"பெட்டிதட்டிகள்"!! இவர்களால் பெரிதாக என்ன சாதித்துவிட முடியும்? அயல்நாடுகளில் உட்கார்ந்து கொண்டு இந்தியவைப் பற்றி "உச்"சுக்கொட்ட என்ன உரிமை இருக்கிறது? குளுகுளு அறைகளில் வேலை நேரத்தில் சமுக வலையமைப்புத் தளங்களில் "பன்னாட்டுப் பேசி" என்ன பயன்? என்றெல்லாம் பேச்சு வந்தாலும் இணையம் பெரிய நம்பிக்கையை உண்டாக்குகிறது!!
"தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்" என்று வலைப்பதிவுகளிலும், இணையதளங்களிலும் பதிவுகள்,பின்னூட்டங்கள், சிட்டாடல்கள், கோரிக்கை மனுவில் கையெழுத்திடல்கள் என்றெல்லாம் "பெட்டிதட்டிகள்" இயங்க ஆரம்பித்த பொழுது, "நம்மால் என்ன முடியும்?" என்ற எண்ணம் தோன்றியது உண்மையே!! "தமிழக மீனவர்களைக் காப்பாற்றுங்கள்" என்ற கோரிக்கை மனுக்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும் என்ற ஐயம் ஏற்பட்டாலும், இணையத்தில் இத்தனை ஆயிரம் பேர் தமிழக மீனவர்களின் சோகத்தில் பங்கேற்க ஆயத்தமாகியுள்ளார்கள் என்ற எண்ணம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
என்ற தளத்தில் இதுவரை 4523 பேர் கையெழுத்திட்டுள்ளார்கள். 7 கோடி மக்களில் 5 சதவிதத்தினர் இணைய வசதி உள்ளவர்கள் என்றாலும் 4523 என்ற எண்ணிக்கை ஒரு சதவிகிதம் தான். அதையே 7 கோடி மக்களுடன் ஒப்பிட்டால் மிக மிக சொற்ப சதவிகிதம் தான். ஆனால், இந்த சொற்ப சதவிதத்தினரால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஒவ்வொருவரும் 10 பேரைக் கையெழுத்திட வைத்தால் கூட நல்ல விசயமாக இருக்கும். சமூக வலையமைப்புத் தளங்களில் சேர்கையில், உங்கள் நண்பர்களின் நண்பர்கள் மூலம் நீங்கள் 25000 பேருடன் தொடர்பில் உள்ளீர்கள் என்று ஒரு எண்ணிக்கையைக் காட்டும். அது தான் இணையத்தின் வீச்சு.
கையெழுத்திடுவோம்! நம் ஆதரவை மீனவ அன்பர்களுக்கு அளிப்போம்!! நீங்கள் செய்ய வேண்டியது, மேலே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பெயரைக்குறிப்பிட்டு கையெழுத்திடுவது தான்!!
*
இதற்கு முன்பு பதிவுலகத்தில் உள்ள பெரும்பாலானோர் ஒரு விசயத்தை / மனிதரை ஆதரித்தது என்றால் அது 2009 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது தான். சரத்பாபு என்ற இளைஞர் தென்சென்னை தொகுதியில் நின்ற பொழுது பெரும்பாலானோர் அவரிற்கு ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர் வெற்றியடையாவிட்டாலும் ஏறக்குறைய 16000 வாக்குகளைப் பெற்றது இணையங்களில் இயங்கிவரும் பெட்டிதட்டிகளின் பிரச்சாரத்தாலும் தான்!!
அதை விட அதிக முனைப்புடன் ஒரு விசயத்தின் மீது ஆதரவை நல்க ஆரம்பித்திருப்பது "தமிழக மீனவர்கள்" விசயத்தில்!! டிவிட்டர்களில் #tnfisherman என்று இடம்பெறும் வகையில் சிட்டாடல்களைப் பதிய ஆரம்பித்து ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 - 10 டிவிட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் என்ன பயன்?
Trending Topics என்று எந்த விசயம் / தலைப்பு அதிகம் விவாதத்தில் உள்ளன என்று கணக்கெடுக்கப்படும் பொழுது #tnfisherman என்ற வார்த்தையும் வர ஆரம்பித்தால் அதிகமானோரின் கவனத்தை ஈர்க்க முடியும். உங்களுக்கும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் டிவிட்டிக் கொண்டே இருங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தைப் பார்வையிட்டால் டிவிட்டுகளைப் பார்க்கலாம்.
உங்களிடம் எதிர்பார்ப்பது கருத்துப்புரட்சி எல்லாம் இல்லை. #tnfisherman என்ற வார்த்தையுடன் கூடிய டிவிட்டுகளையே!! அதில் அரசியல், நையாண்டி, சாடல் இருக்க வேண்டும் என்பதல்லாம் இல்லை. எளிதாக I Support #tnfisherman என்றோ Please save #tnfisherman டிவிட்டினால் கூட போதும். தற்பொழுது வேண்டியது மீனவர்களுக்கு நம் ஆதரவு. கவன ஈர்ப்பு!!
இந்திய நேரம் 12 மணியளவில் இந்தியாவின் முதல் 5 சிட்டாடல்களில் #tnfishermanம் என்பதே சாதனை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் டிவிட்டுவோம். ஆதரவை நல்குவோம்.
*
என் பங்கிற்கு நான் டிவிட்டியவை..
ஹோஸ்னி முபாரக்கை விட அதிக நாட்கள் அரசியலில் இருப்பவர்கள் இந்தியாவில் உள்ளனர் - எகிப்து நாளிதழ் அதிர்ச்சி செய்தி!! #tnfisherman
எகிப்துல நடக்கறது வேதனையான விசயம்னாலும்.. இந்த மாதிரி பதவிஆசை வெறியர்களைத் துரத்துனா என்னனு தோனுது.. #tnfisherman
உங்களுக்குத் தொகுதிப் பங்கீட்டு விசயமே தலைய சுத்துது. இதுல எங்கிருந்து எங்கள கவனிக்கப் போறீங்க. #tnfisherman
சங்கீத மகாயுத்தம் நம்மைப் பசியாற்றும் பொழுது மீனவர் பசியை எங்கே நினைவு கொள்வது? #tnfisherman
எங்க பர்காதத்துக்கு யாராவது போனப்போடுங்கப்பா.. அவங்க வந்தா மூனு நாளுக்காவது தமிழக மீனவர்கள் விசயம் நாடு முழுவதும் தெரியும்ல #tnfisherman
ஏப்பா... நம்ம பா.ஜா.கவ ரதயாத்திரையா ராமேஸ்வரத்துக்கு வரச்சொன்னா என்ன? அப்படியாவது இங்க ஒரு ஊரு இருக்கறது ஊடகங்களுக்கு தெரியும்ல#tnfisherman
ஏப்பா.. நம்ம சர்வதேச கடல் எல்லைல ஒரு நூறு கடலோரக் காவல் கப்பல விட எத்தன காசாகும்? # tnfisherman
*
"பெட்டிதட்டிகளால்" என்ன செய்து விட முடியும் என்பதற்கு பதிலாக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார்கள் #tnfisherman ஆதரவாளர்கள். அவர்கள் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார்கள் என்பதை பதிவர் நர்சிம்மின் இந்தப் பதிவில் பார்க்கவும். இந்தப் பதிவில் கூறியுள்ள விசயங்கள் சாத்தியப்பட்டால் கூட நல்ல பயனிருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
*
8 comments:
பகிர்வுக்கு நன்றிங்க தம்பி!
விடிவு பிறக்கட்டும்.
உங்கள் ஆதரவை தெரிவித்ததற்கு நன்றி... எதிர்ப்புத்தீ பரவட்டும்...
முழுமையாக ஏற்கிறேன் நண்பரே!
நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல, எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், இத்தனை இணையத்தமிழர்கள் ஓரணியில் திரண்டிருப்பது மிகவும் நம்பிக்கையூட்டுகிற விஷயம்.
நல்லதொரு ஒற்றுமை பதிவர்களிடையே காணும்போது மகிழ்ச்சி.
//ஏப்பா.. நம்ம சர்வதேச கடல் எல்லைல ஒரு நூறு கடலோரக் காவல் கப்பல விட எத்தன காசாகும்?//
கண்டிப்பா 1.76 லட்சம் கோடிய விடக் குறைவாத்தானே ஆகும்?
உணர்ச்சி கொந்தளிப்பு இல்லாத உணர்வு பூர்வமான வார்த்தைகளில் வடித்த உங்களுக்கு என் பாராட்டுகள்.
@ பழமைபேசி,
நன்றிங்க அண்ணா.
@ சித்ரா,
ஆமாங்க.
@ பிரபாகரன்,
நன்றிங்க. அதுவே நம் எண்ணம். பார்ப்போம்.
@ சேட்டைக்காரன்,
ஆமாங்க. இன்னும் கைகோர்க்க வேண்டும். நன்றிங்க.
@ ஹூஸைனம்மா,
;)
நன்றிங்க.
@ ஜோதிஜி,
நன்றிங்க.
அருமை செந்தில். மிக நல்ல பதிவு.
Post a Comment