிக் கொண்டு இருந்த கோலிசோடா, ரோஸ்மில்க், பாதாம்பால் போன்றவை இன்று காணாமல் போய் விட்டது என்பது ஒரு சோகமான விஷயம்!!

நல்ல வேளையாக நமது கூட்டுறவு நிறுவனங்களில் பால் விநியோகம் நல்ல முறையில் நடந்து வருவதால் பன்னாட்டு நிறுவனங்கள் இன்னும் அந்த துறையை ஆதிக்கம் செலுத்தாமல் உள்ளனர். ஆனால், சென்னை போன்ற நகரங்களில், தினமும் பால் வாங்கும் பழக்கம் மெதுவாக மாறிக் கொண்டு தான் இருக்கிறது. தொலைக்காட்சியில், "நீ என்ன பைத்தியமா, daily பால் வாங்கற? ஒரு pocket N*S*L* பால் வாங்குனா 3 மாசம் வச்சுக்கலாம்ல?" என்று விளம்பரம் வந்தாலும் சந்தேகப் படுவதற்கில்லை!!

இன்று புதிதாகக் முளைத்துள்ள Mallகளில் நம் கண்களில் தெரிவது பீசா, பர்கர், பொறித்த கோழிகளை விற்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தான்!! ஒரு பிரட் மேல கொஞ்சம் வெண்ணய தடவி, மேல சிக்கன் தூவி கொடுக்கறதுக்கு நம்ம கொடுக்கறது Rs. 350/- இந்த உணவுவகைகள் அனைத்துமே உடல் நலத்திற்குப் பங்கம் விளைவிப்பவை. ஆனால் இதனை சாப்பிடுபவர்கள் தான் நாகரிகமானவராகளாக கருதப்படுகிறார்கள். வரும் நாட்களில் வடை பஜ்ஜி, போண்டா, பானிபூரி, பேல்பூரி போன்றவையை சாப்பிடுபவரை கிண்டலடிக்கும் விளம்பரம் வரலாம்!!.

நமது பல்பொருள் அங்காடிகளை சுற்றி வந்தாலோ, எங்கும் தெரிவது வெளிநாட்டுப் பொருள்கள் தான்!! நாம் வாங்கும் ஆப்பிள், ஆரன்சு, திராட்சை எல்லாமே விளைவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தான்!! ஒரு கிலோ ஆப்பிள் விலை 120/-. காஷ்மீர் ஆப்பிளோ அல்லது நாக்பூர் ஆரஞ்சோ விற்பது கிடையாது. நாம் கொடுக்கும் 120 ரூபாய் போய் சேருவது அமெரிக்காவில் உள்ள விவசாயிகளுக்கு, குளிர்சாதன நிற்வனங்களுகு மற்றும் கார்கோ நிறுவனங்களுக்கோ தான்!! நாம் வாங்கும் வத்தல், சிப்ஸ் வகையறா அனைத்துமே பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு தான்!!

நல்ல வேளையாக உணவு தயாரிப்புகளில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவு இன்னமும் பெரிதாக இல்லை. இன்று அதிகமாக உட்கொள்ளப்படும் உணவுகளில் நூடுல்சும் ஒன்றாக உள்ளது. நூடுல்ஸ் சமைக்க 2 நிமிடம் தான் ஆகும் என்றால் இட்லியோ, பணியாரமோ, தோசையோ சமைக்க எவ்வளவு நிமிடம் ஆகும்? ஒரு குடும்பத்திற்கு தேவையான நூடுல்ஸ் வாங்க 52 ரூபாய் ஆகும், அதுவே இட்லிக்கு வீட்டில் மாவு அறைத்தால் 4 ரூபாயும், கடையில் கிடைக்கும் மாவிற்க்கு 20 ரூபாயும் தான் தேவை!!

ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியில் மனுசன கடிக்கற கதையா இருக்கு இப்ப நம்ம பார்க்கறது!!

முதலில், இளநீர், மோர் போன்றவையை தவிர்த்து குளிர்பானம் குடிக்க ஆரம்பித்தோம்.. பிறகு, காற்றையும் மாசு படுத்தினோம், நல்ல உணவை மறங்தோம்.கடலை உருண்டை, எள்ளூ உருண்டை, கடலை மிட்டாய், கம்மர்கட்டு, ரவா லட்டு, கம்மங்கூழ் என்றால் என்ன தான் கேட்கும் நிலையில் உள்ளோம். நாவல் பழம், எலந்த பழம் போன்றவை எப்படி இருக்கும் என்பதை encyclopaediaவில் தான் காட்டும் நிலையில் உள்ளோம்.

இப்போது இது முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்திற்கும் வந்துள்ளது!! ஆங்கில வார்த்தையான "Mango"வோட மூலமே நமது நாட்டைதான் காட்டுகிறது. "Mango" என்கிற வார்த்தையைக் கொடுத்த நாட்டிலேயே "மாம்பழம் சாப்பிடுபவன் முட்டாள்" என்கிற பிரச்சாரம் நடக்கிறது என்பது தான் சோகமான விஷயம்...

இந்த பிரச்சாரம் தொடர்ந்தால், சில வருடங்களுக்குப் பிறகு மாம்பழத்தை விநாயகர் கையில் தான் பார்க்க வேண்டும்!!http://youthful.vikatan.com/youth/senthilstory21032009.asp
.
There was an error in this gadget
Related Posts with Thumbnails