Saturday, July 11, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 8

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" அல்லது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எது சரியான வாக்கியம்?
கணியன் பூங்குன்றனார் பாடிய புறநானூற்றுப் பாடலில் வரும் வரி தான் "யாதும் ஊரே யாவரும் கேளிர்". இதில் "கேளிர்" என்பதற்கு என்ன பொருள்? "கேளுங்கள்" என்றா பொருள்? "கேளிர்" என்பதற்கு உறவினர் என்றே பொருள். ஆனால் நாம் கேளுங்கள் என்று பொருள்படும்படி யாதும் ஊரே யாவரும் "கேளீர்" என்று எழுதிவருவது வியப்பிற்குரியது.
கூகுள் தேடுதளத்தில் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற வரியை தேடினால் நாலாயிரத்திற்கும் அதிகமான விடைகள் கிடைத்தது வியப்பளித்தது!
கணவனுக்கு "கேள்வன்" என்னும் சொல் சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
******************
என் மகன், எனது மகன் - எது சரி?
நமது பயன்பாட்டில் எனது மகன், எனது தந்தை என்று எழுதுவது வழக்கம். அப்படி எழுதுவது சரியா? என் மகன், என் தந்தை என்று எழுதுவது தான் சரியானது. வீடு,வாகனம், நகை என்று அஃறினைப் பொருள்களையே "எனது" என்று குறிக்க வேண்டும்.
****************
"ஆகிய, முதலிய" எப்படி பயன்படுத்துவது?
வரையறை தெரிந்து எண்ணி முடிக்கத்தக்கவற்றுக்கே "ஆகிய" சேர்க்க வேண்டும். அ இ உ எ ஒ "ஆகிய" ஐந்தும் குற்றெழுத்துகள் எனலாம். உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர் முதலிய நகரங்கள் கோவை அருகே உள்ளன எனலாம்.
*************
சுவரில், சுவற்றில் எது சரி?
"Post"ல் ஒட்டுவதால் "Poster" ஆனாது. இங்கே சுவரில் ஒட்டுவதால் சுவரொட்டி ஆனது. இங்கே 'சுவற்றில்' ஒட்டாதீர் என்று எழுதுவதைக் காண்கிறோம். இது தவறு.
சுவறு - வற்று, காய்ந்து போ என்று அர்த்தம்
ஆகவே, சுவரில் ஒட்டாதீர் என்று எழுத வேண்டும்.
*************
சீயக்காய் - சிகைக்காய் எது சரி?
எண்ணெய் தேய்த்துத் தலை குளிக்கும் போது "சிகைக்காய்" தேவைப்படும்.
இது போல நமது பயன்பாட்டில் உள்ள பிழையான சொற்களும் திருத்தங்களும் கீழே..
பிழை - திருத்தம்
அரிவாமனை - அரிவாள்மனை
அருகாமை - அருகில்
அருணாக்கொடி - அரைநாண்கொடி
ஆலையம் - ஆலயம்
இளனி - இளநீர்
உத்திரவு - உத்தரவு
எகனை மொகனை - எதுகை மோனை
கண்றாவி - கண்ணராவி
கம்மாய் - கண்வாய்
காத்தாடி - காற்றாடி
கோர்வை - கோவை
சக்களத்தி - சகக்களத்தி
சமயல் - சமையல்
சின்னாபின்னம் - சின்னபின்னம்
சுவற்றில் - சுவரில்
சேதி - செய்தி
நஞ்சை - நன்செய்
புஞ்சை - புன்செய்
பண்டகசாலை - பண்டசாலை
புட்டு - பிட்டு
மனக்கெட்டு - வினைக்கெட்டு
முழித்தான் - விழித்தான்
முகர்தல் - மோத்தல்
முழுங்கு - விழுங்கு
ரொம்ப - நிரம்ப
ரொப்பு - நிரப்பு
வாய்ப்பாடு - வாய்பாடு
வெத்தலை - வெற்றிலை
வெய்யில் - வெயில்
வெள்ளாமை - வேளாண்மை
***********
முந்தய கட்டுரைகளில் வடசொற்கள், அரபி, பாரசீகம் போன்ற மொழிச்சொற்கள் தமிழில் பயன்படுத்துவதைப் பார்த்தோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களைக் குறிப்பிடாமல் விடலாமா? குறிப்பாக தொழில்நுட்பம் தொடர்பாகப் பேசும்போது நாம் பயன்படுத்துவது ஆங்கில சொற்களையே! முழுவதும் தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துவது கடினமானாலும் தெரிந்து கொள்வது நல்லது தானே!
தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகள், கட்டுரைகள் எழுதும் போது ஆங்கிலச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் என்ன என்ற ஐயம் வருவதுண்டு. இதற்கான சொற்கள் கீழே தரப்பட்டுளன. இந்த சொற்களை பயன்படுத்தும் போது கூடவே ஆங்கில சொற்களையும் குறிப்பிடவும். கட்டுரையைப் படிப்பவர்களுக்குப் புரியாமல் போனால் தமிழில் எழுதும் நோக்கம் நிறைவடையாது.
தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான ஆங்கில சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும் கீழே...
Start - தொடக்கம்
Abort - முறித்தல்
Absolute - தனி
Address - முகவரி
Access - அணுகு
Accessory - துணை உறுப்பு
Accumulator - திரட்டி
Accuracy - துல்லியம்
Action - செயல்
Active - நடப்பு
Activity - செயல்பாடு
Adaptor - பொருத்தி
Add-on - கூட்டு உறுப்பு
Adder - கூட்டி
Address - முகவரி
AI - Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
Algorithm - நெறிமுறை
Allocate - ஒதுக்கீடு
Amplifier - பெருக்கி
Analyst - ஆய்வாளர்
Animation - அசைவூட்டம்
Aperture card - செருகு அட்டை
Append - பின்சேர்
Application - பயன்பாடு
Approximation - தோராயம்
Archive - ஆவணக்காப்பகம்
Aspect Ratio - வடிவ விகிதம்
Assembly - தொகுப்பு
Audio - ஒலி
Audio Cassette - ஒலிப்பேழை
Audit - தணிக்கை
Authorisation - நல்குரிமை
Automatic - தன்னியக்கம்
Automatic Teller Machine - தன்னியக்க காசளிப்பு எந்திரம்.
Auxiliary - துணை
Availability - கிடைத்தல்
Average - சராசரி

திருமண அழைப்பிதழில் "திருவளர்ச்செல்வி" என்று அச்சிடவேண்டுமா? அல்லது "திருவளர்செல்வி" என்று அச்சிடவேண்டுமா?
அலைகடல், அலைக்கடல் என்ன வேறுபாடு?

அடுத்த பதிவில்..
உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்க

7 comments:

கலையரசன் said...

//கணவனுக்கு "கேள்வன்" என்னும் சொல் சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.//

நாமெல்லாம், அவங்க சொல்லறத கேட்டுகிட்டு இருக்கனுமுன்னு அந்த காலத்திலேயே சொல்லிட்டாங்க...

தொடரட்டு உங்கள் பணி செந்தில்!!

jothi said...

நல்லா இருக்கு. பின்னூட்டங்க்களை பற்றி கவலைப்படாமல் தொடருங்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//

கலையரசன் said...
//கணவனுக்கு "கேள்வன்" என்னும் சொல் சங்க காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.//

நாமெல்லாம், அவங்க சொல்லறத கேட்டுகிட்டு இருக்கனுமுன்னு அந்த காலத்திலேயே சொல்லிட்டாங்க...

தொடரட்டு உங்கள் பணி செந்தில்!!
//

வாங்க கலை..

"கேள்வன்"ஐப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
jothi said...
நல்லா இருக்கு. பின்னூட்டங்க்களை பற்றி கவலைப்படாமல் தொடருங்கள்.
//

ஜோதி, தங்கள் ஊக்குவிப்பிற்கு நன்றி!

பின்னூட்டத்தைப் பற்றி கவலை இல்லீங்க! தொடர்ந்து எழுதுகிறேன் :)

புருனோ Bruno said...

//Automatic Teller Machine - தன்னியக்க காசளிப்பு எந்திரம்.//

தானியங்கி பணம் வழங்கி

http://www.payanangal.in/2008/03/blog-post_20.html பாருங்கள் :)

*இயற்கை ராஜி* said...

நல்லா இருக்கு...தொடரட்டும். உங்கள் பணி

சரவணன் said...

பிழை திருத்த தகவலுக்கு நன்றி. தொடர்ந்து பதவிடுங்கள்.

Related Posts with Thumbnails