Friday, April 2, 2010

நோக்கியா ஸ்போர்ட்ஸ் டிராக்கருடன் ஒரு காலைப்பொழுது..

நீங்கள் தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்பவரா? நீங்கள் எத்தனை தூரம் நடந்தீர்கள், எவ்வளவு சக்தியை எரித்தீர்கள் என்று தெரிய வேண்டுமா? எனது அனுபவத்தை மேலும் படியுங்கள்...o
அமீரக மக்களுக்கு வெள்ளிக்கிழமை சற்று தாமதமாகத் தான் துவங்கும். வியாழக்கிழமை நள்ளிரவு வரையிலும் நண்பர்களுடன் உலாவுவது, துரித உணவுகளில் சாப்பிடுவது என வெளியில் சுற்றுவது அமீரக மக்களின் வாடிக்கை. அதனால், வெள்ளிக்கிழமை காலைப் பொழுதுகளில் சாலைகள், பூங்காக்கள், கடற்கரைகள் என எங்கும் ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும்!! அமைதியாக இருக்கும் காலைப்பொழுதுகளில் நடைப்பயிற்சியை மேற்கொள்வது எனக்கு வாடிக்கை!! வார நாட்களில் ஓரிரு நாட்கள் நடைப்பயிற்சி செய்ய முடியாமல் போனாலும், வெள்ளி சனிகளில் தவறுவதில்லை!!

அமைதியான காலையில் எத்தனை விதமான மக்கள்! எவ்வளவு அழகான காட்சிகள்!!

ஈச்ச மரங்களின் நடுவே யோகாசப் பயிற்சியை மேற்கொள்ளும் இந்திய அன்பர்கள், நடைப்பயிற்சி செய்யப் போனாலும் நெற்றியில் திருநீறு அல்லது பெண்களென்றால் குங்குமப் பொட்டு வைத்துச் செல்லும் நம்மவர்கள், நேற்றிரவு தூங்கவில்லையோ என்று நினைக்கும் அளவிற்கு சோர்வுடன் காணப்படும் ஃபிலிப்பினோ ஜோடி. அதிகாலை ஏழு மணிக்கே KFC வறுத்த கோழியை நொறுக்கிக் கொண்டிருக்கும் அன்பர்கள், நடந்து கொண்டிருக்கும் பொழுது என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்களே என்று நினைக்கும் பொழுதே என் பின்னாலிருந்து கடந்து செல்லும் ஐரோப்பியப் பெண் என பல தரப்பட்ட மக்கள்!!

இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதைப் பற்றியும், நாம் செல்லும் வழியைப் பற்றியும், பார்த்த விசயங்களைப் பற்றியும் நண்பர்களுக்குப் பகிர்ந்தால் நன்றாகத் தானே இருக்கும்!!

நாம் தினமும் மேற்கொள்ளும் பயிற்சியையும், பயிற்சியால் நாம் எரிக்கும் சக்தியையும், நாம் நடந்து சென்ற பாதையையும் வரைபடத்தில் காணும் வாய்ப்பை வழங்குவதே நோக்கியா ஸ்போர்ஸ் டிராக்கர் (Nokia Sports Tracker ) செயலியின் வேலை!! நடை பயிற்சியை மேற்கொள்வதற்கு முன்பு நம் செல்போனில் உள்ள GPSயைத் துவக்க வேண்டும். GPS வசதி செயல்பட ஆரம்பித்தவுடன் நாம் இருக்கும் இடத்தில் வரைபடம் தெரிய ஆரம்பிக்கும். பிறகு நாம் நடைப்பயிற்சியை தேர்ந்தெடுத்து நடக்க ஆரம்பிக்க வேண்டியது தான். நாம் நடக்கும் அல்லது ஓடும் பாதையே தொடர்ந்து கொண்டே வரும் இந்த செயலி. இந்த வரைபடங்களில் உள்ள தூரத்தைக் கணக்கில் கொண்டு நாம் எவ்வளவு கிலோ மீட்டர் நடந்திருக்கிறோம், எவ்வளவு சக்தியை எரித்திருக்கிறோம் என்றெல்லாம் கணக்கை நமக்குத் தருகிறது.

அது மட்டும் தானா?

நீங்கள் நடக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களையும், கேட்ட பாடல்களையும் இந்த செயலி சேமித்து வைக்கிறது. நடைப் பயிற்சியை முடித்த பிறகு நோக்கியா ஸ்போர்ஸ் டிராக்கர் தளத்திற்கு தரவேற்றம் செய்யலாம்.

மேலும் வேறென்ன வசதியுள்ளது இந்த சேவையில்?

நடக்கும் பொழுதும், ஓடும் பொழுதும் தான் நம் இதயத் துடிப்பைக் கவனிக்கத் தகுந்த நேரம். நம் இதயத் துடிப்பையும் இந்த செயலியின் மூலம் அளவிட முடியும். இதயத் துடிப்பு கச்சை(Heart Beat Belt) ஒன்றை நம் நெஞ்சில் கட்டிக்கொண்டு, புளுடூத் (Bluetooth) மூலம் செல்போனில் இணைத்தால் போது, நம் இதயத் துடிப்பும் சோதனையிடப்படும்!!

இன்று காலை நான் மேற்கொண்ட நடைப் பயிற்சியின் சுட்டி இங்கே... ஷார்ஜ புஹைராவில் இருக்கும் என் வீட்டில் இருந்து கிளம்பி புஹைரா கார்னிஷில் நடந்தேன். ஒரு மணி நேரத்தில் ஆறு கிலோமீட்டர் நடந்துள்ளேன். நான் கொடுத்த சுட்டியில் உள்ள காமிராவை அழுத்தினால் நான் எடுத்த படங்கள் தெரியும். இந்த சேவையை ஜி.பி.எஸ் வசதி கொண்ட அனைத்து நோக்கிய செல்போனிலும் மேலே கொடுத்துள்ள தளத்தில் இலவசமாகப் தரவிறக்கிக் கொள்ளலாம்.

இத்தனை காலமாக நடக்கும் பொழுது இதையெல்லாம் பயன்படுத்தியா வந்தோம்? உண்மை தான். இலவசமாக கிடைக்கும் சேவையைப் பயன்படுத்துவதில் தவறில்லையே. நடக்கச் சோம்பேறித்தனப்படும் அன்பர்களை இப்படியாவது ஊக்கப்படுத்தினால் நல்லது தானே?

குறிப்பு: படங்களைத் தரவேற்றும் பொழுது ஆப்பரேட்டர் கட்டணம் கட்டவேண்டியதிருக்கும் என்பதை நினைவில் கொள்க!!

7 comments:

தாராபுரத்தான் said...

என்ன இருந்தாலும் மடத்துக் குளம் போலாகுமா?

வானம்பாடிகள் said...

ஆப்பரேட்டர் கட்டணம் கட்டவேண்டியதிருக்கும் என்பதை நினைவில் கொள்க!!//

அந்த வயத்தெரிச்சல்ல எவ்வளவு கலோரி குறையும்னு காட்டினாத் தேவலை

பிரபாகர் said...

சொல்லியிருக்கும் தகவல்கள் முற்றிலும் புதிது செந்தில்... அருமையான அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய இடுகை...

பிரபாகர்...

Chitra said...

ஆப்பரேட்டர் கட்டணம் கட்டவேண்டியதிருக்கும் என்பதை நினைவில் கொள்க!!//

அந்த வயத்தெரிச்சல்ல எவ்வளவு கலோரி குறையும்னு காட்டினாத் தேவலை

.....ha,ha,ha.....

பயனுள்ள பதிவுக்கு நன்றி என்று போடலாம்னு வந்தேன். பாலா சாரின் கமென்ட் பாத்துட்டு, ஒரே சிரிப்பு.

ஈரோடு கதிர் said...

கலக்குங்க செந்தில்

ச.செந்தில்வேலன் said...

@@ தாராபுரத்தான்.

சொற்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமாங்க ஐயா.. இருக்கற வரைக்கும் நல்லா இருந்துட்டு வர வேண்டியது தான்.. :)

@@ வானம்பாடிகள்..

ஆமாங்க.. :)

@@ பிரபாகர்,

நன்றிங்க.

@@ சித்ரா,

நன்றிங்க.

@@ கதிர்.

நன்றிங்க.

க.பாலாசி said...

கடைசியா ஒன்னு சொல்லியிருக்கீங்க பாருங்க அதுக்காகவே நடக்கணும்னு தோணுது...

புதிய தகவல்... நன்றி...

Related Posts with Thumbnails