Tuesday, January 26, 2010

இந்தியப் பிரைம்டைம் லீக்கும் மானக்கேடும்..

"உங்க ஐ.பி.எல் ஆளுங்களுக்கு முன்னாடியே தெரியாதா?"என்ற ஜார்ஜ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். என்னுடன் அலுவலகத்தில் பணிபுரிபவர். மேலும் தொடர்ந்தவர்,"உங்க கிரிக்கெட் மேல இருந்த 'நம்பிக்கை' யே போயிடுச்சு"

"எனக்கு 'அது' போய் ரொம்ப நாளாச்சு" என்று சொல்ல நினைத்த நான், "ம்ம்... என்னங்க செய்ய?" என்றேன்.

"எங்க ஊர்லயும் தான் ஃபுட்பால் லீக் எல்லாம் நடக்குது. அங்க நாங்க இப்படியா பண்றோம்?"

தேநீர் இடைவேளையின் பொழுது ஜார்ஜ் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதிலே இல்லை!!


*

மாலை, நான் பேருந்தில் ஏறி ஓட்டுனரிடம், "எப்படி இருக்கீங்க?"என்றேன்.

ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நாங்க எல்லாம் ஷாரூக்கான் படத்தைப் பார்க்காமல் தவிர்க்கிறோமா? ஏன் இப்படி செய்கிறார்கள்?"என்றார். "இந்த முறை ஐ.பி.எல் நடக்கும் பொழுது வண்டியில் எஃப்.எம். போடப் போறதில்லை"என்றார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான எங்கள் வாகன ஓட்டுனர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் விளையாடினாலும் சரி, இந்தியா விளையாடினாலும் சரி, எஃப்.எம்.ல் வர்ணனையைப் போடுவார்.

*

மேலே குறிப்பிட்ட இரண்டு விவாதங்களும் நான் கடந்த ஓரிரு நாட்களாகச் சந்தித்தவை.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய இந்தியத் துணைக்கண்ட நாட்டு மக்கள் மொழி, இனம், சாதி, பொருளாதாரம் என எத்தனையோ வேற்றுமையால் பிளவு பட்டிருந்தாலும் இணைப்பது "கிரிக்கெட்" மட்டுமே.

அரசியல் ரீதியாக நம் நாட்டிற்கும் பாகிஸ்தானிற்கும் சுமூகமான உறவில்லாமற் போனாலும், இங்கே அமீரக அலுவலகங்களில், வெளியிடங்களில் பாகிஸ்தானியர்களுடன் நட்புறவுடனேயே பழகி வருகிறோம். அதற்குப் அலுவலக தருமம் (Professional Ethics ) காரணம் என்றாலும், பாலிவுட் போன்ற பொழுதுபோக்குத் தொடர்புகளும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளும் காரணம் என்றால் மிகையில்லை!!

இப்பொழுது, கிரிக்கெட்டே சில சங்கடமான கேள்விகளை எழுப்பக் காரணமாகிறதென்றால் வருத்தமாகவே இருக்கிறது!!

ஒலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது மொழி, இனம், அரசியல் போன்ற விசயங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே. அதே போன்ற எண்ணத்துடனேயே கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கால்பந்தாட்டத்தின் சிறந்த வீரர்கள் திறமையை வெளிக்காட்டத் தகுந்த களத்தை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்டதே ஐரோப்பிய கால்பந்தாட்ட லீக் போட்டிகள்.

வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த சிறந்த வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவது ரசிகர்களுக்கும், நல்ல வருமானம் கிடைப்பதால் வீரர்களுக்கும் சாதகமாக அமைந்தது. இதில் கொட்டப்படும் பணமும், கிடைக்கும் புகழும், போட்டிகளில் இருக்கும் விறுவிறுப்பும் இப்போட்டிகள் பிரபலமாக இருப்பதற்கான காரணம்.


ஐரோப்பிய கால்பந்தாட்ட லீக்கைப் போலவே இந்தியப் பிரீமியர் லீக் போட்டிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்தப் போட்டிகளில் வீரர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளமும், பன்னாட்டு வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பும் ஐ.பி.எல் 20-20 போட்டிகளையும் பிரபலமாக்கியுள்ளன.

சிறந்த வீரர்கள் அனைவரது பெயர்களும் ஏலத்திற்கு வந்த பொழுது சென்ற ஆண்டு நடைபெற்ற 20-20 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியினரது பெயர்களும் ஏலத்தில் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப் பட்டது. எதிர்பார்ப்பும் பொய்க்கவில்லை. ஆனால் அவர்களது பெயர்களை ஏலமெடுக்க எந்த அணியினரும் முன் வராதது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியையே எழுப்பியுள்ளது.

பாகிஸ்தான் அணியினர் கலந்து கொண்டால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டியதிருக்கும், வேறெதாவது பாதுகாப்புக் காரணங்களால் அவர்கள் கலந்து கொள்ளாமற் போகக் கூடும் என்றெல்லாம் காரணத்தைக் கூறுகிறார்கள்!!


ஐ.பி.எல் அணியின் முதலாளிகள் எடுத்துள்ள முடிவுகள் நிறைய கேள்விகளை எழுப்புகின்றன!!

ஐ.பி.எல் போட்டிகளுக்கே பாதுகாப்பு வழங்க முடியாமற்போனால் இந்த வருடம் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளை எப்படி நடத்தப் போகிறார்கள்?

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தினர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு  பாகிஸ்தானுடன் சேர்ந்து 2011 உலகக் கோப்பையை நடத்தப்போகிறார்கள்?

ஒரு நாட்டு வீரர்களை எடுக்கிறோமா இல்லையா என்பதை முன்பே முடிவெடுக்க முடியாதா?

"என்ன செய்கிறோம் என்பதை விட எப்படி செய்கிறோம்" என்பதே முக்கியமான விசயம். அது தனி நபரானாலும் சரி, நிர்வாகத்தினரானாலும் சரி!! இல்லையென்றால் அனைவரிடமும் அவமானமும் அவநம்பிக்கையுமே ஏற்படும்!!


ஐ.பி.எல் போட்டிகளை எப்படி நடத்தினால் நமக்கென்ன?  நமக்குத்தான் தினமும் கிரிக்கட் வீரகளையும் நடிக நடிகைகளையும் தொலைக்காட்சியில் பார்த்தாலே பசி தீர்ந்து விடுமே!! அதுவும் பிரைம்டைமில்!! வரவேற்போம் இந்திய பிரைம்டைம் லீக் - சீசன் 3ஐ!!


..

Saturday, January 23, 2010

ஆயிரத்தில் ஒருவன் - மாறுபட்ட மசாலா!!


ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றி ஏற்கனவே பதிவுலகில் பல விமர்சனங்கள் வந்து விட்டன. அமீரகத்தில் ஆயிரத்தில் ஒருவன் இன்று (22.01.10) தான் வெளியானது. ஷார்ஜாவில் உள்ள கன்கார்டு திரையரங்கில் தினசரி இரண்டு காட்சிகளே என்பதால் இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டன.

"கதையில் வரும் காட்சிகள் யாவும் கற்பனையே" என்ற அறிக்கையுடன் வரும் படத்தின் கதை இது தான்..

1272ல் ஆரம்பிக்கும் காட்சியில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே நடக்கும் போரில் சோழர்கள் தோல்வியடைய நேரிடுகிறது. தம் சந்ததி அழிந்து விடாமல் இருக்க சோழ மன்னன் தன் மகனை வேறொரு குழுவினரிடம் கொடுக்கிறான்.

பிறகு 21ம் நூற்றாண்டிற்குக் கதை வருகிறது.. சோழனின் இடத்தைத் தேடிச் செல்லும் தொல்லியல் வல்லுனர் பிரதாப் போத்தன் காணமல் போகிறார். இச்செய்தி அரசிற்குத் தெரிய வர தொல்லியல் நிபுனர் ரீமா சென், பிரதாப் போத்தனின் மகள் ஆன்ட்ரியா, பாதுகாப்பிற்கு அழகம் பெருமாள் தலைமையில் இராணுவ வீரர்கள், இவர்கள் பொருட்களைத் தூக்க கார்த்தி தலைமையில் கூலித் தொழிலாளிகள் என அனைவரும் கிளம்புகின்றனர்.

ஏழு கடல் ஏழு மலை கடந்து சென்றால் ஒரு கிளி இருக்கும் என்ற மாயாஜாலக் கதைகளில் கேட்ட மாயவித்தைகள் (ஃபாண்டஸி) கலந்த பயணத்தில் கடல் ஜந்துகள், காட்டுவாசிகள், விசப்பாம்புகள், பாலைவனம், புதைமணல், நடராஜர் நிழல், சோழர் பூமியில் வரும் அமானுஷ்ய சக்திகள் அனைத்தையும் கடக்கும் பொழுது கார்த்தி, ரீமா, ஆன்ட்ரியா மற்றும் அழகம்பெருமாள் மட்டுமே மிஞ்சுகிறார்கள். வழியில் ஏற்பட்ட ஆபத்துகளிலேயே அனைவரும் இறந்து விட சோழனின் இடத்தை அடையும் பொழுது கார்த்தி, ரீமா மற்றும் ஆன்ட்ரியாவிற்கு சித்தபிரமை பிடித்துவிடுகிறது.

இவர்கள் மூவரையும் சிறைபிடிக்கும் சோழர்களிடம், 'தான் தஞ்சை மண்ணைச் சேர்ந்தவள்' என்றும் 'சோழ மக்களைத் தாயகத்திற்கு அழைக்கவே வந்துள்ளதாகவும்' ரீமா கூற சோழன் (பார்த்திபன்) பல சோதனை(??)களுக்குப் பிறகு ரீமாவை நம்புகிறான். ரீமா பாண்டியர்கள் வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதும் சோழர்களிடம் இருக்கும் தங்கள் குலதெய்வச் சிலையை மீட்கவும் சோழர்களின் வம்சத்தை அழிக்கவுமே ரீமா வந்துள்ளார் என்று தெரியவருவது நல்ல திருப்பம்.

சோழர்கள் தாயகத்திற்குத் திரும்பினார்களா? பிரதாப் போத்தன் கிடைத்தாரா? ரீமா தங்கள் குலதெய்வச் சிலையை மீட்டாரா? கார்த்திக் என்ன ஆனார்? என்பதை மாயவித்தை (ஃபாண்டஸி), சாகசம், வரலாற்றுக் காலத்தை நினைவுபடுத்தும் காட்சியமைகள் என நாம் இதுவரை தமிழ் படங்களில் அதிகம் சுவைத்திராத மாறுபட்ட மசாலாவாகக் கொடுத்திருக்கிறார்கள்!!

படம் ஆரம்பிக்கும் காட்சிகளில் சோழனின் வரலாற்றைப் புராதன ஓவியங்களால் காட்ட ஆரம்பிப்பதில் இருந்து சோழர்களின் நகரம், சோழர்களின் இருப்பிடம், சோழன் மீட்டும் யாழ் இசைக்கருவி, மன்னன் உடைகள் என படம் முழுவதும் கலை இயக்குனர் (தெரியாமல் இருக்கிறார்!!) கலக்கியிருக்கிறார். நம் மூதாதையர்கள் படைத்த புராதன ஓவியங்கள் (படைத்திருந்தால் அவை) எல்லாம் எங்கே? நம் அறநிலையத்துறை பூசிய சுண்ணாம்பிற்குப் பின்னால் இருக்குமோ?

கப்பல் பயணத்தின் பொழுது வண்ணமயம், கடலில் படகுகளில் பயணிக்கும் பொழுது உணர முடிந்த மர்மம், காடுகளின் பசுமை, பாலைவனத்தின் தனிமை, மங்கிய ஒளியில் சோழ நகரம் என படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்ஜி அசத்தியிருக்கிறார். இதே உணர்வை ஓரளவு பின்னனி இசையில் ஜி.வி.பிரகாசும் நன்றாகவே செய்திருக்கிறார்!! கிராபிக்ஸ் நடராஜர் சிலையின் நிழலில் கார்த்தி, ரீமா, ஆன்ட்ரியா ஓடும் பொழுது பின் வரிசையில் உட்கார்ந்திருந்த சிறுவன் Very Funny Daddy என்றான் :)

கார்த்தி - ஐந்து ஆண்டுகளில் வந்திருக்கும் இரண்டாவது படம். நக்கல், கிண்டலுடன் கூலியாக அறிமுகம் ஆகும் காட்சியிலிருந்து சோழனின் தேடும் படலத்தில் ரீமாவிடம் சண்டை, ஆன்ட்ரியாவிடம் வரும் ஈர்ப்பு, சண்டைக் காட்சிகளில் காட்டும் வீரம் என நன்றாக நடிக்கும் வாய்ப்பு!! நிறைவாகச் செய்திருக்கிறார்.

ரீமா - இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை யாராவது ஏற்றிருப்பார்களா? நுனி நாக்கு ஆங்கிலம், சில்மிஷம் செய்யும் கார்த்தியிடம் காட்டும் அடாவடி, சோழ மன்னனிடம் காட்டும் காமம் கலந்த வஞ்சகப் பார்வை, சோழனை மயக்கும் நடனம், கப்பலில் போடும் குத்தாட்டம் என படம் முழுக்க வலம் வருகிறார்!! ரீமாவிற்கு மறக்கமுடியாத படம்!!

ஆன்ட்ரியா - மிதமான, தேவையான நடிப்பு. இவரும் ரீமாவும் ஆங்கிலத்தில் நடத்தும் வாக்குவாதம் கலக்கல்!! பானுமதி வரிசையில் பாடத்தெரிந்த நடிகை என்பது சிறப்பு!! இவரது "மாலை நேரம்" பாடல் படத்தில் இல்லாமல் போனது ஏமாற்றமே!! (அந்தப் பாட்ட எங்க சொருகறது?)

சோழ மன்னனாகப் பார்த்திபன்!! சமகால வளர்ச்சி எதையுமே பார்த்திராத ஒரு கூட்டத்தை ஆண்டு வருபவராகக் கண்ணில் நிற்கிறார்!! நடை, பாவனை என அனைத்திலுமே நம்மைக் கவர்கிறார். "யாம் தாய்மண்ணிற்குத் திரும்பப் போகிறோம்" என தம் மக்களிடம் கூறும் பொழுது நம்பிக்கையை வெளிப்படுத்தும் கண்களில் ரீமாவால் வஞ்சிக்கப்படும் பொழுது ஏமாற்றம் காட்டும் பொழுது மிளிர்கிறார்.

"நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே" என்று சோழன் பாடும் பாடல் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. தம் நிலத்தை இழந்து தவிக்கும் எவர்க்கும் இந்தப் பாடல் பொருந்தும்.

"கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்...!

காடுகளையும் நீர் ஆதாரங்களையும் அழித்து, இன்று நாம் வளர்க்கும் நாகரிகத்தால் சில பத்தாண்டுகள் கழித்து நாமும் இதைப்போல பாட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். கவிஞர் வைரமுத்து...என்ன செல்லிப் பாராட்டுவது?

இயற்கையை அழித்து வந்தால் விளைபொருள் எதுவும் இல்லாமல், "சோழ மக்கள் தம் மக்களையே கொன்று சாப்பிடுவதைப்" போன்ற நிலை தான் நமக்கும் ஏற்படும்! பசி, பஞ்சம், வெப்பம் சூழ்ந்த சூடான், சோமாலியா போன்ற நாட்டு மக்களின் நிலையைப் பார்க்கும் பொழுது பஞ்சத்தால் வாடும் சோழ மக்களைக் கருநிறமாகக் காட்டியிருப்பது சரியாகவே தோன்றுகிறது!! ஆனால் சோழர்களைப் பற்றி வளமான வரலாறையே கேள்விப்பட்டிருப்பதால் நமக்கு கொஞ்சம் உறுத்துகிறது. படம் முழுக்க நூற்றுக்கணக்கில் நடித்திருக்கும் துணை நடிகர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

ஈட்டி, அம்புகளுடன் போரிடக் கிளம்பும் சோழ மக்களை எதிர்த்து அழகம்பெருமாளால் அழைக்கப்பட்ட இராணுவத்தினர் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சண்டையிடும் பொழுது நம் மூதாதையர்களுக்கு ஆங்கிலேயர்களால் நேர்ந்த கதி புரிகிறது. பின்னே, 30 ஆயிரம் பேர் 30 கோடி மக்களை ஆள முடிந்ததற்கு நம் மக்களிடம் இல்லாத போர்க்கருவிகளும், நம் மக்களிடம் இருந்த ஒற்றுமையின்மையுமே காரணம்!!

"இந்தக் கலனைப் பற்றி எனக்குத் தெரியாதே" என்று பார்த்திபன் கூறும் பொழுது சோழர்களின் இயலாமை தெரிகிறது!!

நாயகர்கள் துதிபாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் (எல்லாம் நேரடியான வசனங்கள் தான்!!), தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகள், கேபரே குத்தாட்டங்கள் என பழக்கப்பட்ட மசாலா எதுவும் இல்லாமல் ஒரு படத்தை எடுத்ததற்காகவே படக்குழுவினரைப் பாராட்டலாம்!! இது போன்ற ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்த செல்வாவின் துணிச்சல் அல்லது அசட்டு தைரியத்தையும், தயாரிப்பாளரையும் பாராட்டியே தீர வேண்டும்!!

அப்போ லாஜிக்? அது எதுக்குங்க? அது தான் முன்னாலயே போட்டாச்சுல்ல கற்பனைனு!! முன்பே கூறியிருந்ததைப் போல மாயவித்தை(ஃபாண்டஸி), சாகசம், வரலாற்றுக் காலத்தை நினைவுபடுத்தும் காட்சியமைப்புகள் என நாம் இதுவரை தமிழ் படங்களில் அதிகம் சுவைத்திராத மாறுபட்ட மசாலா தான் ஆயிரத்தில் ஒருவன்!!


நாம் தான் மசாலாவை விரும்புகிறவர்களாயிற்றே ;)
..

Wednesday, January 20, 2010

அதிகாலை ஓட்டம்..

"செந்தில்வேலன்.. வாட் ஹேப்பண்ட் டு யூ? எக்ஸாம் எழுதாம முழிக்கிற?"


"மிஸ்.. எல்லாமே மறந்து போன மாதிரி இருக்கு!"

"கண்டிப்பா ஒரு செண்டம் இருக்குனு உன்னையத் தான் சொல்லீட்டு இருக்கேன்.. இப்படிப் பேப்பரக் காலியா வச்சிட்டு இருக்கே"

"ஆமாங்.. மிஸ்.. எதுவுமே ஞாபகம் வர மாட்டேங்குது. மாடர்ன் அல்ஜீப்ரா கூட மறந்த மாதிரி இருக்கு.."

"இன்னும் அரை மணி நேரம் தான் இருக்கு.. அட்லீஸ்ட் ஒன் மார்க், டூ மார்க்காவது எழுது.."

"சரீங் மிஸ்... "


பின்னால் திரும்பிப் பார்க்கிறேன்...

எல்லாரும் நன்றாகப் பரீட்சை எழுதுகிறார்கள். 'எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி ஆனது. நான் பரீட்சையில் தோற்றுவிட்டால் என்ன செய்வது? நான் பொறியியல் கல்லூரியில் சேர முடியாதா?' என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, "லாஸ்ட் டென் மினிட்ஸ்" என்ற சத்தம் கேட்கிறது.

சில கேள்விகள் தெரிந்த மாதிரி இருக்கிறது. கட கட வென எழுதுகிறேன்.. 60 மார்க் வந்துவிடும்.. இன்னொரு பத்து மார்க் வரும்படி எழுதிட வேண்டும்.. "கால்குலஸ் கொஞ்சம் ஈஸியாச்சே.." என்று வேகமாக எழுதும் பொழுதே.. மணியடிக்கிறது....

செல்போனில் வைத்த அலார மணியடிக்கிறது.. மணி காலை ஐந்தாகிவிட்டது.

'எப்படி கனவின் "கிளைமாக்ஸ்" வரும்பொழுது எல்லாம் தூக்கம் தெளிந்து விடுகிறது? மீண்டும் ஒரு கால் மணி நேரம் தூங்கினால் தேர்வு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள முடியுமா? '

'சே.. எப்பொழுதும் இதே கனவு ஏன் வருகிறது? நான் தேர்வுகளில் தோல்வியுற்றதும் இல்லையே' என்ற எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன..

"இன்று ஏதாவது அலுவலகச் சந்திப்புகள் உள்ளவனவா? இல்லையென்றால் கூட வீட்டில் இருந்து வேலை பார்க்கலாமே!!" அலைபேசியின் நாட்குறிப்பில் பார்க்கிறேன். நான்கு சந்திப்புகள் உள்ளன.

குளிர்காலத்தில் காலையில் எழுந்து அலுவலகத்திற்குச் செல்வது போன்ற கடினமான விசயம் வேறொன்றுமில்லை. காலை ஆறரை மணிக்குப் பேருந்தைப் பிடித்தால் தான் சரியான நேரத்திற்கு சென்றடைய முடியும். கொஞ்சம் தாமதமாகக் கிளம்பினால் அவ்வளவு தான் அன்றைய பொழுது சாலைப் போக்குவரத்து நெருக்கலிலேயே கழிந்துவிடும்.

பள்ளி நாட்களில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றதெல்லாம் இப்படித் தூக்கத்தை விட்டு ஓடுவதற்குத் தானா?

கனவில் வருவது போலத் தேர்வில் தோல்வியுற்றிருந்தால் இப்படி ஓட வேண்டியத் தேவையிருக்காதோ?

வீட்டின் வெளியே வந்து லிஃப்டின் உள்ளே செல்கிறேன். பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவன் அவன் தந்தையுடன் நின்று கொண்டிருந்தான். இடது கையில் மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது.

"என்னாச்சுங்க பையனுக்கு?"

"கீழ விழுந்துட்டாங்க.."

"ரெண்டு மூனு நாள் லீவு போடலாம் தானே?"என்றேன்.

"எக்ஸாம் இருக்கு அங்கிள்.."என்றான் அந்தச் சிறுவன்.

"என்ன எக்ஸாம்?"

"மேக்ஸ் அங்கிள்.."என்றான் ஆர்வமாக. சுளீரென்று இருந்தது.

"ஆல் த பெஸ்ட் தம்பி" என்று சொல்லச் சொல்ல "தாங்க்ஸ் அங்கிள்"என்று பேருந்தைப் பிடிக்க "ஓடினார்கள்" சிறுவனும் அவன் தந்தையும்!!

..

Friday, January 15, 2010

நிலா நீ வானம் காற்று..


இசைக்கு மயங்காதவர் யாரேனும் இருக்க முடியுமா? அதுவும் அழகான வரிகளுடன், இதமான இசை அமைந்தால் சொல்லவா வேண்டும்.  இசை மற்றும் பாடல் வரிகளுடன் நீங்கள் மிகவும் நேசிப்பவரை நினைத்துப் பார்க்கும் பொழுது கிடைக்கும் உணர்வு இருக்கிறதே..


ஓரிரு நாட்களாக நான் அதிகமாகக் கேட்கும் பாடல், ஏன் அண்மையில் ஒரு பாடலைப் பல முறை கேட்டதென்றால் அது இதுவாகத் தான் இருக்கும்!! பொக்கிஷம் படத்தில் வரும் "நிலா நீ வானம் காற்று.." என்ற பாடல்..

சபேஷமுரளியின் இதமான இசை யுகபாரதியின் வரிகளைச் சிதைக்காமல் இருப்பது இந்தப் பாடலிற்கு அழகூட்டியுள்ளது. விஜய் யேசுதாஸும் சின்மயியும் வரிகளுக்கு உயிர் கொடுத்த விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

அதில் சின்மயியின் குரலில் கீழே வரும் வரிகள் இருக்கிறதே.. அடடா..

தன் கணவனையோ, காதலனையோ நினைத்து இது விட அழகாகப் பாட முடியுமா?

அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட..


முதலில் மன்னா, கணவா என்று வரும் வரிகள், அன்புள்ள ஒளியே, அன்புள்ள தமிழே அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே என்று செல்வது ஒரு புது அனுபவத்தைத் தருகிறது. பிறகு செல்லமாக படவா, திருடா, கிறுக்கா என்று வரும் வார்த்தைகளுக்காகவே யுகபாரதிக்கு ஒரு ராயல் சல்யூட்!!





ஹம்மா.காம் (Hummaa.com) இணையதளத்திற்கு என் நன்றிகள்!! என்னைப் பொங்கல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் களேபரங்களில் இருந்து காப்பாற்றியதற்காக!!

..

Wednesday, January 13, 2010

இயற்கைக்கு நன்றி கூறும் நாள்!!


அழகிய மலைகள் சூழ்ந்த ஒரு பசுமையான கிராமத்தில் ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்தனர். அந்தக் குடும்பத்திற்கென்று வயலும் சிறிய தோட்டமும் இருந்தது. அக்குடும்பத்தலைவரும் அவரின் மனைவியும் பெரும்பாலான நேரம் வயல்களின் வேலை செய்வதும், வீட்டிற்குத் தேவையானவற்றைச் சேகரிப்பதுமாக இருந்தனர். அவர்களுக்கு மயில்சாமி என்ற பெயரில் பால்வாடி செல்லும் வயதில் ஒரு மகனும் இருந்தான். அவனுடன் விளையாடச் சிறுவர்கள் யாரும் இல்லாததால், தோட்டத்தில் உள்ள மரங்களைச் சுற்றி விளையாடுவது என்று தனியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

தோட்டத்தில் பல மரங்கள் இருந்தாலும், மயில்சாமிக்கு மாமரத்தின் மீது ஆசை. மாமரத்தின்  வளைந்து நெளிந்து செல்லும் கிளைகள், மாமரத்தில் கூடும் பறவைகள் என்று மாமரத்தைப் பார்ப்பதில் அத்தனை சுகம் அவனுக்கு. பால்வாடிக்கு சென்று வீடு திரும்பிய பிறகு கிடைத்த நேரத்தில் எல்லாம் மாமரத்தின் அருகில் செல்வதும், மரத்தைத் தொட்டுப் பார்த்தும் வந்தான். இதைப் பல நாட்களாகப் பார்த்து வந்த மாமரம்..

"தம்பி.. என்னையே சுத்திச் சுத்தி வர்றியே.. என்னோட விளையாட ஆசை இல்லியா?" என்றது.

"ஹேய்.. நீ பேசக் கூட செய்வியா? உன் கூட எப்படி விளையாடறது" என்றான்.

"என் மேல ஏறி விளையாடு. நிறைய இடத்துல நான் சுவையான மாம்பழங்கள ஒளிச்சு வச்சிருக்கேன். கண்டு பிடிச்சீன்னா மாம்பழம் உனக்குத்தான்" என்றது.


மிகவும் குஷியான மயில்சாமி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மரத்தில் ஏறுவதும், மரத்தின் கிளைகளில் ஆடி மகிழ்வதும், மாமரம் ஒளித்து வைத்திருந்த பழங்களைப் பறித்து சாப்பிடுவதும், களைப்படையும் பொழுது வேரில் சாய்ந்து தூங்குவதும் என்று மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தான். மயில்சாமி வந்து விளையாடும் பொழுதெல்லாம் மாமரமும் மகிழ்ச்சியால் கிளைகளை அசைத்து விளையாடும். மயில்சாமி விளையாட, மாமரமும் ஆட அந்தத் தோட்டமே அழகாகக் காட்சியளித்தது.

சில வருடங்கள் கழித்து, சிறுவன் தொலைவில் இருக்கும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். விடுமுறை நாட்களில் தன் நண்பர்களையும் அழைத்து வந்து "மரக்குரங்கு" விளையாட்டை விளையாடி மகிழ்ந்தான். மயில்சாமி பதின்ம வயதை அடைந்த பிறகு மாமரத்திற்குச் சென்று விளையாடுவதை தவிர்த்து விட்டு பள்ளி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தான். அவன், ஒரு நாள் மாலையில் மாமரம் அருகே சோகமாக உட்கார்ந்திருந்த பொழுது,

"தம்பி, இப்பெல்லாம் என் கிட்ட வர்றதே இல்லியே. என் மேல ஏதாவது கோபமா?" என்று மரம் கேட்க

"போ.. நான் என்ன சின்னப் பையனா உன் கிட்ட வந்து விளையாட!! நானே கிரிக்கெட் விளையாட மட்டை இல்லையேனு இருக்கேன்" என்றான்.

"அதுக்கா இப்படி சோகமா இருக்க? கிழபுறமா இருக்கற என்னோட கிளைய முறிச்சு மட்டை சென்சுக்கோ" என்றது.

"நல்ல யோசனை கொடுத்த.." என்று மகிழ்ச்சியாக ஒரு கிளையை ஒடித்துச் சென்றான்.

பள்ளிப் படிப்பை முடித்திருந்த சமயம் நண்பர்களெல்லாம் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். மயில்சாமியும் வேலை தேடி நகரங்களுக்குச் சென்றான். பல மாதங்களாக வேலை தேடியும், சரியான வேலை கிடைக்காததால் சோர்வடைந்து மாமரம் அருகே வந்தான். அவன் சோர்வடைந்திருப்பதைப் பார்த்த மாமரம்,

"தம்பி. ஏம்பா சோகமா இருக்க? பல நாளா ஆளையே பார்க்க முடியலையே!!" என்றது.

"உன் கிட்ட தான் சொல்லனும் என் சோகத்தை!! பல நாளா வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்கல" என்றான்.

"அவ்வளவு தானா!! என் கிட்ட இருக்கற மாம்பழங்களப் பறிச்சு விற்கலாம்ல. நல்லா வித்துச்சுன்னா பக்கத்துக் காட்டுல கிடைக்கற பழங்களையும் விற்கலாமே" என்றது.

"ஹா.. அருமையான யோசனை" என்று உற்சாகமடைந்த மயில்சாமி அருகில் இருந்த நகரத்தில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தான்.

நன்றாக தொழில் நடந்து கொண்டிருக்க, அவனுக்குத் திருமணம் செய்து வைத்தனர். தனக்கெனத் தனியாக வீடு கட்ட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. வீட்டிற்குத் தேவையான பொருட்களையெல்லாம் சேகரிக்க ஆரம்பித்த மயில்சாமி மரவேலைப்பாட்டிற்கு என்ன செய்வது சிந்திக்க ஆரம்பித்தான். வழக்கம் போல யோசித்த படியே தோட்டத்திற்குச் சென்ற மயில்சாமி மாமரத்திடம்..

"நான் வீடு கட்ட ஆரம்பித்திருக்கேன். மரவேலை செய்ய மரம் தேவைப்படுது. எனக்குத் தான் நீ நல்ல யோசனை தருவியே. இதுக்கும் ஒரு நல்ல யோசனை சொல்லு" என்றான்.

"அதுக்கென்ன, எவ்வளவு மரம் வேணுமோ, என்னைய வெட்டிக்கோ!! ஆனா, பக்கத்துலயே புதுசா மாமரத்த நட்டு வச்சிரு" என்றது.

நெகிழ்ந்து போன மயில்சாமி, தனக்குத் தேவையான அளவு மரத்தை வெட்ட ஆரம்பித்தவன், "தான் புதிதாக மரம் நடுப்போவதை எண்ணி" மரத்தை முழுவதுமாக வெட்டி வீட்டிற்குப் பயன்படுத்தினான். ஆனால், புதிதாக மரம் நட மறந்து விட்டான்.

பல வருடங்களாக தொழில் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது என்று வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கிச் சுழல ஆரம்பித்தான். நன்றாகச் சென்று கொண்டிருந்த வியாபாரத்தின் திடீரென்று சுணக்கம் ஏற்பட வேதனையடைய ஆரம்பித்தவன் சிறு வயது நினைவில் மாமரமிருந்த இடத்திற்குச் சென்றான். மாமரம் இருந்த இடத்தில் இப்பொழுது வெட்டப்பட்ட தண்டு மட்டுமே இருந்தது.

"தன்னுடன் பயணித்த இந்த மாமரம் தனக்காக எவ்வளவு செய்துள்ளது" என்று நினைத்தவாரே மரத்தண்டைத் தடவ ஆரம்பித்த மயில்சாமிக்கு ஒரு அசரீரி கேட்டது.


"மயில்சாமி!! புதுசா மாமரத்த நட்டு வளர்த்திருந்தா உனக்கு நல்லா உதவியிருக்குமேப்பா!! இப்ப கஷ்டப்படறியே!! மாமரம் இல்லாட்டி என்ன, என்னோட மரத்தண்டு இருக்கே. அப்படியே அதுல தலை வச்சுப் படுத்தீன்னா நல்லாத் தூக்கம் வரும். கொஞ்சம் ஓய்வெடுப்பா!!" என்றது.

"சிறு வயதில் எனக்கு விளையாட இடம் கொடுத்து, வியாபாரம் செய்ய பழங்கள் கொடுத்து, வீடு கட்ட மரம் கொடுத்து என்று இந்த மாமரம் செய்யாத உதவியே கிடையாதே!! நான் மரத்தை வெட்டிய பொழுதும் மரம் எனக்கு நல்லது செய்யுதே" என்று நினைத்துக் கண்ணிர் விட ஆரம்பித்தான்...

இயற்கை நமக்குக் கற்றுத் தரும் பாடங்களுக்கு அளவே கிடையாது எனலாம். வானம்,காற்று, வெயில், மழை, நிலம், மரங்கள் என இயற்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத் தருகிறது. நாம் தான் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

இந்த மாமரத்தின் இடத்தில் நம் பெற்றோரை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும், இயற்கையை வைத்துப் பார்த்தாலும் பொருந்தும். நம்மை பெற்று வளர்த்தோரும் சரி, நம்மை வளர்க்க உதவும் இயற்கையும் சரி, நமக்கு என்றுமே நன்மையே புரிகிறது. நாம் நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா?

இயற்கையைப் பற்றிச் சிந்திப்பதற்கும், நம்மை வளர்த்தோர்க்கும் நன்றி சொல்ல இயற்கையை வணங்கும் தமிழர் திருநாளை விட நல்ல நாள் அமையுமா?

..

Wednesday, January 6, 2010

புத்தாண்டில் ஓர் உறுதிமொழி..


"செந்தில், இந்த வருசத்துக்கு என்ன ரெசல்யூசன் எடுத்திருக்க?" முனிர் கேட்டான் மதிய உணவு வேளையின் பொழுது..

"போன வருசம் எடுத்த ரெசல்யூசனை ஒழுங்கா கடைப்பிடிக்கனும்னு" என்றேன்.

"இது தான வேணாங்கறது"

"எடுக்கற உறுதிமொழியைக் கடைப்பிடிக்கணும். இல்லீன்னா எதுக்கு எடுத்துட்டு. ஆமா நீ என்ன உறுதிமொழி எடுத்திருக்க?" என்றேன்.

"உடம்பக் குறைக்கணும்னு உறுதிமொழி எடுத்திருக்கேன். பாரு.. மொத நாளே முடிய ஒட்ட வெட்டீட்டு வந்துட்டேன்" என்றான் சிரித்துக்கொண்டே..

"உனக்கொரு ரெசல்யூசன் நான் சொல்லட்டுமா" என்று இடைமறித்தார் நஸீம்.

"பார்டா.. நீ என்ன ஐடியா கொடுக்கப் போற"

"அதுக்கு முன்னாடி உன்னோட பர்ஸக் காட்டு"

"காசுக்கெல்லாம் உன் ஐடியா வேண்டாம்" என்றேன்.

" முஜிபர்க்கு (நஸீமின் கணவர்) நடந்த மாதிரி நடக்காம இருக்க ஒரு விசயம் சொல்லலாம்னு நினைச்சேன். உன் இஷ்டம்" என்றாள்.

"ஏன்? என்னாச்சு முஜிபர்க்கு" என்றேன்.

"அவரோட மணிப்பர்ஸ் தொலைஞ்சு போயிடுச்சு"

"ஓ.. நான் பர்ஸத் தொலைச்சா எத்தனை பணம் போகும்னு பாக்கறியா?" என்றேன்.

"உனக்கு..."

"சரி.. என்னாச்சு? எங்க தொலைச்சார்?"

"நாங்க டிசம்பர் 31ம் தேதி பார்ட்டிக்கு அவங்க நண்பர்களோட போயிருந்தோம். நுழைவுக் கட்டணத்தக் கூட முஜி தான் கிரெடிட் கார்டுல கட்டினார். அதுக்கப்புறம் அவரோட ஓவர் கோட்ல பர்ஸ வைச்சிருக்கார். பார்டில "ஓவரா" மூழ்கிட்டதால ஓவர் கோட்ட எங்கியோ தவற விட்டுட்டார். நானும் கவனிக்கல. காலைல எழுந்தப்போ தான் பார்த்தோம்" என்றார்.

"பர்ஸ்ல எவ்வளவு பணம் வச்சிருந்தார்?"

"பணம்னாலும் பரவாயில்லையே. நாலு கிரெடிட் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், எமிரேட்ஸ் ஐடி ( அமீரக அடையாள அட்டை), அவரோட கனடா நிரந்தர குடியுரிமை அட்டை ( Permanent Resident Card), இன்ஸ்யூரன்ஸ் அட்டை எல்லாம் வச்சிருந்தார்"என்ற பொழுது "பொளீர்"னு பிடறில அடித்தது போல இருந்தது. நானும் முஜிபரைப் போல எல்லா அட்டைகளையும் காசுப்பையில் தான் வைத்திருக்கிறேன்.

"கிரெடிட் கார்டை ப்ளாக் (Block) பண்ணியாச்சா?"

"கிரெடிட் கார்டை பேங்க்ல கூப்பிட்டு ப்ளாக் (செயலிழப்பு) பண்ணியாச்சு. போலிஸ்ல போய் புகார் கொடுக்கப் போனா, அலுவலகத்துல இருந்து லெட்டர் வாங்கி வரச் சொல்றாங்க. அலுவலகத்துல கேட்டா, உங்க கிரெடிட் கார்ட் தொலைச்சதுக்கு நாங்க எதுக்கு லெட்டர் கொடுக்கனும்ங்கறாங்க. ஒரு வழியா அலுவலகத்துல இருந்து லெட்டர் வாங்கிக் கொடுத்தா அரபில கொடுக்கச் சொல்றாங்க. புத்தாண்டு ஆரம்பிச்சதுல இருந்து மூணு நாளா இதுக்கே அலைச்சுட்டிருக்கார். எவ்வளவு டென்சன் தெரியுமா?" என்றவர்

"இதுக்கு மேல கனடா எம்பஸில (Embassy) போய் புகார் கொடுக்கனும். அவங்க கொடுக்கற ஒரு டாக்குமெண்ட வச்சிட்டுத் தான் கனடா போகனும். அங்க போய் தான் திரும்ப பி.ஆர் கார்டுக்கு அப்ளை பண்ணனும். இன்னும் எதெதுக்கெல்லாம் அலைய வேண்டியதிருக்குமோ தெரியல" என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

"ஹேய்.. சாரி நஸீம்" என்றேன்.


"உன்னோட சாரி எல்லாம் வேண்டாம். உன்னோட பர்ஸக் காட்டு" என்று கேட்ட நஸீமிடம் பர்ஸைக் கொடுத்த பொழுது பர்ஸில், "இந்திய ஓட்டுனர் உரிமம், அமீரக அடையாள அட்டை (Emirates ID), அமீரக பத்தாக்கா ( Work Permit Card), இரண்டு கடனட்டைகள் (Credit Card), இரண்டு காசளிப்பு அட்டைகள் (Debit Card), மெடிக்கிளைம் அட்டை என்று பத்து அட்டைகள் வைத்திருந்தேன்.

"எதுக்கு இத்தனை? நாங்க எல்லாம் சொன்னாக் கேட்க மாட்டீங்க. தொலைச்சாத்தான் தெரியும்" என்ற நஸீம் சொன்ன பொழுது "எப்படி என் மனைவி கூறும் அதே அறிவுரையை வார்த்தை பிசகாமல் சொல்கிறார்" என்று நினைத்துக் கொண்டேன்.

"முதல்ல ஒன்னோ ரெண்டோ தேவையான அட்டைகளை மட்டும் வைச்சுக்கறேன். இதையே இந்த வருச உறுதிமொழியாவும் எடுத்துக்கறேன். தாங்க்ஸ் நஸீம்" என்றேன்.

"இட்ஸ் ஓகே.. மீட்டிங் இருக்கு. சியா(CYA)!!" என்று கிளம்பினார் நஸீம்.

****

என்ன நண்பர்களே நஸிமின் கணவருக்கு நடந்தது போல நமக்கு நடந்தால் என்ன செய்வோம்?  கொஞ்சம் அட்டைகளைக் குறைப்பது அல்லது கையில் வைத்துக்கொள்வதைத் தவிர்ப்பது என்று ஒரு உறுதிமொழியை எடுத்தால் நன்றாகத் தானே இருக்கும்?

****


Related Posts with Thumbnails