"செந்தில்வேலன்.. வாட் ஹேப்பண்ட் டு யூ? எக்ஸாம் எழுதாம முழிக்கிற?"
"மிஸ்.. எல்லாமே மறந்து போன மாதிரி இருக்கு!"
"கண்டிப்பா ஒரு செண்டம் இருக்குனு உன்னையத் தான் சொல்லீட்டு இருக்கேன்.. இப்படிப் பேப்பரக் காலியா வச்சிட்டு இருக்கே"
"ஆமாங்.. மிஸ்.. எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது. மாடர்ன் அல்ஜீப்ரா கூட மறந்த மாதிரி இருக்கு.."
"இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு.. அட்லீஸ்ட் ஒன் மார்க், டூ மார்க்காவது எழுது.."
"சரீங் மிஸ்... "
பின்னால் திரும்பிப் பார்க்கிறேன்...
எல்லாரும் நன்றாகப் பரீட்சை எழுதுகிறார்கள். 'எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி ஆனது. நான் பரீட்சையில் தோற்றுவிட்டால் என்ன செய்வது? நான் பொறியியல் கல்லூரியில் சேர முடியாதா?' என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, "லாஸ்ட் டென் மினிட்ஸ்" என்ற சத்தம் கேட்கிறது.
சில கேள்விகள் தெரிந்த மாதிரி இருக்கிறது. கட கட வென எழுதுகிறேன்.. 60 மார்க் வந்துவிடும்.. இன்னொரு பத்து மார்க் வரும்படி எழுதிட வேண்டும்.. "கால்குலஸ் கொஞ்சம் ஈஸியாச்சே.." என்று வேகமாக எழுதும் பொழுதே.. மணியடிக்கிறது....
செல்போனில் வைத்த அலார மணியடிக்கிறது.. மணி காலை ஐந்தாகிவிட்டது.
'எப்படி கனவின் "கிளைமாக்ஸ்" வரும்பொழுது எல்லாம் தூக்கம் தெளிந்து விடுகிறது? மீண்டும் ஒரு கால் மணி நேரம் தூங்கினால் தேர்வு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள முடியுமா? '
'சே.. எப்பொழுதும் இதே கனவு ஏன் வருகிறது? நான் தேர்வுகளில் தோல்வியுற்றதும் இல்லையே' என்ற எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன..
"இன்று ஏதாவது அலுவலகச் சந்திப்புகள் உள்ளவனவா? இல்லையென்றால் கூட வீட்டில் இருந்து வேலை பார்க்கலாமே!!" அலைபேசியின் நாட்குறிப்பில் பார்க்கிறேன். நான்கு சந்திப்புகள் உள்ளன.
குளிர்காலத்தில் காலையில் எழுந்து அலுவலகத்திற்குச் செல்வது போன்ற கடினமான விசயம் வேறொன்றுமில்லை. காலை ஆறரை மணிக்குப் பேருந்தைப் பிடித்தால் தான் சரியான நேரத்திற்கு சென்றடைய முடியும். கொஞ்சம் தாமதமாகக் கிளம்பினால் அவ்வளவு தான் அன்றைய பொழுது சாலைப் போக்குவரத்து நெருக்கலிலேயே கழிந்துவிடும்.
பள்ளி நாட்களில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றதெல்லாம் இப்படித் தூக்கத்தை விட்டு ஓடுவதற்குத் தானா?
கனவில் வருவது போலத் தேர்வில் தோல்வியுற்றிருந்தால் இப்படி ஓட வேண்டியத் தேவையிருக்காதோ?
வீட்டின் வெளியே வந்து லிஃப்டின் உள்ளே செல்கிறேன். பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவன் அவன் தந்தையுடன் நின்று கொண்டிருந்தான். இடது கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது.
"என்னாச்சுங்க பையனுக்கு?"
"கீழ விழுந்துட்டாங்க.."
"ரெண்டு மூனு நாள் லீவு போடலாம் தானே?"என்றேன்.
"எக்ஸாம் இருக்கு அங்கிள்.."என்றான் அந்தச் சிறுவன்.
"என்ன எக்ஸாம்?"
"மேக்ஸ் அங்கிள்.."என்றான் ஆர்வமாக. சுளீரென்று இருந்தது.
"ஆல் த பெஸ்ட் தம்பி" என்று சொல்லச் சொல்ல "தாங்க்ஸ் அங்கிள்"என்று பேருந்தைப் பிடிக்க "ஓடினார்கள்" சிறுவனும் அவன் தந்தையும்!!
..
11 comments:
இதற்கு ஏற்கனவே நான் பின்னூட்டம் இட்டேனே? ஓ, ....... கனவிலா?
செந்தில் சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனக்கும் இதே போல் கனவு அடிக்கடி கனவு தேர்வு சம்மந்தமாக வருகிறது. என்ன செய்வது என பதட்டம். ஆனாலும் ஒவ்வொரு முறையும் சே, நாம எம்.சி.ஏ முடித்துவிட்டோம், இது போல் பரிட்சை இருக்காது இது கனவுதான் என கனவிலேயே ஒரு எண்ணம் சொல்ல தொடர்கிறேன் அல்லது எழுத்து பின் வேறு கனவு காண்கிறேன்...
பிரபாகர்.
//கனவில் வருவது போலத் தேர்வில் தோல்வியுற்றிருந்தால் இப்படி ஓட வேண்டியத் தேவையிருக்காதோ?//
அப்பவும் ஓடிக்கொண்டுதானிருப்பீங்க செந்தில், ஒடற இடமும் அதன் நன்மைகளும்தான் வித்தியாசப்படும். ஓடிஒடி உழைக்கனும்...
கனவுக்கென்ன கழுதை(மாதிரி) - அது பாட்டுக்கு வரும் (மறந்தும்) போகும். கவலைகளை மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து விட்டு, இறைவனை தியானித்து விட்டு அமைதியாகப படுங்கள். விழித்ததும் இறைவனை தியானித்து விட்டு உங்கள் வேலைகளைத் தொடருங்கள். நாட்கள் அழகாய் நகரும் - நல்ல நினைவுகளாய் நினைத்துப் பார்க்க.
செந்திலண்ணா அனுபவம் பகிர்தலில் கூட நேர்த்தியா இருக்கு உங்கள் எழுத்து...
'எப்படி கனவின் "கிளைமாக்ஸ்" வரும்பொழுது எல்லாம் தூக்கம் தெளிந்து விடுகிறது? மீண்டும் ஒரு கால் மணி நேரம் தூங்கினால் தேர்வு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள முடியுமா? '//
எனக்கும் இதுபோன்ற குழப்பங்கள் அடிக்கடி நேர்வதுண்டு நண்பரே..
அநேகமாக எல்லாருக்குமே இந்த வகை கனவுகள் வருகின்றன போல!! ஒரு பாடத்தைப் பரிட்சைக்குப் படித்துவிட்டுப் போனால் அன்று வேறு பாடத் தேர்வு என்ற அதிர்ச்சி - இது எனக்கு வெகுநாளாக வந்துகொண்டிருந்த கனவு.
கனவுகளும் மனநிலையின் வெளிப்பாடு என்பதால் எல்லாரும் ஒருசமயத்திலாவது அந்நிலைக்கு ஆட்படத்தான் செய்கிறோம். சுல்தான்பாய் சொன்னதுபோல இறைதியானத்தின் பின் எனக்கும் இது குறைந்துள்ளது. முயற்சியுங்கள்.
நீங்க இன்று இந்த பதிவு போடப் போறீங்க என்று எனக்கு முன்பே தெரிந்து விட்டதோ அதான் எனக்கும் ரொம்ப நாட்களுக்கு பிறகு தேர்வெழுதும் கனவு நேற்று இரவு அதுவும் அதிசயமாக நினைவிலும் இருக்கிறது. என்னமோ போங்க செந்தில் சின்ன விஷயத்தையும் சுவாரஸ்யமாக எழுதி இருப்பை தக்க வைத்துக் கொள்வதில் நீங்க கில்லாடி. :-)
நான் எனக்கு மட்டும் தான் இதே மாதிரி கனவுகள் அடிக்கடி வருதுன்னு நினைத்தேன்..உங்களக்கும்மா..!!
படிக்கிற பசங்கனாலே அப்படி தான்ப்போல ..:)
எனக்கும் வாரத்துக்கொருதடவ ஸ்கூல் கிளாஸ்ல உட்காந்துகிட்டு வாத்தியார்ட அடிவாங்குறமாதிரியே கனவு வரும்.. டக்குன்னு முழிச்சிப்பேன்.
ஆனா பாத்தீங்களா..எவ்ளோ கஷ்டப்பட்டு படிச்சாலும் வேலைசெய்யறத்துக்கும் கஷ்டமாவே இருக்கு... என்ன பண்றது...
அட அருமையான மேட்டர்,சேம் ப்ளட்
=========
நம் அன்றாட வாழ்வில் தூக்கம் எவ்வளவு தவிர்க்க முடியாததோ ?அதே போல கனவுகளும் தவிர்க்க முடியாததுதான். எனக்கு கண்ட கனவுகள் முழுதும் நினைவிருக்காது , நான் லீனியராக வரும் , ஆனால் புரிந்து கொள்ள முடியும், காணும் கனவின் கதையோட்டத்தில் உலவும் கதாபாத்திரமாக இப்போது நனவுலகத்தில் இருக்கும் நண்பர்களையும், நெடு நாட்கள் முன்பு பழகிய நண்பர்களையும் நான் பார்ப்பதுண்டு.
அதில் ஒரு சில கனவுகள் என் உள் மன ஆசைகள் , பயங்கள் , முன்னர் நடந்த நிகழ்வுகளின் வெளிப்பாடுகளாகவே இருந்துள்ளன. இதுவரை நான் கண்ட கனவுகள் பலித்ததில்லை. ஆனால் என் இறந்து போன நண்பர்கள் உயிருடன் இருப்பதாகவும் பள்ளியில் முதல் ராங்க் எடுப்பதாகவும் விரும்பிய பெண்ணை கைப்பிடிப்பது போலும் மிக்ஸட் அப்பாக கனவுகள் வந்து தொலைக்கிறது.சிறு வயதில் இனிப்புகளையும் பொம்மைகளையும் இப்போது நிறைய வீடுகள் கட்டுவது போலும். கண்டு வருகிறேன். என்ன பிரயோசனம்?கனவு தானெ?
Post a Comment