Friday, March 26, 2010

பட்டமொன்னு வேலையொன்னு!!

நாம் படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் எந்த அளவிற்கு தொடர்புள்ளது?

எனக்கு அதிகமாகத் தோன்றும் கேள்விகளுள் இதுவும் ஒன்று!! நண்பர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள் எனப் பலரையும் பார்க்கும் பொழுது இந்தக் கேள்வி மேலும் ஓங்குகிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை!!

நேற்றிரவு லிங்க்ட்-இன் தளத்தில் எனது நண்பர்களின் பக்கங்களைப் பார்த்து வந்தேன். எனது லிங்க்ட்-இன் தொடர்புகளில் இருப்பவர்களுள் என் பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று நீண்ட நாள் பழக்கம் உள்ளவர்கள் தான் அதிகம். அவர்களது படிப்பு, வேலை போன்றவை தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரிந்திருந்தாலும் ஒரு சேரப் பார்த்த பொழுது வியப்பாகவே இருந்தது!!



எத்தனை மாற்றங்கள்? படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் எவ்வளவு தொடர்பின்மை?

நான், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில், வேதிப்பொறியியல் சார்ந்த தொழில்நுட்பத்தைப் படித்துவிட்டு தொலைத்தொடர்புத்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனத்தில் பொருள் மேலாண்மைப் (Product Management) துறையில் பணியாற்றி வருகிறேன். ஆரம்ப காலத்தில் என் படிப்பு சார்ந்த துறையில் பணியாற்றினாலும், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, நல்ல சம்பளம், மேலாண்மை சார்ந்த துறை மீதுள்ள ஆர்வம் போன்ற காரணங்களால் இத்துறைக்கு மாற முடிவெடுத்தேன். படித்த துறையில் வேலை பார்க்காவிட்டாலும் தினந்தோறும் பல விசயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு, திறனாய்வுத் திறனைப் பயன்படுத்தும் வாய்ப்பு போன்றவற்றால் ஈடுபாட்டுடன் வேலை பார்க்க முடிகிறது.

மேலாண்மை சார்ந்த துறை தான் ஆர்வம் என்றால், எதற்காக நான்கு வருடங்கள் வேறொரு படிப்பைப் படித்தேன்? அந்த படிப்பின் மீது ஆர்வமுள்ள மற்றொரு மாணவனின் வாய்ப்பை எதற்காகத் தட்டிப் பறித்தேன்?

அடுத்தது என் நெருங்கிய நண்பன்: கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னனு மற்றும் தொலைத்தொடர்புத் துறைப் படிப்பைப் படித்தான். பிறகு பெங்களூரில் உள்ள ஐ.ஐ.எம்.மில் மேலாண்மைப் படிப்பு!! தற்பொழுது பங்கு வர்த்தகம் சார்ந்த துறையில் சரகத் தலைவராக உள்ளான். பங்கு வர்த்தகம் அல்லது நிறுவன மேலாண்மை தான் முக்கியம் என்றால் எதற்காகப் பொறியியல் படிப்பு வேண்டும்?

ஐ.ஐ.எம்.மில் படிக்க வழிவகுக்கும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைய பொறியியல் தான் படித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே! "CEO is an IIT-IIM-A Combo"என்று படிக்கும் பொழுது அந்த நிறுவனத் தலைவரின் படிப்பாற்றலை வியக்கும் அதே சமயம், சிரிப்பும் சேர்ந்தே வருகிறது!!

கட்டடப் பொறியியல், எந்திரவியல், மின்னனு பொரியியல், வணிகவியல், கணிதவியல் என்ற பல படிப்புகளையும் படித்துவிட்டு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிவரும் எண்ணற்ற நண்பர்களைப் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை!!

நாம் என்ன படிக்க வேண்டும், என்ன தொழில் செய்ய வேண்டுமென்று முடிவெடுப்பது யார்? 

"என்னப்பா செந்திலு, அண்ணா யுனிவர்சிட்டில படிச்ச!! இப்ப பத்தாயிரம் ரூவா தான் சம்பளம் வாங்கற? நம்ம சங்கரன் மவன் உடுமலை ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் பி.எஸ்.சி முடிச்சான். இப்போ பெங்களூருல இருவத்தஞ்சு ரூவா வங்கறானே!!"

"மாப்ளே, வடக்கால குளத்துக் காட்டுக்காரர் மகன் ஆஸ்திரேலியா போயிருக்கானாம். அவங்க அப்பா அம்மாவ அங்க கூப்பிடறானாம்!! உன்னோட கம்பெனில எல்லாம் வெளிய அனுப்புவாங்களாடா?"

"தம்பி, இப்பல்லாம் பொண்ணுக அமெரிக்கா மாப்பிள்ளை, ஐ.டி. மாப்பிள்ளைங்க தான் வேணும்ங்கறாங்க!! அதனால நீங்க எதிர்பார்க்கற மாதிர்  பொண்ணு அமையறதுக்கு கொஞ்சம் லேட் ஆகும்.."

இன்னும் எத்தனை விசாரிப்புகள். எத்தனை வசவுகள்!! ஆனால் இது போன்ற பக்கத்து வீட்டுக்காரர், உறவினர்கள், நண்பர்கள் என சமூகத்தின் வார்த்தைகள், கருத்துகளே நமது படிப்பு, வேலை போன்ற விசயங்களை தீர்மானிக்கிறது என்பதே உண்மை!!

***

கல்லூரிப் படிப்பை முடித்து ஒன்பது வருடங்களாகப் போகிறது!! கல்லூரியில் வாங்கிய மதிப்பெண்களுக்கும் தற்பொழுது பார்க்கும் வேலைக்கும் தொடர்பு இருக்கிறதா?

கல்லூரியில் வாங்கும் மதிப்பெண்கள் கல்லூரியில் நடக்கும் காம்பஸ் இண்டர்வியூவில் வேலை வாங்க ஓரளவே உதவும்!! மற்றபடி, கூட்டு முயற்சி (Collaboration), குழுவுடன் ஒன்று பட்டு இயங்குதல் (Team work), திறனாய்வுத் திறன் (Analytical Ability), பேச்சாற்றல், எழுத்தாற்றல் போன்றவை எல்லாம் தான் தொழிலில் உயர உதவுகிறது!! 

***

கல்லூரி நண்பர்கள், பள்ளிக்கால நண்பர்கள் தற்பொழுது என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது!!

பள்ளிப்படிப்பைத் தேர்ச்சியடையவே திணறிவர் இன்று வெளிநாட்டில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார். கல்லூரியில், காம்பஸில் வேலை கிடைக்காத என் நெருங்கிய நண்பர் இன்று இராணுவ மேஜராக உள்ளார். கணிதம் மீது மிகுந்த ஆர்வம் மிக்க என் நண்பன் இன்று கணினியியல் விரிவுரையாளாராக உள்ளார். இன்னும் எண்ணற்ற எடுத்துக்காட்டுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆகவே, தொழிலிலும், வாழ்விலும் முன்னேற ஓரே படிப்பைத் தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது!! சில வருடங்கள் கழித்துப் பார்க்கையில் நமக்குக் கிடைத்திருக்கும் பட்டறிவும், அந்தத் துறையில் ஆர்வமும், விடாமுயற்சியுமே நம்மை முன்னேற உதவும். ஆகவே, சமூகம், பக்கத்துக்காட்டுக்காரர், வரன் போன்ற சமூகக் காரணங்களுக்காக நம் தொழிலைத் தீர்மானிப்பது முட்டாள்த்தனமே!!

படிப்பு, தொழில் போன்றவை நம் பொருளாதாரம் மேலோங்க உதவலாம்!! 

ஆனால் நமக்கு அக மகிழ்ச்சியளிக்குமா? 

(தொடரும்...)

****

17 comments:

geethappriyan said...

நல்ல பகிர்வு நண்பரே
தம பட்டை என்ன ஆச்சு?
அனுப்ப முடியவில்லையே?

Unknown said...

இதைப்பற்றி நானும் யோசித்திருக்கிறேன்..

Unknown said...

இதைப்பற்றி நானும் யோசித்திருக்கிறேன்..

க.பாலாசி said...

எனக்கு கணக்குன்னா ரொம்ப பிடிக்குமுங்க.. படிச்சதுகூட கணக்குதானுங்க... ஆனாயிப்ப பாக்குறவேளை.... எந்த சம்பந்தமுமிள்ள....

நீங்க சொல்றதெல்லாம் நெசந்தானுங்க....

நல்ல இடுகை....

Radhakrishnan said...

//ஆகவே, தொழிலிலும், வாழ்விலும் முன்னேற ஓரே படிப்பைத் தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது!! சில வருடங்கள் கழித்துப் பார்க்கையில் நமக்குக் கிடைத்திருக்கும் பட்டறிவும், அந்தத் துறையில் ஆர்வமும், விடாமுயற்சியுமே நம்மை முன்னேற உதவும். ஆகவே, சமூகம், பக்கத்துக்காட்டுக்காரர், வரன் போன்ற சமூகக் காரணங்களுக்காக நம் தொழிலைத் தீர்மானிப்பது முட்டாள்த்தனமே!!//

:) நன்றாக சொன்னீங்க.

vasu balaji said...

இது செந்திலுக்கு:

100 சதம் ஒப்புக்கொள்ள வேண்டியதே. ஆனால் தேர்வுக்கு வழியில்லாத பட்சத்தில் கிடைப்பதைப் பிடித்து மேலேற வேண்டியிருக்கிறதே செந்தில்.

/ க.பாலாசி said...

எனக்கு கணக்குன்னா ரொம்ப பிடிக்குமுங்க.. /

இத நீ சொல்லோணுமாக்கு. மானில வாரியா கணக்கு பண்றியே ராசா!

பழமைபேசி said...

அது ஏன் கேட்கறீங்க? செய்யுற தொழிலை வெச்சிக் கூட ஆட்களை எடை போடுறதுங்றது.... யெம்மா... மகாக் கொடுமை...

Mahesh said...

ஹ்ம்ம்ம்.... நம்ம கதையைக் கேட்டா எப்பிடி முறைப்பீங்கன்னு தெரியல :))))

Chitra said...

எத்தனை மாற்றங்கள்? படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் எவ்வளவு தொடர்பின்மை?

........இந்த இடுகையை படிக்கும் போது, நிச்சயம் பலருக்கு பொருத்தமாக இருக்கும். நல்ல பதிவு. :-)

பனித்துளி சங்கர் said...

{{{எத்தனை மாற்றங்கள்? படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் எவ்வளவு தொடர்பின்மை?}}}


நல்லபதிவு !!
பகிர்வுக்கு நன்றிகள்!!

ராம்ஜி_யாஹூ said...

But when it comes to our children or to our brothers, sisters, we too start imposing our tastes on those children. We will not listen to that childrens' tastes and interests.

Let us change our attitude and give freedom to the kids to choose their education, job.

Earlier days, cut off marks decided lot of students' career. I have seen few students who had the desire to become doctor but due to cut off marks &and capitation fees) they have now become software project managers.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

:))

ஈரோடு கதிர் said...

வாழ்க்கை ஒரு காட்டாறு போ ஓடிக்கொண்டிருக்கிறது...

எங்கே இறங்குமிடம் தெரிகிறது.... சேரும் வழியும் இடமும்...ம்ம்ம்ஹூம்...

செந்தில், நீங்கள் நினைத்தையே நானும் பலமுறை நினைத்திருக்கிறேன்...

ஆனால்... நீங்கள் அழகாக வடித்திருக்றீர்கள்

நன்று

பிரபாகர் said...

நல்ல பகிர்வு செந்தில்...

படிப்புக்கும் வேலைக்கும் சம்மந்தமில்லாமல் தான் என்னுடன் படித்த பலர் இருக்கிறார்கள். என்னுடம் வேலை பார்ப்பவர்களும் இதே போல்தான்...

இது நமது குறைபாட்டையே காட்டுகிறது...

பிரபாகர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ கார்த்திகேயன்,

நன்றிங்க நண்பரே.

@@ திருஞானசம்பத்,

நன்றிங்க.

@@ க.பாலாசி

நன்றிங்க பாலாசி.

@@ V. Radhakrishnan,

நன்றிங்க.

@@ வானம்பாடிகள்,

வேற வழியில்லைன்னா என்னங்க பண்றது? நீங்க சொல்றது சரிதான்.

@@ பழமைபேசி,

உண்மைங்கண்ணா. அத விட வாங்கற சம்பளம் :(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ மகேஷ்,

அதே ப்ளட்டா உங்களுக்கும்?

@@ சித்ரா,

நன்றிங்க.

@@ சங்கர்,

நன்றிங்க சங்கர்.

@@ ராம்ஜி,

I totally agree your comments Ramji. Changes should start from us. Lets change it!!

@@ சுரேஷ்,

நன்றிங்க.

@@ கதிர்,

நன்றிங்க

@@ பிரபாகர்,

நன்றிங்க!!

ஹுஸைனம்மா said...

நானும் படித்ததொன்று, வேலை செய்வதொன்று என்ற கூட்டத்தில் வருபவள்தான்; படித்த துறையில் கிடைக்காத வாய்ப்பை எதிர்பார்த்து காலங்கடத்துவதைவிட, வேறொரு துறையில் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்வதும் ஸ்மார்ட்னெஸ்தானே!! வாழ்க்கையில் சில சமயங்களில் சமரசம் செய்துகொள்வதும் அவசியமாகிறதே!!

ஆனால், சமீபத்தில் சக்திவேல் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி, தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற டாக்டராகிவிட்டு, பின் தன் குறிக்கோளான ஐ.பி.எஸ். படித்ததாகச் சொல்லியிருக்கிறார். மருத்துவ இடங்கள் குறைவாக உள்ள நம் மாநிலத்தில், இது நிச்சயம் தவறாகத்தான் படுகிறது.

Related Posts with Thumbnails