
கடந்த 20 வருடங்களில் குழந்தைகளை மையமாக வைத்து எடுத்த படங்கள் எத்தனை ஞாபகத்திற்கு வருகிறது?
எனக்கு ஞாபகத்திற்கு வருவது, அஞ்சலி, மைடியர் குட்டிசாத்தான், கன்னத்தில் முத்தமிட்டால், குட்டி, கேளடி கண்மனி, நிலவே மலரே போன்றவை தான்.
சரி, குழந்தை நட்சித்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்றால் ஞாபகத்திற்கு வருவது எவை?
ராஜா சின்ன ரோஜா, மகாநதி, பூவிழி வாசலிலே, ரிதம், அழகன், துர்கா போன்ற ராமநாரயணன் படங்கள், சங்கர்குரு போன்ற ஷாலினி நடித்த படங்கள் தான்..
ஏன் இந்த கேள்வி இப்போது..
காரணம்... மே மாதம் வந்தாயிற்று..
ஏப்ரல் மே என்றால் கூடவே நமக்கு ஞாபகத்துக்கு வரும் விஷயங்களில் முக்கியமானவை பள்ளி விடுமுறை நாட்களும், கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் திரைப்படங்களும் தான். தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் வெளியாகும் திரைப்படங்களைக் காட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது ஏப்ரல், மே மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள் தான்.
திரைப்படங்கள் ஓரளவு ஓடுவதற்குக் காரணம் குடும்பமாக திரையரங்கிற்கு வருவது தான். வருடம் முழுவதும், தேர்வு, படிப்பு போன்ற காரணங்களுக்காக திரையரங்குகளுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருப்பவர்களுக்கு இது தான் தகுந்த தருணம்.
அப்படி பள்ளி விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் படங்களில் எத்தனை சிறுவர்களுக்கானது?
பதில் அனைவருக்கும் தெரிந்ததே...
20 வருடங்களில் 2000 திரைப்படங்கள் வெளியானது என்று வைத்துக் கொண்டாலும், அதில் 6 படங்கள் தான் குழந்தைகளை மையமாகக் கொண்டவை என்பதை என்னவென்று சொல்ல...
நம் மக்கள் தொகையில் 15 வயதிற்கு குறைவானோர் 30 சதவிகிதம் உள்ளனர். அவர்களுக்கான திரைப்படங்களோ ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது சோகமான விஷயம்.
தமிழில் மொழிபெயர்ப்பு செய்த ஹாலிவுட் படங்கள் ஏன் அதிகமாக வெற்றியடைகின்றன என்பதைப் பார்த்தால் அதற்குக் காரணம் சிறுவர்கள் தான் என்பது புரியும். ஹாலிவுட் போல அனிமேஷன் படங்கள் வரவில்லை என்றாலும் அஞ்சலி, தாரே ஜமீன் பர் போன்ற படங்களையாவது எடுக்க முயற்சி செய்யலாமே!!
சிறுவர்களை திரையரங்குகளுக்கு இழுக்க தனித்துவமான விஷயங்களாக (Unique Selling Point) நம் கலையுலக சிற்பிகள் வைப்பது, ஐட்டம் நம்பர் எனப்படும் குத்துப் பாடல்களையும், சலித்து போன (அடி வாங்கும்) நகைச்சுவைக் காட்சிகளையும், நம்ப முடியாத சண்டைக் காட்சிகளையும் தான்.
குழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் சென்றால், பெற்றோர் பெருமையுடன் நமக்குக் காட்டுவது, தங்கள் குழந்தைகள் பாடும் குத்துப்பாடல்களைத்தான்.
"அப்பா அம்மா விளையாட்டுன்னா" என்ன
என்று உங்கள் குழந்தையோ அல்லது உங்கள் உறவினரின் குழந்தையோ கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
என்று உங்கள் குழந்தையோ அல்லது உங்கள் உறவினரின் குழந்தையோ கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?
பெரிய நிறுவனங்கள் (Corporate) திரைப்படத்துறைக்கு அடியெடுத்து வரும் இன்றைய சூழ்நிலையில் கொஞ்சம் சமுதாய பொறுப்பைப் (Social Responsibility ) பற்றியும் சிந்திப்பது நல்லது.
காதலைப் பற்றியும், நடிகைகளின் அங்கங்களைப் பற்றியும் கடந்த 60 வருடங்களாக தீர அலசியாயிற்றே!! இனியாவது கொஞ்சம் நம்ம பசங்களுக்காகவும் யோசிக்கலாமே!!
குழந்தைகளுக்கான உணவுகள், விளையாட்டுகள், தொலைக்காட்சிகள், ஆடைகள் என்று ஒவ்வொரு துறையிலும் சிறுவர்களுக்கான சந்தைகளை ஏற்படுத்தி பெரும் லாபம் பார்த்து வரும் பன்னாட்டு நிறுவனங்களே ஒரு எடுத்துக்காட்டு தான். இப்படி, பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் பசங்களை மையப்படுத்தி பொருட்களைத் தயாரிக்கும் போது திரைத்துறையினர் எப்போது திரைப்படங்களை பசங்களுக்காக தயாரிக்கப் போகிறார்கள்?
இந்தப்பதிவை யூத்ஃபுல் விகனில் படிக்க கீழே சொடுக்கவும்.
.
1 comment:
பசங்க படம், ஒரு நல்ல காமெடி நிறைந்த படம்
Post a Comment