Friday, July 23, 2010

போலியாயணம்..நாம் திரும்பும் பக்கமெல்லாம் போலிகளைப் பற்றிய செய்திகள்.. போலிகள் பிடிபட்டதைப் பற்றிய விசயங்கள் என்று போலிகளுக்கு நடுவே தான் நம் வாழ்க்கையே செல்கிறது. நான் எங்கெங்கெல்லாம் போலிப் பொருட்களை, சேவைகளை எதிர்கொண்டிருக்கிறேன், எப்படி எல்லாம் நாம் போலிகளைப் பார்க்கிறோம்? இதைத் தான் இந்தப் பதிவில் தொகுத்துள்ளேன்.

எனக்குப் போலி அறிமுகமானது போலி என்றே தெரியாத வயதில். . நியூட்ரின் மிட்டாயில் ஆரம்பித்தது என் அனுபவம். சில கடைகளில் 15 பைசாவிற்குக் கிடைத்த நியூட் ரின் மிட்டாய், ஒரு சில கடைகளில் 10 பைசாவிற்குக் கிடைத்தது என்று வாங்கிப் பார்த்தால் உள்ளே சொத்தையாக இருக்கும். அப்பொழுதெல்லாம் இந்த காலாவதி விசயம் எல்லாம் யார் சொல்லிக்கொடுத்தார்கள். 

பிறகு சில வருடங்கள் கழித்து பேனாவில் எழுதும் பருவத்தில், ரெனால்ட்ஸ் 045 பால்பாயிண்ட் பேனாவில் 045விற்குப் பதிலாக 040 என்று எழுதி வந்தது தான் எனக்குத் தெரிந்த முதல் போலிப் பொருள். 045 என்றால் ரீஃபில்லின் முனை கூர்மையாகவும் போலியின் முனை சற்று மொன்னையாகவும் இருக்கும். "ஹே.. ரெனால்ட்ஸ் மாதிரியே வுட்டிருக்கானுகடா.. இது ஒரு ரூபா கம்மி" என்ற அளவில் தான் விவரம் தெரிந்திருந்தது. அதுவே ஹீரோ பேனாவில் எழுதும் பருவம் வந்த பொழுது வாங்கினால் ஹீரோ பேனா தான், மற்ற மாதிரிக்கள் எல்லாம் வேண்டாம்.. "எல்லாம் சுத்த வீண்" என்று புரிய ஆரம்பித்தது. 

பள்ளிக்காலத்தில் அதிகம் போலிகளைச் சந்திக்க நேர்ந்தது பாட்டுக் கேசட்டுகளில் தான். 30 ரூபாய் கொடுத்து கம்பெனி கேசட் வாங்கக் காசில்லாமல் 12 ரூபாய் கொடுத்து பதிவு செய்யப்பட்ட கேசட்டுகளை வாங்கி, சில நாட்கள் பயன்பாட்டிற்குப் பிறகு பாடமல் போனதும் உண்டு. விக்கி கார்க் பந்து, POWER கிரிக்கெட் மட்டை என விளையாட்டுப் பொருட்களிலும் போலிகள் சரி விதத்தில் கலந்திருந்தன.

*


போலிப் பொருட்களை நாம் பயன்படுத்துவதைப் போலிகள் என்று தெரியாமலேயே ஏமாறுவது, போலிகள் என்று தெரிந்தும் ஏமாறுவது, போலிகள் என்று தெரிந்து உணர்ந்து வாங்குவது என்று சில வகைகளில் பிரிக்கலாம்.

ஒரு முறை DURACELL வாங்குவதற்குப் பதிலாக DURABATT என்ற போலியை வாங்கிய அனுபவம் தான் தெரியாமலேயே வாங்கி ஏமாந்து நினைவில் நிற்கும் அனுபவம். இப்படி ஏமாற்றுபவர்கள் நமது நினைவாற்றலுடன் விளையாடுபவர்கள்.DURACELL என்பதை நினைவில் வைத்திருப்பவர்களை சில நிமிடங்களை DURABATT தான் அசல் என்று நம்ப வைத்துவிடுவது ஒரு வகை. இன்று சீனாவில் இருந்து போலிப் பொருட்கள் வருபவை பெரும்பாலும் இந்த வகையைச் சார்ந்தவையே.பர்மா பஜார் போன்ற பகுதிகளுக்குச் சென்றால் எலக்ட்ரானிக் பொருட்களின் போலியை வெகுவாகப் பார்க்கலாம். NOKIA நிறுவனத்தின் பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் NCKIA, NOXIA, NOKLA போன்ற பெயர்களைத் தாங்கிய பொருட்களை விற்பனை செய்வது, தயாரிப்பது எல்லாம் நம்மை ஏமாற்றுவதற்கே. விவரம் தெரியாதவர்கள் வாங்கிச் சென்று, பொருள் சரியில்லை என்றால் திட்டுவது அசல் நிறுவனத்தைத் தான்.

துணிவகைகளில் போலிகள் வந்திறங்குவது பெரும்பாலானோர் அறிந்ததே. VanHeusen என்ற இடத்தில் VanHensen என்ற பெயரில் ஆடையைப் பார்க்க நேரிடலாம். VanHensen அசல் இல்லை என்று தெரிந்தும் வாங்கிவிட்டு, இருமுறை துவைத்த பிறகு சாயம் போய்விட்டது குறைகூறுவதை என்ன வென்று சொல்ல? 

போலிகளிடம் ஏமாறுவது கூட ஓரளவு பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம். ஆனால், போலிகள் என்று தெரிந்தும் வாங்குவது தான் கேடு விளைவிக்க கூடியது. "இந்த வாடிக்கையாளர்கள் போலிகள் என்று தெரிந்தும் வாங்கிக் கொள்வார்கள்" என்ற எண்ணத்திலேயே தான் நமக்குக் கிடைக்கும் பெரும்பாலான பொருட்கள் ஒன்று போலியானவையாகவோ, அல்லது தரம் குறைந்தவையாகவோ இருந்துவிடுகின்றன.போலி டிவிடி, போலி எலக்ட்ரானிக் பொருட்கள், போலி மென்பொருட்கள் போன்ற நமக்குப் பொழுதுபோக்கிற்கு உதவும் பொருட்களையும், உடலிற்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களையும் நோகாமல் பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறோம். இதுவே, நம் உடல் ஆரோக்யத்திற்குத் தீங்கு விளைவித்தால் மட்டும் புலம்ப ஆரம்பிக்கிறோம்.

போலிகளில் நல்ல போலிகள், கெட்ட போலிகள் என்று பிரித்துப்பார்ப்பதில் தான் பிரச்சனையின் ஆரம்பகட்டம். போலிகள் அனைத்தையும் ஒரே மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்காவிட்டால் இது தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். 

போலிச் சான்றிதழ்கள், போலி குடும்ப அட்டைகள், போலி ஓட்டுனர் உரிமம் என்று அரசாங்கம் அளிக்கும் பொருட்களிலும் போலிகள். இப்படியே செல்வதால் தான் இன்று போலி காவல்நிலையம், போலி நீதிமன்றம், போலி நீதிபதி வரை வந்துள்ளது. நாம் பயன்படுத்தும் முக்கியமான சேவைகளில் எது போலி, எது அசல் என்று தெரியாவிட்டால் எப்படி இருக்கும்? "இருக்கு... ஆனா இல்லை. இருக்கு ஆனா வேற மாதிரி இருக்கு" என்று எஸ்.ஜே.சூரியா பட வசனம் தான் நினைவிற்கு வருகிறது.

இந்த நேரத்துல அரசைப் பற்றிக் கூற ஒன்றும் இல்லையா? "போலி நீதிமன்றம் வந்தது எப்படி" என்று தலையைச் சொறிபவர்களைப் பற்றிக் கூறி என்ன பயன்? நாளை போலி அரசாணை வந்தாலும் சந்தேகப்படுவதற்கில்லை. நாம் நம்ம கையில் என்ன இருக்கிறது எனப்தை மட்டும் பார்ப்போம்.

செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் போலிகளைப் பற்றிய செய்திகளைப் பார்த்து அங்கலாய்க்கும் முன்பு, நம் வீட்டில் நம் பயன்பாட்டில் எவை எவை போலி என்று பாருங்கள். சில விலையுயர்ந்த புத்தகங்கள், சில மென்பொருட்கள், சினிமா டிவிடிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றபொருட்களின் போலிகளைப் பயன்படுத்துவது தவறு என்ற எண்ணம் வளர ஆரம்பிப்பது தான் போலிகளைக் குறைப்பதில் முதல் படி!! முதல் படியில் காலை வைக்காமல் எப்படி உயரத்திற்குச் செல்ல முடியும்?

*

"போலி" என்ற வார்த்தை பதிவில் 46 முறை இடம்பெற்றுள்ளன.

11 comments:

தமிழ் உதயம் said...

போலிகளை மனிதர்கள் இரண்டு வகைகளாக பிரிக்கிறார்கள். தனக்கு தேவையான போலிகள் மற்றும் தனக்கு தேவையற்ற போலிகள் என்று. தேவையான போலிகளை (விலையுயர்ந்த புத்தகங்கள், சில மென்பொருட்கள், சினிமா டிவிடிகள், விளையாட்டுப் பொருட்கள் )வாங்கும் போது கூச்சலிடுவதில்லை. போலிகளால் தனக்கு ஆபத்தென்றால் கூச்சலிடுவார்கள். இந்த மனநிலை இருக்கிறவரை போலிகளை ஒழிப்பது இயலாத காரியம்

வானம்பாடிகள் said...

இந்த ட்ராவல் பேக்ல மேட் அஸ் இடாலி போடுவானே:)). அதும் ஒரிஜினல்ல beware of Duplicates இருந்தா அதையும் போடுவானுங்க:)

நாஞ்சில் பிரதாப் said...

போலி இல்லாத இடமே கிடையாத செந்தில்.

இந்த ரெனால்ட்ஸ் 045 அனுபவம் எனக்கும் உண்டு. ஒரிஜினல் ரெனால்ட்ஸ் பென்னின் முனையில் உள்ள கூர்மை இன்று வரை எந்த புதியமாடல் பென்களில் கிடையாது.

போலிகள் அதிகம் குறிவைப்பது இந்தியா மாதிரி பல்முறை பொருளளதாரம் கொண்ட நாடுகளைத்தான்.

நம்மக்கள் எது விலை குறைவா இருக்குதோ அதையே வாங்குவார்கள். தரத்தைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள். அதுதான் போலிகளின் வெற்றிக்கு காரணம்.

Chitra said...

செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் போலிகளைப் பற்றிய செய்திகளைப் பார்த்து அங்கலாய்க்கும் முன்பு, நம் வீட்டில் நம் பயன்பாட்டில் எவை எவை போலி என்று பாருங்கள். சில விலையுயர்ந்த புத்தகங்கள், சில மென்பொருட்கள், சினிமா டிவிடிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றபொருட்களின் போலிகளைப் பயன்படுத்துவது தவறு என்ற எண்ணம் வளர ஆரம்பிப்பது தான் போலிகளைக் குறைப்பதில் முதல் படி!! முதல் படியில் காலை வைக்காமல் எப்படி உயரத்திற்குச் செல்ல முடியும்?


...... இந்த அசல் கருத்தை கடைப்பிடித்தாலே, போலிகளை ஒழிக்கலாம் .... சூப்பர்ங்க! பாராட்டுக்கள்! இந்த வாழ்த்துக்கள், போலி அல்ல.

இராகவன் நைஜிரியா said...

போலிகளை இனம் பிரித்து அறிவது மிக கஷ்டமான விஷயமாக போய் கொண்டு இருக்கின்றது..

வலையுலகிலும் போலிகள் உலா வந்து கொண்டு இருக்கின்றனர்... இதையும் போலிகளுடன் சேர்த்துக் கொள்ளுங்க..

தேவன் மாயம் said...

போலிகளிடம் ஏமாறுவது கூட ஓரளவு பயிற்சி மூலம் சரி செய்துவிடலாம். ஆனால், போலிகள் என்று தெரிந்தும் வாங்குவது தான் கேடு விளைவிக்க கூடியது. //

சரியாகச் சொன்னீர்கள்!!

sakthi said...

romba yosichu eluthareenga yentha post um gud one !!!

ஸ்ரீ.... said...

செந்தில்,

நீங்கள் கடந்த போலிகளை நானும் கடந்திருக்கிறேன். நினைவுகளைப் பள்ளிநாட்களுக்குத் திருப்பிவிட்டீர்கள். (இது போலிப் பின்னூட்டமல்ல!)

ஸ்ரீ....

பிரபாகர் said...

//"போலி" என்ற வார்த்தை பதிவில் 46 முறை இடம்பெற்றுள்ளன.
//
இந்த பக்கத்தில் 48 இருக்கு.

போலியாய் பதிவெழுதுபவர்கள் இருக்கையில் அசலாய் பல விஷயங்களை எழுதுபவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சியாயிருக்கிறது.

பிரபாகர்...

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

மிக அருமையான பதிவு,
செம கிழி கிழித்துவிட்டீர்கள்,போலிகளை ஒன்றுமில்லை சித்தநாதன் விபூதி என்று என்நண்பர் எனக்கு சித்தாநாதன் வீபூதியை பழநியிலிருந்து வாங்கி வந்து கொடுத்தார்,பூசினால் நரநரவென்று ஒட்டவேயில்லை,அது கோபால் பல்பொடி போன்று இருந்தது,படுபாவிகள்,பஞ்சாமிர்தத்தின் நிலையை நினைத்துபாருங்கள்,நான் தூக்கி போட்டுவிட்டேன்,சாப்பிடாமலே.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ தமிழ் உதயன்,

உண்மை தான். நீங்கள் குறிப்பிடுவது போல் போலிகளில் நமக்குப் தேவையைப் பொறுத்து தேர்ந்தெடுத்துகொள்கிறோம்.

@@ வானம்பாடிகள்,

ஆமாங்க. கவனமா இருக்கனும்.

@@ பிரதாப்,

கருத்திற்கு நன்றிங்க

@@ சித்ரா,ஸ்ரீ,

நன்றிங்க அசலான வாழ்த்துகளுக்கு.

@@ இராகவன்,

ஆமாங்க. அது இனும் மோசம்

@@ தேவன்மாயம்
@@ சக்தி
@@ பிரபாகர்,
@@ கீதப்பிரியன்,

நன்றிங்க.

Related Posts with Thumbnails