Friday, July 31, 2009

வாய்மையும் இலட்சங்களும்!

உங்கள் கணவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றால், அடுத்தவருடன் உறவு கொள்வீர்களா?"

கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான தொலைக்காட்சி நேயர்கள் முன்னிலையில் ஒரு பெண்ணிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது!

அது... 'சச் கா சாம்னா' என்ற ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில்!

"உண்மையைப் பேசுங்கள் ஒரு கோடியை வெல்லுங்கள்" என்ற விளம்பரத்துடன் வரும் இந்த நிகழ்ச்சி, இன்று நம் நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களைக் எழுப்பியுள்ளது.

'சச் கா சாம்னா' (Sacch Ka Saamna) என்றால் 'உண்மையைச் சந்தியுங்கள்' என்று பொருள்.

அமெரிக்காவில் மிகப் பிரபலமாக திகழ்ந்து, அங்கேயும் சர்ச்சைக்குள்ளான 'தி முமென்ட் ஆஃப் ட்ரூத்' (The Moment of Truth) என்ற ரியாலிட்டி ஷோவின் தழுவல் தான் 'சச் கா சாம்னா'.

பால்ய பருவத்தில் இருந்து சிநேகிதர்களாக வலம் வந்த சச்சின் - காம்ளி நட்பை திடீரென கனமாக அசைத்துப் பார்த்தது, பவுல்ட் ஆக்க முனைந்ததே இந்நிகழ்ச்சிதான்.

இந்த ரியாலிட்டி ஷோவில் கேமராவுக்கு முன்பு அமர்வதற்கு முன்னதாக, போட்டியில் பங்கேற்கும் நபரிடம் 'பாலிகிராப்' (polygraph) கருவி மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும். குற்றவாளிகளிடம் இருந்து உண்மையைக் கண்டறிவதற்கு போலீஸார் நடத்துவார்களே அதுபோலத்தான். மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்படும். கேள்விக்கான பதிலைச் சொல்லும் போது ஏற்படும் இதயத் துடிப்பின் மாறுதல்களை வைத்து, போட்டியாளர் சொல்வது உண்மையா பொய்யா என்று முடிவுசெய்யப்படும். கேட்கப்படும் கேள்விகளும், அளித்த பதில்களும் போட்டியாளரின் நினைவில் இருக்காது.

மேலே சொன்ன கேள்வியை எதிர்கொண்டது திருமதி. ஸ்மிதா மிதாய். அவர் எதிர்கொண்ட அனைத்து விதமான கேள்விகளுக்கும் நன்றாக பதிலளித்து வந்தவர் சோதனைக் கட்டத்தை அடைந்தார்.

அவரிடம் கேட்ட 10வது கேள்வி,

"உங்கள் கணவரை கொல்ல வேண்டும் என்று என்றாவது நினைத்ததுண்டா?"
"ஆம், நினைத்ததுண்டு! அதிகமாகக் குடிக்கிறார் என்பதால் அப்படி நினைத்ததுண்டு"
பாலிகிராப் சோதனையின் முடிவு, ஸ்மிதா சொல்வது உண்மையே! அரங்கம் அதிர்ச்சியடைகிறது. நேரில் நிகழ்ச்சியைப் பார்க்கும் கணவரின் கண்கள் கலங்குகின்றன!

11வது கேள்வி..
"உங்கள் திருமண வாழ்க்கையைத் தொடர்வது உங்கள் குழந்தைகளுக்காகத் தான். சரியா?
"இல்லை. அப்படி ஒரு எண்ணம் இது வரை வந்ததில்லை.."
பாலிகிராப் சோதனையின் முடிவு, ஸ்மிதா சொல்வது உண்மையே! நேரில் பார்க்கும் கணவருக்கோ நிம்மதிப் பெருமூச்சு!

12வது கேள்வி நான் மேலே குறிப்பிட்டது..
"உங்கள் கணவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றால் அடுத்தவருடன் உறவு கொள்வீர்களா?"
தொலைக்காட்சியைப் பார்க்கும் நமக்கு " அடப்பாவிகளா! என்னவெல்லாம் கேட்கிறானுக பாரேன்.." என்று ஆவல் கூடுகிறது (கண்டிப்பாக இந்தக் கேள்வி அனைவரையும் உலக்கி இருக்கும் என்று நினைக்கிறேன்) அவர் கூறவிருக்கும் பதிலை எதிர் நோக்கி..

"இல்லை" என்றார் ஸ்மிதா.
"தவறு. ஸ்மிதா பொய் கூறுகிறார்" என்றது பாலிகிராப் முடிவு.
"இல்லை. அப்படி இருக்க வாய்ப்பில்லை" என்றார் ஸ்மிதா..
"பாலிகிராப் முடிவு பொய் என்று கூறியதால், நீங்கள் இதுவரை வென்ற 10 லட்சத்தையும் இழக்கிறீர்கள்" என்று முடிக்கிறார் நிகழ்ச்சியைக் தொகுக்கும் ராஜீவ்.
ஸ்மிதாவின் கணவர் கண்ணாடியைக் கழட்டி துடைக்கிறார் கண்ணீரை!!

அடுத்த நாள் அலுவலகத்தில் இதே பேச்சுத் தான். எப்படி இப்படிக் கேட்கிறார்கள்? இதே கேள்வியை நம்மிடம் கேட்டால் என்ன சொல்வோம் என்பது போன்ற விவாதங்கள்.

ஸ்மிதா மிதாய் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். தான் கூறும் பதில்களுக்கு வாழ்நாள் முழுவதும் பதிலளிக்க வேண்டிய சமூக சூழ்நிலை!

**********************


பிறகொரு நாள் கலந்து கொண்ட "யூசூஃப் ஹூசைன்" என்ற இந்தி நடிகரிடம் கேட்ட கேள்விகள் இன்னும் விபரீதமானவை. இவர் மூன்று முறை விவாகரத்து செய்தவர். தற்போது தனது துணைவியோடு சேர்ந்து வாழ்கிறார் ( லிவிங்-டுகெதர் ). இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரது பதில் பெட்டியில்..

1. உங்க வயச சொல்றதுக்கு தயக்கம் காட்டுவீங்களா? (ஆம்) ( அவருக்கு வயது 60 இருக்கும்)
2. உங்க மெத்தை விரிப்பை நீங்களே மடிக்கும் பழக்கமுள்ளவரா? (ஆம்)
3. உங்களுக்கு பாராட்டு கிடைக்கலன்னா வருத்தப் படுவீங்களா? ( ஆம் ) ( மனித இயல்பு தானே! )
4. உங்க கனவுக் கன்னிக்காக காத்திருக்கிறீர்களா? ( ஆம்) ( அவர் நாலாவது பெண்ணுடன் வாழ்கிறார் என்பதை நினைவில் கொள்க! )
5. உங்க குடும்பத்துக்கு காசு அனுப்பறத விட இன்னும் அதிகமா செய்திருக்கலாம்னு நீங்க நினைக்கறீங்களா? (இல்லை )
6. உங்க மூன்று திருமண வாழ்க்கையின் முறிவைத் தடுக்க ஓரளவாவது முயன்றதுண்டா? ( இல்லை )
7. உங்களுக்கு 6 சகோதரர்கள் என்றீர்களே, நீங்க தான் உங்க அம்மாவுக்கு சிறந்த மகன்னு நினைத்ததுண்டா? ( ஆம் )
8. நீங்கள் விலைமாதருடன் உறவு கொண்டதுண்டா? (ஆம் )
9. திருமணம் செய்தாக வேண்டும் என்று வற்புறுத்தினால் உங்கள் துணைவியை விட்டு விடுவீர்களா? (ஆம் )

இப்படி அனைத்து கேள்விகளுக்கு இயல்பாக (?? ) பதிலளித்த ஹூசைன் மாட்டிக் கொண்டது..

13. உங்கள் மகளுக்கு நல்ல தந்தையாக இருந்திருக்கிறீர்களா? என்ற கேள்வியில்

"ஆம்" என்ற அவரது பதில் "தவறு" என்றது பாலிகிராப்! அவருக்கும் நேரில் பார்க்கும் அவரது மகளிற்கும் அதிர்ச்சி! நிகழ்ச்சி முடிவடைகிறது.
**************************************

இப்படி ஒரு நிகழ்ச்சி தேவைதானா? நம் நாட்டின் பண்பாடு என்னாவது? குடும்ப விவகாரத்தைக் கோடிக்கணக்கானோர் பார்க்கச் சபைக்குக் கொண்டுவருவது சரியா? என்று ஒரு தரப்பினரும், "பண்பாடு, கலாச்சாரம் என்பதெல்லாம் சுத்த வாயளவுப் பேச்சு. எங்க தான் தப்பு நடக்காமல் இருக்கிறது" என்று மற்றொரு தரப்பினரும் வாதிட...

"ஒரு கருவியின் முடிவை வைத்து ஒருவரின் நற்குணத்தைச் சீண்டுவது சரியா?" என்றும் விவாதங்கள் பரவலாக இருக்கிறது. (தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் இந்நிகழ்ச்சி மிகப் பிரபலம்) பணத்துக்கா எத்தகைய பதிலையும் சஞ்சலமில்லாமல் கூறும் போக்கு அதிகரிக்கலாம். "லட்சங்களில் பரிசுப் பணம் வாங்குவோர்க்குக் கிடைக்கும் விளம்பரம்" கண்டிப்பாக எப்படி சஞ்சலமில்லாமல் பதில் (பொய்) சொல்வது என்பதையே ஊக்குவிக்கும்.

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்."

என்று திருவள்ளுவர் கூறியபடி பார்த்தால், 'குடும்பத்துக்கோ சமூகத்துக்கோ தீமை விளைவிக்காத சொல்லைக் கூறுவதே சரி!'

"பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"

போன்ற வாழ்க்கைக் கோட்பாடுகள் எல்லாம் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ, நிகழ்ச்சியை வடிவமைத்த வெளிநாட்டினருக்கோ தெரியுமா? என்பது சமூக ஆர்வலர்கள் சிலரது கேள்வி.
இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் கடந்த வாரம் கோரிக்கை எழுப்பப்பட்டது. மாநிலங்களவையில் இது தொடர்பாக பேசிய சமாஜ்வாடி உறுப்பினர் கமால் அக்தர், "இந்தியக் கலாசாரத்துக்கு எதிரான இந்நிகச்சியை தடை செய்ய வேண்டும். கணவன் - மனைவி உறைவையே சிதைத்துவிடும் அளவுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்," என்றார். இதற்கு பி.ஜே.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க முன்வந்தது.

இந்தச் சூழலில், தற்போது "உண்மையைப் பேசச் சொல்லும் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய முடியாது," என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.

சச் கா சாம்னாவுக்கு தடைவிதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், "இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியால் மட்டுமே நம்முடைய கலாச்சாரம் பாதிக்கப்பட்டு விடாது," என்று கூறியிருக்கிறது.

கோர்ட் 'ஓகே' சொல்லிவிட்டதில் மகிழ்வுடன் அடுத்தகட்ட நிகழ்ச்சிகளுக்கான கேள்விகளைத் தயார் செய்து கொண்டிருக்கும் சச் கா சாம்னா நிகழ்ச்சிக் குழு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் பச்சை விளக்குக்காக காத்திருக்கிறது.

மத்திய அரசின் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி யோசிப்பதை விட்டு விட்டு, உயர் நீதிமன்றம் சொன்ன ஒரு விஷயத்தை மக்கள் ஃபாலோ பண்ணலாமே என்கின்றனர், நடுநிலையாளர்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுதாரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அப்படி என்ன அறிவுரைச் சொன்னது..?

"இது காந்தியின் பூமி. ஆனால் எவரும் காந்தியை பின்பற்றுவதில்லை என்றே தெரிகிறது. காந்தியின் கொள்கையான 'தீயனவற்றைப் பார்க்காதே' என்பதை கடைபிடியுங்கள். நீங்கள் ஏன் டி.வி.யை ஆஃப் செய்யக் கூடாது?"
*****************************************************************
அடுத்தவர் விடயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ள நமக்கென்ன இன்னொரு விறுவிறுப்பான (??) நிகழ்ச்சி கிடைத்திருக்கிறது. அவ்வளவே!!
******************************************************************
உங்கள் கருத்துகளை கீழே பகிரவும். இந்தப் பதிவு பிடித்திருந்தால் தமிழிஷ்லயும், தமிழ்மணத்திலும் வாக்களியுங்கள்!

Tuesday, July 28, 2009

அய்ய்ய்ய்! கூகுள்!!

நாம் வழக்கமாக எதற்கெல்லாம் இணையத்தைப் பயன்படுத்துகிறோம்?

மின்னஞ்சல் அனுப்ப - பெற, செய்திகளைத் தெரிந்து கொள்ள, நண்பர்களுடன் உரையாட (சாட் செய்ய ), ஏதாவது தகவலைத் தேட, படங்கள் மற்றும் காணொளியைப் பார்க்க போன்றவற்றிற்காகப் பயன்படுத்துகிறோம்.

இன்னும் வலைப்பதிவர்கள் என்றால், பின்னூட்டம் வந்துள்ளதா என்பதை மின்னஞ்சலில் தெரிந்து கொள்ள, நாம் தொடரும் (ஃபாலோ) வலைத்தளங்களில் ஏதாவது புதிய பதிவுகள் வந்துள்ளதா என்பதைப் பார்க்க, மற்றும் பதிவுகளில் பின்னூட்டம் இட... என்று சொல்லலாம்.

இவை அனைத்தையும் நாம் எப்படி செய்கிறோம்?

* ஜி-மெயிலிற்கு ஒரு சாளரம் ( விண்டோ )
* செய்திகளைப் பார்க்க ஒரு சாளரம்
* தகவல்களைத் தேட ஒரு சாளரம்
* பின்னூட்டம் இட "அழகி" போன்ற மென்பொருளையோ ஜி-மெயிலையோ பயன்படுத்துகிறோம்.
* நாம் தொடரும் வலைத்தளங்களில் புதிய பதிவுகள் வந்துள்ளதா என்பதைப் பார்க்க ஒரு சாளரம்..

வீட்டில் இருக்கிறோம் என்றால் இத்தனை சாளரங்களைத் திறந்து வைப்பது சாத்தியம். ஆனால், நாம் அலுவலகத்தில் இருக்கிறோம் என்றால் என்ன செய்வது? நம்மில் பெரும்பாலானோர் பின்னூட்டங்களையும், பதிவுகளையும் படிப்பது அலுவத்தில் தான் என்பது வேறு விடயம் :)

இது போல பல சேவைகளை அளிப்பதே ஐ-கூகுளின் வேலை!! ஒரே ஒரு சாளரம் மட்டும் திறந்து வைத்தால் போதும்!

எப்படி?
வழக்கம் போல கூகுள் தளத்திற்குச் செல்லவும். அங்கே ஐ-கூகுளில் தொடுப்பை அழுத்தவும். பிறகு உங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்தி உள்ளே செல்லவும்.

நீங்கள் கீழே பார்ப்பது எனது ஐ-கூகுள் வாசலைத்தான்! நான் என்னென்ன சேவைகளைச் (விட்ஜட் ) சேர்த்துள்ளேன்?

1. தேடுதளம் 2. செய்திகள் தமிழில் 3. தமிழில் எழுதும் சேவை 4. ஜி-மெயில் மின்னஞ்சல் 6. கூகுள் ரீடர் 7. கூகுள் சாட் 8. எகனாமிக் டைம்ஸ் செய்திகள் 9. பார்க்க வேண்டிய இடங்கள் 10. வானிலை 11. சி.என்.என். செய்திகள் 12. யூ-டியூப் 13. நேரம்

5. இந்த இடத்தில் சொடுக்கினால் உங்களுக்கு வேறு என்ன சேவைகள் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

(படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கவும்)


உங்கள் "படிப்பவை பட்டியலில்" (ரீடர்) இருந்து படிக்க ரீடர் (6) என்ற தொடுப்பை சொடுக்கினால் போதும், கீழே உள்ளது போல ஒரு பட்டியல் வந்துவிடும். நீங்கள் விரும்பும் பதிவர் என்றால் அங்கே சென்று மீ த பஸ்ட் சொல்ல வேண்டியது தான் :))


ஐ-கூகுளில் வாசலை உங்கள் தேவைக்கேட்ப வண்ணமயமாக்கலாம்..இயற்கை, ஓவியங்கள், நகரங்கள் என ஏகப்பட்ட வடிவங்கள் உள்ளன.உங்கள் உலக சினிமாக் கனவுக் கன்னிகள் படம் வேண்டும் என்றாலும் ஐ-கூகுளில் உள்ளது.


என்ன சொல்கிறீர்கள்? இந்த ஒரு தளம் போதும் தானே! நமது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய!!

நீங்கள் ஐ-கூகுளை ஏற்கனவே பயன்படுத்துபவராக இருந்தால் மேலும் என்னென்ன சேவைகள் உள்ளன என்று கூறுங்கள். உங்களுக்கு இது புதிதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும்.

Monday, July 27, 2009

குப்பை மேடா நம் நாடு?

காலை எழுந்து உங்கள் வீட்டுக் கதவைத் திறக்கிறீர்கள். ஓர் அதிர்ச்சி! சந்தேகிக்கும் படியாக ஒரு அட்டைப்பெட்டி வீட்டின் முன்பு கிடக்கிறது. என்ன நினைப்பீர்கள்?

யார் அனுப்பி இருப்பார்கள்?

பேசும்படத்தில் கமல் அனுப்பும் அட்டைபெட்டி நினைவிற்கு வருகிறது! ஏதாவது சூனிய வேலையாக இருக்குமோ என்றும் பயப்படுகிறீர்கள். சரி என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று திறக்கிறீர்கள்.

அருவருக்கத்தக்க வகையில் வீட்டுக் குப்பை அனைத்தும் அழகாக பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது என்ன செய்வீர்கள்? காவல் நிலையத்திற்கு செல்வீர்களா அல்லது "யார்டா போட்டது"னு கத்துவீர்களா?

இதுவே அந்த குடியிருப்புப் பகுதியின் பிரபலமானவர் தான் போட்டிருக்கிறார் என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?

ஓரிரு நாட்களுக்கு முன்பு பார்த்த செய்தியின் எடுத்துக்காட்டு தான் மேலே குறிப்பிட்டது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து பிராசிலிற்கு வந்திறங்கிய கப்பலை சோதனையிட்டவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், கப்பல் முழுவதும் இங்கிலாந்தின் கழிவுகள் அடைக்கப்பட்டிந்தது. ஒன்றல்ல இரண்டல்ல 1400 டன் அளவிற்கு கழிவுகள் வந்திறங்கியதாம். நம் வீட்டிலுள்ள எல்லா பொருள்களையும் சேர்த்தால் கூட 200 கிலோவைத் தாண்டாது.
மருத்துவமனைக் கழிவுகள், பயன்படுத்திய ஆணுறைகள், மின்னனுப் பொருள்களின் கழிவுகள், இதர குப்பைகள் என அதில் இருந்தனவாம். இது அனைத்தும் மறுசுழற்சிக்காக என்ற பெயரில் அனுப்பப்பட்டவை. இப்போது பிராசில் நாடு இங்கிலாந்திடம் கண்டனத்தை தெரிவிள்ளதாம்.

இது பிராசிலில் மட்டும் நடப்பதாக எண்ண வேண்டாம்.

இது போல கழிவுகளைக் கொட்டுவதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படும்(??) நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடமாம். அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் இருந்து மறு சுழற்சிக்காக என்ற பெயரில் ஆண்டுதோறும் பெருமளவில் மின்னனுக் கழிவுகள், இதர கழிவுகள் கொட்டப்படுகிறதாம்.

இது போன்ற மின்னனுக் கழிவுகளில் இருந்து பாகங்களை பிரிப்பது மற்றும் சுத்தப்படுத்துவது என சேரிப் பகுதியான தாரவி போன்ற இடங்களில் நடக்கிறதாம்.

சென்னைக்கு எப்படி பெருங்குடியோ அது போல வளர்ந்த நாடுகளுக்கு இந்தியா என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?

இதற்கு என்ன காரணம்?

நம் நாட்டின் சட்டங்களில் இருக்கு ஓட்டை என்று கூறினாலும், வளர்ந்த நாடுகளில் இருக்கும் மின்னனு இயந்திரங்களைப் பயன்படுத்தும் போக்கு தான் மூலக்காரணம்.

புதிதாக அலைபேசி, தொலைக்காட்சிப்பெட்டி, கணினி என எந்த வகையாக பொருளாக இருந்தாலும் வாங்கியாக வேண்டும் என்ற மனநிலை. தற்பொழுது பயன்படுத்தும் பொருளை என்ன செய்வது? பயன்படுத்தப்பட்ட பொருள்கள் தான் இப்படி வளரும் நாடுகளை குப்பையாக்குகின்றன.

இந்தப் போக்கு இப்பொழுது நம் நாட்டிலும் வளர்ந்து வருகிறது. நாம் குப்பையை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய முடியும்?

* பொருளை குப்பையில் போடுவதற்கு முன்பாக யாருக்காவது தேவையிருக்கிறதா என்று யோசிக்கலாம்.
* ஒலிப்பேழைகள் (CD ) என்றால் பக்கத்தில் இருக்கும் நூலத்திலோ அல்லது நண்பர்களுக்கோ கொடுக்கலாம்.
* மறுசுழற்சிக்கென்று வைத்திருக்கும் இடங்களில் பொருள்களை கொடுக்கலாம்.

சர்வதேச அளவில், தேச அளவில் நம்மால் எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் நம் அளவில் நாட்டைக் குப்பைமேடாக மாற்றாமல் பார்த்துக் கொண்டால் நல்லது தானே!

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

Friday, July 24, 2009

மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - 2


லெஹர் 7அப் (1992 - ... ), மேங்கோ ஃப்ரூட்டி (1970s - ... ),ஜெம்ஸ் ( 1968 - ... ),நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...)கேம்லின் ( 1931 - ...),ஹீரோ பேனா (1968 - ... ), பிரில் ( 1964 - ..... ), நடராஜ் பென்சில் (1958 - ..)
************************************************************************************
வர்த்தகச் சின்னங்கள் ( பிராண்ட்ஸ்) என்றால் நாம் சிந்திப்பது ஆப்பிள், சாம்சங்க், பெப்சி, கோககோலா போன்ற நிறுவனங்களின் சின்னங்களைத் தான்.
இந்த அளவிற்குப் பெரிய நிறுவனங்களின் பொருட்களாக இல்லாவிட்டாலும் ஒரு சிலவற்றின் மதிப்பு மட்டும் குறைவதே இல்லை.

அந்த வரிசையில் நாம் காணப்போகும் வர்த்தகச் சின்னங்கள் கீழே..
கேம்லின் ( 1931 - ....... )

கணிதத்தில் வரும் வடிவியல் (ஜியாமெட்ரி) என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது கேம்லின் தான். எத்தனையோ வர்த்தகச் சின்னங்கள் வந்தாலும் கேம்லினிற்குத் தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.
ஹீரோ பேனா - (1968 - ... ):

இன்றைய தேதியில் சீனத் தயாரிப்பு என்றாலே போலியாக இருக்குமோ, தரக்குறைவான பொருளோ என்று பயப்படுகிறோம். ஆனால் ஒரு பொருள் "மே-இன்-சீனா" என்றால் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு இருந்தது என்றால் அது கட்டாயமாக ஹீரோ பேனாவாகத்தான் இருக்கும்.

அதுவும் பள்ளிக்காலத்தில், "ஹீரோ பேனா" வைத்திருப்பது "பார்க்கர் பேனா" வைத்திருப்பது போல. என்ன தான் ஹீரோ பேனாவில் அதிகமாக மையைச் சேர்த்து வைக்க முடியாது என்றாலும் ரெனால்ட்டு -045 போன்ற பேனாக்கள் வந்தாலும் இதன் மதிப்பு மட்டும் குறையவே இல்லை.

********
பிரில் - ( 1964 - ..... ):

பேனாவைப் பற்றிக் கூறிவிட்டு அதில் ஊற்றும் மையைப் பற்றிக் கூறவில்லை என்றால் நன்றாகவா இருக்கும்?

பேனா மை என்றால் "பிரில்" தவிர்த்து வேறு எந்த நிறுவனமும் இல்லை என்கிற நிலை, வேற எந்தத் துறையிலாவது இருக்க முடியுமா?
பள்ளிக்கூட இறுதி நாளில், நண்பர்களின் சட்டையில் மையை அடித்ததை நினைத்து பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியில் பிரில்லுக்கும் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது :))
*********
நடராஜ் பென்சில் - (1958 - .....) :

தூர்தர்சன் காலத்தில் ஒரு விளம்பரம் வரும், "மூன்று பென்சில்களுக்கான ஓட்டப்பந்தயம் அது, மற்ற பென்சில்களின் முனை உடைந்து விடும், நடராஜ் மற்றும் முன்னேறி வெற்றியடையும்"


இன்றும் கடையில் போய் பென்சில் வாங்கினால் நமக்குக் கடைக்காரர் தருவது நடராஜ் பென்சிலைத்தான். என்ன தான் அப்சரா போன்ற போட்டி நிறுவனங்கள் இருந்தாலும் நடராஜின் மீது நமக்கு ஒரு தனிப்பற்று தான் ( நடராஜ் என்ற பெயர்க் காரணமோ?)
********
நியூட்ரின் இனிப்பு வகைகள் ( 1960s - ...... )

பச்சை நிற காகிதத்தில் சுற்றப்பட்டிருக்கும் மிட்டாய் தான் நியூட்ரின் மிட்டாய் வகைகள். எனக்குத் தெரிந்து 15 பைசாவிற்கு விற்றது.

கேட்பரீஸின் எக்ளைர்ஸ், டைரி மில்க் போன்ற மிட்டாய் வகைகள் விலை அதிகமானதால், நியூட்ரின் இனிப்பு வகைகள் எளியவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதாக இருந்தது.

ஆசை படம் வந்த நேரத்தில் இருந்து இதே நிறுவனத்தின் ஆசை மிட்டாயும் வெகுவாகப் பிரபலமடைந்திருந்தது.
********
ஜெம்ஸ் ( 1968 - .... )
"ஒரு சிறுவன் மைதானத்தில் மட்டையைப் பிடித்துக்கொண்டு இருப்பான். இன்னொரு சிறுவன் பந்தை வீச அது நேராக சிறுவனின் வாயில் போய் விழும். பார்த்தால் அவன் வீசியது ஜெம்ஸ் மிட்டாயை....". தூர்தர்சன் காலத்தில் பார்த்த அழகான விளம்பரம் இது.


எப்போதாவது ஜெம்ஸ் மிட்டாய் வாங்கும் அளவிற்கு காசு கிடைப்பதுண்டு. இந்த ஜெம்ஸ் மிட்டாய் விற்பனையில் தான் எத்தனை வர்த்தக உத்திகள். ஒரு முறை பார்த்தால் பொம்மைகளுடன் வரும், சில சமயம் பால்ரச குண்டுடன் வரும். (அது தான் நகர்த்தி நடுவில் சேர்ப்போமே.. )

கண்ணைக் கவரும் நிறத்தில் வருவதால், குழந்தைகள் மத்தியில் ஜெம்ஸிற்கு ஒரு தனி இடம் தான்.
********
லெஹர் 7அப் - (1992 - ... )
நீங்கள் ஏதாவது ஒரு வர்த்தகச் சின்னத்தை விரும்பி வரைந்ததுண்டா? நான் வரைந்ததுண்டு. 7அப் விளம்பரத்தில் வரும் பிடோ-டிடோ பொம்மையை.

இப்பொழுது எப்படி வோடபோன் விளம்பரங்கள் பிரபலமோ, அந்த அளவிற்கு அந்த விளம்பரமும் பிரபலம் தான். பிடோ-டிடோவின் துறுதுறுப்பான வடிவமைப்பே இந்த குளிர்பானத்தை விளம்பரப்படுத்தப் போதுமானதாக இருந்தது.


கோல்ட்-ஸ்பாட், டொரினோ போன்ற வர்த்தகச்சின்னங்கள் மந்தமடையத்தொடங்கிய நேரம் தான் இந்த 7அப் குளிர்பான விற்பனை சூடானது.


கோல்டு-ஸ்பாட், டொரினோ, தம்ஸ்-அப் போன்ற நிறுவனங்களை வாங்கிய பன்னாட்டு நிறுவனம் எதுவென்று தெரியுமா?


**********
மேங்கோ ஃப்ரூட்டி - (1970s - ....... )

"மேங்கோ ஃப்ரூட்டி ஃப்ரெஸ் அன் ஜூசி ".. இந்த விளம்பரம் தெரியாதவர்களே இருக்க முடியாது.
மாஸா, ஸ்லைஸ் போன்ற வர்த்தகச்சின்னங்கள் வருவதற்கு முன்பிருந்தே மாம்பழ ருசியுள்ள குளிர்பானம் என்றால் அது ஃப்ரூட்டி தான். கடும்போட்டியை சமாளித்து இன்றும் புதுப்புது வடிவங்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது.

ஏதாவது ஒரு பல்லூன் ஊதி அடி வாங்கியதுண்டா? நான் அடி வாங்கியிருக்கிறேன்... அடுத்த பதிவில்..

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்...


மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - 1

ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s), டிவிஎஸ் - 50 ( 1980 - ..), பஜாஜ் செடாக் ( 1972 - 2005), யெஸ்டி : ( 1961 - 1995 ), டிவிஎஸ் - இண்ட் சுசுகி ( 1980s - 1990s )...
**************************************************************************************
உங்களோட சின்ன வயசப் பத்தி சொல்லச் சொன்னா, உங்களுக்கு என்னென்ன நினைவிற்கு வரும்?

சின்ன வயசு விளையாட்டுக்கள், நண்பர்கள், விழாக்கள், அப்புறம்...... நாம் பயன்படுத்திய பொருட்கள் அல்லது வர்த்தகச் சின்னங்கள் (பிராண்டுகள்). ஆமாங்க, நாம பார்த்துப் பழக்கப்பட்ட மறக்க முடியாத வர்த்தகச்சின்னங்கள் பத்தி தான் இங்கே பார்க்க போறோம்..

1. ஹெர்குலஸ் மிதிவண்டி ( 1950s - 1990s)

நமக்கு இந்த வண்டி அறிமுகம் ஆனதே எங்க வூட்டுக்கு வர்ற பால்காரர் மூலமாத்தான். அவரு வண்டி கைப்பிடில பூச்சுத்தி வச்சிருப்பாரு. அதனால விவரம் தெரியற வரைக்கும் இதுக்கு பேரு பூவண்டி.

இந்த வண்டில இருந்த வசதியப் பத்தி சொல்லனும்னா, குரங்குப் பெடல் போடலாம், டபுள்ஸ், டிரிபுள்ஸ் போகலாம், என்ன அடி அடிச்சாலும் தாங்கும். எத்தனையோ வீடுகள்ல குழந்தைகள உட்கார வைக்கற அளவுக்கு ஒரு சீட்டும் வச்சிருப்பங்க. இந்த வண்டில விளக்கு எரியலன்னு எங்கூரு காவல் நிலையத்துல பிடிச்சு வைச்சுக்கறது கூட நடக்கும் :))

இந்த வண்டியோட செல்வாக்கு ஹீரோ ரேஞ்சர், BSA SLR எல்லாம் வர ஆரம்பிச்சவுடனே குறைய ஆரம்பிச்சிருச்சு.. ஆனாலும் நல்ல நேரம் எம்.ஜி.ஆர்ல ஆரம்பிச்சு, தலைவரோட அண்ணாமலை வரைக்கும் வந்த வண்டிங்கரங்காட்டி இதுக்கு எப்பவுமே நம்ம மனசுல ஒரு இடம் இருக்கத்தாங்க செய்யுது.

"ஓரம்போ.. ருக்குமணி வண்டி வருது" பாட்டைப் பொது இடங்கள்ல பாடத் தடை செஞ்சிருந்தாங்களாம். அந்த அளவுக்கு சைக்கிள் பிரபலமா இருந்ததுங்கறத இப்ப நம்ப முடியுதா?
*********
2. டிவிஎஸ் - 50 ( 1980 - ....)

"நம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL", இந்த விளம்பரத்தப் பத்தி சொல்ல வேண்டியதில்லை.

இதுக்கு முன்னாடி இருந்த லூனா, சுவேகா மாதிரி வண்டியெல்லாம் என்ன முறுக்கினாலும் 30 கிமி வேகத்தைத் தாண்டாது. அந்த நேரத்துல தான் நம்ம டிவிஎஸ் - 50 வந்ததாம்.

நம்ம ஊருக்காரங்களக் கேட்டாத் தெரியும். மூனு சிலிண்டர ஏத்தி வச்சிட்டு, பின்னாடி ஒரு துணிக்கட்டையும் வச்சிட்டு போவாங்க பாருங்க. இப்ப இருக்கற மினிடார் (MINIDOR) செய்யற வேலைய இது செய்யும்.


ஒரு சின்னக் குடும்பத்துல இருக்கற அத்தனை பேரையும் ஏத்திட்டுப் போக முடியும். காலப்போக்குல டிவிஎஸ் - 50, XL SUPERஆ மாறிடிச்சு. இப்போதும் திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் இந்த வண்டியைப் பார்க்க முடியும்.

*******
3. பஜாஜ் செடாக் ( 1972 - 2005)

"ஹமாரா பஜாஜ்".. இந்த வாசகத்தக் கேட்காத ஆளே இருக்க முடியாதுன்ன நினைக்கிறேன்.

நம்ம ஊருல வங்கி மானேஜர், ஒரு சில பணக்காரங்க மட்டும் தான் இந்த வண்டிய வச்சிருக்காங்கனு நினைச்சுட்டு இருந்தேன், நான் ஒருமுறை ஹைதராபாத் போகிற வரைக்கும். நம்ம தமிழகத்தத் தவிர்த்துட்டுப் பார்த்தா மற்ற மாநிலங்கள்ல அதிகமா பார்க்க முடியறது இந்த வண்டி தாங்க.

"ஹமாரா பஜாஜ்"ங்கர வர்த்தக வசனத்துக்கு ஏத்த மாதிரி, ஒரு சின்ன குடும்ப முழுக்க இந்த வண்டில சவாரி செய்ய முடியும்..

நம்ம பஜாஜ் பல்சர் மற்றும் இதர 4 STROKE எஞ்சின் வண்டிக வர ஆரம்பித்த பிறகு இந்த வண்டியோட செல்வாக்கு குறைய ஆரம்பித்து விட்டது.

********

4. யெஸ்டி : ( 1961 - 1995 )

ராஜ்தூத், புல்லட் மாதிரி வண்டிகள் இருந்த போது கோலோச்சிய வண்டி தான் "யெஸ்டி". இப்ப ஒரு 40 வயதாகிறவங்களக் கேட்டுப் பாருங்க.. இந்த வண்டி தான் அப்போதைய இளைஞர்கள் விருப்பமாம்.

வண்டிய 'ஸ்டார்ட்' பண்ணவே கடினம்னாலும், இந்த வண்டி மேல மிகுந்த மோகமாம். இப்பவும், என் நண்பர் ஒருத்தர் இந்த வண்டிய பயன்படுத்தீட்டு இருக்கிறார்..
********
5. இண்ட் சுசுகி ( 1980s - 1990s )

இந்த வண்டி வந்த பிறகு தான் இருசக்கர வாகனங்களில் டிவிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு தனி இடம் கிடைத்தது. அடுத்ததாக வந்த AX-100R வரும் வரை இந்த வண்டி பிரபலமாக இருந்தது.

புன்னகை மன்னன் படத்தில் கமல், மௌன ராகம் கார்த்திக் என்று இந்த வண்டியும் மிகவும் பிரபலம் தான்.
********
என்ன தான் இப்போது எத்தனையோ இருசக்கர வாகனங்கள் வந்தாலும், மேலே குறிப்பிட்ட வர்த்தக சின்னங்களுக்கு நம் மனதில் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது.

நீங்கள் ஏதாவது ஒரு வர்த்தக சின்னத்தை அதிகமாக வரைந்ததுண்டா? நான் வரைந்ததுண்டு.. அதன் பெயர் 7ல் ஆரம்பிக்கும்.. அடுத்த பதிவில்..

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்..
மறக்க முடியாத வர்த்தகச் சின்னங்கள் - 2 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

Monday, July 20, 2009

அமீரகத்தை அசத்திய பதிவர்கள் சந்திப்பு!


அண்மையில் தமிழ்ப் பதிவுலகைக் கலக்கிய (??) சக்தியைப் பாராட்டவும் அமீரகத்தில் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடந்து நாளாகியுள்ளதாலும் ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார் "ஆசீஃப் மீரான் அண்ணாச்சி"! அமீரகத்தில் பெரும்பாலானோர்க்கு வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் விடுமுறை அறிவித்திருந்ததால், ஞாயிறன்று சந்திப்பு என முடிவு செய்யப்பட்டது.வெள்ளி, சனி இரண்டு நாட்களும் கடுமையான புழுதிக் காற்று இருந்ததால் சந்திப்பு எவ்வாறு நிகழும் என்ற ஐயம் இருந்தது. ஆனால் ஞாயிறன்று புழுதி அடங்கி இதமான காற்று வீச ஆரம்பித்தும், 45 டிகிரிக்கும் அதிகமாக இருந்த தட்பவெப்பமும் 35 டிகிரியாகக் குறைந்ததும் "அமீரக சந்திப்பு இயற்கைக்கும் தெரிந்திருக்கிறதோ" என்று எண்ணத் தோன்றியது. சந்திப்பு நிகழவிருந்த கராமா தமிழ்ப்பதிவர் பூங்காவும் மக்கள் நெருக்கடி இல்லாமல் அமைதியாகவே காட்சியளித்தது.6 மணிக்கு தொடங்க வேண்டிய சந்திப்பிற்கு கார்த்திகேயனும், அடியேனும் சென்றடைந்தது 5:30 மணிக்கு. ஆக பின்னூட்ட மொழியில் "வீ த ஃபஸ்ட் :)". சில நிமிடங்களில் கலையரசன், 'வடையுடன்' வினோத்கௌதம், சுந்தர் ராமன், நாகா ஆகியோரும் வந்தடைந்தனர். வந்தவுடனே அனைவரது பேச்சும் ஓரிரு நாட்களாக வலையுலகைக் கலக்கிக் கொண்டிருந்த சக்திவேல், ஆப்பு, ஆப்பரசன் ஆகியோரைப் பற்றித் தான். சில நிமிடங்களில் ஆசாத், சுபைர் இருவரும் தமிழ் நூல்களுடன் வந்தனர். ( அட, இது அரட்டை அரங்கம் மட்டும் இல்லப்பா...)


"வடை சூடாறுவதற்கு முன்பு அனைவரும் வந்தால் பரவாயில்லையே" என்று கலை சொல்வதற்குள் ஒரு சலசலப்பு! தூரத்தில் ஷார்ஜா சிங்கங்கள் சென்ஷி, ஆதவன், கோபிநாத் ஆகியோர் வந்தடைந்தனர். "எங்கப்பா, இரண்டு நாளா பின்னூட்டத்துல கும்மியே சிரிக்க வச்ச குசும்பனக் காணாம்"னு சென்ஷி சொல்றதுக்குள்ள அண்ணாச்சி, "குசும்பன்" சரவணன், அய்யனார் மற்றும் வாசிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் வந்தடைந்தனர்.
சூடாகிக் கிடந்த வலையுலகை சிரிப்புக் (சிந்தனைக்) கடலில் ஆழ்த்திய சக்திக்குப் பாராட்டைத் தெரிவித்துவிட்டு, பின்னூட்டத்திலேயே வயித்துவலி வரவழைத்த குசும்பனை வடைவிருந்தைத் துவக்க அழைத்தோம். இனிதே வடைவிருந்து ஆர்ம்பிக்க, பதிவர்கள் கணேஷ், சாருகேசி, கிளியனூர் இஸ்மத், வானலை வளர்தமிழ் நண்பர்கள் திருச்சி சையது, மற்றும் ஓர் அன்பரும், லியோ சுரேஷ் அவர்களும் வந்து சேர கூட்டம் களைகட்டியது.


"இங்க பாருப்பா, ஆப்பு, ஆப்பரசனோட ஐ.பி முகவரி வளைகுடா நாடுகளத்தான் காட்டுதாம். உங்கள்ல யாருப்பா ஆப்பு" என குசும்பன் ஆரம்பிக்க அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தேகமாகப் பார்க்க ஆரம்பித்தனர்.

"நீங்க ஏன் "ஆப்பு"ஆ இருக்கக் கூடாது"ன்னு சென்ஷி கேட்க, குசும்பன் "ஆஃப்" ஆனார்.

சரி, "டெல் மி எபட் யுவர்செல்ஃப்" என்று அண்ணாச்சி அனைவரிடமும் கேட்க.. ஒவ்வொருத்தராக சொல்ல ஆரம்பித்தனர்.

திடீரென்று, "நீங்க எப்படி பதிவு எழுத ஆரம்பிச்சீங்க"ன்னு கேட்க ஒவ்வொருவரும், நேரம் கிடைக்குது, சும்மா ஜாலிக்குங்கற மாதிரி பதில் சொன்னாங்க. (அப்பாடி ஆப்படிக்க யாரும் வரலை...)

"ஒரு பதிவு எப்படி இருக்கனும்"னு கிளியனூர் இஸ்மத் கேட்க,

அய்யனார் "உங்களுக்கு எது நல்ல விசயம்னு தோனுதோ அத எழுதுங்க.. சும்மா பின்னூட்டத்துக்கோ, தொடருவோர்க்கோ, வலை இதழ்களில் வருவதற்கோ எழுதாதீங்க"ன்னு சிறு சொற்பொழிவாற்றினார்.


"அப்போ ஜனரஞ்சகமா எழுதக் கூடாதா"ன்னு கலை கேட்க


"எழுதுங்க ஆனா ரொம்ப மொக்கை போடாம"ப் பாத்துக்கங்க என்றார். அண்ணாச்சி, "நான் ஒரு மொக்கைப் பதிவர் தான்"னு சொன்னது எல்லாருக்கும் தூக்கி வாரிப்போட்டது :)


இந்த சமயத்தில் பதிவர் சுல்தான் அவரது நண்பருடனும், படகு என்ற பெயரில் பதிவெழுதும் பெண்பதிவருடன் வந்தார்..

புதிய பதிவர்களை நோக்கி, "நீங்க அதிகமாப் பேசாம இருக்கீங்க.. உங்களுக்கு இந்த வலையுலகம் எப்படி இருக்கு"ன்னு அய்யனார் கேட்க, "எங்களுக்கு பிரபல பதிவர்களின் ஊக்கமளிப்பு இல்லை, உங்களைத் தொடர்பு கொள்ளத் தயக்கமா இருக்கு"ங்கற மாதிரியான பதில்கள் வந்தன.

அதற்கு சென்ஷி, குசும்பன், அய்யனார், அண்ணாச்சி அனைவரும், "இங்க பிரபல பதிவர், இளைய பதிவர், நட்சத்திரப் பதிவர் எல்லாம் கிடையாது. எல்லாரும் ஒன்னுதான்"னு சொன்னாங்க. ( பார்டா, இது கூட நல்லாயிருக்கே...)

"குழு மனப்பான்மை எல்லாம் இல்லாம அனைவரும் நல்ல பதிவுகளை எழுத வேண்டும்" என்று ஆசிஃப் அண்ணாச்சி கூறும் போது மணி 8:30ஐ நெருங்கியது. ஒவ்வொருவரும் சக பதிவர்களுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு பிரிந்தனர்.

கலந்து கொண்ட அன்பர்கள்:
1) அய்யனார்
2) ஆசாத்
3) ஆசிஃப் மீரான்
4) ஆதவன்
5) கலையரசன்
6) கார்த்திகேயன்
7) கீழை ரஸாக்
8) கிளியனூர் இஸ்மத்
9) கோபிநாத்
10) சரவணன்
11) செந்தில்வேலன்
12) சென்ஷி
13) சுந்தர் ராமன்
14) சுபைர்
15) சுல்தான்
16) நாகா
17) தினேஷ்
19) வாஹித்
18) வினோத் கௌதம்
19) படகு என்ற பெயரில் எழுதும் பெண் பதிவர்
20) சந்திரசேகர்
21) திருச்சி சையது
22) ராஜேந்திரன்
23) லியோ சுரேஷ்


சில துளிகள்:

* மொத்தமாக கலந்து கொண்ட பதிவர்கள் எண்ணிக்கை 19. விடுமுறை மற்றும் இன்னபிற காரணங்களினால் 10 பேர் வரமுடியாமல் போனது. அப்படீன்னா.. அமீரகத்தில் ஏறக்குறைய 30 தமிழ்ப்பதிவர்கள் இருக்கோமுங்கோவ்வ்வ்வ்...

* சிறப்பாக வடைவிருந்திற்கு ஏற்பாடு செய்த சுந்தர்ராமன் அவர்களுக்கு நன்றிகள் பல!

* "சிம்ரன் ஆப்பக்கடை"யின் பெயரை "ஆப்பக்கடை"யாக மாற்றியது சிம்ரன் ரசிகர்களுக்கு வருத்தமளிப்பதாக இருந்தது :(

* 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ராஜேந்திரன் அவர்கள், "இங்கே பதிவர்கள் சந்திப்பு நடப்பதை அறிந்து வந்தேன்" என்று சொன்ன போது வியப்பாக இருந்தது.

வலையுலகமும் தமிழும் பதிவர்களை மட்டும் அல்லாது வாசிப்பவர்களையும் இணைக்க வல்லது என்று நினைத்த போது.... "தமிழன்னை தன் குழந்தைகளைச் சென்றிடத்திலெல்லாம் காப்பாள்" என்றே தோன்றியது.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

Sunday, July 19, 2009

தின்னறது ஒருத்தன் காசழுவறது வேறொருத்தன்! இதுவும் பச்சைப் பேச்சு தான் மச்சி!

நீங்க அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கறீங்க.

அந்தக் குடியிருப்பில் பலர் ஒன்றோ இரண்டோ கார்களை வைத்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் உள்ளோர் கார்கள் வைத்திருப்பதைப் பார்த்து உங்களுக்கும் கார் வாங்கும் ஆசை வருகிறது.

அடுத்த நாள் குடியிருப்புச் சங்கக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஒரு அறிவிப்பு, "நமது அடுக்குமாடிக் குடியிருப்பில் கார்கள் நிறுத்த இடமில்லாததால், புதிதாக கார்களை வாங்குவோர் வெளியில் தான் நிறுத்த வேண்டும்" என்று.

உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

பலர் ஒன்றிற்கும் மேலான கார்கள் வைத்திருக்கும் போது என் காரை நிறுத்த இடமில்லையா?

அண்மையில் நடைபெற்ற ஜி-8 மாநாட்டில் சுற்றுச்சூழல் தொடர்பான நிலை தான் மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக் காட்டு.


அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளை பல கார்களை வைத்திருப்போருடன் ஒப்பிடலாம். இந்தியா, சீனா, பிராசில் போன்ற வளரும்நாடுகளை கார் வாங்க விருப்பமுள்ளோருடன் ஒப்பிடலாம்.

உலக அளவில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதும், வெப்ப வாயுக்களின் தாக்கத்தால் பூமியின் தட்பவெப்பம் அதிகரித்து வருவதும் நாம் அறிந்ததே. திடீரென்று புயலும் வெள்ளமும் வருவதும், மழையே பெய்யாத இடங்களில் மழையும், வடதுருவத்தில் பனி உருகுவதுமாக இயற்கையில் சீற்றத்திற்கு இந்த சுற்றுச்சூழல் மாசடைவதே காரணம். சென்ற நூற்றாண்டில் பூமியில் தட்பவெப்பம் சராசரியாக ஒரு டிகிரி அதிகமாகயுள்ளது.

பூமியில் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற ஆலோசிக்க நடைபெற்றது தான் ஜி-8 மாநாடு!


இதில் வளர்ந்த நாடுகள் "எல்லா நாடுகளும் வெப்ப வாயுக்கள் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்" என்று அறிவித்தது. தொழில் முன்னேற்றமும், பொருளாதார முன்னேற்றம் நேரடியாக வெப்ப வாயுக்களுடன் தொடர்புடையது நாம் அறிந்ததே! வளர்ந்த நாடுகள், சென்ற நூற்றாண்டு முழுவதும் போதுமான அளவு இயற்கை வளங்களை அழித்துவிட்டு இப்போது சட்டமிடுவதை இந்தியா போன்ற நாடுகள் வரவேற்கவில்லை!

இந்தியரின் சராசரி வெப்பவாயுக்களின் வெளியேற்றத்தை விட அமெரிக்கரின் வெளியேற்றம் 30 மடங்கு அதிகமாம். இந்த இடத்தில் அனைத்து நாடுகளுக்கும் ஒரே அளவு என்ற திட்டத்தைக் கொண்டு வருவது, தின்னது ஒருத்தன் காசழுவறது வேறொருத்தன் என்று தான் சொல்லத் தோன்றுகிறது!இந்த நிலை உலக அரங்கில் மட்டும் தானா? இந்தியாவில் எப்படி உள்ளது?
உதாரணத்திற்கு மின்சாரத் தேவையை எடுத்துக்கொள்வோம்..
சென்னை போன்ற பெருநகரின் மின்சாரத் தேவை தமிழக கிராமங்களின் மொத்த மின்சாரத் தேவையை விட அதிகமாம்!

முன்பு ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இருந்த இடத்தில் இப்போது இரண்டு. காத்தாடி மட்டும் போதும் என்ற நிலை மாறி குளிர்பதனப்பெட்டி (AC) இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை! இப்படியே நமது தேவை பெருகிக் கொண்டே செல்கிறது!
கீழே உள்ள கேள்விகளுக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

*நீங்கள் அலைபேசி மின்னூட்டியின் (Charger ) இணைப்பைத் துண்டிக்க மறந்ததுண்டா?
*வீட்டை விட்டு வெளியே வரும்போது காத்தாடி, குழல் விளக்கு போன்றவற்றை செயல்பாட்டில் விடுவதுண்டா?
*உங்கள் மின் சாதனங்களை Stand-by நிலையில் வைப்பதுண்டா?

இந்தக் கேள்விகளுக்கான பதில் ஆம் என்றால் "சுற்றுச்சூழலைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கு?" என்று யோசிப்பது நல்லது!

நம் வீட்டில், A/Cயின் பயன்பாட்டை ஒரு மணி நேரம் குறைத்துக் கொண்டாலே கிராம வீட்டின் ஒரு நாள் மின்சாரத்தேவையைப் நிறைவேற்ற முடியுமாம்.


சென்னை போன்ற நகரவாசிகளின் அதிகப்படியான மின்சாரப் பயன்பாட்டால் கிராமங்களில் மின்வெட்டு வந்தால், கிராமவாசிகளும் தின்ன'ற'து ஒருத்தன் அழுவறது வேறொருத்தன் என்று தானே சொல்வார்கள்?
சிந்திப்போமா?

பச்சைப் பேச்சு தொடரும்.

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்!

Tuesday, July 14, 2009

மலையோடு உறவாடி காற்றோடு விளையாடி!

"மாப்ளே, என்ன தான் சொல்லு ஸ்கூல் லைஃப் மாதிரி வராதுடா.."

நண்பர்கள சந்திக்கும் போது நாம சொல்ற வழக்கமான வார்த்தைகள் இவை. அதுவும் ஆரம்ப கால நினைவுகள் இருக்கே! அதைப்பற்றி இந்த தொடர் பதிவு எழுத என்னை அழைத்த நண்பர் வினோத்துக்கு நன்றி!

ஆரம்ப கால நினைவகள அசைப்போட்டா முதல்ல வர்றது எங்க தாத்தா பாட்டி தாங்க! ஏன்னா நான் ரெண்டாவது வரைக்கும் அவங்க கவனிப்புல மேட்டுப்பாளையத்துல தான் படிச்சேன். அப்புறம் தான் உடுமலை..

எங்க தாத்தா காலைல என்னைய எழுப்பறதே "கோவை ஆல் இந்தியா ரேடியோல வர்ற வந்தேமாதரத்த போட்டுட்டுத்தான். என்னை சிரிக்க வைக்க ஒரு ஆட்டம் போடுவாரு பாருங்க.. அப்படியே சிரிப்போட ஆரம்பிக்கும் நம்ம பொழுது.

அப்புறம் குளிச்சு, சாமி கும்பிட வச்சு, திருநீறு பட்டை, சந்தனப்பொட்டு அதுக்கு மேல குங்குமப்பொட்டு எல்லாம் வச்சிட்டு "பக்திப் பழமா.." கூட்டீட்டுப் போய் St. Joseph பள்ளிக்குப் போனா, அங்க இருக்கற மிஸ்ஸுங்களுக்கு ஒரே சிரிப்பு தான்! அப்படி ஆரம்பிச்சதுங்க என்னோட பள்ளி வாழ்க்கை..

எதோ ஒரு சண்டைல பக்கத்துல இருந்த பையனோட ஸ்லேட்ட உடைச்சுட்டேன்னு L.K.G UMA MISS என் கூட டூ விட்டது இன்னும் நினைவுலயே இருக்குங்க!

ஒன்னாப்பு நமக்கு வேற பள்ளி(METRO JUNIOR). கொஞ்ச தூரம் நடந்து....பத்ரகாளியம்மன்கோயில் ரோடு, ஊட்டி ரயில் ரோடு எல்லாம் கடந்து போகனும். "கண்ணு... ரோட்டக் கடக்கறதுக்கு முன்னால ரெண்டு பக்கமும் வண்டி வருதான்னு பாத்துட்டு சூதானமாப் போகனும்"னு எங்க ஆத்தா சொன்னது இப்ப ரோட்டக் கடக்கும் போது கூட நினைவுக்கு வருவதுண்டு. சில நாள் வீட்டுக்கு வரும்போது ஊட்டி ரயிலுக்கு டாடா காட்டறது ஒரு மசிழ்ச்சி வரும் பாருங்க.
ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வரும்போது என்னோட டிபன் பாக்ஸ தொலைச்சுட்டு அழுதது இன்னும் நினைவுலயே இருக்குங்க.பள்ளிக்குப் போயிட்டு வந்தா ஆரஞ்சு மிட்டாய், ராய் வடை, பொரி கடலை எல்லாம் தான் நமக்கு ஸ்னாக்ஸ்!

ஊட்டி மலைத்தொடரக் காட்டி, "ஆத்தா அந்த மலைல ஏன் பள்ளமா இருக்குன்னு", கேட்டா.."அங்க தான் சூரனக் கொன்னு புதைச்சாங்களாம்"னு எங்க ஆத்தா கதை சொல்லுவாங்க. ராமாயனம், மகாபாரதம்னு எத்தனை கதைகள்!

அப்புறம் மூனாவதுக்கு வந்து சேர்ந்தது உடுமலை RGM பள்ளில. அப்ப ஆரம்பிச்சது 12 வரைக்கும் ஒரே பள்ளி தான்.படிப்பு, வகுப்பு தவிர்த்து, எங்க பள்ளியப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சவுடனே நினைவுக்கு வர்றது காத்து, சருக்கற விளையாட்டு, ஊஞ்சல், சுத்து ராட்டனம் எல்லாம் தாங்க. காலைல ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே ஸ்கூலுக்கு போய் சருக்கி விளையாடினாத்தான் ஒரு நிறைவு. ஜூன் மாசம் புதுசா டிரௌசர் தைச்சாங்கன்னு காப்பரிச்சை வர்றதுக்கு முன்னாடியே பின்னாடி ஓட்டை வந்துடும்.

எங்க ஊர்க் காத்தப் பத்தி சொல்லனும்னா, ஜன்னல திறந்து வைச்சா புத்தகமெல்லாம் பறக்கும். அதனால தாங்க எங்க ஊர காற்றாலை நகரம்னு சொல்றாங்க.

நம்ம வீடு மடத்துக்குளம்ங்கற ஊர்ல. பள்ளிக்குப் போக தினமும் 15 கிமி பஸ் பயனம் தான். அந்த பயன நினைவுகள "பாட்டு பஸ்"னு ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

வீட்டுக்கு வந்தவுடனே நண்பர்களோட டயர் வண்டி எடுத்துட்டு கிளம்பீடறது. ஆனா காத்துக் காலத்துல டயர் வண்டி ஓட்டறது கொஞ்சம் கடினம். அப்ப எல்லாம் ரோட்டுல ஒரு சிகரட் அட்டை கூட கிடைக்காது. ஏன்னா அத எடுத்துத் தான செதுக்கு சீட்டு விளையாட முடியும். சிகரட் அட்டைகள சதுரமா அடுக்கி வச்சி கல்லால அடிச்சு விளையாடறது தான் செதுக்கு சீட்டு விளையாட்டு. Willsனா - 1000, Scissors - 25, GoldFlake - 50, Kings - 100, NorthPole-500னு மதிப்பு வேற.

இந்த விளையாட்டுக்கான கல்லை, நண்பர்கள் கூட சேர்ந்து எங்க ஊரு அமராவதி ஆத்துல போய் எடுக்கறதுண்டு. ஆத்துல தண்ணிக்குள்ள ஒளிஞ்சு விளையாட்டு, தொட்டு விளையாட்டு எல்லாம் அருமையா நடக்கும்ங்க. சனி, ஞாயிறுன்னா நம்ம இருக்கறதே ஆத்துல தான். தூரத்துல தெரியற மலைத்தொடர்கள ரசிச்சிட்டே கண் சிவக்கற வரைக்கும் விளையாடுனத நினைச்சா.. அத எல்லாம் ஒரு காலம்ங்க!


அடுத்த நாள் திரும்ப பள்ளிக்கு வந்தா சருக்கு, கால்பந்துனு விளையாட்டு. அந்த அளவுக்கு விளையாட்டு மைதானம் எல்லாம் சென்னை மாதிரி பெரிய ஊர்ல கூட கிடையாதுங்க. நல்ல காத்து, நல்ல நண்பர்கள், நல்ல பள்ளி இத விட வேற என்னங்க வேணும் பள்ளி வாழ்க்கைல!

என்னைய ஆள் ஆக்குனதுல இந்த பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் பெரும் பங்கு உண்டுங்க. இப்ப இருக்கற ஓரளவு தமிழார்வத்துக்குக் காரணம் என்னோட தமிழாசிரியைகள் தாங்க. என் திருமணத்துக்குக் கூட நாலு ஆசிரியர்கள் வந்து வாழ்த்தீட்டுப் போனாங்க!

நண்பர்களப் பத்தி சொல்லனும்னா.. குறைஞ்சது ஒரு பத்து பேராவது என் கூட மூனாப்புல இருந்து பள்ளி இறுதி வரை படிச்சாங்க. இன்னும் அத்தனை பேரு கூடவும் தொடர்புல இருக்கறது பெருமை தாங்க.

நம்ம செஞ்ச சேட்டைகள், பள்ளியில் வாங்கிய அடிகள் பற்றி எல்லாம் வேறொரு பதிவுல எழுதறேன்...

நான் இந்தத் தொடர் பதிவிற்கு அழைப்பது பதிவர்கள் ஜோதி, ராஜதிருமகன் இருவரையும்.

இந்த நினைவு எழுதிய விதம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா மறக்காம வாக்களியுங்கள்!

Monday, July 13, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 9

நம் பேருந்துகளில் "புகைப் பிடிக்காதீர்" என்று எழுதியிருப்பார்கள்.
அதைச் சில குறும்பர்கள் "பு"வை அழித்து, "கைப் பிடிக்காதீர்" ஆக்கியிருப்பார்கள். அவர்கள் "பிறர் கையைப் பிடிக்காதீர்" என்று பொருளை மாற்றுவதற்காக அப்படி செய்வதுண்டு!
ஆனால் "கை பிடி" என்பதற்கும் "கைப் பிடி" என்பதற்கும் வேறுபாடு உள்ளது.
"கை பிடி" என்றால் கையைப் பிடி என்றும், "கைப் பிடி" என்றால் பேருந்தில் வரும் கைப்பிடியையும் உணர்த்தும்.
******
அலைகடல் என்பதற்கும் அலைக்கடல் என்பதற்கும் வேறுபாடு உள்ளதாம். "அலைகடல்" என்றால் அலைகின்ற கடலையும் "அலைக்கடல்" என்றால் அலையை உடைய கடல் என்றும் பொருள்படும்.
*****
நம் திருமண அழைப்பிதழ்களில் திருவளர்ச்செல்வி என்று அச்சிடுவதைக் காண முடியும். இது தவறு. செல்வம் சிறக்கும் செல்வியாக என்றென்றும் இருக்கவேண்டும் என்றால் திருவளர்செல்வி என்றே எழுத வேண்டும்.
********
நான் ஒரு பதிவோ கட்டுரையோ எழுதும் பொழுது, எனக்கு வரும் ஐயங்களில் சந்திக்குத் தான் முதலிடம். ( இந்தப் பதிவில் எத்தனை பிழை உள்ளதோ?). படிக்கும் பொழுது தமிழில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், எழுதும் போது பிழை வருவதைத் தவிர்க்க முடிவதில்லை.
நாம் சொல்ல வரும் கருத்தைச் சரியாக எழுத நமக்கு சந்தியைப் பற்றிய அறிவு மிகவும் தேவை. ஆகவே ஒரு இலக்கண நூல் நம் கையில் இருப்பதும் தமிழில் எழுத மிகவும் உதவும்.
*********
எத்தனை எத்துணை என்ன வேறுபாடு?
எண்ணிக்கையைக் குறிக்கும் இடத்தில் "எத்தனை" என்ற சொல்லையும், எண்ணிக்கையில்லாத அளவு, குணம், நிறம், போன்றவற்றைக் குறிக்கும் போது "எத்துணைப் பெரியது", "எத்துணைச் சிவப்பு" என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும்.
********
அன்று - அல்ல பயன்படுத்துவது எப்படி?
அஃது உண்மை அன்று
அவை உண்மை அல்ல
இவற்றில் அன்று என்பதை ஒருமைக்கும் அல்ல என்பதை பன்மைக்கும் பயன்படுத்துவது முறையாகும்.
********
கீழே இணைத்துள்ளது நான் கூகுள் வேவைப் பற்றி எழுதிய பதிவின் ஒரு பத்தி..

"நாம் சாட் செய்யும் போது டைப் செய்து வருகிறோம் என்றால் "typing.... " என்று ஒரு கமெண்ட் கீழே காணப்படும்.. நாம் என்ன டைப் செய்கிறோம் என்பது எதிரில் இருப்பரும் பார்த்தால்..? மிக விரைவாக சாட் செய்யாலாம் தானே? ( நாம் டைப் செய்வதை பார்க்க முடியாமல் செய்யவும் வசதி உள்ளதாம்!!)"

இதில், சாட் (chat), டைப் (type), கமெண்ட் ( Comment ) என்று ஆங்கில சொற்களைத் தமிழில் எழுதியிருப்பேன். அந்த சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன என்று தெரியாதது தான் காரணம். இது போல ஐயங்களைத் தீர்க்க நமது பயன்பாட்டில் உள்ள சில சொற்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆங்கில சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே...
Backspace - பின் நகர்வு
Backup - காப்பு
Bar Code - பட்டைக் குறிமுறை
Boot - தொடங்குதல்
Bottleneck - இடர்
Bug - பிழை
Bypass - புறவழி
Calibration - அளவீடு செய்தல்
Capacity - கொள்திறன்.
Cancel - நீக்கு
Cartridge - பெட்டகம்
Certification - சான்றளிப்பு
Channel - தடம்
Character - உரு
Charge - மின்னூட்டம்
Chat - உரையாடு
Check out - சரிபார்த்து அனுப்பு, சரி பார்
Chip - சில்லு
Chop - நீக்கு
Clip Board - பிடிப்புப் பலகை
Clone - நகலி
Coding - குறிமுறையாக்கம்
Coherence - ஓரியல்பு
Collector - திரட்டி
Concatenate - தொகு
Command - கட்டளை
Communication - தொடர்பு
Compile - தொகு
Condition - நிபந்தனை
Configure - உருவாக்கு
Contrast - வேறுபாடு
Copy - நகல்
Counter - எண்ணி
Crash - முறிவு
Credit Card - கடனட்டை
Cursor - சுட்டி
Customize - தனிப்பயனாக்கு
Cut and Paste - வெட்டி ஒட்டு
Cycle - சுழற்சி.
Data - தரவு
.
நமது பயன்பாட்டில் உள்ள பிற தொழில்நுட்பம் சார்ந்த கலைச்சொற்கள் அடுத்த பதிவில்..

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

Saturday, July 11, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 8

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" அல்லது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எது சரியான வாக்கியம்?
கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்றுப் பாடலில் வரும் வரி தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்". இதில் "கேளிர்" என்பதற்கு என்ன பொருள்? "கேளுங்கள்" என்றா பொருள்? "கேளிர்" என்பதற்கு உறவினர் என்றே பொருள். ஆனால் நாம் கேளுங்கள் என்று பொருள்படும்படி யாதும் ஊரே யாவரும் "கேளீர்" என்று எழுதிவருவது வியப்பிற்குரியது.
கூகுள் தேடுதளத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற வரியை தேடினால் நாலாயிரத்திற்கும் அதிகமான விடைகள் கிடைத்தது வியப்பளித்தது!
கணவனுக்கு "கேள்வன்" என்னும் சொல் சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
******************
என் மகன், எனது மகன் - எது சரி?
நமது பயன்பாட்டில் எனது மகன், எனது தந்தை என்று எழுதுவது வழக்கம். அப்படி எழுதுவது சரியா? என் மகன், என் தந்தை என்று எழுதுவது தான் சரியானது. வீடு,வாகனம், நகை என்று அஃறினைப் பொருள்களையே "எனது" என்று குறிக்க வேண்டும்.
****************
"ஆகிய, முதலிய" எப்படி பயன்படுத்துவது?
வரையறை தெரிந்து எண்ணி முடிக்கத்தக்கவற்றுக்கே "ஆகிய" சேர்க்க வேண்டும். அ இ உ எ ஒ "ஆகிய" ஐந்தும் குற்றெழுத்துகள் எனலாம். உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர் முதலிய நகரங்கள் கோவை அருகே உள்ளன எனலாம்.
*************
சுவரில், சுவற்றில் எது சரி?
"Post"ல் ஒட்டுவதால் "Poster" ஆனாது. இங்கே சுவரில் ஒட்டுவதால் சுவரொட்டி ஆனது. இங்கே 'சுவற்றில்' ஒட்டாதீர் என்று எழுதுவதைக் காண்கிறோம். இது தவறு.
சுவறு - வற்று, காய்ந்து போ என்று அர்த்தம்
ஆகவே, சுவரில் ஒட்டாதீர் என்று எழுத வேண்டும்.
*************
சீயக்காய் - சிகைக்காய் எது சரி?
எண்ணெய் தேய்த்துத் தலை குளிக்கும் போது "சிகைக்காய்" தேவைப்படும்.
இது போல நமது பயன்பாட்டில் உள்ள பிழையான சொற்களும் திருத்தங்களும் கீழே..
பிழை - திருத்தம்
அரிவாமனை - அரிவாள்மனை
அருகாமை - அருகில்
அருணாக்கொடி - அரைநாண்கொடி
ஆலையம் - ஆலயம்
இளனி - இளநீர்
உத்திரவு - உத்தரவு
எகனை மொகனை - எதுகை மோனை
கண்றாவி - கண்ணராவி
கம்மாய் - கண்வாய்
காத்தாடி - காற்றாடி
கோர்வை - கோவை
சக்களத்தி - சகக்களத்தி
சமயல் - சமையல்
சின்னாபின்னம் - சின்னபின்னம்
சுவற்றில் - சுவரில்
சேதி - செய்தி
நஞ்சை - நன்செய்
புஞ்சை - புன்செய்
பண்டகசாலை - பண்டசாலை
புட்டு - பிட்டு
மனக்கெட்டு - வினைக்கெட்டு
முழித்தான் - விழித்தான்
முகர்தல் - மோத்தல்
முழுங்கு - விழுங்கு
ரொம்ப - நிரம்ப
ரொப்பு - நிரப்பு
வாய்ப்பாடு - வாய்பாடு
வெத்தலை - வெற்றிலை
வெய்யில் - வெயில்
வெள்ளாமை - வேளாண்மை
***********
முந்தய கட்டுரைகளில் வடசொற்கள், அரபி, பாரசீகம் போன்ற மொழிச்சொற்கள் தமிழில் பயன்படுத்துவதைப் பார்த்தோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களைக் குறிப்பிடாமல் விடலாமா? குறிப்பாக தொழில்நுட்பம் தொடர்பாகப் பேசும்போது நாம் பயன்படுத்துவது ஆங்கில சொற்களையே! முழுவதும் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது கடினமானாலும் தெரிந்து கொள்வது நல்லது தானே!
தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகள், கட்டுரைகள் எழுதும் போது ஆங்கிலச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன என்ற ஐயம் வருவதுண்டு. இதற்கான சொற்கள் கீழே தரப்பட்டுளன. இந்த சொற்களை பயன்படுத்தும் போது கூடவே ஆங்கில சொற்களையும் குறிப்பிடவும். கட்டுரையைப் படிப்பவர்களுக்குப் புரியாமல் போனால் தமிழில் எழுதும் நோக்கம் நிறைவடையாது.
தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆங்கில சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே...
Start - தொடக்கம்
Abort - முறித்தல்
Absolute - தனி
Address - முகவரி
Access - அணுகு
Accessory - துணை உறுப்பு
Accumulator - திரட்டி
Accuracy - துல்லியம்
Action - செயல்
Active - நடப்பு
Activity - செயல்பாடு
Adaptor - பொருத்தி
Add-on - கூட்டு உறுப்பு
Adder - கூட்டி
Address - முகவரி
AI - Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
Algorithm - நெறிமுறை
Allocate - ஒதுக்கீடு
Amplifier - பெருக்கி
Analyst - ஆய்வாளர்
Animation - அசைவூட்டம்
Aperture card - செருகு அட்டை
Append - பின்சேர்
Application - பயன்பாடு
Approximation - தோராயம்
Archive - ஆவணக்காப்பகம்
Aspect Ratio - வடிவ விகிதம்
Assembly - தொகுப்பு
Audio - ஒலி
Audio Cassette - ஒலிப்பேழை
Audit - தணிக்கை
Authorisation - நல்குரிமை
Automatic - தன்னியக்கம்
Automatic Teller Machine - தன்னியக்க காசளிப்பு எந்திரம்.
Auxiliary - துணை
Availability - கிடைத்தல்
Average - சராசரி

திருமண அழைப்பிதழில் "திருவளர்ச்செல்வி" என்று அச்சிடவேண்டுமா? அல்லது "திருவளர்செல்வி" என்று அச்சிடவேண்டுமா?
அலைகடல், அலைக்கடல் என்ன வேறுபாடு?

அடுத்த பதிவில்..
உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்க

Tuesday, July 7, 2009

பச்சையா பேசலாமா? இது கிரீன் டாக் மச்சி - 2உங்களிடம் ஒரு கேள்வி!

இது வரை நீங்க எத்தனை மரங்கள் நட்டு இருக்கீங்க?

ஒன்று? இரண்டு?..

மரங்களை ஏதாவது ஒரு விழாவின் போதோ அல்லது அலுவலகத்தில் கொடுத்தார்கள் என்றோ நட்டு இருப்பீங்க! அது இன்று எப்படி இருக்கு தெரியுமா? எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்று பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் மரங்களை நட்டு, வளர்த்து வந்தால் பாராட்டுகள்!

அடுத்த கேள்வி..

இது வரை நீங்க எத்தனை மரங்களை வெட்டியிருக்கீங்க?

பதிலே வரலியே...

"நாங்க ஏன் மரங்கள வெட்டனும்.. நாங்க எந்த கட்சியைச் சார்ந்தவர்களோ, சமூக விரோதிகளோ கிடையாதே"னு நீங்க சொல்றது கேட்குது.

உண்மையா யோசிச்சு சொல்லுங்க இது வரைக்கு நீங்க, உங்க குடும்பத்தினர் எல்லாம் சேர்ந்து எத்தனை மரங்களை வெட்டியிருக்கீங்க?

சரி, நேரா நம்ம விடயத்திற்கு வருவோம்.

நீங்க உங்க அலுவலகத்துல இருக்கீங்க.. உங்களுக்கு இருமலோ தும்மலோ வருது. நீங்க என்ன செய்வீங்க? உங்க கைக்குட்டையை எடுத்து வாயைப் பொத்துவீங்களா? அல்லது உங்க இருக்கையில் வைத்துள்ள மென்-காகிதத்தை (Tissue Paper ) எடுத்து துடைப்பீர்களா?

கைக்குட்டையா? அதெல்லாம் படிக்கற காலத்தோட மறந்தாச்சுங்க..

ஏன்னா, கைக்குட்டை தூய்மையானது கிடையாது. மென்-காகிதத்தை வைத்துக் கொள்வது தான் நாகரிகமிக்க செயல்!!

இது கூடப் பரவாயில்லை...

சில வருடங்களுக்கு முன்பு வரை, கற்களை வைத்துத் மலத்தைத் துடைத்த நாம், இன்று பயன்படுத்துவது மென்-காகிதத்தைத் தான்! மென்-காகிதம் இல்லாத சலக்கமனையே (கக்கூஸ்) இல்லை என்கிற அளவிற்கு நாம் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி வருகிறோம்!

ஏப்பா, தூய்மையா இருக்கறதுக்கு இது தேவை தானே? என்று நீங்கள் கேட்கலாம்.

அதற்கு முன்பு, மென்-காகிதம் எப்படி உருவாகிறதென்பது தெரியுமா?

இது நூறு சதவிகிதம் மரங்களில் இருந்து தயாரிக்கப்படுபவை. நீங்கள் பயன்படுத்தும் மென்-காகிதத்தின் அட்டையில் "Made from 100% Virgin wood pulp" என்று அச்சிட்டிருப்பார்கள். அதாவது நூறு சதவகிதம் மரங்களை வெட்டியே இதனைத் தயாரிக்கிறோம் என்று உறுதிமொழி (??)அளிக்கிறார்கள்.

இப்படி மரங்களை வெட்டித் தயாரிக்கப்படும் மென்-காகிதங்களை வைத்துத் தான் பிட்டத்தைத் (Butt) துடைக்க வேண்டுமா? அல்லது தும்ம வேண்டுமா?பிறகு பூமி சூடாகிறது என்று புலம்புவதால் என்ன பயன்?

ஒரு ஆய்வரிக்கை கூறுவது என்னவென்றால் அதிக திறன் கொண்ட மகிழுந்துகளை (Luxury Cars) பயன்படுத்துவதைக் காட்டிலும் இந்த மென்-காகிதங்களை பயன்படுத்துவது சுற்றுச்சூழலிற்குத் தீங்கானதாம். நம் ஆயுள் முழுவதும் இந்த வகைக் காகிதங்களை பயன்படுத்துவோம் என்றால் குறைந்தது ஒன்றிரண்டு மரங்களையாவது சாய்த்திருப்போமாம்!!

சரி.. நம்மால் முடிந்தது என்ன?

மென்-காகிதங்களைத் தவிர்த்துவிட்டு கைக்குட்டைகளை பயன்படுத்தலாமே! அழுக்கானால் துவைத்துக் கொள்ளலாம் ( நீங்களா துவைக்கப் போகிறீர்கள்?) வீணாகப் போவதில்லை!! நம்ம தாத்தாவைப் பார்த்தீங்கன்னா, எஜமான் ஸ்டைல்ல தோள்ல துண்டு போட்டிருப்பாங்க!! எதற்காக? வியர்வை, தும்மல் எல்லாம் துடைக்கத்தானே! அவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக வாழவில்லையா?

இல்லை, எனக்கு காகிதங்கள் வேண்டும் என்றால் மறுசுழற்சி (Recycle) செய்யப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்துங்கள். பூமி உங்களுக்கு நன்றி கூறும்.

மரங்களை நடத்தான் மறுக்கிறோம், குறைத்தது அழிக்காமல் இருக்கலாமே?

பச்சைப் பேச்சு தொடரும்.

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் வாக்களிக்க மறக்காதீர்கள்!

Monday, July 6, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 7

நம்ம ரஜினி நடித்த "தில்லு முல்லு" என்ற படம் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

அதில் தேங்காய் சீனிவாசன் (தே.சீ.) ஒரு நேர்காணல் நடத்திக் கொண்டிருப்பார். அதில், சுப்பிரமணிய பாரதி என்ற பெயரில் ஒருவர் வருவார்..
அவரிடம் தே.சீ., "வணக்கம் மிஸ்டர் சுப்பிரமணிய பாரதி, உங்க பேரக் கேட்டாலே குழந்தைகளுக்கும் சுதந்திர தாகம் எடுக்கும். உங்களுக்கும் கவிதைகள் எழுதத் தெரியுமா?" என்பார்.
அதற்கு அவர், "பல(ழ)க்கம் இல்லீங்க..." என்பார்.
"பலக்கம் இல்லியா? உங்களுக்கு இந்த "ழ"ன்னா வராதா?"
"வரும், ஆனா கொஞ்சம் கஸ்(ஷ்)டப்படும்"
அதற்கு தே.சீ.,"கஸ்டப்படும். அப்ப உங்களுக்கு இந்த "ஷ"னாவும் வராது. சரி, இப்ப நான் சொல்றத திரும்ப சொல்றீங்களா? 'ஒரு கட்டு சுள்ளில ஒரு சுள்ளி கோண சுள்ளி'.. எங்க இத சொல்லுங்க.."
"வேண்டாங்க ரிஸ்க்கு.." என்பார் பாரதி..
" 'ழ'னாவும் வராது, 'ஷ'னாவும் வராது, 'த'னாவும் வராது. பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. இது நாட்டுக்கும் அவருக்கும் பண்ற பெரிய துரோகம்யா.. முதல்ல உங்க பேர மாத்துங்க.." என்பார் தே.சீ..

"மாத்தீட்டேன் சார்.. ஷார்டா சுப்பி.."
"பேரப்பாரு சுப்பி கப்பினு.. GET OUT........" :)
************
இது போல தமிழ் உச்சரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நேர்காணல் நடந்தால் நம்மில் யாராவது தேருவோமா?
உச்சரிப்பிற்கு முக்கியத்துவதும் கொடுக்காவிட்டாலும் அந்த வாக்கியத்தை வைத்து ஒருவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்து கொள்ள முடியும். அதுவே, தமிழில் கட்டுரைகள், பதிவுகள் எழுதும் போது, இது போல ல,ழ,ள வேறுபாடுகளில் தவறு செய்தோம் என்றால் சொல்ல வரும் கருத்தே மாறி விடும் தானே!
ஆங்கிலத்தில் ஒரே உச்சரிப்பைக் கொண்ட வார்த்தைகளை மாற்றி எழுதுகிறோமா? Heroine(நடிகை)க்கு பதிலாக Heroin(போதைமருந்து) என்று எழுதினால் என்ன ஆகும்? அல்லது Taught (கற்பித்தல்) என்பதற்கு பதிலாக Thought(யோசனை) என்று எழுதினால் சிரிப்பார்கள் தானே!

ஆனால், அதுவே தமிழை மட்டும் எழுதும் போது கண்டுகொள்ளாமல் விடலாமா?
************
லகர,ழகர,ளகர வேறுபாடுகளில் ஐயம் வரும் சொற்கள் கீழே..
அளித்தல் - ஈதல்
அழித்தல் - கெடுத்தல்
உளவு - வேவு பார்த்தல்
உழவு - பயிர்த் தொழில்
உலாவு - சுற்றித் திரிதல் ( இது தவறாக "உலவு" என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது)
ஒலி - சப்தம்
ஒளி - வெளிச்சம்
ஒழி - நீக்கு
காலை - காலைப் பொழுது
காளை - எருது

குலம் - சாதி
குளம் - நீர்நிலை
கொல் - கொன்றுவிடு
கொள் - பெறு
கோல் - கம்பு
கோள் - கோள் சொல்லல்
தால் - நா
தாள் - காகிதம்
தாழ் - தாழ்வடை
நால் - நாங்கு
நாள் - தினம்
மூலை - வீட்டின் ஒரு "மூலை"
மூளை - உடலின் ஒரு பாகம்
மூழை - அகப்பை
வலி - நோய்
வளி - காற்று
வழி - பாதை
வால் - Tail
வாள் - ரம்பம்
வாழ் - வாழி
விலா - விலா எலும்பு
விளா - விளாமரம்
விழா - திருவிழா
வேலை - தொழில்
வேளை - பொழுது.
***************
முன்றைய பதிவுகளில் வடசொற்கள், அரபி, பாரசீகம் போன்ற மொழிகளைப் பார்த்தோம்..
கீழே தமிழில் பயன்படுத்தப்படும் தெலுங்கு சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும்...
அப்பட்டம் - கலப்பில்லாதது
ஆஸ்தி - செல்வம்
எக்கச்சக்கம் - மிகுதி
ஏடாகூடம் - ஒழுங்கில்லாமை
ஏராளம் - மிகுதி
ஒய்யாரம் - குலுக்கு நடை
கச்சிதம் - ஒழுங்கு
கெட்டியாக - உறுதியாக
கெலிப்பு - வெற்றி
கேப்பை - கேழ்வரகு
சந்தடி - இரைச்சல்
சரக்கு - வாணிகப் பொருள்
சாகுபடி - பயிரிடுதல்
சொகுசு - நேர்த்தி
சொச்சம் - மிச்சம்
சோலி - வேலை
தாறுமாறு - ஒழுங்கின்மை
துரை - பெரியோன்
தெம்பு - ஊக்கம்
தொந்தரவு - தொல்லை
நிம்மதி - கவலையின்மை
மச்சு - மேல்தளம்
மடங்கு - அளவு
வாடகை - குடிக்கூலி
வேடிக்கை - காட்சி..
சீயக்காய், சிகைக்காய் எது சரியான சொல்? அடுத்த பதிவில்..
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்...

Saturday, July 4, 2009

பச்சையா பேசலாமா? (இது கிரீன்-டாக் மச்சி ) - 1

இன்றைய தேதியில் நம் மத்தியில் அதிகமாக விவாதிக்கும் விடயங்களில் இயற்கைக்கும் சுற்றுப்புறச் சூழலிற்கும் ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது. அதைப் பற்றித் தான் இங்கே பேசப்போகிறோம்!

நீங்க ஆப்பிள் வாங்க கடைக்குப் போறீங்க! கடையில சீன ஆப்பிள், அமெரிக்க ஆப்பிள், காஷ்மீர் ஆப்பிள் என மூனு வகையான ஆப்பிள் விற்கப்படுகிறது. நீங்க எதை வாங்குவீங்க?

விலை அதிமாக இருந்தாலும் அமெரிக்க ஆப்பிள் தான் வாங்குவேன்னு நீங்க சொனீங்கன்னா.. உங்களுக்கு அடுத்த கேள்வி?ஏன்?

உங்க அண்ணன் அமெரிக்கால இருக்கறதாலயா? அல்லது அமெரிக்க ஆப்பிள் பளபளன்னு இருக்கறதாலயா? அல்லது அமெரிக்க ஆப்பிளுக்கு கூடுதல் சுவையா?
உங்களுக்கு அடுத்த கேள்வி.
எந்த ஆப்பிளை வாங்குவதால் நாம் இயற்கைக்கு நன்மை செய்கிறோம்? மூன்று வகையான பதில்கள் கீழே..

கண்டிப்பா அமெரிக்க ஆப்பிள் தான்! ஏன்னா அங்கே தான், ஆப்பிள் இயற்கையான முறையில் சாகுபடி செய்யப்படுகிறது!

சீன ஆப்பிள் தான்! ஏன்னா அங்வே தான், பெருமளவில் வளர்க்கிறாங்க. சத்தும் அதிகமா இருக்கிறது!

காஷ்மீர் ஆப்பிள் தான்! ஏன்னா காஷ்மீர் தான் நம்ம ஊருக்குப் பக்கம் இருக்கிறது. அனைத்து இந்திய நகரத்திற்கும் கொண்டுபோக குறைந்த போக்குவரத்துச் செலவும் நேரமும் தேவைப்படுகிறது!

இதுல எதுங்க சரியான பதில்?

மூன்றாவது பதில் தாங்க சரியானது.

காஷ்மீரைக் காட்டிலும் அமெரிக்காவிலிருந்தோ, சீனாவிலிருந்தோ இந்திய நகரங்களுக்கு ஆப்பிள்களைக் கொண்டு வர அதிக எரிபொருள் செலவாகிறது. அது கடல்வழியாகவோ, வான்வழியாகவோ இருந்தாலும் இயற்கைக்கு மிகவும் தீங்கானதே!

இதனை உணவு தூரம் (FOOD MILES ) என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு பொருள் விலையும் இடத்திலிருந்து விற்கும் இடத்திற்கு கொண்டு சேர்க்க எவ்வளவு தூரம் பயனிக்க வேண்டும், எவ்வளவு எரிபொருள் செலவாகும் என்று கணிப்பது தான் இந்த உணவு தூரக் கணக்கு! மேலும், நாம் உட்கொள்ளும் உணவு விலைநிலத்தில் இருந்து நம் வீட்டிற்கு வரும் வரை கெடாமல் இருக்க குளிர்சாதன வசதிகளும் தேவைப்படும்.

இப்படி உணவுவகைகளைப் பதப்படுத்துவதிலும், போக்குவரத்திலும் வெளியேறும் வாயுக்கள் புவியை மேலும் சூடாக்குகின்றன.

ஆக முடிந்த வரை உள்நாட்டுப் பொருட்களையோ அருகாமையில் விளையும் பொருட்களை வாங்குவது கண்டிப்பாக இயற்கைக்கு நன்றிக்கடன் செய்வதாக இருக்கும்.

அதை விடுத்து விலை அதிகமா இருக்கற வெளிநாட்டு ஆப்பிள் தான் தரமானது என்று நினைப்பது சரியா?

என் ஒருவனின் முடிவு இயற்கைக்கு பயனளிக்குமா என்று நினைக்க வேண்டாம். சிறுதுளிகள் தானே பெருவெள்ளம் ஆகிறது!

பச்சைப் பேச்சு தொடரும்....

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்...

There was an error in this gadget
Related Posts with Thumbnails