Friday, July 30, 2010

செல்லமே - 2


ட்சத்திரங்கள் சிரிக்கும் 
நடுநிசி நேரம்
அமைதியை நாடும் மனம்
ஆழ்ந்த உறக்கத்தில்
முகத்தை வருடின
பிஞ்சு விரல்கள்.
இது கனவா? 
இல்லை நினைவா?
விழித்துப் பார்த்தான்.
அழகாய் சிரித்தன
இரு நட்சத்திரங்கள்!!

*

குறும்பாய் சிரிக்கும் டொனால்டு டக்கும்
குறுகுறுவெனப் பார்க்கும் மிக்கி மவுசும்
தரையில் ஊரும் ரயில் வண்டியும்
காற்றில் அசையும் திரைச் சீலையும்
உயிரற்ற பூனையும் குரங்கும்
உயிருள்ள தாகிறதே
கண்ணே,
நீ அவற்றுடன் பேசும் பொழுது!!

*


நீரிலிருந்து மேலெழும் மீன்கள்
காற்றில் குதிக்கும் மான்கள்
இலையில் வடியும் பனித்துளி
நிலத்தில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளியென
இயற்கை அதிசயங்களை
நிழற்பட மெடுக்க முடியும்.
படமாக்க முடியாதது
கண்ணே, உன்
சிணுங்கலாய் மாறும் சிரிப்பும்
சிரிப்பாய் மாறும் சிணுங்கலும் தான்!!

*Saturday, July 24, 2010

தீபம் டிவி - சதுரங்கம் + ஜெயா டிவி - மனதோடு மனோ + சின்மயி.

தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கிலக் கலப்பில்லாமல் பேசமுடியுமா? நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் உண்மையிலேயே அறிவிப்பூர்வமான கேள்விகளைக் கேட்க முடியுமா?

உங்களிடமும் என்னிடம் சில ஆட்டுக்குட்டிகள் இருக்கின்றன.  நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் என்னிடம் உங்களிடமும் ஒரே எண்ணிக்கையில் ஆட்டுக்குட்டிகள் இருக்கும். அதுவே நான் உங்களுக்கு ஒரு ஆட்டுக்குட்டியைக் கொடுத்தால் என்னிடம் இருப்பதை விட உங்களிடம் இரு மடங்கு அதிகமாக ஆட்டுக்குட்டிகள் இருக்கும். ஆரம்பத்தில் நம் இருவரிடமும் எத்தனை ஆட்டுக்குட்டிகள் இருக்கும்? (விடையைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.)இந்தக் கேள்வியைக் கேட்கப்பட்டது தீபம் தொலைக்காட்சியில் சதுரங்கம் என்ற நிகழ்ச்சியில்!!  "உலகத்தமிழர்களுக்கான தமிழ்த்தொலைக்காட்சி" என்ற அறிவிப்புடன் துவங்கும் தீபம் தொலைக்காட்சியில் தான் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நேரலையாக நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஜெர்மனி, பிரான்சு, சுவிஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பதிலளிக்கிறார்கள். அளிக்கப்படும் பதிலையும், அதிர்ஷ்டத்தையும் பொறுத்து பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியின் தமிழைக் கேட்கவே நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் "தமிழ்" தொலைக்காட்சியினர் இந்நிகழ்ச்சியைப் பார்த்தாவது தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம். தூய தமிழில் நிகழ்ச்சியை நடத்தினால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று.

இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் நன்றாகவே வடிவமைப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஜெயா தொலைக்காட்சியின் மறு ஒளிபரப்பாகவே உள்ளது. ஆனால் நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டத்தக்கது. 

*திரும்பிய பக்கமெல்லாம் மூக்கைச் சிந்தும் நாடகங்களும், நாடகத்தன்மை மிகுந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வந்துகொண்டிருக்கும் வேளையில் சத்தமில்லாமல் பல நல்ல நிகழ்ச்சிகள் வழங்கி வருகிறார்கள் ஜெயா தொலைக்காட்சியினர். இதில் ராகமாலிகா, எஸ்.பி.பி. வழங்கும் என்னோடு பாட்டுப்பாடுங்கள், ஹரியுடன் நான், மனதோடு மனோ போன்ற இசையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் இங்கே குறிப்பிடவேண்டியவை. பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இன்றி நன்றாக ரசிக்கும் படியாக இருக்கின்றன இந்நிகழ்ச்சிகள்.பாடகர் மனோ நடத்தும் "மனதோடு மனோ" நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இதர இசைக்கலைஞர்களுடன் இனிய இசை சார்ந்த பேட்டியாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு கலைஞர்கள் வந்த வழி, அவர்களுடைய அனுபவங்களை சில பாடல்களுடன் தொகுத்து வழங்குவது அழகு. மனோவின் அனுபவங்களும் இசையறிவும் பங்கேற்கும் இசைக்கலைஞர்களின் பாடல்களுடன் இணைவது அருமையான சங்கமமாக அமைந்துவிடுகிறது. வெள்ளிக்கிழமை மாலைப்பொழுதுகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இசை ஆர்வலர்கள் தவற விடக்கூடாது.

*

நேற்றைய "மனதோடு மனோ" நிகழ்ச்சியில் பின்னனிப்பாடகி சின்மயி இடம்பெற்றார். சின்மயியின் ஆரம்பகால வாழ்க்கை, இசைத்துறைக்கு எப்படி வந்தார் என்றெல்லாம் இனிமையான பேட்டியாக அமைந்தது. அதில் அவர் எப்படி ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாட ஆரம்பித்தது பற்றியெல்லாம் கூறி பல பாடல்களைப் பாடியும் காட்டினார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடல் தான் சின்மயியின் முதல் பாடல். புதிய பாடகி ஒருவருக்கு இப்படி ஒரு பாடல் அறிமுகப்பாடலாக அமைவது அரிய ஒன்று. அதன் பின் இவர் பாடியிருக்கும் பாடல்களுள் பெரும்பாலானவை ஹிட் ரகங்களே. பாடல்களைப் பாடுபவருக்கு மொழி தெரிவதன் எவ்வளவு தேவையோ அதே அளவு தேவையானது பாடலின் உணர்வை வெளிப்படுத்துவது. இவரது பாடல்களுள் அப்பாடலில் வெளியாக வேண்டிய உணர்வு இருப்பது கவனிக்கத்தக்கது.

"பூ" படத்தில் "ஆவாரம்பூ அந்நாளில் இருந்து" என்று துவங்கும் பாடல் அப்படிப்பட்ட ஒன்று. பாடல்கள் வெற்றிப்படங்களிலோ பிரபல நடிகர்களின் படங்களில் இடம்பெறுவதன் தேவை இது போன்ற பாடல்கள் பிரபலமடையாமல் போவதில் இருந்து புரிகிறது. பூ படத்தின் நாயகியின் காதல், ஏக்கம், விரக்தி, எதிர்பார்ப்பு இப்படி பல உணர்ச்சிகளையும் ஒரு சேர வெளிப்படுத்தியிருப்பார் இந்தப் பாடலில்.

"பொக்கிஷம்" படத்தில் இடம்பெற்றிருந்த "நிலா நீ வானம் காற்று" பாடலில் வரும் "அன்புள்ள மன்னா" என்று துவங்கும் வரிகளை இதை விட அழகாகப் பாடியிருக்கமுடியுமா என்று தெரியவில்லை.  "குரு" படத்தில் வந்திருந்த "மய்யா மய்யா" பாடல் ஏதோ அரபிப்பாடலோ என்று யோசிக்கும் வகையில் சிறப்பாகப் பாடியிருப்பார். இசையை முறையாகப் பயின்ற இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரன்சு, ஜெர்மன், மராத்தி என்று பல மொழிகள் தெரியுமாம்.

இளம் தலைமுறை பின்னனிப் பாடகிகளுள் சின்மயியிற்குத் தனி இடம் அமைந்து வருவது பெரும்பாலான பாடல்கள் கவனிக்கப்படுவதே சான்று. மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துவோம்.

இவரது வலைப்பூவின் சுட்டி இங்கே.

**

Friday, July 23, 2010

போலியாயணம்..நாம் திரும்பும் பக்கமெல்லாம் போலிகளைப் பற்றிய செய்திகள்.. போலிகள் பிடிபட்டதைப் பற்றிய விசயங்கள் என்று போலிகளுக்கு நடுவே தான் நம் வாழ்க்கையே செல்கிறது. நான் எங்கெங்கெல்லாம் போலிப் பொருட்களை, சேவைகளை எதிர்கொண்டிருக்கிறேன், எப்படி எல்லாம் நாம் போலிகளைப் பார்க்கிறோம்? இதைத் தான் இந்தப் பதிவில் தொகுத்துள்ளேன்.

எனக்குப் போலி அறிமுகமானது போலி என்றே தெரியாத வயதில். . நியூட்ரின் மிட்டாயில் ஆரம்பித்தது என் அனுபவம். சில கடைகளில் 15 பைசாவிற்குக் கிடைத்த நியூட் ரின் மிட்டாய், ஒரு சில கடைகளில் 10 பைசாவிற்குக் கிடைத்தது என்று வாங்கிப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். அப்பொழுதெல்லாம் இந்த காலாவதி விசயம் எல்லாம் யார் சொல்லிக்கொடுத்தார்கள். 

பிறகு சில வருடங்கள் கழித்து பேனாவில் எழுதும் பருவத்தில், ரெனால்ட்ஸ் 045 பால்பாயிண்ட் பேனாவில் 045விற்குப் பதிலாக 040 என்று எழுதி வந்தது தான் எனக்குத் தெரிந்த முதல் போலிப் பொருள். 045 என்றால் ரீஃபில்லின் முனை கூர்மையாகவும் போலியின் முனை சற்று மொன்னையாகவும் இருக்கும். "ஹே.. ரெனால்ட்ஸ் மாதிரியே வுட்டிருக்கானுகடா.. இது ஒரு ரூபா கம்மி" என்ற அளவில் தான் விவரம் தெரிந்திருந்தது. அதுவே ஹீரோ பேனாவில் எழுதும் பருவம் வந்த பொழுது வாங்கினால் ஹீரோ பேனா தான், மற்ற மாதிரிக்கள் எல்லாம் வேண்டாம்.. "எல்லாம் சுத்த வீண்" என்று புரிய ஆரம்பித்தது. 

பள்ளிக்காலத்தில் அதிகம் போலிகளைச் சந்திக்க நேர்ந்தது பாட்டுக் கேசட்டுகளில் தான். 30 ரூபாய் கொடுத்து கம்பெனி கேசட் வாங்கக் காசில்லாமல் 12 ரூபாய் கொடுத்து பதிவு செய்யப்பட்ட கேசட்டுகளை வாங்கி, சில நாட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு பாடமல் போனதும் உண்டு. விக்கி கார்க் பந்து, POWER கிரிக்கெட் மட்டை என விளையாட்டுப் பொருட்களிலும் போலிகள் சரி விதத்தில் கலந்திருந்தன.

*


போலிப் பொருட்களை நாம் பயன்படுத்துவதைப் போலிகள் என்று தெரியாமலேயே ஏமாறுவது, போலிகள் என்று தெரிந்தும் ஏமாறுவது, போலிகள் என்று தெரிந்து உணர்ந்து வாங்குவது என்று சில வகைகளில் பிரிக்கலாம்.

ஒரு முறை DURACELL வாங்குவதற்குப் பதிலாக DURABATT என்ற போலியை வாங்கிய அனுபவம் தான் தெரியாமலேயே வாங்கி ஏமாந்து நினைவில் நிற்கும் அனுபவம். இப்படி ஏமாற்றுபவர்கள் நமது நினைவாற்றலுடன் விளையாடுபவர்கள்.DURACELL என்பதை நினைவில் வைத்திருப்பவர்களை சில நிமிடங்களை DURABATT தான் அசல் என்று நம்ப வைத்துவிடுவது ஒரு வகை. இன்று சீனாவில் இருந்து போலிப் பொருட்கள் வருபவை பெரும்பாலும் இந்த வகையைச் சார்ந்தவையே.பர்மா பஜார் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் எலக்ட்ரானிக் பொருட்களின் போலியை வெகுவாகப் பார்க்கலாம். NOKIA நிறுவனத்தின் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் NCKIA, NOXIA, NOKLA போன்ற பெயர்களைத் தாங்கிய பொருட்களை விற்பனை செய்வது, தயாரிப்பது எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கே. விவரம் தெரியாதவர்கள் வாங்கிச் சென்று, பொருள் சரியில்லை என்றால் திட்டுவது அசல் நிறுவனத்தைத் தான்.

துணிவகைகளில் போலிகள் வந்திறங்குவது பெரும்பாலானோர் அறிந்ததே. VanHeusen என்ற இடத்தில் VanHensen என்ற பெயரில் ஆடையைப் பார்க்க நேரிடலாம். VanHensen அசல் இல்லை என்று தெரிந்தும் வாங்கிவிட்டு, இருமுறை துவைத்த பிறகு சாயம் போய்விட்டது குறைகூறுவதை என்ன வென்று சொல்ல? 

போலிகளிடம் ஏமாறுவது கூட ஓரளவு பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம். ஆனால், போலிகள் என்று தெரிந்தும் வாங்குவது தான் கேடு விளைவிக்க கூடியது. "இந்த வாடிக்கையாளர்கள் போலிகள் என்று தெரிந்தும் வாங்கிக் கொள்வார்கள்" என்ற எண்ணத்திலேயே தான் நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் ஒன்று போலியானவையாகவோ, அல்லது தரம் குறைந்தவையாகவோ இருந்துவிடுகின்றன.போலி டிவிடி, போலி எலக்ட்ரானிக் பொருட்கள், போலி மென்பொருட்கள் போன்ற நமக்குப் பொழுதுபோக்கிற்கு உதவும் பொருட்களையும், உடலிற்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களையும் நோகாமல் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம். இதுவே, நம் உடல் ஆரோக்யத்திற்குத் தீங்கு விளைவித்தால் மட்டும் புலம்ப ஆரம்பிக்கிறோம்.

போலிகளில் நல்ல போலிகள், கெட்ட போலிகள் என்று பிரித்துப்பார்ப்பதில் தான் பிரச்சனையின் ஆரம்பகட்டம். போலிகள் அனைத்தையும் ஒரே மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்காவிட்டால் இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். 

போலிச் சான்றிதழ்கள், போலி குடும்ப அட்டைகள், போலி ஓட்டுனர் உரிமம் என்று அரசாங்கம் அளிக்கும் பொருட்களிலும் போலிகள். இப்படியே செல்வதால் தான் இன்று போலி காவல்நிலையம், போலி நீதிமன்றம், போலி நீதிபதி வரை வந்துள்ளது. நாம் பயன்படுத்தும் முக்கியமான சேவைகளில் எது போலி, எது அசல் என்று தெரியாவிட்டால் எப்படி இருக்கும்? "இருக்கு... ஆனா இல்லை. இருக்கு ஆனா வேற மாதிரி இருக்கு" என்று எஸ்.ஜே.சூரியா பட வசனம் தான் நினைவிற்கு வருகிறது.

இந்த நேரத்துல அரசைப் பற்றிக் கூற ஒன்றும் இல்லையா? "போலி நீதிமன்றம் வந்தது எப்படி" என்று தலையைச் சொறிபவர்களைப் பற்றிக் கூறி என்ன பயன்? நாளை போலி அரசாணை வந்தாலும் சந்தேகப்படுவதற்கில்லை. நாம் நம்ம கையில் என்ன இருக்கிறது எனப்தை மட்டும் பார்ப்போம்.

செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் போலிகளைப் பற்றிய செய்திகளைப் பார்த்து அங்கலாய்க்கும் முன்பு, நம் வீட்டில் நம் பயன்பாட்டில் எவை எவை போலி என்று பாருங்கள். சில விலையுயர்ந்த புத்தகங்கள், சில மென்பொருட்கள், சினிமா டிவிடிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றபொருட்களின் போலிகளைப் பயன்படுத்துவது தவறு என்ற எண்ணம் வளர ஆரம்பிப்பது தான் போலிகளைக் குறைப்பதில் முதல் படி!! முதல் படியில் காலை வைக்காமல் எப்படி உயரத்திற்குச் செல்ல முடியும்?

*

"போலி" என்ற வார்த்தை பதிவில் 46 முறை இடம்பெற்றுள்ளன.

Wednesday, July 14, 2010

சிவமணியின் மஹாலீலா - இசை விமர்சனம்


அட.. இந்த இசையை இத்தனை நாளாய் எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று சில சமயம் தோன்றும். இசை வெளியீடு பற்றிய செய்தியோ, அறிமுகமோ கிடைக்காமல் நல்ல இசையைத் தவற விடுவது சில சமயம் நடப்பதுண்டு. அப்படி கவனிக்காமல் விட்ட இசை வெளியீட்டில் சிவமணியின் மஹாலீலா ஒன்று!! 

உலக இசை என்றால் நமக்கு நினைவிற்கு வருவன யானி, எனிக்மா போன்ற இசைக் கலைஞர்களின் இசைக்கோப்புகளே!! அந்த இசைக்கோப்புகளில் வெளிநாட்டு வாத்தியங்களின் பங்கே அதிகமாக இருக்கும். இந்திய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி ஒரு நல்ல உலக இசைக்கோப்பை ரசிக்க வேண்டுமா? இதோ மஹாலீலா...

மஹாலீலா ஆல்பத்தை இசைச் சங்கமம் (Fusion) என்ற பாணியில் இசையமைத்துள்ளனர். சிவமணியின் இசைக்கோப்பு என்பதால் அவரது வாத்திய இசை தான் மேலோங்கி இருக்கும் நம்பினால் அது தவறு. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ஜாகிர் உசேன் (தபேலா), விக்கு விநாயக்ராம் (கடம்), செல்வகணேஷ் (கஞ்சிரா), நிலாத்ரி குமார் (சிதார்), நவீன் (புல்லாங்குழல்), பார்த்தசாரதி (வீணை), ஜானெட் ஹாரிஸ் (சாக்ஸ்போன்) போன்ற பிரபல இசைக்கலைஞர்களுடன் ஹரிஹரன், உஸ்தாத் லியாகத் அலிகான், பிளாஸி போன்ற பாடகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் அருமையான சங்கமம்.

என் வாழ்க்கைப் பயணம் என்ற கருத்தில் இசையமைத்திருக்கும் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வடிவம், ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகிறது. குழந்தையின் பிறப்பு, தாய் மண், இசைக்கலைஞர்களுக்கான அர்ப்பணிப்பு, சிவ சிவ, பேஸின் பிரிட்ஜ் என்று பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வை ஏற்படுத்துகின்றது.

இன்ஃபினிட்டி (Infinity)- ஆரிராரோ..

ஓஷோவின் ஒலிக்கோப்பில் இருந்து துவங்கும் இந்தப் பாடலை எவரும் தவற விடக்கூடாது. "ஒரு குழந்தை கருவில் உருவானதில் இருந்து 9 மாதங்கள் சுவாசிப்பதில்லை. தாய் தான் சுவாசிக்கிறார். அந்த சுவாசிப்பில் கேட்கும் ஓசை தான் குழந்தை கேட்கும் இசை" என்ற ஓஷோவின் வார்த்தைகளுடன் ஆரம்பித்து.. ஆரிராரோ.. ஆராரிரோ பாடல் மனதை இதமாக்குகின்றது. 

இந்தப் பாடலின் இடையில் பண்டாரம் செல்வம் என்பவர் தாயின் அருமை பெருமைகளை விளக்கும் வண்ணம் பாடியிருக்கும் வரிகள் கேட்பவர்கள் உருகுவது உறுதி.

*
நிலவில் ஒரு நடனம் - (Dance on the Moon)

சர்வமங்களே மாங்கல்யே என்று ஆரம்பித்து பின்பு வரும் வாத்திய இசையாவும் எந்த ஒரு டிஸ்கோவிலும் ஒலிக்க விடலாம். அவ்வளவு அடி.. 

*

அப்பாஜி..

அனைத்து வாத்தியக் கலைஞர்களுக்கும் அர்ப்பணிப்பு என்று கூறித்துவங்கும் இந்தப் பாடலில் சிவமணியும் ஜாகிர் உசேனும் அமைத்திருக்கும் இசையுடன் நவீனின் புல்லாங்குழல் சேரும் பொழுது ஒரு மாறுபட்ட உணர்வை ஏற்படுத்துகிறது. புல்லாங்குழல் இசையை இந்த அளவிற்கு அழகாக ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே கேட்டிருக்கிறேன்.

*

சந்துஸ்தி

மஹாலீலா ஆல்பத்தில் சிவமணிக்கென்று ஒரு தனிப்பாடல் இது தான். ஏ.ஆர்.ரஹ்மானின் மேடை இசைக்கச்சேரிகளில் சிவமணிக்கென்று சில நிமிடங்கள் தரப்படும். அரங்கத்தையே அதிர வைத்துவிடுவார். அதை கேட்காதவர்கள் அல்லது மீண்டும் கேட்க விரும்புபவர்கள் கேட்க வேண்டிய பாடல். 

*

தாய்மண்

நவீனின் புல்லாங்குழல், பார்த்தசாரதியின் வீணை, விக்கு விநாயக்ராமின் கடத்துடன் சேர்ந்து உருவாக்கியிருக்கும் சங்கமம் அட்டகாசம். இந்த இசையைக் கேட்கும் பொழுது மண் வாசனையை உணரமுடிகிறது. இந்த இசையை எந்த ஒரு திரைப்படத்தின் மகிழ்ச்சியான காட்சிக்குப் போடலாம்.

*

பேஸின் பிரிட்ஜ்

சென்னை சென்ரல் ரயில் நிலைய அறிவிப்புடன் ஆரம்பிக்கிறது இந்தப் பாடல். ஸ்ரீனிவாஸின் மாண்டலின் இசை சிவமணியின் ட்ரம்முடன் சேர்ந்து வருவது அருமையான ஜூகல்பந்தி. இறுதியில் வரும் அடி... மின்சாரக்கனவு ஊல்ல்லால்லா.. அடியை நினைவுபடுத்துகிறது.

*

இது மட்டும் இல்லாமல் சங்கர் மஹாதேவன், ஹரிஹரன் பாடும் பாடல்களும் இந்த இசைக்கோப்பில் உள்ளன.  

நமக்குப் பெரும்பாலும் இசை என்று அறிமுகப்படுத்தப்படுவது / பட்டிருப்பது திரைப்படங்களில் வரும் இசையே. இசை என்று ஒரு படத்தில் வரும் ஐந்து பாடல்களை ரசித்துவிட்டு சென்றுவிடுவோம். இசைக்கு மொழி தேவையில்லை என்பதை இசை வாத்தியங்கள் சேர்ந்து சங்கமிக்கும் பொழுது உணர முடியும். மஹாலீலாவைக் கேட்கும் பொழுது அப்படி ஒரு உணர்வு ஏற்படுகிறது.

இசைப்பிரியர்கள் கேட்க வேண்டிய இசைக்கோப்பு!!

தரமான இசையை ஹம்மா.காம்ல் இலவசமாகக் கேட்கலாம்!!

Thursday, July 8, 2010

பேபிஷாப்

அன்றாடம் பயணம் செல்லும் சாலை. அதே கடைகள். அதே பெயர்ப்பலகைகள். ஆனால் நம் கண்கள் பார்க்க விரும்புவதோ நமக்கு விருப்பமான கடைகளையோ, பெயர்ப்பலகைகளையோ தான். இங்கே ஷார்ஜாவின் சாலைகளில் செல்லும் பொழுது ஆயிரம் கடைகள் இருந்தாலும் பொன்னுசாமி, சரவணபவன் போன்ற பெயர்ப்பலகைகள் கண்ணில் படத் தவறியதே இல்லை. அந்தக் கடைக்கு மிக அருகில் இருக்கும் முக்கியமான வங்கியின் பெயரோ, டிவி ஷோரூமோ கண்களில் படுவதில்லை. 

நம் கண்கள் தேவையானவையை மற்றும் தேடிப்பார்ப்பதில் தான் எத்தனை சுவாரஸ்யம். சில காலம் வரை தேவையே இல்லாத விசயம் திடீரென்று தேவையான விசயமாகிறது. நாளிதழ்களில் வரும் மணமகன்/ள் தேவை போன்ற விளம்பரங்களை 25 வயது வரை கண்டுக்காமல் இருந்துவிட்டு, கல்யாணம் ஆகும் வரை அதையே பார்த்தது இன்னொரு வேடிக்கையான விசயம். அதே போல இத்தனை நாட்களாகக் கண்ணிலேயே படாத பேபிஷாப்கள் கண்களில் பட ஆரம்பிக்கிறது.

பெரிய துணிக்கடைகளில் உலாவும் பொழுது எத்தனையோ முறை குழந்தைகளுக்கான பகுதியைக் கடந்திருக்கிறேன். அங்கே என்ன மாதிரியான பொருட்களெல்லாம் கிடைக்கின்றன என்று பார்த்ததில்லை, சில முறை நண்பர்களின் குழந்தைகளுக்குப் பொம்மைகளை வாங்கியதைத் தவிர.

எத்தனை பொருட்கள், எத்தனை வடிவமைப்புகள், ஒவ்வொரு பொருளிலும் எவ்வளவு கவனம், அக்கறை? வியக்க வைக்கிறது.


குழந்தைகளின் துணிவகைகள் அனைத்தும் 0-3 மாதங்கள், 3-6 மாதங்கள், 6-12, 12-18 மாதங்கள் என்று வடிவமைத்திருப்பது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே. இங்கே கவனிக்க வேண்டிய விசயம், குழந்தைகளுக்கான துணிவகைகளின் உடலிற்குத் தீங்கு விளைவிக்கும் சாயங்கள் சேர்க்கப்படாததது தான். அதே போல வண்ணங்களும் கண்களுக்கு இதமான வண்ணங்களே. இந்த விசயத்தை மனதில் நினைத்துக்கொண்டே கார்ட்டூன் நெட்வொர்க்கைப் பார்க்கிறேன். பெரும்பாலான வண்ணங்கள் கண்களைக் கவர்வதாக, ஆனால் உறுத்தாததாகவே உள்ளது.


நாம் வளர்ந்த காலங்களில் வீட்டில் அதிகப்படியான மரப்பொருட்களோ மின்சாதனங்களோ கிடையாது. வீட்டில் சுவிட்ச் போர்டே அறைக்கு ஒன்றோ இரண்டோ தான் இருந்தன. இன்றோ திரும்பிய பக்கமெல்லாம் மின்சாதனப்பொருட்களும் அதற்குத் தேவையான சுவிட்ச் போட்டுகளும் தான். மற்றொரு பக்கம் பார்த்தால் நாற்காலி, ஷோபா, டைனிங் டேபிள் என ஒவ்வொன்றிலும் கூரிய முனைகள் தான்.வீட்டுப்பொருட்களின் கூரிய முனைகள், மின் சாதனங்களின் சுவிட்ச் போட்கள் எல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிப்பவையே. வீட்டுப் பொருட்களின் கூறிய முனைகளை மழுங்கவைக்க என்றே ஸ்டிக்கர்களும், பேஸ்ட்களும் கிடைக்கின்றன. இதை வீட்டுப்பொருட்களின் கூரிய முனைகளில் ஒட்டிவிட்டால் போதும். அதே போல கதவுகளை மூடி விடாமலும், திறந்துவிடாமல் தவிர்க்கவும் பாதுகாப்பு சாதனங்கள் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கான சீப்பு, ஈறுகள் துலக்கி, ஊசி, நகவெட்டி, குளிக்க வைக்கும் தொட்டி என குழந்தைகளுக்கான பொருட்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளின் (Perambulator)  வகைகளோ இன்னொன்று.  வீட்டில் அமர வைக்க, பல்பொருள் அங்காடிக்கு தள்ளிச் செல்ல, இரட்டைக் குழந்தைகளுக்கு, என ஏகப்பட்ட வகைகள். துபாயில், குழந்தைகள் உள்ள வீடுகள் என்றால் இது போன்ற தள்ளுவண்டிகள் இல்லாமல் இல்லை.

குழந்தைகளுக்கான மின்னனு சாதனங்களைப் பற்றி கூற வேண்டாமா? குழந்தைகளை ஆட்டித் தூங்க வைக்கத் தொட்டில், குழந்தையைப் படுக்க வைத்திருக்கும் இடத்தில் ஈரப்பதத்தைச் சோதிக்கும் கருவி என குழந்தை வளர்ப்பில் பங்கேற்கின்றன. குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதோ, விளையாடிக்கொண்டிருக்கும் பொழுதோ கவனிக்க ஒரு கருவி இருந்த கருவி என்னைக் கவர்ந்தது. குழந்தையில் தாய் வேறொரு அறையில் ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தாலும் குழந்தை எழுப்பும் ஓசை, அசைவுகளின் ஒலி போன்றவற்றை தாய் கேட்க முடியும். ஒரு கருவியைக் குழந்தை அருகிலும், மற்றொரு கருவியைத் தாயும் வைத்துக்கொண்டால் போதுமானது. என் மனைவியிடம்..

"ஏம்மா.. இந்த இன்ஸ்ட்ருமெண்ட் நல்ல உதவியா இருக்கும் போல" என்றேன்.

"இதெல்லாம் எதுக்குங்க? தெண்டமா காச செலவு பண்ணிட்டு.. அவன் தூங்கி விழிக்கும் போது கால உதறுவான. அப்ப வர்ற கொலுசு சத்தத்த வச்சே கண்டுக்குவேன்"என்றார்.

அது சரி.. நம் பாரம்பரிய முறைக்கு ஈடு எதுவும் இல்லை தான். மேலும், மேலே குறிப்பிட்ட சாதனங்கள் யாவும் தாத்தா பாட்டியிடம் வளருவதற்கு ஈடாகாது. என்ன செய்ய? வேலை, வெளிநாட்டு / வெளியூர் வாழ்க்கை என்று வந்துவிட்ட பிறகு இது போன்ற விசயங்கள் தேவையாகிறது. இருந்தாலும், காலில் அமர வைத்துக் காலைக்கடன்களைக் கழிக்க வைப்பது, காலில் படுக்க வைத்து குளிப்பாட்டுவது என பாரம்பரிய முறையைக் கடைப்பிடித்து தான் வருகிறோம்.

தாத்தா பாட்டியின் அரவணைப்பு இல்லாமலோ, பரபரப்பான வாழ்க்கை முறையில் இருக்கும் பெற்றொருடனோ குழந்தை வளர நேர்ந்தால் பெருநகரங்களில் பரவி வரும் பேபிஷாப்கள் கட்டாயம் உதவும். திருமணமானவர், குழந்தைகள் உள்ளோர் மட்டும் தான் இந்தக் கடைகளைப் பார்க்க வேண்டும் என்பதில்லை. எவர் வேண்டுமானாலும் பார்த்து வரலாம்.  குழந்தைகளுக்கான கடைகளையோ, பொருட்களையோ பார்க்கும் பொழுது ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள்.. நாமே குழந்தைப் பருவத்திற்கு சென்று திரும்புவதை உணரலாம்.

*

Saturday, July 3, 2010

விளையாட்டுகள் எழுப்பும் வினாக்கள்!!


கால்பந்து உலகக்கோப்பைப் போட்டிகள் கால் இறுதிச் சுற்று நடைபெறும் நேரத்தில் எங்கும் கால்பந்தாட்டக் காய்ச்சல் தான். எங்கள் அலுவலகங்களில் அடிக்கடி வுவுஜூலாவின் ஒலியும் அதனையடுத்து சிரிப்பொலியும் கேட்கிறது. இந்த உலகக்கோப்பையால் அதிகம் பேசப்பட்ட விசயங்களில் வுவுஜூலாவும் ஒன்று என்பது மறுப்பதற்கில்லை. 

நம் நாட்டில் விளையாட்டுகளுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், ஐரோப்பியர்கள் மற்றும் இதர நாட்டினர் கொடுக்கும் முக்கியத்துவமும் அவர்களது அணி மீதான பற்றும் வியக்க வைக்கிறது. ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கு இடையேயான போட்டியின் பொழுது பெரும்பாலானோர் அவர்களது நாட்டுக்கொடியையே அலுவலகத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இந்த நேரத்தில் கால் இறுதிச் சுற்றிற்குள் நுழைய முடியாத சில நாட்டு அணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை வருத்தத்திற்குரியது. கால் இறுதிக்குள் நுழையாமல் திரும்பிய பிரான்சு நாட்டு அணியினர் உள் நாட்டில் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். பிரான்சு நாட்டு அதிபர், "ஏன் முதல் சுற்றைக் கடக்க முடியவில்லை என்பதை ஆய்வு செய்வோம்" என்று கூறியுள்ளார். 

நைஜீரியா நாட்டு அதிபரோ, அந்நாட்டு கால்பந்தாட்ட அணியை இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்வதாக உத்தரவிட்டுள்ளார். இத்தனைக்கும் நைஜீரியா இடம்பெற்றது அர்ஜென்டைனா, தென் கொரியா, கிரீஸ் போன்ற பலமான அணிகள் உள்ள குழுவில். இந்த உலகக்கோப்பையில் ஆறு ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்றிருப்பதே ஒரு சாதனையாகக் கருதிவரும் வேளையில் இப்படிப்பட்ட உத்தரவுகள் கால்பந்தாட்ட விளையாட்டிற்கே பின்னடைவை ஏற்படுத்தும்.

பன்னாடுகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது சர்வதேசக் கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களை இணைக்கவும், ஒற்றுமையையும் ஏற்படுத்தவே. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி தோல்விகளை விட முழுத்திறனுடன் பங்கேற்பதே முக்கியம். இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் நாட்டு அதிபர்களே விளையாட்டுகளில் ஏற்பட்ட தோல்விகளுக்கு நடவடிக்கை எடுப்பது விளையாட்டுகளின் மீதும் நாட்டின் மீதும் மக்கள் வைத்துள்ள பற்றே காரணம்.

ஸ்லோவேனியா, ஸ்லோவாக்கியா, நெதர்லாந்து போன்ற நாடுகளின் மக்கள் தொகை சென்னை நகரை விடவும் குறைவு. அந்த நாடுகள் விளையாட்டுகளில் காட்டும் தீவிரம், வீரம் எல்லாம் பார்க்கும் பொழுது வெட்கமாகத்தான் இருக்கிறது.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த என் நண்பர் என்னிடம், "இந்தியா ஏன் கால்பந்தாட்டம் விளையாடுவதில்லை?"என்றார். "எங்கள் நாட்டில் கிரிக்கெட்டிற்குத் தான் முக்கியத்துவம் அளிப்போம். மற்ற விளையாட்டுகள் இல்லை. இப்பொழுது பாருங்கள் நாங்கள் அனைவரும் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்டைத் தான் பார்த்து வருகிறோம்" என்று சப்பைக்கட்டு கட்டினேன்.

சரி கிரிக்கெட்டையாவது சரியாக விளையாடுகிறோமா? அணியின் வெற்றி தோல்விகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோமா?

உலகக்கோப்பையில் இரண்டாம் கட்டத்திற்கே தேர்வாகவில்லை என்றாலும் நாங்க இரண்டாம் தர அணியுடன் நடக்கும் விளையாட்டுகளில் வெற்றியடைவோம் என்று மார்தட்டிக் கொள்வோம். தோல்வியடைந்து வந்த அணியில் இருந்து சில புதிய வீரர்களைப் பலிகடாவாக்கி தோல்வியில் இருந்து மீண்டு விடுவோம்.

நாட்டுப்பற்றை விளையாட்டுகளில் காட்டாவிட்டாலும், விளையாட்டுகளை நடத்துவதிலாவது காட்டுவோமா என்றால் அதுவும் கேள்விக்குரியாகவே உள்ளது. காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. கிரிக்கெட் வெறியர்கள் நிரம்பிய நாட்டில், கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நேரத்தில் எந்த விளையாட்டுப்போட்டிகள் நடந்தாலும் கவ்னிப்பார் அற்றுப் போய்விடும். "இந்தப் போட்டிகளை நடத்தினால் காமன்வெல்த் போட்டிகளின் மீதான ஆர்வம் குறையும்" என்று காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் இந்திய ஒலிம்பிக் அமைப்பின் சுரேஷ் கல்மாடி நம்புகின்றார். 

இந்தியாவிலும் பெரிய அளவிலான போட்டிகளை நடத்த முடியும், இந்தியர்களும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள் தான் என்று உலகிற்குக் காட்ட நினைக்கும் சூழலில் இது போன்ற தடையூறுகள் கண்டனத்திற்குரியது. சில ஆயிரம் கோடிகள் செலவில் நடத்தப்படும் நிகழ்வை சில நூறு கோடிகள் வருமானத்திற்காக விட்டுக்கொடுக்க நினைக்கும் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தை என்ன சொல்வது?

நாட்டைப் பற்றியே கவலை இல்லாதவர் கையில் இந்தியக் கிரிக்கெட் வாரியம். போதாக்குறைக்கு இப்பொழுது ஐ.சி.சி.யும் சேர்ந்துள்ளது. கொடுத்த வேலையையே ஒழுங்காச் செய்யாதவருக்கு சர்வதேசப் பதவி...ஹ்ம்ம்ம்.. உணவுப் பொருட்களின் விலைவாசியேற்றம் என்ற கேள்விக்கு கிரிக்கெட் அல்வாவை எத்தனை நாளைக்குத் தான் சுவைப்போம்?

கால்பந்தாட்டப் போட்டிகளில் நாம் பார்க்க நேர்வது விளையாட்டுப் போட்டிகளுடன் நாட்டுப்பற்றையும் தான். ஆனால், இந்தியாவில் நாம் பார்ப்பது தேசப்பற்றை விட தனிப்பட்ட வீரர்களின் சாகசமும் வியாபாரத்தையும் தான்.  இந்தியா மற்ற விளையாட்டுப் போட்டிகளில் எப்பொழுது மேலோங்கும்? விளையாட்டிலாவது தேசப்பற்று வர வாய்ப்பிருக்கிறதா? நம் நாட்டில் எதற்காக அடிக்கடி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன?

Related Posts with Thumbnails