Sunday, October 17, 2010

21ம் நூற்றாண்டில் ஆயுத பூஜை!!

இப்பதிவை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதற்பாகத்தில் ஆயுதபூஜை மீதான கொசுவத்தியையும் என் ஈடுபாட்டைப் பற்றி பதிந்துள்ளேன். இரண்டாம் பாகத்தில் வருவது இன்றைய சூழலில் ஆயுதபூஜையை எப்படிப் பார்க்கலாம் என்ற பார்வை!!

*

தொழிற்சாலைகள் அதிகமுள்ள ஊரில் வளர்ந்த எனக்கு ஆயுதபூஜை மீது தனி ஈடுபாடுண்டு.

உடுமலையை அடுத்த மடத்துக்குளத்தில் வளர்ந்த என்னைச் சுற்றி எப்பொழுது அங்குள்ள காகித ஆலைகள், பஞ்சாலைகள், சக்கரை ஆலை, லேத்கள் Lathe (தமிழாக்கம் தெரியவில்லை) பற்றிய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்ததுண்டு. என் தந்தையும் அந்த ஊரில் இருந்த ஒரு காகிதாலையில் பணியாற்றியதால் காகித ஆலையை பலமுறை காணும் வாய்ப்பு கிடைத்ததுண்டு. 

சிறு வயதில், ஒவ்வொரு முறை காகித ஆலைகளுக்குள் செல்லும் பொழுதும் அங்கிருக்கும் அப்பாவின் நண்பர்களையெல்லாம், இந்தக் கருவி என்ன செய்யும், எதற்கு என்றெல்லாம் கேள்வியால் துளைத்ததுண்டு. அவர்கள், பல முறை கேள்விகளுக்குப் பதிலளித்தும், சில முறை காகிதாலையின் கருவிகளின் அதீத ஒலியால் பதிலளிக்க இயலாமலும் போனதுண்டு. பதில் கிடைக்காத கேள்விகளுக்கு விடையைத் தேட ஆயுத பூஜை நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த நாட்களெல்லாம் உண்டு. அன்று தானே சுலபமாக பொதுமக்கள் பார்க்க அனுமதி கிடைப்பதுண்டு. சிறிய ஊர்களில் எளிமையாக தொழிற்சாலைகளைப் பார்வையிட முடிந்தது போல நகரங்களில் முடிவதில்லை என்பது தான் உண்மை.

ஆயுத பூஜையின் பொழுது பெரும்பாலான கருவிகள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, வண்னக் காகிதங்களால் அலங்கரிப்பதைப் பார்க்க முடியும். அவரவர் வேலை செய்யும் இயந்திரங்களையும் கருவிகளையும் சுத்தம் செய்து அவர்கள் வழிபடுவதைப் பார்க்கும் பொழுது உற்சாகத்தை உணர்ந்திருக்கிறேன். இரும்புக் குழாய்களைக் கடைந்தெடுக்கும் பெரிய அளவு லேத்கள் முதல் கொரடு, சுத்தி என சிறிய ஆயுதங்கள் வரை அனைத்தையும் வைத்து பூஜை செய்வதை எனனால் தொழிலின் மீதான பக்தியாகத் தான் பார்க்க முடிந்தது. 

ஒவ்வொரு நாளும் தொழில் பக்தியுடன் வேலை செய்தாலும் ஆண்டிற்கொரு முறை இப்படி ஒரு நாள் ஒதுக்கி வழிபடுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. உழவுத்தொழில் முதல் கணினித்துறை வரை, ஆயுதங்கள் கருவிகள் துணையின்றி எந்த விசயமும் நடப்பதில்லை என்ற நிலையில், ஆயுதபூஜையைக் கடைப்பிடிப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. நவராத்திரியின் கடைசியில் தான் ஆயுதபூஜையைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கெல்லாம் என்னிடம் பதிலில்லை. நொடிப் பொழுதிய கவனக்குறைவால் கைவிரல்களை இழந்தவர்களை எல்லாம் பரவலாக தொழிற்சாலைகள் அதிகமுள்ள நகரங்களுள் பார்க்க முடியும். அவரவர் தொழிலிற்கு உதவிய கருவிகளுக்கு, ஆயுதங்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவே எண்ணுகிறேன். நிற்க.

*

இளைஞர்களுள் பெரும்பாலானோர் கணினித்துறையிலும், கணினித்திரையின் முன்பும் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியும் இன்றைய சூழலில் ஆயுத பூஜை தேவை தானா?

ஆயுதபூஜை நாளை "வந்த வழியைப் பற்றி சிந்தப்பதற்காகவும், நாம் பயன்படுத்தும் கருவிகளின் செயல்பாடுகளைப் பற்றி சிந்திப்பதற்காகவும்" பயன்படுத்தலாம். 

வந்தவழி சரி. கருவிகளின் செயல்பாடுகளைப் பற்றி என்ன சிந்திப்பது?

நாம் தினமும் என்னென்ன கருவிகளைப் பயன்படுத்துகிறோம்? எவையவை தேவையற்றுக் கிடக்கின்றன? எவையவை தேவையில்லாமல் அதிகமாகப் பயன்படுத்துகிறோம்?

நம்மில் பெரும்பாலானோர்க்கு இருக்கும் ஒரு பழக்கம். பார்க்கும் கருவிகளையெல்லாம் வாங்க வேண்டும். கையில் பணம் புரண்டால் அது இன்னமும் கேட்கவே வேண்டாம். சில மாதங்களுக்கு முன்பு வாங்கிய செல்போனைக் கிடப்பில் போட்டுவிட்டு புதிய கருவியை வாங்கியே தீர வேண்டும். ஏன்? அக்கருவியில் சில புதிய வசதிகள் உள்ளன, அல்லது நண்பன் வாங்கியதால் நானும் வாங்குகிறேன். அக்கருவியை வைத்திருப்பதில் ஒரு மதிப்பு!! 

இன்றெல்லாம் பொருட்களை மாற்றுவதில் அதிக வேகத்தை அனைவரும் காட்டுகிறோம். ஓரிரு வருடங்களிலேயே மூன்று தொலைக்காட்சிப் பெட்டியை மாற்றிய நண்பர்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். பழைய தொலைக்காட்சிப் பெட்டியை என்ன செய்தோம்? அதே போல வருடத்திற்கொரு செல்போனை வாங்குபவர்களும் உண்டு. ஹோம் தியேட்டர் சாதனத்தை வாங்கிவிட்டுப் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் அன்பர்களையும் பார்க்க முடிவதுண்டு.

பழைய கருவியை என்ன செய்தோம்? குப்பையில் போட்டோமா? அல்லது மறுசுழற்சிக்குக் கொடுத்தாமோ?

மண்ணில் குப்பையாகப் போட்டால் மண் மாசடையாதா? 

அதே போல கருவிகளைத் தேவைக்கேற்ப பயன்படுத்துவதும் கிடையாது. பலர் கணினிகளை வாரக்கணக்கில் அணைப்பதும் கிடையாது, மின் இணைப்பைத் துண்டிப்பதும் கிடையாது. 

ஆயுதங்களுக்குப் பூஜை செய்யும் வேளையில் ஆயுதங்களையும் வசதிகளையும் பெற காரணமாய் இருந்த மண்ணையும் நிலத்தையும் மாசாக்காமல் இருத்தலே மிகவும் தேவையான ஒன்று!! கருவிகளுக்கு நன்றி கூறும் வேளையில் கருவிகளைத் தேவையான அளவு பயன்படுத்துவதன் தேவையை உணர்வதே 21ம் நூற்றாண்டில் ஆயுத பூஜைக் கொண்டாடும் வழியாக இருக்கும். 

உங்கள் எண்ணங்களையும் பகிருங்கள்!!

12 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பகிர்வுங்க செந்தில். வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

ஆயுத பூஜை, தம்பியின் கொசுவலை பேக்டரியில் பிரம்மாண்டமாயிருக்கும். சென்ற வருடம் மிகவும் பிசியாயிருந்த அவன் எல்லாம் சிறப்பாய் செய்து பின்னிரவில் நிறைய பேசிக்கொண்டிருந்தான், குழந்தைகள், எதிர்காலம் பற்றி. அவனது நினைவாயே இருந்த எனக்கு உங்களின் இடுகைகள் இன்னும் கிளர்ந்து விட்டது...

பிரபாகர்...

sakthi said...

கருவிகளுக்கு நன்றி கூறும் வேளையில் கருவிகளைத் தேவையான அளவு பயன்படுத்துவதன் தேவையை உணர்வதே 21ம் நூற்றாண்டில் ஆயுத பூஜைக் கொண்டாடும் வழியாக இருக்கும்.

உண்மையான கூற்று செந்தில்

தாராபுரத்தான் said...

//ஒவ்வொரு நாளும் தொழில் பக்தியுடன் வேலை செய்தாலும் ஆண்டிற்கொரு முறை இப்படி ஒரு நாள் ஒதுக்கி வழிபடுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை..

உண்மைதானுங்க.








//

geethappriyan said...

நண்பரே
ஒரே நபர் இரண்டு போன்கள் வைத்திருந்தாலே அவர் 2 சிம் வாங்கவேண்டும்,2 சார்ஜ் செய்யவேண்டும்,அந்த 2 சிம்ம்மிற்கு செல்போன் டவரிலிருந்து வரும் சிக்னல்கள்,என்று தன் பங்கிற்கு மாசுபடுத்துகிறார்,ஒரே வீட்டில் 4பேர் இருந்துகொண்டு அவர்கள் 8 செல்போன்கள் உபயோகிப்பது எவ்வளவு கொடுமை?எனக்கு ஒரு செல்போனுக்கே கால் வரவில்லை.

Chitra said...

ஆயுதங்களுக்குப் பூஜை செய்யும் வேளையில் ஆயுதங்களையும் வசதிகளையும் பெற காரணமாய் இருந்த மண்ணையும் நிலத்தையும் மாசாக்காமல் இருத்தலே மிகவும் தேவையான ஒன்று!! கருவிகளுக்கு நன்றி கூறும் வேளையில் கருவிகளைத் தேவையான அளவு பயன்படுத்துவதன் தேவையை உணர்வதே 21ம் நூற்றாண்டில் ஆயுத பூஜைக் கொண்டாடும் வழியாக இருக்கும்.


...Good message

ராம்ஜி_யாஹூ said...

not all.

ஹுஸைனம்மா said...

//பலர் கணினிகளை வாரக்கணக்கில் அணைப்பதும் கிடையாது, மின் இணைப்பைத் துண்டிப்பதும் கிடையாது.//

இந்தக் கொடுமை ஆஃபீஸ்களில்தான் நிறைய நடக்கும்!! ஆஃப் பண்ணிட்டுப் போற என்னைமாதிரி ஆட்களையும் நக்கலா ஒரு லுக் விடுவாங்க!!

ஈரோடு கதிர் said...

மண்ணை மாசாக்காமல் என்பதோடு காசாக்காமல் என்பதுவும்!

எஸ்.கே said...

//ஆயுதங்களுக்குப் பூஜை செய்யும் வேளையில் ஆயுதங்களையும் வசதிகளையும் பெற காரணமாய் இருந்த மண்ணையும் நிலத்தையும் மாசாக்காமல் இருத்தலே மிகவும் தேவையான ஒன்று!!//மிக அருமையான வரி!

தெய்வசுகந்தி said...

Good message!

Mahesh said...

கண்டிப்பாக மறுசுழற்சியை ஊக்குவிக்கும் விதமாக கொண்டாடுவது சிறந்தது.

லேத் - கடைசல் இயந்திரம்

Related Posts with Thumbnails