Monday, July 6, 2009

நமது பயன்பாட்டில் தமிழ் - 7

நம்ம ரஜினி நடித்த "தில்லு முல்லு" என்ற படம் அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

அதில் தேங்காய் சீனிவாசன் (தே.சீ.) ஒரு நேர்காணல் நடத்திக் கொண்டிருப்பார். அதில், சுப்பிரமணிய பாரதி என்ற பெயரில் ஒருவர் வருவார்..
அவரிடம் தே.சீ., "வணக்கம் மிஸ்டர் சுப்பிரமணிய பாரதி, உங்க பேரக் கேட்டாலே குழந்தைகளுக்கும் சுதந்திர தாகம் எடுக்கும். உங்களுக்கும் கவிதைகள் எழுதத் தெரியுமா?" என்பார்.
அதற்கு அவர், "பல(ழ)க்கம் இல்லீங்க..." என்பார்.
"பலக்கம் இல்லியா? உங்களுக்கு இந்த "ழ"ன்னா வராதா?"
"வரும், ஆனா கொஞ்சம் கஸ்(ஷ்)டப்படும்"
அதற்கு தே.சீ.,"கஸ்டப்படும். அப்ப உங்களுக்கு இந்த "ஷ"னாவும் வராது. சரி, இப்ப நான் சொல்றத திரும்ப சொல்றீங்களா? 'ஒரு கட்டு சுள்ளில ஒரு சுள்ளி கோண சுள்ளி'.. எங்க இத சொல்லுங்க.."
"வேண்டாங்க ரிஸ்க்கு.." என்பார் பாரதி..
" 'ழ'னாவும் வராது, 'ஷ'னாவும் வராது, 'த'னாவும் வராது. பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. இது நாட்டுக்கும் அவருக்கும் பண்ற பெரிய துரோகம்யா.. முதல்ல உங்க பேர மாத்துங்க.." என்பார் தே.சீ..

"மாத்தீட்டேன் சார்.. ஷார்டா சுப்பி.."
"பேரப்பாரு சுப்பி கப்பினு.. GET OUT........" :)
************
இது போல தமிழ் உச்சரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு நேர்காணல் நடந்தால் நம்மில் யாராவது தேருவோமா?
உச்சரிப்பிற்கு முக்கியத்துவதும் கொடுக்காவிட்டாலும் அந்த வாக்கியத்தை வைத்து ஒருவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்து கொள்ள முடியும். அதுவே, தமிழில் கட்டுரைகள், பதிவுகள் எழுதும் போது, இது போல ல,ழ,ள வேறுபாடுகளில் தவறு செய்தோம் என்றால் சொல்ல வரும் கருத்தே மாறி விடும் தானே!
ஆங்கிலத்தில் ஒரே உச்சரிப்பைக் கொண்ட வார்த்தைகளை மாற்றி எழுதுகிறோமா? Heroine(நடிகை)க்கு பதிலாக Heroin(போதைமருந்து) என்று எழுதினால் என்ன ஆகும்? அல்லது Taught (கற்பித்தல்) என்பதற்கு பதிலாக Thought(யோசனை) என்று எழுதினால் சிரிப்பார்கள் தானே!

ஆனால், அதுவே தமிழை மட்டும் எழுதும் போது கண்டுகொள்ளாமல் விடலாமா?
************
லகர,ழகர,ளகர வேறுபாடுகளில் ஐயம் வரும் சொற்கள் கீழே..
அளித்தல் - ஈதல்
அழித்தல் - கெடுத்தல்
உளவு - வேவு பார்த்தல்
உழவு - பயிர்த் தொழில்
உலாவு - சுற்றித் திரிதல் ( இது தவறாக "உலவு" என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது)
ஒலி - சப்தம்
ஒளி - வெளிச்சம்
ஒழி - நீக்கு
காலை - காலைப் பொழுது
காளை - எருது

குலம் - சாதி
குளம் - நீர்நிலை
கொல் - கொன்றுவிடு
கொள் - பெறு
கோல் - கம்பு
கோள் - கோள் சொல்லல்
தால் - நா
தாள் - காகிதம்
தாழ் - தாழ்வடை
நால் - நாங்கு
நாள் - தினம்
மூலை - வீட்டின் ஒரு "மூலை"
மூளை - உடலின் ஒரு பாகம்
மூழை - அகப்பை
வலி - நோய்
வளி - காற்று
வழி - பாதை
வால் - Tail
வாள் - ரம்பம்
வாழ் - வாழி
விலா - விலா எலும்பு
விளா - விளாமரம்
விழா - திருவிழா
வேலை - தொழில்
வேளை - பொழுது.
***************
முன்றைய பதிவுகளில் வடசொற்கள், அரபி, பாரசீகம் போன்ற மொழிகளைப் பார்த்தோம்..
கீழே தமிழில் பயன்படுத்தப்படும் தெலுங்கு சொற்களும் நிகரான தமிழ்ச்சொற்களும்...
அப்பட்டம் - கலப்பில்லாதது
ஆஸ்தி - செல்வம்
எக்கச்சக்கம் - மிகுதி
ஏடாகூடம் - ஒழுங்கில்லாமை
ஏராளம் - மிகுதி
ஒய்யாரம் - குலுக்கு நடை
கச்சிதம் - ஒழுங்கு
கெட்டியாக - உறுதியாக
கெலிப்பு - வெற்றி
கேப்பை - கேழ்வரகு
சந்தடி - இரைச்சல்
சரக்கு - வாணிகப் பொருள்
சாகுபடி - பயிரிடுதல்
சொகுசு - நேர்த்தி
சொச்சம் - மிச்சம்
சோலி - வேலை
தாறுமாறு - ஒழுங்கின்மை
துரை - பெரியோன்
தெம்பு - ஊக்கம்
தொந்தரவு - தொல்லை
நிம்மதி - கவலையின்மை
மச்சு - மேல்தளம்
மடங்கு - அளவு
வாடகை - குடிக்கூலி
வேடிக்கை - காட்சி..
சீயக்காய், சிகைக்காய் எது சரியான சொல்? அடுத்த பதிவில்..
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்...

6 comments:

பழமைபேசி said...

தொடருங்கள் சகோதரா!

கிள்ளிவளவன் said...

mikavum nandru. vazthukal....

ரெட்மகி said...

அண்ணே அத்தனையும் அருமை ....
தொடரட்டும் உங்கள் பணி....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
பழமைபேசி said...
தொடருங்கள் சகோதரா!
//

வாங்க பழமைபேசி அண்ணே..
உங்க ஆதரவிற்கு நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கிள்ளிவளவன் said...
mikavum nandru. vazthukal....
//

//
ரெட்மகி said...
அண்ணே அத்தனையும் அருமை ....
தொடரட்டும் உங்கள் பணி....
//
வாங்க கிள்ளிவளவன், ரெட்மகி..

கண்டிப்பா தொடருகிறேன்.. தங்கள் ஆதரவுடன் :)

க.பாலாசி said...

நான் தூய தமிழ்னு நெனைக்கிற எவ்ளோ சொற்கள் இங்க கலப்புச்சொற்களா இருக்கு... மிக்க நன்றிங்க...இப்பத்தான் படிக்கிறேன்...

Related Posts with Thumbnails