Thursday, December 31, 2009

பழநி - பஞ்சாமிர்தமும் சிபாரிசில் தரிசனமும்..

பழநி!!

இந்த ஊரிற்குத் தான் எத்தனை முகங்கள், எத்தனை அடையாளங்கள், எத்தனை சிறப்புகள்!! தூங்கா நகரம், அதிகமாகப் பக்தர்கள் குவியும் நகரம், அதிகமாகச் சிறு வியாபாரிகள் வசிக்கும் நகரம், சித்தர்கள் வாழ்ந்த இடம், கொடைக்கானல், மூணாறு, வால்பாறை போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலிருக்கும் நகரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

பழநி என்றவுடன் நினைவிற்கு வருவது பழநி முருகன் மலைக்கோவில், பழநிக்கே உரிய ஆராவாரம், காவிடிகளைத் தூக்கிச் செல்லும் பக்தர்கள், எங்கே பார்த்தாலும் "அரோகரா" என்ற சத்தத்துடன் ஆடிக்கொண்டே செல்லும் பக்தர்களும் தான்!! மேளதாளத்தையும் ஆரவாரத்தையும் கேட்கும் பொழுதே நமக்குள் ஒரு புல்லரிப்பும் வந்துவிடுகிறது!!

கோவிலிற்குச் செல்வதால் ஏற்படும் நிறைவும், மேளதாளமும், ஆரவாரமும் சிலிப்பும் சிறு வயதிலிருந்தே பிடித்துவிட்டதாலோ என்னவோ நானும் ஊரிற்குச் செல்லும் பொழுதெல்லாம் பழநி மலைக்கோவிலிற்குச் சென்று விடுவேன். அரைமணி நேரம் பயணதூரத்தில் என் ஊர் அமைந்துள்ளது ஒரு வசதி.

அதுவும் அதிகாலையில் மலைக்கோயிலைக் காணும் காட்சி அருமையான அனுபவத்தைக் கொடுக்கும். மலைக்குன்று முழுவதும் மின்சார ஒளியில் பிரகாசிக்க பின்புறத்தில் கொடைக்கானல் மலைத்தொடரைப் பார்ப்பது மிகவும் அலாதியானது. அப்படியே மலைக்கோயிலின் அழகை ரசித்துக்கொண்டே மலையை நோக்கிச் செல்வது என் வழக்கம்.

ஆனால், இதே அளவு மகிழ்ச்சி புதிதாகப் பழநிக்கு புதிதாக வருபவர்களுக்கும் இருக்குமா என்றால் ஐயமாவே இருக்கிறது!! பழநி பேருந்து நிலையத்தை அடைந்தவுடனே தரகர்களின் தொல்லை துவங்கிவிடுகிறது.

"சார்.. கோவிலுக்குப் போகனுமா?" என்றும் "நம்ம கடையில எல்லா (??) வசதியும் இருக்குது. இங்கேயே உங்க பொருட்களை வைத்துவிட்டுச் செல்லலாம்" என்றும் கேட்கத் துவங்குகிறார்கள்.மலைக்கோவிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்குமிடத்தில் "இங்கே காலணிகள் பாதுகாக்கப்படும்" என்ற விளம்பரப் பலகையை வைத்திருப்பவர்கள், சந்தனத்தை வைத்துவிட்டு ஐந்து ரூபாய் வாங்கும் நபர்கள், "இந்த வேல உண்டியல்ல போடுங்க தம்பி" என்று கூறும் நபர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

முன்பெல்லாம் மலையை ஏறும் பொழுது பக்திப்பாடல்களைக் கேட்க நேரிடும். ஆனால் இப்பொழுதோ கேட்பதெல்லாம் பஞ்சாமிர்தம் விளம்பரங்கள் தான்!! தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என்று ஐந்து மொழிகளில் விளம்பரங்கள்."தி பஞ்சாமிர்தம் இஸ் மேட் ஆஃப் ஹை குவாலிட்டி ஹில் பனானா, டேட்ஸ், சுவீட் வித் ஆட்டோமேட்டிக் மெசின்ஸ்" என்று கூறுவதைக் கேட்கும் பொழுது பழநி மலைக்கோவிலிற்கு வருவதே ஏதோ பஞ்சாமிர்தம் வாங்கத்தான் போலவென்று தோன்றுகிறது.

மலையை ஏறியவுடன் இறைவன் சன்னதிக்கு செல்வதற்கு தர்ம தரிசனம், சிறப்பு வழி (பத்து ரூபாய் கட்டணம்), தனிச் சிறப்பு வழி ( நூறு ரூபாய் கட்டணம் ) என்று வழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் செல்லும் தொலைவை மட்டுமே குறைப்பதாக உள்ளன.

நேற்று நான் சென்ற பொழுது தனிச் சிறப்பு வழியில் சென்றேன். நாம் செலுத்தும் கட்டணம் அன்னதானம் போன்ற திட்டத்திற்குச் செல்லும் என்று நம்பிக்கையால் தனி வழியில் அல்லது சிறப்பு வழியில் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். அந்த வழியில் செல்வதற்கு வரிசையில் நின்றிருந்தவர்களுள் சிலரது கையில் நுழைவுச்சீட்டிற்குப் பதிலாக விண்ணப்பத்தை வைத்திருந்தனர்.

அது என்ன என்று விசாரித்த பொழுது "எங்க ஊரு எம்.எல்.ஏ. லெட்டர் கொடுத்திருக்கிறாரு" என்று விண்ணப்பத்தைக் காண்பித்தார்..

" இந்த விண்ணப்பத்தை வைத்திருப்பவர் என் உறவினர். அவரும் குடும்பத்தாரும் நல்ல (?) படியாக தரிசனம் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று இருந்தது.

இந்த விண்ணப்பத்தை வைத்திருந்தவருடன் ஐந்து பேர் வந்திருந்தனர். அனைவரையும் உள்ளே அனுமதிக்க கோயில் ஊழியர்  50 ரூபாய் பெற்றுக்கொண்டார். இன்னும் சிலரும் இதே போல வழியில் வந்ததைப் பார்த்த பொழுது எனக்கே வெட்கமாக இருந்தது.

வரிசையில் நின்று ஆண்டவன் சன்னதிக்கு அருகில் செல்லும் பொழுது சில நபர்கள் நின்று கொண்டு "சீக்கிரம் போங்க சீக்கிரம் போங்க" என்று அதற்றிக்கொண்டே இருந்தனர். "அரோகரா" சத்தத்திற்கு பதிலாக "சீக்கிரம் போங்க"வென்று கூவுகிறார்களோ என்று நினைத்தவாறே வெளியில் வரும் பொழுது "தட்சனை போடுங்க" என்று திருநீறு கொடுக்கும் (?) நபர், தட்டில் விழும் பணத்திற்கு ஏற்றவாறு திருநீறைக் கொடுத்தார். தட்சனை போடாத எனக்குச் சிறிதளவு திருநீறே கிடைத்தது.

தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால் முருகன் மயிலின் சிலை இருக்குமிடத்தில் "பஞ்சாமிர்தம் ஸ்டாலை" வைத்திருந்ததால் முன்பு மயிலைக் கும்பிடும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்குவதிலேயே கவனமாக இருந்தார்கள்.


சில நிமிடங்கள், பழநி மலையில் அமர்ந்துகொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்துக்கொண்டே மலை ரயில், குதியாட்டம் போடும் குதிரைச் சவாரி, பங்குனி உத்தரம், கோவில் யானைகள்,பழநி மலையருகே இருக்கும் இடும்பர் மலை, இடும்பர் மலைக்குக் கீழே இருக்கும் தாமரைக் குளங்கள் என்று சிறு வயது நினைவுகள் தோன்றி மறைந்தன.

நேரக்குறைவின் காரணமாக இப்பொழுதெல்லாம் பழநி மலைக்கோவிலிற்கும், திருஆவினங்குடிக்கு மட்டுமே செல்கிறேன். குதிரைச் சவாரி செய்யலாம் என்றால் குதிரை வண்டிகளைப் பார்ப்பதே அரிதாகிறது. அப்படிப் பார்க்க நேர்ந்தாலும், குதிரையும் குதிரை வண்டிக்காரரும் சோர்வாகவே காணப்படுகிறார்கள்.


பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு குதிரைவண்டியைப் பார்த்ததும் புகைப்படமெடுத்தேன். "டீ குடிக்க காசு கொடு சாமி"என்று குதிரை வண்டிக்காரர் கேட்டார். மலைக்கோவிலில் தட்சனையாக போட வைத்திருந்த 5 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தேன்.

வண்டிக்காரருக்கு டீ, குதிரைக்கு??


*************************************************************************
..

Tuesday, December 22, 2009

அனானிகள், ஆட்சென்ஸ், கருத்துச் சுதந்திரம் - ஈரோடு சங்கமம் - கலந்துரையாடல்

கலந்துரையாடல்களில் அனைவரது கவனத்தையும் சிதறாமல் வைத்திருக்க முடியுமா? முடியும் என்றே தோன்றுகிறது ஈரோடு மாநகரில் நடைபெற்ற பதிவர்கள் & வாசகர்கள் சந்திப்பில் நடைபெற்ற கலந்துரையாடலைப் பார்த்த பொழுது..

4 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி வாழ்த்துப்பாடல், வரவேற்புரை, சிறப்புரைகள், வாழ்த்துரை என்று சீரே நடைபெற்றது. யார் யார் என்னென்ன தலைப்புகளில் பேசினார்கள் என்பதைப் பற்றி முந்தைய இடுகையில் குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பிறகு கலந்துரையாடல் ஆரம்பம் ஆனது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழி நடத்த அன்பர்கள் லதானந்த், பழமைபேசி, கேபிள் சங்கர், அப்துல்லா, வெயிலான் மற்றும் ஸ்ரீதர் மேடையேறினர்.
அரங்கில் இருப்பவர்கள் கேள்விகளைக் கேட்கலாம் என்று கூறியவுடன் வந்த முதல் கேள்வி அனானிகள் பற்றித்தான்.

அனானிகளை என்ன செய்வது? அனானிகளின் பின்னூட்டத்தை மட்டறுப்பது தேவையா? போன்ற கேள்விகள் எழுந்தன.

அனானிகளின் எதிர்மறைக் கருத்துகளைத் தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது என்று சிலரும், முகமே இல்லாமல் பின்னூட்டமிடுபவர்களுக்கு எதற்கு மரியாதை என்று சிலரும் காரசாரமாக விவாதித்தனர். இடையே அனானிகளின் பின்னூட்டங்களில் உள்ள கருத்துகளுக்கு பதிவுத்தளத்தை உருவாக்கியவர் என்ற முறையில் பதிவரே பொறுப்பு என்று கூறப்பட்டது.

பிறகு தமிழில் பதிவெழுதுவோரால் ஏன் ஆட்சென்ஸைப் பயன்படுத்த முடியவில்லை என்ற விவாதம் நடந்தது. ஆட்சென்ஸைப் பயன்படுத்த வேண்டுமென்றால், நம் பதிவின் மையக்கருத்துடன் ஒத்த தமிழ்த் தளங்களைச் சேர்க்க வேண்டும். தமிழில் எத்தனை தளங்கள் ஆட்சென்ஸைப் பயன்படுத்தத் தயாராக உள்ளனர்? என்ற கேள்வியைக் கேட்ட பொழுது பதில் இல்லை!! அன்பர் கேபிள் சங்கர் கடைப்பிடித்து வரும் முறை தான் இன்றைக்கு விளம்பர வருமானம் கிடைக்க வழி என்று தோன்றியது.

அண்மையில், விக்ரம் புத்தி என்ற ஐஐடி பட்டதாரி அமெரிக்காவின் முன்னாள் அதிபரைச் சாடி அவதூறாகக் குறிப்பிட்டு இருந்த கருத்துகளுக்காக 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையைச் சந்தித்து உள்ளார். இது போலவே சிலவமயம் பதிவர்களும் தங்கள் கருத்துகளை அவதூறாக வெளியிடுவதைப் பார்க்க முடிகிறது.

கருத்துச் சுதந்திரம் தேவை என்ற போதிலும், பதிவர்கள்  தங்கள் கருத்துக்களையும் வெளியிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றிக் கூறும்படி நான் கலந்துரையாடல் நடத்துனர்களைக் கேட்டுக்கொண்டேன்!! அன்பர்கள் என்னையே கூறுமாறு கேட்டுக் கொண்டதால் நானே சில சிக்கல்களைக் கூறினேன். இது குறித்த பதிவை வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எழுதியுள்ளதை பதிவர் நந்து நினைவு கூற, அந்தப் பதிவில் உள்ள கருத்துகளை விளக்கினேன்.

பதிவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது!! கொஞ்சம் பயமுறுத்துவது போலத் தெரிந்தாலும் வழக்கறிஞர் பிரபு குறிப்பிட்டுள்ள கருத்துகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது உண்மை!! அந்தப் பதிவு இதோ..

இந்தக் கலந்துரையாடல் நடக்கும் பொழுது "நம் பதிவுகள் அனைத்தும் தமிழக அரசு உளவுத்துறையினரால் பார்க்கப்படுகிறது" என்று அன்பர் அப்துல்லா கூறியது பலருக்கு கிர்ர்ர்ர்ரென்று இருந்தது.

"நம் கருத்துகளைச் சரியான முறையில் ஆனால் யாரையும், எந்த அமைப்பினரையும் அவதூறு செய்யாமல் வெளியிடுவது மிகவும் தேவையான ஒன்று. அதனால் எதற்கும் பயப்பட வேண்டாம்" என்று அன்பர் பழமைபேசி கூறியது பரவலாக வரவேற்கப்பட்டது.

இதையடுத்து அன்பர் வால்பையன் ஹாக்கிங் செய்வதில் இருந்து தவிர்க்க செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றியும், எவ்வாறு நம் ஜிமெயில் பயனர் முகவரியும் கடவுச்சொல்லும் சூரையாடப்படுகிறது என்பதைப் பற்றியும் விளக்கினார்.

கலகலப்பாகவும் பயனுள்ளதாகவும் சென்ற கலந்துரையாடல் 7 மணியளவில் முடிவிற்கு வந்தது. அன்பர் கதிரின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவிற்கு வந்தது. பிறகு, பரவலாக அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்கையில், ஈரோடு அன்பர்கள் இரவு விருந்திற்கு அழைத்தனர். விருந்திற்குச் செல்லும் முன் அனைவருக்கும் இலவசமாக ஈரோடு வரலாறு பற்றிய நூலை வழங்கினார்கள். அகநாழிகை பதிப்பகத்தில் வெளியான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.


சைவம், அசைவம் என இருவகையான உணவை பாக்கு மட்டைத் தட்டின் மேல் வாழை இலையுடன் பரிமாறியது எங்கள் (கொங்கு) மண்ணின் பாரம்பரியத்தை நினைவூட்டியது.

எங்களுக்கு மீண்டும் 3 மணி நேரப்பயணம் இருந்ததால் எட்டு மணியளவில் அன்பர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

வழக்கமாக விடுமுறை நாட்களில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் செலவழித்த நிறைவு ஈரோட்டில் இருந்து கிளம்பிய பொழுது எங்களுக்கு ஏற்பட்டது!! தமிழால் எனக்கு இத்தனை உறவினர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று நினைவும் நிறைவும் ஏற்பட்டது!!

ஈரோடு அன்பர்களுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!!

******************


கலந்து கொண்ட அன்பர்கள்:

(சென்னையில் இருந்து)

கேபிள் சங்கர், தண்டோரா, பொன்.வாசுதேவன், பட்டர்பிளை சூர்யா, புதுகை அப்துல்லா, ரம்யா, வானம்பாடிகள்

( திருப்பூரில் இருந்து )

வெயிலான், ஈரவெங்காயம், சொல்லரசன், பரிசல்காரன், முரளிகுமார் பத்மநாபன், நிகழ்காலத்தில், ராமன்

( மதுரையில் இருந்து )

ஸ்ரீதர், சீனா, தேவராஜ் விட்டலன், ஜெர்ரி, கார்த்திகைப்பண்டியன்

(ஈரோட்டில் இருந்து)

ஆரூரன், கதிர், பாலாசி, வால்பையன், வசந்தகுமார், அகல்விளக்கு, கார்த்திக், கோடீஸ்வரன், நந்து, சண்முகராஜன், தாமோதர் சந்துரு, சங்கமேஸ்வரன், சுமஜ்லா, ஈரோடுவாசி, நண்டு நோரண்டு, சிவாஜி,வி.என்.தங்கமணி

(உடுமலையில் இருந்து)

செந்தில்வேலன், நாகா, உடுமலை.காம் சிதம்பரம்

(கோவையில் இருந்து)

தமிழ்மணம் காசி, லதானந்த், பழமைபேசி, என். கணேசன், சங்கவி

கரூரில் இருந்து இளையகவி, நாமக்கலில் இருந்து முனைவர் இரா.குணசீலன், நாமக்கல் சிபி, பெங்களுரில் இருந்து பட்டிக்காட்டான், தாராபுரத்தில் இருந்து அப்பன் மற்றும் வாசகர்கள். (அன்பர்கள் பெயர் விடுபட்டிருந்தால் தெரிவிக்கவும்.)

...

Monday, December 21, 2009

ஈரோடு பதிவர்கள் சங்கமம் - நடந்தது என்ன?

பள்ளிநாட்களை நினைவுபடுத்தியது ஈரோடு பதிவர்கள் & வாசகர்கள் சங்கமம் பற்றி வெளியான அறிவிப்பு!!

பள்ளி நாட்களில், காலாண்டுத் தேர்வுகள் நெருங்கி வரும் வேளையில் பள்ளி விடுமுறை நாட்களைப் பற்றியும், விடுமுறை நாட்களில் உறவினர்களையும், நண்பர்களையும் எவ்வாறு சந்திப்பது, எங்கே செல்வது என்றெல்லாம் எண்ணங்கள் எழும். ஆனால் இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் பணியாற்றி வருவதால் உறவினர்களையும், கூட்டாளிகளையும் சந்திப்பது கடினமாகி விட்டது.

எப்பொழுது அது போன்ற ஒரு சந்திப்பு நிகழும், மகிழ்ச்சியாக கூத்தடிப்பது என்று ஏக்கத்துடன் நினைத்துக் கொண்டிருக்கையில், "நாங்க இருக்கறமுல்ல கண்ணு" என்று வெளியானது ஈரோடு அன்பர்களின் அறிவிப்பு!! துபாயில் இருந்து கிளம்பியதிலிருந்தே பதிவர் சந்திப்பு பற்றிய எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. சனிக்கிழமை ஊரிற்கு வந்தவுடன் ஈரோடு-கதிரை அழைத்து சந்திப்பில் கலந்து கொள்வதை உறுதி செய்தேன்.

பிறகு ஞாயிறு மதியம் 12 மணியளவில் உடுமலை.காம் சிதம்பரம் மற்றும் நாகாவுடன் மகிழுந்தில் கிளம்பினோம். உடுமலையில் இருந்து மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் வழியாக பசுமை கொஞ்சும் சூழலில் கதையடித்துக்கொண்டே பயணித்து ஈரோடை 2:30 மணியளவில் சேர்ந்தோம். பழமைபேசி, கதிர் மற்றும் பாலாசி எங்களை வரவேற்றனர். பிறகு மதிய உணவை முடித்துக்கொண்டு சங்கமம் நடக்கவிருந்த அரங்கத்திற்குச் சென்றோம்.

அரங்கிற்குச் செல்லும் வழியில் மதுரை அன்பர்களான கார்த்திகைப்பாண்டியன், "வலைச்சரம்" சீனா, ஜெர்ரி ஈசானந்தா, ஸ்ரீதர், தேவராஜ் விடலன் மற்றும நாமக்கல் சிபி, நந்து ஆகியோரை சந்தித்தோம். அனைவரும் அரங்கை அடைந்த பொழுதே அரங்கம் நிரம்ப ஆரம்பித்திருந்தது. சங்கமம் விழாக்குழுவினர் சிறப்பாக ஒவ்வொரையும் வரவேற்று தேநீர் கொடுத்து உபசரித்தனர்.

சங்கமத்திற்கு வந்திருந்த அன்பர்கள் பலரிடமும் சுயமாக அறிமுகம் செய்து கொண்டு பேசிக்கொண்டிருக்கையில் நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். என்னையும் ஒரு தலைப்பில் பேச அழைத்திருந்ததால் நானும் மேடையில் அமர்ந்தேன். தோழி முருக. கவியின் தமிழ் வணக்கத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அரங்கில் இருந்த அனைவரும் சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டனர்.
அன்பர் ஆரூரன் விசுவநாதன் தனது வரவேற்புரையில் பதிவு செய்வதன் தேவையை  அழகாக எடுத்துரைத்தார். அவரது உரையில் ஈரோடு அருகே ஓடும் "கலிங்க"ராயன் வாய்க்கால் எப்படி "காளி"ங்கராயன் வாய்க்கால் என பெயர் மாறியது என்று கூறினார்.

கதையெழுதி என்ற தலைப்பில் அன்பர் வசந்த்குமார் விரிவாக கதையெழுதுவதைப் பற்றி விளக்கினார். "ஒரு விசயத்தை ஒரு வரியிலும் சொல்லலாம், சில பத்திகளிலும் சொல்லலாம் ஆனால் காட்சிகளையும், சூழலையும் வர்ணிப்பதன் மூலம் வாசகர்களுக்கு நல்ல அனுபவத்தை தர இயலும்" என்று கூறியது சிறப்பு!!

எதிர்பார்ப்புகள் என்ற தலைப்பில் வலைச்சரம் சீனா அவர்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகள், பதிவர்களின் எதிர்பார்ப்புகள் என்ற இரண்டாகப் பிரித்து நகைச்சுவையாகக் கூறினார். பதிவர்களின் எதிர்பார்ப்புகளைப் பற்றி "பிட்டு பிட்டு" வைத்த பொழுது அரங்கத்தில் சிரிப்பொலி கேட்டது.

தொழில்நுட்பத்தேவை என்ற தலைப்பில் பதிவர் சுமஜ்லா அவர்கள் பதிவுத்தளங்களில் உள்ள சூட்சமங்களைப் பற்றி விளக்கினார். "ஒன்றிற்கும் மேலான பதிவுத்தளங்களை வைத்திருப்பவர்கள் எப்படி தளங்களை இணைப்பது என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூறினார். "நான் ஒரு ஆங்கிலப் பட்டதாரி, கணினித்துறையைச் சார்ந்தவர் அல்ல" என்று கூறிய பொழுது சுமஜ்லாவின் உழைப்பு தெரிந்தது.

பதிவர்கள் கடமை என்ற தலைப்பில் பேச ஆரம்பித்த அன்பர் பழமைபேசி, "யூதர்களும், குஜராத்திகளும் எப்படி தங்கள் இனத்தவர்க்கு ஒரு குறை என்றால் உலகின் எந்த மூலையிலிருந்தும் உதவி செய்யத் துடிக்கின்றனர்" என்பதையும் "தமிழர்களுக்கு இந்த உணர்வு இல்லாததைப் பற்றியும் கூறினார். ஆனால் இணையமும், வலைப்பூக்களும் மொழி உணர்வை வளர்ப்பதில் உதவுவதைப் பற்றி தன் பாணியில் கூறி அசத்தினார்.

உலகத்திரைப்படங்கள் என்ற தலைப்பில் அன்பர் வண்ணத்துப்பூச்சியார் சூர்யா தன் கருத்துகளைக் கூறினார். உலகத்திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டியது நம் திரைப்படங்கள் தான் என்று கூறிய பொழுது எங்கும் கைத்தட்டல்கள்!! அமீரகத்தில் இருந்த பொழுது தான் உலகத் திரைப்படங்களைப் பார்க்கும் ஆர்வம் வளர்ந்தது என்பதைக் கூறினார்.

கணினிப் பட்டறை என்ற தலைப்பில் அடியேன் அமீரகத்தில் அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம் பற்றிய செய்திகளையும், விக்கிப்பீடியாவில் தமிழில் கட்டுரைகளில் எண்ணிக்கை பற்றியும் எடுத்துரைத்தேன். தமிழில் பெருமளவில் கட்டுரைகள் வராமல் இருப்பதற்கு எழுத்துரு, நிரலிகள் பற்றிய ஐயங்கள் ஒரு முக்கிய காரணம். எழுத்துரு, தமிழில் தட்டச்சுவதற்குத் தேவையான நிரலிகள் பற்றிப் பல பயிலரங்கங்களை நடத்துவது இன்றைய தேவை!!

சமூகத்தில் நம் பங்கு என்ற தலைப்பில் தன் கருத்துகளைப் பதிவர் ரம்யா அழகாக எடுத்துரைத்தார்.

வலையிலிருந்து புத்தகம் என்ற தலைப்பில் அன்பர் அகநாழிகை பொன்.வாசுதேவன், "இன்று நாம் எழுதுகிற பல பதிவுகளை பதிவர்கள் அல்லாத வாசகர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டியதன் தேவையைப் பற்றியும், அதற்குத் தகுதியுள்ள பதிவுகளைப் புத்தகங்களாக வெளியிடுவது மிகவும் தேவையான ஒன்று" என்று கூறினார்.
பிறகு ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமத்தை அன்பர்கள் தண்டோரா, வானம்பாடிகள், அப்துல்லா, பரிசல்காரன், ஜெர்ரி , கார்த்திகைப் பாண்டியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

வாழ்த்துரையை முதலில் வழங்க வந்த முனைவர் செ.இராசு அவர்கள் கொங்கு மண்டலத்தின் சரித்திரத்தைப் பற்றியும் கல்வெட்டுகள், தொல்லியல் துறை பற்றியும் விரிவாக விளக்கினார். இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டு தொல்லியல் துறையின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மணம் காசி அவர்கள் வலைப்பதிவுகளின் இன்றைய நிலையைப் பற்றியும், வெகுவாக பல துறைகளைச் சார்ந்தவர்களின் பார்வையையும் ஈர்த்து வருவதைப் பற்றியும் தனது வாழ்த்துரையில் கூறினார். அன்பர் லதானந்த் மற்றும் சஞ்சய்காந்தியுடன் நாமக்கலில் தான் கலந்து கொண்ட பயிலரங்கத்தைப் பற்றிக் கூறிய பொழுது பதிவுலகின் வீச்சு மேலும் விளங்கியது. இதைப் பற்றி அன்பர் சஞ்சய் காந்தியின் பதிவில் காண்க!!

மேடையில் இருந்தவர்களின் உரை முடிந்தவுடன் கலகலப்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.

இந்த இடுகையின் நீளம் காரணமாக கலந்துரையாடல் மற்றும் இதர நிகழ்வுகளைப் பற்றிய நினைவுகள் அடுத்த இடுகையில்...


..

Sunday, December 13, 2009

கல்லாபுரம் - அந்த நாள் வருமா?

மாலை நேரம். சூரியன் மறைந்து சில நிமிடங்களே ஆகியிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகிலிருக்கும் கிராமம். ஊரிற்கே பச்சை நிறச் சாயம் அடித்திருப்பதைப் போல பசுமை சூழ்ந்திருந்தது. சிறிதும் பெரிதுமாக தென்னை மரங்கள், மாமரங்கள், வேப்பமரங்கள் என எங்கும் பச்சைக் கம்பளம் போர்த்தியதைப் போல பசுமை!!

நவம்பர் மாதம் என்பதால் முன்பனி சூழ ஆரம்பித்திருந்தது. பனிக் காலத்தில் கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் புகையும் கூட அவ்வளவு அழகு!! அந்தப் புகையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் கூட அவ்வளவு இனிமை.

இப்படி ஒரு மாலைப்பொழுதில், உங்கள் உறவினர்களுடன் ஒரு ஆற்றுப் பாலத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஆற்றின் நீர் அசையாமல் நின்று கொண்டிருக்கிறது. தூரத்தில் தெரியும் அணையின் நிழல் ஆற்றில் தெளிவாகத் தெரியும் அளவிற்கு நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது! அங்கிருக்கும் மரங்களின் கூடுகளில் அடையச் செல்லும் பறவைகள் சத்தம் என ஏதோ வேறு உலகிற்கு வந்து விட்ட உணர்வு!!

இது போல ஒரு காட்சியைத் தினமும் பார்த்து வருபவருக்கு மன உளைச்சல் ஏற்படுமா?

ஆம்!! இது போல ஒரு காட்சியைப் பார்த்தது உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் என்னும் ஊரில் தான்!! உடுமலை அருகே இருக்கும் என் ஊரான மடத்துக்குளத்தில் இருந்து இருந்து சரியாக 25 நிமிடப் பயண நேரத்தில் இருக்கும் ஒரு ஊர். நான் பல முறை அமராவதி அணைக்குக் கல்லாபுரம் வழியாகச் சென்றிருந்தாலும், இந்த முறை மிகவும் கவனிக்கச் செய்தது.


வழக்கமாக என் வீட்டிற்கு வரும் உறவினர்களையும் நண்பர்களையும் ஓரிரு மணி பயண நேரத்தில் இருக்கும் கொடைக்கானலிற்கோ, மூணாறிற்கோ, வால்பாறைக்கோ கூட்டிச் செல்வதுண்டு. இந்த முறை ஒரு மாறுதலாக கொமரலிங்கம், பெருமாள்புதூர், எலையமுத்தூர், கல்லாபுரம் என அழகிய கிராமங்கள் வழியாக அமராவதி அணையை நோக்கிக் கூட்டிச் சென்றேன்.

போகும் வழியில் பசுமையான வயல்வெளிகள், வயல்களில் மேய்ந்து வரும் மயில்கள், தூரத்தில் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள், மலைகளின் நடுவே மறையும் சூரியன் என நாங்கள் பார்த்த காட்சி வேறெங்கும் கிடைக்காது!!அப்படி அமராவதி அணைக்குப் போகும் வழியில் வரும் கிராமம் தான் கல்லாபுரம்.
அமராவதி அணையில் இருந்து வரும் தண்ணிரை முதலில் பயன்படுத்துவது இந்த ஊர் மக்கள் தான்!! இவர்கள் குடிக்கும் தண்ணிரில் குளோரினோ, வேறு எந்த வேதியப் பொருட்களோ கலப்பதில்லை!! தண்ணீரில் இருந்த தூய்மை, காற்றின் இருந்த ஈரப்பதம், தூரத்தில் கேட்ட கோயில் மணியோசை, பறவைகளின் இறைச்சல் என அந்தப் பாலத்தின் இயற்கைக் காட்சியைப் பார்த்த எங்களுக்கு அமராவதி அணைக்குச் செல்ல மனமில்லாமல் போனது!!அப்படியே கல்லாபுரம் கிராமத்திற்குள் செல்லும் பொழுது ஒரு பெட்டிக்கடையில் குழந்தைகள் அழகாக பலூன்களை ஊதி விளையாடிக் கொண்டிருந்தனர். எங்கள் காரைப் பார்த்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர்."இந்தக் குழந்தைகளுக்குத் தெரியுமா அவர்கள் எவ்வளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்" என்று நினைத்துக் கொண்டேன்.

"மாப்ளே, இந்த ஊருல இடமெல்லாம் என்ன விலைக்குப் போகுது" என் மைத்துனர் என்னிடம் கேட்டார்.

"ஒரு ஏக்கர் தோப்பு 10 இலட்சம் வரையில் போகிறது" என்றேன்.

"பேசாம மெட்ராஸ் வீட்ட விற்றுவிட்டு இங்கே வந்திடலாமா?"என்றார்.

"மாமா, ஒவ்வொரு முறையும் ஊரிற்கு வரும்பொழுது வேலையை விட்டு வந்து விடலாமான்னு நினைச்சுட்டே தான் இருக்கிறேன். ஆனா அந்த நாள் எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை!!" என்றேன்.

அழகான, பசுமையான ஊரைச் சேர்ந்த எனக்கு, பொருளாதாரம், வேலை என பல காரணங்களுக்காக கட்டிடக் காடுகளில் பணி புரிய நேர்ந்தாலும், எப்பொழுது ஊரிற்குச் செல்வோம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது. கல்லாபுரம் போன்ற கிராமங்களில் வசிப்பவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? ஊரிற்குத் திரும்பும் அந்த நாள் எப்பொழுது வரும்?

***************************************************

பக்ரீத்தை முன்னிட்டு அலுவலகத்தில் விடுமுறை ஒரு வார காலத்திற்கு கொடுத்திருந்தனர். "ஹே.. லீவு விட்டாச்சு"னு துபாயில் இருந்து ஊரிற்குப் போன பொழுது பார்த்த காட்சி தான் இந்த இடுகை!!

**

Saturday, December 12, 2009

துபாய் - அரேபிய இரவும் இடுப்பாட்டமும்..


அமீரகத்தில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. இதை ஊரிலுள்ள நண்பர்களிடம் கூறினால், "என்னது பாலைவன தேசத்தின் குளிரடிக்குமா?" என்று கேட்கிறார்கள். சும்மா இல்லீங்க, நல்லாவே குளிரடிக்கும். நகரப்பகுதிகளில் இரவு நேரங்களில் 15 டிகிரி வரையிருக்கும் குளிரின் அளவு, பாலைவனப்பகுதிகளில் 5 டிகிரி அளவிற்கு கடும் குளிரடிக்கும்!!

அமீரகத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவர்களுக்கு ஏற்ற மாதங்கள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை எனலாம். துபாய் வருபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய விசயங்களில் அரேபிய இரவும் இடுப்பாட்டம் ஒன்று!!

டிசம்பர் மாதம் வந்து விட்டது என்பதை நினைவு கூறும் மற்றுமொரு விசயம், அலுவலகங்களில் ஏற்பாடு செய்யும் விருந்துகளும், குழுச் சுற்றுலாக்களும் தான்!! சில வாரங்களுக்கு முன் கடலில் ஒரு சிறு பயணம் சென்று விட்டதால், இந்த முறை "பாப் அல் ஷாம்ஸ்" என்ற இடத்தில் அரேபிய இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு முன்பு சில முறை பாலைவனச் சவாரியையும், பெல்லி டான்ஸையும் (இடுப்பாட்டம்) பார்த்திருந்தாலும், அரேபிய இரவு விருந்திற்கு சென்றதில்லை.


பாப் அல் ஷாம்ஸ் கேளிக்கை விடுதி துபாய் நகர நடமாட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனங்களில் நடுவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தைத் தர வேண்டும் என்று புராதன அரேபியப் பொருட்கள், அரேபிய விளக்குகள், விரிப்புகள், மேஜைகள் என்று ஒவ்வொரு விசயத்தையும் கவனமாக அமைத்துள்ளார்கள்!!

பாப் அல் ஷாம்ஸ் விடுதிக்குள் வரும் பொழுதே ஏதோ பழங்கால இடத்திற்கு வந்து விட்ட உணர்வு ஏற்பட ஆரம்பித்தது. கட்டட அமைப்பு ஏதோ பழங்கால கோட்டை போல இருந்தது. நடந்து செல்லும் வழியெங்கும் இரானிய கம்பளங்களை விரிந்திருந்தனர். அரேபிய விருந்து நடக்கும் இடத்தின் நடுப்பகுதியில் ஒரு மேடையும், அதைச் சுற்றி மேஜைகளும் அமைக்கப்பட்டிருந்தது. குளிரிற்கு இதமாக அங்கங்கே விறகுகளை வைத்து நெருப்பையும் ஏற்றியிருந்தார்கள்.

நாங்கள் எங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் "சீஷா" என்றழைக்கப்படும் அரேபிய பைப் சிகர் வைக்கப்பட்டது. ஒவ்வொருவரும் மிண்ட், ஆப்பிள் என ஒவ்வொரு வகையை வாங்கி இழுக்க ஆரம்பித்தார்கள். நண்பர்களின் வற்புறுத்தலால் நானும் இழுத்துப் பார்த்தேன். பழக்கமில்லாததாலோ என்னவோ தொண்டையில் ஏதோ கரகரப்பு ஏற்பட்டு இருமல் வந்துவிட்டது!! சிகரட்களில் பஞ்சு செய்யும் வேலையை சீஷாவில் தண்ணிர் செய்கிறது. என்னுடன் வந்திருந்த அலுவலக அன்பர்கள் பலர் சில மணி நேரத்திற்கு சீஷாவை இழுத்துக்கொண்டே இருந்தார்கள்!! அவர்கள் இந்த நேரத்தில் குறைந்தது 300 சிகரட்கள் அளவு இழுத்திருப்பார்கள் என்று நண்பர் ஒருவர் கூறியது அதிர்ச்சியாக இருந்தது!!
உணவுகளை பஃப்பே ( Buffet ) முறையில் எடுக்க ஆரம்பித்த பொழுது எகிப்திய நடனம் ஆரம்பமானது. நீல நிற வண்ணத்தில் உடையை அணிந்து கொண்டு மேடையேறினார் நடனக் கலைஞர். மேடையேறியவுடன் இருந்த இடத்திலேயே கிறு கிறுவென சுழல ஆரம்பித்தவர் ஐந்து நிமிடங்களுக்கு நிற்காமல் ஆடியதைப் பார்த்த பொழுது பார்த்த எங்களுக்கு சுற்ற ஆரம்பித்தது. அரை மணி நேரத்திற்கு தனது சாகசங்களை வெளிப்படுத்திய பொழுது எந்த நாட்டுக் கலையும் எதற்கும் குறைந்ததல்ல என்ற பேச்சு எழுந்தது. பிறகு ஒவ்வொரு மேஜை அருகிலும் வந்து எங்களையும் ஆடவைத்துச் சென்றார்.

விருந்தில் இருந்த உணவு வகைகளில் அசைவமே அதிகமாக இருந்தது. ஆட்டக்கறி, மாட்டுக்கறி, கோழி, மீன் வகைகளில் உணவுகள் இருந்தது. நான் தீயில் வாட்டிய கோழிகளையும், ஹமுர் வகை மீன் துண்டுகளையும், கோழி பிரியாணியையும் எடுத்துக்கொண்டேன். இது போல பஃப்பேக்கள் நடைபெறும் பொழுது சாப்பிடும் அளவை விட இரண்டு மடங்கு வீணடிப்பதையும் பார்க்கத்தான் முடிகிறது.

எகிப்திய நடனம் முடிந்தவுடன் அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டு மேடையின் பின்புறம் அமைந்துள்ள பாலைவன மணலில் குடுக்கை விளக்கைப் பிடித்தவாரே ஒட்டகங்களை அழைத்துச் செல்கிறார். பிறகு குதிரையில் போர்வீரர்கள் போன்ற உடையணிந்து இரு அணியாகப் பிரிந்து சண்டையிடுகிறார்கள். இரவு நேரம், மங்கலான வெளிச்சம், நல்ல குளிர்க்காற்று, குதிரைச் சண்டை, ஒட்டகங்கள் என அரேபிய இரவு அருமையான அனுபவம் தான்!!


பிறகு, சிறிய அறிமுகத்துடன் இடுப்பாட்டக் கலைஞர் ( Belly dancer ) மேடையேறினார். அதிரும் அரேபிய இசைக்கு சிரித்தவாரே இடையை நளினமாக அசைக்க ஆரம்பித்தார். பளபளக்கும் உடை, துள்ளளால இசை, அதைவிடத் துள்ளும் இடுப்பு, மாறாத புன்னகை என ஒவ்வொரு ஆட்டம் முடியும் பொழுதும் கரகோசம் அடங்கவே சில நிமிடங்கள் பிடித்தன. பிறகு ஒவ்வொரு குழுவின் இருக்கைக்கு அருகே வந்து எங்களையும் உடன் ஆடவைத்துச் சென்றார். நம் திரைப்படங்களில் பல ரகசியாக்களின் ஆட்டத்தைப் பார்த்துப் பழகிய எனக்கு இந்த இடுப்பாட்டக் கலைஞரின் ஆட்டம் விரசமாகத் தெரியவில்லை.

ஆட்டம் நடக்கும் பொழுது பாப் அல் ஷாம்ஸ் விடுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எங்களையும் புகைப்படங்களை எடுத்தார். அவை இலவசமாகத் தருவார் என்று நினைத்திருந்தால், ஒரு புகைப்படம் 120 திர்ஹாம் என்றார். "போடா... இந்தப் பணத்திற்கு எங்கூருல எத்தனை படம் புடிக்கலாம் தெரியுமா" என்று சொல்லிவிட்டதால் நான் இருக்கும் புகைப்படங்கள் இல்லை!! அருமையான இரவின் நினைவு மனதில் இருக்குப் பொழுது புகைப்படம் எதற்கு?

அரேபிய இரவு விருந்து முடிந்த கிளம்பும் பொழுது நடுநிசியாகி இருந்தது. இரவு இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்த பொழுது மழை தூர ஆரம்பித்தது!! ஆமாங்க அமீரகத்தில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதற்கு இவர்கள் நட்டு வளர்க்கும் மரங்கள் தான் காரணம் என்று நண்பர் கூறினார்.

"பாலைவன தேசத்திலேயே மரங்களை நட்டு வளர்த்து மழை வருகிறது என்றால் நம்மூரில்...."

Related Posts with Thumbnails