Sunday, December 26, 2010

2010ல் மொபைல் துறை - ரீகேப்


செல்பேசிகள் இல்லாமல் வெளியில் செல்லத் தயாரா? குளிக்காமல் கூட சென்று விடுவோம். பத்து பேர் ஒன்று கூடினால் அதில் நாலு பேர் செல்பேசியில் பேசிக்கொண்டோ, ஃபேஸ்புக் நிலையைப் புதுப்பித்துக் கொண்டோ தான் இருக்கிறோம். அதிகமாகப் பார்ப்பது செல்பேசியை, அதிகமாகக் காதலர்கள் முத்தமிட்டது செல்பேசித் திரையை, அதிகமாக புன்னகைப்பது செல்பேசியைப் பார்த்து. இப்படி இருக்கும் மொபைல் துறை 2010ல் எப்படி இருந்தது? 2010ல் அதிகமாக விவாதிக்கப்பட்ட விசயங்கள் எவை... ஒரு சின்ன ரீவைண்ட்.

ஆப்பிள் ஐ-பேட் & டேப்லட் (பட்டிகை கணினி)

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐ-பேட் பட்டிகைக் கணினி (டேப்லட்) செல்பேசிக்கும் மடிக்கணினிக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு முன்பே பல நிறுவனங்கள் பட்டிகைக் கணினிகளை கொண்டு வந்திருந்தாலும், ஆப்பிளின் வணிகத் திறமையாலும் ஐ-பேடின் செயல்பாடுகளாலும் தனி கவனம் பெருகிறது. ஐ-பேடின் வருகைக்குப் பிறகு அனைத்து கணினித் தயாரிப்பு நிறுவனங்களும், மொபைல் நிறுவனங்களும் தங்கள் பட்டிகையை வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். பட்டிகைகளில் விளையாட்டுகள், இணைய மேய்ச்சல் (browsing), அழைப்புகள் என பல செயல்பாடுகளையும் இயக்க முடியும். இப்பொழுது அப்ளிகேஸன்ஸ் எனப்படும் பட்டிகைப் பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்குவதில் "நான் முந்தி நீ முந்தி" என்று மென்பொருள் நிறுவனங்கள் இறங்கியுள்ளனர். ஐ-பேட்-ஐ வைக்கும் படியாக கால்ச்சராய்களையும் கோட்களையும் ஆடைவடிவமைப்பு நிறுவனங்கள் வடிவமைக்க ஆரம்பித்திருப்பதால் ஐ-பேட் 2010ன் பட்டியலில்.

ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பு(OS)

சாம்சங் போன், மோட்டராலா போன் என்று கேட்ட நிலை மாறி "ஆண்ட்ராய்ட் போன் கொடுங்கள்" என்று வாடிக்கையாளர் கேட்கும் அளவிற்கு 2010 ஆண்ட்ராய்டின் வீச்சு வளர்ந்துள்ளது. ஆண்ட்ராய்ட் மொபைல் இயக்க அமைப்பைப் பயன்படுத்தும் செல்பேசிகளின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. நுண்ணறிபேசிச் சந்தையில் கால் பங்கு ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பு தான். ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வகை செல்பேசிகள் 5% தான் இருந்தன. இந்த வளர்ச்சிக்குக் காரணம் திறந்த மூலமாக (Open Source) இயக்க அமைப்பு இருப்பதே. எந்தவொரு செல்பேசி தயாரிப்பு நிறுவனமும் இந்த இயக்க அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சாம்சங் காலக்ஸி, HTC ஈவோ, மோட்டோரோலா ட்ராய்டு போன்ற செல்பேசிகள் எல்லாம் ஆண்ட்ராய்ட் இயக்க அமைப்பைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


ஷென்சன் - மீடியா டெக் கூட்டமைப்பு

கடந்த ஒரு வருடமாக செல்பேசிச் சந்தை ஆர்வலர்கள் புற்றீசல் போல செல்பேசி நிறுவனங்கள் கவனித்திருக்கலாம். கார்போன், மைக்ரோமாக்ஸ், வீடியோகான், லாவா, ஆலிவ், இண்டெக்ஸ், மாக்ஸ் போன்ற நிறுவனங்கள் எல்லாம் சந்தையில் இருப்பது மீடியாடெக்கால் சாத்தியமானது. சீனாவின் ஷென்சன் நகரில் உள்ள இந்நிறுவனம் செல்பேசி உருவாக்கத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் வாடிக்கையாளரின் (இங்கே கார்போன், மைக்ரோமேக்ஸ்) தேவைக்கு ஏற்ப வடிவமைக்கிறார்கள். பிறகு, ஷென்சன் நகரைச் சுற்றியுள்ள சீனச் செல்பேசித் தயாரிப்பு நிறுவனங்களின் செல்பேசிகள் தயாராகின்றன. இதனால் செல்பேசி நிறுவனத்தைத் துவங்க பெரும் முதலீடும், ஆராய்ச்சிக் கட்டமைப்பும் தேவையில்லாமல் போகிறது.

இது போன்ற சென்ஷன்-மீடியா டெக கூட்டமைப்பு நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் 10-15% பங்கைப் பிடித்துள்ளதால் 2010ன் பட்டியலில் இடம்.

ஸ்மார்ட்போன்ஸ் (நுண்ணறிபேசி)

2000களின் ஆரம்பத்தில் செல்பேசியைப் பேசுவதற்கு மட்டும் பயன்படுத்தி வந்தது 2006 முதல் மாற ஆரம்பித்தது. நோக்கியா நிறுவனம் வெளியிட்ட N95 என்ற செல்பேசி வந்ததில் இருந்து இணைய மேய்ச்சல், படம் பிடித்தல், விளையாட்டுகள், மின்னஞ்சல் என்று பல வேலைகளைச் செய்யும் நுண்ணறிபேசி என்ற நிலைக்கு மாறியது. நுண்ணறிபேசித் துறையை மேலும் சூடுபிடிக்க வைத்தது 2007ல் ஐ-போன் அறிமுகத்திற்கு பிறகு. பிறகு பெரும்பாலான முன்னனி நிறுவனங்கள் நுண்ணறிபேசிகளைத் சந்தைக்கு இறக்க ஆரம்பித்தார்கள். இந்தப் போட்டி 2010ல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

கூகுள் சிட்டாடல் நிலையைப் (Status) பார்த்தால் From Mobile என்றும், ஃபேஸ்புக் நிலையைப் பார்த்தாலும் "From my i-phone or Nokia or Samsung Galaxy" என்று புதுப்பிப்பதைப் பார்க்க முடிகிறது. மடிக்கணியும், மேசைக் கணினியும் தேவையில்லை என்ற நிலைக்கு 2010ல் நுண்ணறிபேசிகள் கொண்டு வந்துள்ளன. டெல், ஹெச்.பி., மைக்ரோசாஃப்ட் போன்ற கணினி தயாரிப்பு நிறுவனங்கள் நுண்ணறிபேசிகளைத் தயாரிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நுண்ணறிபேசிகளுள் அதிகம் விவாதிக்கப்பட்டது ஐ-ஃபோன் தான் என்பதும், நோக்கியா நுண்ணறிபேசிகள் தான் அதிகமாக விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Applications (பயன்பாடுகள்) - ஆப்ஸ்டோர், நோக்கியா ஓவி

நுண்ணறிபேசிகளின் விற்பனையை ஊக்குவிப்பதில் அப்ளிக்கேஷன்ஸ் (பயன்பாடுகள்) பெரும் பங்கு வகிக்கின்றது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் நிலை புதுப்பித்தல், செய்திகள், சிட்டாடல், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று இணைய மேய்ச்சல் சேவைகள் முதல் பஞ்சாங்கம், கல்வி, விவசாய மற்றும் வானிலைத் தகவல்கள் வரை அனைத்திற்கும் பயன்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றைச் செல்பேசிகளில் தரவிறக்கம் செய்து கொண்டால் போதும். 

பயன்பாடுகள் விற்பனையில் ஆப்பிளின் ஆப்ஸ்டோர் முன்னனியிலும், நோக்கியா ஓவி அதற்கடுத்த நிலையிலும் உள்ளன. செல்பேசித் துறையில் இனி வருமானம் பயன்பாடுகளில் தான் என்பதைப் புரிந்து கொண்ட நிறுவனங்கள் இக்கட்டமைப்பைப் பலப்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்கின்றனர். ஏர்செல் கூட அவர்கள் தளத்திற்கு விளம்பரம் செய்வதைப் பார்க்க முடிகிறது.

பயன்பாடுகளில் 2010ன் ஹிட்டு Angry Birds என்ற விளையாட்டு.

டூயல் சிம் போன்

இந்தியா போன்ற அதிக தொலைத்தொடர்புச் சேவை வழங்கிகள் உள்ள நாடுகளில் டூயல் சிம் செல்பேசிகள் பரவலாக விற்பனையானது. கார்போன், மைக்ரோமாக்ஸ், மாக்ஸ், சாம்சங் போன்ற நிறுவனங்களின் டூவல் சிம் செல்பேசிகள் ஹிட் ரகத்தைச் சார்ந்தவை. தற்பொழுது குறைந்த விலை செல்பேசிகளில் மட்டும் கிடைக்கும் இச்சேவை 2011ல் நுண்ணறிபேசிகளிலும் கிடைக்க ஆரம்பிக்கும்.

2ஜி /3ஜி//4ஜி

இந்தியாவில் இந்த வருடம், மொபைல் துறை சார்ந்த விவாதங்களில் 2ஜி-3ஜிக்கு அதிக பங்கு. உபயம் ராஜா-ராடியா. சட்டம் தன் வேலையைச் செய்வதால் இதைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

ஐ-ஃபோன் 4ஜி வெளியானவுடன், அதில் ஏற்பட்ட கோளாறுகள் பரவலாகப் பேசப்பட்டன.

ப்ளாக்பெரி - மெஸஞ்சர்

ப்ளாக்பெரி நிறுவனத்தின் செல்பேசிகள் பேசப்பட்டதை விட அந்நிறுவனத்தில் மெஸஞ்சர் சேவை மிகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில் தனி தன்மையே (USP) இந்த மெஸஞ்சர் சேவை தான். ப்ளாக்பெரி செல்பேசியை வைத்திருப்பவர்கள் எவரும் இன்னொரு ப்ளாக்பெர்ரி வைத்திருக்கும் அன்பரை கட்டணமின்றி சிட்டாடல்கள் மூலம் தொடர்பு கொள்ள முடியும். இந்த சேவையின் மூலம் நடக்கும் பரிமாற்றங்களை வேவு பார்க்க முடியாது என்ற விசயம் அதிக பரபரப்பிற்கும் விவாதத்திற்கும் உள்ளானது. இந்தியா, சவுதி, அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் இச்சேவையை முடக்கப் போவதாகக் கூறின. பிறகு பல கட்டப்பேச்சு வார்த்தைக்குப் பிறகு தொடர்புப் பரிமாற்றங்களைப் பகிர்வது குறித்தான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. 

நெகடிவ் பப்ளிசிட்டியால் ப்ளாக்பெரிக்கு அதிக விளம்பரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலே விவாதிக்கப்பட்ட பெரும்பாலாவை அதிக விலை கொண்ட செல்பேசிகளைப் பற்றியதே. இவற்றை வாங்கியவர்கள், பயன்படுத்தியவர்கள் 30% தான். மீதமுள்ள 70 சதவிதத்தினர் பயன்படுத்துவது 1000-2000 ரூ விலையுள்ள அடிப்படை வசதி கொண்ட செல்பேசிகளைத் தான். இணைய வசதியை பயன்படுத்தாதவர்கள் இணையத்தைப் பயன்படுத்தப் போவது குறைந்தவிலை செல்பேசிகள் முலம் தான். அவற்றை 2011ல் பார்க்க முடியும்.

நுண்ணறிபேசிச் சந்தை சூடாகிக் கொண்டிருப்பது போட்டி நிறுவனங்கள் எழுப்பியுள்ள காப்புரிமை மீறல் வழக்குகளே சான்று. இப்போட்டு 2011ல் மேலும் வலுவடையும். பார்ப்போம்.


தொழில்நுட்பம் சார்ந்த இக்கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்

Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - ரைட் ஆன் புல்ஸ் ஐ!!

விடுமுறை சீசனின் இரண்டரை மணி நேரத்தை, எதைப் பற்றியும் கவலைப் படாமல், முகம் சுளிக்காமல், காதைப்பிளக்கும் சத்தமில்லாமல் செலவிட வேண்டுமா? மன்மதன் அம்பு தான் சரியான தேர்வு!! சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கலகலப்பான நகைச்சுவை கம் ரொமான்ஸ் படம் தான் மன்மதன் அம்பு.

நடிகை திரிஷாவைத் { நிஷா எ) அம்பு} தொழிலதிபர் மாதவன் (மதன்) காதலிக்கிறார். திரிஷாவின் சூட்டிங்கைப் பார்க்க நேரிடும் மாதவன் திரிஷாவைச் சந்தேகிக்கிறார். வெளிநாட்டிற்குச் செல்லும் திரிஷாவை வேவு பார்க்க கமலை {மேயர் மன்னாரை (மன்)} அனுப்புகிறார். கமல் வேவு பார்த்தாரா? மாதவனும் திரிஷாவும் இணைந்தனரா? என்பது தான் மன்-மதன்-அம்பு வின் கதை. 

அம்புவின் தோழியாக சங்கீதா நடித்திருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரத்தில் ஊர்வசியும் ரமேஷ் அரவிந்தும் வருகிறார்கள். களவாணி ஓவியா, ஸ்ரீமன், உஷா உதுப், மஞ்சு பிள்ளை, குஞ்சன் எல்லாம் சிறு கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள்.

படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மாதவனிற்குத் தான். ஸ்ரீமன் மற்றும் நண்பர்களுடன் பேசும் வசனங்கள் எல்லாம் சரவெடி. கிளைமாக்ஸில் மப்படித்துவிட்டு மாதவன் வாயைத் திறந்தாலே திரையரங்கம் அதிர்கிறது. கமல் திரிஷாவை வேவுபார்க்கும் ஆளாக வருகிறார். படம் முழுக்க அடக்கியே வாசித்திருந்தாலும் சில க்ளோசப் காட்சிகளும் வருகின்றன. தனக்கு ஏற்பட்ட சோகத்தை விளக்கும் வண்ணம் (வழக்கம் போல) கண்ணீர் சிந்துகிறார். இதே போல காட்சியைப் பல படங்களில் பார்த்தாயிற்று வாத்தியாரே!! ஒரு ஆறுதல் வயதிற்கேற்ற கதாபாத்திரத்தில் வருவது.

ஒரு நடிகையின் நிலையையும், மக்கள் பார்வையையும் நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்கள். "காரவேனில் ஏன் நடிகை மற்றும் நடிகரின் அறைக்கு இடையே கதவிருக்கிறது" என்று மாதவன் கேட்க "அது ஒரு கன்வீனியன்ஸ். ஜிப் இருக்கிறதென்றால் திறந்தே இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை" என்ற பதில் சுளீரென்கிறது. கிசுகிசுவிற்கும் நடுப்பக்க மசாலாவிற்கும் முக்கியத்துவம் குறையும் வரை நடிகைகள் மீதான எண்ணம் குறையாது.

படத்தின் வசனங்களில் அக்மார்க் கமல் + கிரேஸி மோகன் டச். படம் முழுக்க சரவெடியாக நகைச்சுவை வருவது வசனம் எழுதியிருப்பது கமலா கிரேஸி மோகனா? என்று எண்ணத் தோன்றியது. அதே சமயம் கமலின் கருத்து கந்தசாமி என்ற சிங்கமும் வெளிவராமல் இல்லை. அதிபட்சமான வீரத்தின் அடையாளம் தான் அஹிம்சை, பெண்ணியக் கருத்துகள், நாத்திகம் என்றெல்லாம் கருத்துகளைத் தூவிவிட்டிருக்கிறார். சர்ச்சைக்குட்படும் படியான கருத்துகள் எதுவும் (கமல் கவிதை தவிர) இல்லை என்று தான் நினைக்கிறேன். எப்படியும் துப்பறிவாளர்கள் கமலின் நுண்ணரசியலையும்,  (விமர்சகர்கள் கருத்துப்படி) நாத்திகப் போர்வையில் ஒளிந்திருக்கும் ஏதோ ஒரு வாதியையும் கண்டுபிடிக்காமல் இருக்கமாட்டார்கள். பார்ப்போம். 


கமலிற்கும் திரிஷாவிற்கும் புரிதல் ஏற்படுவதற்குக் காரணியாக அமைந்(த்)திருப்பது "கமல் கவிதை" தான். முதலில் திரிஷா, தான் "கிண்டில்" நோட்பேடில் ஏற்றியிருக்கும் கவிதையைப் படிக்கிறார். தன் மனத்திரையில் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்ற வரிகள் அழகு. அதற்கு கமல் மொழியும் வரிகளும் கைதட்ட வைக்கும் ரகம். வரலட்சுமி விரதத்தையும், அரங்கநாதரையும், தொப்பைக் காடைகளைச் சுட்ட தொந்திகணபதியை இழுக்க இக்கவிதைக்குத் தமிழகத்தில் தடா. அமீரகத்தில் இல்லை!! படத்தில் இக்கவிதை வரிகளுக்குப் பல இடங்களில் கரகோசங்கள் எழுந்தன.


"நீல வானம்" பாடலை மிகவும் அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாடல் முழுவதுமே பின்னோக்கிச் செல்வது ரசிக்கத்தக்கது. அப்படிப் பின்னாடிப் போகும் பொழுது தாலியைப் பிரிப்பது, மோதிரத்தைக் கழட்டுவதாக வருவது எல்லாம் ரசனையான காட்சியமைப்பு. திருமண ஒப்பந்தத்தின் மீதான தன் நம்பிக்கையின்மையைக் கமல் காட்டுகிறாரா? (அப்பாடா நமக்கும் ஒரு விசயம் மாட்டியிருக்கு). 

கடந்த வாரம் முழுக்க துபாய் சர்வதேசத் திரைப்படவிழாவின் படங்களைப் பார்த்தேன். அந்த ஹெங்க் ஓவரோ தெரியவில்லை, படம் ஆரம்பிக்கும் பொழுதே "ஒய்யாலே ஒய்யாலே" என்று திரிஷாவும் சூர்யாவும் ஆட்டம் போட ஆரம்பித்த பொழுது சிரித்து விட்டேன். அதே போல கமலின் கண்களில் உலகம் வருவதாகக் காட்டி "ஒலக நாயகன்" என்று பெயர் போடும் பொழுது "இந்தக் கண்றாவிய எப்படா நிறுத்தப் போறீங்க" என்று தோன்றியது. 


இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். சில இடங்களில் இவர் படம் தானா என்பதைச் சந்தேகிக்கும் வகையில் இழுக்கிறது. கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் வேகம் கூடியிருக்கும். மற்றபடி க்ரூஸ் லைனரை அளவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங், லைட்டிங் பற்றியெல்லாம் விமர்சனம் செய்யுமளவிற்கு அறிவில்லை எனக்கு. தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின். சத்தமே இல்லை. ஐ லைக் தட்.

படத்தின் இசை தேவிஸ்ரீபிரசாத். இசைத்தட்டு வெளியான பொழுது எனக்கு பாடல்கள் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஆன்டிரியா பாடியிருக்கும் "ஹூ இஸ் த ஹீரோ" தான் எனக்கு மிகவும் பாடலாக இருந்தது. ஏதோ ஆங்கிலப் பாடலைக் கேட்கும் உணர்வை ஏற்படுத்தியது இந்தப்பாடல். கமலின் அறிமுகப் பாடலாக அமைத்திருப்பது கலக்கல்!! "நீல வானம்" பாடல் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் நினைவில் நிற்கும். தேவிஸ்ரீபிரசாத் பாடியிருக்கும் மன்மதன் அம்பு பாடல் படத்தில் பின்னனியில் தான் வருகிறது. படத்தின் தீம் மியூசிக்கும் நல்ல இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. "அலேக்ரா" ஸ்டைலில் ஒரு ஆட்டத்தைக் கப்பலில் போடுகிறார்கள். இவரது பாடல்களில் அப்படி ஒரு எனர்ஜி. கார் ஓட்டும் பொழுது இவர் பாடலைக் கேட்டு அதிகமாக மிதித்துவிடாமல் இருக்க வேண்டும். பின்னனி இசையைப் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

இப்படம் எந்தப் படத்தின் காப்பி, இஞ்சிப்பிரேஜன் என்றெல்லாம் தெரியல. நன்றாக டைம்பாஸாகிறது. டைமிங் நகைச்சுவைக் காட்சிகள் புரியாதவர்களுக்கு கண்டிப்பாகப் படம் சலிப்பையும் வெறுப்பையும் ஏற்றும். என் அருகில் இருந்தவர் நான் சிரிப்பதைப் பார்த்து என்னை முறைத்துக் கொண்டே இருந்தார். இது பி.கே.எஸ்.ல இருந்து தொடருது.

மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, பிகேஎஸ், பஞ்சதந்திரம் போன்ற படங்களை ரசித்தவர்களுக்குக் கண்டிப்பாகப் படம் பிடிக்கும். இதமான ரொமான்ஸ் படங்களை ரசிப்பவர்களுக்கும் படம் பிடிக்கும்.

மன்மதன் அம்பு - ஆன் த மார்க்!!

Wednesday, December 22, 2010

விருந்து + சுஷி + உவ்வே

டிசம்பர் மாதம் வந்துவிட்டதை உணர வைக்கும் விசயங்களுள் குளிரிற்கும், அலுவலகத்தில் கொடுக்கப்படும் வருட இறுதி விருந்திற்கும்  தனி இடம். அதுவும் குளிர்கால கொண்டாட்டங்களுக்குப் பெயர் போன அமீரகம் என்றால் சொல்லவா வேண்டும். இது போன்ற விருந்துகளில் நடக்கும் ஆட்டங்கள் படு சுவாரஸ்யமானது. அலுவலகத்தில் சிம்ம சொப்பனமாக இருக்கும் உயரதிகாரிகள் எல்லாம் மெய் மறந்து (??) போடும் ஆட்டத்தைப் பார்ப்பதில் ஒரு தனி இன்பம். ஐரோப்பிய அன்பர்கள் பொதுவாகவே பார்ட்டி ஆட்டங்களில் சிறப்பாக விளங்குவதைப் பார்க்க முடிகிறது. விசாரித்துப் பார்த்தால் அவர்களுள் பெரும்பாலானோர் நடன வகுப்புக்குச் சென்றிருப்பது தெரிகிறது. இது போன்ற நிகழ்வுகளில் ஒரு வித தாழ்வு மனப்பான்மை மனதில் வந்தாலும், ஜோதியில் ஐக்கியமாகி நாமும் சில "சைலன்ட் டான்ஸைப்" போட்டுவிடுவது வழமை. சென்னையின் நினைவு வரும் தருணங்களுள் இது போன்ற விருந்து நிகழ்ச்சிகளும் ஒன்று. "ஊத்திகினு படுத்துக்கவா படுத்துக்கினு ஊத்திக்கவா"னு ரெண்டு குத்துப் போடலாம் என்றால் முடியாது. குத்து குத்து தான்.


விருந்துகளில் வழமையாகப் பல வகை உணவுகளும் பஃப்பே முறையில் வைக்கப்படும். பன்னாட்டு உணவு வகைகளையும் சுவைக்கும் வாய்ப்பும், சுவைத்து முகம் சுளிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். அப்படி ஒரு வாய்ப்பு கடந்த வாரம் நடந்த விருந்தில் ஏற்பட்டது. இந்த முறை ஜப்பானிய விருந்தகம் ஒன்றில் விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதையும் ஒரு கை பார்த்திடலாம் என்று நினைத்திருந்தேன். ஜப்பானிய விருந்தகம் என்பதால் ஜப்பானிய ஸ்பெஷல் என்று அறியப்படும் "சுஷி"யைக் கொடுத்தார்கள். இது எப்படி இருக்கும் என்று எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த நண்பனைக் கேட்டேன். "ஓ.. இட்ஸ் வெரி டேஸ்டி" என்று ஒரு "சுஷி"யை எடுத்து வாயில் வைத்து சப்புக் கொட்டினான். இதற்கு முன்பு ஒரு சில கொரிய உணவு வகைகளைச் சாப்பிருக்கிறேன் என்ற தைரியத்தில் (ஜப்பான் கொரியாவிற்குப் பக்கமாம்) "சுஷி"யை எடுத்து வாயில் வைத்தேன். ஒரு சின்ன அளவில் மென்று உள்ளே தள்ள முயன்றேன். வயிற்றைக் குமட்டுவது போல இருந்தது. மீனைப் பச்சையாக சாப்பாட்டினுள் வைத்து இனிப்புக் கொலுக்கட்டை ஸ்டைலில் வைத்திருந்தார்கள்(உள்ளே மீன் வெளியே சாப்பாடு). என் முகத்தைப் பார்த்த மலையாள நண்பன் "கிஃகிஃகி"என்றான். அருகே ஏதாவது மென் காகிதம் இருக்கிறதா என்று தேடி பொட்டலம் கட்டி வைத்தேன். 

ஏதாவது விருந்திற்கு செல்வதென்றால் வயிறைக் காலியாக வைப்பது கல்லூரிக் காலப் பழக்கம். அதுவும் பஃப்பே என்றால் சொல்லவா வேண்டும். கெஞ்சிய வயிறைக் பழரசங்களையும் சிக்கன் பார்ப்பிக்யூவையும் சாப்பிட்டுத் தேற்றினேன். இந்தியர்கள் பொதுவாகவே மாட்டிறைச்சியைச் சாப்பிட மாட்டார்கள் என்பதைப் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருக்கிறார்கள். பன்றி இறைச்சிக்கும் நாம் உவ்வே சொல்லி விடுவதால் பெரும்பாலான சமயங்களில் உதவுவது சிக்கனும் ஆட்டுக்கறியும் தான். 

அயல்நாடுகளுக்குப் பயணம் செய்வபவர்கள் முடிந்த அளவு அந்தந்த உணவு வகைகளைச் சுவைத்துப் பழக்கப்படுத்துக் கொள்வது நல்லது. அயல்நாடுகளுக்குச் சென்றவுடன் நமக்கு ஊர் நினைவைத் தூண்டும் விசயங்களில் இரண்டாம் இடத்தில் நிற்பது உணவு தான். முதல் இடத்தில்? 

சீனாவிற்குச் செல்லும் பொழுது "வறுத்த வாத்துக்கறி" உணவகங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பீஜிங்கில் "ரோஸ்டட் டக்" மிகவும் பிரபலம். பெரிய குழுவாக சென்றோம் என்றால் நம் முன்னே வறுத்த வாத்தை முண்டமாகக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். விருந்திற்குச் சென்றவர்கள் அவரவர்க்கு வேண்டும் பாகங்களை பிரித்துச் சாப்பிடலாம். வாத்தில் பாதங்களை வைத்து செய்யப்படும் உணவுக்குச் சப்புக்கொட்டுவதைப் பார்த்திருக்கிறேன். இது போன்ற ரோஸ்டட் டக் உணவகங்களில் ஒரு சிறப்பம்சம் உள்ளது. அயல்நாடுகளில் இருந்து புதிதாக வந்திருப்பவர்களை ஊக்குவிப்பதற்காக சிப்பந்திப் பெண்கள் வாத்துக்கறியை எப்படி சாப்பிட வேண்டும் என்று பயிற்சியளிப்பார்கள். அதாவது வாத்தை சன்னமான துண்டாக எடுத்து இனிப்பு கூழில் துடைத்து சில பொடிமாஸ்களை வைத்து வெத்தலை சுருட்டுவதைப் போல சுருட்டிக் கொடுப்பார்கள். அப்புறம் வாத்துக்கறி உள்ளே செல்லாமல் இருக்குமா?

சீனாவில் உள்ள சில கொரிய உணவகங்களில் மயக்க மூட்டப்பட்ட நிலையில் தவளையைச் சாப்பிடுவதும் (அவர்கள்) வழக்கம். உயிருள்ள தவளையை மதுபானக் குவளையில் போட்டு, சிறுது நேரத்தில் தவளை மயக்கமடந்தவுடன் எடுத்து... அதற்கு மேல் நான் சொல்ல வில்லை.

ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற கொடுமை எல்லாம் அனுபவிக்கத் தேவையில்லை. எப்படியாவது ஏதாவது ஒரு சிக்கன் இருக்கும். இல்லை என்றால் மற்றதை விட்டுவிட்டு சாண்ட்விச், பீஸா என்று ரொட்டிகளின் அண்ணன் தம்பிகளுள் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விடலாம்.

பொதுவாக ஒவ்வொரு நாட்டு உணவு முறைகளிலும் நல்ல விசயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. சீனர்கள் கழுதை, மாடு என்று எதைச் சாப்பிட்டாலும் கடைசியில் சூப்பைக் குடிப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் இறைச்சியை சாப்பிட்டாலும் அதிகளவு காய்கறிகளைச் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அரேபியர்களின் உணவுகளிலும் பல நல்ல விசயங்களைப் பார்க்கிறேன். அயல்நாட்டில் வாழும் பொழுது அவர்கள் உணவு முறையையும் அதில் உள்ள நல்ல விசயங்களையும் தெரிந்துவைத்துக் கொண்டால் பயணங்களும் விருந்துகளுக்கும் உவ்வே சொல்லாமல் இருக்கலாம்.

Saturday, December 18, 2010

துபாய் சர்வதேச திரைப்பட விழா - இன்ஷால்லாஹ் ஃபுட்பால் (காஷ்மீரி) (2010)

காஷ்மீரின் கதையை ஒன்றரை மணி நேரத்தில் எப்படி சொல்வது? குண்டுவெடிப்பும், துப்பாக்கிச்சூடும், சமீப காலமாக கல்லெறிதலும் தான் காஷ்மீரின் அடையாளமாக உள்ள நிலையில், காஷ்மீரின் கதையை கால்பந்தின் வாயிலாகச் சொல்கிறது இன்ஷால்லாஹ் ஃபுட்பால். 


கால்பந்தாட்டில் மிகுந்த ஈடுபாடும் திறமையும் உள்ள இளைஞன் பாஷா என்றழைக்கப்படும் பஷாரத். சர்வதேச கால்பந்தாட்ட வாரியத்தின் அங்கிகாரம் பெற்ற பயிற்சியாளர் அர்ஜெண்டைனா நாட்டைச் சேர்ந்த மார்கஸ். இவர் காஷ்மீரில் இஸாட் (ISAT) என்ற கால்பந்தாட்டப் பயிற்சி அமைப்பை நடத்தி வருகிறார். இவரது மனைவி ப்ரிசிலா பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். மார்கஸின் பயிற்சியில் சிறந்து விளங்கிய இரண்டு வீரர்கள் ஸ்பெயின் நாட்டில் உள்ள சில அணிகளில் விளையாட வாய்ப்பைப் பெற்று ஸ்பெயின் சென்றிருந்தனர். பாஷாவின் திறமையைப் பார்த்த ப்ரிசிலா பிரேசிலில் உள்ள ஒரு அணியில் விளையாட வாய்ப்பைப் ஏற்படுத்திக்கொடுக்கிறார். பிரேசில் செல்ல விரும்பும் பாஷாவிற்குத் தடை வந்தது கடவுச்சீட்டு ரூபத்தில்.

பாஷாவின் தந்தை பஷிர் ஹிஷ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முன்னாள் பயங்கரவாதி என்பது தான் பாஷாவிற்குக் கடவுச்சீட்டு கிடைக்காததற்கான காரணம். தந்தை பயங்கரவாதியாக இருந்ததற்கு பாஷா என்ன செய்வார்? பஷிர் ஏன் பயங்கரவாதியானார், பயங்கரவாதத்தைக் கைவிட்டு வெகுசன வாழ்க்கையை நடத்தி வந்த போதிலும் பாஷாவிற்குக் கடவுச்சீட்டை ஏன் தர மறுக்கிறார்கள் என்பவற்றை சம்பந்தப்பட்டவகளைப் பேசவிட்டே ஆவணப்படமாக (Documentary film) இயக்கியிருக்கிறார் அஷ்வின் குமார்.

தான் ஏன் ஹிஷ்புல் பயங்கரவாதக் குழுவினருடன் சேர்ந்தேன். பிறகு சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு நடந்த விசயங்கள் எல்லாம் பஷிரின் மூலமே பதிவு செய்யப்பட்டுருக்கிறது. "அதிகாலை நான்கு மணிக்கு என்னை இராணுவத்தினர் அழைத்துச் சென்ற பொழுது, நான் உயிருடன் இருக்கப் போவது ஓரிரு மணி நேரம் தான் என்று நினைத்தேன்" என்று பஷிர் கூறியது, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிய முன்னாள் பயங்கரவாதிகளின் மனோநிலையைப் பதிவுசெய்கிறது. "உன்னை வீட்டில் பிடிக்காமல் வெளியில் பிடித்திருந்தால், நீ என்னிடம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பாய் என்று தோன்றவில்லை" என்று இராணுவ அதிகாரி தன்னிடம் கூறியதும் பஷிரின் பேச்சில் தெரியவருகிறது.

"நான் பிறக்காத பொழுது என் தந்தை பயங்கரவாதியாக இருந்ததற்கு நான் என்ன செய்வேன்?" என்ற பாஷாவின் கேள்வி, ஒரு தலைமுறையினரின் கேள்வியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் பாஷாவும் ரிப்போர்ட்டராக மாறி காஷ்மீரின் பல்வேறு தரப்பினரைப் பேட்டி எடுக்கிறார். அதில் ஒரு இளைஞர், "எனக்கு அப்பொழுது 3 வயதிருக்கும். என் தந்தையை அழைத்துச் சென்று வழியிலேயே கொன்று விட்டனர். இத்தனைக்கும் என் தந்தை பயங்கரவாதி அல்ல. அவரது தொழில் விரோதி இராணுவத்தினரின் உதவியுடன் கொன்றிருக்கிறார்கள். கொன்ற இராணுவ அதிகாரி ஒரு பயங்கரவாதியைக் கொன்றதாகப் பதவி உயர்வு வாங்கியிருப்பார்" என்று கூறும் பொழுது வேறொரு கோணம் தெரிய ஆரம்பிக்கிறது. இளைஞர்களிடம் ஒரு வித அவநம்பிக்கை குடிகொண்டிருப்பது பேட்டிகளில் தெரியவருகிறது. 1990களில் நடந்த கலவரங்களில் ஹிந்துப் பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து துரத்தபட்டதும், இன்னும் சிலர் பட்ட வேதனைகளையும் பதிவு செய்யத் தவறவில்லை. அதே சமயம், சில ஹிந்துப் பண்டிட்கள் இஸ்லாமியருடன் ஒற்றுமையாக வாழ்வதையும் பதிவு செய்திருக்கின்றனர். 


கால்பந்தாட்டத்தின் மூலம் காஷ்மீர் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று நம்பிக்கையை மார்கஸ் வெளிப்படுத்துகிறார். மார்கஸின் கால்பந்தாட்டப் பயிற்சிப் பள்ளியைப் பற்றியும், பாஷாவின் நிலையைப் பற்றியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிலும் செய்தி வருகிறது. இச்செய்தியை வைத்துக்கொண்டு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாஹ்வையும் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கின்றனர். ஒமர் அப்துல்லாஹ் "பாஷாவைப் போல நூறு பேர், ஏன் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கலாம். இந்த நிலை தொடராமல் பார்த்துக் கொள்கிறேன்" என்று வாக்களிக்கிறார். அதன் பிறகு பாஷாவின் நிலை என்ன ஆனது?

காஷ்மீர் - ஐரோப்பிய நாடுகளுக்குப் போட்டி கொடுக்கக் கூடிய அளவிற்கு பனிபடர்ந்த மலைகளையும், அழகிய நில அமைப்பையும் கொண்ட மாநிலம். ஆனால், எங்கு திரும்பினாலும் இராணுவத்தினர். 20 பேருக்கு ஒரு இராணுவ வீரர் இருக்கும் நிலை என்றைக்கு மாறும் என்று எண்ணம் வருகிறது, காஷ்மீரைப் படத்தில் பார்க்கும் பொழுது. "RESPECT ALL SUSPECT ALL" என்று ஒரு இராணுவப் பலகையில் எழுதியிருக்கும் வார்த்தை தான் இன்றைய காஷ்மீரின் நிலையைப் பிரதிபலிக்கும் விசயம்.

இன்ஷால்லாஹ் ஃபுட்பால் காஷ்மீரைத் தொடர்ந்துவரும் அனைவரும் பார்க்க வேண்டிய படம்!!


*

துபாய் சர்வதேச திரைப்பட விழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. கொரியா, ஜப்பான், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், போலாந்து, அரபு நாடுகள், பாலஸ்தீனம், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். நானும் 4  படங்களையும் 8 ஆவணப் படங்களையும் பார்த்தேன். அதில் பாலஸ்தீனம் பற்றிய படங்களும் அடங்கும். அவை அடுத்த பதிவில்..

*

Monday, December 13, 2010

எப்பொழுது நாட்டிற்குக் கிளம்பப் போகிறாய்?


வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் அடிக்கும் சந்திக்கும் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்தக் காற்றிற்கு ஏங்குபவர்கள் தான் அதிகம். நான் இந்தக் கேள்வியைச் சந்திக்கும் பொழுது "நான்கைந்து வருடம். என்னை வேறொரு இடத்திற்கு மாற்றாமலோ இந்தியாவிற்கு அனுப்பாமலோ இருக்கும் வரை" என்று தான் கூறியிருக்கிறேன். அதற்கு "நானும் இதையே தான் இருபத்தைந்து வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்பார்கள்.

இதோ வந்துவிடுகிறேன் என்று வெளிநாட்டிற்குக் கிளம்புபவர்கள் ஏன் அவ்வளவு சீக்கிரம் தாய்நாட்டிற்குத் திரும்பாமல் இருக்கிறார்கள்?

அலுவலகத்தில் இருந்து அனுப்புகிறார்கள், கூடிய விரைவில் பணம் பார்க்கலாம், திரையில் மட்டுமே பார்த்து வந்த வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவித்துப் பார்க்க ஆசை போன்ற காரணங்களுக்காகச் செல்பவர்களைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை. வறுமை, வேலையின்மை, கடன் போன்ற  காரணங்களுக்காக வளைகுடா, கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் அன்பர்களை இங்கே குறிப்பிடவில்லை. இவர்கள் சந்திக்கும் நிலையைப் பற்றி வேறொரு கட்டுரையில்..

நாட்டிற்குத் திரும்பும் ஆசையுடன் வரும் அன்பர்களுள் பலர் தேடுவது அவர்கள் விட்டுச் சென்ற நாட்டை, நகரத்தை. ஆனால் அவர்களை வரவேற்கும் முதல் விசயம் எகிறி நிற்கும் செலவுகள். வீட்டு வாடகையில் ஆரம்பித்து, வாகனச் செலவு, உணவகங்களில் விலைப்பட்டியல், ஓட்டுனர் வாடகை என கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்லும் விசயங்கள் ஏராளம்.

கடந்த இரண்டாண்டில் ஆறு முறை இந்தியா வந்தாலும், சென்னை சென்றது இந்த நவம்பரில் மட்டும் தான். சென்னையில் ஒரு வாரம் தங்கியதில் எனக்கு முதலில் சுட்டது எகிறி நிற்கும் வீட்டு வாடகை. 8000 ரூபாய் வாடகையில் கிடைத்த 2BHK ப்ளாட்கள் இப்பொழுது 12000 ரூபாயில். கார் பார்க்கிங் வசதியிருந்தால் மேலும் 2000 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளலாம். சென்னையிலேயே பல வருடங்கள் இருந்த எனக்கு சப்பைத் தண்ணிர் ஒரு அதிர்ச்சியான விசயமல்ல. [ என் மகனின் பள்ளிப்படிப்பிற்கு இந்தியா வந்துவிடவேண்டும் என்பது தான் என் ஆசை. அப்படி வரவேண்டும் என்றால் எந்தப் பாக்கத்தில், பேட்டையில் தங்குவது, அடுக்குமாடி வீடுகள் என்ன விலைக்கு விற்கின்றன, வாடகைக்குக் கிடைக்கின்றன என்றெல்லாம் பார்க்க வேண்டும் என்பதும் தான் இந்த விஜயத்தின் குறிக்கோள்களில் ஒன்று ]

முன்பு வாடகை வீட்டில் இருந்தது போல மீண்டும் இருந்துவிட்டுப் போக வேண்டியது தானே என்று, சென்னையைப் பற்றித் தெரிந்தவர்கள் எவரும் கூறமாட்டார்கள். வெளிநாடுகளில் வாடகை வீட்டு வாழ்க்கையைப் பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். வெளிநாட்டில் பிக்கல் புடுங்கல் இல்லாமல் வாழ்ந்தவர்களுக்கு, சென்னையில் வீட்டு உரிமையாளரின் புடுங்கலே போதும் அதிர்ச்சியை ஏற்படுத்த. வாடகை வீட்டிலேயே வாழலாம் என்றால் கிடைக்கப் போகும் / எதிர்பார்க்கும் சம்பளத்திற்கு ஏற்ப நல்ல வீடு கிடைக்க வேண்டுமே. வெளிநாட்டில் வாடகை வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை சென்னையில் பெற வேண்டும் என்றால் குறைந்தது 15000 முதல் 20000 வரை வாடகை கொடுக்க வேண்டியதிருக்கும். இது 2010ல். இந்த அளவு வாடகை கொடுக்க வேண்டும் என்றால் 50000 மேல் சம்பளம் வாங்கியாக வேண்டும். 

இங்கே ஒரு உண்மை என்னவென்றால், அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு இந்த அளவிற்குச் சம்பளத்துடன் வேலை கிடைக்குமா என்பதே!! இன்னொரு உண்மை, வெளிநாட்டை விட இந்தியாவில் வேலை அதிகம். சம்பளமும் குறைவு வேலையும் அதிகம் என்றால் யார் எளிதில் வரத் தயாராவார்கள்?

அடுத்து.. உணவகங்கள், போக்குவரத்து போன்றவை. சென்னை தி.நகரில் உள்ள ஒரு பவனில் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸின் விலை 30/- இங்கே அமீரகத்தில், அதே பவனின் கிளை உணவகத்தில் 3 திர்ஹாம் (36 ரூபாய்). பெரும்பாலான பொருட்கள் அனைத்தும் இது போன்றே விலையில். போக்குவரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஆட்டோவில் கேட்கப்படும் கட்டணம் ஏறக்குறைய அமீரகத்தில் டாக்ஸியில் கொடுக்கும் வாடகைக்கு இணையாக உள்ளது. போரூரில் இருந்து தி.நகரிற்கு 300 ரூபாய் கேட்கப்பட்டது. இதே தொலைவை இங்கே அமீரகத்தில் 30 திர்ஹாமிற்குள் முடித்துவிடலாம். [ இந்த ஒப்பீடுகள் சென்னை போன்ற நகரிற்குக் குடிபெயர்வதற்கு முன்பு கணக்கில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இந்த ஊர் ஒசத்தி என்று கூறுவதற்காக அல்ல ]. சென்னையில் வாழும் ஆட்டோ ஓட்டுனர்களும் வாழ்க்கை நடத்தத் தானே வேண்டும். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மட்டும் தனிப்பதிவாக்கலாம்.

சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்களுள் பலர் (நான் உட்பட) சொல்லும் முக்கியமான காரணம் நல்ல கல்வி, குழந்தைகளுக்குக் கிடைக்கும் எக்ஸ்போஸர். இலட்சத்தைத் தொடவிருக்கும் நன்கொடை, அதிகமான கட்டணம் என்ற ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் சென்னைக்கு ஜெ போடும் முதல் காரணம் இது தான். அட நாங்கெல்லாம் வளரலியா, படிக்கலியா என்றால் அடுத்த காரணம் வேலைவாய்ப்பு. சொந்தக்காலில் நிற்பது, ஊரில் உள்ள நிறுவனங்களில் வேலை போன்ற விசயங்கள் எல்லாம் இருந்தாலும் சென்னை நோக்கி வரவழைக்கும் விசயத்தில் இரண்டாம் இடத்தில் வேலைவாய்ப்பு. நல்ல படிப்பு, அனுபவம் உள்ளவர்கள், திறமையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தயார் செய்து வைத்திருந்தால் அயல்நாட்டிற்கு இணையான சம்பளம் கிடைக்கும்.

ஆனால்??

வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்குத் திரும்ப மனதளவில் தயாராக வேண்டும். அதற்கு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ நேரில் சென்று நிலவரம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். இத்தனை கஷ்டப்பட்டு சென்னைக்குச் செல்ல வேண்டுமா என்றால்.. தேவையில்லை.

வெளிநாடு அளவிற்கு இல்லாவிட்டாலும் போதிய வசதிகள் நம் ஊர்களில் கிடைக்க ஆரம்பித்து பல வருடங்களாகின்றன. தமிழகத்தின் ஏராளமான சாலைகள் நான்கு வழிப்பாதைகளாக மாறிவருகின்றன. சும்மா சொல்லக்கூடாது. நம் ஊரில் மேம்பட்ட சாலைகளில் பயனிக்கும் அனுபவம் வெளிநாடுகளில் கிடைக்காது. அழகாக மலையையும் தோப்புயும் வயல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே பயணிப்பது ஒரு தனி அனுபவம் தான். அது வேறொரு பதிவில்.. (அப்பா.. எத்தனை பதிவு எழுத வேண்டியிருக்கிறது..). பல நல்ல தொழிற்சாலைகள் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் வர ஆரம்பித்திருப்பது நல்ல விசயம். சென்னையில் 60 ஆயிரம் சம்பளமும், பொள்ளாச்சியில் 30 ஆயிரம் சம்பளமும், துபாயில் ஒரு இலட்ச ரூபாய் (8000 திர்ஹாம்) சம்பளமும் ஒன்று தான்!!

ஊரிற்குத் திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் நல்லது. நம் ஊர் அப்படியே இருக்கிறது என்று நினைத்திருப்பவர்களுக்கு.. சாரிங்க.

Saturday, December 4, 2010

கணிதமேதை இராமானுஜன் நினைவகம் - ஒரு விசிட்!!

ந்தியாவிற்குச் சென்று திரும்பிய ஹேங்க்-ஓவர் இன்னும் தீரவில்லை. தீபாவளிக்கு முந்தைய நான்கைந்து நாட்களைக் கும்பகோணத்தில் கழித்தேன். மனைவியின் ஊர். ஏறத்தாழ ஒன்றரை வருடம் கழித்துச் சென்றதால் ஏகப்பட்ட உறவினர்களுடன் சந்திப்புகள், விசாரிப்புகள். அதனால் வழக்கமாகச் செல்லும் தாரசுரம், சுவாமிமலை,நாகேஸ்வரன் கோயில், கும்பேஸ்வரன் கோயில், இராமசாமி கோவில், சக்கரபாணி கோயில், சாரங்கபாணி கோயில் போன்ற இடங்களுக்கெல்லாம் போக முடியவில்லை. 

திருமணம் ஆனதில் இருந்து ஏகப்பட்டமுறை கும்பகோணத்திற்கு வந்திருக்கிறேன், ஆனால் கணித மேதை இராமனுஜன் அவர்களின் வீட்டைப் பார்த்ததில்லை. இந்த முறை, அவரது வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். "இராமனுஜத்தின் வீடு எங்கிருக்கிறது?" என்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்களைக் கேட்டால், "அவர் நான் படிக்கிற டவுன் ஐ.ஸ்கூல்ல படிச்சாராம். அவரோட படம் எங்க ஸ்கூல்ல இருக்கு" என்றார்கள்.  பிறகு சிலரிடம் கேட்டு, மௌனமே பதிலாகக் கிடைத்தபிறகு விசாரித்தால் சாரங்கபாணி கோயிலிற்குச் செல்லும் வழியில் இருக்கிறது என்றார்கள். சாரங்கபாணி கோயில், கும்பகோணத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று!!


ஒரு பகல் வேளையில் கணித மேதை இராமனுஜன் நினைவகத்திற்குக் கிளம்பினேன். தீபாவளிப் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே இருந்ததால் ஏகப்பட்ட கூட்டம். சாரங்கபாணி கோவிலிற்குப் போகும் வழியில் ஏதாவது ஒரு நினைவகம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே சென்றேன். என் கண்களின் அகப்படவில்லை. என் மனத்திரையில் நினைவகம் என்றால் ஓரளவு பெரிய வீடாக இருக்க வேண்டும் என்றிருந்தது. தேடிப்பார்த்துவிட்டு அருகில் கேட்டால் ஒரு சிறிய வீட்டைக் காட்டினார்கள். எனக்கு ஆச்சர்யம்!!

இந்த இடத்தில் தான் கணித மேதை இராமானுஜன் வாழ்ந்தாரா? 


அந்தத் தெருவில் இருந்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிறிதும் தொடர்பற்ற அளவில் ஒரு ஓட்டு வீடு. அருகில் சென்று பார்த்தால் ஒரு பலகையில் "SRINIVASA RAMANUJAN INTERNATIONAL MONUMENT" என்று எழுதப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தால் மழைநீர் வடிந்த பழுப்பேறிய சுவர்கள், இருள் படர்ந்த அறைகள். உள்ளே சென்றவுடன் கணித மேதை இராமானுஜத்தின் சிலை. சுவரெங்கும் இராமானுஜம் கண்டுபடித்த கணித சூத்திரங்கள் கண்ணாடி சட்டங்களில் மாட்டப்பட்டிருந்தன. சிலவற்றைப் புகைப்படம் எடுக்கலாம் என்று முயன்றேன். நினைவகத்தின் காவலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க படங்கள் எடுக்க முடியவில்லை. பத்திற்கும் குறைவான சூத்திரங்களே மாட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள படங்கள், இராமானுஜன் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம். 


இராமானுஜத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தால் 10 அடி - 10 அடியில் ஒரு ஆசாரம் (Hall), 10 அடி * 10 அடியில் ஒரு படுக்கையறை. அதில் ஒரு இரும்புக் கட்டில். சிறிய அளவே உள்ள சமையலறை. வீட்டிற்குப் பின்னாடி சென்றால் ஒரு சின்ன கிணறு. அவரது வீட்டைப் பார்த்த பொழுது ஏதோ ஒரு பழைய வீட்டிற்குச் சென்ற நினைவே ஏற்பட்டது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் பற்றி உள்வாங்கிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. என்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. 


இராமானுஜத்தின் வீட்டிற்கு வெளியே வந்தால் பரபரப்பான சாரங்கபாணி கோயில் தெரு. பரபரப்பான கடைத்தெரு. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்துசெல்லும் வழி என்பதை அந்தத் தெரு நன்றாக நினைவுபடுத்தியது. இராமானுஜன் நினைவகத்திற்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று வருகைப் பதிவேட்டைப் பார்த்தேன். அக்டோபர் மாதம் முழுவதும் வருகை புரிந்தோர் 53 பேர் மட்டும் தான். எங்களையும் சேர்த்து. வந்திருந்தவர்களுள் பலரது முகவரி பஞ்சாய், ஆந்திரா, தில்லி, கேரளா என்றெல்லாம் இருந்தது. சரி.. நம்ம ஊர்க்காரர்கள் சாரங்கபாணியைப் பார்ப்பதே போதுமென்று நினைத்திருப்பார்கள்.

சாரங்கபாணி! சாரங்கபாணி!!

இந்த நேரத்தில் கந்தசாமியாக மாறி, "இது போன்ற சமகால மேதை வாழ்ந்த இடத்தை மற்ற நாடுகளில் எப்படிப் பாதுகாக்கிறார்கள்" என்றெல்லாம் கருத்து கூற விரும்பவில்லை.

Monday, November 29, 2010

தொடர்பற்ற நாட்கள்.

பதிவெழுதி பல நாட்களாகிவிட்டன. சரியாக ஒன்றரை மாதத்திற்கு முன்பு பதிவெழுதியது. அலுவலக வேலை, இந்தியப் பயணத்திற்கான ஏற்பாடுகள், இந்தியப் பயணம் என்று ஏகப்பட்ட காரணங்களால் பதிவுலகத்துடன் தொடர்பில்லாமல் இருந்தேன். இந்த நாட்களை நினைத்துப் பார்க்கையில் பல விதமான எண்ணங்கள் மனதில் தோன்றுகின்றன.

ஒரு மாத கால இந்தியப் பயணத்திற்கான திட்டமிடுதலில் ஈடுபட்டிருக்கும் பொழுது இணைய வசதி வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. சென்ற ஆண்டு இந்தியா சென்ற பொழுது வீட்டில் இணைய வசதியிருந்தது. அது போன்ற சமயத்தில் குடும்பத்தினருடன் செலவிட்ட நேரம் போக மற்ற நேரத்தில் இணையத்துடன் செலவிடும்படியானது. அந்த அளவிற்கு இணையமும் பதிவுலகமும் என்னைக் கட்டிப்போட்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

"ஊருக்கு வந்தும் பெட்டியத் திறந்து உக்காந்துக்கணுமாப்பா.." என்ற கேள்வி என் பெற்றோரின் பார்வையில் பல நாட்கள் பார்த்திருக்கிறேன். ஆக, இந்த விடுமுறையின் பொழுது "நோ நெட்"

இணைய வசதி இல்லாமல் எப்படி சென்றன நாட்கள்? 

இணைய வசதி இல்லாமையை ஃபேஸ்புக்கும், அலைபேசியும் ஓரளவு ஈடுகட்டியது. நான் ஊருக்கு வந்துவிட்ட செய்தி, என் தொடர்பு எண் என்று பல தகவல்களையும் என் நண்பர்களுக்கு ஃபேஸ்புக் மூலமாகத் தெரிவித்துக்கொண்டேன். ஏர்டெல்லும், ஃபேஸ்புக்கும் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தந்தால் www.o.facebook.com என்ற முகவரியில் இணையவசதி பெரும்பொழுது கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அலுவலக மின்னஞ்சல்களை மட்டும் ஓரிரு நாட்கள் வெளியே சென்று பார்த்துக் கொண்டேன்.

காலையில் வீட்டிற்கு வரும் செய்தித்தாள் மூலம் பெரும்பாலான செய்திகளைத் தெரிந்துகொண்டதால் நாட்டுநடப்புகளுக்கு அப்பால் இருக்கவில்லை. என்ன, நாட்டுநடப்புகளைப் பற்றி, பதிவுலக நண்பர்களின் கருத்துகளைத் தான் தெரிந்துகொள்ள முடியவில்லை. அனைத்து பதிவுகளும் கூகுள் ரீடரில் இருப்பதால் மெதுவாகப் படித்துக் கொள்ளலாம். 

என் வீட்டருகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு பதிவுலகம் பற்றி எல்லாம் சிறிதளவும் தெரியவில்லை. இணையத்தை வெகுவாகப் பயன்படுத்தி வருபவர்கள் கூட இதைப் பற்றி சட்டை செய்துகொள்வதாகத் தெரியவில்லை. சிலரது வீட்டில் ஆங்கிலம், தமிழ், வர்த்தகம் என்று மூன்று வகையான செய்தித்தாள் வருவதைப் பார்க்க முடிந்தது. நாம் பதிவுலகம் மூலம் பெறும் செய்திகளுக்கு இணையாக அவர்களும் செய்திகளை அறிந்து தான் வைத்திருக்கிறார்கள்.

உறவினர்கள், பள்ளிக்கால நண்பர்கள், கல்லூரிக்கால நண்பர்கள், சென்னையில் உடன் பணிபுரிந்த நண்பர்கள் என்று பலரையும் பார்க்க வேண்டியிருந்ததால் இணையம் நினைவிற்குக் கூட பல நாட்கள் வரவில்லை. இவர்கள் அனைவரையும் நேரில் சென்று பார்த்த பொழுது உணர்ந்தது நேரில் சந்திப்பதற்கு இணை எதுவும் இல்லை என்பது தான். நான் சந்தித்தவர்களுள் பலர் என் பதிவுகளைப் படித்திருந்தாலும், அதைப் பற்றிய பேச்சு பெரிதாக இடம்பெறவில்லை. அதைத் தவிர ஏகப்பட்ட விசயங்கள் பேசுவதற்கு இருந்தது தான் காரணம்.

ஆங்கிலத்தில் "Spending value time" என்று சொல்வார்கள். அப்படி நேரம் ஒதுக்க வேண்டும் என்றால் எந்த ஒரு இடையூறும், அலைபாய்தலும் இல்லாமல் இருந்தாலே முடியும் என்று உணர்கிறேன். அப்படி ஒரு நேரத்தை தொடர்பின்மை எனக்கு ஏற்படுத்தியிருந்தது. தொடர்பற்று இருந்தலிலும் ஒரு வகை நன்மை இருக்கத்தான் செய்கிறது. குடும்பத்துடன் திண்ணையில் அமர்ந்து மழையை ரசித்துக் கொண்டே போண்டா சாப்பிட்டது, மொட்டை மாடியில் குடும்பத்துடன் அரட்டை அடித்தது, நண்பர்களுடன் குளிர்காற்றில் உலாத்தியது, வீட்டிற்கு வெளியே நின்று வானத்தை ரசித்தது, வீட்டின் பின்புறமிருக்கும் தோப்பை ரசித்தது எல்லாம் தொடர்பற்ற நாட்களை மறவாமல் இருக்கச் செய்கிறது.

தொடர்பற்று இருந்தது ஏதோ ரீவைண்ட் பட்டனை அழுத்திய உணர்வை ஏற்படுத்தியது. தொடர்பற்று இருக்க நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் :)

Sunday, October 17, 2010

21ம் நூற்றாண்டில் ஆயுத பூஜை!!

இப்பதிவை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதற்பாகத்தில் ஆயுதபூஜை மீதான கொசுவத்தியையும் என் ஈடுபாட்டைப் பற்றி பதிந்துள்ளேன். இரண்டாம் பாகத்தில் வருவது இன்றைய சூழலில் ஆயுதபூஜையை எப்படிப் பார்க்கலாம் என்ற பார்வை!!

*

தொழிற்சாலைகள் அதிகமுள்ள ஊரில் வளர்ந்த எனக்கு ஆயுதபூஜை மீது தனி ஈடுபாடுண்டு.

உடுமலையை அடுத்த மடத்துக்குளத்தில் வளர்ந்த என்னைச் சுற்றி எப்பொழுது அங்குள்ள காகித ஆலைகள், பஞ்சாலைகள், சக்கரை ஆலை, லேத்கள் Lathe (தமிழாக்கம் தெரியவில்லை) பற்றிய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்ததுண்டு. என் தந்தையும் அந்த ஊரில் இருந்த ஒரு காகிதாலையில் பணியாற்றியதால் காகித ஆலையை பலமுறை காணும் வாய்ப்பு கிடைத்ததுண்டு. 

சிறு வயதில், ஒவ்வொரு முறை காகித ஆலைகளுக்குள் செல்லும் பொழுதும் அங்கிருக்கும் அப்பாவின் நண்பர்களையெல்லாம், இந்தக் கருவி என்ன செய்யும், எதற்கு என்றெல்லாம் கேள்வியால் துளைத்ததுண்டு. அவர்கள், பல முறை கேள்விகளுக்குப் பதிலளித்தும், சில முறை காகிதாலையின் கருவிகளின் அதீத ஒலியால் பதிலளிக்க இயலாமலும் போனதுண்டு. பதில் கிடைக்காத கேள்விகளுக்கு விடையைத் தேட ஆயுத பூஜை நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த நாட்களெல்லாம் உண்டு. அன்று தானே சுலபமாக பொதுமக்கள் பார்க்க அனுமதி கிடைப்பதுண்டு. சிறிய ஊர்களில் எளிமையாக தொழிற்சாலைகளைப் பார்வையிட முடிந்தது போல நகரங்களில் முடிவதில்லை என்பது தான் உண்மை.

ஆயுத பூஜையின் பொழுது பெரும்பாலான கருவிகள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, வண்னக் காகிதங்களால் அலங்கரிப்பதைப் பார்க்க முடியும். அவரவர் வேலை செய்யும் இயந்திரங்களையும் கருவிகளையும் சுத்தம் செய்து அவர்கள் வழிபடுவதைப் பார்க்கும் பொழுது உற்சாகத்தை உணர்ந்திருக்கிறேன். இரும்புக் குழாய்களைக் கடைந்தெடுக்கும் பெரிய அளவு லேத்கள் முதல் கொரடு, சுத்தி என சிறிய ஆயுதங்கள் வரை அனைத்தையும் வைத்து பூஜை செய்வதை எனனால் தொழிலின் மீதான பக்தியாகத் தான் பார்க்க முடிந்தது. 

ஒவ்வொரு நாளும் தொழில் பக்தியுடன் வேலை செய்தாலும் ஆண்டிற்கொரு முறை இப்படி ஒரு நாள் ஒதுக்கி வழிபடுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. உழவுத்தொழில் முதல் கணினித்துறை வரை, ஆயுதங்கள் கருவிகள் துணையின்றி எந்த விசயமும் நடப்பதில்லை என்ற நிலையில், ஆயுதபூஜையைக் கடைப்பிடிப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. நவராத்திரியின் கடைசியில் தான் ஆயுதபூஜையைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கெல்லாம் என்னிடம் பதிலில்லை. நொடிப் பொழுதிய கவனக்குறைவால் கைவிரல்களை இழந்தவர்களை எல்லாம் பரவலாக தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களுள் பார்க்க முடியும். அவரவர் தொழிலிற்கு உதவிய கருவிகளுக்கு, ஆயுதங்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவே எண்ணுகிறேன். நிற்க.

*

இளைஞர்களுள் பெரும்பாலானோர் கணினித்துறையிலும், கணினித்திரையின் முன்பும் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியும் இன்றைய சூழலில் ஆயுத பூஜை தேவை தானா?

ஆயுதபூஜை நாளை "வந்த வழியைப் பற்றி சிந்தப்பதற்காகவும், நாம் பயன்படுத்தும் கருவிகளின் செயல்பாடுகளைப் பற்றி சிந்திப்பதற்காகவும்" பயன்படுத்தலாம். 

வந்தவழி சரி. கருவிகளின் செயல்பாடுகளைப் பற்றி என்ன சிந்திப்பது?

நாம் தினமும் என்னென்ன கருவிகளைப் பயன்படுத்துகிறோம்? எவையவை தேவையற்றுக் கிடக்கின்றன? எவையவை தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்துகிறோம்?

நம்மில் பெரும்பாலானோர்க்கு இருக்கும் ஒரு பழக்கம். பார்க்கும் கருவிகளையெல்லாம் வாங்க வேண்டும். கையில் பணம் புரண்டால் அது இன்னமும் கேட்கவே வேண்டாம். சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய செல்போனைக் கிடப்பில் போட்டுவிட்டு புதிய கருவியை வாங்கியே தீர வேண்டும். ஏன்? அக்கருவியில் சில புதிய வசதிகள் உள்ளன, அல்லது நண்பன் வாங்கியதால் நானும் வாங்குகிறேன். அக்கருவியை வைத்திருப்பதில் ஒரு மதிப்பு!! 

இன்றெல்லாம் பொருட்களை மாற்றுவதில் அதிக வேகத்தை அனைவரும் காட்டுகிறோம். ஓரிரு வருடங்களிலேயே மூன்று தொலைக்காட்சிப் பெட்டியை மாற்றிய நண்பர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். பழைய தொலைக்காட்சிப் பெட்டியை என்ன செய்தோம்? அதே போல வருடத்திற்கொரு செல்போனை வாங்குபவர்களும் உண்டு. ஹோம் தியேட்டர் சாதனத்தை வாங்கிவிட்டுப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அன்பர்களையும் பார்க்க முடிவதுண்டு.

பழைய கருவியை என்ன செய்தோம்? குப்பையில் போட்டோமா? அல்லது மறுசுழற்சிக்குக் கொடுத்தாமோ?

மண்ணில் குப்பையாகப் போட்டால் மண் மாசடையாதா? 

அதே போல கருவிகளைத் தேவைக்கேற்ப பயன்படுத்துவதும் கிடையாது. பலர் கணினிகளை வாரக்கணக்கில் அணைப்பதும் கிடையாது, மின் இணைப்பைத் துண்டிப்பதும் கிடையாது. 

ஆயுதங்களுக்குப் பூஜை செய்யும் வேளையில் ஆயுதங்களையும் வசதிகளையும் பெற காரணமாய் இருந்த மண்ணையும் நிலத்தையும் மாசாக்காமல் இருத்தலே மிகவும் தேவையான ஒன்று!! கருவிகளுக்கு நன்றி கூறும் வேளையில் கருவிகளைத் தேவையான அளவு பயன்படுத்துவதன் தேவையை உணர்வதே 21ம் நூற்றாண்டில் ஆயுத பூஜைக் கொண்டாடும் வழியாக இருக்கும். 

உங்கள் எண்ணங்களையும் பகிருங்கள்!!

Wednesday, October 13, 2010

அழகிய நாட்கள்..


பள்ளி நாட்களைப் போலாகிவிட்டன கடந்த சில மாதங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எப்படி வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு எவ்வளவு தயங்குவார்களோ, அதே போல் தயங்குகின்றன என் கால்கள். தேர்வு இறுதி நாட்களில் தேர்வை முடித்துவிட்டு குழந்தைகள் வீடு நோக்கி ஓடி வருவதைப் போல வீடு நோக்கி விரைகிறேன். எல்லாம் எங்கள் செல்லத்திற்காக..

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதார் 

என்பதன் பொருளை அனுபவிக்கும் பொழுது தான் மேலும் உணர்கிறேன். 

அலுவலகம் முடித்து வீட்டில் காலெடுத்து வைக்கும் பொழுதே, "ஹேய்ய்ய்ய்ய்ய்" என்ற 7 மாத மகனின் குரல் வரவேற்கின்றன. அந்தக் குரலை எழுப்புகையில் அவன் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி, பெருமிதம்? கை கால்களை ஆட்டிக் கொண்டு தூக்கச் சொல்லி கேட்டு, நான் தூக்கிய பிறகு "எப்பூடி" என்று அவன் தாயை நோக்கி விடும் பார்வையை எங்கே கற்றான்?

குழந்தையின் ஒவ்வொரு நாளைப் பார்க்கும் பொழுது இயற்கையைத் தான் வியக்கத் தோன்றுகிறது. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே ஒவ்வொரு செய்கையையும் எப்படிக் கற்றுக் கொள்கிறார்கள்? 

"ஏங்க.. நம்ம தங்கம் குப்புற விழ முயற்சி பண்றாங்க.." என்று அலைபேசியில் அழைத்துக் கூறும் மனைவியின் குரலில் தான் எவ்வளவு ஆனந்தம்!!

ஒரு காலை எடுத்து மற்றொரு கால் மேல் போட்டு இடுப்பை ஒரு பக்கமாகத் திருப்பும் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். முயற்சியில் வெற்றி பெற்று குப்புற படுத்த பிறகு, அந்த அதிர்ச்சியில் ஒரு சிணுங்கல். மீண்டும் நாம் நேராகப் படுக்க வைத்தால் மீண்டும் குப்புற விழும் முயற்சி. சில நாட்களில் குப்புற விழுவதில் தேறியவுடன் ஒரு வெற்றிச் சிரிப்பு வரும் பாருங்கள்!! 

மற்றொரு நாள். மீண்டும் ஒரு அலைபேசி அழைப்பு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது..

"என்னங்க.. நம்ம செல்லம் 'ம்மா'னு சொல்றாங்க" குரலில் பூரிப்புடன்..
"ம்ம்.. சூப்பர்மா....." என்கிறேன் கம்மிய குரலில்.. 
"என்னங்க.. வேலையா இருக்கீங்களா.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சா.. அதான் கூப்பிட்டேன்.. நீங்க வேலை பாருங்க.. அப்புறம் கூப்பிடுங்க.."
என்று அழைப்பைத் துண்டிக்கும் பொழுது மனதில் வருத்தமும், நாமும் குழந்தை கூறும் முதல் வார்த்தையைப் பார்க்க வேண்டுமே என்ற ஆவலும் ஒரு சேர வருகிறது. 

"ம்மா" என்றும்.. சில சமயங்கள் துல்லியமாக "அம்மா" என்றும் உச்சரிக்கக் கேட்கையில் வரும் மகிழ்ச்சி ஈடிணையற்றது தான். தமிழ் மொழியின் உன்னதத்தை உணர்ந்த தருணங்களுள் இதுவும் ஒன்று.

தாய்மார்களின் அர்ப்பணிப்பைப் புரிந்து கொள்ள குழந்தைகளுக்குச் சோறூட்டுவதைப் பார்த்தாலே போதும். காலை நீட்டி குழந்தையைப் படுக்க வைத்து கதை சொல்லிக் கொண்டே ஊட்ட ஆரம்பித்தால், ஒரு கிண்ணம் அளவு உணவு செல்ல அரை மணி எடுத்துவிடும்.

"அந்த ஆடு சாமீய்ய், என்ன பண்ணுச்சாம்.. காட்டுக்குள்ள போயிக்கிட்டு இருந்துச்சாம்.. அது ரொம்பப் பெரிய காடு சாமி.. ரொம்ப தூரத்துக்கு வெளிச்சமே இல்லியாம்.. அப்போ என்ன ஆச்சு தெரியுமா? ஒரு யானை வந்துச்சாம் சாமி... வந்தூ.. இந்த வாய் வாங்கிக்கோ.. யானை தெரியும்ல.. நீ தான் தும்பிக்கையை உடச்சு விட்டீல்ல (தும்பிக்கை இல்லாத அவன் யானை பொம்மையைக் காட்டி) அந்த யானை ஆட்டப் பாத்து என்ன சொல்லுச்சாம்.. என்ன நீ தனியாக் காட்டுக்குள்ள போயிட்டிருக்க.. நான் உனக்குத் துணையா வரட்டுமான்னு கேட்டுச்சாம்.. அதுக்கு அந்த ஆடு என்ன சொல்லுச்சாம்.. ஆமா சாமீ.. இன்னொரு வாய் வாங்கிக்கோ.." என்று மடியில் படுத்திருக்கும் மகனை நோக்கி, என் மனைவி  கதை சொல்லி சோறூட்ட. அதை விழிகள் விரியக் கேட்கும் மகனைப் பார்ப்பதில் தான் எவ்வளவு சுவாரஸ்யம்.  உண்மையில் பார்க்கப் போனால் பெண்கள் பொதுவாகச் சிறந்த கதை சொல்லியாகத் தான் இருக்கிறார்கள். 

"ஏங்க நீங்க ஒரு நாள் கால்ல போட்டு ராகிக்கூலை ஊட்டுங்களேன்" என்று மனைவி கேட்டதற்கு, நானும் சரியெனத் தலையாட்டி விட்டு, முயற்சி செய்து ஊட்ட ஆரம்பித்தேன். ஓரிரு வாய் வாங்கிவிட்டு "புர்ர்ர்ர்ர்"ரென்று சிரித்துக் கொண்டே வாயை ஊதியதில் என் முகமெல்லாம் ராகிக்கூல் :)குழந்தையை வளர்ப்பதென்பது அன்னைமார்களுக்கு 24 மணி நேர வேலை என்றால் அது மிகையில்லை. துணைக்குப் பெரியவர்கள் யாரும் இல்லாத தனிக்குடித்தன சூழலில் என்றால் சொல்லவே வேண்டாம். 

"தவிழ முயற்சி செய்வது, பொம்மைகளைத் தொடப் பழகி எடுத்து விளையாட ஆரம்பிப்பது, பொம்மைகளுடன் பேச முயற்சி செய்வது, நாளடைவில் தாய் தந்தையிடம்.. "ஹே.... ஆ... " என்று பேச முயற்சிப்பது" என்று ஒவ்வொரு பொழுதும் புதிதாக மலர்கிறது. வேலை, தொழில் என்று வாழ்க்கை பரபரப்பாகச் சென்றாலும் ஒவ்வொரு நாளும் அழகாய் மலர்கின்றன. சில நாட்கள், அதிகாலையிலேயே துவங்கி விடுகின்றன. அதிகாலையிலேயே மகனிடம் விளையாட ஆரம்பிக்கும் நாட்களில் அலுவலகத்திற்கு கிளம்பும் பொழுது என் ஆரம்பகால பள்ளி நாட்கள் நினைவிற்கு வருகின்றன.

என்ன.. இப்பொழுது தந்தை நான், மகனைப் பார்த்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே செல்கிறேன்.

**

அழகிய நாட்கள்.. தொடரும்..



Friday, October 8, 2010

நாட்டுப்புறப் பாடல்கள் - நினைவுகள்

சிறுவயது நினைவுகளை அசைபோடுகையில் ஓடியாடி விளையாடியது, ஆடிப்பாடித் திரிந்தது எல்லாம் நினைவிற்கு வருகிறது. ஆடிப் பாடிய பாடல்களுள் பெரும்பாலானவை தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்த நாட்டுப்புறப் பாடல்களையே. சிறு வயதில் பாடிய பாடல்களை இன்று நினைவு படுத்திப் பார்க்கையில் சில பாடல்களே நினைவில் நிற்கின்றன.  என் தாத்தா நாடகங்களில் நடித்த அனுபவங்களையும் அதில் வரும் பாடல்களையும் பாடிக் காட்டிய நாட்களில் அதை அப்பொழுது கேட்டு சிரித்து விட்டுப்போனது தான் மிச்சம். சிறு வயதில் அதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதில்லை.

என் தாத்தாவும் ஆத்தாவும் (பாட்டி) கிண்டலும் கேலியுமாகப் பாடிய பாடல்களில் முழுமையாக மண் வாசனை கலந்திருந்தது அன்று புரியவில்லை. வெளியூர்களில் பணியாற்றும் வேளையில் நம் மண்ணை நினைக்கும் பொழுது அவையாவும் மனதில் மின்னலாக வந்து செல்கின்றன. இன்று, அவர்கள் பாடிய பாடல்களில் நினைவில் நிற்பவை சொற்பமே!!

ஞாயிற்றுக் கெழமை திருடன் வந்தான்
திங்கட் கெழமை திருடிப் போனான்
செவ்வாய்க் கெழமை செயிலுக்குப் போனான்
புதன் கெழமை புத்தி வந்தது
வியாழக் கெழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கெழமை வீட்டிற்கு வந்தான்
சனிக் கெழமை சாப்புட்டுப் படுத்தான்.

மேலே குறிப்பிட்ட பாடல் எனக்கு கிழமைகளைச் சொல்லிக் கொடுக்கையில் என் பாட்டி எனக்குப் பாடிய பாடல். இன்னும் சின்ன வயதில் பாட்டி அவரது காலில் அமர வைத்து காலை மேலும் கீழுமாக அசைத்த படி பாடிய பாடல்..

குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சி குத்தடி ஜைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கா

பையன் வந்தாப் பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சுருக்குப் பையில போட்டுக்கோ..

பந்தல்ல பாகற்காய் இருக்கற வீடுகளே இல்லாத இன்றைய சூழல்ல இது போன்ற நாட்டுப்புறப்பாடல்கள் எங்கே பாடுவது என்று தோன்றினாலும் அவரவர்க்கு நினைவில் வரும் பாடல்களே பதிவு செய்து வைப்பது, நம் முன்னோரின் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் புரிந்து கொள்ள உதவும்.

நெருங்கிய உறவினர்கள் பலரும் பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பணியாற்றிவரும் வேளையில் வருடத்திற்கு ஒரு முறையோ இரு வருடத்திற்கு ஒரு முறையோ அனைவரும் ஒன்று கூடுவதுண்டு. அப்படிக் கூடும் பொழுது பெரியவர்களை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு. அப்படி வரும் பாடல்களில் இருக்கும் நையாண்டிக்குத்  தனி சுவை தான். என் மாமா ஒருவர் இது போன்ற பாடல்களைப் பாடுவார். அவரிடம் அண்மையில் "உங்களுடைய பாடல்களேல்லாம் நினைவில் உள்ளனவா?" என்று கேட்டதற்கு அவரது நினைவில் இருந்து வந்தவை சில பாடல்கள் மட்டுமே.

மாமரத்துக்கும் பூமரத்துக்கும் மயிலுக்கண்ணாடி
இந்த மங்கம்மா போடறது ஸ்டைலுக் கண்ணாடி
பாப்பாத்தா காப்பித் தண்ணி பஸ்ட் க்ளாஸு
போத்தனூரு வாழைப்பழம் புட்டு விளாசு

*
பாட்டி பாட்டி பாட்டி
வெத்தலை பாக்கு வேணுமா
காது நல்லா கேக்கல
பலமாச் சொல்லடா பேராண்டி

பாட்டி பாட்டி பாட்டி
போயிலை காம்பு வேணுமா
காது நல்லா கேக்கல
பலமாச் சொல்லடா பேராண்டி

பாட்டி பாட்டி பாட்டி
தங்க நகை வேணுமா
காது நல்லா கேக்குது
மெதுவா சொல்லடா பேராண்டி

என்ன தான் சினிமாப் பாடல்கள் வந்துவிட்டாலும் மண் வாசனை வீசும் பாடல்களுக்குத் தனி சுவை தான். நம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்!! சுவையான பாடல்கள் பலதும் வெளியே வரலாம்.

*

விளையாட்டுப் பருவத்தில் ஒவ்வொரு விளையாட்டிற்கு வாய்ப்பாட்டோ, பாடலோ பாடியதை நினைத்தால் நம் வாழ்வியலில் நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவிற்கு ஒன்று கலந்த ஒன்று என்று யோசிக்கத் தோன்றுகிறது.

கோலி குண்டு விளையாடும் பொழுது.. குழியில் குண்டைப் போட்டால் பத்து பாயிண்ட், மற்றவரின் குண்டை அடித்தால் பத்து பாயிண்ட் என்று ஒவ்வொரு பாயிண்டிற்கு ஒரு வரியுண்டு. இன்று நினைவில் இருப்பவை இவை மட்டுமே..

ஐயப்பன் சோலை
ஆறுமுக தகுடி
ஏழுவா லிங்கம்
எச்சுமுச்சுக் கோட்டை
தொம்பா பேட்டை
தேசிங்கு ராஜா.

அது போல நொண்டி விளையாடுவதற்கென்று சில பாடல்கள், ஓடி விளையாடுவதற்கு, ஒளிஞ்சு விளையாடுவதற்கு என்று எதற்கெடுத்தாலும் பாடல்கள் தான். இன்று இது போன்ற பாடல்களை பாடுபவரும் இல்லை. பாடல்களை நினைவில் வைத்திருப்பவரும் இல்லை. வேறென்ன பாடல்கள் என்று யோசிக்கும் பொழுது

மலை மேல தீப்பிடிக்குது 
பிள்ளைகளா ஓடுங்க..
மலை மேல தீப்பிடிக்குது 
பிள்ளைகளா ஓடுங்க..


என்று மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பார்த்து ஓடிய நாட்கள் நினைவில் வருகிறது. உங்கள் நினைவில் உள்ள பாடல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!!

Monday, October 4, 2010

அமீரக நகைச்சுவை மன்றம் + சேட்டை அரங்கம்.

நகைச்சுவையை விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா?

அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதற்கான காரணம் நகைச்சுவை மீதிருக்கும் ஆர்வமே!! 'மதுரை முத்து அசத்தறாரப்பா, சிவ கார்த்திகேயன் கலக்கறாரப்பா' என்றெல்லாம் சொல்லும் பொழுது 'அவர்களைப் போலெல்லாம் மேடையேறிப் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க முடியுமா என்ற பிரமிப்பும் இருக்கத்தான் செய்கிறது. நம்மில் பலரிற்கு மேடை ஏறுவதென்றால் ஏதோ பாகற்காயைச் சாப்பிடுவது போல..

இந்தப் பாகற்காயை எளிதாக 'சிரிக்கச் சிரிக்க' சாப்பிட வைப்பதே அமீரக நகைச்சுவை மன்றத்தின் வேலை.




"நாம் சிரிக்கும் பொழுது உலகமே நம்முடன் சிரிக்கும். நாம் அழும் பொழுது, தனியாகவே கண்ணிர் சிந்த வேண்டியதிருக்கும்" என்பதை நம்பும் அமீரக நகைச்சுவை மன்றத்தினர் (Emirates Humour Club), அனைவருக்கும் சிரிப்பு மருந்தைத் தருவதையும், சிரிப்பு மருத்தைத் தரக் கற்றுத் தருவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். அமீரக நகைச்சுவை மன்றம் துபாயில் அமைந்துள்ளது. மாதத்தின் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் தமிழ் பேசும் அன்பர்களுக்காகவும், மூன்றாவது வார வெள்ளிக்கிழமைகளில் ஆங்கிலம் பேசும் அன்பர்களுக்காகவும் நகைச்சுவைக் கூட்டம் கூடுகிறது. 


நகைச்சுவை மன்றக் கூட்டங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரும் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டும் கருத்துகளை மேடையேறிக் கூறிவதைப் பார்க்க முடியும். சிரிப்பதற்காகவே கூடும் கூட்டமென்பதால் பாலியல், மதம் மற்றும் அரசியல் கருத்துகளுக்கு மட்டும் தடை. நகைச்சுவை மன்றக் கூட்டத்திற்கு வருவோர் செய்ய வேண்டியது, நல்ல நகைச்சுவைத் துணுக்குகளை எடுத்து வருவது தான். மேடையேற பயமிருந்தால் மேடையேறுபவரை உற்சாகப்படுத்த கரவொலிகளை எழுப்பினால் போதும். இக்கூட்டங்களுக்கு வருபவர்கள் நாளடைவில் பயமின்றி மேடையேறுவதையும் பார்க்க முடியும்.

அமீரகம் போன்ற அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்குத் தம்மக்களை ஒரு சேரப் பார்க்க நேர்வதே அளவில்லா மகிழ்ச்சியைத் தரும் விசயம். அதுவும் நகைச்சுவைக் கூட்டமென்றால் சொல்லவா வேண்டும்?

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமீரகத்தில் வாழ நேர்ந்தால் அவர்களுக்கு இம்மன்றத்தினை அறிமுகப்படுத்தத் தவறாதீர்கள்!! மாதத்திற்கொரு முறை பழக்கப்பட்ட முகங்களுடன் சிரித்து மாலைப் பொழுதைக் கழிப்பது அலாதியானது தானே!!




சேட்டை அரங்கம்..


அக்டோபர் 1ம் தேதி, சென்ற வெள்ளிக்கிழமையன்று நகைச்சுவை மன்றம், 'சேட்டை அரங்கம்' என்ற நகைச்சுவைப் பேச்சு மன்ற நிகழ்ச்சியை துபாய் அல்-கிசைஸில் உள்ள ஆப்பிள் இண்டர்நேசனல் பள்ளி அரங்கத்தில் நடத்தினர்.


1. கலகலப்பான குடும்ப வாழ்க்கைக்கு நகைச்சுவையே பிரதானம்
2. அமர்க்களமான அலுவலக வாழ்க்கைக்கு நகைச்சுவையே அச்சாணி
3. நகைச்சுவை என்பது பொழுதுபோக்கு மட்டுமே
என்ற தலைப்புகளில் மூன்று அணிகளாகப் பிரிந்து தங்கள் தரப்பு வாதங்களை வழங்கினர்.


ஒவ்வொரு அணியினரும் தங்கள் கருத்திற்கு வலு சேர்க்க நகைச்சுவையான நிகழ்வுகளையும், சூழ்நிலைகளையும் விளக்கி வாதத்தை வைத்தது அரங்கத்தைச் சிரிப்பலைகளில் மூழ்கடித்தது. நடுவர் குணா அவர்கள் தனது  அனுபவக் குறிப்புகள் மற்றும் துணுக்குகளுடன் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்திச் சென்றார்.

ஷார்ஜா, துபாய் போன்ற நகரங்களில் எந்திரன் படம் வெளியாகியிருந்தாலும் ஏறக்குறைய 150 பேர் நிகழ்ச்சியைப் பார்வையிட்டது சிறப்பு.


சேட்டை அரங்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுள் பலரிற்கு இதுவே 'முதல் மேடை' என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில், முதன்முறையாக மேடையேறிய நிறைவைப் பங்கேற்றவர்கள் முகத்திலும், நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்தத நிறைவைப் பார்வையாளர்கள் முகத்திலும் பார்க்க முடிந்தது. ஒரு நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்கிய அமீரக நகைச்சுவை மன்றத்தினர்க்குப் பாராட்டுகள்!!

**

அமீரக நகைச்சுவை மன்றத்தின் இணையதள முகவரி கீழே..

http://www.emirateshumourclub.net/

**

Wednesday, September 29, 2010

ஊடகங்கள் + காமன்வெல்த் போட்டிகள்!!

இன்று உங்கள் மனத்திரையை ஆக்கிரமித்துள்ள விசயங்கள் எவையவை? அவற்றுள் எத்தனை சதவிகிதம் ஊடகத் திணிப்பால் மனதினுள்ளே புகுந்துள்ளன? 


இன்றைய ஊடகங்கள் நம் மனத்திரையைக் ( Mind share) கைப்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இல்லாதவற்றை இருப்பதாகக் காட்டுவது, இருப்பதன் தன்மையை வேறுமாதிரியாக மனதில் பதிய வைப்பது, செய்திகளில் சிலவற்றை மட்டுமே வெளிச்சம் போட்டுக்காட்டுவது என்று ஊடக நுகர்வோரை எப்படியெல்லாம் வேப்பிலை அடிக்க வேண்டுமோ.. அதைக் கச்சிதமாகச் செய்து வருகின்றன.

ஊடகங்கள் எந்த அளவிற்கு நம் கருத்தைத் தீர்மானிக்கின்றன?

பெருமளவு நம் கருத்தை ஊடகங்களே தீர்மானிக்கும் நிலை தான் இன்று நிலவுகின்றன. எந்த அமைப்பு, கட்சி சார்புடைய ஊடகங்களை நாம் பார்க்கிறோமோ படிக்கிறோமோ, அதில் வரும் கருத்துகளே நம் மனதிலும் நிற்கின்றன. சிலர் மாற்றுக் கருத்தைக் கூறும் ஊடகங்களைப் படிப்பதையும் விரும்புவதில்லை என்பது தான் உண்மை. உதாரணத்திற்கு பிபிசியையோ, சி.என்.என்னை மட்டுமோ பார்த்து வருபவர்களுக்கு அமெரிக்கப் படைகள் ஆப்கனில் சேவையாற்றி வருவதாகத் தோன்றும். ஒரு முறை அல் ஜசீராவைப் பாருங்கள். மறுபக்கத்தையும் காட்டுகிறார்கள். 

இந்திய ஊடகங்களைப் பொருத்த வரை காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். மேற்கத்திய ஊடகங்களைப் பொருத்த வரை இந்தியாவால் நிர்மானிக்கப்படும் காஷ்மீர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இதுவே வளைகுடா ஊடகங்கள் என்றால்.. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இந்தியக் காஷ்மீர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இம்மூன்று ஊடகங்களைப் பார்த்து வருபவர்களுக்கு ஒவ்வொருவருடைய நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள முடிகிறது. வரலாற்று அறிவோ, அரசியல் புரிதலோ இல்லாதவர் ஏதாவது ஒரு ஊடகத்தை மட்டும் படித்து வந்தால் என்ன மாதிரியான கருத்துகள் மனதில் பதியும்?

நடுநிலை அல்லது சார்பற்ற ஊடகங்களை இன்று எங்கு தேடினாலும் காணமுடிவில்லை. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு விசயத்திலும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு மாற்றுக் கருத்தை இருட்டடிப்பு செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன. நடுநிலையாகச் செய்திகளைத் தருவதாகப் புரிந்துகொள்ளப் பட்ட ஆங்கிலச் சேனல்களும் 'பரபரப்பை ஏற்படுத்தும்' விசயங்களை பரபரப்பு எற்படுத்தும் விதத்திலேயே தருவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன.

காமன்வெல்த் போட்டிகள் பற்றிய செய்திகளைப் பார்த்தால் சர்வதேசப் போட்டிகளை நடைபெறுவதற்கே ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கத் தவறவில்லை. இங்கே இடிந்துவிட்டது, அங்கே வழுக்கிவிட்டது என்ற தோரணையிலேயே செய்திகளைத் தரும் வேளையில் நிறைகளைப் பற்றிய செய்திகளை எங்கேயும் காணவில்லை. உண்மை தான். பெருத்த ஊழல் நடைபெற்றிருப்பதற்கான அறிகுறிகள் பலவும் தெரிகின்றன. ஆனால், குறைகளை மட்டுமே காட்டும் வேளையில் சர்வதேசப் போட்டிகளை பார்த்துரசிக்க எண்ணும் ரசிகர்களை விளையாட்டு மைதானத்திற்கு வெளியிலேயே நிற்க வைக்க விருப்புகின்றனவோ ஊடகங்கள்!!
இந்தியாவில் கடைசியாக சர்வதேச அளவில் தடகளப்போட்டிகள் நடைபெற்றது 1982 ஆசியப் போட்டிகளில். கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய அளவில் போட்டிகள் நடைபெறாத பொழுது, இப்பொழுது நடைபெறுவது குறைந்தது தில்லியைச் சுற்றியுள்ள மக்களுக்கு நல்ல அனுபவமாகத் தானே இருக்கும்.
இந்திய மக்களில் 40% சதவிதத்தினர் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கும் பொழுது இப்படி ஒரு போட்டிகள் தேவையா? என்ற கேள்வி வராமல் இல்லை. ஆனால் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டியது ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு.
மீண்டும் மீண்டும் இந்தியாவைப் பற்றியும் தடகளப் போட்டிகளைப் பற்றியும் இந்திய ஊடகங்கள் குறை கூறும் பொழுது எப்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருவார்கள்? கடந்த சில வாரங்களாக அமீரகத்தில் உள்ள செய்தித்தளங்கள் அனைத்தும், இந்திய ஊடகங்களை மேற்கோள் காட்டி, போட்டிகளையும் இந்தியாவையும் கிண்டல் செய்து வருகின்றன.
இன்னும் சில நாட்களே இருக்கின்றன போட்டிகள் ஆரம்பிக்க. இதற்கு மேல் தூற்றி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஊழல் செய்தவர்களைக் கட்டாயம் (??) சட்டம் (வேடிக்கை) பார்த்துக் கொள்ளும்.
ஆகவே போட்டிகள் தொடர்பான நல்ல விசயங்கள் என்னவென்று பார்ப்போம். போட்டிகள் வெற்றியடைய நம் ஆதரவை நல்குவோம்!!
நேரம் இருந்தால் இந்த முகநூல் (Facebook) பக்கத்தில் உள்ள படங்களைப் பாருங்கள்!!  

Sunday, September 12, 2010

போறாளே பொன்னுத்தாயி... - சுவர்ணலதா நினைவஞ்சலி !!

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்

என்று ஆரம்பித்த சுவர்ணலதாவின் திரையிசை வாழ்க்கை இவ்வளவு சீக்கிரமாக முடிவிற்கு வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டோம். என்னுடைய இசைத்தொகுப்பில் சுவர்ணலதாவின் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் தான். எத்தனை விதமான பாடல்கள்? பாடல்களில் உணர்ச்சிகளை, வேறுபாடுகளை வெளிப்படுத்தியதில் எஸ்.ஜானகிக்கு அடுத்த படியான இடத்தில் இவரை வைப்பேன். 

மாலையில் யாரோ மனதோடு பேச..
மார்கழி வாடை மெதுவாக வீச..

என்ற வரிகளைக் கண்ணை மூடிக் கேட்கும் பொழுது அப்படியே மனதை மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வு வருவதை மறுக்கவே முடியாது. பாடல் வரிகளில் உள்ள தனிமையை அவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடலிது. தூக்கம் வராத பொழுதுகளில் இப்பாடல் தாலாட்டாக இருந்திருக்கிறது.

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

என்று "வள்ளி" படத்தில் வரும் பாடலில் வெளிப்படுத்திய உணர்வுகளை வேறெந்த பாடலிலும் பெற முடியாது. 

"மாசிமாசம் ஆளான பொன்னு
மாமன் உனக்குத் தானே"

என்ற லேட் நைட் ரகப் பாடலை வெகுநேர்த்தியாகப் பாடியிருப்பார். பாடலிற்குத் தேவையான உணர்வைக் கொண்டுவருவதில் ஜானகிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று கூறியதும் இது போன்ற பாடல்களை நேர்த்தியாகப் பாடியதால் தான்!!

இளையராஜாவின் இசையில் அறிமுகம் ஆனாலும் அவர் அளவிற்கு ரகுமானாலும் பயன்படுத்தப்பட்ட "ராஜா காலத்துப் பாடகி"யென்றால் சுவர்ணலதாவாகத்தான் இருப்பார். ரகுமானின் ஆரம்பகாலப் படங்களில் இருந்தே ஒவ்வொரு படத்திலும் ஒன்றோ இரண்டோ பாடல்களைப் பாடிவந்தவர்.

இன்றைய இளம்தலைமுறைப் பாடகிகள் மெல்லிசை, உற்சாகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வேகமான பாடல்கள் என்று ஏதாவதொரு வகையான பாடல்களை மட்டுமே பாடுவதைக் கேட்க முடியும். (சின்மயி இதில் விதிவிலக்கு). ஆனால் குத்துப்பாடல்கள், வேகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வெஸ்டர்ன், கிளாசிக்கல், ஃபாஸ்ட் நம்பர்ஸ் என எல்லா வகையான பாடல்களிலும் பிரகாசித்தவரென்றால் ஜானகிக்கு அடுத்தபடியாக இவரைத் தான் எண்ண முடிகிறது. இவரை ஆல்ரவுண்டர் என்றால் மிகையில்லை.

"முக்காலா முக்காபுலா " - காதலன்
"உசிலம்பட்டி பெண்குட்டி" - ஜெண்டில்மேன்
"அக்கடான்னு நாங்க எடை போட்டா" - இந்தியன்
"குச்சி குச்சி ராக்கம்மா.. " - பம்பாய்
"மெல்லிசையே.. என் இதயத்தில் மெல்லிசையே" - Mr. ரோமியோ
"உளுந்து விதைக்கையிலே" - முதல்வன்
" ஒரு பொய்யாவது சொல் கண்ணே" - ஜோடி
"பூங்காற்றிலே " - உயிரே.
"குளிருது குளிருது" - தாஜ்மஹால்
"எவனோ ஒருவன்" -அலைபாயுதே

என்று ஒவ்வொரு வருடத்திலும் ஹிட் பாடல்களுக்கு உயிர் கொடுத்து முனுமுனுக்க வைத்தவர்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாடலில் சுவர்ணலதாவின் வரிகள் வரும் இடங்களில் எல்லாம் உச்சத்திற்குச் சென்று வருவது அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

ரகுமான், ஒரே படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களைப் பாட வைத்ததும் இவரை மட்டும் தான் என்று நினைக்கிறேன். ரட்சகன் படத்தில் "மெர்க்குரிப்பூக்கள்" என்ற பெப்பி பாடலைப் பாட வைத்து, "லக்கி லக்கி" என்ற மாறுபட்ட பாடலையும் பாட வைத்தார். இன்று ஓரிரு பாடல்கள் ஹிட் கொடுத்த பாடகிகள் எல்லாம் "ஆஹா ஓஹோ.." என்று பரபரப்பாக வலம்வரும் பொழுது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட வெற்றிப்பாடல்களைப் பாடிய "சுவர்ணலதா"வை உரிய இடத்தில் வைத்திருக்கத் தவறிவிட்டார்களோ(டோமோ)? என்று தோன்றுகிறது. இவரது புகைப்படத்தை கூகுளில் தேடினாலும் ஓரிரு படங்களே கிடைத்தன.

இவரைப் பற்றிய கட்டுரை எழுதலாம் (இவர் இல்லை என்ற பிறகு) என்று பார்த்தால், நான் கவனிக்கத் தவறிய எத்தனையோ பிரபலமான பாடல்களை இவர் பாடியுள்ளது தெரிகிறது.

"ஒரு நாள் ஒரு பொழுது 
உன் மூஞ்சி காண்காம
உசுரே அல்லாடுதே

மறுநா வரும்வரைக்கும்
பசித்தூக்கம் கொள்ளாமல்
மனசு அல்லாடுதே"

என்று "அந்திமந்தாரை"யில் வரும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்!! பாடலிற்கு இசையே தேவையில்லை என்னும் அளவிற்கு இவரது ஆளுமை இப்பாடலில் தெரியும்.

இளையராஜா, ரகுமான் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடியவருக்கு மகுடம் சூட்டியது கருத்தம்மாவில் வந்த போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலில். இந்தப் பாடலிற்காக தேசியவிருது வாங்கியது அனைவரும் அறிந்ததே. சுவர்ணலதாவைப் பற்றி கட்டுரை எழுத நினைப்பவர்கள் "போறாளே பொன்னுத்தாயி" என்ற வரிகளைக் குறிப்பிடாமல் இருக்கப்போவதில்லை. கருத்தம்மாவில் இப்பாடல் மகிழ்ச்சி, சோகம் என்று இரண்டு முறை வரும். அதில் சோகமான பின்னனியில் வரும் வரைகளைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிடத் தோன்றுகிறது. 

"போறாளே பொன்னுத்தாயி 
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு"

இன்று சுவர்ணலதா மறைந்துவிட்டாலும், "மாலையில் யாரோ மனதோடு பேச"வும் "மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபமும்" என் அலைபேசியிலும் இசைக்கோப்பிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதனுடன் சுவர்ணலதாவின் நினைவும்!! 

RIP Swarnalatha!!

Related Posts with Thumbnails