Saturday, December 4, 2010

கணிதமேதை இராமானுஜன் நினைவகம் - ஒரு விசிட்!!

ந்தியாவிற்குச் சென்று திரும்பிய ஹேங்க்-ஓவர் இன்னும் தீரவில்லை. தீபாவளிக்கு முந்தைய நான்கைந்து நாட்களைக் கும்பகோணத்தில் கழித்தேன். மனைவியின் ஊர். ஏறத்தாழ ஒன்றரை வருடம் கழித்துச் சென்றதால் ஏகப்பட்ட உறவினர்களுடன் சந்திப்புகள், விசாரிப்புகள். அதனால் வழக்கமாகச் செல்லும் தாரசுரம், சுவாமிமலை,நாகேஸ்வரன் கோயில், கும்பேஸ்வரன் கோயில், இராமசாமி கோவில், சக்கரபாணி கோயில், சாரங்கபாணி கோயில் போன்ற இடங்களுக்கெல்லாம் போக முடியவில்லை. 

திருமணம் ஆனதில் இருந்து ஏகப்பட்டமுறை கும்பகோணத்திற்கு வந்திருக்கிறேன், ஆனால் கணித மேதை இராமனுஜன் அவர்களின் வீட்டைப் பார்த்ததில்லை. இந்த முறை, அவரது வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். "இராமனுஜத்தின் வீடு எங்கிருக்கிறது?" என்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்களைக் கேட்டால், "அவர் நான் படிக்கிற டவுன் ஐ.ஸ்கூல்ல படிச்சாராம். அவரோட படம் எங்க ஸ்கூல்ல இருக்கு" என்றார்கள்.  பிறகு சிலரிடம் கேட்டு, மௌனமே பதிலாகக் கிடைத்தபிறகு விசாரித்தால் சாரங்கபாணி கோயிலிற்குச் செல்லும் வழியில் இருக்கிறது என்றார்கள். சாரங்கபாணி கோயில், கும்பகோணத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று!!


ஒரு பகல் வேளையில் கணித மேதை இராமனுஜன் நினைவகத்திற்குக் கிளம்பினேன். தீபாவளிப் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே இருந்ததால் ஏகப்பட்ட கூட்டம். சாரங்கபாணி கோவிலிற்குப் போகும் வழியில் ஏதாவது ஒரு நினைவகம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே சென்றேன். என் கண்களின் அகப்படவில்லை. என் மனத்திரையில் நினைவகம் என்றால் ஓரளவு பெரிய வீடாக இருக்க வேண்டும் என்றிருந்தது. தேடிப்பார்த்துவிட்டு அருகில் கேட்டால் ஒரு சிறிய வீட்டைக் காட்டினார்கள். எனக்கு ஆச்சர்யம்!!

இந்த இடத்தில் தான் கணித மேதை இராமானுஜன் வாழ்ந்தாரா? 


அந்தத் தெருவில் இருந்த வீடுகளுக்கும் கடைகளுக்கும் சிறிதும் தொடர்பற்ற அளவில் ஒரு ஓட்டு வீடு. அருகில் சென்று பார்த்தால் ஒரு பலகையில் "SRINIVASA RAMANUJAN INTERNATIONAL MONUMENT" என்று எழுதப்பட்டுள்ளது. உள்ளே சென்று பார்த்தால் மழைநீர் வடிந்த பழுப்பேறிய சுவர்கள், இருள் படர்ந்த அறைகள். உள்ளே சென்றவுடன் கணித மேதை இராமானுஜத்தின் சிலை. சுவரெங்கும் இராமானுஜம் கண்டுபடித்த கணித சூத்திரங்கள் கண்ணாடி சட்டங்களில் மாட்டப்பட்டிருந்தன. சிலவற்றைப் புகைப்படம் எடுக்கலாம் என்று முயன்றேன். நினைவகத்தின் காவலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க படங்கள் எடுக்க முடியவில்லை. பத்திற்கும் குறைவான சூத்திரங்களே மாட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள படங்கள், இராமானுஜன் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகக் கட்டடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம். 


இராமானுஜத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தால் 10 அடி - 10 அடியில் ஒரு ஆசாரம் (Hall), 10 அடி * 10 அடியில் ஒரு படுக்கையறை. அதில் ஒரு இரும்புக் கட்டில். சிறிய அளவே உள்ள சமையலறை. வீட்டிற்குப் பின்னாடி சென்றால் ஒரு சின்ன கிணறு. அவரது வீட்டைப் பார்த்த பொழுது ஏதோ ஒரு பழைய வீட்டிற்குச் சென்ற நினைவே ஏற்பட்டது. ராமானுஜத்தின் கண்டுபிடிப்புகள் பற்றி உள்வாங்கிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை. என்பது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்தது. 


இராமானுஜத்தின் வீட்டிற்கு வெளியே வந்தால் பரபரப்பான சாரங்கபாணி கோயில் தெரு. பரபரப்பான கடைத்தெரு. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வந்துசெல்லும் வழி என்பதை அந்தத் தெரு நன்றாக நினைவுபடுத்தியது. இராமானுஜன் நினைவகத்திற்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று வருகைப் பதிவேட்டைப் பார்த்தேன். அக்டோபர் மாதம் முழுவதும் வருகை புரிந்தோர் 53 பேர் மட்டும் தான். எங்களையும் சேர்த்து. வந்திருந்தவர்களுள் பலரது முகவரி பஞ்சாய், ஆந்திரா, தில்லி, கேரளா என்றெல்லாம் இருந்தது. சரி.. நம்ம ஊர்க்காரர்கள் சாரங்கபாணியைப் பார்ப்பதே போதுமென்று நினைத்திருப்பார்கள்.

சாரங்கபாணி! சாரங்கபாணி!!

இந்த நேரத்தில் கந்தசாமியாக மாறி, "இது போன்ற சமகால மேதை வாழ்ந்த இடத்தை மற்ற நாடுகளில் எப்படிப் பாதுகாக்கிறார்கள்" என்றெல்லாம் கருத்து கூற விரும்பவில்லை.

11 comments:

சரவணகுமரன் said...

வீட்டை வாடகைக்கு விடாம வச்சிருக்காங்களே’ன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்...

Chitra said...

அக்டோபர் மாதம் முழுவதும் வருகை புரிந்தோர் 53 பேர் மட்டும் தான். எங்களையும் சேர்த்து. வந்திருந்தவர்களுள் பலரது முகவரி பஞ்சாய், ஆந்திரா, தில்லி, கேரளா என்றெல்லாம் இருந்தது.


.....இது தப்பு கணக்கு, இல்லையே? ம்ம்ம்ம்..... என்னத்த சொல்ல......

பார்வையாளன் said...

பாதுகாக்கப்பட வேண்டியதில் இவ்வளவ்ய் அலட்சியமா..

அடுத்த தலை முறைக்கு நாம் துரோகம் செய்கிறோம்

எஸ்.கே said...

அருமையான பதிவு!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமையான பகிர்வுங்க......நினைவில் கொள்ள வேண்டிய விசயங்கள்.

நாஞ்சில் பிரதாப்™ said...

//இந்த நேரத்தில் கந்தசாமியாக மாறி, "இது போன்ற சமகால மேதை வாழ்ந்த இடத்தை மற்ற நாடுகளில் எப்படிப் பாதுகாக்கிறார்கள்" என்றெல்லாம் கருத்து கூற விரும்பவில்லை.//


ஹஹஹ...வேண்டாம்...புரிகிறது.
ராமானுஜம் வீடு மட்டுமல். பாரதியார் வாழ்ந்தவீடும் இப்படித்தான்.

ராமானுஜம் அவர்கள் புத்திசாலியாக மட்டுமே இருந்தார். பணக்காரனாக இல்லை. அதான் காரணம்.

ஈரோடு கதிர் said...

இப்படியெல்லாம் எழுதாதீங்க செந்தில்!

படக்கூடாதவங்க கண்ணுல பட்டு, பட்டா போட்டுடப்போறாங்க!

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றி!

thirumathi bs sridhar said...

புதிப்பித்தால் ஒரிஜினாலிடி போயிடுமல்லவா....

தமிழகத்தில் இதுமாதிரி ஏகப்பட்டவை உள்ளது!!!

சிவகுமாரன் said...

இராமனுஜர் என்ன சினிமாவுல நடிச்சார கூட்டம் கூடுறதுக்கு?

க.பாலாசி said...

உண்மையில வெட்கப்பட்டு சொல்றேனுங்க.. பக்கத்துல மாயவரத்தான் நானு.. இன்னும் இராமனுஜம் வாழ்ந்த வீட்ட பாத்ததில்ல.. இத்தனைக்கும் நான் ஒரு கணித விரும்பி. எல்லா நிலையிலும் கணிதத்தை விரும்பி படித்தவன். ப்ச்ச்ச்ச்..... கண்டிப்பா இன்னொரு வாய்ப்பில நழுவவிடாம பாத்திடுறேன்.

பகிர்வுக்கு நன்றிங்க செந்தில்.

Related Posts with Thumbnails