Friday, April 17, 2009

தேர்தலும் பொருளாதாரமும்...

கடந்த ஆறேழு மாதங்களாக நாம் கேட்க, பார்க்க நேரிடும் செய்திகளில் "பொருளாதாரப் பின்னடைவு" பிரதானமாக இடம் பிடித்து வருகிறது. பின்னடைவை சரி செய்து பணப்புழக்கத்தை ஏற்படுத்த அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் என ஒவ்வொரு நாடும் திட்டங்களை வகுத்துவருகிறது

பெரும்பாலான நாடுகளில் பொருளாதாரம் மந்தமடைந்துள்ள நிலையில், நம் நாட்டில் எப்படி உள்ளது?

இந்தியாவில் பெருமளவு பொருளாதாரத் தேக்கம் ஏற்படவில்லை என்றாலும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருகிவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த நேரத்தில், மத்திய அரசு பொருளாதாரத்தை சீர்ப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் ஏன் திட்டங்களை அறிவிக்கவில்லை?

நடந்து வரும் தேர்தல் ஒரு காரணமாக இருக்குமோ?

திட்டங்கள் அறிவிக்கப்படாததற்கு தேர்தல் ஒரு காரணமே!! தேர்தலின் போதும் சிறிதளவு வேலைவாய்ப்பும், தேர்தலிக்கு பிறகு நல்ல திட்டங்கள் வரும்பட்சத்தில் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் மேம்பட வாய்ப்புள்ளது!!

தேர்தலால் சிறிதளவு பணப்புழக்கமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கிறதா? அது எப்படி?

ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் வரும் செய்திகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும் எப்படி என்று...

ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்தால், ஒவ்வொரு கட்சியும் தொகுதி தோறும் 4 அல்லது 5 கோடிகள் வரை செலவிடுவார்கள் என்றும் அப்படியே அனைத்து கட்சிகளையும் கணக்கில் கொண்டால் தொகை 20 கோடியை தாண்டும் எனவும் தெரிகிறது. அதுவே, நாடு முழுவதும் கணக்கில் கொண்டால் 10,000 கோடியைத் தாண்டிவிடும்....

இந்த பணத்தால், ஓரளவுக்கு வேலைவாய்ப்பு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை..

சுவர் விளம்பரங்கள், கட் அவுட்கள் வைப்பவர்கள், ஒலிப்பெருக்கிகள்- விளக்குகள் வாடகைக்கு விடுவோர், மேடை அலங்காரம் செய்வோர், வாகன் வோட்டிகள், மதுபானக் கடைகளில் பணிபுரிவோர், மாமிசக்கடை உரிமையாளர்கள், உணவகங்கள் வைத்திருப்போர் போன்றோரை தேர்தலால் வேலை வாய்ப்படைபவர்கள் என்று சொல்லலாம்.

இவர்களைத் தவிர்த்துப் பார்த்தால், கோடிகள் செலவாவது கட்சிகாரர்களுக்கும், கட்சிக்காரர்கள் என்ற பெயரில் உலாவரும் ரவுடிகளுக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் தான்.. இதற்கிடையே, தொகுதி மக்கள் தங்களுக்காக வாக்களிக்க(??) செலவிடும் தொகையையும் மறந்து விடக்கூடாது.

இப்படி தேர்தலின்போது சிறிதளவு அதிகரிக்கும் பணப்புழக்கமும் வேலைவாய்ப்பும், "நுனி நாக்கில் அமுதமும் அடி நாக்கிலே நஞ்சும்" வைத்திருப்பதைப் போன்றதே!!

இந்தமுறை தேர்தலுக்காக செலவிடும் 10000 கோடியை, சில திட்டங்களுக்காக 2008-09 பட்ஜட் ஒதுக்கீடுடன் ஒப்பிடுகையில் நாட்டுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பது புரியும். 2008-09 பட்ஜட்டில்

*தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி, 100 நாட்கள் கட்டாய வேலைவாய்ப்பு தருவதற்காக ஒதுக்கீடு செய்தது 16000 கோடி..
* தேசிய குடிநீர் வாரியத்திற்கு ஒதுக்கியது 7300 கோடி..
* சென்னையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு பட்ஜட் ஒதுக்கீடு 300 கோடி..
இதிலிருந்தே தெரிகிறதே நாம் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று..
உதாரணத்திற்கு, இந்த நிதியை வைத்து அனைத்து பெருநகரங்களின் குடிநீர் பிரச்சனையையும் தீர்த்து விடலாமே!!

5 வருடங்களுக்கு பாராளமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டிற்காக ஒதுக்கும் நிதியே 10 கோடியைத்தான் தொடும் என்கிற போது ஒவ்வொரு தொகுதிக்கும் 4-5 கோடியை எப்படி செலவு செய்ய முனைகிறார்கள்? இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது?

வரும் பணமெல்லாம், ஓட்டுப்போடாதோர் கட்டும் வரிபணத்திலிருந்தும், ஓட்டுப்போடும் ஏழைகளுக்காக வகுக்கும் திட்டங்களிலிருந்தும் தான்!!

இப்படியே போனால் பொருளாதாரத்தை எப்படி சீர்படுத்துவது? பொருளாதாரத்தை மேம்படுத்தவும் திட்டங்களை திறமையாக வகுத்து செயல்படுத்தவும் என்ன தான் வழி?
தேர்தல் தான் ஒரே வழி!!

அனைவரும், குறிப்பாக இதுவரை வாக்களிக்காதோரும் "நேர்மையானவர்களுக்கு" வாக்களிப்பதே ஒரே வழி!! அப்படி வாக்களிக்காமல், நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி அங்கலாய்த்துக்கொள்வது "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமமாகும்"!!


இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.

http://youthful.vikatan.com/youth/senthilstory17042009.asp

.

3 comments:

ஆதவன் said...

after election everybody have some aapu.. :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ ஆதவன்

வருகைக்கு நன்றி!

ஜோதிஜி said...

"நுனி நாக்கில் அமுதமும் அடி நாக்கிலே நஞ்சும்

அமெரிக்கா இப்போது முயற்சித்துக்கொண்டுருக்கும் சீனா

Related Posts with Thumbnails