அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்குவதற்கான சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த அறிவிப்பு வெகுவாக விவாதங்களைக் கிளப்பியுள்ளது. வேலை, படிப்பு, தொழில் போன்ற காரணங்களுக்காக அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் முதல் படியாக இந்த அறிவிப்பைக் காணலாம். இந்த அறிவிப்பு சர்ச்சைகளுக்கு உள்ளாகாமல் இல்லை.
இந்தியாவில் படித்து விட்டு இங்கே தொழில் புரியாமல் அயல்நாடுகளில் வாழ்பவர்களுக்கு எதற்காக வாக்குரிமை? இங்கே நாட்டில் உள்ள நிலவரங்களைப் பற்றி உணராமல் வாக்களிப்பது எந்தளவிற்கு ஏற்புடையது? என்பது ஒரு வாதம்.
உண்மை தான்!! இந்தியாவில் தொழில்நுட்பம், மருத்துவம், மேலாண்மை போன்ற துறைகளில் படித்துவிட்டு வேலை வேண்டி வெளிநாடு செல்பர்களுக்கு எதற்கு வாக்குரிமை என்னும் மரியாதை. அரசுப் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவனைப் படிக்க வைக்க அரசாங்கம் பெருமளவில் மானியம் வழங்குகிறது. இங்கே படித்துவிட்டு, நம் மூளையை அயல்நாட்டில் அடகு வைப்பது சரியானதா? இன்றைய மத்திய தர வர்க்கத்தினரின் கனவு என்றால் அயல்நாட்டு வாழ்க்கை, டாலர் சம்பளம், அயல்நாட்டு வாழ்வுரிமை போன்றவை தான். இப்படி இருக்க, இந்தியா மீதான தொடர்பைத் துண்டித்திருக்கும் இவர்களுக்கு எதற்கு வாக்குரிமை?
பச்சைப் போர்வை போற்றிய புல்வெளிகள், திரும்பிய பக்கமெல்லாம் பளபளப்பு என்று அயல்நாட்டில் வாழ்க்கை நடத்துவோர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும், கடுமையான வெயில், 12 மணி நேர வேலை, வருடத்திற்கொரு முறை இந்தியப் பயணம் என்று வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் வாழும் இந்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அயல்நாட்டிற்குச் சென்றிருப்பது பச்சைப் போர்வை போற்றிய புல்வெளிகளைப் பார்த்தோ, பளபளப்புகளைப் பார்த்தோ எல்லாம் இல்லை. போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாமல் அயல்நாடு சென்றவர்களே அதிகம். இவர்கள் மனதில் எப்பொழுதும் ஓடிக்கொண்டிருப்பது இந்தியாவில் எகிறி நிற்கும் வெங்காய விலை, விவசாய நிலங்களை மூழ்கடித்த மழை வெள்ளம் போன்ற செய்திகளே. இவர்களின் உடல் இருப்பது அயல்நாட்டில் என்றாலும், எண்ண ஓட்டங்கள் இந்தியாவைப் பற்றித் தான். இந்தியாவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதில் என்ன தவறு?
அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனுப்பும் பணம் ஓரளவு இந்தியப் பொருளாதாரத்திற்கு உதவுகிறது. இப்படி நம் பொருளாதாரத்தில் பங்கேற்கும் அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவது சரி என்ற வாதம் ஒரு பக்கம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டில் முதலீடு செய்வதால் மட்டுமே நாட்டின் மீது அக்கறை வந்துவிட்டது என்று அர்த்தமாகாது. அவர்கள் செய்வது "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதே" என்ற வாதமும் உண்டு!!
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கூடாது என்று கூறும் பொழுது எழும் அடுத்த கேள்வி. இந்தியாவில் வாழ்ந்து கொண்டே வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பவர்களை என்ன செய்வது? NRI - Non Resident Indians போலவே RNI - Resident Non Indians என்று வாக்குப் பதிவு செய்யாதவர்களைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் அக்கறையற்ற மனநிலையை விட அயல்நாட்டில் வாழ்பவர்கள் எந்த விதத்தில் சோடை போனார்கள் என்பதே அடுத்த வாதம்!!
நிற்க!!
*
அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது என்றால்... அடுத்த கேள்வி. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமையை எப்படி சாத்தியப்படுத்துவது?
இந்திய மக்கள் வாக்குரிமையைச் செலுத்துவது என்றால் தேவையானது அவர்களது அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலில் பெயர், வாக்காளரின் முகவரி முதலியவை.
எத்தனை காலமாக அயல்நாட்டில் வாழ்பவருக்கு இந்த சேவையை வழங்குவது?
பலர் தொழில் காரணமாக அடிக்கடி அயல்நாட்டிற்கு சென்று திரும்புவர். இவர்கள் இந்தப் பட்டியலில் வரமாட்டார்கள். நிரந்தர வேலை காரணமாக சில ஆண்டுகள் வெளிநாட்டில் பணியாற்றி வருபவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படலாம். மூன்று மாதம் ஆறு மாதம் என்று குறுகிய காலத்திற்கு அந்நிய நாட்டிற்கு செல்பவர்கள் இந்தக் கணக்கில் வருவது சந்தேகமே.
இவர்கள் அடையாள அட்டையாக இந்திய வாக்காள அடையாள அட்டையும், கடவுச்சீட்டு கேட்கப்படலாம். அயல்நாட்டில் வசிக்கும் பலரிற்கு இந்த அடையாள அட்டை இருக்குமா என்பது அடுத்த ஐயம். இவர்களுக்கு எப்படி வாக்காளர் அட்டை வழங்குவது?
*
வாக்குப்பதிவை எங்கே செலுத்துவது?
அந்தந்த நாட்டில் உள்ள தூதரகங்களில் வாக்கைப் பதிவு செய்யலாம் என்று எளிதில் கூறிவிட முடியாது. அமீரகம் போன்ற சிறிய நாடு ஆனால் ஏராளமான இந்தியர்கள் வசிக்கும் இடங்களும் உண்டு. அமெரிக்கா போன்ற பெரிய ஆனால் பரவலாக வசிக்கும் நாடுகளும் உண்டு. இவர்களை எல்லாம் எப்படி ஒருங்கிணைப்பது. அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை என்று சொல்லிவிட்டால் அனைத்து நாடுகளில் வசிப்பவர்களுக்கும் கொடுத்தாக வேண்டும். இது அடுத்த கேள்வி.
இப்படி ஒரே சமயத்தில் அனைத்து நாடுகளிலும் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்றால் ஒன்று தொழில்நுட்ப உதவியை நாட வேண்டும்.
*
அயல்நாட்டில் வாழ்பவர்களுக்கு வாக்குரிமை வழங்க யோசிக்கும் வேளையில், இந்தியாவில் இருந்து கொண்டு வெளியூர்களில் பணியாற்றிவரும் கோடிக்கணக்கானோர் வாக்களிக்க என்ன வழி என்று யோசித்தால் நல்லது.
*
இப்படி பல விசயங்களையும் சிந்திக்கும் பொழுது அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை என்பது ஏதோ வெட்டிப்பேச்சோ என்று தோன்றுகிறது. பார்ப்போம்.
*
நேரமிருந்தால்.. இந்தக் காணொளியையும் பாருங்கள்.
*
7 comments:
விரிவான அலசல்! சிந்திக்க வேண்டியதும் கூட.
சிந்திக்க வேண்டிய ஒன்னுங்க செந்தில்!
தேவையான பகிர்வு
நான் ஆந்திராவில் 8 வருடங்கள் இருந்தபோது ஒருமுறை விடுப்பு எடுத்து ஓட்டு போட்டுவிட்டு வந்தேன். மறுமுறை போக முடியாத அளவிற்கு கனத்த வேலை. அப்போது நான் நினைத்தது, தமிழ்நாடு சட்டசபைக்கு ஓட்டு போட நான் ஏன் தமிழ்நாட்டிற்கு போகவேண்டும்?. தற்காலிக ஆந்திரா வாழ் தமிழர்களுக்காக ஆந்திராவில் உள்ள சில இடங்களை தேர்வு செய்து வாக்களிக்க அனுமதிக்கலாமே? தபால் ஓட்டு முறை கூட கடினமான வழி. எப்பொழுதெல்லாம் தொழில்நுட்பம் தேவைப்படுகிறதோ , எப்பொழுதெல்லாம் தனது ஆளுமைக்கு அப்பாற்பட்டவர்களின் உதவி தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அநேகமாக அரசாங்கம் துரிதமாக செயல்படுவதேயில்லை. அதுவும் அந்த முயற்கி சிறுபான்மையினருக்காக இருக்கும் பட்சத்தில் , கேட்கவே வேண்டாம் , அந்த கோப்புகள் கரப்பான் பூச்சிக்ள் குடியிருக்க மட்டுமே உதவும்.
இந்தியா/தமிழகத்தை விட்டு வெளியே செலபவர்கள் அனைவருமே கட்டாயத்தின்பேரில்தான் செல்கின்றனர். எனினும், தம் பொருளீட்டல் மற்றும் எண்ணங்களில் தம் ஊர் மற்றும் ஊர்மக்களின் முன்னேற்றத்தையே பெரிதும் விரும்பிச் செயலாற்றுகின்றனர். இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் என்.ஆர்.ஐ.க்களின் பங்கு மிகப் பெரியது.
இருந்தும், சொந்த ஊர் திரும்பிச் செல்லும்போது, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, சாதி/இருப்பிடச் சான்றிதழ்கள் போன்றவை பொருட்டு திண்டாடி அலைவது தவிர்க்க முடியவில்லை. இவற்றை முறைப்படுத்தவாவது என்.ஆர்.ஐ.க்களுக்கு வாக்குரிமை வேண்டும். (பெருங்கனவு போலத் தெரியுதோ?)
ஆனால், வாக்குரிமை வரின், ஏற்கனவே பலப்பல (தமிழ்ச்)சங்கங்களாய் பிரிந்து கிடக்கும் தமிழர்களின் மத்தியில் கட்சி அடிப்படையிலும் குழுக்கள் ஏற்படுமோ?
பாஸ், நீங்கதான் 4SN ஆ..?
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
Post a Comment