Thursday, August 27, 2009

இந்தூஸ்தான் மே ஹிந்தி பாத் கரோ!!

"இங்கிலாந்து மே ஆங்கிரேஷி பாத் கரோ, இந்தூஸ்தான் மே ஹிந்தி பாத் கரோ!!" என்று என்னிடம் ஒரு அன்பர் கூறியது ஜான்சியில்!

நாம் ஏடுகளில் படித்துத் தெரியாத பல விடயங்களையும் நமக்குச் சொல்லிக் கொடுக்க வல்லது பயணங்கள். அதுவும் தெரியாத ஊர், அறியாத மொழி என்றால் நமக்குக் கிடைக்கும் அனுபவங்களுக்கு அளவே கிடையாது!

சில வருடங்களுக்கு முன் பணி நிமித்தமாக சில மாதங்கள் ஜான்சியில் தங்க வேண்டியிருந்தது. தில்லிக்கு இரயிலில் சென்றிருக்கும் அனைவருக்கும் ஜான்சியை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். மேலும், ஜான்சி என்றால் நினைவிற்கு வருவது ஜான்சி ராணி லக்ஷ்மி பாயும் அவரது விடுதலைப் போராட்டமும்.

ஜான்சி மத்திய பிரதேச, உத்திரப் பிரதேச எல்லையில் அமைந்த நகரம். ஜான்சி, ஒரு திசையில் வழிப்பறிக் கொள்ளையில் புகழ்பெற்ற சம்பால் பள்ளத்தாக்கும், ஒரு திசையில் கான்பூரும், மற்றோரு திசையில் காஜூராஹோ செல்லும் வழியும், நகரைச் சுற்றி ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பீடபூமி நில அமைப்புள்ள ஊர். புந்தில்கண்ட் என்ற அழைக்கப்படும் பகுதிக்கு தலைநகர் என்று ஜான்சியை கூறுகிறார்கள். இங்குள்ள மக்கள் புந்தில்கண்டி என்ற வட்டார மொழியையும், இந்தியையும் பேசி வருகின்றனர்.

ஜான்சி இரயில் நிலையத்தில் என்னை அழைக்க வந்திருந்த சக ஊழியர், "ஜான்சி நகரைச் சுற்றி வரும் பொழுது கொஞ்சம் கவனமாக இருக்கவும். இங்கே சர்வ சாதாரணமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதைப் பார்க்க முடியும்" என்று கூறியது எனக்கு கொஞ்சம் திக்கென்று இருந்தது. அலுவல வேலை நேரத்தில் சக ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் பேசி வந்த நான், தங்கியிருந்த இடத்திலும் ஏதோ தெரிந்த இந்தியை வைத்து சமாளித்தேன்.

ஒரு வார காலமாக சப்பாத்தியும் பருப்பையும் சாப்பிட்டு வந்ததால் தங்கியிருந்த விடுதியில் "இங்கே இட்லி தோசை எல்லாம் கிடைக்காதா?" என்றேன். அவர், இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சதர் பஜார் என்ற இடத்தில் "மெட்ராஸ் மெஸ்" என்ற பெயரில் ஒரு கையேந்திபவன் இருப்பதாகக் கூறினார். சரி, ஜான்சி நகரைச் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும், நம்ம இட்லி தோசையைப் பார்த்த மாதிரியும் இருக்கும் என்று சதர் பஜாருக்கு நடக்க ஆரம்பித்தேன்.

ஜான்சி நகரச் சுவரெங்கும் ஒட்டப் பட்டிருந்த போஜ்பூரி மொழிப் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்த படியே நடக்க ஆரம்பித்த எனக்கு, வழியை மறந்து விட்டேனோ என்று தோன்றியது. ஆங்கிலம் தெரிந்த ஒருவரைக் கேட்க வேண்டும் என்று எதிரே யாராவது நன்றாக உடையணிந்தவர் (??)வருகிறாரா என்று பார்த்த படியே நடந்தேன். நான் எதிர்பார்த்தது போல ஒருவர் வர அவரிடம் நான்,

"எக்ஸ்கியூஸ் மி, கேன் யூ ப்ளீஸ் டெல் மீ ஹவ் டு கோ டு சதர் பஜார்" என்றேன்..
நான் சற்றும் எதிர்பார்ககாத படி என் சட்டை எட்டிப் பிடித்தவர்,

"இங்கிலாந்து மேன் ஆங்கிரேஷி பாத் கரோ, இந்தூஸ்தான் மேன் ஹிந்தி பாத் கரோ" என்றவர், "தும் மதராஸி ஹே கியா?" என்றார்.
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இந்திலேயே நேராக சென்று வலப்பக்கமாகத் திரும்பிச் செல்லுமாறு கூறினார்.

சில நிமிடங்களில் சதர் பஜாரில் உள்ள மெட்ராஸ் உணவகத்தை அடைந்தேன். அங்கே பணியாற்றி வந்த தமிழன்பர்களிடம் எனக்கு நடந்ததை விவரித்த போது இங்கே இந்தியில் பேசுவதையே அனைவரும் விரும்புவதாகவும், கூடிய விரைவில் இந்தியைப் பயிலுமாறும் அறிவுறுத்தினர்.

நாம் செல்லும் ஊரில் என்ன மாதிரியான மக்கள் உள்ளனர், என்ன மொழி பேசுவார்கள் எனபதை எல்லாம் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குப் புரிந்தது. மேலும், பள்ளிக் காலத்தில் இந்தி கற்றிருக்க வேண்டுமோ என்ற எண்ணமும் மனதில் எழுந்தது.

ஆங்கிலத்தை மட்டும் வைத்துக் கொண்டு மும்பை, தில்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வேண்டுமானால் சமாளிக்க முடியும். தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் செல்லும் பொழுது ஆந்திர எல்லை வரையில் மட்டுமே ஆங்கிலம் செல்லும். மகாராஸ்டிராவில் உள்ள பல்லார்ஷாவை தொட்டுவிட்டால் இந்தி தான்.

அதே சமயம் என் சட்டையைப் பிடித்த அன்பர் தமிழகத்துக்கு வந்தால் என்ன செய்வார்? ஏதாவதொரு மாநகரத்தில் வேலை வேண்டி விண்ணப்பித்தால் இந்தியை மட்டும் வைத்துச் சமாளிக்க முடியுமா? கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியா ஓரளவு வளர்ந்து வருவதற்கும், தொழில்துறையில் முன்னேறுவதற்கும், இந்தியர்கள் வெளிநாட்டில் சிறப்பாக பணியாற்றுவதற்கும், ஐடி மற்றும் ஐடி சார்ந்த சேவைத் துறைகளில் முன்னேறி வருவதற்கும் நம் ஆங்கில அறிவு ஒரு முக்கிய காரணம்.

அண்மையில் நமது மத்திய அமைச்சர் கபில் சிபல் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கூறியது கவனிக்கத் தக்கது.

நம் நாடு ஆங்கிலேயர்கள் கைக்கு வரும்வரை ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய சமஸ்தானங்களையும், நாடுகளையும் கொண்டதாகவே இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ், தெலுங்கு, கன்னடம், வங்காளம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, சிந்தி, காஷ்மீரி என பிராந்திய மொழிகளே அந்தந்த நாட்டின் ஆட்சிமொழியாகவும் இருந்தது.

நம் நாட்டின் விடுதலைக்குப் பின்னரே இந்தி பிரதானமான ஆட்சி மொழியாக்கப்பட்டது. இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 40% சதவிகிதமும் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மற்ற 60 சதவிகிதமும் உள்ளனர். இன்றும் இந்தியை ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது பீகார், சட்டீஸ்கர், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம் என 9 மாநிலங்களில் மட்டுமே!! மற்ற 19 மாநிலங்களில் பிராந்திய மொழிகளே ஆட்சிமொழியாக உள்ளன.

மேலும் இங்குள்ள ஒவ்வொரு மொழியும் தனிப்பட்ட எழுத்து வடிவமும், சிறப்பான இலக்கண முறையும் கொண்டவை. அப்படி இருக்க தாய்மொழியையும் பயில்வதும் வளர்ப்பதும் ஒவ்வொருரின் கடமை தானே!ஆகவே இந்தியைக் கற்றே தீர வேண்டும் என்று யாராலும் கட்டாயப்படுத்த முடியாது!!


அதே சமயம் நாட்டில் உள்ள அனைவரும் பேசும் படியாக ஒரு மொழி தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது எந்த மொழி என்பதையும், அந்த மொழியைக் கற்பிப்பதில் என்ன மாதிரியான அனுகுமுறைக் கடைப்பிடிக்கப்போகிறோம் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று.

இந்திப் பாடத்தை பள்ளிகளில் புகுத்துவது என்று முடிவெடுத்தால் அது தேர்வுகள் இல்லாத பாடமாக இருந்தால் நன்றாக இருக்கும். அதைவிடுத்து தமிழ் அல்லது இந்தி என்று அறிவித்தால், 20 அல்லது 30 மதிப்பெண்கள் அதிகம் பெறுவதற்காகத் தமிழ் போன்ற தாய்மொழிகளைப் புறக்கணிக்கும் போக்கே வளரும்.

என்ன செய்யப்போகிறார்கள் நம்மை ஆள்வோர்?

எனக்கு ஜான்சியில் நேர்ந்ததைப் போல பிறர்க்கு நேரவும் கூடாது, தாய்மொழியைப் போற்றவும் பாராட்டவும் வேண்டும், உலக அரங்கில் போட்டியிடும் அளவிற்கு ஆங்கிலப் புலமையும் நமக்கு வேண்டும்.

நம் முன் சூடாக பாயாசம் உள்ளது. பாயாசமும் சாப்பிட வேண்டும், நாக்கும் சுட்டுவிடக்கூடாது, மீசையிலும் ஒட்டக்கூடாது. எப்படி?

உங்கள் கருத்துகளைக் கீழே பதியுங்கள்.

உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும் தமிழிஷ்லும் வாக்களியுங்கள்!!

...

38 comments:

Anonymous said...

I am a Tamil Nadu Thamizhan, don't say your self that you are an Indian. India is a foreign country..thats it.

☀நான் ஆதவன்☀ said...

செந்தில் இந்தி பயின்றே ஆவது என்று கூறுவது அநாவசியம் :)

ஒவ்வொருவனும் அவசியம் ஏற்படும் போது தானாகவே கற்பான்.

அனைவரும் இந்தியும் கற்க வேண்டும் என்ற இந்த பதிவுக்கு பதில் உங்கள் சட்டையை பிடித்தானே அவனைப் போன்றோருக்கு(வெறியனுக்கு) தம் தாய்மொழியை மற்றவன் பேசியே ஆகவேண்டியதில்லை என அறிவுறித்தி பதிவு போட்டிருக்கலாம் :) (இது தமிழனுக்கு பொருந்தும்)

D.R.Ashok said...

நல்ல கட்டுரை... ஆனால்?

//தமிழ் அல்லது இந்தி என்று அறிவித்தால், 20 அல்லது 30 மதிப்பெண்கள் அதிகம் பெறுவதற்காகத் தமிழ் போன்ற தாய்மொழிகளைப் புறக்கணிக்கும் போக்கே வளரும். என்ன செய்யப்போகிறார்கள் நம்மை ஆள்வோர்?//

??????????????? கேள்விக்குறியே..

ச.செந்தில்வேலன் said...

//☀நான் ஆதவன்☀ said...

செந்தில் இந்தி பயின்றே ஆவது என்று கூறுவது அநாவசியம் :)

ஒவ்வொருவனும் அவசியம் ஏற்படும் போது தானாகவே கற்பான்.//

ஆதவன்,

நான் கூறவருவது அனைவரும் இந்தி கற்றே தீர வேண்டும் என்பது அல்ல!!

இன்றைய சூழலில் நம்மை ஆள்வோர் மொழிகளை எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதே!!

//அனைவரும் இந்தியும் கற்க வேண்டும் என்ற இந்த பதிவுக்கு பதில் உங்கள் சட்டையை பிடித்தானே அவனைப் போன்றோருக்கு(வெறியனுக்கு) தம் தாய்மொழியை மற்றவன் பேசியே ஆகவேண்டியதில்லை என அறிவுறித்தி பதிவு போட்டிருக்கலாம் :) (இது தமிழனுக்கு பொருந்தும்) //

அன்றாடப் பயன்பாட்டில் நாம் தமிழையும் சரியாகப் பேசுவதில்லை எழுவதில்லை என்பதே இன்றைய உண்மை நிலை :))

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

ச.செந்தில்வேலன் said...

அனானி அன்பரே, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

அசோக், வருகைக்கு நன்றி!

Mahesh said...

நல்ல அனுபவ்ம் செந்தில்.... இதே எண்ணத்தில் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நானும் எழுதியிருந்தேன்... நேரம் கிடைக்கும்போது படித்து கருத்தைச் சொல்லவும்.

http://thuklak.blogspot.com/2009/03/blog-post_30.html

ச.செந்தில்வேலன் said...

வாங்க மகேஷ்,

உங்கள் பதிவை நான் படித்தேன். நல்ல பதிவு. உங்கள் நண்பருக்கு நேர்ந்தது மிகவும் துன்பகரமானது. மொழிகள் பற்றிய உங்கள் பார்வை எனக்கும் ஓரளவு உள்ளது தான்.

பல மொழிகளைக் கற்கும் நேரத்தில், தாய்மொழியையும் நாம் போற்றுகிறோமா என்பதை யோசிப்பது நல்லது.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

மேல்தட்டு மக்களுக்கு இலங்கையில் தமிழர் நிலை குறித்தோ அவர்களின் வாழ்வுரிமை குறித்தோ சரியான தெரிதல் இல்லை.
ஏனென்றால் வட மாநில ஊடகங்கள்.பொய்யையும் புரட்டயுமே நம்பி பிழைப்பை நடத்துகின்றன.தமிழர் என்றால் இந்தி எதிர்ப்பாளர்கள் தான் இன்னும்.(அது மிகவும் பிரபலம்)ஒருவர் ஒரு படி மேலே போய்
என்னிடம் "மலையாளத்தானுக்கும் தெலுங்கனுக்கும் பீகாரிக்கும் கன்னடன்,குஜராத்திக்கும் இல்லாத மொழி பற்றா உன்கிட்ட இருக்கு?"
அவன் ஒருத்தனுக்கு இந்தி தெரியாதுன்னு சொல்ல சொல்லு.பார்ப்போம்?
ஏன் யா ?உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் ? என்று கேட்க.
நான் வெட்கித் தலை குனிந்தேன்.
அவனிடம் நான் மாநில அரசுகள் இந்திய தமிழருக்கு செய்த துரோகத்தையும் ,இவர்களின் இந்தி எதிர்ப்பு நாடகத்தையும் சொல்லி ,சப்பை கட்டு கட்டினேன்.
அதில் என்ன கொடுமை என்றால்
முன்பு நான் பயணிக்க பாகிஸ்தானி டாக்ஸி தான் கிடைக்கும்.அவன் ஒரு நக்கலடிப்பான் ,பாருங்கள் ?தேசிய மொழி ...
நீ இந்தியன் தானே?உனக்கு இந்தி தெரியாதா?என்று. பலூச்சியான நான் கூட உருதுவுவை தவிர இந்தியும் படித்திருக்கிறேன் ,அப்போது தான் உன்னிடம் பேச முடியும் என்று.
(இப்போது தான் ஒன்று விளங்குகிறது வட மாநில ஊடகங்களின் ஈழ தமிழர் காழ்புணர்ச்சிக்கு முக்கிய காரணம் .அவர்கள் இந்தியத் தமிழர்களை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு ஈழத் தமிழரை பழி வாங்குகின்றனர்.)

ராகவன் said...

பல வடகத்தவர்வளுக்கு ஆங்கிலம் தெரியாது. நன்றாக உடை அணிந்தவர்களாலும் படித்தவர்களாலும் கூட ஆங்கிலம் பேச இயலாது. நாம் இந்தி தெரியாமல் பீட்டர் விட்டால், அவர்களின் தாழ்வுமனப்பான்மை கிளர்ந்தெழுந்து விடுகிறது. வேண்டுமென்றே அவர்களை நாம் வெறுப்பேத்துவதாக நினைகின்றனர். இதற்கு சில இந்தி வார்த்தைகளை மனப்பாடம் செய்து இந்தி பேசுவது போல் சீன் போட்டால் போதும், கூல் ஆயிடுவானுக.

மேலும் ஒரு இந்திகாரர், வெள்ளைக்காரர்கள் தெற்கைவிட வடக்கே அதிமாக அட்டூழியம் செய்ததால் ஆங்கிலத்தின் மீது வட இந்தியர்களுக்கு செம காண்டு எனச் சொன்னார்

Several tips said...

மிகமிக அருமை

கதிர் - ஈரோடு said...

நல்ல பதிவு செந்தில்

நான் மும்பை, நாக்பூர், இந்தூர், டெல்லி ஆகிய இடங்களுக்குச் சென்ற போதெல்லாம் இந்தி தெரியவில்லையென்றால் "நீ ஒரு இந்துஸ்தானியா" என வட இந்தியன் திட்டுவதை சந்தித்திருக்கிறேன்

தமிழர்கள் ஆங்கிலத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை இந்திக்குத் தரவில்லை.

கொடுமை தமிழையும் சரியாக கற்கவில்லை.

ஆங்கிலத்தை கற்ற அளவு இந்தியையும் கற்றிருக்க வேண்டும்.

என் பக்கம் said...

நிறைய சொல்ல நினைக்கிறேன்......

மீண்டும் வருகிறேன்.

நன்றி செந்தில்

வானம்பாடிகள் said...

எனக்குப் புரியவில்லை. இந்திஸ்தானி இல்லையே. இந்துஸ்தான் தானே? அதுதான் மராத்திக்காரன் அடி குடுக்குறான் போல. கன்ச்சிபுர்(காஞ்சிபுரம்) ஸில்க் ஸாடி தேடுறப்ப மட்டும் பன்னாடைங்களுக்கு மத்ராஸி தெரியாது. கண்ணால பார்த்தேன். பொட்டி கடையில ஒரு இந்திக்காரன் இந்தியில் கைனி வைகியில ஒண்ணக் கேக்க நம்மாளு சிகரட்ட நீட்ட அவன் இந்தியிலயே கேக்குறான். நம்மாளு நொந்து போய் காச குடுத்து புரியல, ஜாவ்னான். சிரிச்ச படிக்கே கெட்ட வார்த்தைல திட்டினான் பாருங்க. நம்மாளும் சிரிச்சிகிட்டே புரிலைன்னு கையாட்டுது. புரிஞ்சிருந்துச்சோ அவனுக்கு சங்காயிருக்கும்.

ச.செந்தில்வேலன் said...

வாங்க கார்த்திகேயன்.. உங்க மாதிரியே என்னிடமும் கேட்டிருக்கிறார்கள் துபாய் அலுவலகத்தில் :(

நான் நமது அருமை பெருமைகளை அவர்களிடம் சொல்லி சமாளிப்பேன்.

ச.செந்தில்வேலன் said...

வாங்க இராகவன், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

வாங்க several tips.., வருகைக்கு நன்றி

வாங்க கதிர். என் போல நீங்களும் பட்டிருப்பீர்கள் போல :)

வாங்க என் பக்கம் பிரதீர், கண்டிப்பாக பேசுவோம்!!

ச.செந்தில்வேலன் said...

வாங்க வானம்பாடிகள் ஐயா..

நீங்க சொல்ற மாதிரி பிகாரி ஆட்களை எங்க ஊரில் கூடப் பார்த்திருக்கிறேன். காற்றாலைகளில் பணிபுரிய வந்திருப்பார்கள் அவர்கள். அவர்கள் கடைகளில் படும் துன்பம் சொல்லில் அடங்காது. அவர்களும் நம்மை திட்டுவார்களாக இருக்கும் ;))

புதுகைத் தென்றல் said...

அருமையான பதிவு.

பெங்களூர்காரங்க, கேரளத்துக்காரங்க, இங்க ஹைதைக்காரங்க எல்லாம் ஹிந்தி பேசுவாங்க.

நம்ம சென்னை தமிழ்நாட்டில் ஹிந்தி பேசினா குத்தம்.
ஹிந்தியில் பேசியதாலேயே எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.


தாய்மொழியைப் போற்றவும் பாராட்டவும் வேண்டும், உலக அரங்கில் போட்டியிடும் அளவிற்கு ஆங்கிலப் புலமையும் நமக்கு வேண்டும்.//

அசத்தல்

tamil agaviyan said...

நான் ஒரு வெளிநாட்டில் வளரும் தமிழன், என் தமிழில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

தாய்மொழியை எல்லோரும் நன்றாக கற்க வேண்டும் இதில் ஏதும் மாற்று கருது இருக்க முடியாது. இருபினும் நம் தாய்மொழிப்பற்று நாம் இந்தியர்கள் என்பதை நம்மை மறக்க வைக்க கூடாது. நம் நாட்டின் பிரதமமந்திரி என்ன கூறுகிறார் என்பதை யாரோ ஒருவர் மொழிபெயர்த்து கூறும் அவநிலை மாறவேண்டும். மேலும் வெளிநாட்டவர்கள் தற்போது ஆசியமொழிகளை கற்றுவருகின்றனர், உதாரணமாக சீனமொழி, சீனாவிற்கும் இந்தியாவுக்கும் முன்னேற்றத்தில் பெரிய வேறுபாடில்லை, ஆனால் எவரும் இந்தியமொழியை கற்பதில்லை காரணம் நமக்கு ஓர் மொழி இல்லை , நம் நாட்டில் வணிகம் செய்ய ஆங்கிலம் மட்டும் போதுமானது. இதை மாற்ற வேண்டும் நம்பர் ஆங்கிலத்துக்கு கொடுக்கும் முன்னுரிமையை ஹிந்திக்கும் கொடுக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கறுத்து.

Suresh Kumar said...

நன்பரே எனக்கும் இதை போல நடந்து இருக்கு.நான் புனே அருகிலுள்ள லோனாவானாவில் ரயில் டிக்கெட் எடுக்க பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமிலை.இந்த அரசியல்வாதிகளால்தன் இந்த பிரச்சனைகள் வருகிறது.

புருனோ Bruno said...

//நீங்க சொல்ற மாதிரி பிகாரி ஆட்களை எங்க ஊரில் கூடப் பார்த்திருக்கிறேன். காற்றாலைகளில் பணிபுரிய வந்திருப்பார்கள் அவர்கள். அவர்கள் கடைகளில் படும் துன்பம் சொல்லில் அடங்காது. அவர்களும் நம்மை திட்டுவார்களாக இருக்கும் ;))//

அவர்கள் ஆங்கிலம் கற்காதது அவர்களது தவறு.

நாம் மட்டும் மூன்று மொழி கற்கவேண்டும். அவர்கள் இரண்டாவது மொழி கூட கற்க மாட்டார்களா

ச.செந்தில்வேலன் said...

வாங்க புதுகைத் தென்றல்.

நீங்க சொல்றது உண்மை தாங்க. நம் மொழியைப் பேசுபவர்களிடம் நாம் அதிகம் பேசுவோமா அல்லது வேறு மொழி பேசுபவர்களிடமா?

அது உங்க நண்பர்களுக்கும் பொருந்தும்.

வானம்பாடிகள் said...

விகடன் ஹாட்டில் இந்த இடுகை! பாராட்டுக்கள்

ச.செந்தில்வேலன் said...

வாங்க தமிழ் அகவியன். உங்க தமிழ் தமிழ் நாட்டில் படித்தவர்களை விட நன்றாகவே இருக்கிறது.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

ச.செந்தில்வேலன் said...

//புருனோ Bruno said...

//நீங்க சொல்ற மாதிரி பிகாரி ஆட்களை எங்க ஊரில் கூடப் பார்த்திருக்கிறேன். காற்றாலைகளில் பணிபுரிய வந்திருப்பார்கள் அவர்கள். அவர்கள் கடைகளில் படும் துன்பம் சொல்லில் அடங்காது. அவர்களும் நம்மை திட்டுவார்களாக இருக்கும் ;))//

அவர்கள் ஆங்கிலம் கற்காதது அவர்களது தவறு.

நாம் மட்டும் மூன்று மொழி கற்கவேண்டும். அவர்கள் இரண்டாவது மொழி கூட கற்க மாட்டார்களா//

வாங்க புருனோ, நீங்க சொல்றதும் சரி தாங்க.

அதைத் தான் என் பதிவிலும் நான் கூறியுள்ளேனே. என் சட்டையைப் பிடித்தவர் தமிழகத்திற்கு வந்தார் என்றால் என்ன செய்வாரென்று :))

ச.செந்தில்வேலன் said...

வாங்க சுரேஷ்குமார்... பலருக்கும் இது போல நேர்ந்துள்ளது. ஆனால் வெளியே தான் தெரிவதில்லை.

ச.செந்தில்வேலன் said...

//
வானம்பாடிகள் said...
விகடன் ஹாட்டில் இந்த இடுகை! பாராட்டுக்கள்
//

வானம்பாடிகள் ஐயா, வாழ்த்துகளுக்கு நன்றி!

[பி]-[த்]-[த]-[ன்] said...

'ஹிந்து'ஸ்தான் என்றால் என்ன ?

எதோ ஒரு வட'ஹிந்தி'யன் சொன்னான் என்பதற்காக நாம் ஏன் வெட்கப்படவேண்டும் என்று புரியவில்லை அவனுக்கு இந்தியை தவிர வேறு எந்த இந்திய மொழிகள் தெரியும் என்றும் கேட்டிருக்கவேண்டும்.. மூடிகிட்டு போயிருப்பனுக... நானும் இரண்டுவருடம் வடஇந்தியாவில் இருந்திருக்கிறேன்....

அவர்களுது எண்ணம் இந்தியா முழுவதும் ஹிந்திய பரப்பணும் அனைவருக்கும் ஹிந்திய தாய் மொழியாக்கணும்
( ஏற்கனவே பல வட இந்தியர்களுக்கு அவர்கள் தாய்மொழி மறந்து ஹிந்தி தாய் மொழி ஆகிவிட்டது என்பது தான் உண்மை.. நா கண்கூட பாத்ததும் கூட )

ராகவன் said...

//நாம் மட்டும் மூன்று மொழி கற்கவேண்டும். அவர்கள் இரண்டாவது மொழி கூட கற்க மாட்டார்களா//

சின்ன வயதில் எலிமெனடரி ஸ்கூலில் ஆங்கிலம் வராமல் தடுமாறிய போது தினமும் வெள்ளைக்காரனை திட்டுவோம்.

'ங்கொய்யால, வெள்ளைக்காரனை மட்டும் தமிழ் படிக்க மாட்டான் நாம மாத்திரம் அவன் பாஷைய படிக்கணும்'

அந்நாட்கள் நினைவுக்கு வந்தன.

sakthi said...

அதே சமயம் நாட்டில் உள்ள அனைவரும் பேசும் படியாக ஒரு மொழி தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. அது எந்த மொழி என்பதையும், அந்த மொழியைக் கற்பிப்பதில் என்ன மாதிரியான அனுகுமுறைக் கடைப்பிடிக்கப்போகிறோம் என்பதும் மிகவும் முக்கியமான ஒன்று.


அருமையான கருத்துகளுடனும் தெளிவான சிந்தனையுடனும் மீண்டும் ஒரு செந்திலின் படைப்பு

வாழ்த்துக்கள் செந்தில்!!!

தொடருங்கள்

Manchari said...

எனக்கும் இப்படி ஆனது. ஆனால் நான் பெண் என்பதால் சட்டையை பிடிக்காமல் விட்டார் ஒருவர். நான் தற்போது வசிப்பது கல்கத்தாவில். அங்கு வங்காள மொழிக்கு அடுத்து பேசப் படுவது ஹிந்தி. எனக்கோ இரண்டுமே தெரியாது. ஆனால் ஆங்கிலம் சரளமாக வரும். மார்கெட்டில் நான் தடுமாறுவதை பார்த்து ஒருவர் இப்படித் தான் கேட்டார். ஏன் ஹிந்தி தெரியாது என்று கிட்டத்தட்ட கேவலமாகத்தான் கேட்டார்.

ஒரு மொழியை இளமையில் கற்கும் போது அது எளிது. இப்போது கற்பது கடினமாக இருக்கிறது. எனவே இந்தியர் ஹிந்தி கற்பது எனக்கு தவறாக தோன்ற வில்லை.

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

கலையரசன் said...

//எதோ ஒரு வட'ஹிந்தி'யன் சொன்னான் என்பதற்காக நாம் ஏன் வெட்கப்படவேண்டும் என்று புரியவில்லை அவனுக்கு இந்தியை தவிர வேறு எந்த இந்திய மொழிகள் தெரியும் என்றும் கேட்டிருக்கவேண்டும்.. மூடிகிட்டு போயிருப்பனுக... நானும் இரண்டுவருடம் வடஇந்தியாவில் இருந்திருக்கிறேன்....

அவர்களுது எண்ணம் இந்தியா முழுவதும் ஹிந்திய பரப்பணும் அனைவருக்கும் ஹிந்திய தாய் மொழியாக்கணும்
( ஏற்கனவே பல வட இந்தியர்களுக்கு அவர்கள் தாய்மொழி மறந்து ஹிந்தி தாய் மொழி ஆகிவிட்டது என்பது தான் உண்மை.. நா கண்கூட பாத்ததும் கூட )//

இக்கருத்தையே நானும் வழிமொழிகிறேன்!!

ச.செந்தில்வேலன் said...

//
ராகவன் said...
//நாம் மட்டும் மூன்று மொழி கற்கவேண்டும். அவர்கள் இரண்டாவது மொழி கூட கற்க மாட்டார்களா//

சின்ன வயதில் எலிமெனடரி ஸ்கூலில் ஆங்கிலம் வராமல் தடுமாறிய போது தினமும் வெள்ளைக்காரனை திட்டுவோம்.

'ங்கொய்யால, வெள்ளைக்காரனை மட்டும் தமிழ் படிக்க மாட்டான் நாம மாத்திரம் அவன் பாஷைய படிக்கணும்'

அந்நாட்கள் நினைவுக்கு வந்தன.

//

:))

ச.செந்தில்வேலன் said...

வாங்க சக்தி, வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி

வாங்க மஞ்சரி, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//
ஒரு மொழியை இளமையில் கற்கும் போது அது எளிது. இப்போது கற்பது கடினமாக இருக்கிறது. எனவே இந்தியர் ஹிந்தி கற்பது எனக்கு தவறாக தோன்ற வில்லை.
//
இதே நானும் ஒப்புக் கொள்கிறேன்.

ச.செந்தில்வேலன் said...

வாங்க தங்கமணி பிரபு, வருகைக்கு நன்றி. உங்கள் பதிவு உள்ள தொடுப்புகள் இலங்கை அவலத்தின் சாட்சி :((

ச.செந்தில்வேலன் said...

வாங்க பித்தன், கலையரசன்.

அவர்கள் மொழியைத் தாய்மொழியாக்க வேண்டும் என்பது அவர்கள் கனவாகவே இருக்கும். நம் மொழியைப் போற்றிப் பாதுகாத்தாலே போதுமானது. மற்றபடி, எத்தனை மொழிகள் தெரிகிறதோ அந்த அளவிற்கு நமக்கே நல்லது :))

தங்கராசு நாகேந்திரன் said...

இங்கே வாங்க உங்களுக்கு பதில் இருக்கு
http://selvanuran.blogspot.com/2009/08/blog-post_1506.html

ச.செந்தில்வேலன் said...

தங்கராசு,

நல்லா எழுதியிருக்கீங்க உங்க அனுபவத்த.. உங்கள யாரும் கட்டாயப்படுத்தலியே! கட்டாயப்படுத்துனாத்தான் தப்பு :))

இன்றைய தேதிக்கு பல மொழிகள் தெரிந்தவன் தான் வல்லவன். இது நமக்கும் பொருந்தும். நம் தமிழகத்துல எல்லாருக்கும் வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு எல்லாம் இருந்தா, நம்ம ஏங்க வெளியூருக்குப் போக வேண்டும்? இங்கயே இருந்தா நமக்கு எதுக்குங்க மற்ற மொழிகள் தேவை? தப்பு எங்கேன்னு புரியுதுங்களா? தமிழர்கள் முன்னேறினா தமிழும் முன்னேறும்! ஜப்பான் மாதிரி தமிழ்நாடு இருந்தா ஹிந்தியும் வேண்டாம், ஆங்கிலமும் வேண்டாம்!!

நம்மவர்கள் தமிழையாவது நல்லா பேசுறாங்களா, எழுதுறாங்களா? அதை முதல்ல சரி செய்ய வேண்டும் ;)

Related Posts with Thumbnails