Friday, March 27, 2009

எங்க வேண்டுகோளையும் சேர்க்கச் சொல்லுங்க!! - புறா


அன்பான வாசகர்களுக்கு,


சமீபத்தில சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டுனதுல எங்க கூட்டை (வீட்டை) இழந்துட்டேங்க!! இந்த மாதிரி சோகம், எங்க பறவை இனத்துல நிறைய பேருக்கு நடந்திருக்குங்க.. அதனால, பறவைகளின் சார்பா ஒரு வேண்டுகோள் வைக்கறதுக்காக, இத எழுதறேங்க!!

நம்ம நாட்டுல பொதுத் தேர்தல் நடக்கபோறதாக் கேள்விப்பட்டேங்க. நம்ம ஊரு அரசியல் தலைவர்கள் எல்லாம் மும்மூரமா கூட்டணி பத்திப் பேசிட்டிருக்காங்கன்னும், இன்னும் கொஞ்ச நாள்ல தேர்தல் அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தயாரிக்க ஆரம்பிச்சுருவாங்கன்னும் கேள்விப்பட்டேங்க!! உங்களுக்குக் கொடுக்கற தேர்தல் வாக்குறுதிய வச்சுத்தான், கட்சிகளை நீங்க வெற்றி அடைய வைக்கிறீங்கன்னும் கேள்விப்பட்டேங்க. அதனால தான், எங்களோட வேண்டுகோளையும் தேர்தல் அறிக்கைல சேர்க்கச் சொல்லலாமேனு ஒரு நினைப்புல இத எழுதறேங்க!!

"பறவை இனங்கள் எல்லாம் மகிழ்ச்சி அடையற மாதிரி ஒவ்வொரு மாநிலத்திலயும் சில கோடி மரங்களை நட்டு வளர்ப்போம்" ங்கற மாதிரி ஒரு வாக்குறுதியத்தான் எங்க இனத்துல எல்லோரும் எதிர்பார்க்கறமுங்க!! இப்படி ஒரு வாக்குறுதி இதுக்கு முன்னாடி அரசியல் கட்சிகள் வச்சாங்கங்களான்னு தெரியலங்க. அப்படி இதுக்கு முன்னாடி, ஒரு அறிக்கை தயார் செஞ்சிருந்தாலும், வெளியில தெரியறதெல்லாம், டிவி தருகிறோம், லேப்டாப் தருகிறோம், சிலிண்டர் தருகிறோம், செல்போன் தருகிறோம்ங்கற மாதிரி "உங்கள" ஈர்க்கற விஷயங்கள் தாங்க. அதனால தான், டிவி, லேப்டாப் மாதிரி மரங்களை நட்டு (நட்டா மட்டும் போதுமா?) வளர்ப்போம்ங்கற எங்க கோரிக்கையையும் சேர்க்கச் சொல்லி வெளிய தெரிய வச்சீங்கன்னா நல்லதுங்க!!



"என்னடா மரங்கள் நட சொல்றதெல்லாம் சரி, ஆனா, சில கோடிகள் நட சொல்றது அதிகமா இல்லியா"ன்னு நீங்க யோசிக்கறது தெரியுந்துங்க. 83ஆயிரம் சதுர கிமி பரப்பளவு கொண்ட பாலைவன நாடான ஐக்கிய அரபு நாடுகள்ல (UAE) 4.2 கோடி ஈச்ச மரங்கள நட்டு கின்னஸ் சாதனை புரியறாங்கன்னா, 130 ஆயிரம் சதுர கிமி பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுல எத்தன மரங்கள் நடலாம்!! நம்நாடு முழுவதும் எத்தன மரங்கள் நடலாம்!! அந்த நாட்டு மண்ணுக்கு தகுந்த மாதிரி ஈச்சமரங்கள் வளர்த்தாங்கன்னா, நம்ம நாட்டு மண்ணுக்குத் தகுந்த மாதிரி, கம்மியா தண்ணி தேவைபடற மாதிரி எத்தனையோ வகையான மரங்கள நட்டு வளர்க்க முடியுமே!! அப்படி நடந்தா, எங்க பறவை இனத்தோட வருங்கால சந்ததி எல்லாம் மகிழ்ச்சியோட இருப்போம்ங்க!!

எங்களுக்கு மட்டும் தான் மரங்கள் வளர்க்கறதால மகிழ்ச்சி வரும்னு இல்லீங்க. மரங்கள் அதிகமா இருக்கற பகுதிய கடந்து போகும்போது, நீங்க எவ்வளவு மகிழ்ச்சி அடையறீங்கன்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கறேங்க.. நீங்க சைதாப்பேட்டைல இருந்து அடையாரை நோக்கி போகும்போது, ஐஐடி கிட்ட தட்பவெப்பம் குறைவதை உணர்வீங்க இல்லியா, அது தாங்க மரங்கள் நிறைய இருக்கறதால் கிடைக்கற பலன்!! அப்போ, நாடு முழுக்க கோடிக்கணக்கா மரங்கள நட்டா நம்ம நாடே குளிர்ச்சி அடையுமே!! மரம் இருக்கற இடத்துல மழை அதிக பெய்யும்னு உங்களுக்கும் தெரியுமே!!



அதான் சொல்றேங்க, எங்களுக்கு மட்டும் இல்லாம, உங்களுக்கும் எவ்வளவோ மகிழ்ச்சியை தரும் இந்த மரங்கள்!!

"மரங்கள நட்டா நமக்கு என்ன ஆதாயம்? டிவி, லேப்டாப் கொடுத்தாலாவது சில ஆதாயம் கிடைக்குமே!!"னு அரசியல் கட்சித் தலைவர்கள் நினைக்கலாம். அது எல்லா வற்றையும் விட இதுல அதிக ஆதாயம் இருக்கறதா சொல்லுங்க அவர்களுக்கு.. "என்னது மரங்கள் நட்டு வளர்க்கறதால ஆதாயமானு" நினைக்காதீங்க..

இப்பல்லாம் "கார்பன் கிரடிட்ஸ்னு" (Carbon Credits) அதிகமாப் பேச்சு அடிபடுதுங்க.. அதாவது உலகெங்கிலும், அதிகமா வெப்ப வாயு (greenhouse gases) வெளியிடற நிறுவனங்கள், தாங்கள் வெளியிடற வெப்பத்தை ஈடு செய்யும் அளவிற்கு வேறெங்காவது மரங்கள் வளர்ப்பதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கறாங்கன்னு கேள்விப்பட்டேங்க!! அதாவது இப்படி முதலீடு செய்வதன் மூலம் தங்கள் நிறுவனத்தின் வெப்பத் தாக்கத்தை ( Carbon footprints) குறைப்பதாக கேள்விப்பட்டேங்க!! நம்ம நாட்டுலயும், ஒருசில நிறுவனங்கள் ஏற்கனவே இதில் இறங்கி இருப்பதாகக் கேள்விப்பட்டேங்க!!

நம்ம அரசாங்கம் மரங்கள வளர்த்தா, இந்த நிறுவனங்கள் அரசைத்தானே அனுகனும்! இப்ப புரியுதுங்களா எப்படி ஆதாயம்னு? வனத்துறையினர் தங்கள் பங்கிற்கு காடுகளை பெருக்கும் திட்டங்களை வகுத்து செயல்படுத்தினாலும் அரசாங்க வாக்குறுதியில் நடக்கும் திட்டம் போல இருக்காதுங்களே!! இப்படி ஒரு திட்டம் வந்துதுன்னா, உங்கள்ல எத்தன பேருக்கு இதனால வேலைவாய்ப்பு கிடைக்கும்!! அதையும் கொஞ்சம் யோசிக்க சொல்லுங்க உங்க அரசியல் கட்சித்தலைவர்கள!!

"என்னடா நம்ம அடிச்சு திங்கிற புறா சொல்றத எல்லாம், நாம காது கொடுத்துக் கேட்கனுமான்னு" நினைக்காதீங்க. அது எங்களுக்கு மட்டும் இல்லீங்க, அது உங்களுக்கும் உங்க பேரப்புள்ளைகளுக்கும் ரொம்ப நல்லதுங்க!! இத நம்ம அரசியல்வாதிகள் செஞ்சாங்கன்னா, வருங்கால தலைமுறையோட சேர்த்து நம்ம பூமித்தாயும் வாழ்த்துவாங்கன்னு சொல்லுங்க!!



இப்படிக்கு,
கூட்டை இழந்து தவிக்கும் புறா!!

http://youthful.vikatan.com/youth/senthilstory28032009.asp

1 comment:

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

Related Posts with Thumbnails