சென்னையில் வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறீர்களா? குடியிருக்கிறீர்களா?
இது உங்களுக்கான பதிவு. சென்னையில் வாடகை வீட்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவமும், அமீரகத்தில் கிடைத்திருக்கும் மாறுபட்ட அனுபவமும், அமீரகத்தில் இருப்பது போன்ற முறை நம் ஊர்களில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்தின் விளைவே இந்தப் பதிவை எழுதத் தோன்றியது.
சென்னையைப் பற்றி எழுதுவதற்கு என்ன தகுதியிருக்கிறது எனக்கு?
உடுமலையைச் சேர்ந்த நான் படித்தது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில். படித்து முடித்த பிறகு சில வருடங்கள் பல ஊர்களில் இருந்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து மூன்று வருடம் வாடகை வீட்டில் வசித்தவன், குடித்தனம் நடத்தியவன். கல்லூரி விடுதியில் இருந்த பொழுது வாடகை வீட்டில் குடியிருக்காவிட்டாலும், அருகே இருந்து அவதானிக்கும் வாய்ப்பு பெற்றவன். பிறகு அனைவருக்கும் ஏற்பட்ட எல்லா விதமான அனுபவங்களையும் பெற்று வாடகை வீட்டில் குடியிருந்தவன் என்ற முறையில் வாடகை வீடுகளில் நடக்கும் விசயங்களை நன்றாகவே உணர்ந்திருக்கிறேன்.
வாடகைக்கு வீடுகள் தேடுவதென்பது ஒரு தனி கலை என்றே கூறலாம். சுலேகா, ப்ரீ ஆட்ஸ் அல்லது ஹிந்து கிஸாசிபைட்ஸ் போன்ற ஊடகங்களில் தேடுவது தான் முதல் படி. ஞாயிற்றுக்கிழமை நாளிதழைப் பார்த்து நமக்கு தோதான வீடு உள்ளது என்று அறிந்தவுடன் தொடர்பு எண்ணிற்கு அழைத்தால் "நீங்கள் அழைத்த எண் பிஸியாக உள்ளது" என்று கேட்கும். விடாமுயற்சியாக எண்ணைத் தொடர்பு கொண்டால் "ஏற்கனவே நான்கைந்து பேர் பேசிவிட்டார்கள்" என்று கூறி தலை கிர்ரேன்று சுற்றுவது போன்ற வாடகையைக் கூறுவார்கள். சரி நேரில் சென்று பார்ப்போம் என்று பார்த்தால், ஒரு 10அடிக்கு 8அடி அளவுள்ள கூடம், 7அடிக்கு 8அடி படுக்கையறை, 6அடிக்கு 5அடி சமையலறை என்று ஒரு வீட்டைக்காட்டுவார்கள். அல்லது காட்டும் வீடு சாலையின் கீழே இருக்கும். கொஞ்சம் நிதானமாக யோசித்தால் மழைக்காலத்தில் வீட்டின் பாதி மூழ்கியிருக்கும் என்பது புரியும். நாளிதழில் வரும் பெரும்பாலான வீடுகள் இப்படியே என்பது நான்கைந்து நாட்கள் வீடுகளைப் பார்த்த பிறகு விளங்கும்.
கொஞ்சம் சுதாரித்து, நாளிதழ்களைத் தேடுவது பயனற்றது என்று புரிந்து ஏதாவது ஒரு தரகரையோ, தரகு நிறுவனத்தையோ அனுகுவது அடுத்த நிலை. "நீங்க எதிர்பார்க்கற வாடகையில், ஏரியாவில் வீடு கிடைப்பது கஷ்டம் தான். உங்களுக்காகப் பார்க்கிறோம்" என்ற தரகரின் பொன்மொழியைக் கேட்டுவிட்டு அவரது அழைப்பிற்குக் காத்திருக்க வேண்டும். ஓரிரு நாட்கள் கழித்து ஏதாவதொரு வீட்டைக் காட்டுகிறேன் என்று சொல்லி வேறொரு தரகரிடம் கூட்டிச் செல்வார். பிறகு நாம் எதிர்பார்த்ததை விட 20% அதிக வாடகைக்கு ஒரு வீட்டைக் காட்டுவார். நமக்கு வீடு தருவதற்கான விதிகளில் 10 மாத முன்பணம், ஒரு மாதம் தரகுக் கட்டணம் என்றெல்லாம் ஒத்துக்கொண்டு வீட்டை வாடகைக்கு எடுத்தால் அப்பாடா என்று இருக்கும்.
இங்கே தான் எனக்கு பல ஐயங்களையும் அமீரக அனுபவங்களையும் பகிர்வது முக்கியமாகப்படுகிறது.
வீட்டை ஒரு வாடகைக்கு எடுக்கிறோம். அந்த வாடகையை எப்படி உடன்பாட்டிற்குள் கொண்டு வருகிறோம்?
ஓரளவு நம்பிக்கையானவராகப் படும் வீட்டு உரிமையாளர் 20ரூ பத்திரத்தில் வீட்டு வாடகையில் ஆரம்பித்து எத்தனை பேர் குடியிருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்றெல்லாம் எழுதி இருவரும் கையெழுத்திட்டுக்கொள்கிறோம். இந்தப் பத்திரத்தை எந்த பதிவாளர் அலுவலகத்திலோ நகராட்சி அலுவலகத்திலோ பதிவு செய்வது கிடையாது. நாம் முன்பணம் செலுத்தியது, வாடகைக்கு ஒப்பந்தமிட்டது எல்லாமே இருவருக்கும் ஏதாவது ஒரு மூன்றாமவர்க்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது.
இப்படி இருக்க, வீட்டைக் காலி செய்யும் பொழுது நாம் செலுத்திய முன்பணத்தை இயல்பாகப் பெற முடிகிறதா? ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டு வாடகையை உயர்த்தினால் எங்கே உரிமைக்கென புகார் செய்வது? வாடகைக்குக் குடியிருப்போர்க்கான உரிமைகளை எப்படிப் பெறுவது?
நுகர்வோர் தொடர்பான இந்தக் கேள்விகளுக்கு விடையிருந்தால் அன்பர்கள் பின்னூட்டமிடுங்கள்!!
*
உள்நாட்டில் வாழ்பவர்களுக்கே வாடகைக்கு வீடு எடுப்பதில் இவ்வளவு சிக்கல்கள் / தலைவலிகள் இருக்கும் பொழுது இந்தியர்கள் அதிகமாக வாழும் அமீரகத்தில் வீடு எடுப்பது எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது? என்னென்ன வழிமுறைகள் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கின்றன?
அமீரகத்தில் வீடு தேடுவதென்பது பெரும்பாலும் இணையத்திலோ, நாளிதழ்களில் காணப்படும் வாடகைக்குள்ள வீடுகளைப் பற்றி தெரிந்து கொண்டும், அக்கம்பக்கத்திலும், வீட்டு காவலர்களிடம் கேட்டும் தெரிந்துகொள்ளப்படுகின்றன. பிறகு காலியாக உள்ள வீட்டைப்பார்த்துவிட்டு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்று முடிவெடுக்கும் வரை இந்தியாவில் உள்ள வழிமுறை தான். பிறகு தான் உள்ளன வீட்டை வாடகைக்கு எடுப்பதில் உள்ள மாறுபாடுகள்.
வீட்டை வாடகைக்கு எடுக்கும் வருடாந்தரத் தொகையை நான்காகவோ ஆறாகவோ பிரித்து காசோலைகளைத் தரவேண்டும். வருடத்திற்கு நான்கு காசோலைகள் என்றால் 1,4,7,10ம் மாதத்தில் காசோலைகளில் பணமெடுக்கப்படும். ஆகவே அமீரகத்தில் முன்பணம் என்பது கிடையாது என்றோ.. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாடகைப் பணம் செலுத்தப்படுகிறது என்றோ எடுத்துக்கொள்ளலாம். நாம் கொடுத்த காசோலைகளின் எண்களைக் குறிப்பிட்டு வருடத்திற்கென ஒரு ரசீதைக் கொடுப்பது வழக்கம்.
இத்துடன் நாம் வீட்டை வாடகைக்கு எடுத்துவிட முடியாது.
நாம் பணம் செலுத்திய விவரத்திய எடுத்துக்கொண்டு வீட்டு வாடகை ஒப்பந்தந்தை (Rental Contract) எடுத்துச் சென்று நகராட்சி அலுவலகத்தில் உள்ள நுகர்வோர் உரிமைத் ( Consumer Rights Cell) துறையில் ஒரு கட்டணத்தைக் கட்டி பதிவு செய்ய வேண்டும். இப்படிப் பதிவு செய்வதன் மூலம் வீட்டை ஒரு வருடத்திற்கு முன்பே காலி செய்ய வேண்டிய சூழல் வந்தாலும் எளிதாக காசோலையைப் பெற இயலும். நாம் பதிவு செய்த பின் வீட்டின் உரிமையாளர் பெயர் வாடகைக்கு எடுப்பவர் பெயர் இரண்டும் குறிப்பிடப்பட்டு ஒரு படிவம் தரப்படும்.
நகராட்சியில் பதிவு செய்ததன் படிவத்தை எடுத்துச் சென்று தண்ணிர், மின்சாரம், எரிபொருள் வழங்கும் துறையில் சமர்ப்பித்தால் தான் நாம் எடுக்கும் வீட்டிற்கு மேலே குறிப்பிட்ட மின்சாரம், தண்ணிர், எரிபொருள் எல்லாம் விநியோகம் செய்யப்படும். நமக்கு வரும் மாதாந்தர ரசீதிலும் நம் பெயரும் வீட்டில் உரிமையாளரின் பெயரும் இடம் பெறும். நாம் வீட்டைக் காலி செய்யும் பொழுதும் முதலில் நகராட்சியில் விண்ணப்பித்து, பிறகு மின்சாரம், தண்ணிர் போன்ற சேவைகளைத் துண்டிக்க முடியும்.
அமீரகத்தில் எந்தத் தேவையாக இருந்தாலும் வீட்டு வாடகை ஒப்பந்தந்தைக் காட்டினால் தான் பெற முடியும். தனியாக வாழ்பவர் தங்கள் குடும்பத்தை அழைப்பதாக இருந்தாலும், பெற்றோரை அழைப்பதாக இருந்தாலும், வீட்டு வேலை செய்ய ஆளைப் பணியமர்த்துவதற்கும் வீட்டு வாடகை ஒப்பந்தந்தைக் காட்டியாக வேண்டும். வீட்டு உரிமையாளர் நம்மைக் காலி செய்ய நினைத்தாலும் போதிய கால அவகாசம் கொடுத்தாக வேண்டும். இது தான் நடைமுறை!!
*
அமீரகத்தில் உள்ள நடைமுறைகளை நம் ஊரில் உள்ள நடைமுறைகளோடு ஒப்பிடுவது சரியாகாது தான். ஆனால் வாடகைக்கு வீடு எடுப்பவர்களுக்கு நம் ஊரில் எந்த விதமான உரிமையும் இருப்பதாகத் தெரியவில்லை. வீட்டிற்கு வரும் மின்னட்டைகள், தண்ணிர் கட்டணம் முதலியவையில் எல்லாம் வீட்டு உரிமையாளரின் பெயரே இடம்பெறும். நாம் அந்த வீட்டில் தான் குடியிருக்கிறோம், இத்தனை முன்பணம் கொடுத்தோம் என்பதற்கு எல்லாம் எந்த விதமான ஆதரமோ, சான்றிதழோ இருப்பதாகத் தெரியவில்லை.
சொந்த ஊரில் இருந்து பெருநகரங்களுக்கு இடம்பெயர்வது வாடிக்கையாகிவிட்ட இன்றைய சூழலில் வாடகைக்கு வீடு எடுப்பவர்களின் நலனிற்கு ஏதாவது வழிமுறை செய்தால் நன்றாக இருக்குமே!! குறைந்தது நாம் ஒப்பந்தமிடும் வாடகை, முன்பணத்தையெல்லாம் குறிப்பிட்டு நகராட்சி அலுவலகங்கள் சான்றிதழ்களை வழங்கினால் இருவருக்கும் நல்ல ஆதாரமாக இருக்குமே!! அதை வைத்துக்கொண்டு எரிவாயு சிலிண்டர், தொலைபேசிச் சேவை இணைப்பு போன்றவற்றைப் பெற வசதியாக இருக்குமே!!
"இருக்கற வேலையை ஒழுங்காகச் செய்வதற்கே முடிவதில்லை. இதையும் எங்கே சேர்ப்பது" என்ற குரல் கேட்காமல் இல்லை. காலத்திற்கேற்ப மாறுதல்களைக் கொண்டு வந்தால் தானே நல்லது. சென்னை நகரம் தொழில்துறையில் முன்னேறுகிறது என்றெல்லாம் கூப்பாடு போடும் வேளையில், வெளியூர்களில் இருந்தெல்லாம் தொழில்துறையில் பணியாற்றவருபவர்களையும் கருத்தில் கொண்டால் தானே அனைவருக்கும் பலனளிக்கும்?
10 comments:
Enna solla , already 10k sudden a ethum sollama 11k anathu rent . Advance amount 80k . Next month innoru 1k eralam . Chennai hostel life parthu nonthu poi intha kodumaiyai anubavikkirom. Current bill unit rate water rate ithellam miss panniteengale . En flat la intha 2 kodumai illa.
வாடகை ஒரு புறம் கொள்ளை என்றால், மின்சாரக்கட்டணத்தில் வீட்டுக்காரன் அடிக்கும் கொள்ளை இருக்கிறதே. அதெல்லாம் விட்டுவிடுவார்களா என்ன? ஒரு முறை 750ரூ வாடகை வீட்டுக்கு 1800ரூ மின்சாரக் கட்டணம் கட்டவேண்டி வந்தது:))
சென்னையை பொருத்தவகையில் எல்லா டாக்குமெண்டையும் எடுத்துகொண்டு மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றால் அங்கும் காய் நகர்த்த லஞ்சம் கொடுக்க வேண்டி வரும், அதுக்கு காத்திருந்து கொடுப்பதைவிட்டு இது மாதிரி இடைதரகரிடம் கொடுத்து நிம்மதியாக இருக்கலாம்.
இந்த ஆதங்கத்தை நடைமுறைபடுத்த அரசாங்கம் முன் வருமா????
ல்லாம் சரி, எட்டாயிரம் ரூபாய்க்கு இரண்டு படுக்கை அரை வீடு கிடைக்கிறது சென்னையில்.
அமீரகத்தில் இதே வீட்டிற்கு மாதம் எண்பதாயிரம் வாடகை இருக்கும், அதை பற்றி எழுதாமல் விட்டது ஏன்.
இரு படுக்கை அறை உள்ள வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் குடி இருப்பது, ஒரே சமையல் அறை பகிர்தல் குறித்து எழுதாமல் விட்டது ஏன்.
//அமீரகத்தில் இருப்பது போன்ற முறை நம் ஊர்களில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்தின் விளைவே//
இப்படி ஏக்கங்களை லிஸ்ட் போட ஆரம்பிச்சா.. ம்ஹும் முடிவே இராது. மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை மட்டுமே இப்போது!!
நண்பரே
மிக அவசியாமான பதிவு
அடுத்தவருடம் எனக்கு இது மிகவும் உதவும்
@@ ராம்ஜி யாஹூ,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
//எல்லாம் சரி, எட்டாயிரம் ரூபாய்க்கு இரண்டு படுக்கை அரை வீடு கிடைக்கிறது சென்னையில்.
அமீரகத்தில் இதே வீட்டிற்கு மாதம் எண்பதாயிரம் வாடகை இருக்கும், அதை பற்றி எழுதாமல் விட்டது ஏன்.///
நண்பரே, இது அனைவருக்கும் தெரிந்த விசயமே. அமீரகத்தில் வாடகையும் பத்து மடங்கு அதிகம். அமீரக காசும் இந்திய ரூபாயை விட 12 மடங்கு மதிப்பு மிக்கது. அதனால் குறிப்பிடத்தேவையில்லை.
//இரு படுக்கை அறை உள்ள வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்கள் குடி இருப்பது, ஒரே சமையல் அறை பகிர்தல் குறித்து எழுதாமல் விட்டது ஏன்.//
மூன்று குடும்பங்கள் ஒரே வீட்டில் குடியிருப்பது வழக்கத்தில் உள்ள விசயம் தான். ஆனால் வாடகைக்கு எடுத்திருப்பவர் ஒருவரே. ஆனால், அப்படி "Sharing"ல் குடியிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது.இந்தப் பதிவின் மையக்கருத்து நிர்வாகம், வாடகைக்கு வீட்டை எடுப்பதில் உள்ள வழிமுறைகளைப் பற்றி எழுதுவதே.
அமீரகத்தில் உள்ள வீட்டு வசதிகள், நடைமுறைகள் பற்றியெல்லாம் வேறொரு பதிவில் குறிப்பிடுகிறேன்.
ம்ம்ம்ம்......
இங்கும்(மஸ்கட்டில்) அமீரகம் போலவே ஆனால் நகராட்சிக்கெல்லாம் போக வேண்டும்.ஒப்பந்தம் நமக்கும் உரிமையாளருக்கும் தான்.
வாடகை கண்மூடித்தனமாக ஏறிக்கொண்டு போகிறதற்கு என் தம்பி படும் பாடே அதற்கு அத்தாட்சி! ஏதாவது ceiling fix பண்ணினால் கூடப் பரவாயில்லை.....
Post a Comment