கடந்த சில வாரங்களாக, இந்திய உள்துறை அமைச்சகமும் ஐபிஎல் நிர்வாகமும் நடத்திய நீயா? நானா? ஆட்டத்தின் முடிவு, இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என்பது தான்!! இந்திய ப்ரீமியர் லீக் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதா? அது எப்படி?
ஐபிஎல் போட்டியானது ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் வீரர்களும் ஒருசேர இனைந்து விளையாடும் வாய்ப்பு மற்றும் உள் நாட்டு வீரர்களும் வெவ்வேறு அணிகளில் பங்கேற்று மோதுவதால் மிகவும் சுவாரசியமானதாக அமைகிறது. அது மட்டுமில்லாமல், இதில் கொடுக்கப்படும் பணம் அனைவரையும் ஈர்க்கும் விஷயமாக உள்ளது!!
ஐபிஎல் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுவதால் யார் பார்ப்பார்கள்? தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியினர் (PIO )மற்றும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் (NRI) மொத்தமாக 15 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கட் ரசிகர்கள் மைதானத்தில் 40 சதவிதம் பேர் பார்த்தாலே இந்தியாவில் மைதான அரங்கம் நிரம்பியதிற்கு ஈடாகிவிடும். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் அங்கு மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும்.
இதில் ஐபிஎல் நிர்வாகத்திற்கும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கட் வாரியத்திற்கும் வருமானத்தில் எவ்வளவு பங்கு (Revenue sharing) என்பது நமக்கு தெரியாத விஷயம்!! அது எவ்வளவாக இருந்தாலும், தொலைகாட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடும் போது மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்!! 10 வருடத்திற்கு இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமம் பெற சோனி நிறுவனம் செலுத்தியது 4000 கோடி!! மற்ற நாடுகளில் ஒளிபரப்பு உரிம விற்பனை வேறு உள்ளது!! இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிம விற்பனை வருமானத்தை ஒப்பிடுகையில், இந்திய பொது தேர்தல் பட்ஜட் ஒதுக்கீடான 1100 கோடியே சிறியதாகத்தான் தெரிகிறது!!
இதனால் தான், இந்திய பொதுத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட, ஐபிஎல் கிரிக்கட் போட்டியை நடத்த அதிக ஆர்வம் காட்டுகிறது இந்திய கிரிக்கட் வாரியம்!! இதற்குக் கூறப்படும் காரணம், இந்திய கிரிக்கட் ரசிகர்களின் நலத்திற்காக என்பது தான்!! இந்திய ரசிகளுக்காக ப்ரைம்டைம் எனப்படும் 8மணியில் இருந்து 10 மணி வரை நடைபெறும் என்பது முக்கியமான விஷயம்!! அதிகமான மக்கள் தொலைக்காட்சி பார்ப்பது இந்த நேரத்தில் தான்!! இந்த ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் நடுவே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களூக்குத் தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்!! "தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்" என்பது தான் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது!!
இப்படி நடக்கவிருக்கும் இந்திய பிரைம்டைம் லீக்கால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்!!
இந்திய கிரிக்கட் வாரியம், கிரிக்கட் உலகில் மிகப்பெரிய சக்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்படும். இந்திய இளம் கிரிக்கட் வீரர்களூக்கு சீனியர் கிரிக்கட் வீரர்களுடன் விளையாட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். பொருளாதார மந்த நிலையை சரி செய்து, தங்களது சேவை மற்றும் பொருட்களின் விற்பனையை பெருக்க அனைத்து பன்னாட்டு மற்றும் உள் நாட்டு நிறுவனங்களும் முயலும். விளம்பர தயாரிப்பு நிறுவனங்களூக்கு இது ஒரு பணம் கொட்டூம் காலமாக இருக்கும். அழுகை சீரியல்களில் இருந்து ஒரு மாத காலம் விடுபடலாம் என்பது பெரும்பாலானோர் நினைப்பாக இருக்கலாம்!!
இந்த அறிவிப்பால் அதிக பாதிப்பு, போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாந்த ரசிகர்களூக்குத்தான்!! சச்சினும் ஜெயசூர்யாவும் ஒன்றாக களமிறங்கும் காட்சியை நேரில் காண முடியாமல் போனது ஒரு ஏமாற்றமே!! சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்த சிவமணி ட்ரம்ஸை அடித்த அடியை மறக்க முடியுமா? "சூப்பர் கிங்ஸ் வீரரும் லட்சுமிகரமான நடிகையும் கிழக்குக்கடற்கரை சாலையில் பைக்கில் சென்றனர்", என்பது போன்ற கிசுகிசுக்கள் கிடைக்காமல் போனது பத்திரிக்கைகளூக்கு ஒரு இழப்பு. லோக்கல் தொலைக்காட்சிகளூக்கு விளம்பர வருமானம் கொஞ்சம் குறையலாம். இதற்கிடையே, கிரிக்கட் மைதானத்தில் பணிபுரியும் கடை நிலை ஊளியர்களின் பாதிப்பை யாரும் கண்டு கொள்ளப்போவதில்லை!! இதெல்லாம் எதனால்? பிரைம்டைமில் வரும் பணத்தால்!!
வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஆடித் தள்ளுபடி போன்ற ஒரு விழாக்கோலத்திற்கு தயாராகலாம். செட் டாப் பாக்ஸ் போன்றவையின் விற்பனை பல மடங்கு பெருகலாம். செல்லுலார் நிறுவனங்கள் ஐபிஎல் போட்டியின் தகவல்களையும் ஸ்கோர்களையும் தெரிவத்தல், செல்போனிலேயே ஐபிஎல் போட்டி கண்டு கழித்தல் போன்ற புதிது புதிதாக திட்டங்களை வகுக்கலாம். ஐபிஎல் டி-ஷர்ட் போன்றவையின் விற்பனை அதிகரிக்கலாம். அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகளூம் காக்டெயில் பார்ட்டிகளூம் நடைபெறலாம். இந்த ஐபிஎல் போட்டிக்கு ஒவ்வொரு 10 நொடிகளூக்கு பல ஆயிரங்களை கொடுத்து அனுசரனை (sponsorship) வழங்கும் அனைத்து நிறுவனங்களூம், லாபம் ஈட்ட அனைத்து சலுகைகளையும், பிரச்சாரங்களையும் செய்யும் என்பது தெரிந்ததே. .
சோழியன் குடுமி சும்மாவா ஆடும்? இவ்வளவு செலவுகளையும் மக்களுக்காகவா இந்த வணிக நிறுவனங்கள் செய்கின்றன? நாம் அன்றாடம் வாங்கும் ஒவ்வொரு பொருள்களின் விலையிலும் 1 ருபாய் அல்லது 2 ருபாய் அதிகரித்தால் நமக்குத் தெரியவா போகிறது? நாட்டில் தேர்தல் நடந்தாலென்ன அல்லது வேறேதாவது நடந்தால் என்ன? நமக்குத்தான் தினமும் கிரிக்கட் வீரகளையும் நடிக நடிகைகளையும் தொலைக்காட்சியில் பார்த்தாலே பசி தீர்ந்து விடுமே!! அதுவும் பிரைம்டைமில்!! வரவேற்போம் இந்திய பிரைம்டைம் லீக்கை!!
http://youthful.vikatan.com/youth/senthilstory250309.asp
.
1 comment:
கிரிக்கெட் மாதிரி இன்னும் ரெண்டு மூணு விளையாட்டு பேமஸ் ஆனாதான் இதற்கெல்லாம் விடிவு காலம்! அதுவரைக்கும் தலையில துண்டு போட்டுக்கிட்டு கிரிக்கெட் பார்க்க வேண்டியதுதான்!
Post a Comment