Sunday, October 17, 2010

21ம் நூற்றாண்டில் ஆயுத பூஜை!!

இப்பதிவை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதற்பாகத்தில் ஆயுதபூஜை மீதான கொசுவத்தியையும் என் ஈடுபாட்டைப் பற்றி பதிந்துள்ளேன். இரண்டாம் பாகத்தில் வருவது இன்றைய சூழலில் ஆயுதபூஜையை எப்படிப் பார்க்கலாம் என்ற பார்வை!!

*

தொழிற்சாலைகள் அதிகமுள்ள ஊரில் வளர்ந்த எனக்கு ஆயுதபூஜை மீது தனி ஈடுபாடுண்டு.

உடுமலையை அடுத்த மடத்துக்குளத்தில் வளர்ந்த என்னைச் சுற்றி எப்பொழுது அங்குள்ள காகித ஆலைகள், பஞ்சாலைகள், சக்கரை ஆலை, லேத்கள் Lathe (தமிழாக்கம் தெரியவில்லை) பற்றிய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்ததுண்டு. என் தந்தையும் அந்த ஊரில் இருந்த ஒரு காகிதாலையில் பணியாற்றியதால் காகித ஆலையை பலமுறை காணும் வாய்ப்பு கிடைத்ததுண்டு. 

சிறு வயதில், ஒவ்வொரு முறை காகித ஆலைகளுக்குள் செல்லும் பொழுதும் அங்கிருக்கும் அப்பாவின் நண்பர்களையெல்லாம், இந்தக் கருவி என்ன செய்யும், எதற்கு என்றெல்லாம் கேள்வியால் துளைத்ததுண்டு. அவர்கள், பல முறை கேள்விகளுக்குப் பதிலளித்தும், சில முறை காகிதாலையின் கருவிகளின் அதீத ஒலியால் பதிலளிக்க இயலாமலும் போனதுண்டு. பதில் கிடைக்காத கேள்விகளுக்கு விடையைத் தேட ஆயுத பூஜை நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த நாட்களெல்லாம் உண்டு. அன்று தானே சுலபமாக பொதுமக்கள் பார்க்க அனுமதி கிடைப்பதுண்டு. சிறிய ஊர்களில் எளிமையாக தொழிற்சாலைகளைப் பார்வையிட முடிந்தது போல நகரங்களில் முடிவதில்லை என்பது தான் உண்மை.

ஆயுத பூஜையின் பொழுது பெரும்பாலான கருவிகள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, வண்னக் காகிதங்களால் அலங்கரிப்பதைப் பார்க்க முடியும். அவரவர் வேலை செய்யும் இயந்திரங்களையும் கருவிகளையும் சுத்தம் செய்து அவர்கள் வழிபடுவதைப் பார்க்கும் பொழுது உற்சாகத்தை உணர்ந்திருக்கிறேன். இரும்புக் குழாய்களைக் கடைந்தெடுக்கும் பெரிய அளவு லேத்கள் முதல் கொரடு, சுத்தி என சிறிய ஆயுதங்கள் வரை அனைத்தையும் வைத்து பூஜை செய்வதை எனனால் தொழிலின் மீதான பக்தியாகத் தான் பார்க்க முடிந்தது. 

ஒவ்வொரு நாளும் தொழில் பக்தியுடன் வேலை செய்தாலும் ஆண்டிற்கொரு முறை இப்படி ஒரு நாள் ஒதுக்கி வழிபடுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. உழவுத்தொழில் முதல் கணினித்துறை வரை, ஆயுதங்கள் கருவிகள் துணையின்றி எந்த விசயமும் நடப்பதில்லை என்ற நிலையில், ஆயுதபூஜையைக் கடைப்பிடிப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. நவராத்திரியின் கடைசியில் தான் ஆயுதபூஜையைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கெல்லாம் என்னிடம் பதிலில்லை. நொடிப் பொழுதிய கவனக்குறைவால் கைவிரல்களை இழந்தவர்களை எல்லாம் பரவலாக தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களுள் பார்க்க முடியும். அவரவர் தொழிலிற்கு உதவிய கருவிகளுக்கு, ஆயுதங்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவே எண்ணுகிறேன். நிற்க.

*

இளைஞர்களுள் பெரும்பாலானோர் கணினித்துறையிலும், கணினித்திரையின் முன்பும் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியும் இன்றைய சூழலில் ஆயுத பூஜை தேவை தானா?

ஆயுதபூஜை நாளை "வந்த வழியைப் பற்றி சிந்தப்பதற்காகவும், நாம் பயன்படுத்தும் கருவிகளின் செயல்பாடுகளைப் பற்றி சிந்திப்பதற்காகவும்" பயன்படுத்தலாம். 

வந்தவழி சரி. கருவிகளின் செயல்பாடுகளைப் பற்றி என்ன சிந்திப்பது?

நாம் தினமும் என்னென்ன கருவிகளைப் பயன்படுத்துகிறோம்? எவையவை தேவையற்றுக் கிடக்கின்றன? எவையவை தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்துகிறோம்?

நம்மில் பெரும்பாலானோர்க்கு இருக்கும் ஒரு பழக்கம். பார்க்கும் கருவிகளையெல்லாம் வாங்க வேண்டும். கையில் பணம் புரண்டால் அது இன்னமும் கேட்கவே வேண்டாம். சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய செல்போனைக் கிடப்பில் போட்டுவிட்டு புதிய கருவியை வாங்கியே தீர வேண்டும். ஏன்? அக்கருவியில் சில புதிய வசதிகள் உள்ளன, அல்லது நண்பன் வாங்கியதால் நானும் வாங்குகிறேன். அக்கருவியை வைத்திருப்பதில் ஒரு மதிப்பு!! 

இன்றெல்லாம் பொருட்களை மாற்றுவதில் அதிக வேகத்தை அனைவரும் காட்டுகிறோம். ஓரிரு வருடங்களிலேயே மூன்று தொலைக்காட்சிப் பெட்டியை மாற்றிய நண்பர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். பழைய தொலைக்காட்சிப் பெட்டியை என்ன செய்தோம்? அதே போல வருடத்திற்கொரு செல்போனை வாங்குபவர்களும் உண்டு. ஹோம் தியேட்டர் சாதனத்தை வாங்கிவிட்டுப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அன்பர்களையும் பார்க்க முடிவதுண்டு.

பழைய கருவியை என்ன செய்தோம்? குப்பையில் போட்டோமா? அல்லது மறுசுழற்சிக்குக் கொடுத்தாமோ?

மண்ணில் குப்பையாகப் போட்டால் மண் மாசடையாதா? 

அதே போல கருவிகளைத் தேவைக்கேற்ப பயன்படுத்துவதும் கிடையாது. பலர் கணினிகளை வாரக்கணக்கில் அணைப்பதும் கிடையாது, மின் இணைப்பைத் துண்டிப்பதும் கிடையாது. 

ஆயுதங்களுக்குப் பூஜை செய்யும் வேளையில் ஆயுதங்களையும் வசதிகளையும் பெற காரணமாய் இருந்த மண்ணையும் நிலத்தையும் மாசாக்காமல் இருத்தலே மிகவும் தேவையான ஒன்று!! கருவிகளுக்கு நன்றி கூறும் வேளையில் கருவிகளைத் தேவையான அளவு பயன்படுத்துவதன் தேவையை உணர்வதே 21ம் நூற்றாண்டில் ஆயுத பூஜைக் கொண்டாடும் வழியாக இருக்கும். 

உங்கள் எண்ணங்களையும் பகிருங்கள்!!

Wednesday, October 13, 2010

அழகிய நாட்கள்..


பள்ளி நாட்களைப் போலாகிவிட்டன கடந்த சில மாதங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் எப்படி வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு எவ்வளவு தயங்குவார்களோ, அதே போல் தயங்குகின்றன என் கால்கள். தேர்வு இறுதி நாட்களில் தேர்வை முடித்துவிட்டு குழந்தைகள் வீடு நோக்கி ஓடி வருவதைப் போல வீடு நோக்கி விரைகிறேன். எல்லாம் எங்கள் செல்லத்திற்காக..

குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதார் 

என்பதன் பொருளை அனுபவிக்கும் பொழுது தான் மேலும் உணர்கிறேன். 

அலுவலகம் முடித்து வீட்டில் காலெடுத்து வைக்கும் பொழுதே, "ஹேய்ய்ய்ய்ய்ய்" என்ற 7 மாத மகனின் குரல் வரவேற்கின்றன. அந்தக் குரலை எழுப்புகையில் அவன் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி, பெருமிதம்? கை கால்களை ஆட்டிக் கொண்டு தூக்கச் சொல்லி கேட்டு, நான் தூக்கிய பிறகு "எப்பூடி" என்று அவன் தாயை நோக்கி விடும் பார்வையை எங்கே கற்றான்?

குழந்தையின் ஒவ்வொரு நாளைப் பார்க்கும் பொழுது இயற்கையைத் தான் வியக்கத் தோன்றுகிறது. யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே ஒவ்வொரு செய்கையையும் எப்படிக் கற்றுக் கொள்கிறார்கள்? 

"ஏங்க.. நம்ம தங்கம் குப்புற விழ முயற்சி பண்றாங்க.." என்று அலைபேசியில் அழைத்துக் கூறும் மனைவியின் குரலில் தான் எவ்வளவு ஆனந்தம்!!

ஒரு காலை எடுத்து மற்றொரு கால் மேல் போட்டு இடுப்பை ஒரு பக்கமாகத் திருப்பும் முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். முயற்சியில் வெற்றி பெற்று குப்புற படுத்த பிறகு, அந்த அதிர்ச்சியில் ஒரு சிணுங்கல். மீண்டும் நாம் நேராகப் படுக்க வைத்தால் மீண்டும் குப்புற விழும் முயற்சி. சில நாட்களில் குப்புற விழுவதில் தேறியவுடன் ஒரு வெற்றிச் சிரிப்பு வரும் பாருங்கள்!! 

மற்றொரு நாள். மீண்டும் ஒரு அலைபேசி அழைப்பு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது..

"என்னங்க.. நம்ம செல்லம் 'ம்மா'னு சொல்றாங்க" குரலில் பூரிப்புடன்..
"ம்ம்.. சூப்பர்மா....." என்கிறேன் கம்மிய குரலில்.. 
"என்னங்க.. வேலையா இருக்கீங்களா.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சா.. அதான் கூப்பிட்டேன்.. நீங்க வேலை பாருங்க.. அப்புறம் கூப்பிடுங்க.."
என்று அழைப்பைத் துண்டிக்கும் பொழுது மனதில் வருத்தமும், நாமும் குழந்தை கூறும் முதல் வார்த்தையைப் பார்க்க வேண்டுமே என்ற ஆவலும் ஒரு சேர வருகிறது. 

"ம்மா" என்றும்.. சில சமயங்கள் துல்லியமாக "அம்மா" என்றும் உச்சரிக்கக் கேட்கையில் வரும் மகிழ்ச்சி ஈடிணையற்றது தான். தமிழ் மொழியின் உன்னதத்தை உணர்ந்த தருணங்களுள் இதுவும் ஒன்று.

தாய்மார்களின் அர்ப்பணிப்பைப் புரிந்து கொள்ள குழந்தைகளுக்குச் சோறூட்டுவதைப் பார்த்தாலே போதும். காலை நீட்டி குழந்தையைப் படுக்க வைத்து கதை சொல்லிக் கொண்டே ஊட்ட ஆரம்பித்தால், ஒரு கிண்ணம் அளவு உணவு செல்ல அரை மணி எடுத்துவிடும்.

"அந்த ஆடு சாமீய்ய், என்ன பண்ணுச்சாம்.. காட்டுக்குள்ள போயிக்கிட்டு இருந்துச்சாம்.. அது ரொம்பப் பெரிய காடு சாமி.. ரொம்ப தூரத்துக்கு வெளிச்சமே இல்லியாம்.. அப்போ என்ன ஆச்சு தெரியுமா? ஒரு யானை வந்துச்சாம் சாமி... வந்தூ.. இந்த வாய் வாங்கிக்கோ.. யானை தெரியும்ல.. நீ தான் தும்பிக்கையை உடச்சு விட்டீல்ல (தும்பிக்கை இல்லாத அவன் யானை பொம்மையைக் காட்டி) அந்த யானை ஆட்டப் பாத்து என்ன சொல்லுச்சாம்.. என்ன நீ தனியாக் காட்டுக்குள்ள போயிட்டிருக்க.. நான் உனக்குத் துணையா வரட்டுமான்னு கேட்டுச்சாம்.. அதுக்கு அந்த ஆடு என்ன சொல்லுச்சாம்.. ஆமா சாமீ.. இன்னொரு வாய் வாங்கிக்கோ.." என்று மடியில் படுத்திருக்கும் மகனை நோக்கி, என் மனைவி  கதை சொல்லி சோறூட்ட. அதை விழிகள் விரியக் கேட்கும் மகனைப் பார்ப்பதில் தான் எவ்வளவு சுவாரஸ்யம்.  உண்மையில் பார்க்கப் போனால் பெண்கள் பொதுவாகச் சிறந்த கதை சொல்லியாகத் தான் இருக்கிறார்கள். 

"ஏங்க நீங்க ஒரு நாள் கால்ல போட்டு ராகிக்கூலை ஊட்டுங்களேன்" என்று மனைவி கேட்டதற்கு, நானும் சரியெனத் தலையாட்டி விட்டு, முயற்சி செய்து ஊட்ட ஆரம்பித்தேன். ஓரிரு வாய் வாங்கிவிட்டு "புர்ர்ர்ர்ர்"ரென்று சிரித்துக் கொண்டே வாயை ஊதியதில் என் முகமெல்லாம் ராகிக்கூல் :)குழந்தையை வளர்ப்பதென்பது அன்னைமார்களுக்கு 24 மணி நேர வேலை என்றால் அது மிகையில்லை. துணைக்குப் பெரியவர்கள் யாரும் இல்லாத தனிக்குடித்தன சூழலில் என்றால் சொல்லவே வேண்டாம். 

"தவிழ முயற்சி செய்வது, பொம்மைகளைத் தொடப் பழகி எடுத்து விளையாட ஆரம்பிப்பது, பொம்மைகளுடன் பேச முயற்சி செய்வது, நாளடைவில் தாய் தந்தையிடம்.. "ஹே.... ஆ... " என்று பேச முயற்சிப்பது" என்று ஒவ்வொரு பொழுதும் புதிதாக மலர்கிறது. வேலை, தொழில் என்று வாழ்க்கை பரபரப்பாகச் சென்றாலும் ஒவ்வொரு நாளும் அழகாய் மலர்கின்றன. சில நாட்கள், அதிகாலையிலேயே துவங்கி விடுகின்றன. அதிகாலையிலேயே மகனிடம் விளையாட ஆரம்பிக்கும் நாட்களில் அலுவலகத்திற்கு கிளம்பும் பொழுது என் ஆரம்பகால பள்ளி நாட்கள் நினைவிற்கு வருகின்றன.

என்ன.. இப்பொழுது தந்தை நான், மகனைப் பார்த்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே செல்கிறேன்.

**

அழகிய நாட்கள்.. தொடரும்..



Friday, October 8, 2010

நாட்டுப்புறப் பாடல்கள் - நினைவுகள்

சிறுவயது நினைவுகளை அசைபோடுகையில் ஓடியாடி விளையாடியது, ஆடிப்பாடித் திரிந்தது எல்லாம் நினைவிற்கு வருகிறது. ஆடிப் பாடிய பாடல்களுள் பெரும்பாலானவை தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்த நாட்டுப்புறப் பாடல்களையே. சிறு வயதில் பாடிய பாடல்களை இன்று நினைவு படுத்திப் பார்க்கையில் சில பாடல்களே நினைவில் நிற்கின்றன.  என் தாத்தா நாடகங்களில் நடித்த அனுபவங்களையும் அதில் வரும் பாடல்களையும் பாடிக் காட்டிய நாட்களில் அதை அப்பொழுது கேட்டு சிரித்து விட்டுப்போனது தான் மிச்சம். சிறு வயதில் அதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியதில்லை.

என் தாத்தாவும் ஆத்தாவும் (பாட்டி) கிண்டலும் கேலியுமாகப் பாடிய பாடல்களில் முழுமையாக மண் வாசனை கலந்திருந்தது அன்று புரியவில்லை. வெளியூர்களில் பணியாற்றும் வேளையில் நம் மண்ணை நினைக்கும் பொழுது அவையாவும் மனதில் மின்னலாக வந்து செல்கின்றன. இன்று, அவர்கள் பாடிய பாடல்களில் நினைவில் நிற்பவை சொற்பமே!!

ஞாயிற்றுக் கெழமை திருடன் வந்தான்
திங்கட் கெழமை திருடிப் போனான்
செவ்வாய்க் கெழமை செயிலுக்குப் போனான்
புதன் கெழமை புத்தி வந்தது
வியாழக் கெழமை விடுதலை ஆனான்
வெள்ளிக் கெழமை வீட்டிற்கு வந்தான்
சனிக் கெழமை சாப்புட்டுப் படுத்தான்.

மேலே குறிப்பிட்ட பாடல் எனக்கு கிழமைகளைச் சொல்லிக் கொடுக்கையில் என் பாட்டி எனக்குப் பாடிய பாடல். இன்னும் சின்ன வயதில் பாட்டி அவரது காலில் அமர வைத்து காலை மேலும் கீழுமாக அசைத்த படி பாடிய பாடல்..

குத்தடி குத்தடி ஜைலக்கா
குனிஞ்சி குத்தடி ஜைலக்கா
பந்தலிலே பாவக்கா
தொங்குதடி லோலாக்கா

பையன் வந்தாப் பாத்துக்கோ
பணம் கொடுத்தா வாங்கிக்கோ
சுருக்குப் பையில போட்டுக்கோ..

பந்தல்ல பாகற்காய் இருக்கற வீடுகளே இல்லாத இன்றைய சூழல்ல இது போன்ற நாட்டுப்புறப்பாடல்கள் எங்கே பாடுவது என்று தோன்றினாலும் அவரவர்க்கு நினைவில் வரும் பாடல்களே பதிவு செய்து வைப்பது, நம் முன்னோரின் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் புரிந்து கொள்ள உதவும்.

நெருங்கிய உறவினர்கள் பலரும் பணி நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பணியாற்றிவரும் வேளையில் வருடத்திற்கு ஒரு முறையோ இரு வருடத்திற்கு ஒரு முறையோ அனைவரும் ஒன்று கூடுவதுண்டு. அப்படிக் கூடும் பொழுது பெரியவர்களை நாட்டுப்புறப்பாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு. அப்படி வரும் பாடல்களில் இருக்கும் நையாண்டிக்குத்  தனி சுவை தான். என் மாமா ஒருவர் இது போன்ற பாடல்களைப் பாடுவார். அவரிடம் அண்மையில் "உங்களுடைய பாடல்களேல்லாம் நினைவில் உள்ளனவா?" என்று கேட்டதற்கு அவரது நினைவில் இருந்து வந்தவை சில பாடல்கள் மட்டுமே.

மாமரத்துக்கும் பூமரத்துக்கும் மயிலுக்கண்ணாடி
இந்த மங்கம்மா போடறது ஸ்டைலுக் கண்ணாடி
பாப்பாத்தா காப்பித் தண்ணி பஸ்ட் க்ளாஸு
போத்தனூரு வாழைப்பழம் புட்டு விளாசு

*
பாட்டி பாட்டி பாட்டி
வெத்தலை பாக்கு வேணுமா
காது நல்லா கேக்கல
பலமாச் சொல்லடா பேராண்டி

பாட்டி பாட்டி பாட்டி
போயிலை காம்பு வேணுமா
காது நல்லா கேக்கல
பலமாச் சொல்லடா பேராண்டி

பாட்டி பாட்டி பாட்டி
தங்க நகை வேணுமா
காது நல்லா கேக்குது
மெதுவா சொல்லடா பேராண்டி

என்ன தான் சினிமாப் பாடல்கள் வந்துவிட்டாலும் மண் வாசனை வீசும் பாடல்களுக்குத் தனி சுவை தான். நம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்டுப் பாருங்கள்!! சுவையான பாடல்கள் பலதும் வெளியே வரலாம்.

*

விளையாட்டுப் பருவத்தில் ஒவ்வொரு விளையாட்டிற்கு வாய்ப்பாட்டோ, பாடலோ பாடியதை நினைத்தால் நம் வாழ்வியலில் நாட்டுப்புறப் பாடல்கள் எந்த அளவிற்கு ஒன்று கலந்த ஒன்று என்று யோசிக்கத் தோன்றுகிறது.

கோலி குண்டு விளையாடும் பொழுது.. குழியில் குண்டைப் போட்டால் பத்து பாயிண்ட், மற்றவரின் குண்டை அடித்தால் பத்து பாயிண்ட் என்று ஒவ்வொரு பாயிண்டிற்கு ஒரு வரியுண்டு. இன்று நினைவில் இருப்பவை இவை மட்டுமே..

ஐயப்பன் சோலை
ஆறுமுக தகுடி
ஏழுவா லிங்கம்
எச்சுமுச்சுக் கோட்டை
தொம்பா பேட்டை
தேசிங்கு ராஜா.

அது போல நொண்டி விளையாடுவதற்கென்று சில பாடல்கள், ஓடி விளையாடுவதற்கு, ஒளிஞ்சு விளையாடுவதற்கு என்று எதற்கெடுத்தாலும் பாடல்கள் தான். இன்று இது போன்ற பாடல்களை பாடுபவரும் இல்லை. பாடல்களை நினைவில் வைத்திருப்பவரும் இல்லை. வேறென்ன பாடல்கள் என்று யோசிக்கும் பொழுது

மலை மேல தீப்பிடிக்குது 
பிள்ளைகளா ஓடுங்க..
மலை மேல தீப்பிடிக்குது 
பிள்ளைகளா ஓடுங்க..


என்று மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பார்த்து ஓடிய நாட்கள் நினைவில் வருகிறது. உங்கள் நினைவில் உள்ள பாடல்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!!

Monday, October 4, 2010

அமீரக நகைச்சுவை மன்றம் + சேட்டை அரங்கம்.

நகைச்சுவையை விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா?

அசத்தப் போவது யாரு, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்திருப்பதற்கான காரணம் நகைச்சுவை மீதிருக்கும் ஆர்வமே!! 'மதுரை முத்து அசத்தறாரப்பா, சிவ கார்த்திகேயன் கலக்கறாரப்பா' என்றெல்லாம் சொல்லும் பொழுது 'அவர்களைப் போலெல்லாம் மேடையேறிப் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க முடியுமா என்ற பிரமிப்பும் இருக்கத்தான் செய்கிறது. நம்மில் பலரிற்கு மேடை ஏறுவதென்றால் ஏதோ பாகற்காயைச் சாப்பிடுவது போல..

இந்தப் பாகற்காயை எளிதாக 'சிரிக்கச் சிரிக்க' சாப்பிட வைப்பதே அமீரக நகைச்சுவை மன்றத்தின் வேலை.




"நாம் சிரிக்கும் பொழுது உலகமே நம்முடன் சிரிக்கும். நாம் அழும் பொழுது, தனியாகவே கண்ணிர் சிந்த வேண்டியதிருக்கும்" என்பதை நம்பும் அமீரக நகைச்சுவை மன்றத்தினர் (Emirates Humour Club), அனைவருக்கும் சிரிப்பு மருந்தைத் தருவதையும், சிரிப்பு மருத்தைத் தரக் கற்றுத் தருவதையும் நோக்கமாகக் கொண்டு இயங்கி வருகின்றனர். அமீரக நகைச்சுவை மன்றம் துபாயில் அமைந்துள்ளது. மாதத்தின் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் தமிழ் பேசும் அன்பர்களுக்காகவும், மூன்றாவது வார வெள்ளிக்கிழமைகளில் ஆங்கிலம் பேசும் அன்பர்களுக்காகவும் நகைச்சுவைக் கூட்டம் கூடுகிறது. 


நகைச்சுவை மன்றக் கூட்டங்களில் குழந்தைகள் முதல் முதியோர் வரை பலரும் நகைச்சுவைத் துணுக்குகள் மட்டும் கருத்துகளை மேடையேறிக் கூறிவதைப் பார்க்க முடியும். சிரிப்பதற்காகவே கூடும் கூட்டமென்பதால் பாலியல், மதம் மற்றும் அரசியல் கருத்துகளுக்கு மட்டும் தடை. நகைச்சுவை மன்றக் கூட்டத்திற்கு வருவோர் செய்ய வேண்டியது, நல்ல நகைச்சுவைத் துணுக்குகளை எடுத்து வருவது தான். மேடையேற பயமிருந்தால் மேடையேறுபவரை உற்சாகப்படுத்த கரவொலிகளை எழுப்பினால் போதும். இக்கூட்டங்களுக்கு வருபவர்கள் நாளடைவில் பயமின்றி மேடையேறுவதையும் பார்க்க முடியும்.

அமீரகம் போன்ற அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்குத் தம்மக்களை ஒரு சேரப் பார்க்க நேர்வதே அளவில்லா மகிழ்ச்சியைத் தரும் விசயம். அதுவும் நகைச்சுவைக் கூட்டமென்றால் சொல்லவா வேண்டும்?

உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமீரகத்தில் வாழ நேர்ந்தால் அவர்களுக்கு இம்மன்றத்தினை அறிமுகப்படுத்தத் தவறாதீர்கள்!! மாதத்திற்கொரு முறை பழக்கப்பட்ட முகங்களுடன் சிரித்து மாலைப் பொழுதைக் கழிப்பது அலாதியானது தானே!!




சேட்டை அரங்கம்..


அக்டோபர் 1ம் தேதி, சென்ற வெள்ளிக்கிழமையன்று நகைச்சுவை மன்றம், 'சேட்டை அரங்கம்' என்ற நகைச்சுவைப் பேச்சு மன்ற நிகழ்ச்சியை துபாய் அல்-கிசைஸில் உள்ள ஆப்பிள் இண்டர்நேசனல் பள்ளி அரங்கத்தில் நடத்தினர்.


1. கலகலப்பான குடும்ப வாழ்க்கைக்கு நகைச்சுவையே பிரதானம்
2. அமர்க்களமான அலுவலக வாழ்க்கைக்கு நகைச்சுவையே அச்சாணி
3. நகைச்சுவை என்பது பொழுதுபோக்கு மட்டுமே
என்ற தலைப்புகளில் மூன்று அணிகளாகப் பிரிந்து தங்கள் தரப்பு வாதங்களை வழங்கினர்.


ஒவ்வொரு அணியினரும் தங்கள் கருத்திற்கு வலு சேர்க்க நகைச்சுவையான நிகழ்வுகளையும், சூழ்நிலைகளையும் விளக்கி வாதத்தை வைத்தது அரங்கத்தைச் சிரிப்பலைகளில் மூழ்கடித்தது. நடுவர் குணா அவர்கள் தனது  அனுபவக் குறிப்புகள் மற்றும் துணுக்குகளுடன் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்திச் சென்றார்.

ஷார்ஜா, துபாய் போன்ற நகரங்களில் எந்திரன் படம் வெளியாகியிருந்தாலும் ஏறக்குறைய 150 பேர் நிகழ்ச்சியைப் பார்வையிட்டது சிறப்பு.


சேட்டை அரங்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுள் பலரிற்கு இதுவே 'முதல் மேடை' என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில், முதன்முறையாக மேடையேறிய நிறைவைப் பங்கேற்றவர்கள் முகத்திலும், நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியைப் பார்தத நிறைவைப் பார்வையாளர்கள் முகத்திலும் பார்க்க முடிந்தது. ஒரு நல்ல நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்கிய அமீரக நகைச்சுவை மன்றத்தினர்க்குப் பாராட்டுகள்!!

**

அமீரக நகைச்சுவை மன்றத்தின் இணையதள முகவரி கீழே..

http://www.emirateshumourclub.net/

**
Related Posts with Thumbnails