Friday, October 8, 2010

நாட்டுப்புறப் பாடல்கள் - நினைவுகள்

சிறுவயது நினைவுகளை அசைபோடுகையில் ஓடியாடி விளையாடியது, ஆடிப்பாடித் திரிந்தது எல்லாம் நினைவிற்கு வருகிறது. ஆடிப் பாடிய பாடல்களுள் பெரும்பாலானவை தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்த நாட்டுப்புறப் பாடல்களையே. சிறு வயதில் பாடிய பாடல்களை இன்று நினைவு படுத்திப் பார்க்கையில் சில பாடல்களே நினைவில் நிற்கின்றன.  என் தாத்தா நாடகங்களில் நடித்த அனுபவங்களையும் அதில் வரும் பாடல்களையும் பாடிக் காட்டிய நாட்களில் அதை அப்பொழுது கேட்டு சிரித்து விட்டுப்போனது தான் மிச்சம். சிறு வயதில் அதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதில்லை.

என் தாத்தாவும் ஆத்தாவும் (பாட்டி) கிண்டலும் கேலியுமாகப் பாடிய பாடல்களில் முழுமையாக மண் வாசனை கலந்திருந்தது அன்று புரியவில்லை. வெளியூர்களில் பணியாற்றும் வேளையில் நம் மண்ணை நினைக்கும் பொழுது அவையாவும் மனதில் மின்னலாக வந்து செல்கின்றன. இன்று, அவர்கள் பாடிய பாடல்களில் நினைவில் நிற்பவை சொற்பமே!!

ஞாயிற்றுக் கெழமை திருடன் வந்தான்
திங்கட் கெழமை திருடிப் போனான்
செவ்வாய்க் கெழமை செயிலுக்குப் போனான்
புதன் கெழமை புத்தி வந்தது
வியாழக் கெழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கெழமை வீட்டிற்கு வந்தான்
சனிக் கெழமை சாப்புட்டுப் படுத்தான்.

மேலே குறிப்பிட்ட பாடல் எனக்கு கிழமைகளைச் சொல்லிக் கொடுக்கையில் என் பாட்டி எனக்குப் பாடிய பாடல். இன்னும் சின்ன வயதில் பாட்டி அவரது காலில் அமர வைத்து காலை மேலும் கீழுமாக அசைத்த படி பாடிய பாடல்..

குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சி குத்தடி ஜைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கா

பையன் வந்தாப் பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சுருக்குப் பையில போட்டுக்கோ..

பந்தல்ல பாகற்காய் இருக்கற வீடுகளே இல்லாத இன்றைய சூழல்ல இது போன்ற நாட்டுப்புறப்பாடல்கள் எங்கே பாடுவது என்று தோன்றினாலும் அவரவர்க்கு நினைவில் வரும் பாடல்களே பதிவு செய்து வைப்பது, நம் முன்னோரின் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் புரிந்து கொள்ள உதவும்.

நெருங்கிய உறவினர்கள் பலரும் பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பணியாற்றிவரும் வேளையில் வருடத்திற்கு ஒரு முறையோ இரு வருடத்திற்கு ஒரு முறையோ அனைவரும் ஒன்று கூடுவதுண்டு. அப்படிக் கூடும் பொழுது பெரியவர்களை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு. அப்படி வரும் பாடல்களில் இருக்கும் நையாண்டிக்குத்  தனி சுவை தான். என் மாமா ஒருவர் இது போன்ற பாடல்களைப் பாடுவார். அவரிடம் அண்மையில் "உங்களுடைய பாடல்களேல்லாம் நினைவில் உள்ளனவா?" என்று கேட்டதற்கு அவரது நினைவில் இருந்து வந்தவை சில பாடல்கள் மட்டுமே.

மாமரத்துக்கும் பூமரத்துக்கும் மயிலுக்கண்ணாடி
இந்த மங்கம்மா போடறது ஸ்டைலுக் கண்ணாடி
பாப்பாத்தா காப்பித் தண்ணி பஸ்ட் க்ளாஸு
போத்தனூரு வாழைப்பழம் புட்டு விளாசு

*
பாட்டி பாட்டி பாட்டி
வெத்தலை பாக்கு வேணுமா
காது நல்லா கேக்கல
பலமாச் சொல்லடா பேராண்டி

பாட்டி பாட்டி பாட்டி
போயிலை காம்பு வேணுமா
காது நல்லா கேக்கல
பலமாச் சொல்லடா பேராண்டி

பாட்டி பாட்டி பாட்டி
தங்க நகை வேணுமா
காது நல்லா கேக்குது
மெதுவா சொல்லடா பேராண்டி

என்ன தான் சினிமாப் பாடல்கள் வந்துவிட்டாலும் மண் வாசனை வீசும் பாடல்களுக்குத் தனி சுவை தான். நம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்!! சுவையான பாடல்கள் பலதும் வெளியே வரலாம்.

*

விளையாட்டுப் பருவத்தில் ஒவ்வொரு விளையாட்டிற்கு வாய்ப்பாட்டோ, பாடலோ பாடியதை நினைத்தால் நம் வாழ்வியலில் நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவிற்கு ஒன்று கலந்த ஒன்று என்று யோசிக்கத் தோன்றுகிறது.

கோலி குண்டு விளையாடும் பொழுது.. குழியில் குண்டைப் போட்டால் பத்து பாயிண்ட், மற்றவரின் குண்டை அடித்தால் பத்து பாயிண்ட் என்று ஒவ்வொரு பாயிண்டிற்கு ஒரு வரியுண்டு. இன்று நினைவில் இருப்பவை இவை மட்டுமே..

ஐயப்பன் சோலை
ஆறுமுக தகுடி
ஏழுவா லிங்கம்
எச்சுமுச்சுக் கோட்டை
தொம்பா பேட்டை
தேசிங்கு ராஜா.

அது போல நொண்டி விளையாடுவதற்கென்று சில பாடல்கள், ஓடி விளையாடுவதற்கு, ஒளிஞ்சு விளையாடுவதற்கு என்று எதற்கெடுத்தாலும் பாடல்கள் தான். இன்று இது போன்ற பாடல்களை பாடுபவரும் இல்லை. பாடல்களை நினைவில் வைத்திருப்பவரும் இல்லை. வேறென்ன பாடல்கள் என்று யோசிக்கும் பொழுது

மலை மேல தீப்பிடிக்குது 
பிள்ளைகளா ஓடுங்க..
மலை மேல தீப்பிடிக்குது 
பிள்ளைகளா ஓடுங்க..


என்று மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பார்த்து ஓடிய நாட்கள் நினைவில் வருகிறது. உங்கள் நினைவில் உள்ள பாடல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!!

17 comments:

புதிய மனிதா.. said...

ஞாயிற்றுக் கெழமை திருடன் வந்தான்,,சிறு வயதை மீண்டும் பெற்ற நினைவு மிக அருமை ...

மாதேவி said...

நன்றாக இருக்கிறது நாட்டுப்புறப்பாடல்கள்.

இவை எல்லாம் இப்போது எங்கே.

எஸ்.கே said...

நண்பரே என் சிறுவயதை தங்கள் பதிவு மிகவும் தூண்டி விட்டது. என் பாட்டி எனக்கு சொல்லி கொடுத்த இன்று வரை எனக்கு நினைவிலிருக்கும் கிராமிய விளையாட்டு பாடல்:

தத்தக்கா புத்தக்கா தவளஞ்சோறு
இச்சிமரத்தில எவளக்கொடி
காத்தடிச்சா வீராயி
குண்டுமணி நெல்லுகுத்தி
கொறத்தியம்மா கையெடு
எடுக்காட்டி போ போ
தாரு தாரு வாழக்கா
தம்பபட்டி வாழக்கா
புத்தூரு வாழக்க
பூபோல கையை எடு!

sakthi said...

வாவ் வித்தியாசமான பதிவுங்க மிகவும் ரசித்தேன் !!!!

வானம்பாடிகள் said...

=)). நல்ல பாட்டு. கிழமை பாட்டு இப்படிக் கேட்டுதான் பழக்கம் முதல் இரண்டுவரி

‘நாயித்து கெழம நகையக்காணோம்
திங்கக் கெழம திருடன் கெடச்சான்’

ஈரோடு கதிர் said...

||பந்தல்ல பாகற்காய் இருக்கற வீடுகளே இல்லாத||

பந்தலே இல்லைங்ளே செந்தில்

நிறைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க!

உழைப்பு தெரிகிறது

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பழையப் பாடல்களில் இருக்கும் தெளிவும் , சிறந்தக் கருத்தும் இன்றைய நிலையில் இல்லை என்பது மட்டும் தின்னம் .
மீண்டும் பழமைகளை புதிப்பித்து இருக்கிறது தங்களின் இந்தப் பதிவு பகிர்வுக்கு நன்றி .

Chitra said...

இந்த இடுகையை பத்திரப் படுத்தி வைத்து கொள்ள வேண்டும். ரொம்ப நல்லா இருக்குதுங்க.
எனது பாட்டிம்மா சொல்லி கொடுத்த ஒரு பாடல் இது:
" பூ, பூ புளியம் பூ
பொன்னான கொண்டைக்கு தாழம்பூ
காயக்காய் கருப்பங்காய்
கஞ்சி கூட்டுக்கு நெல்லிக்காய்
மாம்பூ மல்லிகைப்பூ
மணக்குதடி ஜவ்வாது."
தாழம்பூவை தலையில் வைத்து கட்டி சூடி கொள்வார்களாம்.

பழமைபேசி said...

ஆகா.... இடுகை, அகப்பையா மாறி மனக்கலயத்துல கிளறத் துவங்கி இருக்கு.... பளக்...பளக்....

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பரே
மிகவும் நன்றாக இருந்தது
அத்தனையும் சிறுவயதில் பாடிக்களித்தது,நன்றி பகிர்வுக்கு

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

@எஸ்கே
நீங்களும் அருமையாக நினைவுகூர்ந்தீர்கள் நண்பா

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

நண்பரே 200 தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்..நல்லாயிருக்குங்க செந்தில்....வாழ்த்துக்கள்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

இளமைகால நினைவுகளை மீட்டிய இடுகை.....இந்த பாடலெல்லாம் நானும் நினைவில் கொண்டுள்ளேன். அருமை.....வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

எழுத்துக்களுக்கு வந்த விமர்சனங்கள் மொத்தமும் சிறப்பு. சித்ரா கூட ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க தம்பி..எனக்கும் இதைப்பற்றி எழுதணும் போல இருக்குங்குங்கோ..

Aravendan Vendan said...

நண்பரே வணக்கம். நல்ல பணி.பாராட்டு. ஓர் அய்யம். ஒரு பாடலில் கருப்பங்காய் என்று உள்ளது. அதன் பொருள்/விளக்கம் தேவைப்படுகின்றது. தெரிவித்து உதவுங்கள். aravendan66@gmail.com
பேரா.இரா.அறவேந்தன், JNU, Delhi

Related Posts with Thumbnails