Sunday, September 12, 2010

போறாளே பொன்னுத்தாயி... - சுவர்ணலதா நினைவஞ்சலி !!

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்

என்று ஆரம்பித்த சுவர்ணலதாவின் திரையிசை வாழ்க்கை இவ்வளவு சீக்கிரமாக முடிவிற்கு வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டோம். என்னுடைய இசைத்தொகுப்பில் சுவர்ணலதாவின் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் தான். எத்தனை விதமான பாடல்கள்? பாடல்களில் உணர்ச்சிகளை, வேறுபாடுகளை வெளிப்படுத்தியதில் எஸ்.ஜானகிக்கு அடுத்த படியான இடத்தில் இவரை வைப்பேன். 

மாலையில் யாரோ மனதோடு பேச..
மார்கழி வாடை மெதுவாக வீச..

என்ற வரிகளைக் கண்ணை மூடிக் கேட்கும் பொழுது அப்படியே மனதை மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வு வருவதை மறுக்கவே முடியாது. பாடல் வரிகளில் உள்ள தனிமையை அவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடலிது. தூக்கம் வராத பொழுதுகளில் இப்பாடல் தாலாட்டாக இருந்திருக்கிறது.

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

என்று "வள்ளி" படத்தில் வரும் பாடலில் வெளிப்படுத்திய உணர்வுகளை வேறெந்த பாடலிலும் பெற முடியாது. 

"மாசிமாசம் ஆளான பொன்னு
மாமன் உனக்குத் தானே"

என்ற லேட் நைட் ரகப் பாடலை வெகுநேர்த்தியாகப் பாடியிருப்பார். பாடலிற்குத் தேவையான உணர்வைக் கொண்டுவருவதில் ஜானகிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று கூறியதும் இது போன்ற பாடல்களை நேர்த்தியாகப் பாடியதால் தான்!!

இளையராஜாவின் இசையில் அறிமுகம் ஆனாலும் அவர் அளவிற்கு ரகுமானாலும் பயன்படுத்தப்பட்ட "ராஜா காலத்துப் பாடகி"யென்றால் சுவர்ணலதாவாகத்தான் இருப்பார். ரகுமானின் ஆரம்பகாலப் படங்களில் இருந்தே ஒவ்வொரு படத்திலும் ஒன்றோ இரண்டோ பாடல்களைப் பாடிவந்தவர்.

இன்றைய இளம்தலைமுறைப் பாடகிகள் மெல்லிசை, உற்சாகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வேகமான பாடல்கள் என்று ஏதாவதொரு வகையான பாடல்களை மட்டுமே பாடுவதைக் கேட்க முடியும். (சின்மயி இதில் விதிவிலக்கு). ஆனால் குத்துப்பாடல்கள், வேகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வெஸ்டர்ன், கிளாசிக்கல், ஃபாஸ்ட் நம்பர்ஸ் என எல்லா வகையான பாடல்களிலும் பிரகாசித்தவரென்றால் ஜானகிக்கு அடுத்தபடியாக இவரைத் தான் எண்ண முடிகிறது. இவரை ஆல்ரவுண்டர் என்றால் மிகையில்லை.

"முக்காலா முக்காபுலா " - காதலன்
"உசிலம்பட்டி பெண்குட்டி" - ஜெண்டில்மேன்
"அக்கடான்னு நாங்க எடை போட்டா" - இந்தியன்
"குச்சி குச்சி ராக்கம்மா.. " - பம்பாய்
"மெல்லிசையே.. என் இதயத்தில் மெல்லிசையே" - Mr. ரோமியோ
"உளுந்து விதைக்கையிலே" - முதல்வன்
" ஒரு பொய்யாவது சொல் கண்ணே" - ஜோடி
"பூங்காற்றிலே " - உயிரே.
"குளிருது குளிருது" - தாஜ்மஹால்
"எவனோ ஒருவன்" -அலைபாயுதே

என்று ஒவ்வொரு வருடத்திலும் ஹிட் பாடல்களுக்கு உயிர் கொடுத்து முனுமுனுக்க வைத்தவர்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாடலில் சுவர்ணலதாவின் வரிகள் வரும் இடங்களில் எல்லாம் உச்சத்திற்குச் சென்று வருவது அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

ரகுமான், ஒரே படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களைப் பாட வைத்ததும் இவரை மட்டும் தான் என்று நினைக்கிறேன். ரட்சகன் படத்தில் "மெர்க்குரிப்பூக்கள்" என்ற பெப்பி பாடலைப் பாட வைத்து, "லக்கி லக்கி" என்ற மாறுபட்ட பாடலையும் பாட வைத்தார். இன்று ஓரிரு பாடல்கள் ஹிட் கொடுத்த பாடகிகள் எல்லாம் "ஆஹா ஓஹோ.." என்று பரபரப்பாக வலம்வரும் பொழுது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட வெற்றிப்பாடல்களைப் பாடிய "சுவர்ணலதா"வை உரிய இடத்தில் வைத்திருக்கத் தவறிவிட்டார்களோ(டோமோ)? என்று தோன்றுகிறது. இவரது புகைப்படத்தை கூகுளில் தேடினாலும் ஓரிரு படங்களே கிடைத்தன.

இவரைப் பற்றிய கட்டுரை எழுதலாம் (இவர் இல்லை என்ற பிறகு) என்று பார்த்தால், நான் கவனிக்கத் தவறிய எத்தனையோ பிரபலமான பாடல்களை இவர் பாடியுள்ளது தெரிகிறது.

"ஒரு நாள் ஒரு பொழுது 
உன் மூஞ்சி காண்காம
உசுரே அல்லாடுதே

மறுநா வரும்வரைக்கும்
பசித்தூக்கம் கொள்ளாமல்
மனசு அல்லாடுதே"

என்று "அந்திமந்தாரை"யில் வரும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்!! பாடலிற்கு இசையே தேவையில்லை என்னும் அளவிற்கு இவரது ஆளுமை இப்பாடலில் தெரியும்.

இளையராஜா, ரகுமான் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடியவருக்கு மகுடம் சூட்டியது கருத்தம்மாவில் வந்த போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலில். இந்தப் பாடலிற்காக தேசியவிருது வாங்கியது அனைவரும் அறிந்ததே. சுவர்ணலதாவைப் பற்றி கட்டுரை எழுத நினைப்பவர்கள் "போறாளே பொன்னுத்தாயி" என்ற வரிகளைக் குறிப்பிடாமல் இருக்கப்போவதில்லை. கருத்தம்மாவில் இப்பாடல் மகிழ்ச்சி, சோகம் என்று இரண்டு முறை வரும். அதில் சோகமான பின்னனியில் வரும் வரைகளைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிடத் தோன்றுகிறது. 

"போறாளே பொன்னுத்தாயி 
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு"

இன்று சுவர்ணலதா மறைந்துவிட்டாலும், "மாலையில் யாரோ மனதோடு பேச"வும் "மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபமும்" என் அலைபேசியிலும் இசைக்கோப்பிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதனுடன் சுவர்ணலதாவின் நினைவும்!! 

RIP Swarnalatha!!

14 comments:

Asiya Omar said...

இப்பதான் சன் நியூஸ் பார்த்து வருத்தமாக இருந்தது.பாடகர் மனோவின் பேட்டி மனதை உருக்கியது.கிரேட் ஸ்வர்ணலதா.பகிர்வுக்கு நன்றி.

vasu balaji said...

அற்புதமான பாடகி. அஞ்சலிகள். நன்றி செந்தில் பகிர்வுக்கு

நிலாமதி said...

பாட்டுக் குயில் உலகை விட்டுச்சென்றாலும் நீங்காதது குயிலின் இசை............

..ஆன்ம சாந்திக்கு பிரார்தனைகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

உங்க பதிவு படிச்சவுடன் அந்த பாடல்களும் அவரின் குரலும் ஒருமுறை மீண்டு வந்தது செந்தில்...
அவருக்கு அஞ்சலி...

கோவி.கண்ணன் said...

:(

சுவர்ணலதாவின் பாடல்கள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்தவை. ரொம்பவும் இழப்பாக உணர்கிறேன்

Sundari said...

My favourite in swarnalatha's voice is "Aathoram thopukulae...Asai vachan" from Tamil Selvan movie..

Chitra said...

She gave us wonderful songs.
May her soul rest in peace.

வல்லிசிம்ஹன் said...

எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் ஒன்றே போதும். மந்தை உருக்க்கும் குரல் இப்படி மறைந்ததே.வாழ்க்கையிலாவது சுகப்பட்டாரான்னு தெரியவில்லை. பகிர்தலுக்கு நன்றி .

sakthi said...

அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்

Menaga Sathia said...

எனக்கு மிகவும் பிடித்த பாடகி!!..அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...

க.பாலாசி said...

மனம் கவர்ந்த பாடகிங்க... மாலையில் யாரோ மனதோடு பேச.... இன்னும் கேட்டுகிட்டேயிருக்குங்க... அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்...

ஈரோடு கதிர் said...

எனக்கும் மிகவும் பிடித்த பாடகி..

மிகப் பெரிய அதிர்ச்சி

ஆன்மா அமைதியடையட்டும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ அசியா ஒமர்,

@ வானம்பாடிகள்,

@ நிலாமதி

@ ஆரூரன்

@ கோ.வி. கண்ணன்

@ வல்லிசிம்ஹன்

@ கதிர்

@ க.பாலாசி

@ Mrs. Menagasathiya

@ Chitra

@ சக்தி

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

@ சுந்தரி,

ம்ம்... அதுவும் அருமையான பாடல் தான்..

Venkatesh said...

Swarna latha is still living in every ones heart through her magical voice which never dies
May her soul rest in peace

Venka

Related Posts with Thumbnails