Monday, April 6, 2009

முதன்முறையா வாக்களிக்க ஆசை தான்!! ஆனா....


"இந்தியப் பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை நடைபெறும்" என்ற அறிவிப்பு வந்ததிலிருந்து நாடெங்கிலும் தேர்தல் பற்றிப் பேச்சு தான்!!


யார் யாருடன் கூட்டு? எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதி ஒதுக்கீடு? என்பது போன்ற விவாதங்களுடன் சேர்ந்து கொள்வது "முதன்முறையாக வாக்களிக்கும் 10கோடி பேரின் வாக்கு யாருக்கு?" என்பதும் தான்!!


இது போன்ற விவாதங்களில் இளைஞர்களின் பங்களிப்பு, முன்பு எப்போதையும் விட இந்த முறை மிக அதிகமாகவே பார்க்க முடிகிறது. அதற்கு, ஆர்க்குட், ஃபேஷ்புக் போன்ற சமூக வலையமைப்பு நிறுவனங்கள், ப்ளாக்கர் போன்ற வலைப்பதிவுச் சேவை நிறுவனங்கள் போன்றவற்றின் வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணமாகும்


நாட்டின் மீது அக்கறை, வாக்களிக்கும் ஆர்வம் போன்றவை இளைஞர்களுக்கு அதிகமாகவே இருந்தாலும், அது எந்த அளவிற்கு வாக்குச் சாவடி வரை அழைத்துச் செல்லும்?


கேள்விக்குக் காரணம், 18 முதல் 24 வயதுள்ள இளைஞர்கள் சொந்த ஊரில் இருப்பது மிகவும் அரிதானதே!!


இன்று பெரும்பாலான இளைஞர்கள் வேலை, வேலை தேடல், கல்லூரிப் படிப்பு போன்ற ஏதாவது ஒரு காரணத்திற்காக வசிப்பது சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் தான். அவர்களது வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்றவை பதிவு செய்திருப்பதோ சொந்த ஊரில்!!


இவர்கள் தங்கள் சொந்த ஊரிற்குச் சென்று வாக்கைப் பதிவு செய்வதிலோ பல நடைமுறை சிக்கல்கள்!!


தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தேர்தல் நடக்கவிருப்பது மே 13, புதன்கிழமை.


அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்தாலும், தனியார் நிறுவனங்கள் அதை அமலாக்குமா? தனியார் நிறுவனங்களின் அறிவிப்போ, "வாக்களிக்கும் விருப்பம் உள்ளோர் விடுமுறை எடுத்து கொள்ளலாம்" என்றே இருக்கும். இது, பொது விடுமுறை போன்று இருக்காது. அப்படியே, விடுமுறை அறிவித்தாலும், தங்கள் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் நாளில் விடுமுறை கிடைக்குமா? என்பது வெளிமாநிலத்தோரின் கேள்வியாக இருக்கும்.


சரி, விடுமுறை அறிவித்தாலும் ஊருக்குப் போக டிக்கட் கிடைக்குமா? என்பது அடுத்த கேள்வி..


சென்னையில் தோராயமாக, 5 லட்சம் பேர் வெளியூர் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொன்டாலும், அனைவரும் ஊருக்குச் செல்ல ரயிலிலோ, பேருந்திலோ டிக்கட் கிடைப்பது கடினமான ஒன்று. சென்னையில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களையும் கணக்கில் வைத்தாலும் டிக்கட் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டாது. சொகுசுப்பேருந்து, அரசு விரைவிப்பேருந்து போன்றவைகளையும் சேர்த்தால் மேலும் ஒரு 20 ஆயிரத்தைத் தொடலாம்.


வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் புதுவைக்கோ அல்லது வேலூருக்கோ செல்ல வேண்டுமென்றாலே கூட்டத்தால் கோயம்பேடே அலறும்..இது போன்ற நாட்களில் சொல்லவே வேண்டாம்!! ஊருக்குச் சென்றுவர குறைந்தது 500 ரூபாய் செலவாகும் என்பது வேறு விஷயம்!!


இது சென்னைக்கு மட்டும் அல்ல, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி என தமிழக நகரங்கள் மற்றும் மும்பை, தில்லி, கொல்கொத்தா, பெங்களூரு, ஹைதராபாத் என அனைத்து பெரு நகரங்களுக்கும் பொருந்தும்.


பிறகு எப்படி முதன்முறையாக வாக்களிக்கும் தகுதி உள்ளோர் அனைவரும் வாக்களிப்பது?


இந்த வருடம், முதன்முறையாக வாக்களிக்கும் தகுதி உள்ளோர் 10 கோடிப்பேர் என்றால் 2014ல் இது 13 கோடியாகி இருக்குமே!! இவர்களில் 10 சதவிதத்தினர் வாக்களிக்க முடியாமல் போனாலும் அது ஒரு பெரிய இழப்பே!!


100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுவதும், சில எம்பிக்கள் வித்தியாசத்தில் ஆட்சிகள் கவிழ்வதும் பல முறை பார்த்தாயிற்று!!


சரி, அனைவரும் வாக்களிக்க என்ன தான் தீர்வு?


வலைத்தளத்தின் உதவியை நாடுவது, வெளியூர்களில் உள்ளோர் மட்டுமல்லாது வெளி நாட்டில் உள்ளோரும் வாக்களிக்க ஒரு சிறந்த தீர்வாக முடியும்.


வலைத்தளத்தில் வாக்களிப்பதா? அது எப்படி சாத்தியம்?



இருந்த இடத்திலேயே வங்கிகளில் வரவு செலவு வைப்பது, ரயில் டிக்கட் புக் செய்வது, பங்குச்சந்தைகளில் கோடிகளில் வர்த்தகம் செய்வது, பொருட்களை வாங்குவது, மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் என அனைத்தையுமே செய்யும் போது வலைத்தளத்தில் வாக்களிப்பதும் சாத்தியமே!



தகவல் தொழில்நுட்பத்தில் பெரு வளர்ச்சி கண்டுவரும் நம் நாட்டில் இது முடியாது என்றால், உலகில் வேறெங்குமே முடியாது எனலாம்!!



மின்னனு வாக்கு இயந்திரத்தின் வருகை பெரும் சர்ச்சைக்கு உள்ளான போதிலும், இப்போது அது நடைமுறையாகி விட்டது. அதுபோல, வலைத் தள வாக்களிப்பையும் நடைமுறைப் படுத்தமுடியும்!!



"தகவல் தொழில்நுட்பத்தின் உதவியை நாடுவதில் தயக்கமோ", அல்லது "இளைஞர்கள் வாக்களித்து எங்கே "49(ஓ)"க்கு அதிகம் வாக்கு விழுந்து விடும் என்ற பயமோ" அரசியல் தலைவர்களுக்கு இருந்தால் அடுத்த தேர்தலிலும் "முதன்முறையா வாக்களிக்க ஆசை தான்!! ஆனா..." என்ற குரல்கள் மேலும் அதிகமாகக் கேட்க நேரிடும்!!


இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.

http://youthful.vikatan.com/youth/senthilstory06042009.asp

No comments:

Related Posts with Thumbnails