Monday, December 13, 2010

எப்பொழுது நாட்டிற்குக் கிளம்பப் போகிறாய்?


வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்கள் அடிக்கும் சந்திக்கும் கேள்வி இதுவாகத் தான் இருக்கும். என்ன தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சொந்தக் காற்றிற்கு ஏங்குபவர்கள் தான் அதிகம். நான் இந்தக் கேள்வியைச் சந்திக்கும் பொழுது "நான்கைந்து வருடம். என்னை வேறொரு இடத்திற்கு மாற்றாமலோ இந்தியாவிற்கு அனுப்பாமலோ இருக்கும் வரை" என்று தான் கூறியிருக்கிறேன். அதற்கு "நானும் இதையே தான் இருபத்தைந்து வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்" என்பார்கள்.

இதோ வந்துவிடுகிறேன் என்று வெளிநாட்டிற்குக் கிளம்புபவர்கள் ஏன் அவ்வளவு சீக்கிரம் தாய்நாட்டிற்குத் திரும்பாமல் இருக்கிறார்கள்?

அலுவலகத்தில் இருந்து அனுப்புகிறார்கள், கூடிய விரைவில் பணம் பார்க்கலாம், திரையில் மட்டுமே பார்த்து வந்த வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவித்துப் பார்க்க ஆசை போன்ற காரணங்களுக்காகச் செல்பவர்களைப் பற்றித் தான் இந்தக் கட்டுரை. வறுமை, வேலையின்மை, கடன் போன்ற  காரணங்களுக்காக வளைகுடா, கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் அன்பர்களை இங்கே குறிப்பிடவில்லை. இவர்கள் சந்திக்கும் நிலையைப் பற்றி வேறொரு கட்டுரையில்..

நாட்டிற்குத் திரும்பும் ஆசையுடன் வரும் அன்பர்களுள் பலர் தேடுவது அவர்கள் விட்டுச் சென்ற நாட்டை, நகரத்தை. ஆனால் அவர்களை வரவேற்கும் முதல் விசயம் எகிறி நிற்கும் செலவுகள். வீட்டு வாடகையில் ஆரம்பித்து, வாகனச் செலவு, உணவகங்களில் விலைப்பட்டியல், ஓட்டுனர் வாடகை என கூரையைப் பிய்த்துக் கொண்டு செல்லும் விசயங்கள் ஏராளம்.

கடந்த இரண்டாண்டில் ஆறு முறை இந்தியா வந்தாலும், சென்னை சென்றது இந்த நவம்பரில் மட்டும் தான். சென்னையில் ஒரு வாரம் தங்கியதில் எனக்கு முதலில் சுட்டது எகிறி நிற்கும் வீட்டு வாடகை. 8000 ரூபாய் வாடகையில் கிடைத்த 2BHK ப்ளாட்கள் இப்பொழுது 12000 ரூபாயில். கார் பார்க்கிங் வசதியிருந்தால் மேலும் 2000 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளலாம். சென்னையிலேயே பல வருடங்கள் இருந்த எனக்கு சப்பைத் தண்ணிர் ஒரு அதிர்ச்சியான விசயமல்ல. [ என் மகனின் பள்ளிப்படிப்பிற்கு இந்தியா வந்துவிடவேண்டும் என்பது தான் என் ஆசை. அப்படி வரவேண்டும் என்றால் எந்தப் பாக்கத்தில், பேட்டையில் தங்குவது, அடுக்குமாடி வீடுகள் என்ன விலைக்கு விற்கின்றன, வாடகைக்குக் கிடைக்கின்றன என்றெல்லாம் பார்க்க வேண்டும் என்பதும் தான் இந்த விஜயத்தின் குறிக்கோள்களில் ஒன்று ]

முன்பு வாடகை வீட்டில் இருந்தது போல மீண்டும் இருந்துவிட்டுப் போக வேண்டியது தானே என்று, சென்னையைப் பற்றித் தெரிந்தவர்கள் எவரும் கூறமாட்டார்கள். வெளிநாடுகளில் வாடகை வீட்டு வாழ்க்கையைப் பற்றி ஏற்கனவே இந்தப் பதிவில் எழுதியுள்ளேன். வெளிநாட்டில் பிக்கல் புடுங்கல் இல்லாமல் வாழ்ந்தவர்களுக்கு, சென்னையில் வீட்டு உரிமையாளரின் புடுங்கலே போதும் அதிர்ச்சியை ஏற்படுத்த. வாடகை வீட்டிலேயே வாழலாம் என்றால் கிடைக்கப் போகும் / எதிர்பார்க்கும் சம்பளத்திற்கு ஏற்ப நல்ல வீடு கிடைக்க வேண்டுமே. வெளிநாட்டில் வாடகை வீட்டில் அனுபவிக்கும் வசதிகளை சென்னையில் பெற வேண்டும் என்றால் குறைந்தது 15000 முதல் 20000 வரை வாடகை கொடுக்க வேண்டியதிருக்கும். இது 2010ல். இந்த அளவு வாடகை கொடுக்க வேண்டும் என்றால் 50000 மேல் சம்பளம் வாங்கியாக வேண்டும். 

இங்கே ஒரு உண்மை என்னவென்றால், அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு இந்த அளவிற்குச் சம்பளத்துடன் வேலை கிடைக்குமா என்பதே!! இன்னொரு உண்மை, வெளிநாட்டை விட இந்தியாவில் வேலை அதிகம். சம்பளமும் குறைவு வேலையும் அதிகம் என்றால் யார் எளிதில் வரத் தயாராவார்கள்?

அடுத்து.. உணவகங்கள், போக்குவரத்து போன்றவை. சென்னை தி.நகரில் உள்ள ஒரு பவனில் ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸின் விலை 30/- இங்கே அமீரகத்தில், அதே பவனின் கிளை உணவகத்தில் 3 திர்ஹாம் (36 ரூபாய்). பெரும்பாலான பொருட்கள் அனைத்தும் இது போன்றே விலையில். போக்குவரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் ஆட்டோவில் கேட்கப்படும் கட்டணம் ஏறக்குறைய அமீரகத்தில் டாக்ஸியில் கொடுக்கும் வாடகைக்கு இணையாக உள்ளது. போரூரில் இருந்து தி.நகரிற்கு 300 ரூபாய் கேட்கப்பட்டது. இதே தொலைவை இங்கே அமீரகத்தில் 30 திர்ஹாமிற்குள் முடித்துவிடலாம். [ இந்த ஒப்பீடுகள் சென்னை போன்ற நகரிற்குக் குடிபெயர்வதற்கு முன்பு கணக்கில் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இந்த ஊர் ஒசத்தி என்று கூறுவதற்காக அல்ல ]. சென்னையில் வாழும் ஆட்டோ ஓட்டுனர்களும் வாழ்க்கை நடத்தத் தானே வேண்டும். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மட்டும் தனிப்பதிவாக்கலாம்.

சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்களுள் பலர் (நான் உட்பட) சொல்லும் முக்கியமான காரணம் நல்ல கல்வி, குழந்தைகளுக்குக் கிடைக்கும் எக்ஸ்போஸர். இலட்சத்தைத் தொடவிருக்கும் நன்கொடை, அதிகமான கட்டணம் என்ற ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் சென்னைக்கு ஜெ போடும் முதல் காரணம் இது தான். அட நாங்கெல்லாம் வளரலியா, படிக்கலியா என்றால் அடுத்த காரணம் வேலைவாய்ப்பு. சொந்தக்காலில் நிற்பது, ஊரில் உள்ள நிறுவனங்களில் வேலை போன்ற விசயங்கள் எல்லாம் இருந்தாலும் சென்னை நோக்கி வரவழைக்கும் விசயத்தில் இரண்டாம் இடத்தில் வேலைவாய்ப்பு. நல்ல படிப்பு, அனுபவம் உள்ளவர்கள், திறமையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தயார் செய்து வைத்திருந்தால் அயல்நாட்டிற்கு இணையான சம்பளம் கிடைக்கும்.

ஆனால்??

வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்குத் திரும்ப மனதளவில் தயாராக வேண்டும். அதற்கு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ நேரில் சென்று நிலவரம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். இத்தனை கஷ்டப்பட்டு சென்னைக்குச் செல்ல வேண்டுமா என்றால்.. தேவையில்லை.

வெளிநாடு அளவிற்கு இல்லாவிட்டாலும் போதிய வசதிகள் நம் ஊர்களில் கிடைக்க ஆரம்பித்து பல வருடங்களாகின்றன. தமிழகத்தின் ஏராளமான சாலைகள் நான்கு வழிப்பாதைகளாக மாறிவருகின்றன. சும்மா சொல்லக்கூடாது. நம் ஊரில் மேம்பட்ட சாலைகளில் பயனிக்கும் அனுபவம் வெளிநாடுகளில் கிடைக்காது. அழகாக மலையையும் தோப்புயும் வயல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே பயணிப்பது ஒரு தனி அனுபவம் தான். அது வேறொரு பதிவில்.. (அப்பா.. எத்தனை பதிவு எழுத வேண்டியிருக்கிறது..). பல நல்ல தொழிற்சாலைகள் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களிலும் வர ஆரம்பித்திருப்பது நல்ல விசயம். சென்னையில் 60 ஆயிரம் சம்பளமும், பொள்ளாச்சியில் 30 ஆயிரம் சம்பளமும், துபாயில் ஒரு இலட்ச ரூபாய் (8000 திர்ஹாம்) சம்பளமும் ஒன்று தான்!!

ஊரிற்குத் திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தால் நல்லது. நம் ஊர் அப்படியே இருக்கிறது என்று நினைத்திருப்பவர்களுக்கு.. சாரிங்க.

12 comments:

வானம்பாடிகள் said...

வாங்க வாங்க:)

Chitra said...

வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்குத் திரும்ப மனதளவில் தயாராக வேண்டும். அதற்கு வருடத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ நேரில் சென்று நிலவரம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.


....நல்ல ஆலோசனை.

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நல்ல பதிவு,
4ஆம் தேதிவரை இங்கே தான்,விலைவாசி கிட்டத்தட்ட நான்கு வருடங்களில் ஐந்து மடங்கு எகிறிப்போய்விட்டது,ஆட்டோவே பிடிப்பதில்லை,வாயில் 4மடங்கு அதிகமாகவே கேட்கின்றனர்,உதாரணம் 5கிமீ 150ரூபாய்.கால் டாக்ஸி தேவலை.
உணவு பொருட்களில் அமீரகத்தில் கிடைக்கும் முதல் தரமான மளிகை காய்கறி பழம் போன்ற பொருட்களை அதே விலை கொடுத்து மூன்றாம் தரமான கலப்பட பொருட்களை வாங்கி வர வேண்டியுள்ளது.என் பகுதியான பம்மலில் ஒரு கிரவுண்டின் விலை 70 ல்ட்சம் வரை,அதுவும் கேள்விப்பட்டவுடன் பில்டர்கள் 80 லட்சம் வரை கொடுத்து உடனே வாங்கிவிடுகின்றனர்.மிகப்பெரிய எகனாமிஸ்டுகள் கூட மலைத்துபோகும் மாற்றம்,எங்கு கொண்டு போய் விடுமோ?

ஹுஸைனம்மா said...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் எல்லாரையும் வாட்டும் விஷயங்கள். இதே மாதிரி சீக்கிரம் இந்தியாவில செட்டிலாகணும்க்கிற ஆசையோட இந்த முறை ஊருக்குப் போய் நிலைமையப் பரிசீலிச்சு வந்த நான் கொஞ்சம் அதிர்ச்சியோடத்தான் திரும்பி வந்தேன்.

இதே அளவு செலவு செஞ்சு இந்தியாவில் இருப்பதைவிட, அதே செலவில் சுத்தமான காற்று, சுகாதாரமான சுற்றுச்சூழல், பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் வெளிநாடுகளில் வாழ்ந்துவிடலாம் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும்...

☀நான் ஆதவன்☀ said...

+1 தலைவரே

க.பாலாசி said...

அடடா.. ரொம்ப நாளைக்கப்பறம்.. இந்த சென்னை வாழ்க்கை எல்லோருக்கும் ஒத்துப்போகுமான்னு தெரியல... கொஞ்சநாள் தங்குனதுக்கே எத்தனையோ இடுகை எழுதத்தோணும்... ம்ம்.. பாருங்க...

ஈரோடு கதிர் said...

||வெளிநாட்டில் இருந்து சென்னை போன்ற பெருநகரத்திற்குத் திரும்ப ||

அப்போ,
எப்படியும் சொந்த ஊருக்கு திரும்பற எண்ணமில்ல!

:))))

ஈரோடு கதிர் said...

நகரத்துல கிடைக்கின்ற சில கிராமத்துக்கு எட்டிட்டா, அது போதும், எல்லாம் மாறும்!!!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ வானம்பாடிகள்,

;)

@ சித்ரா,

நன்றிங்க.

@ கீதப்பிரியன்,

நீங்கள் கூறுவது முழுவதும் உண்மை. எங்கே செல்கிறது இந்தப் பாதை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ ஹூசைனம்மா,

சரியா சொல்லியிருக்கீங்க. இதே எண்ணம் பலரிற்கும்.ம்ம்.. பார்ப்போம்.

@ ஆதவன்,

நன்றிங்க.

@ க.பாலாசி,

ஆமாங்க. எழுதறதுக்கு நிறையா இருக்கு. ஆனா என்ன கருத்து கந்தசாமி ஆக வேண்டியதிருக்கும் ;)

@ கதிர்,

ஊருக்கு வந்திடனும்னு ஆசை தான்.. பார்ப்போம்.

நகரத்தில் கிடைக்கும் எல்லாம் கிராமத்திற்கு வரும் அந்த நாள் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டிருக்கேன். பார்ப்போம்.

ILA(@)இளா said...

நமக்கு சொந்த ஊரு சங்ககிரி பக்கமுங்க. சென்னை, பெங்களூருல இருக்கிறதுக்கு நான் அமெரிக்காவுலேயே இருந்துக்கலாம்னு இருக்கேங்க. காரணம், விலைவாசி..

thirumathi bs sridhar said...

நீங்க வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருவதற்குண்டான பிரச்சனைகளை புலம்பி தீர்த்துட்டீங்க,நாங்க வ.இந்தியாவிலிருந்து புறப்படவும் அதே.............

Related Posts with Thumbnails