அழகிய மலைகள் சூழ்ந்த ஒரு பசுமையான கிராமத்தில் ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்தனர். அந்தக் குடும்பத்திற்கென்று வயலும் சிறிய தோட்டமும் இருந்தது. அக்குடும்பத்தலைவரும் அவரின் மனைவியும் பெரும்பாலான நேரம் வயல்களின் வேலை செய்வதும், வீட்டிற்குத் தேவையானவற்றைச் சேகரிப்பதுமாக இருந்தனர். அவர்களுக்கு மயில்சாமி என்ற பெயரில் பால்வாடி செல்லும் வயதில் ஒரு மகனும் இருந்தான். அவனுடன் விளையாடச் சிறுவர்கள் யாரும் இல்லாததால், தோட்டத்தில் உள்ள மரங்களைச் சுற்றி விளையாடுவது என்று தனியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.
தோட்டத்தில் பல மரங்கள் இருந்தாலும், மயில்சாமிக்கு மாமரத்தின் மீது ஆசை. மாமரத்தின் வளைந்து நெளிந்து செல்லும் கிளைகள், மாமரத்தில் கூடும் பறவைகள் என்று மாமரத்தைப் பார்ப்பதில் அத்தனை சுகம் அவனுக்கு. பால்வாடிக்கு சென்று வீடு திரும்பிய பிறகு கிடைத்த நேரத்தில் எல்லாம் மாமரத்தின் அருகில் செல்வதும், மரத்தைத் தொட்டுப் பார்த்தும் வந்தான். இதைப் பல நாட்களாகப் பார்த்து வந்த மாமரம்..
"தம்பி.. என்னையே சுத்திச் சுத்தி வர்றியே.. என்னோட விளையாட ஆசை இல்லியா?" என்றது.
"ஹேய்.. நீ பேசக் கூட செய்வியா? உன் கூட எப்படி விளையாடறது" என்றான்.
"என் மேல ஏறி விளையாடு. நிறைய இடத்துல நான் சுவையான மாம்பழங்கள ஒளிச்சு வச்சிருக்கேன். கண்டு பிடிச்சீன்னா மாம்பழம் உனக்குத்தான்" என்றது.
மிகவும் குஷியான மயில்சாமி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மரத்தில் ஏறுவதும், மரத்தின் கிளைகளில் ஆடி மகிழ்வதும், மாமரம் ஒளித்து வைத்திருந்த பழங்களைப் பறித்து சாப்பிடுவதும், களைப்படையும் பொழுது வேரில் சாய்ந்து தூங்குவதும் என்று மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தான். மயில்சாமி வந்து விளையாடும் பொழுதெல்லாம் மாமரமும் மகிழ்ச்சியால் கிளைகளை அசைத்து விளையாடும். மயில்சாமி விளையாட, மாமரமும் ஆட அந்தத் தோட்டமே அழகாகக் காட்சியளித்தது.
சில வருடங்கள் கழித்து, சிறுவன் தொலைவில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். விடுமுறை நாட்களில் தன் நண்பர்களையும் அழைத்து வந்து "மரக்குரங்கு" விளையாட்டை விளையாடி மகிழ்ந்தான். மயில்சாமி பதின்ம வயதை அடைந்த பிறகு மாமரத்திற்குச் சென்று விளையாடுவதை தவிர்த்து விட்டு பள்ளி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். அவன், ஒரு நாள் மாலையில் மாமரம் அருகே சோகமாக உட்கார்ந்திருந்த பொழுது,
"தம்பி, இப்பெல்லாம் என் கிட்ட வர்றதே இல்லியே. என் மேல ஏதாவது கோபமா?" என்று மரம் கேட்க
"போ.. நான் என்ன சின்னப் பையனா உன் கிட்ட வந்து விளையாட!! நானே கிரிக்கெட் விளையாட மட்டை இல்லையேனு இருக்கேன்" என்றான்.
"அதுக்கா இப்படி சோகமா இருக்க? கிழபுறமா இருக்கற என்னோட கிளைய முறிச்சு மட்டை சென்சுக்கோ" என்றது.
"நல்ல யோசனை கொடுத்த.." என்று மகிழ்ச்சியாக ஒரு கிளையை ஒடித்துச் சென்றான்.
பள்ளிப் படிப்பை முடித்திருந்த சமயம் நண்பர்களெல்லாம் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். மயில்சாமியும் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றான். பல மாதங்களாக வேலை தேடியும், சரியான வேலை கிடைக்காததால் சோர்வடைந்து மாமரம் அருகே வந்தான். அவன் சோர்வடைந்திருப்பதைப் பார்த்த மாமரம்,
"தம்பி. ஏம்பா சோகமா இருக்க? பல நாளா ஆளையே பார்க்க முடியலையே!!" என்றது.
"உன் கிட்ட தான் சொல்லனும் என் சோகத்தை!! பல நாளா வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்கல" என்றான்.
"அவ்வளவு தானா!! என் கிட்ட இருக்கற மாம்பழங்களப் பறிச்சு விற்கலாம்ல. நல்லா வித்துச்சுன்னா பக்கத்துக் காட்டுல கிடைக்கற பழங்களையும் விற்கலாமே" என்றது.
"ஹா.. அருமையான யோசனை" என்று உற்சாகமடைந்த மயில்சாமி அருகில் இருந்த நகரத்தில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தான்.
நன்றாக தொழில் நடந்து கொண்டிருக்க, அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். தனக்கெனத் தனியாக வீடு கட்ட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. வீட்டிற்குத் தேவையான பொருட்களையெல்லாம் சேகரிக்க ஆரம்பித்த மயில்சாமி மரவேலைப்பாட்டிற்கு என்ன செய்வது சிந்திக்க ஆரம்பித்தான். வழக்கம் போல யோசித்த படியே தோட்டத்திற்குச் சென்ற மயில்சாமி மாமரத்திடம்..
"நான் வீடு கட்ட ஆரம்பித்திருக்கேன். மரவேலை செய்ய மரம் தேவைப்படுது. எனக்குத் தான் நீ நல்ல யோசனை தருவியே. இதுக்கும் ஒரு நல்ல யோசனை சொல்லு" என்றான்.
"அதுக்கென்ன, எவ்வளவு மரம் வேணுமோ, என்னைய வெட்டிக்கோ!! ஆனா, பக்கத்துலயே புதுசா மாமரத்த நட்டு வச்சிரு" என்றது.
நெகிழ்ந்து போன மயில்சாமி, தனக்குத் தேவையான அளவு மரத்தை வெட்ட ஆரம்பித்தவன், "தான் புதிதாக மரம் நடுப்போவதை எண்ணி" மரத்தை முழுவதுமாக வெட்டி வீட்டிற்குப் பயன்படுத்தினான். ஆனால், புதிதாக மரம் நட மறந்து விட்டான்.
பல வருடங்களாக தொழில் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது என்று வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கிச் சுழல ஆரம்பித்தான். நன்றாகச் சென்று கொண்டிருந்த வியாபாரத்தின் திடீரென்று சுணக்கம் ஏற்பட வேதனையடைய ஆரம்பித்தவன் சிறு வயது நினைவில் மாமரமிருந்த இடத்திற்குச் சென்றான். மாமரம் இருந்த இடத்தில் இப்பொழுது வெட்டப்பட்ட தண்டு மட்டுமே இருந்தது.
"தன்னுடன் பயணித்த இந்த மாமரம் தனக்காக எவ்வளவு செய்துள்ளது" என்று நினைத்தவாரே மரத்தண்டைத் தடவ ஆரம்பித்த மயில்சாமிக்கு ஒரு அசரீரி கேட்டது.
"மயில்சாமி!! புதுசா மாமரத்த நட்டு வளர்த்திருந்தா உனக்கு நல்லா உதவியிருக்குமேப்பா!! இப்ப கஷ்டப்படறியே!! மாமரம் இல்லாட்டி என்ன, என்னோட மரத்தண்டு இருக்கே. அப்படியே அதுல தலை வச்சுப் படுத்தீன்னா நல்லாத் தூக்கம் வரும். கொஞ்சம் ஓய்வெடுப்பா!!" என்றது.
"சிறு வயதில் எனக்கு விளையாட இடம் கொடுத்து, வியாபாரம் செய்ய பழங்கள் கொடுத்து, வீடு கட்ட மரம் கொடுத்து என்று இந்த மாமரம் செய்யாத உதவியே கிடையாதே!! நான் மரத்தை வெட்டிய பொழுதும் மரம் எனக்கு நல்லது செய்யுதே" என்று நினைத்துக் கண்ணிர் விட ஆரம்பித்தான்...
இயற்கை நமக்குக் கற்றுத் தரும் பாடங்களுக்கு அளவே கிடையாது எனலாம். வானம்,காற்று, வெயில், மழை, நிலம், மரங்கள் என இயற்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.
இந்த மாமரத்தின் இடத்தில் நம் பெற்றோரை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும், இயற்கையை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும். நம்மை பெற்று வளர்த்தோரும் சரி, நம்மை வளர்க்க உதவும் இயற்கையும் சரி, நமக்கு என்றுமே நன்மையே புரிகிறது. நாம் நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா?
இயற்கையைப் பற்றிச் சிந்திப்பதற்கும், நம்மை வளர்த்தோர்க்கும் நன்றி சொல்ல இயற்கையை வணங்கும் தமிழர் திருநாளை விட நல்ல நாள் அமையுமா?
..
20 comments:
இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் செந்தில்.
மாமரம் மயில்சாமி என இரு பாத்திரங்களின் மூலம் இயற்கைக்கும் நமக்கும் உள்ள உறவினையும், அது எவ்வாறு சீர்கெட்டுள்ளது அதன் விளைவுகள் என்ன என்பதையும் இந்த இயற்கையை வணங்கும் இந்த இனிய தமிழர்த் திருநாளில் மிக அழகாய் விளக்கியுள்ளீர்கள். உங்களின் எண்ணம், அக்கறை அருமை.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
பிரபாகர்.
அன்பின் செந்தில் வேலன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
இயற்கையை மறக்கிறோம் - மறுக்கிறோம் - அழிக்கிறோம்
என்ன செய்வது - காலம் மாற வேண்டும்
துயரம் தொலையட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்!!வாழ்த்துக்களுடன் அப்பன்.
பொங்கலோ பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
அருமையான இடுகை...
தை திருநாள் வாழ்த்துகள் செந்தில்
சிறுவயதில் படித்த மரம் சொன்னகதை, குளம் சொன்ன கதையெல்லாம் நினைவுக்கு வந்தது நண்பரே...
இயற்கை நமக்குக் கற்றுத் தரும் பாடங்களுக்கு அளவே கிடையாது எனலாம். வானம்,காற்று, வெயில், மழை, நிலம், மரங்கள் என இயற்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.//
உண்மைதான் நண்பரே..
இயந்திரங்களாக மாறிவிட்ட மனிதனுக்கு மூச்சுவிடுவதற்குக் கூட நேரமில்லையே..!
இயற்கையைப் புரிந்து கொள்ள அவனுக்கேது நேரம்..
நல்ல பகர்வு நண்பரே..
இந்த மாமரத்தின் இடத்தில் நம் பெற்றோரை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும், இயற்கையை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும். நம்மை பெற்று வளர்த்தோரும் சரி, நம்மை வளர்க்க உதவும் இயற்கையும் சரி, நமக்கு என்றுமே நன்மையே புரிகிறது. நாம் நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா?
நல்ல ஒப்பீடு நண்பரே..
சிந்திக்கத்தக்க இடுகை!!
இயற்கையைப் பற்றிச் சிந்திப்பதற்கும், நம்மை வளர்த்தோர்க்கும் நன்றி சொல்ல இயற்கையை வணங்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் செந்தில்.
நல்ல பகிர்வு.
சிந்தனைகுரிய பதிவு.....விவரித்தமை அழகு.....வாழ்த்துக்கள் செந்தில்
தேவையான விஷயத்துடன் பொங்கல் நல்வாழ்த்துக்கள் - அருமை
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் செந்தில்..
பொங்கல் வாழ்த்துக்கள் தலைவா..
நல்ல கருத்துக்கள்.... வாழ்த்துக்கள்...
@ துபாய் ராஜா, நன்றி.
@ பாலாண்ணே, நன்றி.
@ பிரபாகர் நன்றி.
@ சீனா ஐயா.. நன்றி.
@ தாராபுரத்தான் ஐயா.. நன்றி.
@ சங்கவி, நன்றி.
@ திகழ், நன்றி.
@ கதிர், நன்றி.
@ முனைவர் குணசீலன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
@ ஜோதிஜி. நன்றி.
@ ஆரூரன் விசுவநாதன் நன்றி.
@ பின்னோக்கி. நன்றி.
@ கலையரசன் நன்றி.
@ கண்ணா, நன்றி.
@ பட்டிக்காட்டான், நன்றி.
@ வினோய்கௌதம், நன்றி.
@ அண்ணாமலையான், நன்றி.
Post a Comment