ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி ஏற்கனவே பதிவுலகில் பல விமர்சனங்கள் வந்து விட்டன. அமீரகத்தில் ஆயிரத்தில் ஒருவன் இன்று (22.01.10) தான் வெளியானது. ஷார்ஜாவில் உள்ள கன்கார்டு திரையரங்கில் தினசரி இரண்டு காட்சிகளே என்பதால் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டன.
"கதையில் வரும் காட்சிகள் யாவும் கற்பனையே" என்ற அறிக்கையுடன் வரும் படத்தின் கதை இது தான்..
1272ல் ஆரம்பிக்கும் காட்சியில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடக்கும் போரில் சோழர்கள் தோல்வியடைய நேரிடுகிறது. தம் சந்ததி அழிந்து விடாமல் இருக்க சோழ மன்னன் தன் மகனை வேறொரு குழுவினரிடம் கொடுக்கிறான்.
பிறகு 21ம் நூற்றாண்டிற்குக் கதை வருகிறது.. சோழனின் இடத்தைத் தேடிச் செல்லும் தொல்லியல் வல்லுனர் பிரதாப் போத்தன் காணமல் போகிறார். இச்செய்தி அரசிற்குத் தெரிய வர தொல்லியல் நிபுனர் ரீமா சென், பிரதாப் போத்தனின் மகள் ஆன்ட்ரியா, பாதுகாப்பிற்கு அழகம் பெருமாள் தலைமையில் இராணுவ வீரர்கள், இவர்கள் பொருட்களைத் தூக்க கார்த்தி தலைமையில் கூலித் தொழிலாளிகள் என அனைவரும் கிளம்புகின்றனர்.
ஏழு கடல் ஏழு மலை கடந்து சென்றால் ஒரு கிளி இருக்கும் என்ற மாயாஜாலக் கதைகளில் கேட்ட மாயவித்தைகள் (ஃபாண்டஸி) கலந்த பயணத்தில் கடல் ஜந்துகள், காட்டுவாசிகள், விசப்பாம்புகள், பாலைவனம், புதைமணல், நடராஜர் நிழல், சோழர் பூமியில் வரும் அமானுஷ்ய சக்திகள் அனைத்தையும் கடக்கும் பொழுது கார்த்தி, ரீமா, ஆன்ட்ரியா மற்றும் அழகம்பெருமாள் மட்டுமே மிஞ்சுகிறார்கள். வழியில் ஏற்பட்ட ஆபத்துகளிலேயே அனைவரும் இறந்து விட சோழனின் இடத்தை அடையும் பொழுது கார்த்தி, ரீமா மற்றும் ஆன்ட்ரியாவிற்கு சித்தபிரமை பிடித்துவிடுகிறது.
இவர்கள் மூவரையும் சிறைபிடிக்கும் சோழர்களிடம், 'தான் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவள்' என்றும் 'சோழ மக்களைத் தாயகத்திற்கு அழைக்கவே வந்துள்ளதாகவும்' ரீமா கூற சோழன் (பார்த்திபன்) பல சோதனை(??)களுக்குப் பிறகு ரீமாவை நம்புகிறான். ரீமா பாண்டியர்கள் வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதும் சோழர்களிடம் இருக்கும் தங்கள் குலதெய்வச் சிலையை மீட்கவும் சோழர்களின் வம்சத்தை அழிக்கவுமே ரீமா வந்துள்ளார் என்று தெரியவருவது நல்ல திருப்பம்.
சோழர்கள் தாயகத்திற்குத் திரும்பினார்களா? பிரதாப் போத்தன் கிடைத்தாரா? ரீமா தங்கள் குலதெய்வச் சிலையை மீட்டாரா? கார்த்திக் என்ன ஆனார்? என்பதை மாயவித்தை (ஃபாண்டஸி), சாகசம், வரலாற்றுக் காலத்தை நினைவுபடுத்தும் காட்சியமைகள் என நாம் இதுவரை தமிழ் படங்களில் அதிகம் சுவைத்திராத மாறுபட்ட மசாலாவாகக் கொடுத்திருக்கிறார்கள்!!
படம் ஆரம்பிக்கும் காட்சிகளில் சோழனின் வரலாற்றைப் புராதன ஓவியங்களால் காட்ட ஆரம்பிப்பதில் இருந்து சோழர்களின் நகரம், சோழர்களின் இருப்பிடம், சோழன் மீட்டும் யாழ் இசைக்கருவி, மன்னன் உடைகள் என படம் முழுவதும் கலை இயக்குனர் (தெரியாமல் இருக்கிறார்!!) கலக்கியிருக்கிறார். நம் மூதாதையர்கள் படைத்த புராதன ஓவியங்கள் (படைத்திருந்தால் அவை) எல்லாம் எங்கே? நம் அறநிலையத்துறை பூசிய சுண்ணாம்பிற்குப் பின்னால் இருக்குமோ?
கப்பல் பயணத்தின் பொழுது வண்ணமயம், கடலில் படகுகளில் பயணிக்கும் பொழுது உணர முடிந்த மர்மம், காடுகளின் பசுமை, பாலைவனத்தின் தனிமை, மங்கிய ஒளியில் சோழ நகரம் என படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி அசத்தியிருக்கிறார். இதே உணர்வை ஓரளவு பின்னனி இசையில் ஜி.வி.பிரகாசும் நன்றாகவே செய்திருக்கிறார்!! கிராபிக்ஸ் நடராஜர் சிலையின் நிழலில் கார்த்தி, ரீமா, ஆன்ட்ரியா ஓடும் பொழுது பின் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவன் Very Funny Daddy என்றான் :)
கார்த்தி - ஐந்து ஆண்டுகளில் வந்திருக்கும் இரண்டாவது படம். நக்கல், கிண்டலுடன் கூலியாக அறிமுகம் ஆகும் காட்சியிலிருந்து சோழனின் தேடும் படலத்தில் ரீமாவிடம் சண்டை, ஆன்ட்ரியாவிடம் வரும் ஈர்ப்பு, சண்டைக் காட்சிகளில் காட்டும் வீரம் என நன்றாக நடிக்கும் வாய்ப்பு!! நிறைவாகச் செய்திருக்கிறார்.
ரீமா - இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை யாராவது ஏற்றிருப்பார்களா? நுனி நாக்கு ஆங்கிலம், சில்மிஷம் செய்யும் கார்த்தியிடம் காட்டும் அடாவடி, சோழ மன்னனிடம் காட்டும் காமம் கலந்த வஞ்சகப் பார்வை, சோழனை மயக்கும் நடனம், கப்பலில் போடும் குத்தாட்டம் என படம் முழுக்க வலம் வருகிறார்!! ரீமாவிற்கு மறக்கமுடியாத படம்!!
ஆன்ட்ரியா - மிதமான, தேவையான நடிப்பு. இவரும் ரீமாவும் ஆங்கிலத்தில் நடத்தும் வாக்குவாதம் கலக்கல்!! பானுமதி வரிசையில் பாடத்தெரிந்த நடிகை என்பது சிறப்பு!! இவரது "மாலை நேரம்" பாடல் படத்தில் இல்லாமல் போனது ஏமாற்றமே!! (அந்தப் பாட்ட எங்க சொருகறது?)
சோழ மன்னனாகப் பார்த்திபன்!! சமகால வளர்ச்சி எதையுமே பார்த்திராத ஒரு கூட்டத்தை ஆண்டு வருபவராகக் கண்ணில் நிற்கிறார்!! நடை, பாவனை என அனைத்திலுமே நம்மைக் கவர்கிறார். "யாம் தாய்மண்ணிற்குத் திரும்பப் போகிறோம்" என தம் மக்களிடம் கூறும் பொழுது நம்பிக்கையை வெளிப்படுத்தும் கண்களில் ரீமாவால் வஞ்சிக்கப்படும் பொழுது ஏமாற்றம் காட்டும் பொழுது மிளிர்கிறார்.
"நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே" என்று சோழன் பாடும் பாடல் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. தம் நிலத்தை இழந்து தவிக்கும் எவர்க்கும் இந்தப் பாடல் பொருந்தும்.
"கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்...!
காடுகளையும் நீர் ஆதாரங்களையும் அழித்து, இன்று நாம் வளர்க்கும் நாகரிகத்தால் சில பத்தாண்டுகள் கழித்து நாமும் இதைப்போல பாட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். கவிஞர் வைரமுத்து...என்ன செல்லிப் பாராட்டுவது?
இயற்கையை அழித்து வந்தால் விளைபொருள் எதுவும் இல்லாமல், "சோழ மக்கள் தம் மக்களையே கொன்று சாப்பிடுவதைப்" போன்ற நிலை தான் நமக்கும் ஏற்படும்! பசி, பஞ்சம், வெப்பம் சூழ்ந்த சூடான், சோமாலியா போன்ற நாட்டு மக்களின் நிலையைப் பார்க்கும் பொழுது பஞ்சத்தால் வாடும் சோழ மக்களைக் கருநிறமாகக் காட்டியிருப்பது சரியாகவே தோன்றுகிறது!! ஆனால் சோழர்களைப் பற்றி வளமான வரலாறையே கேள்விப்பட்டிருப்பதால் நமக்கு கொஞ்சம் உறுத்துகிறது. படம் முழுக்க நூற்றுக்கணக்கில் நடித்திருக்கும் துணை நடிகர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!
ஈட்டி, அம்புகளுடன் போரிடக் கிளம்பும் சோழ மக்களை எதிர்த்து அழகம்பெருமாளால் அழைக்கப்பட்ட இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சண்டையிடும் பொழுது நம் மூதாதையர்களுக்கு ஆங்கிலேயர்களால் நேர்ந்த கதி புரிகிறது. பின்னே, 30 ஆயிரம் பேர் 30 கோடி மக்களை ஆள முடிந்ததற்கு நம் மக்களிடம் இல்லாத போர்க்கருவிகளும், நம் மக்களிடம் இருந்த ஒற்றுமையின்மையுமே காரணம்!!
"இந்தக் கலனைப் பற்றி எனக்குத் தெரியாதே" என்று பார்த்திபன் கூறும் பொழுது சோழர்களின் இயலாமை தெரிகிறது!!
நாயகர்கள் துதிபாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் (எல்லாம் நேரடியான வசனங்கள் தான்!!), தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகள், கேபரே குத்தாட்டங்கள் என பழக்கப்பட்ட மசாலா எதுவும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்ததற்காகவே படக்குழுவினரைப் பாராட்டலாம்!! இது போன்ற ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்த செல்வாவின் துணிச்சல் அல்லது அசட்டு தைரியத்தையும், தயாரிப்பாளரையும் பாராட்டியே தீர வேண்டும்!!
அப்போ லாஜிக்? அது எதுக்குங்க? அது தான் முன்னாலயே போட்டாச்சுல்ல கற்பனைனு!! முன்பே கூறியிருந்ததைப் போல மாயவித்தை(ஃபாண்டஸி), சாகசம், வரலாற்றுக் காலத்தை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள் என நாம் இதுவரை தமிழ் படங்களில் அதிகம் சுவைத்திராத மாறுபட்ட மசாலா தான் ஆயிரத்தில் ஒருவன்!!
நாம் தான் மசாலாவை விரும்புகிறவர்களாயிற்றே ;)
..
23 comments:
அன்பின் செந்தில்
நேர்மையான விமர்சனம்
நல்வாழ்த்துகள்
நல்ல விமர்ச்சனம்...
ஏற்கனவே தெரிந்தோ தெரியாமலோ பல தரப்பட்ட விமர்சனங்களை படித்த பிறகும்....
அந்த தாக்கம் எதுவும் இல்லாமல்...
இப்படியே போனா இன்னும் 10 வருசத்துல நாமும் தண்ணிக்கு சிரமப்படனும் என்ற உண்மையை படம் உணர்த்தியது ஏன் யாருக்கும் தெரியல...
மிக மிக நேர்மையான விமர்சனம் செந்தில்
ஆகா..தல பார்த்தாச்சா! ;-) சூப்பரு ;)
மாறுபட்ட விமர்சனம், கஷ்டப்பட்டவரை நிச்சயம் பாராட்ட்வேணும் அதை நீங்க செய்திருக்கீங்க
இடையே தற்காலத்தின்/எதிர்காலத்தின் கொடுமைகளை சுட்டிகாட்டியவிதம் அருமை
நல்லா இருக்கு விமர்சனம்..
அருமை செந்தில்...
சீனா அய்யா சொன்னதுபோல் மிக நேர்மையான விமர்சனம்.
இது போல் தொடர்ந்து எழுதுங்கள்...
உங்களிடமிருந்து வரும் எல்லா விஷயங்களும் நன்றாகவே இருக்கிறது...
பிரபாகர்.
நானும் பார்த்துட்டேன் செந்தில்...
விமர்சனம கலக்கல்...படமும்தான்
வித்தியாசமான விமர்சனம்.கோணம் வேறு மாறுபடுகிறது.
பொதுவாக எல்லா விமர்சனமும் ரீமாவைப் புகழ்கின்றன.அவருக்கு மறக்க முடியாத ரோல்.
விமரிசனம் பிடிச்சிருக்கு:)
விமர்சனம் நன்று அதைவிட விமர்சன முறை பிடித்தமானது.
என்னாதிது சின்ன புள்ள தனமா கண்ணை துடை கண்ணை துடை
//ஆனால் சோழர்களைப் பற்றி வளமான வரலாறையே கேள்விப்பட்டிருப்பதால் நமக்கு கொஞ்சம் உறுத்துகிறது//
படம் பார்க்கும்போது எனக்கும் உண்டானது...ஆயினும் குறையொன்றும் இல்லை. நல்ல முயற்சி...
தங்களின் பார்வையும் சிறப்பாக இருக்கறது...
//
"இந்தக் களத்தைப் பற்றி எனக்குத் தெரியாதே" என்று பார்த்திபன் கூறும் பொழுது சோழர்களின் இயலாமை தெரிகிறது!!
//
அது களம் அல்ல கலன், எனவே, "கலனைப் பற்றி" என்றே குறிப்பிட வேண்டும், கலன் என்பது புது வகை ஆயுதங்களையே குறிக்கிறது.
செந்தில்,
தங்கள் விமர்சனத்திற்கு நேர்மாறான ஒன்றை நான் கொண்டிருக்கிறேன் - ஆனால் ஒரு விதயத்தில் ஒத்துப்போகிறோம் - அது சோழ அரசன் பாத்திரப்படைப்பு! உண்மையில் என்னை மிகவும் கலங்க வைத்துவிட்டது, இன்றைய தமிழர்களின் நிலையை எண்ணி!
என் கருத்துக்கு நேர்மாறான விமர்சனம் தந்தவர் என்ற முறையில் தங்களை என் பதிவை படிக்க பணிவுடன் அழைக்கிறேன்...
(http://vijayanarasimhan.blogspot.com/2010/01/blog-post.html)
நன்றி! வாழ்த்துக்கள்!
நாம் தான் மசாலாவை விரும்புகிறவர்களாயிற்றே ;) ............... சரியாக சொல்லி இருக்கிறீர்கள். :-)
வாங்க சீனா ஐயா. நன்றி.
வாங்க சங்கவி. நன்றி
வாங்க கதிர். நன்றி
வாங்க கோபி. நன்றி
வாங்க அபுஅஃப்ஸர், நன்றி
வாங்க சுபைர், நன்றி
வாங்க பிரதாப், நன்றி
வாங்க கே.ரவிஷங்கர், உங்கள் பதிவைப் படித்தேன். நன்றாக அலசியிருக்கிறீர்கள். நன்றி
வாங்க பாலாண்ணே, நன்றி.
வாங்க சபரி, நன்றி.
வாங்க பாலாசி, நன்றி.
வாங்க பிரபாகர், நன்றி.
நன்றி கிருஷ்ணா, தாங்கள் குறிப்பிட்ட பிழையை மாற்றிவிட்டேன்.
வாங்க விஜய் நன்றி.
வாங்க சித்ரா. நன்றி
நேர்மையான விமர்சனம்
அடடா இதுகூட நல்லாதானே இருக்கு
நல்ல விமர்சனம்.
அருமை நண்பர் செந்தில் வேலன்,அருமையான விமர்சனம்
நான் விமர்சனம் எழுதிருந்தாலும் இதையே தான் எழுதியிருப்பேன்.
படத்தில் கார்த்திக்கு சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட்டதாகவே நினைக்கிறேன்.கார்த்தி வராத காட்சியென்றால் ரீமாவுக்கும் பார்த்திபனுக்கும் நடக்கும் பாடல் காட்சி,அதை தொடர்ந்த சண்டைகாட்சி மட்டுமே எனலாம். அது தவிர்த்து அவர் படமெங்கும் வியாபித்திருக்கிறார்.சிறப்பாகவும் பங்காற்றியுள்ளார்.
பார்த்திபனும் மிக அருமையாய் செய்துள்ளார்.வைரமுத்துவின் வரிகள் ஒவ்வொன்றும் வைரத்தின் கூர்மை.நல்ல ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டான விமர்சனம் படித்த திருப்தி கிட்டியது,அடிக்கடி இதுபோல நல்லவைகளுக்கு எழுதவும்.பகிர்வுக்கு நன்றி
நல்ல அலசல். நாங்க பார்த்ததிலே /"நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே/ பாடல் இல்லை...:-(
Post a Comment