Thursday, July 8, 2010

பேபிஷாப்

அன்றாடம் பயணம் செல்லும் சாலை. அதே கடைகள். அதே பெயர்ப்பலகைகள். ஆனால் நம் கண்கள் பார்க்க விரும்புவதோ நமக்கு விருப்பமான கடைகளையோ, பெயர்ப்பலகைகளையோ தான். இங்கே ஷார்ஜாவின் சாலைகளில் செல்லும் பொழுது ஆயிரம் கடைகள் இருந்தாலும் பொன்னுசாமி, சரவணபவன் போன்ற பெயர்ப்பலகைகள் கண்ணில் படத் தவறியதே இல்லை. அந்தக் கடைக்கு மிக அருகில் இருக்கும் முக்கியமான வங்கியின் பெயரோ, டிவி ஷோரூமோ கண்களில் படுவதில்லை. 

நம் கண்கள் தேவையானவையை மற்றும் தேடிப்பார்ப்பதில் தான் எத்தனை சுவாரஸ்யம். சில காலம் வரை தேவையே இல்லாத விசயம் திடீரென்று தேவையான விசயமாகிறது. நாளிதழ்களில் வரும் மணமகன்/ள் தேவை போன்ற விளம்பரங்களை 25 வயது வரை கண்டுக்காமல் இருந்துவிட்டு, கல்யாணம் ஆகும் வரை அதையே பார்த்தது இன்னொரு வேடிக்கையான விசயம். அதே போல இத்தனை நாட்களாகக் கண்ணிலேயே படாத பேபிஷாப்கள் கண்களில் பட ஆரம்பிக்கிறது.

பெரிய துணிக்கடைகளில் உலாவும் பொழுது எத்தனையோ முறை குழந்தைகளுக்கான பகுதியைக் கடந்திருக்கிறேன். அங்கே என்ன மாதிரியான பொருட்களெல்லாம் கிடைக்கின்றன என்று பார்த்ததில்லை, சில முறை நண்பர்களின் குழந்தைகளுக்குப் பொம்மைகளை வாங்கியதைத் தவிர.

எத்தனை பொருட்கள், எத்தனை வடிவமைப்புகள், ஒவ்வொரு பொருளிலும் எவ்வளவு கவனம், அக்கறை? வியக்க வைக்கிறது.


குழந்தைகளின் துணிவகைகள் அனைத்தும் 0-3 மாதங்கள், 3-6 மாதங்கள், 6-12, 12-18 மாதங்கள் என்று வடிவமைத்திருப்பது நாம் புரிந்துகொள்ளக் கூடியதே. இங்கே கவனிக்க வேண்டிய விசயம், குழந்தைகளுக்கான துணிவகைகளின் உடலிற்குத் தீங்கு விளைவிக்கும் சாயங்கள் சேர்க்கப்படாததது தான். அதே போல வண்ணங்களும் கண்களுக்கு இதமான வண்ணங்களே. இந்த விசயத்தை மனதில் நினைத்துக்கொண்டே கார்ட்டூன் நெட்வொர்க்கைப் பார்க்கிறேன். பெரும்பாலான வண்ணங்கள் கண்களைக் கவர்வதாக, ஆனால் உறுத்தாததாகவே உள்ளது.


நாம் வளர்ந்த காலங்களில் வீட்டில் அதிகப்படியான மரப்பொருட்களோ மின்சாதனங்களோ கிடையாது. வீட்டில் சுவிட்ச் போர்டே அறைக்கு ஒன்றோ இரண்டோ தான் இருந்தன. இன்றோ திரும்பிய பக்கமெல்லாம் மின்சாதனப்பொருட்களும் அதற்குத் தேவையான சுவிட்ச் போட்டுகளும் தான். மற்றொரு பக்கம் பார்த்தால் நாற்காலி, ஷோபா, டைனிங் டேபிள் என ஒவ்வொன்றிலும் கூரிய முனைகள் தான்.வீட்டுப்பொருட்களின் கூரிய முனைகள், மின் சாதனங்களின் சுவிட்ச் போட்கள் எல்லாம் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிப்பவையே. வீட்டுப் பொருட்களின் கூறிய முனைகளை மழுங்கவைக்க என்றே ஸ்டிக்கர்களும், பேஸ்ட்களும் கிடைக்கின்றன. இதை வீட்டுப்பொருட்களின் கூரிய முனைகளில் ஒட்டிவிட்டால் போதும். அதே போல கதவுகளை மூடி விடாமலும், திறந்துவிடாமல் தவிர்க்கவும் பாதுகாப்பு சாதனங்கள் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கான சீப்பு, ஈறுகள் துலக்கி, ஊசி, நகவெட்டி, குளிக்க வைக்கும் தொட்டி என குழந்தைகளுக்கான பொருட்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. குழந்தைகளுக்கான தள்ளுவண்டிகளின் (Perambulator)  வகைகளோ இன்னொன்று.  வீட்டில் அமர வைக்க, பல்பொருள் அங்காடிக்கு தள்ளிச் செல்ல, இரட்டைக் குழந்தைகளுக்கு, என ஏகப்பட்ட வகைகள். துபாயில், குழந்தைகள் உள்ள வீடுகள் என்றால் இது போன்ற தள்ளுவண்டிகள் இல்லாமல் இல்லை.

குழந்தைகளுக்கான மின்னனு சாதனங்களைப் பற்றி கூற வேண்டாமா? குழந்தைகளை ஆட்டித் தூங்க வைக்கத் தொட்டில், குழந்தையைப் படுக்க வைத்திருக்கும் இடத்தில் ஈரப்பதத்தைச் சோதிக்கும் கருவி என குழந்தை வளர்ப்பில் பங்கேற்கின்றன. குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதோ, விளையாடிக்கொண்டிருக்கும் பொழுதோ கவனிக்க ஒரு கருவி இருந்த கருவி என்னைக் கவர்ந்தது. குழந்தையில் தாய் வேறொரு அறையில் ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தாலும் குழந்தை எழுப்பும் ஓசை, அசைவுகளின் ஒலி போன்றவற்றை தாய் கேட்க முடியும். ஒரு கருவியைக் குழந்தை அருகிலும், மற்றொரு கருவியைத் தாயும் வைத்துக்கொண்டால் போதுமானது. என் மனைவியிடம்..

"ஏம்மா.. இந்த இன்ஸ்ட்ருமெண்ட் நல்ல உதவியா இருக்கும் போல" என்றேன்.

"இதெல்லாம் எதுக்குங்க? தெண்டமா காச செலவு பண்ணிட்டு.. அவன் தூங்கி விழிக்கும் போது கால உதறுவான. அப்ப வர்ற கொலுசு சத்தத்த வச்சே கண்டுக்குவேன்"என்றார்.

அது சரி.. நம் பாரம்பரிய முறைக்கு ஈடு எதுவும் இல்லை தான். மேலும், மேலே குறிப்பிட்ட சாதனங்கள் யாவும் தாத்தா பாட்டியிடம் வளருவதற்கு ஈடாகாது. என்ன செய்ய? வேலை, வெளிநாட்டு / வெளியூர் வாழ்க்கை என்று வந்துவிட்ட பிறகு இது போன்ற விசயங்கள் தேவையாகிறது. இருந்தாலும், காலில் அமர வைத்துக் காலைக்கடன்களைக் கழிக்க வைப்பது, காலில் படுக்க வைத்து குளிப்பாட்டுவது என பாரம்பரிய முறையைக் கடைப்பிடித்து தான் வருகிறோம்.

தாத்தா பாட்டியின் அரவணைப்பு இல்லாமலோ, பரபரப்பான வாழ்க்கை முறையில் இருக்கும் பெற்றொருடனோ குழந்தை வளர நேர்ந்தால் பெருநகரங்களில் பரவி வரும் பேபிஷாப்கள் கட்டாயம் உதவும். திருமணமானவர், குழந்தைகள் உள்ளோர் மட்டும் தான் இந்தக் கடைகளைப் பார்க்க வேண்டும் என்பதில்லை. எவர் வேண்டுமானாலும் பார்த்து வரலாம்.  குழந்தைகளுக்கான கடைகளையோ, பொருட்களையோ பார்க்கும் பொழுது ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள்.. நாமே குழந்தைப் பருவத்திற்கு சென்று திரும்புவதை உணரலாம்.

*

7 comments:

க.பாலாசி said...

//இங்கே கவனிக்க வேண்டிய விசயம், குழந்தைகளுக்கான துணிவகைகளின் உடலிற்குத் தீங்கு விளைவிக்கும் சாயங்கள் சேர்க்கப்படாததது தான்.//

உண்மைங்க.. குழந்தைகளின் துணிகளுக்கென்று தனிவிதமான வீரியம் குறைந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கென்றே பிரத்தியகமான ‘மில்’களும் நம்மைச்சுற்றி இருக்கின்றன. இந்த விடயத்தில் பெரியவர்கள் உபயோகப்படுத்தும் டவல்கள், மெத்தைவிரிப்புகள், போர்வைகள் போன்றனவற்றை குழந்தைக்கும் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

தகப்பனாகும் பொழுதுதானே இத்தனை அக்கரைகளும் பிறக்கிறது. பேபிஷாப்களில் செல்லும்பொழுதே மனதிற்குள் உண்டாகும் உற்சாகம் தனிதான்.

//நம் பாரம்பரிய முறைக்கு ஈடு எதுவும் இல்லை தான். //

அதேதான்... நம்ம பாட்டி பாட்டனார்களிடம் குழந்தைவளர்ப்பில் கிடைக்கும் அரவணைப்பிற்கு ஈடேதுமில்லை.

நல்ல இடுகைங்க...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பரே உங்க கவிதைக்கு ஆவலாய் வந்தேன்!!!:))இதுவும் நன்று.

sakthi said...

குழந்தைகளுக்கான கடைகளையோ, பொருட்களையோ பார்க்கும் பொழுது ஒரு மகிழ்ச்சி வரும் பாருங்கள்.. நாமே குழந்தைப் பருவத்திற்கு சென்று திரும்புவதை உணரலாம்.


ஆம் செந்தில் இது நான் அடிக்கடி செய்வது வழமை அங்கே குழந்தையாக நானும் மாறிவிடுவது உண்மை

ஈரோடு கதிர் said...

|| விழிக்கும் போது கால உதறுவான. அப்ப வர்ற கொலுசு சத்தத்த வச்சே கண்டுக்குவேன்"என்றார்.
||

அப்படிப்போடு..

இன்னும் கொஞ்சநாள்ல, தூக்கத்லேயே உதை விழுகும் பாருங்க... அப்போ, தெரியும் நம்ம குழந்தைங்க பவரு...

செ.சரவணக்குமார் said...

இங்க இருக்குற பிரபலமான கிட்ஸ் கார்னர்க்கு வாரம் ஒரு முறை போவேன். எதுவும் வாங்காவிட்டாலும் கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு வர்றது அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

உணர்ந்து எழுதியிருக்கீங்க செந்தில்.

வானம்பாடிகள் said...

//காலில் அமர வைத்துக் காலைக்கடன்களைக் கழிக்க வைப்பது,//

இது ரொம்ப முக்கியம். வளர்ந்த பிறகு நாம இப்படி செய்யறதில்லை. ப்ரோஸ்ட்ரேட் க்ளாண்ட் பிரச்சனைகள் ஆசியாவில் மிகக் குறைவாக இருப்பதற்கு காரணம் இந்த முறையும், சாப்பிடும்போது சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடுவதும்தான் என்று ஒரு மருத்துவக் கட்டுரை படித்திருக்கிறேன்.

jothi said...

சில காலம் வரை தேவையே இல்லாத விசயம் திடீரென்று தேவையான விசயமாகிறது.

Related Posts with Thumbnails