Saturday, September 11, 2010

நான் ஏன் கமல் ரசிகனாக இருக்கிறேன்?

காய்த்த மரமே கல்லடி படும் என்பது நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் பொருந்தும். தமிழகத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட/ விமர்சிக்கப்படும் நடிகர் என்றால் அது இவராகத்தான் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஆரம்பித்து, சினிமா வாழ்க்கை, அவர் எடுக்கப்படும் சினிமா, அதில் வரும் கருத்துகள் என்று விமர்சனம் செய்யப்படாதவையே இல்லை எனலாம். ஒரு வேளை கமலை விமர்சிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வித பெருமை வந்துவிடுகிறதோ? எவ்வளவு தான் கமல் விமர்சிக்கப்பட்டாலும், ஒரு நடிகர், திரைத்துறைக் கலைஞர் என்ற விதத்தில் அவரது ரசிகனாகவே இருக்கிறேன்.

ஏன்?

கமலின் நடிப்பை ரசிக்க ஆரம்பித்தது எந்த வயதில் என்று யோசிக்க ஆரம்பிக்கையில் அது அபூர்வ சகோதரர்கள் காலத்தில் இருந்து என்று தோன்றுகிறது. அபூர்வ சகோதரர்களில் குள்ளமாக நடித்ததைப் பார்த்த பொழுது "எப்படிக் குள்ளமாக நடிக்க முடியும்" என்றெல்லாம் யோசித்ததுண்டு. அப்படியே.. சானக்யன், வெற்றிவிழா, இந்திரன் சந்திரன், மைக்கேல் மதன காமராஜன், குணா என்று ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள். ஒன்று ஒப்பனைகளில் மாற்றம், அல்லது கதையமைப்புகளில் மாற்றம் அல்லது வட்டார வழக்கில் மாற்றம் என்று ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம். கமலின் படங்கள் பிடிக்க ஆரம்பித்த பொழுது மற்ற நடிகர்களின், இயக்குனர்களின் நல்ல படங்கள் மீதான ரசிப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது. நான் வளர்ந்தது எல்லாம் உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கல்லூரிக் காலம் வரை ஆங்கிலப்படங்கள் என்றால் அது ஜாக்கிசான் நடித்த படங்கள். நல்ல படங்களின் மீதான் ரசனையை வளர்த்தது கமல், மற்றும் சில நல்ல இயக்குனர்களின் படங்கள் தான்!!

உடுமலைப்பேட்டையில் பிற நடிகர்களின் படங்களெல்லாம் 50 நாட்கள், 75 நாட்கள், 100 நாட்கள் என்றெல்லாம் ஓடும் பொழுது கமல் படங்கள் சில வாரங்கள் மட்டுமே ஓடியது, எத்தனையோ முறை சக நண்பர்களின் (கமல் ரசிகன் என்பதால்) எள்ளலிற்கு உள்ளாகியிருக்கிறேன். உடுமலை, பழநி போன்ற நகரங்களில் உள்ள திரையரங்கங்களில் உள்ள 100 நாள் ஓடிய படங்களின் கேடயங்களில் இடம்பெற்ற கமல் படங்கள் என்றால் காக்கிச்சட்டை, சகலகலாவல்லவன் போன்ற படங்கள் மட்டுமே. ஆக, நீண்ட நாட்கள் ஓட வேண்டும் என்றால் படங்களில் நிறைய பாட்டுகள், சண்டைகள், என்ற மசாலாவாக இருக்க வேண்டும் என்பதும் கமலின் பெரும்பாலான படங்கள் இத்தன்மை இல்லாததும் விளங்க ஆரம்பித்தது.ஏன் கமல் படங்களில் சண்டைகள் வருவதில்லை என்றேல்லாம் யோசித்ததுண்டு. அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது. 


கேபிள் டிவிகள், தனியார் சேனல்கள் எல்லாம் வர ஆரம்பிக்க கமலின் பழைய படங்களுக்கும் அறிமுகம் கிடைக்க ஆரம்பித்தது. சலங்கை ஒலி, சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே, நாயகன், வறுமையின் நிறம் சிவப்பு, சிப்பிக்குள் முத்து, மூன்றாம் பிறை, பேசும்படம் என்றெல்லாம் படங்களைப் பார்த்த பொழுது தரமான படங்கள் பலவற்றுள் நடித்து வந்திருப்பதும் தரமான இயக்குனர்கள் தங்களின் தரமான படங்களில் கமலை நடிக்க வைத்திருப்பதும் கவனித்தேன். இதனால் கமல் படங்களின் மீதும் தரமான படங்களின் மீதும் ரசிப்பு மேலும் அதிகரித்தது. அந்த ரசனை கமல் படங்கள் மட்டுமல்லாமல் மற்ற நல்ல படங்களையும் பாராட்டும் பக்குவத்தை ஏற்படுத்தியது.

இப்படி கமல் ரசிகர்களும், தரமான படங்களின் ரசிகர்களும் கமல் படங்களையும், தமிழ்த் திரையுலகிற்கு கமலின் பங்கையும் புகழும் பொழுது, "கமல் நடித்த படங்கள் எல்லாம் உலக சினிமாக்களின் காப்பி தான். அவர் ஒரு காப்பி நடிகர் மட்டுமே. ரசிகர்கள் வியந்து போற்றுவதற்கெல்லாம் தகுதியானவர் இல்லை" என்ற கருத்தை வலைப்பூக்களின் பார்க்கும் பொழுது, அதற்குக் "கமல் ரசிகன்" என்ற முறையில் விடையளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கமலின் தரமான படங்கள் என்று சொல்லப்படும் நாயகன், தேவர்மகன், மகாநதி, குணா, சத்யா, ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களெல்லாம் ஆங்கிலப்படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. நகைச்சுவைக்குப் பெயர் போன சதிலீலாவதி, மகளிர் மட்டும், பஞ்சதந்திரம் போன்ற படங்களும் சுடப்பட்டவை என்று கூறப்படுகிறது. 

இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு Product Creation பற்றி சில கருத்துகள்..

ஒரு பொருளை (Product) உருவாக்குவதற்கு முன்பு அப்பொருள் எந்த சந்தையில்(Market) வெளியிடப் போகிறோம், அச்சந்தையின் மக்கள் எப்படிப்பட்டவர்கள் (Demographics), அந்த சந்தையில் என்ன மாதிரியான பொருட்கள் எல்லாம் உள்ளன (Market Survey), அச்சந்தையின் தேவை என்ன ( Market Needs), பொருளைச் சந்தைப்படுத்தும் பொழுது எப்படி மாறுபடுத்தப் போகிறோம் ( Product Differentiation) என்றெல்லாம் ஆராய்ந்து, பொருளைத் அம்மக்களிற்கு ஏற்ப வடிவமைத்து (Localisation / Customization) சந்தைப்படுத்த வேண்டும். சந்தையில் வெளியிடப்போகும் பொருள் தன் ஆராய்ச்சியின் மூலம் வந்த பொருளாகவோ, ஏற்கனவே வெளியான பொருளின் சில பல மாறுதல்களுக்கு உட்பட்ட பொருளாகவோ இருக்கலாம். இதை எல்லாவற்றிற்கும் மேலாகத் தேவைப்படுவது வாடிக்கையாளர்க்கு என்ன மாதிரியான அனுபவத்தைத் ( User Experience) தரப்போகிறோம் என்பதே!! கமலின் படங்கள் உலகப்படங்களில் இருந்து சுடப்பட்டவை என்றாலும் தமிழ்ச் சந்தைக்குத் தேவையான மாற்றங்களுடன் மண்வாசனையுடனேயே வந்துள்ளன.

தேவர்மகன், விருமாண்டி, மகாநதி போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது நமது மண்ணையும் மண்ணின் மைந்தர்களையும் தான் பார்க்க முடியும். சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் பங்காளிச் சண்டைகளையும், சாதிச் சண்டைகளையும் மண்வாசனையுடன் எடுக்கப்பட்ட படங்கள் மிகக்குறைவே. மகாநதியைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தைக்கும் உள்ளம் கொதிக்கச் செய்தது தான் படத்தின் வெற்றியே. எங்கோ ஆங்கிலேய நாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் இருந்து சுடப்பட்டது என்று கூறப்பட்டாலும், கும்பகோணத்தையும் கல்கத்தாவையும் முடிச்சுப் போட வைத்தது தான் மகாநதி குழுவின் வெற்றியே. விருமாண்டியை ரசித்த அளவிற்கு நம் மண்ணில் புதைந்திருக்கும் குரோத உணர்வை நினைத்து வெட்கப்பட்டது மனம். அது தான் படத்தின் வெற்றியே!! காப்பியடிக்கப் பட்டதாகக் கூறப்படும் படங்களை இன்று பார்த்தாலும் எனக்கு என் மண்ணில் நடக்கும் விசயமாகப்படுகிறதே ஒழிய அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ நடப்பதாகப் படவில்லை.

அன்பே சிவம், குருதிப்புனல் போன்ற படங்களில் வெளிப்படுத்திய கருத்துகளுள் முதிர்ச்சியின்மையும் தேர்ச்சியின்மையும் தெரிந்தாலும் இப்படியும் படங்களை எடுக்கலாம் என்று அடுத்த தலைமுறையினர்க்கு நம்பிக்கை கொடுத்தது. குருதிப்புனலை ஹிந்தியில் இருந்து காப்பியடித்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக மிரட்டியிருப்பார்கள். குருதிப்புனல் தான் தமிழில் வெளியான முதல் "டால்பி" ஒலியமைப்பில் வெளியான சினிமா. தமிழகத் திரைத்துறையினரை தொழில்நுட்ப ரீதியில் உயர்த்தியதில் பெரும்பங்கு கமல் படங்களுக்கு உண்டு. ஒவ்வொரு படத்திலும் ஒப்பனை, கதையமைப்பு மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியிலும் புதிய விசயங்களைக் கொண்டுவந்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு. இங்கும் ஒரு பன்மொழிப் படத்தை எடுக்க முடியும் என்று காட்டியதில் ஹேராமிற்குப் பெரும் பங்குண்டு. இப்படம் தோல்வியுற்றதற்கான காரணமும் இதுவே. 

கமலின் பரிட்சார்த்தமான படங்கள் பலவும் சொந்தத் தயாரிப்பில் வந்த படங்களே. மாற்றுப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு தெரிந்திருந்தாலும் கமல் எடுத்ததற்கான காரணம், புதிய அனுபவத்தைத் தர வேண்டும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? அதற்குக் காப்பி தான் அடிக்க வேண்டுமா? என்றால், இப்படி ஒரு கதைக்கருவில் தமிழ் ரசிகர்களுக்குப் படம் கொடுக்க விருப்பப்பட்டிருக்கலாம். "மண்வாசனையுடன்" எடுக்கப்பட்ட படங்களை ஈயடிச்சான், கொசுவடிச்சான் காப்பி என்பதெல்லாம் ஓவர். 

தினமும் ஒரு உலகப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஒவ்வொரு படத்திலும் சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதே அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கும் 30 ஆண்டுகளாகத் தரவேண்டும் என்று நினைத்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. கமல் செய்திருப்பது மக்களின் User Experienceஐ அதிகரித்திருப்பதே!!

கமல் தமிழ் ரசிகர்களின் ரசனையை எதற்காக அதிகரிக்க வேண்டும்? சகலகலா வல்லவன், காக்கிச்சட்டை போன்ற படங்களையே எடுத்துக்கொண்டிருந்திருக்கலாமே!! அப்படி செய்திருந்தால் என்னவாகியிருக்கும்? சூர்யா, விக்ரம் போன்று நடிப்பில் முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்களும் பருத்திவீரன், பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்களும் வருவதற்கு நாளாகியிருக்கும்!! கமல் ஒன்றும் பெரிய சாதனை எல்லாம் செய்யவில்லை. அவர் செய்திருப்பது ஒரு Initiation ஆரம்பம்.

ரசிகர்களின் ரசனையை அதிகரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். "நாங்கள் தான் இணையத்தில் இருந்து தரவிறக்கி உலகசினிமா ரசனையை அதிகரித்துக்கொள்கிறோமே, கமல் தான் ரசிகர்களின் ரசனையை அதிகரிக்க வேண்டுமா?" ஐயா படங்களைத் தரவிறக்கம் செய்யுமளவிற்கு இணைய வசதியும் கிடைக்கப் பெற்றோர் ஒரு சதவிதத்தினர் தான். மற்றவர்களை அந்த தரத்திற்குக் கொண்டு வர வேண்டாமா? அதைத் தான் மகேந்திரன்,பாலுமகேந்திரா, பாலசந்தர்,பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் செய்துள்ளனரே. ஏன் கமல் மெனக்கெட வேண்டும்? அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அதன் வீச்சு அதிகம் என்பதே என் கருத்து!! உலக சினிமாவை நோக்கி வந்திருக்கும் பலரும் சிறு வயதில் கமல் படங்களைச் சிலாகித்தவர்களாகவே இருப்பர்.

கமலிற்கு இவ்வளவு வக்காளத்து வாங்குகிறாயே.. கமல் இன்னும் நம் சமுதாயத்தில் உள்ள ஏகப்பட்ட விசயங்களைப் படமாக்கியிருக்கலாமே!! ஆம்.. எனக்கும் அந்த வருத்தம் உண்டு. கமல் எடுக்க வேண்டிய, ஏற்று நடிக்க வேண்டிய பாத்திரங்கள், பேச வேண்டிய சமுதாயக் கருத்துகளும் நிறைய உள்ளன. கமலிற்கு மனமும் பணமும் இல்லாத பட்சத்தில், அதை விக்ரம்களும், சூர்யாக்களும், சேரன்களும்,பாலாக்களும் செய்தால் நன்றாக இருக்கும். அப்படி மாற்று சினிமாவை எடுப்பதற்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்ததில் கமலிற்குப் பெரும் பங்குண்டு!! 

அதனால், காப்பியடித்தார் என்ற சொல்லப்பட்டாலும் கமல் ரசிகன் என்பதில் எனக்கு சிறிதளவும் வருத்தமில்லை!!

25 comments:

access said...

well said i also belong to your belt i keep shitfing from kongu belt(pollachi kinathukadvau,goundampalayam hudco colony sivanandha colony now at kovaipudur) and chennai

rasikan said...

Dear Karunthel,
Can you write a block about me because I want to popular with in a day. W

maharaja said...

arumai sir karunthol kannayiram pathivalaruku super pathilladi!intha pathivai parthuvidu karunthol kannayiram pathivalar ungali naratithalum acaryapaduvatharku ondrumillai.kavanam!

ஈரோடு கதிர் said...

||ஈயடிச்சான், கொடுவடிச்சான் காப்பி||

அதென்னங்க கொடு வடிச்சான்!!??

இஃகி

மாப்புவோட ஆப்பு வைக்கிற புத்தி எனக்கு தொத்திக்கிச்சு

tshankar89 said...

அன்புள்ள உடுமலை செந்தில்,

ஏங்கண்ணு சௌக்கியமா?
"காப்பியடித்தார் என்ற சொல்லப்பட்டாலும் கமல் ரசிகன் என்பதில் எனக்கு சிறிதளவும் வருத்தமில்லை"
அவர் காப்பி அடிக்கவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது, இந்த கால கட்டங்களில்.
நாங்கள் கூறும் குற்றச்சாட்டே, காப்பி அடித்து விட்டு ஏதோ "ஆஸ்கார்" தரத்திற்கு நடித்து விட்டதாக "அளப்பறை" பண்ணுவது பற்றி தான் பேச்சு.
உதாரணம்: "உன்னை போல் ஒருவன்" படத்தில் நடித்தது குறித்து தொலைக்காட்சியில் "அளப்பறை" பண்ணியது ...."இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலே சாமி" அளவுதான். இதே படத்தின் மூலக்கதையான இந்தியில் "நஸ்ருதின் ஷா" அளவான நடிப்பை பாருங்கள். அதிவும் ஒரு வெற்றி படம் தான். ஆனால் அவர்கள் "அளப்பறை" பண்ணவில்லை.

சங்கர நா. தியாகராஜன்
நெதர்லண்ட்ஸ் - கோயம்பத்தூர்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ Access,

நன்றிங்க

@ ரசிகன்,

என்ன சொல்லவர்றீங்கன்னு புரியலீங்க..

@ மஹாராஜா,

கருத்திற்கு நன்றிங்க. நான் ஏன் கமல் ரசிகனாக இருக்கிறேன் என்பதற்கான விளக்கமே ஒழிய அன்பர் கருந்தேள் அவர்களின் பதிவிற்கு விடையல்ல இது.

@ கதிர்,

நன்றிங்க. மாற்றிவிட்டேன்.

@ ஷங்கர்,

நன்றிங்க. வருகைக்கும் கருத்திற்கும்.

ஆஸ்கர் தரம் என்பதையே மறுத்துத் தான் பல பேட்டிகளில் கமல் கூறியுள்ளார். இந்தியப்படங்களை ஆஸ்கருடன் ஒப்பிடாதீர்கள் என்று பல முறை கூறியுள்ளதைப் பார்த்திருக்கிறேன். நாம் தான், எதற்கெடுத்தாலும் ஆஸ்கர் செல்லும் படங்களுடன் ஒப்பிடுகிறோம்.

ஒவ்வொரு நாடும் "Best foreign language category film" என்ற பரிசிற்குத் தான் அனுப்பியிருக்கிறது இந்திய அரசு. அதில் கமல் நடித்த படங்கள் பல என்பது அனைவருக்கும் தெரியும். (காப்பியடித்திருந்தாலும்)

உண்மை. நஸீருதின் ஷாவை விட நடிப்பில் சோபிக்கவில்லை தான். ஆனால், இவரைத் தவிர வேற எந்த ஸ்டார்களுக்கும், தளபதிகளுக்கும் இந்தப் படத்தை எடுக்க தைரியம் உண்டா?

வென்னஸ்டேவின் வர்த்தகத்தை விட உன்னைப் போல் ஒருவனின் வர்த்தகம் அதிகம். அது தான் கமல் போன்ற நடிகர் தரமான படங்களை எடுக்கும் பொழுது கிடைக்கும் வீச்சு.

madrasminnal said...

COMEDY PAANNAADHEENGA BOSS. MAN VAASANAIYODA THANDHAA ADHU NALLA THIRUTTU...ILLANAA KETTA THIRUTTAA... ETHANA PERU KELAMBI IRUKKEENGA. COPYWRIGHT VAANGAAMA THIRUDARADHU SATTAPADI THAPPU. INDHA CINEMA KAARANGA... NAMMALA THIRUTTU VCD LA PADAM PAAKKA KOODADHUNNU SOLLUVAANGA. AANA IVANGA MATTUM THIRUDI PADAM EDUPPAANGA.. VELLITHIRAI PADATHULA PRAKASHRAJ SONNA MAADHIRI " THIRUTTU VCD NU ONNU ILLANAA INGA PAADHI PERU DIRECTOR KEDAYAADHU" ADHUDHAAN NIJAM.

Mohan said...

சீன் பை சீன் காப்பி அடிப்பது என்பது வேறு! ஒரு படத்தின் கான்செப்ட் பிடித்திருக்கும் பட்சத்தில்,அதைப் போன்று நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி படமெடுப்பது என்பது வேறு!

நாமே ஒரு துப்பறியும் நாவல் படித்துக் கொண்டிருக்கிறோம்.படித்துக் கொண்டிருக்கும்போதே முடிவு இப்படியாகத்தான் இருக்கும் என்று யூகித்துக் கொண்டு வருவோம்.முடிவு நாம் நினைத்த மாதிரி இல்லாமல் வேறு மாதிரி இருந்து,ஆனால் நாம் நினைத்த முடிவு உண்மையிலேயே நன்றாக இருந்தால் நாம் என்ன பண்ணுவோம்.அதே போல் ஒரு கதையை வைத்துக் கொண்டு,தேவைப்படும் இடங்களிலெல்லாம் மாற்றம் செய்து, நாம் நினைத்த மாதிரி முடிவு அமைத்து அந்த கதையையும் எழுதினால் என்ன தவறு? ஆங்கிலத்தில் படித்த கதையை,நான் மேலே கூறியவாறு தமிழில் எழுதியவர்கள் யாருமில்லையா?

எத்தனையோ இடங்களில் நாம் ஜோக்ஸ் படிக்கிறோம்.அவற்றில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டவை.அவர்களெல்லாரும் மூலத்திற்கு நன்றி தெரிவித்து விட்டுதான் பதிவு போடுகிறார்களா?

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்!

geethappriyan said...

நண்பரே
நல்ல பதிவு போட்டு உங்கள் கருத்துக்களை சொன்னீர்கள்,நல்ல உழைப்பு தெரிகிறது,உங்கள் போன்ற மெத்தப்படித்தவர்களை ரசிகர்களாக கொண்டிருக்கும் கமல் மிகவும் கொடுத்து வைத்தவர்.

Mahi_Granny said...

நல்ல ஆராய்ச்சி .அபூர்வ ராகம் , புவனா ஒரு ? இதெல்லாம் எப்படிப்பட்ட படங்கள். லீவு நாளென்பதால் இடுகையும் நீண்டு விடுகிறது.

ஜோதிஜி said...

கருந்தேள் கண்ணாயிரம் பதிவை படித்தவுடன் உங்களுக்கு எவ்வாறு தோன்றி இந்த இடுகை படைக்க காரணமாக இருந்ததே அதுவே தான் என்னுடைய மொத்த கருத்தாகவும் இருந்தது. செந்தில் கணேசன் இருவருக்கும் எப்போதுமே இந்த ஒற்றுமை ஆதி காலம் முதல் இருக்கும் போல,

திரைப்பட பதிவைக்கூட சமூக கண்ணோட்டத்தோடு மிக பொறுமையாக அருமையாக படைத்து இருப்பதற்கு என் வாழ்த்துகள் செந்தில்.

உங்களை மின் அஞ்சல் வாயிலாக தொடர்ந்து கொண்டுருப்பதை பெருமையாக நினைக்கின்றேன்.

R.பூபாலன் said...

கமலை இன்னும் எனக்கு பிடிக்க வைத்திருக்கின்றீர்கள்.
நன்றி செந்தில் அண்ணா...

ravikumar said...

Write up is good & true But the problem with Mr.Kamal is a" Garvi", whenever interview comes he speaks in "Suddha tamil" whereas in home speaks in english but preaching others to follow Tamil like Mr.Karunanidhi. Read Mr.R.Rp.Rajanayam Blogs . He stripped out not only Mr.Kamal including Mr.Rajni and all. Wheneevr interview comes he would speak "Jadhi" "Brahmin Language Style" and so on which is not at all necessary. Kindly go thro Mr.R.R.Rajanayam blog not only for Mr.Kamal to understand all cinema leads

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@@ Madrasminnal,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

என் கருத்தை ஏற்கனவே பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

//தினமும் ஒரு உலகப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஒவ்வொரு படத்திலும் சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதே அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கும் 30 ஆண்டுகளாகத் தரவேண்டும் என்று நினைத்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. கமல் செய்திருப்பது மக்களின் User Experienceஐ அதிகரித்திருப்பதே//

கமல் செய்திருப்பது நல்ல சுவாரஸ்யமான காட்சிகளைத் தமிழ்ப் படங்களில் இருப்பது தான். மொத்தமாக சுட்டார் என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள இயலாது.

Patentற்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பார்த்தாலும் அசலில் இருந்து சிறிது மாற்றங்களுடனேயே இருக்கும். எந்தத் துறையாக இருந்தாலும் Base ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றன. அதில் சில பல மாற்றங்களுடன் உருவாக்குவதில் தவறில்லை.

Touch Phones இருக்கிறதென்றால் Touch தொழில்நுட்பத்தை ஒருவர் காபிரைட் வைத்திருக்கிறார்.. அதில் சில மாறுதல்களுடன் Resistive Touch screen, Capacitive touch screen என்றெல்லாம் வந்துள்ளன. இது தான் அசலில் இருந்து மாற்றங்களுடன் வருவது என்பது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ மோகன்,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

@ கீதப்பிரியன்,

நன்றிங்க நண்பரே.

@ மகி கிரான்னி,

நன்றிங்க.

நீங்கள் குறிப்பிட்ட படங்களும் என்னைப் பொருத்த வரை உறவுகளைக் கையாள்வதில் பரிட்சார்த்தப் படங்களே.

@ பூபாலன்,

நன்றிங்க தம்பி.

@ ரவிக்குமார்,

கருத்திற்கு நன்றிங்க.

நான் கமலைத் திரையுலகக் கலைஞர் என்ற வகையிலேயே ரசிக்கிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ ஜோதிஜி.

நன்றிங்க.

நம் கருத்துகள் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சியானதே

பழமைபேசி said...

நானும் கமல் இரசிகந்தானுங்கோ...இஃகி

மரா said...

//தினமும் ஒரு உலகப்படத்தைப் பார்க்கும் எவருக்கும் ஒவ்வொரு படத்திலும் சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. அதே அனுபவத்தை தமிழ் ரசிகர்களுக்கும் 30 ஆண்டுகளாகத் தரவேண்டும் என்று நினைத்ததில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. கமல் செய்திருப்பது மக்களின் User Experienceஐ அதிகரித்திருப்பதே!!
//
இங்கதேன் அண்ணே நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாயிருக்கிறோம். நம்மள
கேனப்பயன்னு சொல்றாய்ங்க. சரி வுடுங்க.நல்ல பதிவு நண்பரே.

மரா said...

@ கீதப்ரியன்
// உங்கள் போன்ற மெத்தப்படித்தவர்களை ரசிகர்களாக கொண்டிருக்கும் கமல் மிகவும் கொடுத்து வைத்தவர் //

இந்தப்பதிவுல அவர் எங்குனயும் காலேஜ் டிகிரிலாம் போட்ட மாதிரி தெரிலீங்க? இன்னும் கொஞ்சம் வெளக்குனீங்கன்னா தன்யனாவேன் கீதப்ப்ரியரே :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கருந்தேள், கீதப்பிரியன்,

எனக்கும் பதில் எழுதியமைக்கு நன்றி.

நீங்கள் கூறுவது போல அவை யாவும் அப்பட்டமான காப்பி என்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. கதைக்கருவை, காட்சியமைப்புகளை நம் மக்களுக்காகப் போதிய மாற்றங்களுடன் திரைக்கதை அமைக்கப்பட்டு வந்த படங்களே. இதை நீங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. நானும் நீங்கள் சொல்வதைப் போல "ஈயடிச்சான் காப்பி" என்பதை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இருக்கட்டும்.

o

நீங்கள் கேட்கும் கேள்வி "காப்பிரைட்டை ஏன் வாங்கவில்லை?" என்பது.

ஹாலிவுட் மற்றும் உலகப்படங்களுள் முக்கியமாகக் கருதப்படுவவை திரைக்கதை மற்றும் ஸ்டோரிபோர்ட் தான். இதை நான் சொல்லத்தேவையில்லை.

ஹாலிவுட் படங்கள் எடுக்கப்படும் பட்ஜட் என்ன? குறைந்தது ஒரு 1000 கோடி வரை பட்ஜட் செல்கிறது. அப்படி எடுக்கப்படும் படத்தின் காப்பிரைட்டை என்ன விலைக்குத் தருவார்கள்? ஒரு 5% என்று வைத்துக்கொண்டாலும் 50 கோடி. மசாலா இல்லாத தமிழ்ப்படங்களின் வர்த்தகம் எந்த அளவிற்குச் செல்லும்?

படம் மிகப்பெரிய வெற்றியடையும் பட்சத்தில் 30 கோடி? மீறிப்போனால் 50 கோடி? நல்ல தரமான படங்கள் 20 கோடியை வசூல் செய்வதே கடினம். இதில் எப்படி 50 கோடிக்கு காப்பிரைட் வாங்குவீர்கள்?

யோசித்துப்பாருங்கள். நடக்கற விசயத்தைக் கூறுங்கள்.

இல்லையில்லை காட்பாதர் எல்லாம் வந்து பல வருடங்கள் ஆகின்றன. அதனால் கம்மியான விலைக்குக் கிடைக்கும் என்று கூறுவீர்கள். ஐயா, பிரபலமான கலைப்பொருட்களுக்கு நாளாக நாளாகத் தான் மதிப்பு அதிகம். அது கார்பாதருக்கும் பொருந்தும்.

வேண்டுமானால் ஒன்று செய்யலாம் 50 கோடிக்கு காப்பிரைட் வாங்கி 5 சண்டைகள் வைத்து 3 குலுக்கல் நடனம் வைத்தால் நன்றாக விற்பனையாகும், அதுவும் ரஜினியை நடித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டால்.... அப்பொழுதும் உலகப்பட ரசிகர்கள் என்ன சொல்வார்கள்?

"படமாடா எடுத்திருக்காங்க?"

"சரி பரவாயில்லை. குறைந்தது படத்தின் கடைசியில் இப்படம் இந்தப்படத்தில் இருந்து "இந்தந்த காட்சிகளைக் காப்பியடித்தோம்... என்று பட்டியலிட்டால் என்ன?' " என்று கேட்பீர்கள்.

காப்பிரைட் வாங்காமல் இப்படி போடுவதை விட காமெடி ஒன்றுமில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

நடக்கற விசயத்தைக் கூறுங்கள்.

o

மேலே குறிப்பிட்ட விளக்கங்கள் மூலம் சப்பைக்கட்டு கட்டுவாதாக எண்ண வேண்டாம். இன்னும் கூறுகிறேன் கமல் தந்திருப்பது கருவில் இருந்து போதிய மாற்றங்களுடன் எடுக்கப்பட்ட தரமான படங்களே.. அதுவும் நம் ரசிகர்களின் USER EXPERIENCEஐ அதிகரிப்பதற்காக :)

Prathap Kumar S. said...

//இந்தப்பதிவுல அவர் எங்குனயும் காலேஜ் டிகிரிலாம் போட்ட மாதிரி தெரிலீங்க? இன்னும் கொஞ்சம் வெளக்குனீங்கன்னா தன்யனாவேன் கீதப்ப்ரியரே //

hhahah மரா சூப்பர் காமெடி,

நல்ல பதிவு செந்தில் கமலை விமர்சனம் செய்தால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பது கூட காரணமாக இருக்கலாம்

ஜோதிஜி said...

நல்ல பதிவு செந்தில் கமலை விமர்சனம் செய்தால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பது கூட காரணமாக இருக்கலாம்

பிரதாப் செந்திலின் மொத்த பதிவுகளையும் நீங்க படித்து இருந்தால் இது போன்ற வார்த்தைகள் வந்து இருக்காது என்பது என்னுடைய கருத்து.

பழமைபேசிக்கு அடுத்து இவர் ஒரு தமிழ் ஆசிரியர்.

Prathap Kumar S. said...

ஜோதிஜீ அவர்களே... பப்ளிசிட்டிக்காக எழுதுகிறார்கள் என்று நான் சொன்னது கமலை விமர்சிப்பவர்களுக்கு...
செந்திலுக்கு அல்ல... :)

தமிழ்ஆசிரியர் அளவுக்கு என்னைச்சொல்ல காரணம்... உள்குத்து புரியவில்லை...:)

ஜோதிஜி said...

நாஞ்சில் பிரதாப்

தலவரே மன்னிக்கவும்.

நான் தான் தவறாக புரிந்து கொண்டேன் போலிருக்கு.

இப்போது புரிந்து கொண்டேன்.

virutcham said...

நாம் இன்னும் ராமாயணம், மகாபாரத்தை சுட்டு புதுக் கதை செய்வதில் இருந்தே இன்னும் வெளியே வரலை. நான் சொல்லுவது ராவணனை அல்ல. பொதுவா ஒரு படத்தின், சீரியலின் ஏதாவது ஒரு பாத்திரமாவது நமது இதிகாசத் தாக்கம் இல்லாமல் வருகிறதா என்பதே கேள்விக் குறிதான். அதுவே நமக்குத் தெரிவதில்லை. இதில் வெளிநாட்டு படங்கள் கதைகளை சுட்டால் மட்டும் தெரியவா போகுது ?


தம் முந்தைய வெற்றிப் படங்களின் காட்சிகள் மற்றும் நடிப்பையே திரும்பத் திரும்ப செய்து ஒரு இமேஜ் பில்ட் செய்து நடிப்பது ஒரு ரகம்( கடவுளே, கடவுளே ).
பக்கத்துக்கு மாநிலத்து வெற்றிப்படங்களையும் ரீமேக் செய்து அதிலும் தம் இமேஜை நுழைத்து விடுவது ஒரு ரகம் ( முத்து, சந்திரமுகி, போக்கிரி)

நல்ல படங்களை படத்துக்காக ரீமேக் செய்வது ஒரு ரகம் ( பேரழகன் , உன்னைப் போல் ஒருவன் )

நல்ல படங்களை மண் மணத்தோடு ( நடிகரின் இமஜோடு அல்லாமல் ) கொடுக்கும் கமலை இமேஜ் நடிகர்களின் ரசிகர்கள் அப்படித் தான் சொல்லுவார்கள்.

Related Posts with Thumbnails