Tuesday, April 13, 2010

கதறும் பூந்தமல்லி சாலை!!

சென்னையின் சாலைகளுக்கு மட்டும் உயிர் இருந்திருந்தால்.. இந்நேரம் மாண்டிருக்கும். ஆம் நாம் நடத்தும் சீரழிப்பைத் தாங்க முடியாமல்!

சென்னையுடன் என் உறவு 1997 முதல் தான். ஆனால் இந்த 13 ஆண்டுகளில் எத்தனை மாற்றங்கள்??

1997ல் கல்லூரிக் கல்விக்காகச் சென்னை வந்ததிலிருந்து, நான் பார்த்து வரும் மாநகரச் சாலைகளுள், மாற்றங்கள் நிகழ்ந்ததென்றால் அது சில மேம்பாலங்களும், பல ஒருவழிப்பாதைகளும் தான். சென்னையில் நான் அதிகம் பயன்படுத்திய சாலைகளுள் கோட்டூர்புரத்தை ராஜ்பவனுடன் இணைக்கும் காந்திமண்டபம் சாலையும், சர்தார் பட்டேல் சாலை மற்றும், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் தான்!! அந்த சாலைகளின் அன்றைய மற்றும் இன்றைய நிலையை நினைக்கும் பொழுது...

கோட்டூர்புரம் சாலை!!

முன்பு, அடையாறு ஆற்றிலிருந்து சர்தார் படேல் சாலை வரை (சில இடங்கள் தவிர்த்து ) சாலையின் இரு புறமும் அடர்ந்த மரங்கள் காணப்படும். சாலைகளில் வாகனங்கள் வருவதே அரிதாக இருக்கும். ஏன் சில சமயம், கார்கள் சாலையோரத்தில் ஒதுங்கி (??) நிற்பதையும் பல முறை பார்த்திருக்கிறோம். அப்படி இருந்த சாலை இன்று "மொட்டையடிக்கப் பட்டுள்ளது" சோகத்தின் உச்சம்.



சர்தார் படேல் சாலை!!

சைதாப்பேட்டையில் இருந்து அடையார் நோக்கி வரும் பொழுது தட்பவெப்பத்தில் சில டிகிரிகள் குறைவதை உணர முடியும். சின்னமலை சந்திப்பில் இருந்து ராஜ்பவன் நோக்கி வரும்பொழுது இருந்த அடர்ந்த மரங்கள் இன்று எங்கே?? ஒருவழிப் பாதையாக மாறியதில் பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. அதே போல அடையாரை நோக்கிச் செல்லும் பொழுது சி.எல்.ஆர்.ஐ.(CLRI), காந்தி நகர் பகுதிகளில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் இன்று இருந்த இடம் தெரியவில்லை!!

அண்ணாபல்கலைக் கழகத்தில் படிக்கும் பொழுது அடையாரில் இருந்து கல்லூரிக்கு நடந்தே வருவது எங்களுக்கு வாடிக்கையான ஒன்று. சாலையோரமெங்கும் மரங்கள், எங்கும் நிழல்!! ஆனால் இன்று??

பூந்தமல்லி சாலை!!

சென்னையின் பிரதான சாலைகளுள் ஒன்று பூந்தமல்லி சாலை. ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட தரமான சாலைகளுள் ஒன்று. சென்னை நகரின் மக்கள் தொகை சில லட்சங்களாக இருந்த சமயம் போட்ட சாலையை, மாநகரின் மக்கள் தொகை ஒரு கோடியைத் தொடும் பொழுதும் பயன்படுத்தி வருகிறோம். 

பத்து பேர் நிற்க வேண்டிய இடத்தில் 15 பேர் நிற்கலாம். 100 பேர் நின்றால் என்னாகும்?? 

அது தான் நடக்கிறது இன்று சென்னை சாலைகளில். குறிப்பாக பூந்தமல்லை சாலையில்!! தென்சென்னைப் பகுதிகளில் இருந்து வட சென்னைப் பகுதிகளுக்குச் செல்ல பூந்தமல்லி சாலையைக் கடந்தே தீர வேண்டும். மேலும் சென்னை சென்ரல், சென்னை எழுப்பூர் ரயில்நிலையம், கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி, சென்னை மருத்துவக்கல்லூரி சாலையெங்கும் முக்கிய இடங்கள்!! சென்னையில் வாழும் பெரும்பாலானோர் கடக்கும் சாலையென்பதால் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் தான்!!

நாங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன்பு தான் துபாய் வரும் வரை கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் தான் குடியிருந்தோம். என் அலுவலகம் இருந்ததோ பூந்தமல்லியைத் தாண்டி. காலையில், ஈகா திரையரங்கில் இருந்து 4 கி.மி. தொலைவில் இருந்த கோயம்பேடு செல்வதற்குக் குறைந்தது 10 நிமிடம் ஆகும். அதுவே மாலையென்றால் 45 நிமிடங்கள் வரை ஆகும். வாரக்கடைசியில் கீழ்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு பேருந்தி நிலையத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்கிறது.  ஒன்றரை வருடத்திற்கு முன்பே அவ்வளவு நெரிசல் என்றால்... இன்று??

ஏற்கனவே விழிபிதுங்கி நின்ற பூந்திமல்லி சாலை குருடாகியிருக்கிறதாம். காரணம் அம்பா மால்!!


நுங்கம்பாக்கம், சூளைமேடு, தி.நகர் போன்ற பகுதிகளை அண்ணா நகர், வில்லிவாக்கத்துடன் இணைக்கும் நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி சாலையில் சந்திக்குமிடத்தில் அழகிய கூவத்தின் கரையில் அமைந்துள்ளது இந்த மால்!! நெரிசல் நிறைந்த சாலையில், இந்த மால் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அம்பா மாலின் திரையரங்கங்களின் காட்சி முடியும் நேரமானால் சொல்லவே வேண்டாம்!! இந்த இடத்தில் இப்படி ஒரு கட்டிடம் கட்ட அனுமதி அளித்த மவராசரை நினைத்தால்....ம்ம்ம்.. நல்லாயிருக்கட்டும்!!


"அட.. என்னடா இவன்.. புதுசா, சூப்பரா மால் கட்டி விட்டுருக்காங்க!! அத விட்டுட்டு சாலை, நெரிசல்னு புலம்பீட்டிருக்கான்" என்று நினைப்பவர்களுக்கு ஒரு கேள்வி. இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஏதாவது மாற்று வழியில் செல்லலாம். மாநகரப் பேருந்தே கதி என்று இருப்பவர்கள் நிலை என்னவாகும்??

சென்னை சென்ரலில் இருந்து கோயம்பேடு செல்ல முன்பு 45 நிமிடம் ஆகியிருந்தால் இனிமேல், ஒன்றரை மணி நேரமாகும். பேருந்திகளில் செல்வோர் அவதிக்குள்ளாவது எதனால்?? நம்மைப் போன்றோர் ஆடம்பரமாக பொழுதைக் கழிக்க!!

12 comments:

ஈரோடு கதிர் said...

சென்னை அவ்வளவாக பழக்கம் இல்லை... ஆனாலும், நகரத்து மோகத்துக்கு எல்லா இடங்களிலும் பழியாவது மரம்தான்...

settaikkaran said...

எனக்கும் இது போன்ற சிந்தனைகள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. சென்னையின் வளர்ச்சி மலைப்பையும் சில நேரங்களில் அதிர்ச்சியையும் சேர்த்தே ஏற்படுத்துகிறது.

கண்ணா.. said...

ஓட்டு மொத்த தமிழக முன்னேற்றத்தை சென்னையிலேயே பண்ணிறனும்னு நினைக்குற அரசாங்கத்தோட தவறுங்க இது..


இன்னைக்கு எங்க ஊருல உள்ள பாதிபேரு சென்னைலதான் இருக்காங்க.. காரணம் வேலை நிமித்தம்.

க.பாலாசி said...

கதிர் சாரின் கருத்தையே நானும் மொழிகிறேன்....

நல்ல இடுகை...

Chitra said...

city cramps. :-(

செ.சரவணக்குமார் said...

நல்லதொரு இடுகை செந்தில். கதறும் பூந்தமல்லி சாலையில் தினம் தினம் பயணித்த கொடூரமான அனுபவம் எனக்குண்டு. மிகச் சரியாக, அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பா.

Jackiesekar said...

செந்தில் நல்ல இடுக்கை.. அதே போல் சாலைகள் பள்ளம் இல்லாமல் ஒழுங்காக இருந்தால் ஒரளவு டிராபிக் குறையும் எல்லா இடத்திலும் ஒரே பள்ளம் அதனால் வாகனங்கள் சீரான வேகத்தில் செல்ல முடிவதில்லை...

buginsoup said...

கோயமுத்தூர் வந்து பாருங்ணாவ்.. பிதுக்கி எடுத்துருவோம்ங். கடந்த 50 வருடத்தில், கோவையில் கட்ட்டப்பட்ட போக்குவரத்துக்கான பாலங்கள் இரண்டு (அதுவும் ரயில்வே மேம்பாலம்), சப்வேணா என்னன்னு தெரியாதுங், டிராபிக் சிக்னல் எங்கேயாவது ஒளிரும், நடைபாதை எந்தச்சாலையிலும் கிடையாது.ஒரு கொலைகாரச்சாலை உள்ளது, மேட்டுப்பாளயம் ரோடு என்று பெயர். இது ஒரு மாநகராட்சி என்பது சிறப்பான விஷயம்..:-)

geethappriyan said...

நண்பரே அம்பா மாலை பார்த்தாலே கண்கள் குருடாகிவிடும்போல,ஐந்து வருடத்துக்கும் மேல் இதில் என்ன வேலை செய்தனரோ?இத்தனைக்கும் எல்லாமே பிரிகாஸ்ட் ஸ்லாப்,மாடர்ன் டெக்னாலஜியை உபயோகித்தனராம்.

முன்பு இருந்த விண்ட்சர் பார்க் ஹோட்டலே அருமையாக இருக்கும்.

============
அப்ரூவல் சூட்கேஸ் நிறைய கோடிகள் கிடைத்தால் உடனடியாக எங்கே வேண்டுமானாலும் கிடைத்துவிடும்.இந்த மாலின்(?) போட்டோக்களை பார்த்தேன்,ஒன்றும் சொல்வதற்கில்லை,சேரலாதன் என்பவர் தான் இதற்கு ஆர்கிடெக்ட்.கொடுமை சார்.

Sunantha said...

சென்னையின் நடுத்தர மற்றும் அதற்கு கீழே உள்ளவர்களின் வாழ்க்கைத்தரம் சீரழிந்துவிட்டது...ஏதாவது ஒரு போக்குவரத்து நெரிசலில் சிக்கி மீளும் சென்னைவாசி இரு சக்கர வண்டியை ஓட்டும் வெறியில் தெரிகிறது சீரழிந்த வாழ்வின் அவலம்..சென்னை மேலும் மேலும் அரசியல்வாதிகளால்/முதலாளிகளால் வளர்க்கப்படும்.. முதலாளிகள் மேலும் பணம் சேர்க்க ஏற்ற இடம் இது..வரும் காலத்தைய நடுத்தர மற்றும் அதற்கு கீழே உள்ளவர்களின் வாழ்வுதான் ..கொடுமை...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ கதிர்,

நீங்க சொல்றது 100/100 உண்மை.

@@ சேட்டைக்காரன்,

உங்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியே எனக்கும் :((

@@ கண்ணா,

முற்றிலும் உண்மை. வளர்ச்சையைத் தமிழகமெங்கும் பரவவிட்டாலே போதுமானது.

@@ க.பாலாசி,

நன்றிங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ சித்ரா,

நன்றிங்க

@@ செ.சரவணக்குமார்,

நன்றிங்க நண்பரே.

@@ ஜாக்கி அண்ணே,

நன்றிங்க. உண்மையில் சாலை நெருக்கடிக்கு நிகரான சிக்கல் சாலையில் உள்ள பள்ளங்கள்.

@@ buginsoup,

அண்ணே, நானும் கோவையைச் சேர்ந்தவனே. எனக்கும் சேம் பிளட் :((

@@ கார்த்திகேயன்,

உண்மை நண்பரே!! நன்றி.

@@ சுனந்தா,

உண்மைங்க. நான் முடிந்த வரை பொறுமையாக ஓட்ட முயன்றிருக்கிறேன், சென்னையில் இருந்தபொழுது. நன்றிங்க.

Related Posts with Thumbnails