Sunday, December 13, 2009

கல்லாபுரம் - அந்த நாள் வருமா?

மாலை நேரம். சூரியன் மறைந்து சில நிமிடங்களே ஆகியிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மிக அருகிலிருக்கும் கிராமம். ஊரிற்கே பச்சை நிறச் சாயம் அடித்திருப்பதைப் போல பசுமை சூழ்ந்திருந்தது. சிறிதும் பெரிதுமாக தென்னை மரங்கள், மாமரங்கள், வேப்பமரங்கள் என எங்கும் பச்சைக் கம்பளம் போர்த்தியதைப் போல பசுமை!!

நவம்பர் மாதம் என்பதால் முன்பனி சூழ ஆரம்பித்திருந்தது. பனிக் காலத்தில் கிராமங்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் புகையும் கூட அவ்வளவு அழகு!! அந்தப் புகையைப் பார்த்துக் கொண்டிருப்பதில் கூட அவ்வளவு இனிமை.

இப்படி ஒரு மாலைப்பொழுதில், உங்கள் உறவினர்களுடன் ஒரு ஆற்றுப் பாலத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். ஆற்றின் நீர் அசையாமல் நின்று கொண்டிருக்கிறது. தூரத்தில் தெரியும் அணையின் நிழல் ஆற்றில் தெளிவாகத் தெரியும் அளவிற்கு நீர் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது! அங்கிருக்கும் மரங்களின் கூடுகளில் அடையச் செல்லும் பறவைகள் சத்தம் என ஏதோ வேறு உலகிற்கு வந்து விட்ட உணர்வு!!

இது போல ஒரு காட்சியைத் தினமும் பார்த்து வருபவருக்கு மன உளைச்சல் ஏற்படுமா?

ஆம்!! இது போல ஒரு காட்சியைப் பார்த்தது உடுமலை அருகே உள்ள கல்லாபுரம் என்னும் ஊரில் தான்!! உடுமலை அருகே இருக்கும் என் ஊரான மடத்துக்குளத்தில் இருந்து இருந்து சரியாக 25 நிமிடப் பயண நேரத்தில் இருக்கும் ஒரு ஊர். நான் பல முறை அமராவதி அணைக்குக் கல்லாபுரம் வழியாகச் சென்றிருந்தாலும், இந்த முறை மிகவும் கவனிக்கச் செய்தது.


வழக்கமாக என் வீட்டிற்கு வரும் உறவினர்களையும் நண்பர்களையும் ஓரிரு மணி பயண நேரத்தில் இருக்கும் கொடைக்கானலிற்கோ, மூணாறிற்கோ, வால்பாறைக்கோ கூட்டிச் செல்வதுண்டு. இந்த முறை ஒரு மாறுதலாக கொமரலிங்கம், பெருமாள்புதூர், எலையமுத்தூர், கல்லாபுரம் என அழகிய கிராமங்கள் வழியாக அமராவதி அணையை நோக்கிக் கூட்டிச் சென்றேன்.

போகும் வழியில் பசுமையான வயல்வெளிகள், வயல்களில் மேய்ந்து வரும் மயில்கள், தூரத்தில் தெரியும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள், மலைகளின் நடுவே மறையும் சூரியன் என நாங்கள் பார்த்த காட்சி வேறெங்கும் கிடைக்காது!!







அப்படி அமராவதி அணைக்குப் போகும் வழியில் வரும் கிராமம் தான் கல்லாபுரம்.
அமராவதி அணையில் இருந்து வரும் தண்ணிரை முதலில் பயன்படுத்துவது இந்த ஊர் மக்கள் தான்!! இவர்கள் குடிக்கும் தண்ணிரில் குளோரினோ, வேறு எந்த வேதியப் பொருட்களோ கலப்பதில்லை!! தண்ணீரில் இருந்த தூய்மை, காற்றின் இருந்த ஈரப்பதம், தூரத்தில் கேட்ட கோயில் மணியோசை, பறவைகளின் இறைச்சல் என அந்தப் பாலத்தின் இயற்கைக் காட்சியைப் பார்த்த எங்களுக்கு அமராவதி அணைக்குச் செல்ல மனமில்லாமல் போனது!!



அப்படியே கல்லாபுரம் கிராமத்திற்குள் செல்லும் பொழுது ஒரு பெட்டிக்கடையில் குழந்தைகள் அழகாக பலூன்களை ஊதி விளையாடிக் கொண்டிருந்தனர். எங்கள் காரைப் பார்த்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்தனர்."இந்தக் குழந்தைகளுக்குத் தெரியுமா அவர்கள் எவ்வளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்" என்று நினைத்துக் கொண்டேன்.

"மாப்ளே, இந்த ஊருல இடமெல்லாம் என்ன விலைக்குப் போகுது" என் மைத்துனர் என்னிடம் கேட்டார்.

"ஒரு ஏக்கர் தோப்பு 10 இலட்சம் வரையில் போகிறது" என்றேன்.

"பேசாம மெட்ராஸ் வீட்ட விற்றுவிட்டு இங்கே வந்திடலாமா?"என்றார்.

"மாமா, ஒவ்வொரு முறையும் ஊரிற்கு வரும்பொழுது வேலையை விட்டு வந்து விடலாமான்னு நினைச்சுட்டே தான் இருக்கிறேன். ஆனா அந்த நாள் எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை!!" என்றேன்.

அழகான, பசுமையான ஊரைச் சேர்ந்த எனக்கு, பொருளாதாரம், வேலை என பல காரணங்களுக்காக கட்டிடக் காடுகளில் பணி புரிய நேர்ந்தாலும், எப்பொழுது ஊரிற்குச் செல்வோம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது. கல்லாபுரம் போன்ற கிராமங்களில் வசிப்பவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா? ஊரிற்குத் திரும்பும் அந்த நாள் எப்பொழுது வரும்?

***************************************************

பக்ரீத்தை முன்னிட்டு அலுவலகத்தில் விடுமுறை ஒரு வார காலத்திற்கு கொடுத்திருந்தனர். "ஹே.. லீவு விட்டாச்சு"னு துபாயில் இருந்து ஊரிற்குப் போன பொழுது பார்த்த காட்சி தான் இந்த இடுகை!!

**

21 comments:

Mahesh said...

அருமை...

//இந்தக் குழந்தைகளுக்குத் தெரியுமா அவர்கள் எவ்வளவு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்" என்று நினைத்துக் கொண்டேன்.
//

ஆனால் கசப்பான உண்மை, அவர்கள் நம்முடைய காங்க்ரீட் காடு வாழ்க்கையே சிறந்தது என்று இருப்பார்கள் :(

நானும் விடுமுறையில் செல்கிறேன். உடுமலையில் நாகா, சிதம்பரம் ஆகியோரை சந்திக்க ஆவல்.

vasu balaji said...

குளிர வைக்கும் படங்கள், அந்த ஜோடி மயில்கள் பிரமாதம். அந்த ஆற்றைப் போலவே உங்கள் எழுத்து! பகிர்ந்தமைக்கு நன்றி செந்தில்.

ஈரோடு கதிர் said...

அடாட... அருமையான அனுபவப் பகிர்வுங்க செந்தில்..

கிளியனூர் இஸ்மத் said...

//எப்பொழுது ஊரிற்குச் செல்வோம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கிறது. //

குடும்பத்துடன் வாழும் எனக்கும் தான்.........
தாய் மண்ணின் தொப்புல் கொடி உறவல்லவா....
கல்லாபுரம் மனதில் நிற்கிறது.

செ.சரவணக்குமார் said...

பெட்டிக்கடையில் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் அந்த சிறுவர்கள் புகைப்படத்தை வெகு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் பால்யத்தின் ஒரு காட்சியைக் கண்டது போல் இருந்தது. பகிர்வுக்கு நன்றி செந்தில்.

jothi said...

//ஒவ்வொரு முறையும் ஊரிற்கு வரும்பொழுது வேலையை விட்டு வந்து விடலாமான்னு நினைச்சுட்டே தான் இருக்கிறேன். ஆனா அந்த நாள் எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை!!" என்றேன்.//
same blood.

இந்தியாவில் இருக்கும் போது மனசு மிக லேசாக இருக்கும். இன்னும் இங்கே வேண்டி இருக்கிறது என்ற எண்ணம் என் மனசை விட்டு அகல மறுக்கிறது

வினோத் கெளதம் said...

செம இடம் தல..

கலையரசன் said...

வெல்கம் பேக் செந்தில்... அருமையான இடுகை!! போட்டோவை பாக்கும்போதே குளுகுளுன்னு இருக்குங்க!!

பின்னோக்கி said...

சொர்க்கம் மாதிரி இருக்குங்க. படங்களில் என்ன ஒரு குளுமை. அனுபவிச்சு எழுதியிருக்கீங்க. எழுத்துலயும் குளிர்ச்சி தெரியுது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க மகேஷ். ஆமாங்க. நீங்க சொல்றது போல தான் அவர்கள் நினைப்பார்கள். இது தான் மனித இயல்போ?

வாங்க பாலாண்ணே. நன்றி!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கதிர். நன்றி

வாங்க இஸ்மத் அண்ணே. நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//செ.சரவணக்குமார் said...

பெட்டிக்கடையில் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் அந்த சிறுவர்கள் புகைப்படத்தை வெகு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் பால்யத்தின் ஒரு காட்சியைக் கண்டது போல் இருந்தது. //

வாங்க சரவணக்குமார். நாங்களும் தான் !!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க ஜோதி. நன்றி

வாங்க வினோத். நன்றி.

வாங்க கலை. நன்றி.

வாங்க பித்தன். நன்றி.

வாங்க பின்னோக்கி. நன்றி.

geethappriyan said...

அருமை நண்பர் செந்தில்வேலன்,
மிக நல்ல இடுகை, ஊருக்கு போய் செட்டில் ஆனால் கல்லாபுரம் போல ஊரில் செட்டில் ஆகனும், பகிர்வுக்கு நன்றி

ஹுஸைனம்மா said...

//கல்லாபுரம் போன்ற கிராமங்களில் வசிப்பவர்களை விட நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா?//

இக்கரைக்கு அக்கரை பச்சை!!

☀நான் ஆதவன்☀ said...

கொள்ளை கொள்ளும் அழகு செந்தில் :)

Anonymous said...

BS - What is the point if no money! always the other side is greener!

V.N.Thangamani said...

நல்ல பதிவு, நாளை சந்திக்கலாம்
நன்றி, வாழ்க வளமுடன்.

பொன்னியின் செல்வன் said...

ஆஹா! கிராமங்கள் கிராமங்கள் தான் போங்கள்! மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள் செந்தில்-ஜி.

அன்புடன் மலிக்கா said...

அழகோ அழகு இயற்கை காணும்போது கண்களுக்குள் ஏற்படும் குளுமை அப்பப்பா அத்தனை அற்புதம் ஜோடி மயில் சூப்பர்..

உங்கள் ரசனை அருமை செந்தில்..

R.Panneerselvam said...

" kallaapuram" pathivai padiththathum makiznthEn. neengalm namma uraa?
naan kolumam pakkamulla "Ruththiraapalayam"
enka urai otti oru kulam irukku.athai paarththaa neeng mayankiduveeka!

amaravathiyin muthal pasan kalvai enga uoor varai varuthu.
ronba sandhosham pangaali!!!

Related Posts with Thumbnails