Thursday, December 31, 2009

பழநி - பஞ்சாமிர்தமும் சிபாரிசில் தரிசனமும்..

பழநி!!

இந்த ஊரிற்குத் தான் எத்தனை முகங்கள், எத்தனை அடையாளங்கள், எத்தனை சிறப்புகள்!! தூங்கா நகரம், அதிகமாகப் பக்தர்கள் குவியும் நகரம், அதிகமாகச் சிறு வியாபாரிகள் வசிக்கும் நகரம், சித்தர்கள் வாழ்ந்த இடம், கொடைக்கானல், மூணாறு, வால்பாறை போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலிருக்கும் நகரம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

பழநி என்றவுடன் நினைவிற்கு வருவது பழநி முருகன் மலைக்கோவில், பழநிக்கே உரிய ஆராவாரம், காவிடிகளைத் தூக்கிச் செல்லும் பக்தர்கள், எங்கே பார்த்தாலும் "அரோகரா" என்ற சத்தத்துடன் ஆடிக்கொண்டே செல்லும் பக்தர்களும் தான்!! மேளதாளத்தையும் ஆரவாரத்தையும் கேட்கும் பொழுதே நமக்குள் ஒரு புல்லரிப்பும் வந்துவிடுகிறது!!

கோவிலிற்குச் செல்வதால் ஏற்படும் நிறைவும், மேளதாளமும், ஆரவாரமும் சிலிப்பும் சிறு வயதிலிருந்தே பிடித்துவிட்டதாலோ என்னவோ நானும் ஊரிற்குச் செல்லும் பொழுதெல்லாம் பழநி மலைக்கோவிலிற்குச் சென்று விடுவேன். அரைமணி நேரம் பயணதூரத்தில் என் ஊர் அமைந்துள்ளது ஒரு வசதி.

அதுவும் அதிகாலையில் மலைக்கோயிலைக் காணும் காட்சி அருமையான அனுபவத்தைக் கொடுக்கும். மலைக்குன்று முழுவதும் மின்சார ஒளியில் பிரகாசிக்க பின்புறத்தில் கொடைக்கானல் மலைத்தொடரைப் பார்ப்பது மிகவும் அலாதியானது. அப்படியே மலைக்கோயிலின் அழகை ரசித்துக்கொண்டே மலையை நோக்கிச் செல்வது என் வழக்கம்.





ஆனால், இதே அளவு மகிழ்ச்சி புதிதாகப் பழநிக்கு புதிதாக வருபவர்களுக்கும் இருக்குமா என்றால் ஐயமாவே இருக்கிறது!! பழநி பேருந்து நிலையத்தை அடைந்தவுடனே தரகர்களின் தொல்லை துவங்கிவிடுகிறது.

"சார்.. கோவிலுக்குப் போகனுமா?" என்றும் "நம்ம கடையில எல்லா (??) வசதியும் இருக்குது. இங்கேயே உங்க பொருட்களை வைத்துவிட்டுச் செல்லலாம்" என்றும் கேட்கத் துவங்குகிறார்கள்.



மலைக்கோவிலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்குமிடத்தில் "இங்கே காலணிகள் பாதுகாக்கப்படும்" என்ற விளம்பரப் பலகையை வைத்திருப்பவர்கள், சந்தனத்தை வைத்துவிட்டு ஐந்து ரூபாய் வாங்கும் நபர்கள், "இந்த வேல உண்டியல்ல போடுங்க தம்பி" என்று கூறும் நபர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

முன்பெல்லாம் மலையை ஏறும் பொழுது பக்திப்பாடல்களைக் கேட்க நேரிடும். ஆனால் இப்பொழுதோ கேட்பதெல்லாம் பஞ்சாமிர்தம் விளம்பரங்கள் தான்!! தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என்று ஐந்து மொழிகளில் விளம்பரங்கள்.



"தி பஞ்சாமிர்தம் இஸ் மேட் ஆஃப் ஹை குவாலிட்டி ஹில் பனானா, டேட்ஸ், சுவீட் வித் ஆட்டோமேட்டிக் மெசின்ஸ்" என்று கூறுவதைக் கேட்கும் பொழுது பழநி மலைக்கோவிலிற்கு வருவதே ஏதோ பஞ்சாமிர்தம் வாங்கத்தான் போலவென்று தோன்றுகிறது.

மலையை ஏறியவுடன் இறைவன் சன்னதிக்கு செல்வதற்கு தர்ம தரிசனம், சிறப்பு வழி (பத்து ரூபாய் கட்டணம்), தனிச் சிறப்பு வழி ( நூறு ரூபாய் கட்டணம் ) என்று வழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் செல்லும் தொலைவை மட்டுமே குறைப்பதாக உள்ளன.

நேற்று நான் சென்ற பொழுது தனிச் சிறப்பு வழியில் சென்றேன். நாம் செலுத்தும் கட்டணம் அன்னதானம் போன்ற திட்டத்திற்குச் செல்லும் என்று நம்பிக்கையால் தனி வழியில் அல்லது சிறப்பு வழியில் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளேன். அந்த வழியில் செல்வதற்கு வரிசையில் நின்றிருந்தவர்களுள் சிலரது கையில் நுழைவுச்சீட்டிற்குப் பதிலாக விண்ணப்பத்தை வைத்திருந்தனர்.

அது என்ன என்று விசாரித்த பொழுது "எங்க ஊரு எம்.எல்.ஏ. லெட்டர் கொடுத்திருக்கிறாரு" என்று விண்ணப்பத்தைக் காண்பித்தார்..

" இந்த விண்ணப்பத்தை வைத்திருப்பவர் என் உறவினர். அவரும் குடும்பத்தாரும் நல்ல (?) படியாக தரிசனம் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று இருந்தது.

இந்த விண்ணப்பத்தை வைத்திருந்தவருடன் ஐந்து பேர் வந்திருந்தனர். அனைவரையும் உள்ளே அனுமதிக்க கோயில் ஊழியர்  50 ரூபாய் பெற்றுக்கொண்டார். இன்னும் சிலரும் இதே போல வழியில் வந்ததைப் பார்த்த பொழுது எனக்கே வெட்கமாக இருந்தது.

வரிசையில் நின்று ஆண்டவன் சன்னதிக்கு அருகில் செல்லும் பொழுது சில நபர்கள் நின்று கொண்டு "சீக்கிரம் போங்க சீக்கிரம் போங்க" என்று அதற்றிக்கொண்டே இருந்தனர். "அரோகரா" சத்தத்திற்கு பதிலாக "சீக்கிரம் போங்க"வென்று கூவுகிறார்களோ என்று நினைத்தவாறே வெளியில் வரும் பொழுது "தட்சனை போடுங்க" என்று திருநீறு கொடுக்கும் (?) நபர், தட்டில் விழும் பணத்திற்கு ஏற்றவாறு திருநீறைக் கொடுத்தார். தட்சனை போடாத எனக்குச் சிறிதளவு திருநீறே கிடைத்தது.





தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தால் முருகன் மயிலின் சிலை இருக்குமிடத்தில் "பஞ்சாமிர்தம் ஸ்டாலை" வைத்திருந்ததால் முன்பு மயிலைக் கும்பிடும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்குவதிலேயே கவனமாக இருந்தார்கள்.






சில நிமிடங்கள், பழநி மலையில் அமர்ந்துகொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசித்துக்கொண்டே மலை ரயில், குதியாட்டம் போடும் குதிரைச் சவாரி, பங்குனி உத்தரம், கோவில் யானைகள்,பழநி மலையருகே இருக்கும் இடும்பர் மலை, இடும்பர் மலைக்குக் கீழே இருக்கும் தாமரைக் குளங்கள் என்று சிறு வயது நினைவுகள் தோன்றி மறைந்தன.

நேரக்குறைவின் காரணமாக இப்பொழுதெல்லாம் பழநி மலைக்கோவிலிற்கும், திருஆவினங்குடிக்கு மட்டுமே செல்கிறேன். குதிரைச் சவாரி செய்யலாம் என்றால் குதிரை வண்டிகளைப் பார்ப்பதே அரிதாகிறது. அப்படிப் பார்க்க நேர்ந்தாலும், குதிரையும் குதிரை வண்டிக்காரரும் சோர்வாகவே காணப்படுகிறார்கள்.






பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு குதிரைவண்டியைப் பார்த்ததும் புகைப்படமெடுத்தேன். "டீ குடிக்க காசு கொடு சாமி"என்று குதிரை வண்டிக்காரர் கேட்டார். மலைக்கோவிலில் தட்சனையாக போட வைத்திருந்த 5 ரூபாயை வண்டிக்காரரிடம் கொடுத்தேன்.

வண்டிக்காரருக்கு டீ, குதிரைக்கு??


*************************************************************************
..

18 comments:

வினோத் கெளதம் said...

பழனிக்கு சென்ற அனுபவத்தை தந்தது..:)
இன்னும் பல விஷயங்களை நான் நேரடியாக கண்டுள்ளேன் கோவிலின் உள்..
அங்கு காசுக்கு தகுந்தார்ப்போல் கவனிப்புகளும், மரியாதையும் வேறுப்படும்..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சொல்லியிருந்தா ஒரு வரவேற்பு ஏற்பாடு செய்திருக்கலாம்..,

jothi said...

மிக்க நன்றி செந்தில்.போய் வந்த திருப்தி பழனிக்கு (எந்த நி,னி,ணி என மூணுமே அரசு பேருந்துகளில் உள்ளது) .

நீங்கள் சொன்ன அந்த தரகர் கூட்டம். அப்பாடா சாமீ,.. அந்த மாதிரி ஏமாத்துற கூட்டம் இது வரைக்கும் நான் எங்கேயும் பாத்ததில்லை. முருகன் தான் பாவம், தன் சன்னதிக்கு உள்ளே, வெளியே என நிலைகளையும் தாண்டி தன் பக்தர்களை இழுத்துவர வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது.

ஷண்முக நதியில் குளித்தீர்களா. சின்ன வயதில் அங்கே குளித்தது, ஆனால் இன்னும் பசுமையாக,..

சுகமான பழைய நினைவுகளை அனியாயத்திற்கு கிளறிவிட்டது. மிக்க நன்றி.

Ashok D said...

வழிபாட்டுத்தலங்கள் வியாபார ஸ்தலங்கள் ஆகி ரொம்ப வருஷமாச்சிங்க.

அப்படியே குதிரைக்கு ஏதாவது வாங்கி கொடுத்திருக்கலாம், பஞ்சாமிர்தம்?

பின்னோக்கி said...

//குதிரையும் குதிரை வண்டிக்காரரும் சோர்வாகவே காணப்படுகிறார்கள்.

ஒரு வரி என்றாலும் நிறைய அர்த்தங்கள். கடைசி வரி அருமை.

பழநி மிகவும் வியாபாரமயமாக்கப் பட்டுவிட்டதைப் போன்று இருக்கிறது. புகழ் பெற்ற எல்லாத் தலங்களின் நிலையும்.

சுவாமி சிலை பற்றி, கேபிள் கார் பற்றி சொல்லவில்லையே.

சிறு வயதில் போனது, மொட்டை போட்டு வந்தது நினைவுக்கு வருகிறது. 13 வயதில் மொட்டையை ரசிக்க முடியவில்லை.

முதல் புகைப்படம் அற்புதம்.

பொன்னியின் செல்வன் said...

மிக நல்ல பயணப்பதிவு செந்தில் அவர்களே. பழநி மலை புகைப்படம் மிக அருமை. வார்த்தைகளை விளக்குவதைப் போல் புகைப்படம். குறிப்பாக, பழநி மலை ஓளிவெள்ளத்தில் மிக அருமை!

கண்ணா.. said...

அருமையான பகிர்வு செந்தில்..


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :)

cheena (சீனா) said...

அன்பின் செந்தில்

புகைப்படங்கல் அருமை - வர்ணனை அருமை - கண்ணில் கண்டதை எல்லாம் விவரித்த விதம் நன்று
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் செந்தில்

ஆரூரன் விசுவநாதன் said...

புகைப்படங்களும், பயணத்தை விவரித்த விதமும் மிக அருமை.......

புத்தாண்டு வாழ்த்துக்கள் செந்தில்

கலையரசன் said...

வேலனே.. வேலனை பார்க்க போயிருக்கே!!
அருமையான இடுகை.. புத்தாண்டு தொடக்கத்தில்...

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்... :)

சிதம்பரம் said...

அருமை செந்தில்....புது template நன்றாக இருக்கிறது..புத்தாண்டு வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

நல்ல பதிவு செந்தில், படங்கள் அருமை... நானும் ஒருதடவையாவது வந்து பழநியாண்டவரை தரிசிக்கலாம்னு இருக்கேன்... பார்க்கலாம் எப்ப அனுமதி கிடைக்கும்னு...

வம்பன் said...

பஞ்சாமிர்தம் வாங்கி வந்தீயா துரை ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க வினோத். ஆமாங்க.. நீங்க சொல்ற மாதிரி தான் நடக்குது.

வாங்க மருத்துவரே!! அடுத்த முறை வரும் பொழுது உங்களைச் சந்திக்கிறேன்.

வாங்க ஜோதி. சண்முகநதியில் குளிக்க வில்லை. நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க அசோக்.. நன்றி.

வாங்க பின்னோக்கி. பழநி மலைக்கோவில் வியாபாரமயமாகிவிட்டது உண்மை தான்.

வாங்க பொன்னியின்செல்வன். நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கண்ணா. நன்றி.

வாங்க சீனா ஐயா. நன்றி.

வாங்க ஆரூரன் விஸ்வநாதன். நன்றி.

வாங்க சிதம்பரம் நன்றி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க கலை. இது தான வேணாங்கறது..

வாங்க பிரதாப். நன்றி.

வாங்க வம்பன். பஞ்சாமிர்தம் வாங்கினேன்.. வழக்கமாக வாங்கும் கடையொன்றில்.

அன்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Raja said...

Good one !!!

Related Posts with Thumbnails